பொன் கிரீடம் தரித்த வருண தேவனைச் சரணடைகிறேன். வேண்டப்படுகிற எனக்கு தீர்த்தங்களின் பலனை நீ அருள்வாய். ஏனெனில் தீயவர்களின் பொருளை நான் அனுபவித்துள்ளேன். தீயவர்களிடமிருந்து பரிசையும் பெற்றுள்ளேன்.
மனத்தாலும், பேச்சாலும், செயலாலும், என்னாலோ, என்னைச் சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டதோ, அந்தப் பாவத்தை இந்திரனும், வருணனும் ப்ருகஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாக தூய்மையாக்குவார்களாக.
நீரில மறைந்திருக்கும் நெருப்பிற்கும் இந்திரனுக்கும் வருணனுக்கும் வருணனின் மனைவியாகிய வாருணிக்கும் தண்ணீரின் தேவதைகளுக்கும் வணக்கம்.
துன்பம் தருவதாக, தூய்மையற்றதாக, அமைதியைக் குலைப்பதாக தண்ணீரில் உள்ள அனைத்தும் விலகட்டும்.
அளவுக்கு அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமாகப் பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுகொள்ளல் இவை மூலமாக எந்தப் பாவங்கள் எனதாக உள்ளனவோ, அவற்றை அரசனாகிய வருணன் சொந்தக் கைகளாலேயே துடைத்து விடுவாராக.
(அகமர்ஷண ஸூக்தம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
’சிலிகுரி மண்ண மிதிச்ச அண்ணைலேருந்துதான் நீயி இப்பிடிக் கோட்டி பிடிச்சுத் திரியுதலா’ன்னு என்ன பேசுதோம்னு வெளங்காம பேசிட்டு வண்டீல டுர்ருன்னு எரும கணக்கா உறுமிட்டுப் போரான்லா அவந்தாம்டே என்னோட வூட்டு ஆம்பள. அந்தாளு ஏசுன ஏச்சுல எத்தன எளுத்துன்னு உன்னால எண்ணீற முடியும்ல மக்கா. ஏம் மனசுக்குள்ள வெந்துட்டுக் கெடக்குல்லா அந்த நோவு அதுக்கு எத்தன எளுத்துன்னு ஒன்னால எண்ணவே முடியாதுடே.
சுவாதீனமா பொங்கிப் போட்டு புள்ள பெத்து வீட்டுக்குள்ளாறயே அடஞ்சி கெடக்கேம்லா வக்கத்த ஒரு தெரு நாயி கணக்கா, என்னப் பாத்துக் கோட்டிக்காரின்னு நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசுதாம்லா அவந்தாங் கோட்டிக்காரப் பயலுக்குப் பொறந்த பயன்னு சொல்லுதக்கு எனக்கு எத்தன தேரம்டே புடிக்கும். பொளச்சுப் போலே பொச கெட்ட மூதி.
இருக்கது ஒரு மண்ணுக்கும் தேராத ஊரு. எப்பப் பாரு எளவு வூடு கணக்கா ஒரு சனியம் புடிச்ச குளுரு. நம்மூர்ல மார்களி பொறந்தாக்க ஒரு குளுரு குளுரும்லா அது கணக்கா இருக்குலா சித்திர மாசத்து வெய்யிலு. எங்கன கண்டாலும் மசமசன்னு கண்ணுல ஆமணக்கெண்ணய ஊத்துனாக்குல. தோலு பொசுங்குனாக்குல ஒரு வெயிலு உண்டுமா? ஏ வெயிலுகந்தா! நீதாம்லே கண்ணத் தொறக்கணுஞ் சாமி. ஒரு கோயிலு கொளம் உண்டுமா? பொங்கலத்தாம் பொங்க ஒரு கொட உண்டுமா? ஒரு கண்றாவியுங் கெடயாது.
ஓலப் பாயில நாயி மோண்டது கணக்கா இவா என்னடா பேசிக்கிட்டே கெடக்கான்னு நெனக்காதடே. ஒரு தேரிக் காட்டுல பனயேறிக் குடும்பத்துல பொரண்டுட்டு கெடந்த பொட்டச்சிக்குத் தோலு கொஞ்சம் செவப்பா இருந்து தொலைச்சிட்டு. அதுக்க நான் என்னலே சேயுது? வெளயாட்டும் படிப்பும் நல்லா வந்திட்டு. ஒம்பதாப்புல பஸ்ட் ரேங்குலா நானு.
ஒரு பொட்டப்புள்ள ஃபுட்பால் ஆடிப் பாத்திருக்கீராவே பாட்டா! நா ஒதச்ச பந்தத் தடுக்க பயலுகளுக்கே தெயிரியம் கெடயாதுல்லா. பந்து எங் கால்ல வுளுந்து அக்கா ஒதச்சிறாதக்கான்னு கெஞ்சும் பாரும். அதப் பாத்தப் பொறவு சொல்லும் பாட்டா நானு யாருன்னு. பயலுவ என்கிட்ட நின்னு பேசுதக்கோ பல்லக் காட்டுதக்கோ பயந்து களிவானுங்கேம். பொறம்போக்கு.
வூட்டுல அய்யாவோ அம்மயோ ஆயியோ எதுக்கும் என்கிட்ட நின்னு பேச அப்பிடி ஒரு பயம். பேசாதுவோ. தெரட்டிய எடுத்துக்கிட்டு அம்மாக்காரி ஒரு தெசக்கி ஆடுகளப் பத்திக்கிட்டுக் கெளம்பீருவா. அய்யன் பொளுதுக்கே பன ஏறப் போய் பனங்காட்டுல கெறங்கிக் கெடப்பாரு. ஆயிதாங் குடிக்கதுக்குத் தோதா கஞ்சித் தண்ணியுங் காணத் தொவலயலுங் கொணாந்து கொடுக்கும்.
அதயும் பாக்கப் பாவமாத்தான் இருக்கும். சத்தங்காட்டாம சாணிய சொவத்துல தட்ட ஆரம்பிக்கையிலே, எங்கேருந்தோ கெக்க்கெக்கெந்னு பொட்டயத் தொரத்திக்கிட்டு வர்ற சேவலப் பாக்குங்காட்டியும் வருமே ஒரு கோவம். கையில கெடக்குத விட்டெறிஞ்சு சனியம்புடிச்ச நாயேன்னு வெரட்டிட்டுத்தா ஒக்காருவேன். நாய சனியம் புடிக்குமா என்ன? சொல்லு மக்கா!
~~~~~
பயலுவோளுக்கு அப்பக் கண்ணு பொடதீல பொறண்டு கெடந்துச்சா என்னன்னு தெரியல. ஒருத்தனாட்டும் எனக்கு லவ்வு லெட்டர் கிட்டரு கொடுக்கத் துணிஞ்சதுல்ல. அப்படி ஒரு வெறப்பு எனக்கும் புடிச்சுக் கெடந்தது. ஆனாக்க பாரு மக்கா, எனக்கு இந்தப் பயலுவள ஓட ஓடத் தொறத்துன காலம் போயி நம்ம பின்னாடி எவனாச்சும் நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு அலய மாட்டானானு ஏக்கம் வந்துட்டுலே.
ஆனா எவனுக்கும் என்ன நெருங்குதக்கு ஒரு துணிச்சல் வேணும்லா. அது எவங்கிட்ட இருக்கு? எல்லாப் பயலுவளும் செத்தவங் கையில வெத்லாக்கு கொடுத்தாக் கணக்கா திரியுதானுவோ. பாத்தியா எனக்கு ஆம்பளப் பயகளயும் வேண்டிருக்கு. ’எவன்ல என்ன நெருங்கற தெயிரியம் புடிச்சவங்’கற மண்டக் கனமும் வேண்டிருக்கு. கருமம் அத என்னனு சொல்லுது?
அப்பத்தாண்டே இந்த புல்லட் பாண்டி வந்து சேந்தான். இந்தப் பயல இதுக்கு முன்னக்க எங்க வெச்சுப் பாத்ததாயும் ஓர்மயில்ல. அந்த பைக்கோட ரெண்டு கைப்பிடிலயும் ரெண்டு கையவும் வெறப்பா நிறுத்தி மார்க்கூட்ட முன்னுக்கத் தள்ளி தோள நிமித்தி மொரட்டுத் தனமா சூரிக்கத்திய வீசுனா மாதிரி பார்வையோட இந்தப் பயலப் பாத்த நிமிசமே நாங் கவுந்துட்டேம்டே. அவுங்களுக்கு எங்கியோ தாதங்கொளமாம்ல. அதுக்குப் பக்கத்துலருந்து ரொம்ப நாளக்கிப் பொறவு இங்க வந்துருக்காவளாம். பொறந்து பத்து வருசத்துல இந்த ஊர வுட்டுப் போயிட்டாஹளாம்.
அந்த புல்லட் பாண்டி பேரு பாண்டிராஜ். பேரும் நல்லாத்தாம்டே இருக்கு. அவன ஏதோ புடிச்சுப் போச்சு. அப்புறமாட்டு அதுக்கு என்ன பேரு வெச்சா என்ன கொற கண்டுபுடிச்சுறப் போறேன்? புல்லட்டுல தொர வர்றயில களுத்துல கெடக்குற செயினப் பல்லால போட்டுக் கடிச்சுக்கிட்டு ஒரு ஓரப் பார்வ பாக்காம போவ முடியாதோ?
அப்புடி பாத்துக்கிட்டே போயி ஒரு நாளக்கி எரும மாட்டு மேல வண்டிய வுட்டுட்டுக் கவுந்தாம்பாரு சிரிப்பாணிய அடக்க முடியலடே. முட்டில காயம் பட்டு வண்டியப் பொறக்கிக்கிட்டு என்னப் பாத்து எல்லா சனத்து முன்னாலயும் வெக்கங் கெட்டு வெரல ஆட்டிக்கிட்டு ஏதோ சொன்னாம் பாருடே, அன்னக்கித் தாம் மக்கா என் சீவன்லயே வெக்கம்ன்னா என்னான்னு ஒணந்தேன்.
பாண்டியோட அப்பா நெஞ்சு வலி வந்து செத்துச் சுண்ணாம்பானதயும் அவங்க அம்மாக்காரி அடுத்த வருசத்துலயே மண்டையப் போட்டதயும் சொன்னாத்தானடே என்னோட கதய நாஞ் சொல்ல முடியும். ஒனக்கு வெளங்குதுல்லா நா என்ன சொல்ல வாரேன்னு. இப்புடி அப்புடின்னு வரேலயும் போவேலேயும் வெத்துப் பார்வ பாத்துக்கிட்ருந்த பய திடீர்னு எங்கப்பங் குதுர்ல இல்லன்ற கதையா லவ்வு லெட்டர எளுதி அதுக்குள்ளாற கல்ல மடிச்சு எம்மேல வீச அது பக்கத்துல வந்துக்கிட்டிருந்த டீச்சர் மார் கையில கெடச்சி அது ஒரு கூத்தாயிட்டு. பொறகு வூட்ல டீச்சருங்க கோள் சொல்ல படிப்பு அம்புட்டுத்தான். நின்னு போச்சு பாண்டி தயவுல.
பொறவு ஆயி சொல்லு கேட்டு எங்கப்பனும், அம்மையும் நாலு பேர வெசாரிச்சு பாண்டியும் நல்ல புத்தியுள்ள பயதாம். அவங்கப்பா செத்த பின்ன ரயில்வேலய அவனுக்கு வாரிசு மொறைல வேல போட்டுக் கொடுத்து நல்லாக் கை நெறைய சம்பளம் வாங்குதாம். புள்ளய வெச்சுக் காப்பாத்துவான்னு தெரிஞ்சு ஒரு நாளக்கி வூட்டுக்கு வரச் சொல்ல, இந்தப் பூனயும் பாலக் குடிக்குமான்னு ஒரு பார்வ பாத்தாம் பாருடே. அசந்தே போயிட்டேன் அட கள்ளப் பயலேன்னு.
கட்டிக் கொடுத்தாப் போதும். வேறெதும் வேண்டாம்னு பாண்டி கண்டிசனா சொன்ன சொல்லு மாறாம கொல சாமி கோயில்ல வெச்சு தாலி கட்ட குடும்பத்தத் தொடங்குனேஞ் சாமி. கலியாணங் களிஞ்ச நிமிசத்துலயே கெளவி கணக்கா ஓம் பேச்சு மாறிப் போச்சுலாங்கா ஆயிக்காரி. அப்பிடியா மாறும் ஒருத்தி பேச்சு! என்ன எளவோ போ!
இப்பத்தாம் பொறந்து ஓடி ஆடி வயக்காட்டுல திரிஞ்சு பொறண்டு மரத்துல ஏறிக் குதிச்சு மளைல நனஞ்சு வெயில்ல காஞ்சு ஊர்க்கொடைல ராட்டினத்துல ஏறி, கலர் சருப்பத் குடிச்சு, மலக்கிப் போயி சாமி கும்புட்டு, இஸ்கோலுக்குப் போயி, பயலுவள மெரட்டி, ஆடு மாடு மேச்சு, சேவக்கோளிய தொரத்தின்னு சந்தோசமா இருந்த என்னோட பாதையில இந்தப் பாண்டிப் பய எதுக்குத்தா வந்தானோ தெரியலியே ஆயி!
ஒரு பக்கம் சந்தோசம் மறு பக்கம் துக்கந் தொண்டைய அடக்கி. கண்ணுல தண்ணி பொங்கி வருது. மாரெல்லாம் அடக்கி. இது என்ன வேதனடா சாமி! என்ன ஏண்டே பொண்ணாப் படச்சேன்னு ஒரு பொண்ணு இப்பத்தாங் கேக்கணும் மக்கா! நேத்து மட்டும் எனக்குத்தா எல்லாந் தெரியும்னு இருந்தேன். பொளுது விடிஞ்சு பாத்தாக்குல, எனக்கு எதுவுந் தெரியாத ஒரு நடுக்காட்டுல நிக்காக்குல நடுங்குதேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலைல போனாம்னா அதோட சரி. வூட்டுல தெசக்கி ஒண்ணா நாலு நாயி. நாலு பூன. நாயும் பூனையும் ஒண்ணா வளருமான்னு ஆன்னு வாயப் பொளக்கியடே. நானும் பாண்டியும் கட்டிக் குடுத்தனம் பண்ணாமல கொளந்த பெக்காமலா இருந்தோம். ஆனா பொறந்த ரெண்டும் ஒரே வருசத்துல வைசூரி போட்டு போய்ச் சேந்துருச்சுங்க. எனக்கு ரெண்டும் போனதுலருந்து எல்லாமே போனா மாதிரி போயிருச்சு.
அம்மயும், அப்பனும் ஒரே வாட்டி வந்துட்டு பேயடிச்சாக்குல முளிச்சுதுங்க. அவுகள இருங்க சித்த நாளக்கி தொணயாங்கேன். இந்த ஊரு புடிக்கலளா! நீ எப்பிடித்தா இருக்கியோ மக்கா! அவருகிட்ட சொல்லி ஊருப் பக்கமா வந்து சேந்துருலான்னுட்டு போனவஹதான். இந்தப் பக்கமே தல வெச்சிப் படுக்கல. வருசத்துக்கு எப்பவாச்சும் ஒரு கடுதாசு. அத்தோட சரி. இது என்னடா வாள்க்கைன்னு சீயின்னு ஆயிப் போச்சு.
பாண்டிக்கும் புள்ளங்க செத்ததுலருந்து மனசு வுட்டுப் பேசுறது நின்னு போயி எப்பவும் ரயில் ஆப்பீஸே கதீன்னு போயிடுச்சி. எனக்குந்தான் யாருமில்லா இப்புடித் தனீமரமா ஆயிட்டேனேன்னு அளுது தீப்பேன். யாருக்க போயி எங் கொறைய சொல்லி எறக்கி வெக்கன்னு தோணாம நாயிங்களயும், பூனங்களயும் அப்பப்ப கொஞ்சி அதுங்க கத்துதப் பாக்கயில சந்தோசமா இருக்கும். ஊருல பேசுன அதே பேச்சை மாத்தாமப் பேசுதது இந்த நாயும், பூனங்களுந்தான். கொஞ்சங் கொஞ்சமா நாயி பூன மாதிரியே பேசக் கத்துக்கிட்டேன். அதுங்களுக்கு இப்பல்லாம் எல்லா நேரமும் எங்கிட்ட எதாவது கொற சொல்லிக்கிட்டு திரியறதுதாம் பொளுதுபோக்கு. நாயப் பத்திப் பூனங்க. பூனயப் பத்தி நாயிங்க.
இதப் பாத்துட்டுத்தாம் பாண்டி என்னக் கோட்டீன்னு ஏசுதாம்னு உங்களுக்குப் புரிஞ்சு போச்சோடே! நீயுஞ் சொன்னாச் சொல்லிக்க நல்லாக் கோட்டிக் காரீ! கோட்டிக்குப் பொறந்தவான்னு!
பாண்டி பாண்டி! இன்னக்கி வாசல்ல சிட்டுக் குருவி வித்துக்கிட்டுப் போனாம்யா ஒரு பயபுள்ள! நாயி பேசுறது வெளங்குது. அந்தக் கூமுட்டை என்ன கேட்டாலும் பூம்பூம் மாடு கணக்கா ஒண்ணையேதாஞ் சொல்லுதா! ஒண்ணூம் வெளங்கல்ல. போங்கடா போக்கத்தவனுங்களான்னு தொரத்தியடிச்சுட்டேம்டே! நீ கண்ணுல கண்டாக்கி அதுங்க ஒரு நால கூண்டுல கட்டி மாட்டுடே. தொணக்கி ஆவும்னு சொன்னதுக்கு, ’மனுசனுக்கு ஆயிரஞ் சோலி கெடக்கியில குருவிக்காரனத் தொரத்திக்கிட்டு அலயுததுதாஞ் சோலின்னு நெனக்கியாடி’ன்னு உருமிக்கிட்டு போய்த் தொலைஞ்சு போனாம் மவராசன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளிய எட்டிப் பாத்து மள கிள வருதா பாருடே பாண்டி கருக்கலுக்கு கல்கத்தாவுக்கு ரயில்ல கூட்டிட்டுப் போறேண்டினு சொல்லிருக்கான். நெசமாட்டும் இன்னும் நமபத்தாம் முடியல. நானும் இங்கன வந்த நாள் தொடக்கம் எங்கேயும் போக வாய்க்கல.
ரயில்ல சாப்புடுதக்கு பணியாரம் முறுக்கு இட்டிலி வட எல்லாம் சுட்டு வெக்கட்டாங்கேன். ம்ம்ம். ஏதாச்சும் செய்யி. அதுக்கொண்டு சட்டி பானயெல்லாம் தூக்க வெச்சுப்புடாதலா. சாப்புடவா ஊரச் சுத்திப் பாக்கவான்னு சிரிச்சுக் கிட்டே சொல்லுதாம் பய. என்னமோ ஆகிப் போச்சு அவனுக்குள்ளாற. பாண்டி எத்தன நாளாச்சிலே நீ சிரிச்சுப் பேசி? பொறந்தது ரெண்டும் போயே போச்சி. அதுக்கு நானும் நீயும் என்னடே செய்ய?ன்னு நெனச்சிக்கிட்டே சட்டி பானயப் போட்டு உருட்டுதேன். பாண்டியும் நா வந்துருதேன் பொழுதுக்கா. இன்னக்கி சாப்பாடு வெக்காத. ஆபீசுல எதோ விசேசம் அங்கயே சாப்பிட்டுக்கிடுதேன்னுட்டு போயிட்டான்.
ஆட்டொரல்ல அரிசியப் போட்டு அரைக்க ஒக்காருதேன். திடீர்னு ஒரு கொரலு அம்மானு. தூக்கி வாரிப் போடுது. இப்புடி ஒரு கொரல இது வரைக்கும் நான் கேட்டதில்ல சாமி. குருத்தெலும்ப ஆட்டுனா மாதிரிக்கி. திரும்பிப் பாக்கேன். ஒன்னுத்தையும் காங்கல. சரி எதாட்டும் பெரமயாட்டு இருக்கும்னு ஆட்டொரல ஆட்டுதேன்.
நம்ப மாட்ட மக்கா. சித்த நேரங் களிச்சு என்ன ஏந்த்தா பொதச்சுட்டுப் போயிட்ட பசியால பாலுக்குத் துடிக்கேனே ஒங் கண்ணுக்குத் தெரியலாங்கு அதே கொரலு. பூனக்கும் நாயுக்கும் ஊத்துத செரட்டையில எனக்கும் கொஞ்சம் ஊத்தக் கூடாதாங்கு கொரலு.
நான் சொவத்தோட சாஞ்சு ஒக்காந்து கவனிச்சுக் கேக்கேன். எனக்கெதுர பொக மாதிரி ஒரு உருவந் தெரியுது. அது மொகத்த உத்துப் பாக்கைல செத்துப் போன ஆயி போலயுந் தெரியுது. எம் புள்ளங்க மொகமாயுந் தெரியுது. ஏஞ் சீவனே அத்துப் போனது போல நெஞ்ச அடக்கி. மனசுல கெடக்க பாரமெல்லாத்தயும் கொக்கி போட்டு இளுக்கு அந்தக் கொரலு. அம்மா அம்மான்னு கூப்புடுதக்கு இந்தச் சண்டாளிக்கு ஆரு இருக்கா இந்த அநாத மண்ணுலன்னு அப்புடியே போட்டது போட்டது கணக்கா கெடக்க மல்லாந்து மயங்கிக் கெடக்கேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏதோ ஒடங்காடு கணக்கா ஒரே பொதரு. அதுங்கள இங்கனக்குள்ளாறதான பொதச்சதாச் சொன்னாரு. எங்கன போச்சு நடுகல்லு? யாரப் போயி இதக் கேக்க? ஒரு பன மரத்து மூட்டுல ஒக்காந்து யோசிக்கேன். ஆமா இங்கன எங்கனக்குள்ள பன மூடு? இந்த ஊரப் பாக்கையில நாம் பொறந்த ஊரு கணக்கால இருக்கேடேன்னு மலங்க மலங்கப் பாக்கேன். தெரிஞ்ச மொகம் எதும் கண்ணுல படுதான்னு பாக்க வெள்ளச் சீல உடுத்தியிருக்க ஆயி அன்னா மொனகிக்கிட்டே இங்க என்ன செய்யுதான்னு நெத்தி மேட்டுல கையக் குவிச்சுப் பாக்கேன் கெளவி சுள்ளி பெறக்குதா. அவ தலக்கி மேல ஒரு ஓலக் கூட வெச்சுருக்கா. என்னான்னு எட்டிப் பாக்கேன். எம் புள்ளங்க ரெண்டும் உள்ள படுத்துக் கெடக்கு.
கதவத் தட்டுதாக்குல இருக்கு. யாரா இருக்கும்? நாம் பொதச்சுங்கதாம் பால் கேட்டு வந்துருச்சோன்னு பதக்குனு இருக்கு. சோறு தண்ணி எறங்கல. தலயெல்லாங் கெறங்குது. பைய சொவரப் புடிச்சு எந்திரிச்சுப் போயி தொரக்கேன் கதவ. யாரயுங் காங்கல. எனக்கொண்ணுமே வெளங்கல. ஆட்டொரலச் சுத்தி எறும்புக சார சாரயா மொய்க்குது. எல்லாம் எறும்புங்கதானா இல்ல என் வவுத்துல பொறந்ததுங்களான்னு குனிஞ்சு உத்துப் பாக்கேன். கண்டுபுடிக்கத் தெரியல.
வெளக்கப் பொருத்துதேன். யாராச்சும் ஏதாச்சுங் குடிக்கக் கொடுத்தா நல்லாருக்கும் போல ஒரு ஒடம்பெல்லாம் முறுக்கிப் போட்டாக்குல ஒரு நோவு. இந்தா இதக்குடிங்கா ஆயிக்காரி. மவராசி நல்லா இருப்ப நீன்னு சொல்லிட்டுக் குடிக்கேன் மடக்கு மடக்குன்னு. சோத்துக் கஞ்சி உப்புச் சேத்து நல்ல சூடா குடிக்கத் தோதா இருக்கு. வெஞ்சனம் எதுவுமில்லயா ஆயிங்கேன். புள்ளக் கறிதான் இருக்குங்கா பாதகத்தி. பகீருங்கு. குடிச்ச கஞ்சியெல்லாம் வெளீல வாரது கணக்கா என்ன வார்த்த சொல்லிப்புட்டா? ஓங்கிட்டப் போயி கேட்டேனேன்னு கோபம் பொத்துக்கிட்டு வருது. எடத்தக் காலி பண்ணு கெளவின்னு அவளத் தொரத்தப் பாக்கேன். ஓலக் கூடயத் தூக்கிட்டு அதுக்கு முன்னாடியே கெளம்பிட்டா கெளவி.
பொதச்சு பாலூத்தி மூடி நடுகல்லு நாட்டுன அன்னக்கி இவளும் இங்க வந்திருப்பா போல. தோண்டி எடுத்துக் கூடைல போட்டுக்கிட்டு இப்படி ஊர் ஊர் ஊராத் திரியுதா பாரேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாண்டிக்குப் பக்கத்துல இருக்குத அந்த டாக்டரப் பாத்தா எம்ஜிஆரோட எப்பப் பாத்தாலும் வாள்ச் சண்ட போடுவாம்ல நம்பியாரு அச்சசலு அப்படியே உரிச்சு வெச்சுருக்கான். பக்கத்துல ஒரு பைலருந்து ஏதோ மருந்தெடுக்கான். என்ன உத்துப் பாத்துட்டு பாண்டி கைல கொடுத்து தலைய ஆட்டி ஆட்டி ஏதோ வெளங்காத வெவரஞ் சொல்லுதான். பைக்குள்ளாற எங்கியுங் கத்தி கித்தி வெச்சுருப்பானோ எனக்கொரு சந்தேகம். பையவே உத்துப் பாக்கேன். குனிஞ்சு பைய எடுத்துக் கிட்டுக் கெளம்பிட்டான்.
ஏட்டி ஒன்ன கல்கத்தா போவணுன்னு சொன்னேன்லா. போவோமாங்கான் பாண்டி.
நானும் யோசிச்சுப் பாக்கேன். பக்கத்துல நாயிங்க ரெண்டும் வந்து பாக்குதுங்க. அதுங்க கிட்ட முக்கியமா ஒரு சோலி வந்துருக்கு. போயிட்டு வந்துருதேங்கேன். ரெண்டும் தலைய ஆட்டிட்டுப் போயிட்டு வாங்கு.
வாசல்ல ஏதோ சத்தங் கேக்கு. உள்ளூரு நாவிதப் பய வந்துருக்கான். எதுக்குன்னு கேக்கேம் . ஒனக்கு மொட்ட போடச் சொல்லி அந்த டாக்டரு சொல்லுதான். அப்பத்தான் கல்கத்தா போவ ரயில்ல ஏத்துவாங்கன்னு ஏதோ சம்பந்தமில்லாம ஒளறுதாம் பாண்டி. எனக்கும் மொட்ட போட ரொம்ப ஆசதான். முப்பந்தல்ல முத்தாரம்மங் கோயில்ல காது குத்தி நாஞ் சின்னதா இருக்கும்போது போட்ட மொட்ட நெனப்புக்கு வருது. சந்தனமுந் தடவணுங்கேன். தடவுனாப் போச்சுங்கான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரயிலு இந்த ஊருல வேற மாதிரியா இருக்கு. இதுல போறவங்களும் வேற சனங்களாட்டுத்தான் இருக்காங்க. டடக் டடக்குனு அது பேசுற பாச மட்டும் எனக்கு மட்டும் புரியுது. நாயி பூனங்க குருவிங்க பேசுற மாதிரி. நம்பூருல போர ரயிலு இங்க வராதா பாண்டிங்கேன். அதெல்லாம் வராது. பேசாட்டு வாங்கான். நானும் மெல்லக் கண்ண மூடுதேன். என்னென்னமோ சத்தங் கேக்குது. தலைக்குப் பூ வெச்சேனாங்கா மாதிரி பின்னந்தலயத் தொட்டுப் பாக்கேன் மொட்ட போட்டது மறந்து போயி. சிரிச்சுக்கிடுதேன். தலமுடி பறக்காம தூங்குததுக்கு நல்லா சொகமா இருக்கு. பாண்டியப் பாத்து யாரோ சலூட் அடிக்காங்க. அவனும் பதிலுக்கு சலூட் வெக்கான்.
எப்பத் தூங்குனேன்னு தெரியல. எப்ப எறங்குனேன்னு புரியல. ஏதோ ஊரு மாதிரி இருக்கி. ரயிலயுங் காணும். பாண்டியயுங் காணும். ஊரு பேரு என்னான்னு படிக்கேன். நக்சல்பாரின்னு எளுதிருக்கு.
தல வலிக்கு. பசி எடுக்கு. பாண்டி எங்கடே போன? எப்படே வருவ?
(தொடரும்)