வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.2.12

தரங்கம்பாடியில் கி.பி.1622ல் ஜான் ஓலஃப்ஸன்


1620 ஆம் ஆண்டு தஞ்சாவூரை ஆண்ட விஜயரகுநாத நாயக்கர் டென்மார்க்கின் மன்னர் நான்காவது க்றிஸ்டின் என்பவருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டார். 
அந்த ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் ஒரு கோட்டையை அமைத்துக் கொண்டு வாணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது தரங்கம்பாடி சுற்றுலா வந்த ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஜான் ஓலாஃப்ஸன் தரங்கம்பாடி கோயிலில் நடைபெற்ற திருவிழா பற்றியும் அங்கு நிலவிய சட்டம் ஒழுங்கு பற்றியும் நேராகப் பார்த்து ஒரு குறிப்பு எழுதிவைத்துள்ளார். 
1593ம் ஆண்டு ஐஸ்லாந்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜான் டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு படிக்கவும் தொழில் செய்யவும் வந்தார். அந்த நாட்டு மன்னரின் பீரங்கிச் சிப்பாயாக பணியில் அமர்ந்தார். 1618ம் ஆண்டு டென்மார்க் மன்னர் க்றிஸ்டின் இந்தியாவுக்கு "ஒவ்கிட்" என்பவரை வர்த்தகத்துக்கு அனுப்பியபோது ஓலஃப்ஸனும் உடன் செல்லவிரும்பினார். ஆனால் அதற்கு மன்னர் அனுமதி அளிக்கவில்லை. அதன் பின்னர் தஞ்சாவூருக்கும் டென்மார்க்கும் 1620ல் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்கு பீரங்கிச் சிப்பாயாக சென்றுவர ஜான் ஓலஃப்ஸனுக்கு மன்னர் அனுமதி கொடுத்தார். இவரது கப்பல் டென்மார்கிலிருந்து தரங்கம்பாடி வந்து சேர ஏழு மாதங்கள் பிடித்தன. அது அக்காலத்தில் மிகவும் விரைவான பயணமாக கருதப்பட்டது. தரங்கம்பாடியில் இவர் ஒன்றரை ஆண்டுகள் பீரங்கிச் சிப்பாயாக பணிபுரிந்தார். 
இவருடைய குறிப்புக்களில் எத்தனை நேர்மையும் ஆச்சர்யமும் தெளிவும் இருந்திருக்கிறது? சுமார் 390 வருடங்களுக்கு முந்தைய நமது நாகரீகமும் கலாச்சாரமும் எத்தனை மேன்மையுடன் விளங்கின என்பதற்கு இவருடைய பயணக் குறிப்புகள் சாட்சியாக இருந்திருக்கின்றன.
இனி நேரடியாக ஜானின் மொழிக்குச் செல்வோம்.

”இங்குள்ளவர்கள் (இந்துக்கள்) தமது விழாக்களைப் பெரும்பாலும் இரவில் கொண்டாடுகிறார்கள். நான் ஒரு நாள் இரவு தரங்கம்பாடி கோட்டையில் பீரங்கிக் கொத்தளத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து பார்த்தால் எதிரே அந்தக் கோயில் தெரியும்.
தரங்கம்பாடி கோயில் ஒரு சதுரமான உயர்ந்த கட்டிடத்தைக் (விமானத்தை) கொண்டது. அதைச் சுற்றிலும் உயர்ந்த சுற்று சுவர்கள் உள்ளன. அதன் நடுவில் ஒரு பரந்த முற்றம் உண்டு. 

அங்கு விவரிக்க முடியாத பயங்கரமான சிற்பக்காட்சிகள் உண்டு. அந்தக் கோயிலின் உள்ளே மிருக வடிவில் ஆறு சிற்பங்கள் இருந்தன. கோயிலின் உள்பகுதியில் தங்கத்தாலான மிகவும் அழகான பீடம் ஒன்றில் மூன்று தெய்வங்களின் உருவங்கள் இருந்தன. இந்த முக்கியமான மூன்று தெய்வங்களும் தான் ஆண்டுக்கு ஒரு முறை வீதிகளில் தேரில் ஏற்றி உலாவாகக் கொண்டு வருகிறார்கள். 


இத்தேரை வீதிகளில் இழுத்துச் செல்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது கொட்டு வாசிப்பவர்களும், மூன்று நான்கு கொம்பு வாசிப்பவர்களும் தங்கள் கருவிகளை வாசித்துக் கொண்டு வருகிறார்கள். தளியார் என்ற பல வீரர்களும் இதன் முன் செல்கிறார்கள். அன்று கோயில் பசுக்களை எல்லாம் சுதந்திரமாக தெருவில் அவிழ்த்து விட்டு விடுகிறார்கள்.
நான் அன்றிரவு கோட்டை மேல் இருந்து கண்ட காட்சி இதுதான். தீவட்டி வெளிச்சத்தில் காட்சி நன்றாகத் தெரிந்தது. அவர்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவது தெரிந்தது. 

கோயிலின் உள்ளே மற்ற நேரங்களில் தொங்கவிட்டு வைத்திருந்த அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து இவர்கள் ஆடிக் கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. 


ஒரு நடிகர் மீன்போல் வேடம் போட்டுக் கொண்டு எதையோ விழுங்குவது போல் ஆடிக் கொண்டு வந்தார். இது ஏதோ ஒரு கதையைச் சித்தரிக்கிறது என்று தெரிந்தது.  பின்னர் தேவதாசிகள் அத்தெய்வங்கள் முன் நாட்டியம் ஆடுவதைப் பார்த்தேன்.


நான் அங்கிருந்த ஓர் உள்ளூர் இந்துவிடம் ”ஏன் வாய்பேசாத சிலையைப் போய் நீங்கள் கடவுள் என வணங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் ”எங்கள் கடவுளை நாங்கள் கண்ணால் காண முடிகிறது. உங்கள் கடவுளை நீங்கள் பார்க்கக் கூட முடியாதே!” என்று கூறினார். 
ஆனால் இங்கு ஒன்றுமட்டும் மிகவும் வியப்புடன் கூறத்தான் வேண்டும். இவர்கள் (இந்துக்கள்) நம் சமயத்தை பின்பற்றாததால் இருளில் மூழ்கியிருப்பவர்கள் என நாம் நம்புகிறோம். நாமோ ஒளியைக் கண்டவர்கள். இருப்பினும் இவர்களைக் காட்டிலும் நாம் ஏன் மேன்மையாக நடந்து கொள்வதில்லை. கூறப்போனால் மிகவும் கீழ்த்தரமாகத் தான் நடந்து கொள்கிறோம். 

இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பெரும்பாலும் நிலைத்து நிற்கிறது. வணிகர்கள் சரியான எடைகளையும் அளவைகளையும் தான் பயன்படுத்துகிறார்கள். மக்கள் கெட்ட பழக்கங்களை வெறுக்கிறார்கள். 


நம் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் அளவுக்கு மீறி உண்பது, ஏராளமாகக் குடிப்பது போன்ற பழக்கங்கள் இங்கு இல்லை. தரங்கம்பாடியில் உள்ள இந்திய மக்கள் யாராவது குடிகாரனைப் பார்த்து விட்டால் தலையை ஆட்டி மார்பில் அடித்துக் கொண்டு அவன் மீது காறித் துப்புவார்கள். இவனைப் பேய் பிடித்திருக்கிறது என்று கூறுவார்கள்.
டேனிஷ் போர்ட் என்று பெயர் பெற்ற தரங்கம்பாடி கோட்டை மாளிகை மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்லால் ஆன இந்தக் கட்டிடத்தை இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். இவர்கள் நம் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்கிறார்கள். 

இந்த கோட்டையின் நடுவில் எழிலான ஒரு 'சர்ச்' ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதையும் இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். நாம் கொடுத்த டேனிஷ் கட்டிடக்கலை சார்ந்த வரைபடத்தினைப் பின்பற்றி இவர்கள் கட்டியிருக்கிறார்கள்" 

எனக்குத் தெரிந்த வரையில் இவருடைய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. தொல்பொருள் ஆய்வுகளின் முன்னோடி டாக்டர். இரா. நாகசாமியின் சுவாரஸ்யமான அறிமுகத்தால் பெற்ற போதையில் "Memoirs of Jon Olafsson" என்ற இந்தப் பயண நூலை எல்லா புத்தக நிலையங்களிலும் விசாரித்து விட்டேன். யாரிடமும் இல்லை. பல பழைய புத்தகக் கடைகளின் கதவுகளையும் தட்டிவிட்டேன். இதைப் படிக்கும் யாரிடமாவது இருக்குமானால் ப்ளீஸ் தாங்களேன். மொழிபெயர்த்துவிட்டு தந்துவிடுகிறேன்.

31.1.12

செம்பையும் ஏசுதாஸும்.

I
இது மிகவும் அபூர்வமான ஓர் ஒலிப்பதிவு.

ஏசுதாஸின் ஆதார குருவான 1974ல் மறைந்த செம்பை வைத்யநாத பாகவதர் தன் சீடனின் 33வது பிறந்தநாளுக்காகத் தன் 78ஆவது வயதில் அவருடன் சேர்ந்து 1973ல் கொடுத்த கச்சேரி. எத்தனை அபூர்வமான பெரும் நேர்மையான குரு-சீட உறவின் சாட்சி இது?

ஏசுதாஸுடன் சேர்ந்து பாட ஆரம்பிக்குமுன் இந்த அறிவிப்பைக் கேளுங்கள்.

"இன்றைக்கு நம்முடைய தாஸின் 33வது பிறந்தநாள். அது சம்பந்தமாகத்தான் இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற கச்சேரி. அதன் விசேஷமாக இந்த வயலினை தாஸுக்குப் பரிசளிக்கிறேன். நிறைய கர்நாடக இசை பாடவேண்டும் என்கிற ஆசையில் இதை அவருக்குப் பரிசளிக்கிறேன். இந்த வயலினை ஏற்பாடு செய்தது நம்முடைய டி.வி.கோபாலக்ருஷ்ணன்” என்று சொல்லிவிட்டு சிறிது தணிந்த குரலில் இன்னொன்றும் சொல்லவேண்டும் என்று முணுமுணுத்தபடியே மிருதங்கத்தின் லயப் பரிசோதனை முடிந்தபின் “ரெடியா? தயவு செய்து சினிமாப் பாட்டு பாடவெண்டும் என்று கேட்கவேண்டாம். கடைசியில் உங்கள் விருப்பப்படி அவரைச் சில பாடல்கள் பாடச் சொல்கிறேன். அதுவரைக்கும் பொறுமையாய்க் கச்சேரியைக் கேளுங்கள்” என்று அவருக்கே உரித்தான வெளிப்படைத் தன்மையோடும் நகைச்சுவையோடும் அறிவித்து விட்டு ஏசுதாஸுடன் இணைந்து இந்தக் கச்சேரியைச் செய்தார்.

கச்சேரிக்கு மிருதங்கம் வாசித்தது டி.வி.கோபாலக்ருஷ்ணன்.

1973ல் கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் ப்ரபலமாகிவிட்டிருந்தார் ஏசுதாஸ். மலையாளத்திலும் தமிழிலும் பல விருதுகள் சோட்டி ஸி பாத் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் என்றிருந்த காலகட்டம். அப்போதும் செம்பையுடன் அவர் கொண்டிருந்த மதிப்பும் ஏசுதாஸிடம் செம்பைக்கு இருந்த அன்பும் ஒப்பிடமுடியாதவை.

எத்தனை நினைவுகளையும் பண்புகளையும் ஒரே வரிசையில் காட்டும் நினைவலை இது? மனம் நிறைவால் தளும்புகிறது.

II

இன்று முதல் ப்ளாக்கரில் உள்ள அனைத்து URL முகவரிகளிலும் ஓரெழுத்து குறைந்திருக்கிறது. இனி .காம் இன்று முதல் .இன் என அறியப்படும்.ஆனாலும் .காம் முகவரியில் தட்டச்சினால் அது தானாகவே .இன்னுக்கு எடுத்துச் சென்றுவிடும். இனி உங்கள் முகவரி என்ன என்கிற கேள்விக்கு என்னைப் போல் sundargprakash.blogspot.in என்று சொல்லாமல் அவரவர்கள் முகவரியை காம் நீக்கி இன் சேர்த்துக் கொடுக்கவும். 

5.1.12

ரெங்கப்பிள்ளையும் போதையும்

நான் பாண்டிச்சேரி வாசி என்று பெருமைப்பட்டுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.

1. மணக்குள விநாயகர்
2. மஹாகவி பாரதி.
3. அரவிந்தர்
4. அற்புதமான கவிதை எழுத வைக்கும் கடற்கரை
5. மேன்மையும் கண்ணியமும் நிறைந்த ஃப்ரென்ச் கலாச்சாரம்
6. தெருவெங்கும் நிழல் விரிக்கும் மரங்கள்
7. எதிர்காலத்தில் தன் நாட்குறிப்புக்கள் எப்படியெல்லாம் சிலாகிக்கப் படப்போகிறது என்று அறியாமலே 25 வருடங்கள் எழுதித் தள்ளிய ஆனந்த ரெங்கப்பிள்ளை.

மேலேயுள்ள வரிசையில் ஏழாவதாய் வரும் ஆனந்த ரெங்கப்பிள்ளையைப் பற்றித்தான் இந்த இடுகை. 

ரெங்கப்பிள்ளையின் நினைவாக ஒரு வீதியே ரங்கப் பிள்ளை வீதியென அழைக்கப் படுகிறது. அன்றைய ஃப்ரென்ச் அரசின் ஆளுநராக இருந்த ஜோஸஃப் ஃப்ரான்க்வா தூப்ளேவுக்கு துபாஷியாகப் பணியாற்றிய ரெங்கப் பிள்ளை பிறந்தது மார்ச் 30,1706ல் சென்னை பெரம்பூரில். 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த வணிகரான பிள்ளை இந்திய சரித்திரத்தில் மறக்க முடியாதவர்.
அவரின் நாட்குறிப்புக்களில் அன்றைய அரசியல் சமூகம் பொருளாதாரம் மக்களின் குணாதிசயங்கள் ஆள்பவர்களின் மனநிலை போன்ற பலவிஷயங்களை மிகவும் சுவாரஸ்யமான தமிழில் அறியமுடிகிறது. அப்படியே ஒவ்வொரு பக்கமாய்த் திருப்பி நகரும்போது கண்ணில் பட்ட ஃப்ரென்ச் அரசின் ஓர் ஆணையை படித்ததும் மனம் அன்றைக்கும் இன்றைக்குமாய் அலைபாய்ந்த்து.

பாண்டிச்சேரியையும் அதன் ஆன்மாவையும் அறியாதவர்களும், அறிய விரும்பாதவர்களும் அடையாளப் படுத்திக்கொள்ளும் முதல் விஷயம் மலிவான விலை போதைதான். 

எப்படி அதிகாலையிலேயே காஃபியும் தேநீரும் குடிப்பது போல இளநீரை விரும்பிக் குடிக்கும் பாண்டிச்சேரி மக்கள் நினைவுக்கு வருகிறார்களோ அதுபோல பொழுது விடிந்ததுமே சரக்கில்லாமல் எதுவும் ஆகாது எனும் அடித்தட்டு மக்களும் அவர்களைக் குடிக்க வைத்தே பிழைக்கும் ஆட்சியாளர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

கள்ளுக்கடை வாசல்களிலும் தென்னந்தோப்புக்களிலும் அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டு கையிலுள்ள கடியாரம் மோதிரம் முதல் தன் சட்டைப் பையிலுள்ள பணம் வரைக்கும் என்ன களவு போனாலும் ப்ரக்ஞையின்றி குப்புறக் கிடக்கும் குடிமகன்கள் ஒரு வகை என்றால்- 

வெளியூர்களிலிருந்து குடிப்பதற்காக மட்டுமே வருகை தந்து முட்ட முட்டக் குடித்து விட்டு சாலைகளில் எட்டுப் போட்டுக்கொண்டே போகுமிடம் தெரியாது செக்குமாடு போலச் சுற்றிவருபவர்கள் இன்னொரு வகை என்றால்- 

பேருந்துகளில் பக்கத்திலிருக்கும் பயணி தன் மித மிஞ்சிய குடியால் எந்த நிமிடம் வாந்தியெடுத்து தன்னை நாசப்படுத்திவிடுவாரோ என்ற பயத்தோடு இருக்கையைக் காலி செய்து இடம்மாறி விடும் அப்பிராணிப் பயணிகள் மற்றொரு வகை.

இதிகாசங்களின் சோம பானங்களில் தொடங்கி கள்ளுண்ணாமை பற்றிச் சொன்ன வள்ளுவரைக் கடந்து காலம் காலமாக மனிதனின் வாழ்வை நிழல் போலத் தொடரும் இந்த மதுவர்க்கங்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. 

களி, கவ்வை, நரவு, ஈழம், பானம்,பனாட்டு, தாளயம், தோப்பீ, மது, நாற்றம் இவற்றில் சில.  தேனிலிருந்து தயாரிக்கப்படும் கள்ளிற்கு மாதவம்- வெந்நெல்லிலிருந்து தயாரிக்கும் கள்ளிற்குத் தொண்டி- தென்னங்கள்ளிற்குக் குங்கு- பூக்களிலிருந்து பெறப்படும் கள்ளிற்கு மது, மதுகம், தேரல்- கல்கண்டியிலிருந்து தயாரிக்கப் படும் கள்ளிற்குக் கெடம் என்றும் பெயர்கள் எக்கச் சக்கமாக இருக்கின்றன.  

அதேபோல் சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் பிராந்தி சாராயம், லிக்கர் சாராயம், பத்தாயி சாராயம், கொழும்பு சாராயம், கோவை சாராயம், பட்டை சாராயம், சுளுக்குச் சாராயம் என்றெல்லாம் பல வகையான சாராயங்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.  
இது இப்படியிருக்க சுமார் 270 வருடங்களுக்கு முன்னால் அப்போது பாண்டிச்சேரியை ஆண்ட, உலகிலேயே உயர்ரக மதுவகைகளின் தயாரிப்புக்களுக்குப் பெயர் பெற்ற ஃப்ரென்ச்சுக்காரர்களால் ஆளப்பட்ட அரசால் 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஒரு ஆணையைப் பார்ப்போம்.

"லாகரி வஸ்த்துவாகிய பலவித சாராய வகைகள் கோடைக் காலமாகிய உஷ்ண காலத்திலே வாய்கட்டாமல் மிகுதியாக குடிக்கிறவர்களுக்கு மிகுதியாக வியாதி சம்பவிக்கிற படியால் இந்த அவசரமான வேலையில் எங்களால் ஆன மட்டும் விலக்கினோம். நிற்க. உத்தாரமாக கட்டளையிட்டதாவது.
எந்த சாதியில் எப்பேர்பட்டவராயிலும் மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரையிலும் பிராந்தி சாராயங்கள் விற்றாலும், விற்பித்தாலும் கொஞ்சமானாலும், ரொம்பவானாலும் பின்னை எந்த மார்க்கத்திலேயாவது வழக்கம் பண்ணி இந்த உத்தாரத்தை மீறி நடந்தவர்கள் ஆயிரம் வராகன் அபராதமும் ஒரு வருஷம் காவலிலே கிடக்கிறது".

ரெங்கப்பிள்ளையின் மொழி புரியவில்லை என்று சொல்பவர்களுக்காக இந்த மொழிபெயர்ப்பு- 
கோடைப் பருவத்தில் மது அருந்துபவர்களுக்குப் பல வியாதிகள் வருகின்றன. குடிகாரர்களின் உடல்நலனைக் கருதி மார்ச் முதல் செப்டெம்பர் வரை மதுவகைகளைத் தயாரிக்கக் கூடாது. விற்கவும் கூடாது. பிறர் மூலமாக விற்பனையும் கூடாது. தவறினால் ரூ.15 லட்சம் (1500 வராகன்) அபராதமும் ஓராண்டு சிறையும் விதிக்கப்படும். 

இந்த ஆணை ஃப்ரென்ச்சிலும், தமிழிலும் வெளியிடப்பட்டது. ஒரு வெள்ளைக்காரர் குதிரையில் ஏறி ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஃபிரென்ச்சில் படித்தார். அவருக்குப் பின் வந்த ஒரு கணக்குபிள்ளை அதைத் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த ஆணை பாண்டிச்சேரி முழுவதும் தண்டோரா போடப்பட்டு ப்ரகடனப் படுத்தப்பட்டது.

இவ்விதம் அபராதமாய்ப் பெறப்பட்ட பணத்தில் ஒரு பங்கை பிச்சைக்காரர்களின் மேம்பாட்டுக்குப் பயன் படுத்தியிருக்கிறார்கள். சாராய விற்பனையிலோ கொள்முதலிலோ தயாரிப்பிலோ ஒருவன் எந்தவிதமாய் ஈடுபட்டிருந்தாலும் அவர்களைச் சாவடியில் கட்டிவைத்து அடித்து வலது தோளில் முத்திரை குத்தி அனுப்பிவிடுவார்கள். இது சாராயம் குடிப்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால் கள் இறக்குபவர்கள் மட்டும் அதை உணவுப்பண்டங்கள் கெடாமல் இருக்க உதவும் காடியாக்கி விற்றுக் கொள்ளலாம். 

ஒருவேளை முன்பே தங்கள் வீட்டில் சாராயம் சேர்த்து வைத்திருந்தவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப் படக் கூடாது என்பதையும் யோசித்து அவர்களுக்குக் கால அவகாசமாக மூன்று நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தக் கெடுவுக்குள் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் தங்களிடம் மீதமிருக்கும் இருப்பைக் கூறி ஒப்புதல் பெறவேண்டும். அப்படி பெறத்தவறினால் அவர்களிடமிருந்த சாராயம் முழுவதும் பறிக்கப்படும். 

ஒரு ஆணையை வெறும் ஏட்டுச்சுரைக்காயாய் விட்டுவைக்காமல் மிகக் கடுமையான கண்டிப்புடன் அதைச் செயல் படுத்திய ஃப்ரென்ச் அரசாங்கத்தையும் இன்றைய ஆளும் அரசாங்கத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏனோ இலுப்பைப் பூவின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

3.1.12

வெண்பன்றி எழுப்பிய கோயில்

ராசிபுரம் போயிருந்தேன். ஆனால் கல்வெட்டுக்கள் ராஜபுரம் என்று சொல்கின்றன. அற்புதமான புராதன சிவாலயம் என்னை அழைத்தது. உள்ளே செல்லும்போது உச்சிக்கால பூஜைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. 

கைலாசநாதரையும் அம்மையையும் வணங்கிவிட்டு வெளிப்ப்ரஹாரத்தில் அமைந்திருந்த காலபைரவர்-தக்ஷிணாமூர்த்தி-சண்டிகேச்வரர் சன்னதிகளை வணங்கித் திரும்பும் போது பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தின் அடியில் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி-கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான- வல்வில் ஓரியின் சிலை அமைந்திருக்க, தொன்மங்களைத் தேடியலையும் என் பசி பெருகியது.

வல்வில் ஓரி கொல்லிமலையைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான ஓரி சிறந்த சிவபக்தன். ஒரு சமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தபோது வனத்தில் நீண்டநேரமாகத் தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணில் அகப்படவில்லை.

களைத்துப்போன ஓரி ஓரிடத்தில் வெண்பன்றி ஒன்று செல்வதைக் கண்டான். உடனே குறி பார்த்து பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றிஅங்கிருந்து நீண்டதூரம் ஓடி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. பன்றியைப் பின்தொட்ர்ந்த மன்னன் புதரை விலக்கியபோது அங்கே ஒரு சுயம்புலிங்கத்தைக் கண்டான்.

லிங்கத்தின் நெற்றியில் தான் எய்த அம்பு தாக்கி ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு கலங்கிய ஓரி தன் தவறை உணர்ந்து சிவபெருமானை வணங்கினான். சிவபெருமானும் அவனுக்குத் தன் சுயரூபம் காட்டித் தானே பன்றியாக வந்ததை உணர்வித்தார். அதன்பின் ஓரி இவ்விடத்தில் கோயில் எழுப்பினான்.

ஓரியின் விலவன்மை புறநானூற்றில் புகழ்ந்து பாடப்பட்டிருக்கிறது. அப்பாடல் குறிக்கும் வில்வன்மை கோயில் கோபுரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்த உடனேயே கோபுரத்தின் பின்புறத்தில் ஒரே அம்பால் ஐந்து மிருகங்களைக் கொன்ற காட்சியைக் காணும் போது இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னே நகர முடிகிறது. 

கைலாசநாதர் மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாக காட்சி தர இப்போதும் இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. சிவராத்திரியின்போது இறைவனுக்கு 4 கால பூஜைகள்தான் நடக்கும். ஆனால் இத் தலத்தில் ஆறு கால பூஜைகள் செய்யப் படுகின்றன. 

அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனி சன்னதியில் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறாள். இவளது சன்னதியில் பௌர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கிறது. இவளுக்கு முன்புறம் மகாமேரு உள்ளது. 

ப்ரஹார வலத்தைத் துவங்கும்போது முதலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில் ராமேஸ்வரர்,பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

நெல்லி ஸ்தல விருட்சம். கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர், எதிரே நந்தியுடன் காட்சி தருவது தனிச்சிறப்பு. இவரை வணங்கிவிட்டே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.  துர்க்கையின் சன்னதியில் அம்மனுக்கு ஆடிக் கடைசி வெள்ளியின்போது சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள ராஜகோபுரம் 5 நிலைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விஸ்வநாதர் சன்னதி விமானம், காசியைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கிறது. ப்ரஹாரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட தூண்களில் சிற்ப அழகும் இசையொலி எழுப்பும் குடைவு வேலைப்பாடுடைய தன்மையும் நம்மை பிரமிக்க வைக்கிறது. 

அம்பாள் சன்னதி அருகில் முருகன் பால தண்டாயுதபாணியாகவும், வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்ரமண்யராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறார். இவ்வாறு ஒரே சமயத்தில் முருகனின் இரண்டு கோலங்களையும் இங்கு காணலாம். அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகனுக்கு மாசிமகத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

ப்ரஹாரத்தில் இருக்கும் கங்கை தீர்த்தத்தின் மூலம் யாருக்கும் தெரியாத தானாய்த் தோன்றிய அபூர்வம். சிவஅம்சமான வீரபத்திரருக்கும் சன்னதி இருக்கிறது. இவருக்கு எதிரே நந்தி உள்ளது. அருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட சகடவிநாயகர் கையில் ருத்ராட்ச மாலையுடன் பார்க்க அத்தனை அழகு.
தக்ஷிணாமூர்த்திக்கென்று தனியே உற்சவர் இருக்கிறார்.இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று இவர், தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார்.  காலபைரவர், சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, “ஏகாதச ருத்ரபாராயணம்” நடக்கிறது. 63நாயன்மார்களுக்கும் குருபூஜை உண்டு. நாகர் சன்னதியும் உள்ளது. 

ஆடிப்பெருக்கன்று வல்வில் ஓரிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றன. கோயில் கட்டிய மன்னருக்காக இவ்வாறு விசேஷ வழிபாடு நடத்தப்படுவது சிறப்பு. சித்திரையில் பிரம்மோத்ஸவம், வைகாசி விசாகம்,தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடக்கின்றன.  
இத் தகவல்களையெல்லாம் சேகரித்து முடித்த பின் ஓரி நடமாடிய இடத்தின் காலத்தின் சுவடுகளைத் தேடியபடியே மூடப்பட இருந்த நுழைவாயில் கதவுகளைத் துறந்து வெளியேறினேன்.
என்ன எங்கே எப்படி எனும் கேள்விகளை எழுப்புபவர்களுக்காக இந்தக் கடைசிப் பத்தி.
காலை 6 மணி-12 மணி வரை, மாலை 4.30மணி-இரவு 8.30 மணி வரை திறந்திருக்கிறது நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

15.12.11

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும் - II

எனது 24 குருமார்கள்.
====================
முன்னொரு காலத்தில் யது என்னும் பெயர் கொண்ட அரசன், பிறந்த மேனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த யௌவனரான ஒரு துறவியிடம்,

”மனிதர்கள் பெரும்பாலும் நீண்ட ஆயுள், புகழ் பாராட்டு, செல்வம் ஆகியவற்றை அடையவே அறம், பொருள், இன்பம், வீடென்ற சக்கரத்துள் அழுந்தியிருக்கிறார்கள். சதா காமம், லோபம் என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீரோ அவைகளால் தீண்டப்படாமல், கங்கையில் மூழ்கிக் களிக்கும் யானையைப் போல - இப்படி ஆனந்தமாய்த் திரிகிறீரே? உமக்கென்று எந்தச் செயலுமின்றி இருக்க எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டான்.

 ”என் புத்தியில் புகுந்து குருவாய் விளங்குபவர்கள் எனக்குப் பலர் இருக்கிறார்கள். அந்த ஆச்சாரியர்களிடமிருந்து நான் பெற்ற போதனையால் நான் முக்தனாகச் சஞ்சரிக்கிறேன். என்றபோதும் நான் போதனை பெற்ற 24 குருமார்களைப் பற்றிக் கூறுகிறேன். கேளும்.

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேகரிக்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தொடுப்பவன், பாம்பு, சிலந்தி, குளவி ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.

1.
மற்றவர்களால் எத்தனை துன்புறுத்தப் பட்டாலும் எல்லாம் ப்ராரப்த கர்மாவின் படியே நடப்பதாய் எண்ணி, தன் மீது பள்ளம் தோண்டினாலும், உழுதாலும், எரித்தாலும் பொறுமையோடு ஏற்பதுடன், எல்லா உயிர்களும் வாழத் தேவையான சூழ்நிலைக்கும் உதவியாய் இருக்கும் இந்த பூமியிடமிருந்து பொறுமை, எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்கு உதவும் அன்பு, சகிப்பு இவற்றைக் கற்றேன். மலைகளோடும் நதிகளோடும் மரங்களும் இதன் சீடர்கள். இவற்றை எனக்குப் போதித்த பூமியே எனது முதல் குரு.

2.
தூய்மையும் மணமும் அற்றது காற்று. மணம் நிறைந்த பொருட்களின் மீதும், துர்நாற்றம் வீசும் பொருட்களின் மீதும் எந்தப் பாரபட்சமும் இன்றி வீசிக் கடப்பதைப் போல, இன்பம் துன்ப்ம் துவங்கி, வாழ்க்கையின் எல்லா எதிரெதிர் நிலைகளின் குண தோஷங்களால் பீடிக்கப்படாமல், பற்றின்றி எதிர்கொள்ளும் பக்குவத்தைக் காற்றிடம் கற்றேன். காற்றே என் இரண்டாவது குரு.

3.
காற்றினால் அலைக்கழிக்கப்படும் மேகங்கள் ஆகாயத்தில்தான் இருக்கின்றன. அசைபவை, நிலைத்திருப்பவை அனைத்திலும் மறைந்தும், பிளவுபடாமலும், பற்றில்லாமலும், எங்கும் வியாபித்தும் இருக்கும் நிர்மலமான ஆகாயம், எங்கும் நிறைந்த ஆன்மாவுடன் உள்ள ஒற்றுமையை போதிப்பதால் ஆகாயம் அல்லது வெளி- என் மூன்றாவது குரு.

4.
தெளிவானதும், மனநிறைவு அளிப்பதும், எல்லாவற்றையும் தூய்மையாக்கும் நீரே என் நான்காவது குரு. பார்வை மற்றும் உபதேசங்களால் மக்களைத் தூய்மைப்படுத்தும் ஞானி ‘நீரின் நண்பன்’ என அழைக்கப்படுகிறார்.

5.
நெருப்பு சில இடங்களில் மறைந்தும், சில இடங்களில் வெளிப்படுத்தியும் கொள்கிறது. தன்னில் இடப்பட்டவற்றின் நன்மை, தீமை பேதமின்றி எதையும் எரித்துச் சாம்பலாக்குகிறது. பிறருக்காக அனைத்தையும் ஏற்கும் சுடரும் நெருப்பே என் ஐந்தாவது குரு. 

6.
பிறப்பிலிருந்து மரிப்பு வரை உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன. அதற்கும் ஆன்மாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேய்வதும், பின் வளர்வதும் காட்டி இல்லாமையிலிருந்து இருப்பை உணர்த்தும் சந்திரனே என் ஆறாவது குரு.

7.
சூரியன் தன் கதிர்களால் நீரை உறிஞ்சி மழையாய்ப் பொழிவிக்கிறான். ஆனால் உறிஞ்சும் நீருடனும், பொழியும் நீருடனும் உறவை உண்டாக்கிக் கொள்வதில்லை. பெறுவதிலும், கொடுப்பதிலும் ஞானிக்குப் பற்றிருக்கக் கூடாது. பல இடங்களில், பல நாடுகளில் உதிப்பதாய்த் தோன்றினாலும் உதிப்பது ஒரே சூரியனே. உடல்களால் பலவாக இருந்தாலும் ஆன்மா ஒன்றே என உணர்த்திய சூரியனே என் ஏழாவது குரு.

8.
வேடன் ஒருவன் வலை விரித்துப் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இவற்றைக் கண்ட ஆண் புறா தானும் வலையில் சென்று சிக்கிகொண்டது. குடும்ப வாழ்க்கை நடத்தும் மனிதன் மன அமைதி இழந்து, நிலையற்ற சிந்தனைகளோடு அவர்களைப் பராமரித்துக் கொண்டு குடும்பத்திலேயே கட்டுண்டு அழிகிறான். அளவுக்கு மீறிய பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்த்திய புறாவே என் எட்டாவது குரு.

9.
எங்கும் அலையாமல் பெரியதோ, சிறியதோ சுவை மிக்கதோ, அற்றதோ, கிடைத்தாலோ கிடைக்காது போனாலோ கவலையற்று, தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். ஆக மலைப்பாம்பே என் ஒன்பதாவது குரு.

10.
கடலில் நதிகள் கலப்பதால் கடல் தன் கரையைக் கடப்பதிலை. கலக்காவிடில் வற்றுவதுமில்லை. அதுபோல ஒரு ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறினால் வருத்தமோ, இல்லாதுபோனால் துயரமோ அடையமாட்டார். மேலும் ஒரு ஞானி கடலைப்போல ஆரவாரத்துடனும், கம்பீரத்துடனும், ஆழங்காண இயலாதவராயும், கடக்க இயலாதவராகவும் கலக்கமுடியாதவ்ராகவும் விளங்க மாதிரியாய் விளங்கும் கடலே என் பத்தாவது குரு.

11.
புலன்களை வெல்லாதவன் தீயில் வீழும் விட்டிலைப் போன்றவன். மாயையால் உண்டாக்கப்பட்ட பெண், பொன், ஆபரணம், ஆடை ஆகியவற்றால் வசீகரிக்கப்படும் அஞ்ஞானி அறிவைத் தொலைத்து அவற்றிலேயே மூழ்கி விட்டிலைப் போல அழிகிறான் என்று போதனையைத் தூண்டிய விட்டில் பூச்சி என் பதினொன்றாவது குரு.

12.
எல்லா மலர்களிடமிருந்தும் சிறிது தேனை நுகரும் தேனீ, எல்லோரிடமும் சிறிதளவு உணவைப் பெற்று சரீரத்தைக் காப்பது குறித்தும், பலவிதமான சாஸ்திரங்களிலிருந்தும் அதன் சாரமான தத்துவத்தை மட்டும் கிரஹித்து வீண் தர்க்கங்களைத் தவிர்க்க அறிவுறுத்தியது. பிச்சை ஏற்கும் கைகளே கலம். வயிறே அதனை வைக்கும் இடம். அடுத்த வேளைக்கென உணவைச் சேமித்தால் தேனைச் சேகரித்து கூட்டுடன் அழியும் தேனீயின் நிலைதான் உண்டாகும். இதனால் தேனீ என் பன்னிரெண்டாவது குரு.

13.
வேடன் அமைத்த குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்து மோகம் கொண்ட ஆண் யானையும் குழியில் வீழ்ந்தது. துறவியானவன் மரத்திலான பெண்ணைக் காலினால் கூடத் தொடக்கூடாது என்பதை உணர்ந்தேன். யானை என் பதிமூன்றாவது குரு.

14.
தேனீக்கள் பல நாட்களாகத் தேனைச் சேகரிகின்றன. கூட்டினைக் கலைத்து கவர்ந்து செல்கிறான் வேடன். கருமி சேகரித்து வைக்கும் பொருட்களும் மரணத்துக்குப் பின் இன்னொருவனால் அனுபவிக்கப்படுகின்றன. தேன் சேகரிக்கும் வேடனே என் பதினான்காம் குரு.

15.
மானைப் பிடிப்பதற்கு முன்னால் அதைத் தூண்ட வலை விரிக்கும் வேடன் இசைக்கும் இசைக்கு ஆபத்தையும் சூழ்நிலையையும் அறியாமல் கண்ணை மறைக்கும் ஆசையுடன் துள்ளிக்குதித்து வேடனிடம் சிக்கிக்கொண்டது மான்.[மானின் வயிற்றில் பிறந்த ரிஷ்யசிருங்கர் பெண்களின் ஆட்டம் பாட்டங்களில் சிக்கி அவர்களின் கைப்பாவை ஆனார்] துறவி உலகின்பமூட்டும் இசைக்கு அடிமையாகக் கூடாது. ஆக, மான் என் பதினைந்தாம் குரு.

16.
தூண்டில் புழுவைச் சுவைக்க ஆசை கொண்டு மாட்டிக்கொண்ட மீனே வாயைக் கட்டுப்படுத்தும் உபாயத்தைக் கற்றுக்கொடுத்தது. உணவின் மீதான ஆசையை வென்றவர்கள் புலன்களை எளிதில் கடப்பார்கள் எனும் பாடத்தை உணர்த்திய மீனே என் பதினாறாம் குரு.

17.
பிங்களா என்ற தாசி நன்கு தன்னை அலங்கரித்துக் கொண்டு வருவதாய்ச் சொல்லியிருந்த வாடிக்கையாளனுக்குக் காத்திருந்தாள். நெடுநேரம் கடந்தும் அவன் வராது போகவே அவளுக்குள் வைராக்கியம் உதித்தது. தன்னையே அளிக்கும் இறைவனை விட்டு நாளை அழிய இருக்கும் நரர்களிடம் ஆசை வைத்தேனே என வருந்தி ஆண்கள் மீது வைத்த ஆசையைத் துறந்து தெளிவடைந்தாள். பெருவிருப்பம்,பெருந்துக்கம்; விருப்பமின்மை பரம சுகம் என்பதைப் புரிந்துகொண்டேன். அவளே என் பதினேழாவது குரு.

18.
தன் வாயில் அபூர்வமான ஒரு இறைச்சித் துண்டைக் கவ்விச்சென்ற ஒரு குர்ரப் பறவையை எல்லாப் பறவைகளும் துரத்தித் துன்புறுத்தின. காரணம் புரிந்து வாயிலிருந்து அத்துண்டை விடுவித்தவுட்ன் அதன் துன்பம் நீங்கியது. அவசியமில்லாத, அளவுக்கு மிகுதியானவற்றைச் சுமந்து அலைவது துன்பம் என குர்ரப் பறவை கற்றுக் கொடுத்து என் பதினெட்டாவது குருவானது.

19.
மான அவமான பேதமற்ற, வீடு மக்கள் குறித்த கவலையற்றவர்கள் பாலகர்களே. பரமானந்தத்தில் மூழ்கியோர் இருவரே. ஒருவர் சூதுவாது அறியாக் குழந்தை; மற்றொருவர் குணங்களை எல்லாம் கடந்த ஞானி. தாயிடம் பாலருந்தும் மழலையே என் பத்தொன்பதாம் குரு.

20.
வீட்டில் யாருமில்லை. திடீரென வந்த உறவினர்களுக்கு உணவு தயாரிக்க குமரிப்பெண் ஒருத்தி கை நிரம்ப வளையல்களுடன் உரலில் நெல்லைக் குத்துகிறாள். அவள் நெல் குத்துவதை வளையல்கள் ஒலி எழுப்பிக் காட்டிக் கொடுக்கின்றன. அதைக் கண்டு வெட்கமுற்று இரு வளையல்களை மட்டும் அணிந்து தொடர்கிறாள். இப்போதும் அவை ஒலி எழுப்பவே ஒற்றை வளையல் அணிந்து ஒலியை முடக்குகிறாள். இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் கூட தேவையற்ற விவாதம், கலகம் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். அவளே என் இருபதாம் குரு.

21.
அம்புடன் இலக்கை நோக்கிக் குறி வைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். பரிவாரங்களுடன் கடந்துபோன அரசனைக் கூட கவனியாது தன் இலக்கில் தீவிரமான கவனத்தைச் செலுத்தியபடி இருந்த அவன், சஞ்சலமில்லாது மனதை ஒரே இலக்கில் செலுத்தும் வைராக்கியத்தையும், பயிற்சியையும் எனக்கு அறிவுறுத்தினான். அவனே என் இருபத்தியொன்றாவது குரு.

22.
தனக்கென்று இருப்பிடத்தைப் பாம்பு உருவாக்கிக் கொள்ளாது  கரையான் உருவாக்கிய புற்றில் உறைகிறது. சிறிது காலமே வசிக்க இருக்கும் இந்த உடலுக்கு பெரிய வீட்டைத் திட்டமிடுவது துக்கத்தின் தொடக்கம். துறவிக்கு வானமே குடிசையாய் வாழும் போதனையைக் கற்றுக் கொடுத்த பாம்பே என் இருபத்தியிரண்டாம் குரு.

23.
சிலந்தி தன் வாயிலிருந்து உற்பத்தியாகும் இழையில் நெய்யப்பட்ட வலையைத் தன தேவை பூர்த்தியானவுடன் மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக்கொள்கிறது. ஈசனும் தன்னிலிருந்து இவ்வுலகை வெளிக்கொண்டு தன விருப்பப்படி லீலைகளை முடித்துக்கொண்டு யுக முடிவில் மீண்டும் தனக்குள்ளே இழுத்துக்கொள்கிறார். இதை போதித்த சிலந்தியே என் இருபத்திமூன்றாவது குரு.

24.
புழுவானது வண்டின் கூட்டில் புகுத்தப்பட்ட நாளிலிருந்து சதா வண்டையே நினைத்து நினைத்து இறுதியில் குளவியாய் மாறிவிடுகிறது. உடல் எடுத்தவன் மனத்தால் எதை எதைப் பற்றி - அன்பினாலோ, வெறுப்பினாலோ, அச்சத்தினாலோ - சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ, அத்தோற்றத்தையே அடைகிறான்.  இறைவனையே தியானிக்கும் பக்தன் அதேபோல ஜீவன் முக்தனாகிறான் எனப் புரிய வைத்த குளவி என் இருபத்திநான்காம் குரு.

ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தில் ஏழு, எட்டு, ஒன்பதாவது அத்யாயமாக அமைந்திருக்கும் அவதூத கீதை, உத்தவ கீதையின் ஒரு அங்கமாகவும் கருதப்படுகிறது.  

குருமார்கள் இருபத்தி நான்மர் மட்டுமல்ல; நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு ஞானத்தை போதிக்கும் குருமார்கள் என்பதுதான் மைய போதனை. 

உதிர்ந்துகொண்டிருக்கும் இறுதி நொடி வரை நாம் கற்க இருக்கிறோம் என்றுணராது, கல்வியென்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் என்றும் நம்மை விட அடையாளத்திலும் தகுதியிலும் குறைந்தவர்களிடம் கற்க மறுக்கும் அகந்தையும் உள்ள நமக்காக உருவாக்கிக் கொடுத்த போதனைகள்தான் இவை.

மேற்கத்திய சிந்தனையும், அறிவின்பாற் பட்டு சிந்திக்கும் வழக்கமும் பல தருணங்களில் நம் நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முரணாக இருந்திருக்கிறது.மேலை நாடுகளிலிருந்து பலதரப்பட்ட அறிஞர்கள் இங்கு வந்து நம் செல்வங்களையும் சிந்தனைகளின் ஆழத்தையும் பார்த்து வியந்து பாராட்டிக்கொண்டிருக்க நாம் நம் வேர்களை வெட்கமின்றி இழந்துகொண்டிருக்கிறோம்.

தத்தாத்ரேயர் குறித்து அறிய ஏராளமான புத்தகங்களும் தகவல்களும் இருக்கின்றன. அவற்றில் முத்தாய்ப்பாக பண்டிட் ராஜ்மணி டிகுநைத் (Pandit Rajmani Tigunait) எழுதியுள்ள ”The Himalayan Masters” புத்தகத்திலிருந்து இரு பத்திகள்:

[The ashram of Sage Dattatreya’s parents, known as Ansuya in Chitrakut, is still nestled in the beautiful Vindhya Range of the central Indian mountains. A steep mountain towers over the back of the ashram and the serene streams of the Mandakini River issue from a nearby cave. In the air is a pervasive sense of tranquility.

The fish leap from the water to take puffed rice from the hands of pilgrims. Monkeys come from the forest, greet visitors, and share their food like old friends. Your intellect may insist that they do it out of habit or to get food. But listen to nature and you will hear a silent voice: “Do not pollute the spirit cultivated by sages with your cold intellectualism.”]

மத்திய இந்திய மலைப்ரதேசங்களில் அழகான விந்திய மலைச்சாரலில் சித்ரகூடத்தில் தத்த முனியின் பெற்றோர்கள் தங்கியிருந்த ஆஸ்ரமம் அனுசுயா என்ற பெயரில் இன்னமும் இருக்கிறது.  அருகில் இருக்கும் குகையில் இருந்து பாயும் மந்தாகினி நதியின் அற்புதமான தீரத்தில் நெடிதுயர்ந்த மலைகளின் பின்னணியில் ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது. வீசும் காற்றில் தான் எத்தனை ஏகாந்தமான ஒரு அமைதி?

யாத்ரிகர்களின் கையிலுள்ள பொரியை உண்ண நீரிலிருந்து எம்பிக் குதிக்கின்றன மீன்கள். காடுகளிலிருந்து வெளியே வந்து வரவேற்று ஏதோ அவர்களின் நீண்ட நாள் நண்பர்கள் போல உணவைப் பகிர்ந்துகொள்கின்றன குரங்குகள். உங்களின் அறிவு அவை பழக்கத்தாலோ உணவுக்காகவோ இப்படி நடந்துகொள்கின்றன என உங்களை வற்புறுத்தலாம். ஆனால் ஏகாந்தமான அந்த இயற்கையின் நிசப்தமான குரலை உற்றுக்கேட்டீர்களானால்

“யுகாந்திரங்களாய் முனிஸ்ரேஷ்டர்கள் நிர்மாணித்திருக்கும் வாழ்க்கையின் மேன்மைமிக்க அடிநாதத்தை உறைந்துபோன உங்களின் புத்திசாலித்தனத்தால் மாசு படுத்திவிடாதீர்கள்”

எனும் அதன் கோரிக்கை உங்கள் காதுகளைத் தொடக்கூடும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...