22.6.12

மயிலாப்பூரின் மூன்று சிலாசாசனங்கள்


மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் தரிசிக்கப் போயிருந்தேன். கபாலியின் சந்நிதிக்குள் எப்போதும் போல நுழைய நேர்கையில் இத்தனை நாள் என் பார்வையில் தப்பிய இரு சிலாசாசனங்கள் வலமும் இடமுமாகக் கண்ணில் பட்டன.

மேலோட்டமாகக் கவனித்துவிட்டு தரிசனம் முடித்துவிட்டு குறிப்பெடுத்துக்கொள்ளலாமென நினைத்தேன். அதே போல கற்பகாம்பாளின் சந்நிதியில் நுழைகையில் வலப்புறம் மற்றொரு சிலாசாசனம். ஆக தரிசனத்தை முடித்து வந்தபின் குறிப்பெடுத்துக் கொள்ள ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆனது.

முடிந்தபின் ஆளரவமற்ற நூறு வருடங்களுக்கும் முந்தைய தீவட்டிகளின் கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் ருத்திர கோஷங்களுக்கு நடுவே இறைவனையும் இறைவியையும் வழிபட்டுமுடித்து அம்சை பண்ணப்பட்ட மிளகோரையை ருசித்தபடி ப்ரஹாரத்தில் என்னைக் கிடத்தியது போலுணர்ந்தேன்.

இந்த சிலாசாசனங்கள் பிழைகளோடும், அக்காலத்தைய மொழி உபயோகங்களோடும், நம் முன்னோர்களின் ஈரமிக்க மனதோடும் காலத்தின் சாட்சிகளாக யார் கண்ணிலும் படாமல் நின்றுகொண்டிருக்கின்றன.

அந்த மூன்று சாசனங்களையும் அதில் செதுக்கப்பட்ட உளியின் இசையோடு அதன் மொழியோடு படியுங்கள்.

கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் நுழைகையில் இடதுபுறம் முதலாம்
================================================
சாசனம்.
========


சிவமயம்

”ஸ்வஸ்திஸ்ரீ விஜயாற்புத கலியுகாதி 4997க்கு மன்மத வருஷம் பங்குனி 5 சோமவாரம் திருமயிலாப்பூர் வடகூர் இராச்சியப்ப முதலியார் வீதி 4வது நெம்பர் வீட்டிலிருக்கும் நல்வேளாள மரபு சிவகோத்திரம் ஆண்டி சுப்பராய முதலியார் குமாரர் ஆறுமுகம் முதலியார் எழுதிவைத்த சிலாசாசனம்.

செங்கல்பட்டு ஜில்லா சைதாப்பேட்டை தாலுக்கா 181வது நெம்பர் ஊரூர் கிராமத்தில் சர்வே நெம்பர் 36-38 பட்டா நெம்பர் 20ல் அடங்கிய ஏகர் 1.4 சமல் 40க்கு ரூபா 2500 மதிப்புள்ள என்னுடைய தென்னந்தோட்டத்தை திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர் பிரம்மோற்சவத்தில் முதல்நாளாகிய துவஜாரோகணங் காலை மாலை மஹோற்சவங்களுக்கும், திருமயிலை நாட்டுசுப்பராய முதலியார் வீதி தென்னண்டை வாடை சர்வே நெம்பர் 251ம் டோர் நெம்பர் 18 சர்ட்பிகேட் நெம்பர் 1441ல் அடங்கிய மனை 1 குழி 23 3/8 உள்ள ரூபா 500 மதிப்புள்ள என்னுடைய வீடு, மனையை மேற்படி தேவஸ்தான அர்த்தஜாமபூஜையில் பிரதிதினம் மிளகோரை* அம்சை* பண்ணி தேசாந்திரிகளுக்கு வினியோகிக்கவும் தான சாசன சகிதம் நான் மனப்பூர்வமாக தத்தஞ் செய்து மேற்படி பூஸ்த்திகளை* தேவஸ்தான ஸ்வாதீனம் செய்துவிட்டேன்.

இவைகள் தவிர ரூபா 3000 மதிப்புள்ள இறத்தன மகா கெண்டியும்* சமற்பித்திருக்கிறேன்.

1896 மார்ச்சு 16. ஆ.ஆறுமுகமுதலியார்.”

கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் நுழையுமுன் வலதுபுறம் இரண்டாம்
================================================
சாசனம்.
=======

சிவமயம்

”ஸ்வஸ்திஸ்ரீ விஜயாற்புத கலியுகாதி 5019க்கு காளயுக்தி கார்த்திகை மீ 17 சோமவாரம் திருமயிலாப்பூர் சாலை வீதி 5வது நெம்பர் வீட்டிலிருக்கும் சோழியவேளாள மரபு சிவமதம் காலஞ்சென்ற ஏ. ராமசாமி முதலியார் பாரியாள் அம்மாயி அம்மாள் யெழுதி வைத்த சிலாசாசனம்- மதராஸ் செங்கல்பட்டு டிஜிஸ்டிரேஷன் டிஸ்டிரிக்டு தென்மதறாஸ் சப் டிஸ்டிரிக்டைச் சேர்ந்த சென்னப்பட்டணம் திருமயிலாப்பூர் முத்துக்கிராமணி தெருவில் ராமசாமி செட்டியார் வீடு மனைக்கும் யென்னுடைய 17-18வுள்ள வீடு மனைக்கும் அதைச் சார்ந்த இரு கடைகளுக்கும் வடக்கு, செயிந்தோம்* ஸ்கூலுக்கு தெற்கு, வெங்கடாசலபிள்ளை தென்னந்தோப்பு மனைக்கு கிழக்கு, செயிந்தோம் ஐறோட்டுக்கு* மேற்கு இந்த நாற்பாங்கெல்லைக்குள்ளும் கலைக்டர் சர்ட்ட்பிகேட் நெம்பர் 837ம் பழய சர்வே நெ. 1681& 1682ம், புது சர்வே நெம்பர் 2574ம், முனிசிபல் நெம்பர் 17-18வுள்ள தென்னந்தோப்பு மனைக்கு மதிப்பு ரூபா 6000 வுள்ளதை திருமயிலாப்பூர் ஸ்ரீ கர்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வர சுவாமியார் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் காலை மாலை நடக்கும் மகோற்சவங்களுக்கு குறையில்லாமல் நடந்தேரி வரும் பொருட்டு தானசாசன சகிதம் நான் மனப்பூர்வமாக தத்தம் செய்து மேற்படி பூஸ்த்தியையும் அதின் தஸ்த்தாவேசுகளையும் மேற்படி தேவஸ்தான சுவாதீனம் செய்துவிட்டேன்.

இது தவிர சுமார் 500 ரூபா மதிப்புள்ள பொன் தாலிமாலையும், கல்லிழைத்த மோப்பும்* சமர்ப்பித்திருக்கிறேன்.

5019/1918
அம்மாயி அம்மாள் கைனாட்டு*.
மயிலாப்பூர்.

கற்பகாம்பாள் சந்நிதிக்குள் நுழைகையில் வலதுபுறம்
=========================================
மூன்றாவது சாசனம்:
==================


சிவமயம்
ஸ்ரீ கற்பகாம்பாள் ருத்திரவேத பாராயண பாடசாலை

1933ம் வருடம் மே மீ 17க்குச் சரியான கலியுகாதி 5034 ஸ்ரீமுக வருஷம் வையாசி மீ 4 புதவாரம் தாச்சி அருணாசல முதலி தெருவு 12ம் நெம்பர் வீட்டிலிருக்கும் மயிலை சின்னண்ண ஏகாம்பர முதலியார் இரண்டாவது குமாரர்.ம.சி.திருவேங்கட முதலியார் எழுதி வைத்த சிலாசாசனம். என் பாரியாள் ம.சி.துரை அம்மாள் அனித்திய காலத்தில் அபிப்பிராயப்பட்டபடி நானும் அதற்கு சம்மதித்து இன்று தேதியில் ஸ்ரீ.கற்பகாம்பாள் ருத்திர வேத பாராயண பாடசாலை என்ற பெயருடன் ஏற்படுத்தி ஸ்ரீ.கபாலீசுவரர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாகிய மகாஸ்ரீஸ்ரீ. அ.வெங்கடசுப்பு முதலியார், மகாஸ்ரீஸ்ரீ.ம.நா.அண்ணாமலை முதலியார் ஆகிய இவர்களிடம் சப்-ரிஜிஸ்டிரார் முன்னிலையில் பத்திரம் ரிஜிஸ்தர் செய்து மூலதனமாக ரூ.10,000.00 கொடுத்துவிட்டேன்.

மேல்கண்ட ரூபாய் பதினாயிரத்துக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.50.0.0 (ஐம்பதுக்கு) குரையாமலும் அதற்கு மேல்வரும் வரும்படி பூராவாகவும் மேல்கண்ட வேத பாராயண பாடசாலைக்கு உபயோகித்து ஸ்ரீ கபாலீசுவரர் தேவஸ்தானத்தில் நித்திய கட்டளையில் நடந்தேரி வரும் 4 கால அபிஷேக பூஜாகாலங்களில் 5 பேர்களுக்கு குறையாமல் ருத்திர பாராயணம் செய்யவேண்டியது.

மேற்கண்ட தர்மகர்த்தர்களும் அவர்களுக்குப் பின்வரும் தர்மகர்த்தர்களும் சந்திர சூரியாள் உள்ள வரையில் சரிவர நடத்த வேண்டியது. மேற்கண்ட தர்மத்தை சரிவர நடத்தாவிட்டால் என்னுடைய வார்சுகளும், தரிசனார்த்திகளும் கேட்க சகலவித பாத்தியதைகளும் உண்டு.

இந்தப்படிக்கு நான் அடியில் கண்ட சாக்ஷிகள் முன்னிலையில் என் மனப்பூர்வமாக கையொப்பமிட்ட சிலாசாஸனம்.

சாக்ஷிகள்: ம.சி. திருவேங்கடமுதலியார்
ம.சுப்ரமண்ய குருக்கள்
பரோபகார சிந்தாமணி ராவ் பஹதூர் A. கிருஷ்ண ஸாமி ஐய்யர்.
திருப்புகழ்மணி டி.எம். கிருஷ்ணஸாமி ஐய்யர்
கர்மரக்ஷாமணி. K. பாலசுப்ரமண்ய ஐய்யர்
ம.சி.சம்பந்த முதலியார்.

############
மூன்று சாசனங்களையும் அதன் காலவரிசைப்படியே காரணத்தோடேயே கொடுத்திருக்கிறேன்.

சில எண்ணங்கள்:

1. முதலிரண்டு சாசனங்களும் கலியுகத்தை முன்னிறுத்தியே காலத்தைச் சொல்ல வருகிறது.

2. மூன்றாவது சாசனம் துவக்கமே ஆங்கில வருடக் குறிப்புடன் துவங்குவதோடு, தேதி என்கிற பிரயோகத்துடன், ’அம்சை’ எனப்படும் வைணவ அடையாளம் கொண்ட வார்த்தையையும்
உபயோகப் படுத்துகிறது.

3. முதலிரண்டு சாசனங்களாலும் கோத்திரம் மரபு குலம் போன்ற தகவல்களை வலிந்து மறைக்காது இயல்பாய்ச் சொல்ல முடிகிறது.

4. முதலிரண்டு சாசனங்களில் எதிர்கால சந்ததிகளின் மேல் காணப்படும் நம்பிக்கை, மூன்றாவது சாசனத்தில் தேய்ந்து போய் சந்திர சூர்யாளையும் அதையும் கடந்து ஐந்து சாக்ஷிகளையும் அழைக்கிறது. அக்கௌண்டபிலிடியை உருவாக்க நினைக்கிறது.

5. தர்மகர்த்தர்கள் உருவாகி நிர்வாகத்தைக் கையிலெடுத்திருப்பதால் அந்த அவநம்பிக்கையா? தெரியவில்லை.

6. கடைசியாய் மயிலாப்பூரின் நூறு வருஷத்துக்கு முந்தைய பொருளாதாரம். தங்கம், ரத்தினம் சகட்டுமேனிக்கு சல்லிசான விலையில். நிலம், தென்னந்தோப்பு அடிமாட்டுக் கிரயத்துக்கு என பொறாமைப்பட வைக்கிறது என்றாலும் வழக்கம் போல அதற்கெதிர்ப்பதமாய் மாதவருவாய் கவைக்குதவாத ஐந்து ரூபாயாய் இருந்திருக்கும்.

இதுபோக இன்னும் என்னென்னவெல்லாமோ கற்பனை உதிர உதிரக் கோயிலைக் கடந்து வந்துகொண்டிருந்தேன். அக்காரவடிசலின் அடிநாக்குத் தித்திப்பாய் இன்னமும் இனித்துக்கொண்டிருக்கிறது சாசனங்களின் மொழி. இதோ சைக்கிளில் மெல்லிய தூறலில் நனைந்தபடி இரவின் கம்பளத்தில் மறைந்துகொண்டிருக்கிறேன்.

மேற்கண்ட சிலாசாசனங்களின் அபிலாஷைகள் அமலில் இருக்கின்றனவா அல்லது ஸ்வாஹா*வா என அடுத்தமுறை கபாலியைப் பார்க்கும் போது ஞாபகமாய்க் கேட்க வேண்டும்.

சில குறிப்புகள்:
=============
மிளகோரை- மிளகு சாதம்
அம்சை - நிவேதனம், படைத்தல்
மோப்பு - முகப்பு, டாலர், பதக்கம்
பூஸ்த்தி- நிலம், மனை போன்ற சொத்து (ஆஸ்த்தி-பணம்)
இறத்தன மகா கெண்டி- பெரிய இரத்தின கெண்டி
ஐறோட்டு- ஹைரோட், நெடுஞ்சாலை
கைனாட்டு- இடதுகட்டைவிரல் ரேகை பதித்தல்
செயிந்தோம்- சாந்தோம்.
ஸ்வாஹா- ஏப்பம், ஆட்டையைப் போடுதல்

19.6.12

அமுதுமிழும் தமிழ்



















கீழ்க்கண்டவற்றைப் பதினெட்டு நிமிடங்களில் பொருத்தமாய்ப் பொருத்தவும். 

அ) கர்ணனின் இயற்பெயர் - மிருகண்டூயன்

ஆ) ஜபாகுஸூமம் - கிராம்பு

இ) வீணையில் உறையும் தெய்வம் - செம்பருத்தி

ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - அர்ச்சுனன்

உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- வஸுசேஷன்

ஊ) தேவ குஸுமம் -  அபர்ணா.

எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - கண்டகி

ஏ) சாளக்கிராமம் - கச்சபி

ஐ) இலையையும் உண்ணாதவள் - மாதங்கி

ஒ) ஊகம் -  மதம்பிடித்த யானை

ஓ) கும்பகர்ணனின் மனைவி - துச்சலை

ஔ) வழுதுணங்கு - லகான் 

ஃ) வடிகயிறு- காதணி

க) முயலகன் - கத்தரிக்காய்

ங) கடநாகம் - எள்ளுருண்டை

ச) நோலை - கருங்குரங்கு

ஞ) சரஸ்வதியின் வீணை - வச்சிரச்சுவாலை

ட) தாடங்கம் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி

(முன்-பின் குறிப்பு): 

1) ஒரு வேளை கைகள் அள்ளிய நீரின் வாசகரும், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் அமர்பவரும் ஒரே நேர்க்கோட்டில் வர நேர்ந்தால் இந்தப் பயிற்சி உதவக் கூடும்.

2) இது பதினெண் கீழ்க்கணக்கு அல்ல.

சரியாக விடையைப் பொருத்தி முடித்துவிட்டால் ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகவும். பின் காத்திருக்கவும். விடை தெரியாவிட்டால் கூகுளில் தேடி எழுத வேண்டாம். கிடைக்காது.
_____________________________________________________________

ஆஸ்தான கோலாகலம் சுவடி எண் 1327 சொல்லும் கால அளவைகள் பற்றி இந்தப் பத்தி. அழகழகான கால அளவுகள்.

இரு கண்ணிமை - ஒரு கைநொடி
இரு கைநொடி - ஒரு மாத்திரை
இரு மாத்திரை-  ஒரு குரு
பதினொரு குரு - ஒரு உயிர்
ஆறு உயிர் - ஒரு வினாழிகை
அறுபது வினாழிகை - ஒரு நாழிகை
ஏழரை நாழிகை - ஒரு சாமம்
மூன்று சாமம் - ஒரு பொழுது
இரு பொழுது - ஒரு நாள்
முப்பது நாள் - ஒரு திங்கள்
பன்னிரெண்டு திங்கள் - ஒரு ஆண்டு.

ஒரு குரு நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இனி யாரிடமும் ஒரு உயிர் வெய்ட் பண்ணுங்கன்னு உயிரை எடுக்கலாம்.
____________________________________________________________________

படித்துக்கொண்டே இருக்கிறேன். மலைப்புத் தீரவில்லை. 

”இந்தக் கணக்கதிகாரம் குண்டூர். வா. சங்கறப்பனார். 
எடுத்தவன் கோவதையை வதை செய்த தேசத்திலே போவான்” என்ற சாபத்துடன் குண்டூர். வா. சங்கறப்பனார் உத்தரவிட சுவடிகளில் பதிவாகியிருக்கிறது கணக்கும், காலமும்.

சுவடி எண் 930ல் ஒரு சுவாரஸ்யமான கணக்கோடு அதன் காலத்தை நமக்குக் காட்டும் மயங்க வைக்கும் மொழி.

”ஒரு செட்டிக்கு 7 ஆண் பிள்ளையளுண்டு. அந்தச் செட்டி சிறிது முத்து ஆசித்தி வச்சு சிவலோகப் பிராத்தியானான். அந்த முத்து மூத்தபிள்ளை கையிலே அகப்பட்டது. அவன் வசத்திலே இருக்கிற பிள்ளையும் ஒருவன் அறிஞ்சு, இரண்டு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு மூன்று பங்கு வைக்குமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி நாலு பேருமறிஞ்சு நான்கு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி அஞ்சு பேருமறிஞ்சு அஞ்சு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு ஆறு பங்கு வைக்குமிடத்திலும் ஒரு முத்து அதிகமிருந்தது. ஆகப் பின்னே அந்தச் சேதி ஏழு பேரும் அறிஞ்சு ஏழு பங்காகப் பகிருமிடத்தில் மிச்சமில்லாமல் சரியாக இருந்தது.

ஆனபடியினாலே செட்டியார் வச்சிப்போன ஆசித்தி இருந்த முத்து எத்தனை? மொத்த முத்து ---------.”

(சில முடிவுகள்: 

1. செட்டிக்கு ஏழு பிள்ளைகள் என்பதிலிருந்து கணக்கின் மேலும் முத்தின் மேலும் இருந்த ஆர்வம் குடும்பக் கட்டுப்பாட்டின் மீதில்லை என்பது உள்ளங்கை அம்லா.

2. ஒவ்வொருத்தருக்காக செட்டி விட்டுச் சென்ற ஆஸ்தியின் விவரம் தெரிந்தும் யாரும் இன்றைய டி.வி.யின் சீரியல்கள் போல அடுத்தடுத்த சகோதரர்களைப் போட்டுத் தள்ள விரும்பாமல் நேர்மையாய் முத்துக்களைப் பிரித்துக் கொண்ட தன்மை.

3. நல்ல வேளையாக ’மிஞ்சும் முத்தை யார் எடுத்துக்கொள்வது’ என்ற பெரும் பிரச்சினை வராத படிக்கு முன்கூட்டியே ஏழு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட தைரியத்தையும், அவர்களுக்கு ஒரு நாள் முத்துக்கணக்கு தெரிய நேரலாம் என்ற யூகத்தில் மிகச் சரியான எண்ணிக்கையில் முத்துக்களை ஆஸ்தியாக விட்டுச் சென்ற செட்டியின் தொலைநோக்குப் பார்வையையும்  பாராட்டுகிறது கை.அ.நீ. )

விடை தெரிந்தால் முத்துக்குப் பின்னாலிருக்கும் கோடிட்ட இடத்தில் நிரப்புக.

_______________________________________________________

வர்ட்டா?


**************************************************************************
ரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன. 

மனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.  

அந்த விடைகள்:

அ) கர்ணனின் இயற்பெயர் -வஸுசேஷன் 
ஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி
இ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி
ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்
உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன் (அர்ச்சுனன் பெற்ற சாபத்தின் மறுபிறவி) 
ஊ) தேவ குஸுமம் -  கிராம்பு
எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - துச்சலை
ஏ) சாளக்கிராமம் - கண்டகி (கண்டகி நதியில் வக்ர தந்தி என்ற பூச்சியின் கூடுதான் சாளக்கிராமம். அது சால மரங்கள் நிரம்பிய பகுதியாய் இருந்ததால் சாளக்கிராமம்.) 
ஐ) இலையையும் உண்ணாதவள் - அபர்ணா.(பர்ணா என்றால் இலைதழை. பர்ணசாலையின் origin)
ஒ) ஊகம் -  கருங்குரங்கு
ஓ) கும்பகர்ணனின் மனைவி - வச்சிரச்சுவாலை
ஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்
ஃ) வடிகயிறு- லகான் 
க) முயலகன் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி
ங) கடநாகம் - மதம்பிடித்த யானை
ச) நோலை - எள்ளுருண்டை
ஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி
ட) தாடங்கம் - காதணி

செட்டி விட்டுச் சென்ற ஆசுத்தி 301 முத்துக்கள்.

பங்கெடுத்துக்கொண்ட எல்லோருக்கும் நன்றி.

301 என்று ஒரே போடு போட்ட கீதமஞ்சரிக்கும், அப்பாத்துரைக்கும் ராமானுஜம் விருது பகிரப்படுகிறது.

தனியே பதிலளித்த மாதங்கி மற்றும் அவருக்கு நிழலாக உதவிய பெற்றோர்களின் தமிழ் தைரியத்தைப் பாராட்டி அகத்தியர் விருது அளிக்கப்படுகிறது.

மற்றுமொரு பயிற்சியில் சந்திக்கும்வரை நிம்மதியாக இருக்கவும்.  

11.6.12

சித்ரா





















நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன் ஒரு குறும்படத்தைச் சிலாகித்து எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பிரதி ஒன்றை எனக்கும் அனுப்பியிருந்தது தெரியாமல் என் பயணத்தில் உறங்கிக்கொண்டிருந்தேன். மின்னஞ்சலில் உறங்கிக்கொண்டிருந்தது என்னை உலுக்கிஎழுப்பும் வல்லமை கொண்ட அந்தக் குறும்படம்.

இன்று காலைதான் அதைக் காணும் வாய்ப்பு அமைந்தது.
https://www.youtube.com/watch?v=bl9cxwhYuuA
இந்தக் ஆறு நிமிடக் குறும்படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட வழக்கம்போல் நல்ல சிருஷ்டிகளைக் கண்டபின் உண்டாகும் அதே நேரம் பிடித்தது.

இந்தக் குறும்படம் தன்னுடைய பவித்ரா என்ற சிறுகதையினை அடிப்படையாய் அமைத்து எடுக்கப்பட்டது என்ற தகவலைக் கூட வெளிப்படுத்தாத முதல் பரிசு குறித்த அவரது இடுகையில் தெரியும் அ.முத்துலிங்கத்தின் அடக்கம் அவர் எழுத்தைப் போல அத்தனை உயர்வானதும் காணக்கிடைக்காததும்.

இதை இயக்கிய விக்னேஷ்வரன் விஜயன் - பாலுமகேந்திராவின் மாணவர்-, கதை கொடுக்கும் வாசிப்பனுபவத்தையும் கடந்து உணர்வுகளை உலுக்கும் விதமாக இந்தக் குறும்படத்தை இயக்கியிருப்பது அவரின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இப்படிச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களின் மீதான முழு மரியாதையுடனும், விக்னேஷ்வரன் விஜய னைப் பாராட்டும் விதமாகவும்தான் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒரே சிருஷ்டி வெவ்வேறு வடிவங்களில் வெளியாகும்போது மூலத்தையும் மிஞ்சும் விதமாக உருக்கொள்ள முடியும் என்பதற்கான சாட்சி இந்தக் குறும்படம். இதற்கு மூலத்திலிருந்து சாரத்தை உறிஞ்சிக்கொள்ளத் தெரிந்த மற்றுமொரு கலைஞனின் சாகஸமேயன்றி வேறில்லை.

கோடிகளைக்கொட்டி வீணடிக்கும் இயக்குனர்களும் நடிகர்களும் கொடுக்காத அனுபவத்தை அ.மு.வின் சிறுகதையும், சித்ரா என்ற குறும்படமும் அநாயசமாய் அள்ளித்தந்துவிடுகிறது.

இந்தச் சிறுகதையும் குறும்படமும் சொல்லிவிடாததை நான் சொல்லி என் எழுத்தை நிரூபிக்க விரும்பும் மனநிலையில் இல்லை.

இந்த இடுகைக்கான ஊற்றுக்கண்ணான நண்பர் எஸ்.வி.வி.யின் வார்த்தைகளோடு இதை முடிக்க ஆசைப்படுகிறேன்.

”சிக்கல் இல்லாமல் கதையை அவர் நகர்த்த ஆரம்பிக்கிறார்...பார்வையாளரை அவர்கள் நம்பும் திசையில் செல்ல அனுமதிக்கிறார். அவர்களுக்கான அதிர்ச்சிகளை அடுத்தடுத்து வழங்கி முடிக்கையில் ஓர் உலுக்கு உலுக்கிவிடுகிறார்.”

நன்றி எஸ்.வி.வி. நல்ல அனுபவத்துக்கு.

பல நல்ல குறும்படங்களை உள்ளடக்கிய சிறுகதைகள் பலவற்றை எழுதிய எழுதவிருக்கிற என் ஆதர்ச எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும், அ.மு. சொன்னதுபோல வருங்காலத்தில் அனைவரின் வாயிலும் புகுந்து புறப்பட இருக்கிற விக்னேஷ்வரன் விஜயனுக்கும் தித்திக்கும் ஆனந்தத்துடன் பாராட்டுக்கள்.

9.6.12

மஹா ஆனந்தம்


தஞ்சாவூர் போயிருந்தபோது சரஸ்வதி மஹாலில் நமது பாரம்பர்ய மருத்துவம், ஜோதிடம், கணிதம், நாட்டிய சாஸ்த்திரம், சமையல்கலை, வானசாஸ்திரம், மிருகங்களுக்கான வாகட சாஸ்த்ரம் என்று பல சுவடிகளிலும் கிடைத்த பற்பல செய்திகளும் வரலாறும் என இன்னும் இரண்டு வருஷங்களுக்கு எழுத வண்டி வண்டியாய் சமாச்சாரங்கள் கிடைத்தன.

கணிதம் தொடர்பான நூல்களாக ஆரியபடிதம், பஞ்சாம்மை, வைத்தம், புவனாதீபம், நவசத்திகை, கோவிந்தனார்படிகம் போன்ற சமஸ்க்ருத நூல்களும், ஏரம்பம், கிளராலயம், அதிசாகரம், பூகோளதிலகம், திரிபுவனதீபம், கணிதரத்தினம் என்ற தமிழ் நூல்களும் இருந்திருக்கின்றன என்று இந்தச் சுவடிகள் சொல்கின்றன. 

சரி. அதை இன்னொரு இடுகையில் பார்க்கலாம். 

கொஞ்சம் இந்த வெண்பாக்களைப் பாருங்கள்.  

நற்கோடி நற்சங்கு நல்விந்தம் நல்பதுமம்
தக்கதோர் சமுத்திரம் தாமரை- வற்றாத
வெள்ளம் பிரளயமாம் மெய்தோரை யோசனையாம்
கள்ளவிழும் கோதாய் கருது.

கற்பம் நிகற்பம் கடிமகரம் தண்பனை
உற்பலம் அற்புதம் என்றிவை- கற்க
வரியோ ரறிந்தவை யானதாம் இன்னும்
பெரியோ ரறிவளவுங் கேள்.

(ஆஸ்தான கோலாகலம்- சுவடி எண்: 436)

பலகோடி சங்குவிந்தம் பதுமஞ் சமுத்திரம்
துலைதா மரை வெள்ளம் பிரளயந்தோரை - நல யோசனை
கற்பம் நிகற்பம் கடிமகரம் தண்பனை
உற்பலம் அற்புதமென் றோது.

(ஆஸ்தான கோலாகலம் -சுவடி எண் - 1327)

அதன் விரிவு இப்படிச் செல்கிறது. 

கோடி ஒரு கோடி கொண்டது ஒரு மஹாகோடி
மஹாகோடி ஒரு கோடி கொண்டது ஒரு சங்கம்

சங்கம் ஒரு கோடி கொண்டது மஹாசங்கம்
மஹாசங்கம் ஒரு கோடி கொண்டது ஒரு விந்தம்

விந்தம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாவிந்தம்
மஹாவிந்தம் ஒரு கோடி கொண்டது ஒரு பதுமம்

பதுமம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாபதுமம்
மஹாபதுமம் ஒரு கோடி கொண்டது ஒரு சமுத்திரம்

சமுத்திரம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாசமுத்திரம்
மஹாசமுத்திரம் ஒரு கோடி கொண்டது ஒரு தாமரை

தாமரை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாதாமரை
மஹாதாமரை ஒரு கோடி கொண்டது ஒரு வெள்ளம்

வெள்ளம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாவெள்ளம்
மஹாவெள்ளம் ஒரு கோடி கொண்டது ஒரு பிரளயம்

பிரளயம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாபிரளயம்
மஹாபிரளயம் ஒரு கோடி கொண்டது ஒரு தோரை.

தோரை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாதோரை
மஹாதோரை ஒரு கோடி கொண்டது ஒரு யோசனை

யோசனை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாயோசனை
மஹாயோசனை ஒரு கோடி கொண்டது ஒரு கற்பம்

கற்பம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாகற்பம்
மஹாகற்பம் ஒரு கோடி கொண்டது நிற்பம்

நிகற்பம் ஒரு கோடி கொண்டது மஹாநிற்பம்
மஹாநிற்பம் ஒரு கோடி கொண்டது கடிகம்

கடிகம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாகடிகம்
மஹாகடிகம் ஒரு கோடி கொண்டது ஒரு தண்பனை

தண்பனை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாதண்பனை
மஹாதண்பனை ஒரு கோடி கொண்டது ஒரு உற்பலம்

உற்பலம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாஉற்பலம்
மஹாஉற்பலம் ஒரு கோடி கொண்டது ஒரு அற்புதம்

அற்புதம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாஅற்புதம்
மஹாஅற்புதம் ஒரு கோடி கொண்டது ஒரு அனந்தம்

அனந்தம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாஅனந்தம்.

நம்முடைய கணிதத்தில் எத்தனை கோடிகளைத் தொட்டிருக்கிறோம்? ஒவ்வொரு மடங்கிற்கும் அடுத்த படியாக ’மஹா’வும் அதற்கடுத்த மடங்குகளுக்கு அழகழகான பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன?

இன்னொரு புற ஆச்சர்யம். மஹாஅனந்தம் வரை நமது புழக்கம் இருந்திருக்கிறது என்பது எத்தனை மஹா ஆச்சர்யம்?  

இந்தக் கோணத்தில் அனந்தபத்மநாப ஸ்வாமி எத்தனை கோடித் தாமரைகளுக்கு மத்தியில்? அற்புதம்.அதியற்புதம்.

இந்தப் புழக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் 1,60,000 கோடியெனும் 2ஜியோ, கோல்கேட்டோ வெறும் ஒரு மஹாகோடிக்கும் கீழேதான். இன்னும் நம் அரசியல்வாதிகள் மஹாஅனந்தந்ததை அடைய அனந்தகோடி தூரம் செல்லவேண்டுமே என நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. 

நமக்குப் பக்கத்தில் டாலர்களில் புழங்கும் அதிபர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் அவர்களின் நாட்டின் கணிதத்தின் உச்சம் 1க்குப் பின்னால் எத்தனை பூஜ்யங்கள் வரை என்று தேடியபோது கிடைத்த பதிலைப் பார்த்தபின் நமது புராதனக் கணிதத்தின் மீதான மலைப்பு இன்னும் எகிறியது.

The system used in the U.S. is not as logical as that used in other countries (like Great Britain, France, and Germany). In these other countries, a billion (bi meaning two) has twice as many zeros as a million, and a trillion (tri meaning three) has three times as many zeros as a million, etc. But the scientific community seems to use the American system.

# of zeros......U.S./scientific community.......Other countries 

3......thousand................. thousand
6......million...................... million
9......billion...................... 1000 million (1 milliard)
12....trillion...................... billion
15....quadrillion.............. 1000 billion
18....quintillion................. trillion
21....sextillion.................. 1000 trillion
24....septillion.................. quadrillion
27....octillion.................... 1000 quadrillion
30....nonillion.................... quintillion
33....decillion................... 1000 quintillion
36....undecillion............... sextillion
39....duodecillion............ 1000 sextillion
42....tredecillion.............. septillion
45....quattuordecillion.... 1000 septillion
48....quindecillion........... octillion
51....sexdecillion............ 1000 octillion
54....septendecillion...... nonillion
57....octodecillion.......... 1000 nonillion
60....novemdecillion..... decillion
63....vigintillion............. 1 000 decillion
66 - 120... xxxx .......... undecillion - vigintillion
303....xxxxxxxxxxxxx.... centillion
600....centillion..... xxxxxxxxxxxxxxxx

There are other big numbers with names. A zillion has come to mean an arbitrary or unknown large number. A googol is 10^100. A googolplex is 10^googol (10^10^10^2). This number is too large to write here without exponents. Skewes' number (gesundheit) is 10^10^10^34 was used as an upper bound in a mathematical proof. Recently 10^10^10^10^10^7 was used in a proof.

The googolplex has given rise to the n-plex notation: n-plex is 10^n. n-minex is 10^-n. Donald Knuth invented arrow notation, where m^n (^ is an up arrow) is the regular m^n. m^^n is m^m^m^m...^m, with n up arrows. m^^^n is m^^m^^m...^^m, with n ^^s.

Source: http://www.jimloy.com/math/billion.htm  


200 வருடங்களுக்கு முன்னால் ராஜா சரபோஜி தன் மந்திரி பரிவாரங்களுடன் சுவடிகளின் மூலம் கிடைத்த பொக்கிஷங்கள் குறித்து ஆனந்தித்தபடி கடந்து சென்றிருக்க வாய்ப்புள்ள அதே பாதையில் இடிந்து சிதிலமான மாளிகை விதானங்களின் வழியே வருத்தம் அழுத்த வெளியேறினேன் நாம் போய்க்கொண்டிருக்கும் இன்றைய பாதையை எண்ணியபடியே.

6.6.12

7. ஸ்ரீமுக - தக்ஷிணாயனம்.


---------------------
வாங்மாதுர்யாத் ஸர்வலோக ப்ரியத்வம்
வாக்யபாருஷ்யாத் ஸர்வலோகாப்ரியத்வம் 
கோ வா லோகே கீகிலஸ் யோபகார:
கோ வா லோகே கார்தபஸ்யாபகார:


குயிலிடத்தில் அதன் இனிய சொல்லினால் எல்லோருக்கும் ஆசையும், கழுதையிடத்தில் அதன் கொடூரமான கத்தலால் வெறுப்பும் உண்டாவது போல எல்லா ஜனங்களுக்கும் இனிய சொற்களால் ஆசையும், கடுஞ்சொற்களால் வெறுப்பும் ஏற்படுகின்றன.


(நீதி சாஸ்த்ரம்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------

பெருமாள்புரம் தனலக்ஷ்மிய உங்களுக்குத் தெரியாது. அவளைப் பெருமாள்புரம் லக்ஷ்மியம்மான்னு சொன்னாதான் ஊர்ல எல்லாருக்கும் புரியும். அவளைப் பத்திச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு.

அவளுக்கு ஞாபக சக்தி ரொம்ப ஜாஸ்தி. உதாரணத்துக்கு நீங்க இருவது வருஷத்துக்கு முன்னால முடிஞ்சுபோன ஒரு சம்பவத்தை நினைச்சுப் பாத்தா அத்தனை சுவாரஸ்யமா இருக்குமான்னு சொல்லத் தெரியல.

ஆனா அதுவே லக்ஷ்மியாயிருந்தா அன்னிக்கு ரத ஸப்தமின்னும், அன்னிக்கு சமையல் பீன்ஸ் பருப்பு உசிலியும், அரைச்சுவிட்ட பூசனிக்காய் சாம்பாரும், பருப்பு வடையும், கலத்துக்கு மரிசீனிக்கிழங்கு அப்பளமும் பொரிச்சுப்போட்டதையும் சொல்றதோட அன்னிக்கு அரக்கு நிறமும் மஞ்சள் பார்டர் போட்ட புடவையை தான் கட்டிக்கொண்டதையும் சொல்லிக் கேக்கும்போது பகவானே எனக்கு ஏன் ரெண்டு காதுமட்டும் குடுத்தேன்னு பொலம்பத் தோணும். அத்தனை சுவாரஸ்யமான ஜோடிப்பும், ஞாபக சக்தியும்.

அவளோட சுவாரஸ்யமான பக்கங்களை நான் சொல்ல முயற்சிக்கறதும், அது எழுத்துக்குள்ள அடங்காம பிடிவாதமா நழுவி நழுவி கைக்குள்ள அடங்காம பாவ்லா காட்றதும் இன்னிக்கு மட்டுமில்லை. ரொம்ப நாளாவே பெரும் ப்ரயத்தனம்தான். எனக்கு அவளத்தனை ஞாபக சக்தி கிடையாது. இத்தனை தூரம் கதை சொல்லிட்டு இன்னும் அவதான் என் ஆம்படையா ன்னு அறிமுகப்படுத்தாம நாம் பாட்டுக்குத் தேமேன்னு போயிண்டிருக்கறதுலேருந்தே நீங்க யூகிச்சிண்டிருப்பேள்.

அதுனால நீங்க எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். நான் எப்படி எப்படி எழுதிண்டு போறேனோ அந்தப் போக்கிலேயே வாசிச்சுண்டு போக வேண்டியது. அத்தனைதான். இந்த நாவல், கதை, கட்டுரை அப்படில்லாம் சொல்றாளே அதுமாதிரியெல்லாம் எனக்கு எழுத வராது.

-----------------------------------------------------------

தினமும் கார்த்தால ப்ரும்ம முஹூர்த்தத்துல அதான் உள்ளங்கை கண்ணுக்குத் தெரியாம இருட்டு மிச்சமிருக்கும் வேளைல கிணத்துல மடமடன்னு இரைச்சு ஊத்திண்டு மொடமொடக்கற வேஷ்டியைச் சுத்திண்டு தெருமுனைல இருக்கற சிவன் கோயிலுக்குப் போய் ஒரு ஆவர்த்தனம் ருத்ரம் சமகம் சொன்னப்பறம்தான் நாக்கில் ஜலம் கூடப் படலாம். எங்கப்பா காலத்துலருந்து அப்பிடி ஒரு பழக்கம்.

அவளுக்கோ இந்தக் கோயில் பூஜை புனஸ்காரங்கள் இந்த மாதிரி விஷயங்களில்லெல்லாம் அத்தனை ஈடுபாடு கெடையாது. அதுக்காக அவ நம்பிக்கை இல்லாத ஜாதியும் கிடையாது. எதாவது கஷ்டம்னு வந்துட்டா வாயாற ஹே அம்பிகே என்ன ஏன் சோதிக்கறடியம்மா?ன்னு நேரடியா ஹாட்லைன்ல பேசிக்கற ஜன்மம். எல்லாம் சரியா ஓடிண்டிருந்தா உள்ளுக்குள்ளேயே உபாசனை எல்லாம் இருக்கும். ஆனா சொன்னா தப்பா எடுத்துக்கலன்னா சொல்றேன். அவ பாக்றதுக்கு நேரே அம்பாளே ப்ரத்யக்ஷம் ஆனா மாதிரிதான் இருப்பா. என்னடா பொண்டாட்டிக்கு இப்படி ஒரு ஐஸ் வெக்கறானேன்னு நெனச்சா நெனச்சிக்கோங்கோ. எனக்கெந்தக் கவலையுமில்லை.

பார்த்தேளா! எங்க ஆரம்பிச்சு எங்க போயிண்டிருக்கு கதை? சொல்ல வந்த விஷயம் என்னன்னா அவளோட ஞாபக சக்தி பத்தித்தான் சொல்ல வந்தேன்.

-------------------------------------------

ஒரு தடவை எங்கேயோ போயிட்டு வரச்சே பாக்கப் பச்சுனு இருக்கேன்னு ஒரு கிலோ வெண்டைக்காய் வாங்கிண்டு வந்துசேர்ந்தேன். ஒரு காயைக் கூட ஒடிச்சுப்பாக்க வேண்டியதில்லை. சில நேரம் அதெல்லாம் பார்வைக்கே தெரிஞ்சுடும். அப்பிடி ஒரு காய்ப்பு. ஒரு கிலோவையும் கொண்டுவந்து சொளகுல கொட்டிட்டு ஏ தனம்! இங்க வந்து பாரேன் இந்த வெண்டைக்காயை! குழந்தையோட வெரல் மாதிரி எப்பிடி ஒரு தவப்பிஞ்சுன்னு கூப்பிட்றேன். உடனே வர்றாளா பாருங்கோளேன். ஆடி அசைஞ்சு இந்தோ வந்துட்டேன்னா சொல்லி ரெண்டு நிமிஷம் ஆயிடுத்து.

ஆவணியாவட்டமும் வரலெக்ஷ்மி நோன்பும் இந்த தடவை சேர்ந்து வரது கவனிச்சேளா! ன்னு ஒரு உபரி தகவலோட குளித்த தலையின் நுனியில் தொங்கும் வெள்ளைத் துண்டோட அவ வந்த போது ஒரு க்ஷணம் எனக்கு வெண்டைக்காய் ரெண்டாம் பக்ஷமாயிடுத்து. இப்படித்தான் என்னைக் கட்டிப்போட்டு வெச்சிருக்கா. அவள அப்படியே கட்டிண்டு மோப்பம் பிடிக்கணும்னு ஆசையா இருக்கும்.

அப்பிடி நெனைச்ச நிமிஷமே அம்மான்னு ஓடி வந்து யாராவது நிப்பன் வாசல்ல. க்ராதஹி! மனுஷனுக்கு மனசுல காமம் பொங்கிண்டிருக்குன்னு புரிஞ்சுண்டவளா ‘சட்டுனு எப்பிடித் தப்பிச்சேம் பாத்தேளாங்கற’ மாதிரி என்னை அல்பமா ஒரு பார்வையை வீசிட்டு மான் மாதிரித் துள்ளி மறைஞ்சு போயிடுவா. சித்த நாழிக்கப்பறம் காஃபியோட வந்தவளுக்கு நான் வழிஞ்சுண்டு நிக்கறதப் பாத்து ஒரு சிரிப்புப் பிச்சுக்கும் பாருங்கோ! அலாதி சிரிப்பு.

----------------------------------------------

ஊஞ்சல் ஆடிண்டு இருக்கு. அவ இல்லை. போய்ச்சேந்துட்டா நாப்பது வயசுலயே. நாந்தான் இப்படி எண்பதாகியும் ஒவ்வொரு வேளையும் அவளைப் பத்தி நெனச்சிண்டு பொழுத ஓட்டிண்டிருக்கேன். அன்னிக்கு வெண்டக்காய் வாங்கிண்டு வந்தேனா! ஒடனே சொல்றா ஒரு கிலோன்னா 103 வெண்டைக்காய் நிக்கணும். இல்லன்னா அவனோட எடை தப்புன்னு, அப்பவும் பொழுது போகாம எண்ணினேன். நம்புங்கோ.103 வெண்டைக்காய் இருந்தது. இது மாதிரியே உருளைக்கிழங்குல தொடங்கி கத்தரிக்காய் வரைக்கும் எல்லாக் காய்கறிகளோடயும் எல்லா வஸ்துக்களோடயும் அவளுக்குன்னு ஒரு கணக்கு உண்டு.

இதெல்லாம் பெரிசில்லன்னா. பலாப்பழத்துக்குள்ள எத்தனை சுளை இருக்குன்னு பழத்தை அறுக்காமலே என்னால சொல்ல முடியும்.பாக்கறேளா!

’தூங்கு பலாவின் சுளையறிய வேண்டுமென்றால்
காம்பருகே நிற்கும் கதிர்முள்ளைப் - பாங்குடனே
எட்டெட்டால் மாறி இருநால்வர்க்கீய
திட்டெனத் தோன்றும் சுளை’ ன்னு ஒரு பாட்டு உண்டுன்னா.

புரிஞ்சிண்டிருப்பேள்னு நினைக்கிறேன். பலாப்பழக் காம்பைச் சுத்தி இருக்கற முள் 10ன்னு வெச்சுக்குங்கோ. அதை 64ஆல் பெருக்கினா 640. அதை எட்டால வகுத்தா வரக்கூடிய 80தான் சுளையோட எண்ணிக்கை. நீங்க வேணும்னா அடுத்த தடவை பலாப்பழத்தை வெட்றதுக்கு முன்னாடி ப்ரயோகிச்சுப் பாருங்கோ.

நான் பண்ணின முதல் வேலை ஆத்துல காய்ச்சுத் தொங்கின பலாவை வெட்டிப் பாத்து லக்ஷ்மி சொன்னது சரிதான்னு தெரிஞ்சுண்டதுதான். எனக்கு வந்த சந்தோஷத்துல அவளுக்கு ஒரு ஜோடி வளையல் வாங்கிக்கொடுத்தேன் கண்ணம்மா கண்ணம்மான்னு உருகிண்டே.

-----------------------------------------------------

தூக்கமுடியாதைக்கு ஒரு பெரிய பூசணிக்காயைச் சுமந்துண்டு உள்ளே நுழையறேன். இறக்கிவெச்சுட்டு அங்கவஸ்த்திரத்தால மொகத்தை ஒத்திண்டு அப்பாடான்னு லக்ஷ்மி கொடுத்த மோரைக் குடிச்சுட்டு நிமிந்தா போட்டாளே ஒரு குண்டு ‘இந்தப் பூசணிக்காயை வெட்டாமலே உள்ளுக்குள்ள எத்த்னை விதை இருக்குன்னு என்னால சொல்லமுடியும்’னு. ஆன்னு வாயைப் பொளந்துண்டு அவளையே பாத்துண்டு நிக்கறேன் ப்ரமிச்சுப்போய்.

கீத்தெண்ணி முற்றித்துக் கீழாறிலே பெருக்கி
வேற்றைந்தி னால்மீன மிகப்பெருக்கி - ஏத்ததொரு
ஆதரித்தக் கீற்றை அரைசெய்து முற்றிக்க
பூசணிக்காய் தோன்றும் விதை.

அப்பிடின்னா என்றேன் லக்ஷ்மியைப் பாத்து வியப்படங்காம.

ஒரு பூசணிக்கு 10 கீத்து இருந்தா அதை 3ஆல் பெருக்க 30 கிடைக்கும். அதை 6ஆல் பெருக்க 180. மறுபடி 5ஆல் பெருக்கினா 900. அதில் பாதி 450. இதை 3ஆல் பெருக்கினால் 1350 வரும். ஆக 10 கீத்து இருக்கற பூசணிக்காய்க்கு விதை 1350தான். இருக்கா இல்லையான்னு இந்த பூசணியை வெட்டும்போது உங்களுக்குக் காட்றேன். சரியான்னா?

எங்கேருந்து இதெல்லாம் தெரிஞ்சுண்டிருக்கா இந்தப் பொண்ணரசி?

இந்தத் தடவை என்னோட சந்தோஷத்துக்காக தினம் தினம் கோபூஜை பண்ண அவ ஆசைப்படி ஒரு பசுமாடு வாங்கிக் கொடுத்தேன்.

என்னால ஆச்சர்யப்படாம இருக்கமுடியுமோ சொல்லுங்கோ. இப்படியெல்லாம் ஒரு உலகத்தைக் காட்டினதே லக்ஷ்மிதான்.

-------------------------------------------------------

இன்னொரு நாளைக்கு விசிறிண்டே ஊஞ்சல்ல படுத்திண்டிருந்தவன் அப்படி விசிறி மேலே கெடக்கத் தூங்கிட்டேன். நல்ல தூக்கத்துல யாரோ காலை அமுக்கிவிடறாமாதிரி ஒரு சுகம். இந்தக் காலம் மாதிரியில்ல. செருப்பில்லாம நடக்கற கால். பித்தவெடிப்பு வேற வெய்யில்லயும் ஜலத்துலயும் நின்னுநின்னு.

சடார்னு எழுந்து வேணாம்மா பரவாயில்லங்கறேன்.இல்லன்னா கொஞ்சம் அப்பிடியே படுத்துக்குங்கோன்னு சொல்லிட்டு - முள் குத்தி கால ரெண்டு நாளா தரைல ஊணாம நடக்கறதப் பாத்திருக்காளா - உப்பைத் துணில கட்டி கொதிக்கற வெளக்கெண்ணைலை தோய்ச்சு குதிங்கால்ல ஒத்தி எடுத்தா. வலிக்கு அப்பிடி ஒரு இதம். அப்படித்தான் இன்னொரு தரம் கண்ணெல்லாம் பொங்கி கண்ணுக்கு வியாதி வந்தப்போ கொதிக்கற சாதத்தை மஞ்சள்பொடி கொழைச்ச வெளக்கெண்ணய விட்டு துணீல ஒரு சின்ன மூட்டையாக் கட்டி கண்ணுல ஒத்தி எடுத்தா பாருங்கோ ரெண்டு நாள்ல கண்ணுவலி போன இடம் தெரியல. அவளோட பரிவை நான் பாத்தவன். அப்பிடி ஒரு ஜன்மா எனக்கு ஆம்படையாளா வாய்ச்சது என்னோட பூர்வஜன்மப் புண்யம்.

வயித்துவலின்னா மோரும் வெந்தயமும். செவ்வாய்-வெள்ளின்னா சுமங்கலிகளும்,யுவதிகளும், கன்யாப் பொண் கொழந்தைகளும், புதன், சனியானா ஆம்பளைத் தடியன்களும் எண்ணைக்குளியலும்- தலை ஈரம் போக சாம்பிராணிப்புகையும். ஞாயித்துக்கிழமைகள்ல வெளக்கெண்ணை வயத்துக்கும், வேப்பிலைக்கொழுந்த அரைச்சு தயிர்ல கலந்து குடல்ல இருக்கற பூச்சி போக-தலைவலிக்கு சுக்குப் பத்து- சளி கட்டிண்டா கொதிக்க வெச்ச தேங்கா எண்ணைல கற்பூரத்தைக் கொழச்சு மார்ல பூசறதும், இருமலுக்கு சித்தரத்தை அதிமதுரம் கஷாயம்- வயத்துப் புண்ணுக்கு மணத்தக்காளி- மஞ்சக் காமாலைக்கு கீழாநெல்லி- துவாதஸிக்கு அகத்தியும் நெல்லிமுள்ளியும்-

இதுதவிர வெட்டுக்காயம், சேத்துப்புண், முட்டு வலி, சுளுக்குன்னா எப்பவும் சைபால்-தென்னமரக்குடி எண்ணைன்னு வெச்சுண்டு ஒரு டாக்டரா ஜொலிஜொலிப்பா. உங்களுக்கு போர் அடிக்கலாம். ஆனா லக்ஷ்மி இருந்த வரைக்கும் ஒரு நாள் ஒரு வேளை நான் டாக்டரைப் பாக்கப் போனதில்ல. ’லக்ஷ்மியம்மா காலத்துக்கப்புறம்தான் நம்மூர் டாக்டரோட வயசான காலத்துல சம்பாரிச்சு வீடு கட்ட முடிஞ்சுது’ன்னு ஊர் ஜனங்க பேசிக்கறது ஒண்ணும் பொய்யில்லை.

---------------------------------------------------------

மொதமொதல்ல 1956 கார்த்திகை மாச வியாழக்கிழமை என்னால மறக்கவே முடியாத பயங்கரமான திருப்புமுனை நாள். பால்கனில என் மடில படுத்துண்டு என்னென்னமோ பேசிண்டே இருக்கா. முன்பனி விழுந்துண்டிருக்கு. அவளோட ஒவ்வொரு விரலா நீவிவிட்டு சொடக்கெடுத்துண்டு இருக்கேன். அவளுக்குப் பிடிச்ச வெத்தலய மடிச்சு மடிச்சு அவளுக்குக் கொடுத்துண்டிருக்கேன். சிருங்காரமான அந்த வேளைல அவளுக்கு முத்தம் குடுக்கணும் முகத்தைப் பாத்துக் குனியறேன்.

உலுக்கினாப் போல சடார்னு எழுந்துண்டவ ’அந்தப் பல்லியப் பாருங்கோன்னா என்ன சொல்றதுன்னு. அதோட கண்ணுல ஏதோ விபரீதம். கொஞ்சம் இருங்கோ. கொஞ்சம் இருங்கோ. என்னன்னா இது. பாலத்துலேருந்து நாளக்கி ரயில் கவிழப் போறதுன்னா’ன்னு சொல்லச்சொல்ல எனக்கு ஜில்லிட்டுப் போய் அவளை உலுக்கறேன். லக்ஷ்மீம்மா என்னம்மா இது இப்பிடில்லாம் பேசற. எனக்கு பயம்மா இருக்குன்னு சொல்றேன்.

அப்புறம் எதுவுமே நடக்காத மாதிரி அவ தூங்கிப் போக மறுநாள் அப்படி எதுவும் நடந்திடக் கூடாதுன்னு நெனச்சுண்டே ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகமாக் கழிக்க மறுநாள் வெள்ளிக்கிழமை அரியலூர்ல கோரமான ரயில் விபத்துல நூத்துக்கும் மேலான பேர் செத்துப்போனா. லால்பஹதூர் சாஸ்திரி கூட தன்னோட பதவிய ராஜினாமா பண்ணினாரே அந்த விபத்துதான். ’ இது என்னதுன்னா இப்படில்லாம் நடக்கறது’ன்னு அவளுக்கு ஒரே ஆச்சர்யம். எனக்கோ பெரும் பயம். எனக்கு முதன்முதலா லக்ஷ்மிகிட்ட இருந்த ப்ரமிப்பு பயமாய் உருமாற ஆரம்பிச்சுது.

----------------------------------------------

அதுக்கப்புறம் அவள் இருந்த அடுத்த பதினாலு வருஷமும் இப்படித்தான். எதைச் சொல்ல எதை விட? ஒரு வெள்ளிக்கிழமை எனக்குள்ள தோணித்து எங்களுக்கு ஒரு கொழந்தை இருந்திருந்தா இப்படில்லாம் வாழ்க்கை மாறியிருக்காதோன்னு. அதுக்கு ப்ரச்னத்துல சொல்றா மாதிரி அன்னிக்கே பதிலும் சொல்லிட்டா ‘மூணு சோழிகள் கவிழ்ந்துருக்குன்னா. நமக்கு இந்த ஜன்மத்துல குழந்தை கிடையாதுன்னா’.

ஊர்ல மெதுமெதுவா எல்லாருக்கும் அவள் ஒரு கடவுளா உருமாற ஆரம்பிச்சா. எல்லா நல்லது கெட்டதுக்கும் அவளோட அபிப்ராயம் முக்யமாப் போயிடுத்து. அவளும் எத்தனைக்கெத்தனை கோயில் குளம்ன்னு இல்லாம விலகி தனக்குள்ளயே கடவுளை தரிசிச்சிண்டிருந்தாளோ அதுமாறிப்போய் எல்லாக் கோயில் பண்டிகைகள்லயும் அவளுக்கு முக்யமான இடம் கொடுக்க ஆரம்பிச்சுட்டா. அவளையும் அறியாம அவ போற பாதை பொறந்திண்டிருந்தது.

-----------------------------------------------------

அன்னிக்கு ஞாயித்துக் கிழமை. சாயங்காலமா ராகு காலத்துக்கு முன்னாடியே வாய்க்காலுக்குப் போய் களையெடுக்கறதுக்கு ஆள் அம்பு சேனையெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு ஆத்துக்கு வந்து சேந்தேன். வெளக்கு வெக்கற நேரம். வாசல் திண்ணைல ஒரே கூட்டம். களையெடுக்கற பொண்ணுங்களோட லக்ஷ்மி உக்காந்துண்டு ஏதோ வம்பளந்துண்டு இருக்கா. எல்லாம் மாமி மாமின்னு அவளை மொச்சுண்டு இருக்கு. என்னடான்னு பாத்தா எல்லாருக்கும் மருதாணி இட்டுவிட்டுண்டிருக்கா.

என்ன லக்ஷ்மி? அவா நாளக்கிக் களையெடுக்கப் போகவேணாமா? கையெல்லாம் இப்பிடி மருதாணி அப்பிவிட்டிண்டிருக்கன்னு கேட்டா ’நம்ப முதன்மந்திரி நாளைக்குக் காலமாயிடுவார்னு தோணித்து.அவா வேலைக்கிப் போகமுடியாதுன்னுதான் மருதாணி இட்டுவிட்டுண்டிருக்கேன்னா’ங்கறா. எனக்கு தூக்கி வாரிப் போடறது. என்ன இப்பிடிப் பேசறான்னு உதறல். ராத்திரில்லாம் சரியாத் தூங்கலை. அவ என்னடான்னா தூக்கத்துலயும் சிரிச்ச முகமா எந்தச் சலனமும் இல்லாம தூங்கிண்டிருக்கா.

கார்த்தால எந்திருந்தா ரேடியோல சொல்றா அண்ணாத்துரை காலமாயிட்டார்னு. அவர் இறந்துபோயிட்டாரேங்கற அதிர்ச்சிய விட எனக்கு என்னோட லக்ஷ்மி என்னை விட்டு ரொம்ப தூரம் விலகிப்போயிட்டாளோங்கற சோகம்தான். கேட்டா துளசிக்கு கார்த்தால ஜலம் விடறப்ப தென்னைமரத்துலேருந்து மட்டை ஒண்ணு விழுந்தது. அப்போ எனக்குள்ள இந்த வார்த்தைகள் அசரீரியாக் கேட்டுதுங்கறா. அவ சொன்னா மாதிரியே அந்தத் திங்கக்கிழமை களையெடுக்க முடியல.

--------------------------------------------------------

(தொடரும்)

3.6.12

6. ஆங்கீரஸ- தக்ஷிணாயனம்

# 25 ஜூன் 1975: அவசரநிலை ப்ரகடனம்.தணிக்கை அமல்.முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது.

#  5 ஆகஸ்ட் 1975: மிசா சட்டத்துக்கு (The Maintenance of Internal Security Act) பாராளுமன்றம் ஒப்புதல்.

 # 26 செப்டெம்பர் 1975: பிரதமரின் தேர்தலில் நீதித்துறை தலையீட்டுக்கு ஒப்புதல் மறுக்கும் 39வது சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல்.

# 9 ஜனவரி 1976: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிக்கிள் 19ஆல் வழங்கப்பட்ட முக்கியமான ஏழு சுதந்திரங்களுக்குத் தடை.

# 4 ஃபெப்ருவரி 1976: நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல்.

# 2 நவம்பர் 1976: மக்களின் அடிப்படையான கடமைகளை வரையறுத்து இந்தியாவை ஒரு சமத்துவ சமயசார்பற்ற குடியரசாக ஆக்கும் 42ஆவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

#18 ஜனவரி 1977: குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

# 21 மார்ச் 1977: 21 மாதங்களுக்குப் பிறகு அவசரநிலை விலக்கிக்கொள்ளப் பட்டது.

# 22 மார்ச் 1977: ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது.
----------------------

அவசரநிலை ப்ரகடனப் படுத்தப்பட்ட மறுநாள் 26.06.1975ம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பம்பாய்ப் பதிப்பில் வெளியான ஒபீச்சுவரி விளம்பரம்:

"D.E.M O'Cracy beloved husband of T.Ruth, father of L.I.Bertie, brother of Faith, Hope and Justica expired on 26 June"

---------------------------
டந்துபோன நூற்றாண்டில் ஜூன் 25ம் தேதியை இரண்டு காரணங்களுக்காக இந்தியர்களால் மறக்கமுடியாது. 

நாட்டின் வரலாற்றை விரைவாக மறந்துவிடும் அல்லது நாட்டின் வரலாற்றில் பெரிய அக்கறையற்ற மிக அதிகமான என் போன்ற இந்தியர்களுக்கு இந்தியா 1983ல் ஆங்கிலேயர்களின் தேசிய விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றது மட்டுமே நினைவில் இருக்கும். 

வாசல் திண்ணைகளில் உட்கார்ந்து கரகரவென விதவிதமான சப்தங்களோடு மர்ஃபி ட்ரான்ஸிஸ்டரில் லார்ட்ஸ் மைதானத்திலிருந்து குரல் மூலமாகக் கேட்டு ஆனந்தித்தவர்களுக்கு அந்த நம்ப முடியாத திருப்புமுனை வெற்றியை நினைவிருக்கும்.ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் யாரோடும் இதைப் பகிர்ந்துகொள்ள வழியில்லாமல் போன ஒரு தென்கோடித் தமிழக கிராமத்துத் தெருவில் புதைந்து கிடக்கிறது என் நினைவுகள்.

ஆனால் அதையும் புறந்தள்ளி மாரிமுத்துவின் நினைவு பறப்பது 1975ன் ஜூன் 25க்குத்தான். அன்றைய கருப்பு நள்ளிரவைப் பற்றிப் பேசாமல் இதை நகர்த்த முடியாது. தன்னுடைய சுய லாபத்துக்காக இந்திரா அலஹாபாத் உயர்நீதிமன்றம் தனக்கெதிராய் அளித்த தீர்ப்புக்குப் பணியாமல் தன் நாற்காலியைக் காத்துக்கொள்ள எல்லா எதிர்ப்புகளையும் மீறி சித்தார்த்த சங்கர் ரேயும்அரசியல் முதிர்ச்சியில்லாத 28வயது இளைஞன் சஞ்சய் காந்தியையும் மட்டுமே ஆலோசித்து மந்திரிசபை ஒப்புதலுக்கு மறுத்தும்சொன்ன இடத்தில் கையொப்பமிடும் ஃபக்ருத்தீன் அலி அஹமதுவிடம் ஒப்புதல் வாங்கி இரவோடு இரவாக அமல்படுத்திய நெருக்கடி நிலையை மாரிமுத்துவால் எப்படி மறக்கமுடியும்?

##################
ரு நாடோடியாக தில்லியின் தெருக்களை நாற்பது வயதுகளில் தஞ்சமடைந்தார் மாரிமுத்து. வாழ்க்கையின் மேடுபள்ளங்களில் சிக்கி வதைபட்டு ஒரு சாலை விபத்தில் தன் குடும்பத்தைப் பறிகொடுத்து யாருமற்ற அநாதையாய் மாறியபோது அவருக்கு முப்பது வயது. கூடவே இருந்த சுற்றத்துக்கும் நட்புக்கும் அவரின் சொத்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்து அவரை நடுத் தெருவில் நிறுத்த பத்து வருடங்கள் போதுமானதாக இருந்தது. 

பாரம்பரியமாக செய்து வந்த விவசாயத்தொழில் அவரைக் காப்பாற்றினாலும் யாருமற்ற துரோகிகளால் சூழப்பட்ட தன் சொந்த கிராமம் அவருக்கு அந்நியமாய்த் தெரிந்தது. பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விலகி தலைநகரின் சாலைகளில் தன் எதிர்காலத்தைக் கழிக்கலாம் என்ற முடிவை ஒரு அமாவாசை நள்ளிரவில் எடுத்தார். ஆனால் அது எத்தனை வலி மிகுந்தது என்று சொந்த மண்ணை இழந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். உங்களுக்குப் புரியக்கூடும்.

மாடுகளும் உழவுக்காக விவசாயிகளும் அதிகாலையிலேயே எழுந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு நாளின் துவக்கத்தில் தில்லிக்குச் செல்லும் ஒரு ரயில் வண்டியில் தன்னிடம் இருந்த துணிமணிகளோடும் நம்பிக்கைகளோடும் பயணித்துக்கொண்டிருந்தார். தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த மண் தன் காலடியிலிருந்து நழுவி உதிர்ந்து அவர் பார்வையிலிருந்து கரைந்து பரந்த நீலவானத்தின் கீழே ஒரு புள்ளியாய் மறைந்துபோனது. 

மறுபடியும் சில காலங்களுக்குப் பின் சொந்த கிராமத்துக்கு வரவேண்டும் என்ற ஆசையோ இலக்கோ நிச்சயமாக அவரிடம் அப்போது இல்லாதிருந்தது. கண்களின் விளிம்புகளில் ஈரம் கசிந்திருந்தது. கண்களை மூடிக்கொண்டு தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு தன்னைவிட்டுப் போய்விட்ட மனைவிகுழந்தைகளின் முகங்களை நினைத்தபடி  உறங்கிப்போனார்.

################
ன்றைக்கு மிக வினோதமான ஒரு அமைதியை அதிகாலையில் உணர்ந்தார் மாரிமுத்து. சாலைகளில் போதுமான நடமாட்டம் இல்லை. தேநீர்க்கடைகளில் மக்கள் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு ஏதோ புதிர் போல சூழல் மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. தன்னுடைய சிற்றுண்டிக் கடையை நாடி வருபவர்களை இன்று அதிகமாய்க் காணவில்லை.

சாலைகளில் திரியும் நாய்களிடம் கூட ஒரு பீதியும்குழப்பமும் தெரிகிறது. அமைதியான தில்லிக்கு என்னதான் ஆனதுஆம்புலன்ஸ் செல்லும் கண்மூடித்தனமான வேகத்தில் அரசு வாகனங்கள் செல்கின்றன. எல்லாக் காவலர்களும் கையிலுள்ள கைத்தடியை சுழற்றிக்காட்டியபடியே விரைகின்றனர். 

எதிர்க்கட்சித் தலைவர்கள் யார் யாரெல்லாமோ கைது செய்யப்பட்டிருப்பதாய் வதந்திகள் பரவினாலும் வானொலி தனக்கெதுவும் தெரியாததாய்க் கைவிரிக்கிறது. பத்திரிகைகளில் வரும் தணிக்கை செய்யப்பட்ட செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வெளியிடப்பட்டு மக்களை மகிழ்வித்தன. மாலை நெருங்கும்போது எல்லோர் மனதிலும் இனம்புரியாத ஒரு பயமும் எப்போது விடியுமோ என்ற தவிப்பும் இருந்ததாய்ச் சொன்னார் மாரிமுத்து.  

திடீரென ஊளையிட்டபடி ஒரு காவல்துறை வாகனம் ஹிந்தியில் எச்சரித்தபடி வருகிறது. சாலைகளில் கூட்டம் கூடக் கூடாது என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் எந்த விசாரணையின்றியும் கைது செய்யப் படுவார்கள் என்றும் அவரவர்கள் தத்தம் வேலைகளைப் பார்க்கச் செல்லவேண்டுமென்றும் அறிவிப்பு திரும்பத் திரும்ப ஒப்புவிக்கப் படுகிறது.மக்களின் முகத்தில் காவல்துறை அறிவிப்பின் மீது உண்டான வெறுப்பு காறிஉமிழ்தலில் முடிகிறது.

##################
சாக்கடையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. பன்றிகள் உருமிக்கொண்டிருக்கின்றன. குடிசைகளில் குழந்தைகள் பசியால் கதறுகின்றன. அறுவை சிகிச்சையின் வேதனையும் வெறுப்பும் ஆண்களைக் குலைத்திருக்கின்றன.குடிசைகளை ஒழித்து பிச்சைக்காரர்களையும் ஏழைகளையும் கண்காணாத இடத்துக்குக் கொண்டு விட்டுவிட்டு வரும் திட்டத்தின் படி அநேகமான குடிசைகள் அல்லும் பகலுமாய் ஈவிரக்கமின்றி பிய்த்தெறியப்படுகின்றன.

நாளைக்கென்ன என்றும் எங்கேயென்றும் தெரியாத குடிசை மக்கள் தங்களின் மிச்சமிருக்கும் சொத்துக்களான தட்டுமுட்டுச் சாமான்களையும்துணிமணிகளையும் கட்டிச் சுமந்து வேறொரு புறம் நகர எத்தனிக்கையில் இங்கே வராதே போ என்ற மிரட்டல் அவர்களை யாரின் பார்வையும் படாத இன்னொரு மூலைக்குக் கொண்டு சென்று கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்துகிறது. 

சற்றைக்கெல்லாம் மற்றொரு கண்ணுக்கு அருவெறுப்பான இந்தக் கூட்டத்தின் மீது பார்வை விழுகிறது. பகலிலும் இரவிலும் வானத்தின் கீழ் வாழ்க்கை என்பதாய் எதிரில் தெரிகிறது எதிர்காலம். நேரம் காலம் தெரியாமல் சனியன் பிடித்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை பசிவேறு வந்துவிடுகிறது. மற்றொரு புறம் காய்ச்சலும் வயிற்றுப்போக்கும். 

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல எதையும் பற்றிய கவலையின்றிப் பிசாசு போலப் பிடித்துக்கொண்ட மழை இடிமின்னலுடன் அவர்களை நனைக்கிறது. காலம் நகர்கிறது. இருள் சூழ்கிறது. 

##########################
ற்றுத் தொலைவில் அதே நகரின் மற்றொரு எல்லையில் குடியரசுத் தலைவரின் பரந்து விரிந்த மாளிகையின் புற்பரப்பில் ஸ்வீடனின் அதிபருடன் குடியரசுத்தலைவர்பிரதம மந்திரி உள்ளிட்ட நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது குடிமகன்களும்மகள்களும் தேநீர் விருந்துக்கு முந்தைய பரஸ்பர அறிமுக விழாவில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

ஆட்சியாளர்களின் கண்ணுக்குப் புலப்படாத தொலைவில் வறுமையும்ஏழ்மையும் காலங்காலமாக மறைத்துவைக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இருப்பிடம் தரப் போதுமான பரப்பில் அமைந்த குடியரசுத் தலைவரின் மாளிகைத் தோட்டங்களிலிருந்து அவர்களின் நாசிகளைத் துர்நாற்றம் தாக்காத வகையில் பெயர் தெரியாத விதவிதமான பூக்களும் அவற்றிலிருந்து பரவும் நறுமணமும் பரவியிருக்கின்றன. எந்த மாசும் மருவுமற்ற வெண்ணுடைகளில் காலணியின் மெருகு கலையாத நளினமான நடையுடன் கைகளில் உறை அணிந்த அதிபர்களின் உதட்டைக் காயப்படுத்தாத குமட்டும் மென் புன்னகை கொத்துக்கொத்தாக மிதக்கிறது. 

###########################
றிமுகம் முடிந்தபின் நன்கு குளிரூட்டப்பட்ட அறையில் புதையும் இருக்கைகளில் எல்லோரும் அமர்ந்து கொள்ள அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஒரு திரைப்படம் திரையிடப்படுகிறது.

பதினைந்தடி நீளமுள்ள காரிலிருந்து நாட்டின் பட்ஜெட்டையும் மிஞ்சும் தொகைக்கான கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும் இன்னும் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படாத தலைவர் மலர்ச்சியுடன் வந்திறங்கநாட்டின் பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகைக்கும் சற்றே கூடுதலான தொகைக்கான ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறைச்சாலையில் நீண்ட வேதனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்து தன் அரசியல் பணியை விட்ட இடத்திலிருந்து தொடரும் மந்திரி வந்து புன்னகை மலர வரவேற்கிறார். 

இப்படித் துவங்கும் திரைப்படம் வெளிநாட்டிலிருந்து வரும் அதிபருக்கு தன் சாகஸங்களை நம் நாட்டின் அரசியல்தலைவர் பயிற்றுவிப்பது போலத் தொடர்ந்து ஒரு பெரிய சாகஸவீரனின் முன்னே அந்த அதிபர் தலைவணங்கிப் பணியும் இறுதிக்காட்சியுடன் திரைப்படம் முடிய மிகுந்த கரவொலியுடன் திரைப்படம் முடிந்தது.

அதிபர் ஸ்வீடிஷ் மொழியில் திரைப்படம் மிகுந்த பிரமிப்பைத் தருவதாகவும்இந்தத் திரைப்படத்தால் உருவாக இருக்கும் எந்தப் பெரிய கறுப்புப் பணத் தொகையையும் தன் நாடு வரவேற்குமெனவும்இப்போது போலவே ரகசியம் எப்போதும் காக்கப்படுமெனவும் துபாஷியிடம் கூற ஹிந்தியில் அதைப் பிரதமருக்கு மொழிபெயர்த்தார் துபாஷி.

துபாஷியின் மொழிபெயர்ப்பை ஒட்டுக்கேட்ட மாரிமுத்து ”அடங் கொக்கா மக்கா?” என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாலும் அது தமிழ் அதிகம் தெரியாத அரசியல் வாதிகளிடம் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. 

###########################
நாட்டின் எல்லாச் சிறைகளும் துரோகிகளாலும் தீவிரவாதிகளாலும் நிரம்பிவழிகின்றன. அலுவலகங்கள் சரியான நேரத்துக்கு இயங்குகின்றன. யாரும் விடுப்பெடுப்பது இல்லை. யாரும் தேநீர்க் கடைகளில் கூடி அரட்டையடிப்பதில்லை. ரயில்களும் பேருந்துகளும் குறித்த நேரத்தில் இயங்குகின்றன. 

உணவுநிலையங்களில் உணவுப்பொருள்களின் தரம் முன்னெப்போதுமில்லாத வகையில் சிறப்பாக இருக்கின்றன. குடிமைபொருட்கள் சரியான எடையும் தரமும் கொண்டவையாய் இருக்கின்றன. 

நாம் மிகக் கடுமையான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம். நம் அண்டை நாடுகளிடமிருந்து கடுமையான சவாலையும் நெருக்கடியையும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் அவரவர்கள் கடமையை உணர்ந்து நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க அயராது உழைக்கவும் தியாகம் செய்யவும் தயாராக வேண்டும். நாட்டின் பதுக்கல்காரர்களையும் கறுப்புப்பண முதலைகளையும் வேட்டையாட அரசு இயந்திரங்கள் முழுமூச்சாக முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. நம் நாடு உற்பத்தியிலும் பொருளாதார மேம்பாட்டிலும் தன்னிறைவு அடையும் வகையில் இருபது அம்சத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. 

இதைக் கடும் ஒழுக்கத்துடன் நாம் பின்பற்ற வேண்டும். வங்கிகள் நாட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் கடன் வழங்க லோன்மேளாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.ஜனார்தன் பூஜாரி- இதைக் கொஞ்சம் கவனியுங்கள். எல்லோருக்கும் ஏன் என்னவென்று கேட்காமல் கடன் அளியுங்கள். ஒவ்வொரு வங்கியிலும் இருபது அம்சத் திட்டத்தின் கட்டளைகள் கண்பார்வையில் படும்படித் தொங்கவிடப்படவேண்டும். இந்திராதான் இந்தியா. இந்தியாதான் இந்திரா.

ஒலிபெருக்கியின் முன்பாக மாநிலம் தவறாது அந்தந்த மொழிகளில் மேற்கண்ட உரை முழங்கப்படவிவரம் தெரியாது ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்த உரைகளைக் கேட்பதற்காகப் பயணம் மேற்கொண்ட மாரிமுத்து ஒரு மாதத்துக்குப் பின் ஒரு நிருபர் அவரின் பயண அநுபவம் பற்றிக்கேட்டபோது இப்படிப் புலம்பினார்.

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் விதம்விதமாக நமது கரன்ஸித் தாட்களில் இடம்பெற்றிருந்தாலும் எப்படி ஒரே மதிப்பைத் தருமோ அதுபோல நெருக்கடி நிலை பற்றிய விளக்கக்கூட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி விளக்கப்படுகிறது என்றறிய பத்தாயிரக் கணக்கான ரூபாயைச் செலவழித்த எனக்கு இந்த தண்டனை தேவைதான்.” 

##########################
ண்டன் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டேவிட் சல்போர்னை நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது ஒரு வெளிநாட்டுப் ப்ரதியை வரவழைத்து அவரை நன்றாக கவனித்து உலக நாடுகளின் வாயை அடைக்கமுடிவெடுத்து - ராஜபக்ஸ செய்வது மாதிரி- இந்திய அரசு வரவழைத்தது. 

இந்திய அரசின் செலவில் அவர் நாடுமுழுவதையும் சுற்றிப் பார்த்தார். தாயகம் திரும்பும்போது இந்திய அரசால் அளிக்கப்பட்ட ஒரு மாலை விருந்திலும்பின்னர் லண்டன் பர்மிங்காம் அரங்கிலும் அவர் உரையாற்றினார். பி.கே.பிர்லாஆர்.கே.தவன் முன்னிலையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆற்றிய அவருடைய உரையின் ஒரு பகுதியை மாரிமுத்து நமக்காக இங்கே மொழிபெயர்த்துத் தருகிறார்.

பி.கே. பிர்லா அவர்களேஆர்.கே.தவான் அவர்களேஇந்திய நாட்டின் செலவில் எங்களை வரவழைத்தீர்கள். கடந்த மூன்றுமாதமும் காஷ்மீரிலிருந்துகன்யாகுமரிவரை சுற்றிப்பார்க்க வாகன வசதிஉண்ண உணவுதங்குமிடம் கொடுத்து எந்தக்குறைவுமின்றிப் பாதுகாத்தீர்கள். இந்த நெருக்கடிநிலை சம்பந்தமாக உலக அரங்கில் பேச வாய்ப்பும் அளித்தீர்கள். 

எங்களை இவ்வளவு நேர்த்தியோடு கவனித்த உங்களிடையே சில உண்மையான செய்திகளைக் கூறிவிடுவதுதான் எனக்குச் சரியென்று படுகிறது. இந்த மாலை விருந்தில் என்னுடைய உரையைக் கேட்டபின்னால்நான் ஒரு நன்றிகெட்டவன் என்று நீங்கள் கருதுவீர்களேயானால்அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும்போது எங்கும் ஓர் அசாத்யமான அமைதியே தோன்றுகிறது. அந்த அமைதி மயானங்களில் புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களிடையே காணப்படும் அமைதி. 

இந்திய நாட்டின் சிறைக்கூடங்கள் தேசத் துரோகிகளாலும்சமூகக் குற்றவாளிகளாலும் நிறைந்து இருக்கவேண்டியவை. மாறாக இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளும்அவர்களின் இயக்கங்களும் முடக்கப்பட்டுஅதன் ஊழியர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் சிறைப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. 

சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளி உலகிலும்வெளிஉலகில் இருக்க வேண்டியவர்கள் சிறைக்கொட்டடியிலும் இருப்பதை என் கண்ணால் காணமுடிந்தது. இதை நான் சொல்லாமல் இருந்தால் குற்றவாளியாகி விடுவேன்

(தொடரும்)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...