30.3.12

ரமேஷ்கல்யாணின் ஒரு சிறந்த கவிதை.

அருவி

நம்பிக்கையின் விளிம்பில் பயணித்தவன்
இந்த நீரூற்றின் மேல் விளிம்பில் நின்றபடி
யோசித்தான்

மலையின் வெடிப்பில் பாய்ந்து
விழுந்துகொண்டிருக்கும் அருவி
எழுந்துகொண்டிருக்கும் திவலை

ஒரு நீரால் எவ்வளவு ஆனந்தமாக
விழ முடிகிறது இவ்வளவு உயரத்திலிருந்து!

கரையின் விளிம்பில் இவ்வளவு ஒட்டில்
முளைத்து வளர்ந்திருக்குமிம் மரத்திற்கு
என்றாவது விழுந்துவிடுவோம்
என்ற பயம் இருக்கிறதா?
அதல பாதாளத்தை எட்டிப்பார்ப்பதுபோல்
தன் கிளைகளை நீட்டி பார்க்கிறது.

கவலைகளைக் கல்லென உருவகித்து
ஒவ்வொன்றாக நீர்ப்பள்ளத்தாக்கில் வீசுகிறான்.
ஒரு சிறு கல்லை எடுத்து
பள்ளத்தாக்கில் போடும் அந்த நொடியில்
இக்கரையிலிருந்து கிளம்பி
மறுகரையின்  முனையிலுள்ள மரத்திற்கு
சாவதானமாக பறந்து செல்கிறதொரு காகம்.

கல் தன் ஆழம் கடந்து நீரில் மூழ்கும் நொடியில்
இந்த காகம் மறுமுனயிலுள்ள மரத்தில் சென்று அமர்கிறது.
இரு பயணங்கள் நீள ஆழ பரிமாணங்களில்.

துயரின் கனங்கள்
துயரின் கணங்கள்
ஒவ்வொரு கல்லாக எடுத்து போட்டுக்கொண்டேயிருக்கிறான்

ஒரு யதேச்சையான நொடியில் பார்க்கிறபோது
ஒரு காகம் மறுமுனைக்கு பறக்கிறது
கற்களெல்லாம் கரையில் மீந்திருக்க.

நேற்று யதேச்சையாய் இந்தக் கவிதையை ரமேஷ்கல்யாணின் மனதோடு எனும் வலைப்பூவில் வாசித்தேன். என்ன அற்புதமான கவிதை? ஒவ்வொரு கல்லாக நீர்ப்பள்ளத்தாக்கில் அவர் வீசவீச ஒவ்வொரு சொல்லும் அனுபவமாக மனதின் ஆழ்பள்ளத்தாக்கில் மூழ்கி மறைகிறது. காகம் கடக்கும் தொலைவுக்கு மனதும் கடந்து செல்ல விழைகிறது. நல்ல கவிதைக்கு இவர் எழுதிய இந்த ஒரு கவிதை போதும்-இவர் இனிக் கவிதைகள் எழுதாது போனாலும்.

நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர்களுக்கு இந்தக் கவிதை நீச்சல்வித்தை தெரிந்தவன் ஓர் ஆழ்கடலில் நீந்தித் திளைக்கும் சாகசத்தைத் தருகிறது. மிகக் கொஞ்சமாக தேர்ந்தெடுத்தாற்போல எழுதும் ரமேஷ்கல்யாணிடம் நான் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறதாய் உணர்கிறேன். 

இவருடைய இன்னொரு வலைப்பூ Prides of Penuparthy.இந்த வலைப்பூ இவரது முன்னோர்களிடம் இவர் பார்த்த பகிர்ந்துகொண்ட கேட்ட அபூர்வமான செய்திகளை மிக நெருக்கமான மொழியில் சிக்கனமாக ஆனால் சுவாரஸ்யமாகச் சொல்கிறது.

இனி நான் போக நினைக்கும் பாதையில் ஏற்கெனவே பன்.இறையின் கவிதைகளைச் சொன்னது போல் ரமேஷ் கல்யாணும் தடம் பதிப்பதாய் உணர்கிறேன். இவர்களைப் போல் நான் கவிதைகள் எழுத ஆசைப்படுகிறேன்.

நல்ல எழுத்தை வாசிக்க நினைப்பவர்கள் தவறவிடக்கூடாத எழுத்து ரமேஷ்கல்யாணுடையது.

வாழ்த்துக்கள் ரமேஷ்கல்யாண்.

26.3.12

அப்பாவின் நாட்குறிப்பு.
எப்போதோ வந்த ஒரு ஆங்கிலப் புத்தாண்டிலிருந்து
அப்பா இந்த நாட்குறிப்புகளை எழுதி வந்திருக்கிறார்.

முதன்முதலில் செய்த சாகசங்கள்-
பிரத்தியேகமாய்த் தயாரிக்கப்பட்ட விருந்துக் குறிப்புகள்-
யாரிடமோ பெற்ற அவமானங்கள்-
தோற்றுப்போன ஒரு கால்ப்பந்தாட்டப் போட்டி-
சைக்கிள் புதிதாய் வாங்கிய செலவுக்கணக்கு.

நிறைவேறாத தீர்மானங்கள்-
அலுவலக அரசியலின் காழ்ப்பு-
பாதியில் அறுந்து போன கனவுகள்-
குடும்பத்தின் சுற்றுலாத் திட்டக் குளறுபடிகள்-
எதிர்பாராத(?) மரணங்களின் தாக்குதலகள்.

எழுத எதுவுமில்லாது போன பக்கங்களில்
பழைய சினிமாப்பாடல்களின் முதல்வரியையும்
அந்தமாதத்து மளிகைசாமான்களின் பட்டியலையும்
எழுதிவைத்திருக்கிறார்.

அம்மாவைப் பற்றியும் என்னைப் பற்றியும்
மனதில் எழுதப்பட்ட குறிப்புகள் எந்தப் பக்கத்திலும் இல்லை.
அவசரநிலைப்பிரகடனமும்
இந்திரா சுடப்பட்டதும் சீக்கியர்கள் அழிக்கப்பட்டதும்
அவரது விமர்சனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது

சில வாரங்கள் எழுதாமல் இருந்து பார்க்கலாம்
என்று இருந்துவிட்டது போலத் தெரிகிறது.
சில வாரங்கள் எழுவதற்குத் தயக்கமூட்டக்கூடிய
மொழிக்குப் பயந்து தவிர்த்திருக்கலாம்.

எழுதாமல் விடப்பட்ட சில பக்கங்கள்
மிகவும் கிளர்ச்சியூட்டுவதாயும்
எட்டமுடியாத நினைவின் சுவர்களைக்
எவ்விப்பார்ப்பதாயும் இருக்கிறது..

நாட்குறிப்பின் மொழி உண்மையானதாக இருக்கவேண்டும்
மற்றவர்களின் நாட்குறிப்புக்குள் அத்துமீறி நுழையக்கூடாது
என்று நாட்குறிப்பு தொடர்பான நிபந்தனைகள்
அச்சமூட்டுபவையாகவே இருக்கின்றன என்பதாலும்
அப்பாவைப் போல நான் நாட்குறிப்புகள் எழுதமுயலவில்லை.

அதிலும் ஒரு ஆதாயம் இருக்கிறது.
அப்பாவின் நாட்குறிப்புகளைப் படித்தபின் கிளர்ந்து
இப்படி ஒரு கவிதைக்கு முயன்றது போல்
அநாவசியமாக
என் மகன் வேறொரு கவிதைக்கு முயலவேண்டியதில்லை.

23.3.12

பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்- ஓர் பார்வை.போன வாரம் தஞ்சாவூரில் எனக்குக் கிடைத்த எதேச்சையான அறிமுகம் பன்.இறை. என் நண்பன் செல்லத்துரை தஞ்சாவூருக்கு சென்றிருந்தபோது ”அவசியம் படி மக்கா. கவிதை நல்லா இருக்கு” என்று சொல்லி "பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்" என்ற தலைப்பிலான இந்த நூலைக் கொடுத்தான்.

முந்தைய நாளின் திட்டமிடப்படாத பேருந்துப் பயணத்தால் உடல் வலி மிகுந்து கண்கள் சோர்வுற்று சிறிது நேரம் தூங்கலாம் என நான் நினைத்தபோதுதான் செல்லத்துரை புத்தகத்தைக் கையில் கொடுத்தான். வேறெந்த வடிவத்தையும் விட எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் கவிதைகளாலான நூல் என்பது கிளர்வூட்டக் கூடியதானது எனக்கு.

சுவற்றில் சாய்ந்தபடியே மெலிதாய் இருந்த அந்நூலின் பக்கங்களில் நுழைந்தேன். எனக்கு மற்றொரு பழக்கம். எடுத்தவுடன் கடைசிக் கவிதையைத்தான் முதலில் படிக்கும் பழக்கம். வழக்கம் கைவிடவில்லை. இம்முறையும் முதன் முறையாக எனும் தலைப்பில் இருந்த கடைசிக் கவிதையை முதலில் வாசித்தேன்.

எனக்கு சட்டென்று க.நா.சு.வை வாசிப்பது போலத் தோன்றியது. அடுத்த நொடி என்னை நானே வாசிப்பது போலவும் உணர்ந்தேன். ஒரு அனுபவத்தை நான் பார்க்க விரும்பும் அதே கோணம் இவருக்கும் சித்தித்திருப்பது எனக்கு அதிசயமாக இருந்தது. இப்படி யோசித்தபடியே ஒவ்வொன்றாக இடுங்கிய கண்களால் வாசித்தபடியே பக்கங்களைக் கடந்தேன். பாதிப் புத்தகத்தை வாசித்துவிட்டேன். அசதி மிகுதியாகவே பாதியோடு நிறுத்திவிட்டு புத்தகத்தைக் கீழே வைத்தபோது பாதியில் கலவியில் இருந்து விலகிச் செல்வது போலவே இருந்தது.

தூங்கி எழுந்தபின் குளித்துமுடித்து மறுபடியும் புத்தகத்தைக் கையில் எடுத்தேன். மொத்தம் 57 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒரு சுகானுபவம்.

இந்தக் கவிதைகள் அச்சு அசல் இந்தியாவின் வேர்களிலிருந்து வந்தவை. தொன்மம் நிறைந்த தடத்தில் பயணிப்பவை. அதே சமயம் மிக நவீனமான மொழியாலும் ஓங்கி ஒலிக்காத குரலாலும் பிரமிப்பூட்டும் உவமைகளாலும் மிகவும் புதியவை.

வீட்டை இரவு நேரத்தில் காலி செய்து கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் தாயின் வலியை ஒரு கவிதை அற்புதமாகப் பதிவு செய்யும் தீராத இரவு நகர்ந்துகொண்டே இருக்கும் இருப்பிடம் அமையப் பெற்ற சோகத்தைச் சொல்லும் அதேபோது அங்கில்லாத அவள் கணவனைச் சொல்லாது உணர்த்துகிறது.

இந்த இரவு நேரத்தில்
கீழ்க் குடியிருப்பைக்
காலி செய்து கொண்டிருக்கிறார்கள்

தனக்கு நேர்ந்த அவமானங்களை
நீரில் அஸ்தியைக் கரைத்துவிடுவது போல
சலசலவென ஓடிக்கொண்டிருக்கும்
இந்த இரவின் மீது
கரைத்திட முயன்றுகொண்டிருந்தாள்
தன்னுடைய பொம்மைகளுக்கான
பாதுகாப்பான இடத்தைத்
தேர்ந்தெடுக்க இயலாதவளாய்
கட்டிக்கொண்டு உறங்கும்
தன் மகளை
அலுங்காமல் வாகனத்தில் படுக்கையில் ஆழ்த்துகிறாள்

ஒரு வீடு
இரவின் ஒரு பகுதி
நிலவின் ஒரு துண்டு
வாகனமேறுவதை சன்னல்வலை வழியாக
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வரிசைக்கிரமங்களேதுமற்ற
திணிக்கப்பட்ட பொருட்களோடு
விளிம்புகளைத் தாண்டி காற்றில் படபடக்கிறது
அவளின் சேலைத் தலைப்பு

எத்தனை அழகான கவிதை? ஊரோசை அடங்கிய ஒரு தெருவில் இரவின் வெளிச்சத்தில் அவள் விழுங்க முயலும் நினைவுகள் எத்தனையோ? எதுவும் அறியாது கை பொம்மையோடு உறங்கும் அந்தச் சிறுமியாய் இருந்துவிட மனம் விரும்புவதை மறுக்கமுடியவில்லை.

மரண வீட்டிற்குச் செல்லுதல் என்று இன்னொரு கவிதை.

மரண வீட்டிற்குச் செல்லும்
ஒவ்வொரு முறையும்
செத்தவர் திடீரென
கண் விழிக்கக் கூடுமோவென
திரும்பத் திரும்ப
கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது

அவருக்குக் கட்டும்
அழகான பாடையில்
திரும்பத் திரும்ப
பயணித்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது

இறந்தவருக்கு வேண்டப்பட்டவர்கள்
தொலைதூரத்திலிருந்து வரும்வரை
அவரோடு காத்திருக்க வேண்டியுள்ளது

அவர் நீரில் கரைக்கப்படும்போது
நீரோடான கலவியையும் தடுமாற்றத்தையும் கண்டு
குமுறிக் குமுறி அழவும்
பின்பு
காலம் முழுக்க அவர் திரும்பி வரமாட்டார்
என்பதற்காகவே
வாழ வேண்டியதிருக்கிறது.

ஒரு பிணத்தைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லாமே அவர் பிணமானதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாய் இருக்கும் போது திடீரென அவர் கண்விழித்தெழ நேர்வதையும் சாத்தியங்களின் வரிசையில் அடுக்கிகொண்டே வந்து திரும்பிவரமாட்டார் என்பதற்காகவே வாழவேண்டியதிருக்கிறது என்று நிலையாமையில் நிலைக்கும் வாழ்வைச் சொல்லி முடிகிறது. குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இறுதி மூன்று வரிகள் கவிதை உலகின் அதிகம் பேசப்பட்ட வரிகளாக இருக்கும். அற்புதமான கவிதை.

நீ சிரிப்பதற்கு என்ற இந்தக் கவிதையைப் பார்ப்போம்.

நீ சிரிப்பதற்கும் அழுவதற்குமான
ஒரு அறையாக
என்னைப் பயன்படுத்துகிறாய்
உன் கசங்கிய ஆடைகளை
மாற்றுவதற்கு
அந்த அறைக்குள்
மற்றுமொரு அறையை உருவாக்குகிறாய்

உன் கண்ணீர்த்துளிகளை
புத்தகங்களைப் போல் அடுக்கி வைத்திருக்கிறேன்
ஒவ்வொன்றும் ஓராயிரம் பக்கங்களைக் கொண்டது
ஒவ்வொரு பக்கமும் ஓராயிரம் புத்தகங்களைக் கொண்டது
ஒவ்வொரு மழைநாளாலும்
உன் புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன.

எத்தனை நேரடியாய் உள் உலகத்தைப் பார்க்கிறது இக்கவிதையின் மொழி? ஒவ்வொரு பக்கமும் ஓராயிரம் புத்தகங்களைக் கொண்டது எனும் வரிகளில்தான் இக்கவிதையின் ஆணிவேர் கிளைவிட்டுப் பரவுகிறது. மற்றுமொரு நல்ல கவிதை.

காலம் என்றொரு கவிதையில் ஒளிந்திருக்கிறது கண்சிமிட்டும் ஓர் வைர நக்ஷத்திரம்.

பல நாட்களுக்கு முன்
நின்றுபோன கடிகாரம்
பார்க்கும்போது மட்டும் ஓடுகிறது
இப்போது அதை நிறுத்தவேண்டுமானால்
பார்க்காத போது ஓடவிட வேண்டும்.

பன்.இறையின் மொழி வாழ்வின் அற்புதங்களையும் அதன் வலிகளையும் தனிமையையும் அன்பின் நறுமணத்தையும் குழந்தைகளின் உலகத்தையும் நிராகரிப்பின் குருதியையும் மிக வசீகரமான சொற்களால் எழுதியபடியே இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் கடக்கும் ஒவ்வொரு அபூர்வமான கணங்களையும் கவிதையாக மாற்றும் ரஸவாதம் எல்லோருக்கும் சித்திப்பதில்லைதான். இந்தக் கவிதைகளைப் படித்து முடிக்கையில் இனி நான் எழுதப் போகும் மற்றுமொரு கவிதையில் ஏதேனும் மாற்றம் தெரிய நேருமானால் வாய்க்குமானால் அது இந்தக் கவிதைகளால்தான் இருக்கும்.

வெகுநாட்களாய் எழுதாமல் தன் அனுபவங்களால் முதிர்ந்து எழுதத் துவங்குகையில் எதை எழுதக் கூடாது என்ற நேர்த்தி இயல்பாய் இவருக்கு அமைந்துவிடுகிறது. தவிர பன்.இறையின் ஆழ்ந்த தேர்ச்சியான வாசிப்பும் பலதரப்பட்ட ஆர்வங்களும் அவர் கவிதைக்குத் தூண்களாக நிற்கின்றன. தொடர்ந்து எழுதினால் அடுத்த தலைமுறைக்கான பெயர் சொல்லக் கூடிய ஒரு கவிஞராக இவர் நிச்சயம் இருப்பார்.

இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளும் வாசித்து அனுபவிக்கக் காத்திருக்கின்றன. நான் தொட்டுக் காட்டியிருப்பது ஒரு விள்ளல்தான். இந்தப் புத்தகத்தைத் தயக்கமின்றி வெளியிட்ட என் நண்பர், கடற்குதிரை வெளியீட்டகத்தின் முத்தமிழ்விரும்பி பெருத்த பாராட்டுதலுக்குரியவர். ரசனை ததும்பும் அட்டையும் வண்ணமும் எழுத்துருவும் வடிவமைப்பும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவை.

இந்தப் புத்தகம் நம் கையில் இருப்பது நமக்குக் கௌரவம். இப்படியான கவிதைகளை வாசித்து நல்ல ஒரு கவிஞரைப் பாராட்டுவது அவருக்கு நாம் அளிக்கும் கௌரவம்.

எதைச் சொல்வது எதை விடுவது என்ற ஓர் சுவாரஸ்யமான அயர்ச்சி ஏற்படுவதை இதை வாசிக்க நேரும் எல்லோராலும் உணரமுடியும். ஒரு புதிய கவிஞரை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு இவரது கவிதைகள் சவாலாய் இருக்கின்றன. வேறெந்தக் கவிஞரின் முதல் தொகுப்பும் இத்தனை முழுமையாய் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அறிமுகம் காலம் கடந்துபோய்விடக் கூடாது என்பதாலேயே இன்னும் விரிவாய் எழுத நினைத்தவற்றைச் சுருக்கி விரைவாய் முடித்துவிட்டேன். சற்றுக் கழித்து மீண்டும் இத்தொகுதியைப் பற்றி இன்னொரு பார்வையை எழுதும் (அ)வசியத்தை இக்கவிதைகளே மீண்டும் ஏற்படுத்தும்.

பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்

-பன்.இறை

-கடற்குதிரை வெளியீட்டகம், B37, ஹட்கோ, நேதாஜி நகர், பீளமேடு, கோவை. 0422-6561553. virumbi@yahoo.com  ரூ.60/= பக்கங்கள்-80. வெளியீடு: மார்ச் 2012

21.3.12

அஞ்சலி.
வானவில் மனிதன் மோகன்ஜி குறித்து எழுதுவதற்கு எப்போதுமே எனக்கு ஆசை உண்டு.

ஆனால் இம்முறை அவருடைய தாயாரின் மரணம் குறித்த செய்தியோடு இப்பதிவை எழுதுகிறேன்.

இரண்டு நாளைக்கு முன்னால்தான் அவர் அம்மா நோய்வாய்ப் பட்டிருந்ததை  நீண்ட நாட்களுக்குப் பின் மனம் கசியும் கவிதையாய் எழுதியிருந்தார்.

இதுவரை பார்த்திராத அவர் அம்மாவை அந்தக் கவிதையில் சந்தித்தேன். அதுவே கடைசி சந்திப்பாய் அமைந்துவிட்டது.

மோகன்ஜியைத் தந்துவிட்டு மறைந்துபோன அந்தத் தாயின் ஆன்மாவில் என் எழுத்துக்கள் சுமக்கும் அஞ்சலி பூக்களாய் மாறித் தூவப் படட்டும்.

உங்கள் வாழ்விற்கும் விடைபெறலுக்கும் அஞ்சலி அம்மா!

19.3.12

குறுக்கெழுத்து - நன்றி “கல்கி”
யாராலாவது
தீர்க்கப்பட்டபடி இருக்கின்றன
புதிர்க் கட்டங்களின்
அவிழாத புதிர்கள்.

இருளால் அடைக்கப்பட்டுச் சில.
புதிரால் நிரப்பப்பட்டுச் சில.

இடமிருந்து வலம்செல்கையிலோ
மேலிருந்து கீழிறங்குகையிலோ
கண்ணுக்குப் புலப்படுகிறது
புதிர்களின் சில முடிச்சு.

அவிழாத முடிச்சுகளைத்
தீர்ந்த விடை கொண்டு
தேடுகையில் உடைகிறது
மற்றும் சில.

காத்திருக்கின்றன
முட்டையினுள்ளே
கீழிருந்து மேலாகவோ
வலமிருந்து இடமாகவோ
தலைகீழாயோ
திரும்பியபடியோ
முடிவுறாமலோ.

ஒவ்வொன்றாய் உதிர்கையில்
முளைக்கிறது விடைகளுடன்
வாழ்வின் ஞானம்.

புதிரின் பிடி அவிழ்ந்து
பூரித்து நிமிர்கையில்
புதிதாய்த் தயாராகிறது

இருள் நிறைந்த கட்டங்களுடன்
இன்னுமொரு சதுரம்.

-நன்றி- கல்கி- 25.03.2012

15.3.12

ஆனந்தவிகடனில் “ப்ரின்டர் குறித்து ஒரு கவிதை”.


இன்று எனக்கு மிகவும் பிடித்த இந்தக் கவிதை வெளியாகிறது. -நன்றி- ஆனந்தவிகடன்- 21.03.2012. 

என் இடப்புறம்
முட்டாள்த்தனமான
மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்

அந்த எட்டு வயது
ப்ரின்டர் இயந்திரத்தைக்
குறித்து ஒரு கவிதை
எழுதுவேன் என
ஒருபோதும் நினைக்கவில்லை.

சின்ன வயதில் மகன் கிறுக்கிய
ஒரு கிராமச்சாலைப் படமோ-

கண்ணீரால்
நனையவிருக்கும்
ஒரு மரண அறிக்கையையோ-

உற்சாகம் மிக எழுதப்பட்ட
ஒரு கவிதையையோ-

வேலைநிறுத்தத்துக்கான
ஓர் அறிவிப்பையோ-

ஆயுள் காப்பீட்டுக்கு
அழைக்கும் விற்பனைக்
கடிதத்தையோ-

ஒரே ஸ்வரத்தில்
வெளியே துப்புகிறது.

சில சமயங்களில்
-பிடிக்காமல் போகுமோ
தெரியாது-
வெற்றுத் தாளையும்
வெளியே தள்ளும்.

வேறொரு சமயம்
கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக் கசக்கி எறியும்.

எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் 
அதை எல்லா நேரமும்
நம்ப முடியாது.

எல்லாம் அதனுள்ளே
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும் அதன் வசமில்லை.

8.3.12

கனவின் நகல்இதற்குமுன்
ஒருபோதும்
சென்றிருக்காத
ஏதோவொரு
அயல்நாட்டின்

ஒரு வெறுமையான
தெருவிலிருந்து
துவங்குகிறது
அந்தக் கனவு.

நகரவாசிகளின்
புதிரான மொழி
குறித்தோ-

பாஸ்போர்ட்
விசா தொடர்பான
ஆபத்துக்கள்
குறித்தோ
நீளும் என் கனவுக்குக்
கவலையில்லை.

திடுதிப்பென்று
இப்படி அயல்நாடு
வந்தால்
எங்கே தங்குவதென்பது
பற்றியோ

குறைந்த பட்சம்
காலை உணவு குறித்தோ
கொஞ்சமும்
அக்கறையில்லை.

குளிருக்குச் சற்றும்
பொருத்தமில்லாத
போர்வையுடனும்

கால்களுக்குச்
சப்பாத்துக்களுமின்றி
எத்தனை தூரம்தான்
இன்னும்
கூட்டிச்செல்லுமோ
என நடுக்கமுற்று நிற்க-

நல்லவேளை
அந்தக் கனவின்
அடுத்த தெருவிலேயே
தென்பட்ட
என் வீட்டின்
படுக்கையறைக்குள்
புகுந்து போர்த்திக்கொள்ள

எனைத் தேடி
அயல்தேசத்தின்
அடுத்த தெருவிலேயே
காத்திருக்கக்கூடும்
அந்தக் கனவு.


-நன்றி- ஆனந்தவிகடன் - 14.03.2012

6.3.12

மாயா மாயா எல்லாம் மாயா!


இந்த இடுகையை எழுதிக்கொண்டிருக்கும்போது உத்தரப்ரதேசம் பஞ்சாப் மணிப்பூர் கோவா உத்தராகண்ட்டில் மாநிலத் தேர்தல் முடிவுகளோடு எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் லாட்டரிச்சீட்டு விற்கும் வியாபாரிகளைப் போலக் கூவிக்கூவி கடைபரப்பிக்கொண்டிருந்தார்கள்.

உத்தரப்ரதேசத்தில் முகாமிட்டு ஏழைகளுடன் ஏழையாகவே கடந்த ஒரு வருடமாக தேவுடு காத்த ராகுல் காந்தி இலவு காத்த கிளியானார்.  சிலைகளாலேயே கல்லாக் கட்டிய மாயாவதிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி மாயமானது. முலாயம்சிங்கிற்கு அடித்தது யோகம். இனி அடுத்த ஐந்து வருஷங்கள் அவர் காட்டில் மழை. பஞ்சாபிலும் காங்கிரஸ் போட்ட கணக்குகள் தப்பாகிப் போனது. ஆளும் அகாலிதளக் கட்சிக்கு இன்னொரு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. உத்தராகண்ட்டில் காங்கிரஸும் பா.ஜ.கட்சிகளும் குதிரை பேரத்தில் ஈடுபட பெரிதாய் ஆர்வம் காட்டும். கோவா பா.ஜ.கவுக்குப் போகிறது.மணிப்பூர் மற்றொரு புதுச்சேரி போல காங்கிரஸ் இல்லாமல் அவர்களால் சிந்திக்க முடியாத அனிமிக் மாநிலம். அங்குள்ள குண்டுச் சட்டியில் காங்கிரஸ் குதிரை ஓட்டும்.

இந்திய அரசியலை ஆட்டிவைக்கும் மூன்று பெண் முதல்வர்களில் முதல்வரான மாயாவதிக்கு அடுத்த ஐந்து வருடங்கள் கோர்ட் படிகளை மிதிக்கவே நேரம் சரியாக இருக்கும். வரும் ஏப்ரல் முதல் முலாயம் அதிகாரிகளைப் பந்தாடுவதும் மாயாவதியின் ஊழல் குற்றச்சாட்டுக்களை அம்பலப் படுத்தி அவரை மூலைக்குத் தள்ள எடுக்கும் முயற்சிகளும் தினசரிகளின் முதல் பக்கத்துக்குத் தீனி போடும்.

அரசியலில் ஒரு சராசரி நியாயமான மனிதன் எதிர்பார்க்கும் எந்த மாறுதலும் இப்போது தேர்தல் ஆணையம் நடத்திக்கொண்டிருக்கும் தேர்தல் முறைகளால் ஏற்படாது. மனம் உவந்து தேர்தல்களில் கடுமையான மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப் படாமல் வெறுமனே கட்டப்பஞ்சாயத்து குண்டர்களுக்கும் தாதாக்களுக்கும் கட்சி வாரியாக ஜாதி வாரியாக வேட்பாளர் நியமனம் கொடுத்து நூறு சதம் ஓட்டுப்போட்டு ஜனநாயகக் கடமையாய் ஆள்க்காட்டி விரலைக் கறையாக்க வாருங்கள் என்று கூவி முக்கி முக்கி 60 சதம் நல்ல ஓட்டு கள்ள ஓட்டு கலந்துகட்டி முடிவுகளை அறிவித்து மாற்றி மாற்றி இரண்டு கட்சிகளும் கொள்ளையடித்து நாட்டைக் காயடித்துக்கொண்டிருந்தால் வளர்ச்சி மற்றும் மாறுதல் என்பதெல்லாம் வெறும் கெட்ட வார்த்தைகளாகவே நீடித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ரத்த சோகை பிடித்து லொக் லொக்கென்று இருமிக்கொண்டு பூட்ட கேஸாகத்தான் இருக்கும்.

இதற்கடுத்த பெரிய ஜோக் ஊடகங்களின் கணிப்புகள். ப்ரொனாய் ராய் முதன்முதலில் தேர்தல் சிறப்புச் செய்திகள் தர தூர்தர்ஷனில் துவக்கி வைத்த இந்த விவாதங்களும் கணிப்புகளும் சார்ந்த ஓர் அங்கமாயிருந்த இவ்வகையான துறை இன்று மிகப் பிரபலமான ஓர் சம்பாதிக்கும் துறையாகவும் ஆகிவிட்டதுதான் காலத்தின் கோலம்.

உளவுத்துறையையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்ட கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்ட அல்லது ஆட்சி செய்த சீரிலிருந்தே வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவது போலக் கணித்துவிடலாம். இவற்றின் யூகங்களுக்கு உதவ இன்னும் இருக்கவே இருக்கிறது ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதிபலம் பணபலம் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி. ஆக ஊடகங்களே கிட்டத்தட்ட ஒரு நிழல்மறைவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவையும் வெளியிட்டுவிட முடிகிறது. அங்கங்கே சில ஏற்ற இறக்கங்க்ள் இருந்தாலும் கிட்டத்தட்ட ஒத்தே போகிறது. சில சமயங்களில் விலகிப் போகிறது. ஆனாலும் அடுத்த ஆட்சி அமையும் வரை விளம்பர இடைவெளியில்லாமல் பார்வையாளர்களை ஈர்க்க அவர்களுக்கு விஷயதானம் இந்தத் தேர்தல்கள்.

மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது ஏழைகளின் காவலனாக உத்தரப்ரதேசம் பக்கமாய் ராகுல் போனால் போதும். மாயாவதிக்கும் தன்னுடைய கணக்குகளை சாமர்த்தியமாக மறைக்கவும் ஒளிக்கவும் தன்னுடைய அடுத்த வசூலுக்காகக் காத்திருக்கவும் காலம் பணித்திருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்கள் உங்கள் காட்டில் மழை முலாயம். 2014 பொதுத் தேர்தலில் பேரம் பேசவும் இந்த வெற்றி கை கொடுக்கும். ஜமாயுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  

5.3.12

ஒண்ணு ரெண்டு மூணு.
1.

சோழநாடு சோறுடைத்து. இது தெரியும். சோழ நாடு கோயில்களும் உடைத்து. அதுவும் தெரியும். அதற்குப் பின்னால் எத்தனை அழகான ஒரு பின்னணி இருக்கிறது பாருங்கள்.

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவலஞ்சுழி பிள்ளையார் கோயிலில் பார்த்த ஒரு அற்புதமான செய்தியை உங்களுடன் பகிர ஆசை- அதில் கண்ட மொழியுடன்.

”எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள்.

மத்தியார்ஜுனத்திற்கு நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம்.

அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி.

திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம்.

திருவிடைமருதூருக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில்.

திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி.

திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.”

2.

கைகேயி ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்.

கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள் ஆக யுகங்கள் நான்கு 

இந்தக் கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும என்கிறது இந்துமத சாஸ்திரம். 

இந்தப் பிரிவின் அளவு துவாபர யுகத்தில் 13 ஆண்டுகளாகவும், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகளாகவும், கிருத யுகத்தில் 15 ஆண்டுகளாகவும் இருந்தன..

ராமாயணம் நடந்தது திரேதா யுகத்தில். ஆக தசரதனும், ராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் ராமனுக்குப் பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான் என்பதுதான் கூனி கைகேயிக்குச் சொல்லிக் கொடுத்த குயுக்தியின் பின்னணி.

என்ன வில்லத்தனம் கூனி?

3.

ராமையாவுக்கு ரஜினி மூலம் வைரமுத்து சொல்லி பாலு பாடியது எட்டு எட்டா பிரிப்பது பற்றி. 

ஆனால் இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் ஒன்பது விஷயங்களை
ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

1. தனது வயது
2. பணம் கொடுக்கல்-வாங்கல்
3. வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்படும் மூலிகைகள்
5. கணவன் மனைவிக்குள்ளான காம அனுபவங்கள்
6. செய்த தான தருமங்கள்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானங்கள்
9. பயன்படுத்திய மந்திரம்

ஒவ்வொருவரின் பானையிலிருந்தும் இந்த ஒன்பதில் எத்தனை ரகசியங்கள் பாக்கி இருக்கின்றன ஒழுகாமல்? 

(மிகத் தொன்மையான சிந்துசமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் தியானத்தில் சிறந்திருந்தார்கள். அவர்கள் தியானித்து வழிபட்ட பசுபதி மேலே.) 

4.3.12

ஃபோர்மனெக்கும் தமிழ்ப்பெண்டிரும்


யாரொஸ்லாவ் ஃபோர்மனெக்- 
jaroslav Formánek 

மேலே இணைத்திருப்பது 
ஃபோர்மனெக்கின் படம் அல்ல.

சத்தியம். ஃபோர்மனெக் சுவாரஸ்யமான ஒரு கேரெக்டர் என்பது சத்தியம். நான் தஞ்சாவூரில் ப்ரகாஷின் வட்டத்தில் இருந்த 80களில் தமிழ் கற்றுக்கொள்ள வந்த செக் நாட்டு மாணவன். கோபாலியின் தயவால் கிடைத்த கொடை. ப்ராக் நகரத்தில் ஒரு பூங்காவின் பாதுகாப்பாளனாக இருந்த ஃபோர்மனெக் ப்யானோ வாசிப்பதிலும் பாடுவதிலும் அற்புதமான கலைஞன்.

தமிழ் அவன் பார்வையில் பட்டது தமிழுக்கு ஒரு அனுபவம்.( இந்த ஒருமை ஏக வசனம் நான் பொதுவாகப் பயன்படுத்தத் தயங்குவது.அன்பின் நெருக்கத்தால் அவன்.தவறென்று ஒருவேளை இதைப் படிக்கும் ஃபோர்மனெக் கருதக்கூடுமானால் ஸாரிபா ஃபோர்மனெக்) பல விஷயங்களை எப்படி இன்னொரு கோணத்தில் பார்ப்பது என்பதைக் கற்றுக் கொடுத்த வ்யக்தி. 

கழுத்தில் சிவப்பு அரைஞாண் கயிற்றில் கோர்த்த ருத்ராக்ஷம்.இடுப்பில் நாலு முழ வேஷ்டி.ஒரு பழைய ஹெர்குலிஸ் சைக்கிள். வாயுசாந்திக்கு அவ்வப்போது கணேஷ் அல்லது சொக்கலால். பல ஊர்களுக்கு ஃபோர்மனெக்கோடும் அவனுடைய தோழி எவ்லினோடும் சுற்றிய நாட்கள் இப்போது த.க.வின் இந்த அற்புதமான சிறுகதையின் மூலமாக என்னைச் சுற்றுகின்றன.

இந்தச் சிறுகதை தஞ்சாவூர்க்கவிராயரின் தேர்ந்த எழுத்துக்கும் பற்களையும் மனதையும் குலுங்கவைக்கும் சிரிப்புக்கும் மற்றுமொரு உரைகல். மூழ்கி முத்தெடுக்க உங்களை அழைக்கிறேன்.

இனி இச்சிறுகதை உங்களுக்காக-

                              ஃபோர்மனெக்கும் தமிழ்ப்பெண்டிரும்.  

ரு வெள்ளைக்காரனுடன் ஒரே வீட்டில் குடியிருந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன்.

தஞ்சாவூர் மேல வீதியில் பாலோபா சந்தில் குடியிருந்தோம். தஞ்சாவூர் சந்துகள் பிரசித்தி பெற்றவை. புராதனத் தன்மை கொண்டவை. விசித்திரமான மராட்டியப் பெயர்களுடன் கூடிய தஞ்சாவூர் சந்துகளில், தலைமுறை தலைமுறையாக மனிதர்களும் மாடுகளும் வசித்து வருகிறார்கள். அழகான பெண்களும், அசிங்கமான சாக்கடைகளும், தண்ணென்ற குளிர்ச்சியும் கொண்ட திண்ணைகளும் எந்தச் சந்தில் நுழைந்தாலும் ஒரே மாதிரி தோற்றத்துடன் திகைப்பை உண்டு பண்ணும்.

வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. சந்துக்கு வெளியே தெருவில் ஒரு மாமி கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அந்த வழியே ஒரு ஆசாமி கையில் ஒரு துண்டு பேப்பருடன் முகவரி விசாரித்து இருக்கிறார். மாமி கோலம் போடுவதை நிறுத்திவிட்டு அவருக்கு வழி சொல்லி அனுப்பியிருக்கிறார். அடுத்த வ்ருடம் அதே தெரு அதே சந்து. அதே மாமி கோலம் போடுகிறார். ஒரு ஆள் முகவரி கேட்டு துண்டுச் சீட்டை நீட்டுகிறார். மாமி அமைதியாகக் கேட்டாராம். “ இன்னுமா அந்தச் சந்தைக் கண்டுபிடிக்க முடியலை?”.

அதற்காகத் தஞ்சாவூர்ச் சந்துகளை இளக்காரமாக நினைத்துவிடாதீர்கள். பெரிய எழுத்தாளர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், கலைஞர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். அது சரி. வெள்ளைக்காரன் விஷயம் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்? கொஞ்சம் இருங்கள். ஒரு வாய் வெற்றிலை போட்டுக் கொண்டு வந்துவிடுகிறேன். வெற்றிலை போடாமல் கதை சொல்வதாவது?

அப்போது பல்கலைக்கழகத்தில் நான் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தேன். வெளிநாடுகளில் இருந்து ஆய்வின் நிமித்தமும் தமிழ் படிக்கவும் வெள்ளைக்காரர்கள் நிறையப் பேர் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும் பொறுப்பைத் துணைவேந்தர் (வாட் எ நேம்!) என்னிடம் ஒப்படைத்து விடுவார்.

ஒரு நாள் நல்ல வெயில். செகோஸ்லோவாகியாவில் இருந்து ஒரு இளைஞன் வந்து சேர்ந்தான். பால் வடியும் முகம் அப்படியே தக்காளி போல் கன்றிப் போயிருந்தது. துணைவேந்தரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. 

“அவன் பெயர் யாரொஸ்லாவ் ஃபோர்மனெக். அவனுக்கு விடுதி வாழ்க்கை வேண்டாமாம். ஏதாவது ஒரு தமிழ்க் குடும்பத்துடன் வாடகை விருந்தாளியாகத் தங்கிக்கொள்ள விரும்புகிறான். பேசாமல் ஒரு பெரிய வீடாகப் பார்த்து அவனை உன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்ளேன். ஒரு வருஷம்தானே?”

நான் தலையாட்டினேன். என் மனைவிக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. ஐயங்கடைத்தெரு அருகிலேயே ஒரு தனி வீடு கிடைத்தது. 500 ரூபாய் வாடகை. திண்ணை. திண்ணையை ஒட்டி ஒரு தனி அறை. பெரிய கூடம். இரண்டு படுக்கை அறைகள். ஸ்டோர் ரூம். பூஜை அறை. பின்புறம் கிணறு. திண்ணையை ஒட்டிய தனி அறையை ஃபோர்மனெக்குக்கு ஒதுக்கிவிட்டோம்.

“ஒண்டிக்கட்டை தானே? அந்த ரூம் போதுங்க அவனுக்கு. அவன் முந்நூறு ரூவா கொடுக்கட்டும். நாம எரநூறு கொடுப்போம்” என்றாள் என் மனைவி.

”இது அநியாயம்” என்றேன்.

ஆனால் இதற்கு ஃபோர்மனெக் மறுபேச்சு இன்றி ஒப்புக்கொண்டான். மீந்து போன குழம்பு, சட்னி வகையறாக்கள், ஆறிய சாதம், கூட்டு எல்லாம் எடுத்து வைத்து ஃபோர்மனெக்குக்குப் பரிமாறினாள். 

“எப்படி இருக்கு எங்கள் வீட்டுச் சமையல்?” என்று கேட்டாள் என் மனைவி.

ஃபோர்மனெக் படு கூர்மையானவன். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி “நான் ஒங்க வீட்டுத் தோத்தோ” என்றானே பார்க்கலாம்.

என் மனைவி முகம் போன போக்கு!

ஃபோர்மனெக்கின் அறை புத்தகங்களாலும் இசை ஆல்பங்களாலும் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தில் இருந்து வந்த்தும் அவன் அறைக்குள் போய்விடுவான். அகநானூறு, புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து பெண்களைப் பற்றிய குறிப்புகள் சேகரிப்பான். 

”காக்கைப்பாடினியார் ஆணா? பெண்ணா?” என்று கேட்டான் ஒரு நாள்.

காக்கையாவது பாடுவதாவது? எனக்கென்ன தெரியும்?

வாசல் பக்கம் ஜன்னலைச் சாத்தியே வைத்திருந்தான். ”குழந்தைகள் மட்டுமல்லாமல் சில சமயம் பெரியவர்கள் கூட அதன் வழியே எட்டிப் பார்க்கிறார்கள். எனக்கு சங்கோஜமாக இருக்கிறது” என்றான்.பிறருடைய அந்தரங்கத்தைத் திருட்டுத் தனமாகப் பார்ப்பது எங்களது பிறவிக்குணம் என்று எப்படிச் சொல்வது?

ஃபோர்மனெக் வந்துவிட்டால் திண்ணைகளில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக் குசுகுசுவென்று பேசிக்கொள்வார்கள். ஃபோர்மனெக் யாரையும் ஏறிட்டுக் கூடப் பார்க்க மாட்டான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்புடன் தன் அறைக்குள் புகுந்துகொள்வான். அங்கே அவனுக்காகப் பழந்தமிழ்ப் பெண்டிர் கூட்டம் காத்திருக்கும்.

“பழங்காலத்துத் தமிழ்ப் பெண்ணொருத்தி முறத்தால் புலியை விரட்டினாளாமே? முறம் எப்படி இருக்கும்? அது பயங்கரமான ஆயுதமா?” என்று கேட்டான். முறத்தைக் கொண்டு வந்து காட்டினேன். ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டான்.

”அடடே! இதை வைத்துப் புலியை எப்படி விரட்டியிருப்பாள்?”

“விரட்டியது முறமல்ல. அவள் வீரம்” என்றேன்.

என் மனைவிக்குத்தான் கோபம். ”ஐயோ! அது அழுக்கு முறமாச்சே! அதைக் கொண்டு போய் அவனிடம் காட்டினீர்களாக்கும்! என்னைப் பற்றி என்ன நினைப்பான்?”

பீத்தோவனின் இசை சிம்ஃபனியை ஃபோர்மனெக் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். தியாகையரின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது எனக்கு ஏற்படும் அதே பரவசம் பீத்தோவனிடமும் கிடைத்தது. ஃபோர்மனெக்கின் அறை எனக்குப் பொழுதுபோக்கு மட்டுமன்றி மனைவியிடமிருந்து தப்பிக்கும் உபாயமாகவும் மாறியது.

“எப்பப் பாத்தாலும் என்ன அவன் ரூமிலேயே பழியாக் கெடக்கறீங்க? ம்யூஸிக் வால்யூமைக் குறைச்சு வெக்கச் சொல்லுங்க. ஒரே இரைச்சல்”

இசை என்னை வேறு ஓர் உலகுக்கு இழுத்துச் சென்றது. அந்த உலகத்தில் ரேஷன் கடை இல்லை. அலுவலகம் இல்லை. சின்னக் கவலைகள் இல்லை. மனைவியில்லை. ஒரே சமயத்தில் நூறு வயலின்கள் உச்சத்தைத் தொட்டன. ஃபோர்மனெக் ஆட ஆரம்பித்து விட்டான். நானும் ஆட ஆரம்பித்திருந்தேன்.

திடீரென்று கதவை யாரோ இடிக்கும் சப்தம். கோபத்துடன் திறந்தேன். என் மனைவியின் கண்களில் பொறி பறந்தது. 

“மணி என்ன தெரியுமா?”- அவள்.

“தெரிய வேண்டியதில்லை”-நான்.

“ஒங்களுக்கு வேண்டாம். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க தூங்க வேண்டாமா? ராத்திரி ஒரு மணிக்கு இப்படி அவனோட சேர்ந்துக்கிட்டு கூத்தடிக்கிறீங்களே? இது நியாயமா?”

சாதுவான நாய்க்குட்டி மாதிரி போய்ப் படுத்துக் கொண்டேன்.

பூட்டப்பட்ட அறைக்குள் இருந்து பூம் பூமென்று இசையின் நீர்வீழ்ச்சி இடுக்கு வழியே கசிந்துவந்து என்னை நனைத்தது. என் மனைவிக்கு அவன் மீது எரிச்சல் அதிகமாகிக் கொண்டே வந்தது.

ஃபோர்மனெக்குக்குப் புரிந்தது. ஆனால் ஏதோ பரீட்சைக்குப் படிப்பவன் போல் தமிழ்ப் புத்தகங்களை விழுந்து விழுந்து வாசித்துக் கொண்டிருந்தான். 

”இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்து தமிழ் படிக்கறதுல உனக்கு என்ன பிரயோஜனம்?” என்று ஒரு நாள் கேட்டேன்.

“உங்கள் நாட்டில்தான் படிப்புக்கும் வேலைக்கும் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறீர்கள். எங்கள் ஊரில் மனசுக்குப் பிடிக்கிறதைப் படிப்போம். ஏதோ ஒரு வேலை. கொஞ்சம் பணம். கொஞ்சம் புத்தகம். நிறையப் பயணம். பணம் சேர்ந்ததும் மறுபடி ஊர்சுற்றக் கிளம்பி விடுவோம்?”

ரு நாள் சாயங்காலம். எங்கள் வீட்டில் எரிமலை வெடித்தது. ”ஒங்க ஃப்ரெண்டால் எனக்கு இன்னிக்கு மானம் போச்சு” என்று குதித்தாள் என் மனைவி.

”என்னாச்சு சொல்லு.”

”ஃபோர்மனெக் மத்தியானம் வீட்டுக்கு வரும்போது கூடவே ஒரு காதல் ஜோடியைக் கூட்டிக்கிட்டு வந்துட்டான். ரெண்டும் ஒண்ணோட ஒண்ணா ஒட்டிக்கிட்டே வருதுங்க. அதுங்க ரெண்டும் நம்ம வீட்டுக்கு முன்னாடியே ஒருத்தர ஒருத்தர் கட்டிப் பிடிச்சு வாயைக் கவ்விக்கிட்டு அப்டியே.. சீச்சீ1 எவ்வளவு நேரம்? சரிதான் விலகிடிச்சுங்கன்னு பாத்தா மறுபடியுங் கட்டிப் புடிச்சு...கண்றாவி. தெருவே வேடிக்கை பாக்குது. வாயைப் பொத்திக்கிட்டு சிரிக்கிதுங்க”.

“இலவசமா ஒரு சினிமா” நான் பாடினேன்.

“ஏங்க ஒங்களுக்கு வெட்கம் மானமே கெடையாதா?”

“பப்ளிக்ல சண்டை போடலாம். முத்தம் கொடுக்கக் கூடாதா? நாம வெளீல போகும்போது சில சமயம் நீ ரொம்ப அழகா இருப்ப. மஞ்சள் வெய்யில் காயும். எனக்கு உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு முத்தங் குடுக்கணும்னு தோணும்”

“சீ! வெட்கங் கெட்ட மனுஷன்!”

நினைத்தபோது எல்லாம் பறவைகள் முத்தம் கொடுத்துக் கொள்வது இல்லையா? மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஹிப்பக்ரஸி? முத்தத்தைப் பாலியல் சமாச்சாரத்தோடு முடிச்சுப் போடுவது முட்டாள்த்தனமல்லவோ? ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஆணும், பெண்ணும் தங்களை கௌரவித்துக் கொள்ளும் உயர்ந்த செயல் அல்லவா அது?

“ என்ன யோசனை?” என்று கேட்டான் ஃபோர்மனெக். நடந்ததைச் சொன்னேன். 

“முத்தம் என்பது ஒரு மொழி. அதை எங்கு பேசினால் என்ன?” என்றான் சுருக்கமாக.

“கோபால்! உடுக்கு எங்கே கிடைக்கும்?” என்று கேட்டான் ஒரு நாள்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“என்னது உடுக்கையா?”

“அதுதான் உங்கள் சிவபெருமான் கையில் வைத்திருக்கிறாரே! அது அந்தக் கால இசைக்கருவியாம். நான் பார்க்க வேண்டும் அதை”.

அவன் கண்களில் ஆர்வம் பளபளத்தது.

“ரொம்பப் பழங்காலத்து இசைக்கருவியாச்சே அது? இப்பக் கிடைப்பது கஷ்டம்” என்று மழுப்பித் தட்டிக் கழித்துவிட்டேன்.

ஒருவாரம் கழிந்திருக்கும். கூடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

“கோபால்!” 

உற்சாகமாகக் கூவியபடியே உள்ளே நுழைந்தான் ஃபோர்மானெக். நேராக நான் சாப்பிடும் இடத்துக்கே வந்துவிட்டான். என் மனைவி முகம் சுளித்தாள். 

“கோபால்! இதோ பார். “

தன் கைப் பையில் இருந்து எதையோ எடுத்தான். உடுக்கை. நிஜமான உடுக்கை.

“சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு வா”

“கர்மம்! யாரோ பேய் விரட்டும் பூசாரிகிட்ட இருந்து வாங்கி வந்திருப்பான் போல” என்றாள் என் மனைவி.

நான் ஃபோர்மனெக் அறைக்குள் நுழைந்தேன். அங்கே செக்கச்செவேலென்று வெற்று உடம்போடு நின்றுகொண்டிருந்தான். இடுப்பில் புலித்தோல் மாதிரி வண்ணம் தீட்டிய துண்டு. காலில் சலங்கை. கையில் உடுக்கை. ரிகார்ட் ப்ளேயரிலிருந்து பீத்தோவனின் அற்புதமான இசை பீறிடுகிறது.

“கோபால்! கவனி. எங்கள் இசையோடு உடுக்கை ஒலியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என்று சோதனை செய்யப் போகிறேன்”

உடுக்கை ஒலித்தது. வயலின்கள் வீறிட்டன. கால் சலங்கை ஒலிக்க ஃபோர்மனெக் ஆடலானான். மெல்ல மெல்ல இசையின் ஸ்தாயி உயர உயர அவன் ஆட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே போயிற்று. அவனுடைய தலைமுடி சுழன்றது. சிவனின் ஊழித் தாண்டவம்.

”தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று கைகூப்பி வணங்கினேன். கதவு இடிபடும் ஓசை. திறந்தேன். பத்ரகாளியாக என் மனைவி. அவளுக்குப் பின்னால் எதிர்வீட்டு-பக்கத்து வீட்டு மனிதர்கள்.

“கொழந்தைங்க பரீட்சைக்குப் படிக்கறாங்க. இங்க என்ன கூத்தடிக்கிறீங்க? ஒண்ணு இந்த வீட்டுல அவன் இருக்கணும். இல்லன்னா நான் இருக்கணும். சார்! நீங்கல்லாம் போங்க. நான் கவனிச்சுக்கறேன்”.

அவர்கள் வெளியேறினார்கள். என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. என்ன உலகமடா இது? தினசரி ராத்திரி குடித்துவிட்டு வந்து பெண்டாட்டியை உதை உதையென்று உதைக்கிறான் ஒருத்தன். இந்தத் தெருவில் ஒரு பயல் அவனைக் கேட்டது கிடையாது. நாங்கள் இசை கேட்பது இடைஞ்சலாகப் போய்விட்டதா?

ஃபோர்மனெக் பிடிவாதம் பிடித்தான். விடுதி வேண்டாமாம். நல்ல வேளை அரண்மனையின் ஒரு பகுதியில் சிதிலமடைந்த பழைய கட்டிடத்தில் ஓர் அறை இருந்தது. அது மன்னர் பரம்பரையின் நிர்வாகத்திலிருந்தது. கேட்டதும் கொடுத்து விட்டார்கள். பகலில் கூட இருட்டாக இருந்த அந்த அறைக்குக் குடி பெயர்ந்தான் ஃபோர்மனெக். உடைந்த பல்லக்குகள். நூலாம்படை தொங்கும் பழங்கால ஓவியங்கள் மாட்டிய சுவர்கள். அங்கே நிலவிய அமைதியில் காலம் நகராமல் நின்று போயிருந்தது.

“ஆஹா பிரமாதம்” என்றான் ஃபோர்மனெக். அங்கே இருந்த வாட்ச்மேன் என் காதில் கிசுகிசுத்தான். “சார்! செத்துப் போன ராஜா ராணிங்களோட ஆவிங்கயெல்லாம் இஞ்சதான் அலையுதுங்க.”

நான் ஃபோர்மனெக்கைப் பார்க்கப் போவதைக் குறைத்துக் கொண்டேன். 

ஃபோர்மனெக்கைப் பார்த்து இரண்டு மாதங்களாகி விட்டன. நானும் என் மனைவியும் ஷாப்பிங் போய்விட்டுக் கீழ ராஜ வீதியிலிருந்த டாக்டர் நரேந்திரன் க்ளினிக் நோக்கி சென்று கொண்டிருந்தோம். போகிற வழியில் ப்ரகாஷ் கடையில் ஒரே சிரிப்பு. கூத்து. சுந்தர்ஜி-முத்து-விச்சு-செல்லத்துரை-கவிஜீவன் .....நடுநாயகமாக ஃபோர்மனெக்.

எங்களைப் பார்த்து எழுந்து வந்தான். 

“எப்படி இருக்கீங்க? “என் மனைவியைப் பார்த்து மழலைக் குரலில் கேட்டான்.

என் மனைவி அவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தாள்.

“நீங்க எப்படி இருக்கீங்க ஃபோர்மனெக்? ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க” என்றாள்.

அவள் கண்கள் கலங்கி விட்டன. 

ஃபோர்மனெக்கின் விழிகள் வியப்பால் விரிந்தன. துரத்தாத குறையாக ஃபோர்மனெக்கை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு என்ன உருக்கம்?

என்னை நெருங்கிக் காதருகில் கிசுகிசுத்தான் ஃபோர்மனெக்.

“இந்திய மனைவிகள் பற்றிய ஆய்வுக்கு எனக்கு விஷயம் கிடைத்து விட்டது”   

நன்றி- ஆனந்தவிகடன் -23-06-2010.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...