சத்ரபதி சிவாஜி |
ஆனால் இவர் மனமெல்லாம் கடவுள் நெறியிலேயே சென்று கொண்டிருந்தது. துறவு பூண்டார்; ஆண்டவன் புகழைப் பாடுவதிலும், பக்தி மார்க்கத்தில் மக்களைச் செலுத்துவதிலும் காலங் கழித்தார். ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார். இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு மக்கள் பரவசப் பட்டுப் போனார்கள்; இவரிடத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்கள். இவர் புகழ் மகாராஷ்டிரம் முழுவதும் பரவியது.
சத்ரபதி சிவாஜிக்கு ( கி.பி.1627 - 1680) இருபது அல்லது இருபத்தோரு வயதிருக்கும். ஒரு நாள் துகாராம் சுவாமிகளின் பாடல் ஒன்றை ஒரு பக்தன் வாயிலாகக் கேட்டார்; உள்ளம் உருகி நின்றார்; பின்னர் அவருடைய வேறு சில பாடல்களையும் செவிமடுத்தார்; அவருடைய வாழ்க்கைப் போக்கை ஒருவாறு தெரிந்து கொண்டார்;
அவரை வரவழைத்து, தன்னோடு இருக்கச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்; அப்படி வந்து வசிப்பதாயிருந்தால், பொன்னும் பொருளும் ஏராளமாகக் கிடைக்கச் செய்வதோடு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் ஒரு பெரியார் மூலம் அவருக்குச் சொல்லி அனுப்பினார். இதற்குத் துகாராம் சுவாமிகள் சில கவிதைகள் மூலம் கடிதம் எழுதியனுப்பினார்.
வெ.சாமிநாத சர்மா எழுதிய “ வரலாறு கண்ட கடிதங்கள்” நூலில் பிரசுரமாகியிருக்கும் அந்தக் கடிதம்:
###
“ என்னை நீ சந்திக்க வேண்டுமென்று உறுதி பூண்டிருக்கிறாய்; இதுதான் உன்னுடைய கடிதத்தின் சாரம்! அப்படியானால் என்னுடைய இந்த பதிலைக் கேள். அரசனே, என் மனப்பூர்வமான வேண்டுகோளுக்குச் செவி கொடு.
எவ்வித நோக்குமில்லாமல் காட்டிலே திரிந்து கொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்தாலே அருவருப்பு உண்டாகும்; மிகக் குறைவான ஆடையையே உடுத்திக்கொண்டிருக்கிறேன். என் உடம்பின் மீது தூசு தும்புகள் படிந்திருக்கின்றன. எனக்குக் குறைவான ஆகாரந்தான். பழங்களை உட்கொண்டே காலந்தள்ளுகிறேன்.
எனது அங்க அவயங்களோ மிக மெல்லியனவாகவும் கோணல் மாணலாகவும் இருக்கின்றன. மற்றவர்கள் பார்வைக்குத் தகுதியுடையவையாக அவை இல்லை.
ஆகையால் துகாராம் உன்னை வேண்டிக் கொள்கிறேன்; உன்னை வந்து பார்க்க வேண்டுமென்பதைப் பற்றி என்னிடம் பேசாதே.
உன்னுடைய சந்நிதானத்திற்கு நான் வருவதனால் யாருக்கு என்ன நன்மை? என் கால்கள்தாம் சோர்வடையும்.
எனக்கு ஆகாரமா? பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறேன். அது போதும்! உடையா? கந்தைத் துணிகள் இருக்கின்றன. படுப்பதற்குக் கற்பாறை இருக்கிறது. உடம்பை மூடிக்கொள்ள ஆகாயம் இருக்கிறது.
இப்படியிருக்கிறபோது நான் யாருடைய தயவை எதிர்பார்த்து நிற்கவேண்டும்? அப்படி நிற்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும்.
எனக்குக் கௌரவம் வேண்டுமென்பதற்காக நான் அரசவையில் போய் நிற்க வேண்டுமா என்ன? அங்கு - அரசவையில் - திருப்தி என்பது காணக் கிடைக்காத அரிய பொருள்.
அரசவையில் பணக்காரர்களுக்குத்தான் கௌரவமெல்லாம். மற்றவர்களுக்குக் கௌரவம் என்பது இல்லை.
ஆனால் எனக்கோ, ஆடம்பரமாக ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறவர்களைப் பார்த்தாலே மரண வேதனை அடைவது போன்ற உணர்ச்சி உண்டாகிறது.
இப்படியெல்லாம் நான் சொல்வதைக் கேட்ட பிறகு, உனக்கு என் மீது அலட்சியப் புத்தி ஏற்படலாம். ஆனால் கடவுள் யாரையும் அலட்சியப் படுத்துவதில்லை.
உனக்கு ஓர் இரகசியத்தைச் சொல்லி வைக்கிறேன். பிச்சை எடுத்து உண்பதைக் காட்டிலும் வேறு பெரிய சந்தோஷம் எதுவுமில்லை.
உலக ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள், எவ்வளவு சடங்குகள் செய்தாலும், எத்தனை உபவாசங்கள் இருந்தாலும் துக்கத்தில் கிடந்து உழல வேண்டியவர்கள்தான்.
துகாராம், மனநிறைவு என்ற செல்வத்தை நிறையப் பெற்றிருக்கிறான்; கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிறான். அதுவே அவனுடைய ஆஸ்தி. முற்பிறவியில் செய்த புண்ணிய வினைகளே அவனுக்குக் கவசம்.”
##########
இதைப் படித்த சிவாஜி அப்படியே மெய்மறந்து போனார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, துகாராம் சுவாமிகளைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்.; எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் அவரைக் கண்டும் விட்டார்; அவர் அடிகளில் விழுந்து வணங்கினார்; தான் அணிந்திருந்த உடைகளைக் கழற்றிக் கிழித்து எறிந்துவிட்டு, கந்தல் துணிகள் சிலவற்றைப் பொறுக்கியெடுத்து வந்து உடுத்திக்கொண்டு, சுவாமிகள் பின்னால் மௌனமாக உட்கார்ந்து விட்டார்.
இங்ஙனம் யாருக்கும் தெரிவிக்காமல் வந்துவிட்ட சிவாஜியை அவருடைய பரிவாரத்தினர், பல இடங்களிலும் அலைந்து தேடி, கடைசியில் கண்டுபிடித்துவிட்டனர்; ஊர் திரும்பி வந்து அரச காரியங்களைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், சிவாஜி இவைகளுக்குச் செவி கொடுக்க மறுத்து விட்டார். கடைசியில் அவர்கள் சிவாஜியின் தாயார் ஜீஜாபாயிடம் சென்று நிலைமையைத் தெரிவித்தார்கள்.
அவர் உடனே சிவாஜியின் இருப்பிடத்திற்கு வந்து ”‘ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டுமென்றும், ஹிந்து மதத்திற்குப் புத்துயிர் கொடுத்து வளர்க்க வேண்டுமென்றும் உன்னைப் பின்பற்றி நிற்கும் அனைவருக்கும் ஊக்கமளித்துவிட்டு இப்படி நீ ஒதுங்கியிருக்கலாமா? பாரத நாட்டில் ஞானிகளுக்கும், துறவிகளுக்கும் குறைவில்லை. அனால் புனிதமான இந்தப் பாரத நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க இப்பொழுது ஒரு வீரன் தேவை. உனக்குத்தான் அந்தப் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஹிந்து தர்மத்தைக் காப்பாற்றப் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றித் திரியும் பாடகர்களும் சன்னியாசிகளும் இப்பொழுது தேவையில்லை; பலங்கொண்ட படைகளே தேவை. ஆகையால் எழுந்திரு; புறப்படு; உன்னுடைய அரச கடமைகளைச் செய்ய முற்படு” என்றெல்லாம் கடிந்தாற் போல் கூறினார்.
சிவாஜி, தாயின் வாசகத்தில் உண்மை இருக்கிறதை ஒப்புக்கொண்டு, துகாராம் சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டார்; ஊர் திரும்பி வந்து அரச கடமைகளை மேற்கொண்டார்.
இதற்குப் பிறகு, துகாராம் சுவாமிகளை சிவாஜியால் சந்திக்கவே முடியவில்லை. இவர் சந்தித்த அதே வருஷத்தில் - 1649 ஆம் வருஷத்தில் - அவர் மறுவுலகுக்குச் சென்றுவிட்டார்.
10 கருத்துகள்:
எத்தனை அர்த்தமுள்ள ஒரு கடிதம். துக்காராம் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்..
சிறப்பான பகிர்வு.
மிகவும் சிறப்பான பதிவு அய்யா
சிறப்பான பகிர்வு... நன்றி ஐயா...
ரைட்டு.
(சத்தியமாக இதான் மனதில் தோன்றியதுங்க :)
குருபீடம் ப்ரகாஷ் பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன் (அல்லது பழைய பதிவு ஏதாவது இருக்கிறதா?)
அன்புள்ள சுந்தர்ஜி...
வணக்கம். உங்கள் பதிவிற்கு வந்து பதில் அளிக்கவேண்டும் என்கிற விருப்பத்திலேயே வந்திருக்கிறேன்.
உங்கள் கருத்து சரியானதுதான். அதனால்தான் என்பதிவில் துயருறும் அமெரிக்க மக்களைப் பற்றி கருத்து எழுதவில்லை. பொருளாதார ரீதியாக அமெரிக்க ஒடுங்கினால்தான் அடுத்தவர் துயரம் தெரியும். மக்கள் துயரத்தை ஒருபோதும் மாறாக விமரிசிப்பவன் அல்ல. நன்றி.
கவிராயர் எப்படியுள்ளார் சுந்தர்ஜி?
உங்கள் பதிவில் நிறைய படிக்கவேண்டியுள்ளது. எனவேதான் வருகை மட்டும் இப்போது. படித்துவிட்டு பின்னர் எழுதுவேன். நன்றிகள்,
/கடைசியில் அவர்கள் சிவாஜியின் தாயார் ஜீஜாபாயிடம் சென்று நிலைமையைத் தெரிவித்தார்கள்.
அவள் உடனே சிவாஜியின் இருப்பிடத்திற்கு வந்து ‘ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டுமென்றும், ஹிந்து மதத்திற்குப் புத்துயிர் கொடுத்து வளர்க்க வேண்டுமென்றும் உன்னைப் பின்பற்றி நிற்கும் அனைவருக்கும் ஊக்கமளித்துவிட்டு இப்படி நீ ஒதுங்கியிருக்கலாமா? பாரத நாட்டில் ஞானிகளுக்கும், துறவிகளுக்கும் குறைவில்லை. அனால் புனிதமான இந்தப் பாரத நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க இப்பொழுது ஒரு வீரன் தேவை. உனக்குத்தான் அந்தப் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது.//
உண்மையான, உடனடி தேவையான அரசியல் "அம்மா".
அந்த வீரன்??
ஆ! வாசன்!
இதற்கு இப்படியொரு பொருளுண்டா?
subtext தெரியாத ஜடமாகிவிட்டேனே!!
கவிராயர் தேறி வருகிறார் ஹரணி. எழுதிக் குவிக்கிறார்.
ப்ரகாஷ் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இன்னும் மனம் குவியாமால் அலைகிறது. சீக்கிரம் எழுதுகிறேன் அப்பாதுரை.
சில ரைட்டுக்கள் ராங்காவதில்லை விதிவிலக்காய்.
//சில ரைட்டுக்கள் ராங்காவதில்லை விதிவிலக்காய்.
ஆகா!
கருத்துரையிடுக