18.10.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 7 - இசைக்கவி ரமணன்


மனமென்னும் குகை வாயில். அதன் இருட்டுக்கும், வாசல் வெளிச்சத்துக்கும் நடுவே அமர்ந்திருக்கிறான் மனிதன். விட்டத்தில் பிரும்மாண்டமான தேனடை. கருத்த தேனீக்களின் பெருத்த சுருதி. ஒற்றுமை, ஒரேயொரு ராட்சதத் தேனீ மட்டும் பாடுவது போல் தொனிக்கிறது.

குகையின் தண்மை, பாதுகாப்பு, மௌனம் இவற்றுக்கு மெருகூட்டுவது போல்தான் ஒலிக்கிறது சுருதி. உறக்கம், விழிப்பு இவற்றின் மத்தியிலே உள்ளவொரு மர்மமான, இடைஞ்சலான தறுவாயில்தான் இருக்கிறான்.

உள்ளே ஆயிரமாயிரம் தேனீக்களாலும் கலையாத மௌனம். வெளியே ஆரவாரத்தின் தாழ்வாரம். ஒரு விபத்தைப் போல், புலன்கள் வழியே புறத்தே சிதறுகிறான்.... ம்..ம்... தேனடையில் கல்லெறிந்த பின்னே திசைகளை வசைபாடி என்ன பயன்?

லயம் கலைந்து, விழுங்கத் தயாராயிருக்கும் புறவொலிகளைக் கருத்தின்றிக் காண்கின்றேன். வந்துவிட்டது கௌரிகுண்டம். கந்தக (வெந்நீர்) ஊற்று; சற்று அதில் உட்கார்ந்து எழுந்திருந்தால், பாட்டி சொல்வது போல், உடம்பு சொடக்கு விட்டாற் போலிருக்கும். கௌரிதேவிக்கு ஒரு சின்னக் கோவிலிருக்கிறது. இங்கிருந்து கேதார் 14 கி.மீ. படிப்படியாக உயர்ந்து 12,000 அடி உயரத்தைத் தாண்டும் மலைப்பாதை.

ஏராளமான குதிரைகள்; அவை கோவேறு கழுதைகளே! சென்று வர, ரூ.700 - 900. ‘டோலி’ அல்லது ‘டண்டி’ எனப்படும் சின்னப் பல்லக்கு. நாலு பேர் சுமந்து செல்வார்கள், உயிரோடு! ரூ.2000 - 2700. குதிரையில் ஏறினால் முதுகு, பிருஷ்டம், கால்கள் இவையெல்லாம் மாநில சுயாட்சி பெற்றுவிடும்! ‘டோலி’ முதுமக்கள் தாழியில் சிறப்புக் குலுக்கல் நடைபெற்றது போல், எலும்புப் பொட்டலமாகத் திரும்பி வரலாம்! இதைவிட வானப்ரஸ்தமே மேலென்று சில தைரியசாலிகள் நடக்கத் துவங்கி விடுகிறார்கள்.

கழுதை ஏறினான் கோ! இனி ஒட்டகம், ஆனை, நெருப்புக் கோழி எதில் வேண்டுமானாலும் சவாரி செய்யமுடியும் என்கிற ஞானம் இரண்டொரு நிமிடங்களிலேயே சத்தித்து விடுகிறது!

பாதையைச் செப்பனிடுகிறோம் என்று பாளம் பாளமாகக் கருங்கல் போட்டிருக்கிறார்கள். அதிலே ஏறியிறங்கப் படாத பாடு படுகிறது குதிரை. திடீரென்று அதன் முன்னங்கால்கள் வழுக்க, நமக்கு இதயம் தொண்டையில் வர....சாமி ஏன் சவுகரியமான இடத்தில் இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது!

மூன்று குதிரைகளுக்கு இரண்டு பயல்கள். குதிரையைப் பிடித்தபடி, பொருட்களைக் கவனித்தபடி, நம்மையும் பார்த்துக்கொண்டு, இந்தக் கடுமையான பாதையில் ஏறியிறங்க வேண்டும். வெகுளி மனம்; வெள்ளைச் சிரிப்பு; பரம ஏழ்மை.

இமயத்தின் பல பகுதிகளிலும் இதேபோல், மலைவாழ் மக்கள் வறுமையில்தான் இருக்கிறார்கள். குதிரைக்காரன் பயல்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தால் அதிகம். அதுவும் ஆறு மாதங்கள்தான். குளிர்காலத்தில் கோயில் அடைக்கப்படுகிறது.

எந்த அரசாங்கமும் இவர்களைக் கவனிப்பதில்லை. உள்நாட்டிலோ பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி என்று ‘ஏழைகளை மேம்படுத்தும்’ திட்டங்கள்!! கொள்ளைகள்! மலைவாழ் மக்களோ வறுமைப் பள்ளத்தாக்கில். இப்படிச் செய்துதான், வடகிழக்கு போயே போய்விட்டது. இந்தப் பகுதியும்....ஐயோ நினைத்தாலே மனம் நடுங்குகின்றது.

நமக்குப் பலவகையான உணவு; இவர்களோ இரண்டு ரொட்டி கிடைத்தால் போதுமென்கிறார்கள். உடுக்கப் பலவிதமான உடைகள் நமக்கு; இவர்களோ உடுத்ததைக் கழற்றியதே இல்லையோ என்னும்படித் தோற்றமளிக்கின்றனர். நமக்கு இருக்க அழகான இல்லம்; இவர்கள் இருப்பதோ குப்பைக் கொட்டாய். சுகங்களில், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் பிரச்சினை. அவர்களுக்கோ வாழ்க்கையே ஒரு பிரச்சினைக் களஞ்சியம். இவர்களிடம் போய்ப் பேரம் பேசும் நம்மவர்களைப் பார்க்கும்போது குமட்டிக்கொண்டு வருகிறது......

குதிரைச் சவாரியில் வலியே மேலென்று தோன்றவைக்கும் சில விபரீதங்கள் உள்ளன என்பதை விழி பிதுங்கப் புரிந்துகொண்டேன்! மூன்று குதிரைகள் என்றேனா? அவற்றில் இரண்டு ஜோடி; ஒன்று இடைச் செருகல். தன் காதலன் அல்லது காதலி கூட வராது அடுத்த அடியை எடுத்து வைக்காது ஜோடி! அது வந்து சேர்ந்தவுடன் முகர்தல், முத்தமிடல், சிரிப்பு இவையெல்லாம் நடந்து முடியக் கொஞ்ச நேரமாகும். எவனும் அசைக்க முடியாது. பயல், அவற்றோடு மன்றாடிக் கொண்டிருப்பான்.

இதைக் கண்ணுற்ற மூன்றாம் குதிரை, மனமுடைந்து ஆறடி அகல மலைப்பாதையின் விளிம்புக்குச் சென்று, கீழே 4000 அடிப் பள்ளத்தில் ஓடும் நதியில் விழுந்துவிடலாமா என்று யோசித்தபடி குனியும். ஐயன்மீர்! எப்போதும் நான்தான் அந்த மூன்றாம் கழுதைக் கோ!

ஆஹா! எல்லா வேதாந்த சித்தாந்த ஞானமும் நொடிப்பொழுதில் விடைபெற்றுக்கொண்டு பறக்க, இதுவரை இல்லாத பக்தியுடன் கேதாரநாதரைத் துதித்தபடி நான் உறைந்துபோக, சற்றும் பதறாமல் சிரித்தபடி வந்து மெல்ல இழுத்துச் செல்கிறான் எழுதப் படிக்கத் தெரியாத ஏழைச் சிறுவன்...

ராம்பாடா கிராமம் வந்துவிட்டது. சரியாகப் பாதித் தொலைவில் இருக்கிறது. இங்குதான் நாம் களைப்பாறுகிறோம்; குதிரைகள் கட்டுப்புல் தின்று நீரருந்திச் சேணமின்றி இளைப்பாறுகின்றன. பயல்களெல்லாம் விரிந்த விழிகளோடு அண்டப் புளுகுக் கதைகளைச் சொல்லியபடியே தேனீர் அருந்திக் கொள்வார்கள். அடுத்த ‘ரீலை’ அளந்து விடத் துடிக்கிறான் அடுத்தவன்!

(அடுத்த பகுதியுடன் நிறைகிறது)

4 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. மூன்றடிப் பாதையில் ஒரு பக்கம் மலை மறுபக்கம் கிடுகிடு பள்ளம் - நம்ம குதிரையார் ஏனோ பள்ளம் உள்ள பக்கத்திலேயே போவார்!

திரும்பவும் போக நினைத்திருக்கிறேன்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர்கிறேன்... நன்றி...

vasan சொன்னது…

க‌ம்யூனிச‌த்தையும், நிக‌ழ்கால‌ அர‌சிய‌லையும் பின்னி இருக்கிறீர்க‌ள். 'சாமி, கிட்ட‌ இருந்திருக்க‌லாம்', "பேர‌ம் பேசும் போது கும‌ட்டிக் கொண்டிவ‌ருவ‌து' குதிரைக‌ளின் காத‌ல், ஊட‌ல் காட்சிக‌ள், எல்லாம் ச‌ராச‌ரிக்கு சற்றே உய‌ர்ந்த‌ ம‌னசின் எண்ண‌ங்க‌ள். காத்திருக்கிறோம் குழ‌ந்தைக‌ளின் இடைவெளிக்கு பின்பான‌ அடுத‌த‌ ரீலுக்கும், குழ‌ந்தையாய், ஆசிரிய‌ரின் அனுப‌வ‌ வ‌ரிக‌ளுக்கும்.

G.M Balasubramaniam சொன்னது…


நான் எழுத நினைத்தது. எழுதி இருந்தால் இவ்வளவு சரியாகக் குறிப்பிட்டு இருக்க முடியாது, வாசனைப்போல். வரிக்கு வரி வழி மொழிகிறேன். எழுத்துக்களில் ஒரு பக்குவம் முதிர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...