11.10.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 6 - இசைக்கவி ரமணன்


ஹர் த்வாரில் கங்கையில் குளிக்கும்போது, மூன்று பிரார்த்தனைகள் செய்து மும்முறை மூழ்கச் சொன்னார்கள். ஒன்று, நமக்காக; இரண்டு, சுற்றத்துக்கும் நட்புக்குமாக; மூன்றவது, நாட்டு நலனுக்காக. சமுதாயம் நலமாக இருந்தால்தான் நாம் நலமாக வாழ முடியும். நமது நலம், சமுதாய நலனையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

இதை அழுத்தமாக எனக்கு விளக்கிய என் குருநாதர், “சமுதாயத்தில் வாழும்வரை நாம் கடன்பட்டுள்ளோம். அதன் நன்மைக்காகப் பணியாற்றுவதன் மூலமே அதை ஓரளவு தீர்க்க முடியும். காட்டுக்குச் சென்று தனிமையில் இருப்பின், கடமைகள் கிடையாது. ஆனால், சமூகத்தில் வாழும் மட்டும், ஒரு குடிமகனின் பொறுப்பாய கடமையிலிருந்து சன்யாசிக்கும் விலக்குக் கிடையாது. இந்தப் பொறுப்பை நிர்வகிக்காமல், முக்தி விழைவது பகற்கனவே!”.

நாட்டுப் பற்றுடன் சமூகக் கடமை ஆற்றியபடி வாழ்வதே தவம்; வேறெதையும் செய்யாமலேயே அவன் ஆன்ம விடுதலை பெறுவான் என்று அவர் ஆணித்தரமாகச் சொல்லுவார். அதைப் பலர் ஏற்பதில்லை. அது பற்றி, அவருக்கோ எனக்கோ அக்கறையில்லை!

கேதாரப் பயணம், ருத்திரப் பிரயாகையிலிருந்துதான் களைகட்டுகிறது. இங்கே, ஒருவன் ஆன்ம விடுதலையே கோரும்படித் தூண்டப்படுகிறான். விடுதலை என்பது ஒரு கணத்தின் முனைப்பில் நிகழ்வது. அதிலே, செயல், காலம் எதுவுமில்லை. ஆனால் அந்தக் கணத்தை நோக்கி வாழ்வதற்கு, ஒரு பிரத்யேகமான மனப்பாங்கும், பயிற்சியும் தேவையாகிறது; அதைக் காலம் நிர்வகிக்கிறது.

பரீட்சத்துக்கு முடி சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் அத்தினாபுரத்திலிருந்து நடந்து இங்கே வந்தார்கள்; ருத்திரப் பிரயாகையிலிருந்து, அவர்கள் நீரை மட்டும் உட்கொண்டு நடந்தார்கள். இடைவிடாத நடை. கேதாரநாதனைத் தவிர வேறெதும் விழையாத மனநிலை. திரும்பிப் பாராத துறவு. எண்ணங்கள் ஓய்ந்த மனம். நடைதொடர்ந்து உடல் கீழே விழும். ஆன்ம விடுதலை நேரும். இதற்குப் பெயரே வானப்ரஸ்தம்.

சமீபகாலம் வரையிலும் யாத்திரைக்குச் செல்பவர்கள் திரும்பிவர டிக்கெட்டு எடுப்பதில்லை! இப்போது உறுதி நீர்த்து விட்டது. இருந்தும் குற்றமில்லை.

கேதார் என்றால் மலைச்சிகரம் என்று பொருள். புராணத்தில், இது ‘முக்கண்டி’ அதாவது மூன்றாம் கண் என்று வர்ணிக்கப்படுகிறது. கேட்டதைத் தரும் கற்பகத்தரு என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கே கேட்க வேண்டியது முக்தி மட்டுமே! மனம், ஓரிலக்கில் தீவிரம் கொண்ட பின்னே, உடல் முன்னே தள்ளப்படுகிறது. உடலின் துவட்சியும் ஓர் இனிய மனநிலையாகப் பரிமளிக்கிறது. சிந்தனைகள் ஓய்ந்து சித்தத்தில் சிள்வண்டின் சீழ்க்கை கேட்கிறது. வானளாவிய அமைதி வண்ண மலராய் உள்ளிருந்து விரிகிறது.

வாழ்க்கை முடிகிறது.... வாழ்தல் தொடர்கிறது.......

(தொடரும்)    

3 கருத்துகள்:

vasan சொன்னது…

இது ஒரு ம‌ஹானுப‌வ‌ம்.
இதைப் பெற‌ என்ன‌ தாம் செய்திருக்க‌ வேண்டும்!
இதை வாசித்து உள்வாங்கும் க‌ண‌ம்,இந்த‌ ச‌த்திய‌ வார்த்தைக‌ள்,
க‌ற்ப‌னையில் அந்த‌ நிலையை ம‌னதிலாட‌ வைக்கிற‌து.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்க்கை முடிகிறது.... வாழ்தல் தொடர்கிறது.......

அந்தரங்கத்தின் பகிரங்கம் -

நிலாமகள் சொன்னது…

சமூகத்தில் வாழும் மட்டும், ஒரு குடிமகனின் பொறுப்பாய கடமையிலிருந்து சன்யாசிக்கும் விலக்குக் கிடையாது//

கேதாரநாதனைத் தவிர வேறெதும் விழையாத மனநிலை சித்திக்க‌வும் ஒரு ப்ராப்த‌ம் இருக்க‌ வேண்டும‌ல்ல‌வா?!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...