போன நூற்றாண்டின் பேரறிஞர்களில் ஒருவர் வெ.சாமிநாத சர்மா. சிறுகதை, நாவல், கவிதை இந்த மாதிரியான விஷயங்களில் மௌஸை ஓட்டுபவர்கள் அநேகர். கட்டுரைகள், விமர்சனம் என்பது அவர்களுக்கு எட்டிக்காய்.
இப்படிப்பட்ட பாரம்பர்யமான சூழலில் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு துறையில் ஒரு சாதனையாளர் வந்தால் பெரிதென்று நினைக்கத் தோன்றுகிறது. அந்தத் தளத்தில் வரலாறு, அரசியல் என்றால் வெறுமனே நம் நாட்டோடு நின்று விடாமல் உலக அளவில் பரந்த வாசிப்பும், வாசிப்புக்குச் சளைக்காத அனுபவமும் கொண்ட அறிஞர் வெ.சாமிநாத சர்மா.
வரலாறையும், வரலாற்றுச் சாதனையாளர்களையும் இவர் அளவுக்கு வாசித்தவர்களோ, அறிமுகப் படுத்தியவர்களோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் வேறு யாரும் தெரியவில்லை. ப்ளேட்டோவையும், ரூஸோவையும், ஹிட்லரையும், கார்ல் மார்க்ஸையும், மாஜினியையும், ஸன்யாட் ஸென்னையும் இங்கர்சாலையும் நமக்குத் தமிழில் காட்டியவர் இவர்தான். ராமக்ருஷ்ணர், ரமண மகரிஷி, விவேகானந்தர், திலகர், காந்தியடிகள், நேரு, திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியவர்களைப் பற்றி இவர் எழுதியுள்ள வரலாற்றுச் செய்திகளுக்கு நாம் மிகவும் கடன் பட்டிருக்கிறோம்.
வலையின் உதவி இல்லாமல் திமிங்கிலங்களைக் கரை சேர்த்த கடின உழைப்பு இவருடையது. தமிழின் அரிய சுவடிகளைக் கரை சேர்த்த பெருமையை உ.வே.சா. தட்டிச் செல்வார் என்றால் வரலாற்றின் கரையான் அரித்துக்கொண்டிருந்த பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டு தந்தவர் சர்மா.
அவர் வாழ்ந்த 83 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான புத்தகங்களை எழுதித் தள்ளினார்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தேசியவாதியாகவும். காந்தியவாதியாகவும் எளிமையாய் இறுதி வரை வாழ்ந்த சர்மா, தேசபக்தன், நவசக்தி, ஜோதி மற்றும் சில சஞ்சிகைகள் மூலமாகப் புகழ் பெற்ற பத்திரிகையாளராகவும் வாழ்ந்தாலும் அவர் காலத்தைக் கடந்து முன்னால் வாழ்ந்தவர் என்பதே நிஜம்.
ஒரு தலைமுறை முழுவதுமே இவர் மூலம் வரலாற்றின் பக்கங்களைக் கற்றுக் கொண்டது. இன்னும் சில கலைஞர்களோ இவர் எழுத்துக்களின் மூலமே தங்கள் பாணி எழுத்துக்களை உருவாக்கி அரசியலிலும் அதை லாபகரமான செலாவணியாக்கிக் கொழித்துவிட்டு சர்மாவைப் பற்றி மூச்சு விடாமல் இருக்கும் வடிகட்டிய சந்தர்ப்பவாதத்துக்கு நடுவில் கண்ணதாசன் மட்டும் வாக்குமூலம் கொடுக்கிறார்.
”உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.”
ப்ரகாஷின் அறிமுகத்தால் அவரின் “ எனது பர்மா வழிநடைப் பயணத்தை” என் 21 வயதில் வாசிக்க நேர்ந்தது என் கொடுப்பினை. வாசிக்க ஆரம்பித்த முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை என்னைக் கட்டிப் போட்டதுடன், என் வாசிப்பு உலகத்தையே அது புரட்டிப் போட்டது. அமுதசுரபியில் தொடராக வெளிவந்த ”எனது பர்மா வழி நடைப் பயணம்” அவரது மரணத்துக்குப் பிறகே புத்தக வடிவம் பெற்றது.
(மற்றொரு மறக்க முடியாத அனுபவம் ப.சிங்காரமும்- அவர் எழுதிய "புயலிலே ஒரு தோணி"யும். நானும் ப்ரகாஷும் அவரை மதுரையில் நேரில் சந்தித்ததைத் தனியே ஒரு பதிவில் எழுதுவேன்) செப்டம்பர் 17, 1895ம் ஆண்டு வட ஆற்காடு, செய்யாறு தாலுகாவில் உள்ள வெங்களத்தூர் என்னும் கிராமத்தில் பிறந்த சர்மா, 1978ம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி மரணடைந்தார்.
தன்னுடைய 66ஆம் பிறந்த நாளின் போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை: “வாழ்க்கைப் பாதையில் 65 ஆண்டுகளைக் கடந்து விட்டேன். என்ன சாதித்து விட்டேன்? அதைச் சொல்ல எனக்குச் சந்ததி இல்லை. ஆனால் வருங்காலத் தமிழ் உலகம் ஏதாவது சொல்லும் என்று நினைக்கிறேன்”
வருங்காலத் தமிழகம் என்ன சொன்னதென்றும் தெரிகிறது. சொல்லவில்லை என்றும் தெரிகிறது.ஆனால் காலம் பத்திரமாக அவரின் வியர்வையில் பூத்த மலர்களைக் கைகளுக்குள் பொதிந்து நீண்ட காலத்துக்கு வாடாமல் எடுத்துச் செல்லும்.
என்னவெல்லாம் வாசிக்கலாம் என்று என்னைக் கேட்டால், அந்தப் பட்டியலில் வெ.சாமிநாத சர்மாவின் பெயருக்கு நிச்சயம் மரியாதைக்குரிய இடம் இருக்கும். சர்மாவை வாசிக்காமல் ஒருவரின் வாசிப்பை முழுமையானதாகக் கருத முடியாது. இது வெறும் புகழ்ச்சியில்லை.
அடுத்த சில இடுகைகளில் அவரின் “ வரலாறு கண்ட கடிதங்கள்” நூலில் இருந்து சில மறக்க முடியாத கடிதங்கள். சிறிய இடைவெளிகளுடன்.
(சரி. கையைக் கீழே போடவும்)
9 கருத்துகள்:
தூக்கின கையை கடைசியில் தான் போட்டேன் - அதுவும் நீங்கள் சொன்ன பிறகு.
நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது எனப் புரிகிறது... அவருடைய நூல்களைத் தேடுகிறேன்.
83 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான புத்தகங்கள் என்பதை நினைக்கும் போதே வியப்பைத் தருகிறது...
வாங்கி படிக்க வேண்டும்... அவரின் கடிதங்களை படிக்க ஆவல்...
நன்றி...
சிறு தகவல் : உங்கள் தளம் சில சமயம் தான் கருத்துரை இட முடிவதில்லை... ஏனென்றால் கருத்துரை பெட்டியே வருவதில்லை...Dynamic Views என்பதாலே தெரியவில்லை...
நன்றி தனபாலன்.
முன்னமேயே ஒருமுறை நிலாமகள் சொன்னதாக நினைவு.
பொதுவாக எழுதுவதுடன் என் கவனம் திசைமாறிவிடுகிறது. பல சமயங்களில் சிலரின் சந்தேகங்களுக்கோ, விசாரிப்புகளுக்கோ பதிலெழுதவும் அவகாசமின்றிப் போய்விடுகிறது. அதுவே உங்களைப் போன்று தொடர்ச்சியாய் வருகை தந்து என்னையெல்லாம் கௌரவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பு எப்போதுமே உண்டென்றாலும் குற்ற உணர்ச்சி மீறத்தான் செய்கிறது.
பின் தொடர்பவர்கள், பின்னூட்ட எண்ணிக்கை, ஓட்டு இவற்றில் கவனம் செலுத்துவதில்லை என்பதால் இந்த கவனக் குறைவு.
டெம்ப்ளேட்டை மாற்றிக்கொள்கிறேன்.
தெரியும் என்று கை தூக்கி வெங்கட் அண்ணா போல் கையை கீழே இறக்கியாச்சு...
நாம் இன்னும் படிக்க வேண்டியவை மலைபோல் இருக்கிறது...
தொடருங்கள்... வாசிக்கிறோம்.
கேள்விப்பட்டது கூட கிடையாது, எங்கே தெரிந்து கொள்வது! உங்கள் தயவால் இப்படி ஏதாவது அறிமுகம் கிடைத்தால் உண்டு.
சில பெயர் மரியாதையாக,மனசுக்குள் உட்கார்ந்திருந்தாலும்,அப்பெயர் கொண்ட ஆளுமையின் வரலாறு பூர்வமான வாழ்கைச் சம்பவங்களை மீண்டும் அறியும்போது,மீண்டும் மீண்டும் வியக்கவும் வணங்கவும் தோன்றுகிறது.அருமையான இடுகை சுந்தர்ஜி.இந்த ஆசானைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.நன்றியும் அன்பும்...நேசமிகு எஸ்.ராஜகுமாரன்
25-10-2012
தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஆளுமை.இந்த ஆசானைப் பற்றிய இடுகைகளைத் தொடர்க சுந்தர்ஜி.உங்களுக்கும் சேரும் தமிழ்கூறும் நல்லுல நல்லோரின் ஆசி...நேசமிகு எஸ்.ராஜகுமாரன்
25-10-2012
1948ம் ஆண்டு-ஏழு அல்லது எட்டம் வகுப்பு படிப்பு. அழகேச வத்தியார் நல்லொழுக்கப் பாடம் எடுப்பார்.அந்த வகுப்பில் சிறு புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்லுவார் .கரிபால்டி ,வால்டயர்,ரூசோ,கார்ல் மர்க்ஸ்,என்ரு கருநீல அட்டையில் அவர்கள் படம்போட்ட புத்தகத்தை தருவார்.அவைபிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்ட புதுக்கோட்டையில் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் சர்ம எழுதியவை.சர்மாவும் சரி எங்கள் அழகேச வாத்தியாரும்சரி மறக்க முடியாதவர்கள். ---காஸ்யபன்.
என்னால் கை தூக்க முடியவில்லை. வருந்துகிறேன். இவரை எல்லாம் படிக்க வாய்ப்பிருக்குமோ தெரியவில்லை. ஒரு சமாதானம். நீங்கள் எழுத அவற்றைப் படிக்கலாம் எனும் நம்பிக்கை.
கருத்துரையிடுக