சமீபகாலமாக என் அப்பாவுக்குத் தன் இளம் பிராய நினைவுகள் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடப்பவை பற்றி எதுவும் நினைவில் இருப்பதில்லை.
”1979ல் 900 ரூபாய் கொடுத்து உனக்கு வாங்கித்தந்த BSA SLR sports cycle எங்கே?” என்று நேற்றைக்குக் கேட்டார்.
”1990ல் வித்துட்டேனேப்பா நூறு ரூபாய்க்கு!”
“இத்தனை நாளா எங்கிட்ட ஏன் சொல்லாம மறைச்சுட்ட? ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்”.
அவர் கன்னத்தைச் சிரித்தபடி தட்டிக் கொடுத்தேன். அவருக்கு வயது 76.
######
இன்றைக்கு மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் வெளியில் நடந்து சென்று வரலாம் என்று மதிய உணவின் போது கூறியிருந்தேன். அரை மணி நேரம் முன்னதாகவே தயாராகி, அவரின் சோர்வுக்கு மத்தியிலும் மிகுந்த ஆர்வம் கலந்த பரபரப்பில் இருந்தார்.
அவரின் திட்டமிடலும், என்னுடையதும் வெவ்வேறு விதமானவை. பிறருக்கு ஒப்புதல் அளித்திருந்த நேரத்தை அநேகமாக நான் கடைப்பிடித்துவிடுவேன். வீட்டுக்குள் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடிந்ததில்லை.
அதனால் அவர் சரியாக 5 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினார். நான் 5.15க்கு அவரைத் தொடர வீட்டை விட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் அவர் காலணிகள் அணியாமல் மறதியில் வெற்றுக்காலுடன் சென்றிருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
ஒரு ஃபர்லாங் தொலைவில்தான் மிக மெதுவாக அடிமேல் அடி வைத்துச் சென்று கொண்டிருந்தார். காலணி அணியாததை நினைவுபடுத்தினேன். ’அதனால் பரவாயில்லை’ என்று சைகை செய்தார். நான் என் காலணிகளைக் கழற்றி அவரை அணிந்து கொள்ளச் செய்தேன். எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்து வந்தார்.
கொஞ்ச தூரம் போனபின், நான் அவரின் மணிக்கட்டில் நாடியைப் பிடித்துப் பார்த்து, ’இன்று ரத்த அழுத்தம் உனக்கு நார்மலா இருக்குப்பா’ என்று அவரை உற்சாகப் படுத்தக் கதை விட்டேன்.
’அப்படியா’ என்பது போல் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, எங்கள் எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவருடன் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசத் துவங்கினார்.
தன் மணிக்கட்டில் அவரின் விரல்களைப் பிடித்து வைத்து, ‘நாடி சரியா இருக்கா’? என்று கேட்டார். அவரும், சிறிது நேரம் நாடியில் கை வைத்துப் பார்த்து விட்டு, “ நமச்சிவாய! நாடித் துடிப்பு மிகச் சரியா இருக்கு. நிறைவாழ்வு வாழ்வீங்க’ என்று அப்பாவை வாழ்த்தினார்.
’எனக்கு 76. உங்க வயசென்ன?’ என்று அவரிடம் கேட்டார்.
’70’ என்றார் அவர்.
‘சரி. பாக்கலாம் நாளைக்கு’ என்று விடைபெற்றுக் கொண்டார்.
அவரும் என்னிடம், ‘அப்பாவப் பூப் போலப் பாத்துக்குங்க தம்பி’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே கையசைத்து விட்டுக் கிளம்பினார்.
அவரை இதற்கு முன் அப்பாவுடன் பார்த்த நினைவில்லாததால், ”யாருப்பா அது?’ என்று கேட்டேன்.
அவர் சிரிப்புடன், ‘எனக்கும் தெரியாது. தெரியணுமா என்ன?’ என்றார்.
எதிரில் கடந்து சென்ற் அந்த பரிச்சயமில்லாப் பெரியவரின் மனதிலும் அப்பாவின் பதில் எதிரொலிப்பதை உணர்ந்தேன்.