18.10.10

பெயரும் பழியும்



I
சிலர் பெயரை
விட்டுச் செல்கிறார்கள்.
சிலர் பழியை
விட்டுச் செல்கிறார்கள்.
நற்பெயரைச் சுமக்கிறது காலம்.
பழியைச் சுமக்கின்றன தலைமுறைகள்.

II
பெயரில் என்ன
இருக்கிறது என்கிறான்
உறவுகள் உள்ளவன்.
பெயரில்லா வலியைச்
சுமக்கிறான் யாருமற்றவன்.

III
உன் பெயரென்ன
என்கிற கேள்விக்கு
சில சமயங்களில் சொல்ல
விருப்பமாயிருக்கிறது.
சொல்லத் தோன்றாது
போகிறது வேறு சில சமயங்களில்.
சொல்லத்தேவையில்லாது
போகிறது அபூர்வமாய்.
அத்தனை எளிதில்லை
நம் பெயர் சொல்வது.

IV
நினைவுறுத்துகின்றன
கதவுகளற்ற கல்லறைத் தோட்டத்தைப்
பழியும்-
திறந்தே கிடக்கும் தேவாலயத்தின் கதவுகளை
நற்பெயரும்.

5 கருத்துகள்:

பத்மா சொன்னது…

உங்கள் பெயர் நிறுத்தும் வரிகள்...
what is name ?...அது சும்மா சொலவடை.....
பெயர் சொல்ல பெயர் வேண்டும் தான் ..

Vel Kannan சொன்னது…

முதல் கவிதை ௦- சிந்தித்தேன்
இரண்டாவதில் - முரண்பட்டேன்
மூன்றாவதில் - குழம்பினேன்.
நான்காவதில் - வியப்படைகிறேன்.
மொத்தத்தில் வெவ்வேறு கோணத்திற்கு எடுத்து சென்ற உங்களுக்கு நன்றி ஜி

சைக்கிள் சொன்னது…

//உன் பெயரென்ன
என்கிற கேள்விக்கு
சில சமயங்களில்
சொல்ல
விருப்பமாயிருக்கிறது.
சொல்லத் தோன்றாது
போகிறது
சில சமயங்களில்
சொல்லத்
தேவையில்லாது
போகிறது
அபூர்வமாய்//
இயல்பாக அழகாக இருக்கிற வரிகள். இந்த கவிதையில் நான் கொண்டு செல்வது இந்த வரிகளையே.

vasan சொன்னது…

/IV நினவுறுத்துகின்றனகதவுகளற்றகல்லறைத் தோட்டத்தைப்பழியும்-திறந்தே கிடக்கும்தேவாலயத்தின் கதவுகளைநற்பெயரும்./
பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ர‌ண‌ம்,
வேத‌ம் போதிக்கிற‌து.
மர‌ணிக்காதாவ‌ர் யார்? ப‌ஞ்ச‌பூத‌ங்க‌ளைத் தவிர்த்து,
சுந்தர்ஜி?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பத்மா பெயர் சொல்லும்படிப் பெயரெடுக்க விழைவோம்.

வெவ்வேறு பாவங்களைக் கண்ட உங்கள் ரசனை வாழ்க வேல்கண்ணன்.

கவிதையின் மையத்தை ரசித்த ரசனைக்கு நன்றி சைக்கிள்.

பாவத்தின் சம்பளம் மரணம்-வேதம் சொல்கிறது.அதே போல் கர்மா குறித்தும் சந்ததி எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்தும்.மரணத்தின் பின்னும் காத்திருக்கிறது தண்டிக்கப்படாத வாழ்க்கை.இல்லையா வாசன்?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...