29.9.10

புதிர்I
எழுதியிருக்கலாம்
தோன்றுகிறது ஒரு நேரம்.

எழுதாமல்
இருந்திருக்கலாம்
தோன்றுகிறது இன்னொரு நேரம்.

ஏதாவதொன்று
தோன்றியபடித்தான்
இருக்கிறது எந்நேரமும்.


II
அவள் வந்தால் இப்படி-

வராது போனால்
அப்படி என்றும்

யூகிக்க முடிகிறது.

என்னவானது
என்று சொல்லவாவது

வரத்தான்
வேண்டியிருக்கிறது அவள்.

III
எங்கேயோ பார்த்ததாகத்
தோன்றாத வரையிலும்

இவளை
அமைதியாகப் பார்க்க முடிகிறது

பின்னொரு முறை
அவளைப் பார்க்கும் வரை.

28.9.10

முள்ளிசை


நாய்களைக்
கொஞ்சிக் கட்டிவிட்டு
பாலுறைகளை எடுத்தபடி
வருகையில் நீர் நிரப்பும்
விசையை இயக்கியபடியே
துவைக்கும் இயந்திரத்தின்
விசையையும் திருப்பியபடி
பாலைக் கொதிக்க வைத்து
இடைவெளியில்
விடுபட்ட பாத்திரங்களைத்
தேய்த்துக் கழுவி பொங்கிய
பாலை இறக்கி ஆற்றிக்கொண்டே
இட்லியுடன் சட்னியோ
ப்ரெட்டுடன் சீஸோ
காய்கறியுடன் பருப்பும்
சாம்பார் கொதிக்கவிட்டு
குழந்தைகளை எழுப்பி
ட்ரிக்னாமெண்ட்ரியும்
டாகூரின் கவிதையும் கேட்டு
இடவேண்டிய கையொப்பமிட்டுக்
குளிக்கவைத்து இடைவெளியில்
சீருடை தயார் செய்து
சாப்பிட்டுக் கையசைத்து
எல்லோரும்
பறந்த பின் பொழுதில்
மெல்லக் கேட்கிறது
இரக்கமின்றி
அதிகாலை எழுப்பிய
அதே கடிகார மணியோசை.

26.9.10

சருகின் மொழிபடரக் கற்கிறேன் 
வீசியெறிந்த விதையிலிருந்து
மீளும் பாகற்கொடியின்
கைகளிலிருந்து -

ஒட்டியும் விலகியும்
இருக்கக் கற்கிறேன்
எப்போதும் உடன் இருந்தும்
வெளியே காத்து நிற்கும்
காலணியின் போதிப்பிலிருந்து  -

மீளக் கற்கிறேன்
ஏதோ எச்சத்தின் ஆழத்தில்
விழுது பரப்பிய மரத்தின்
நம்பிக்கையிலிருந்து -

நிரப்பக் கற்கிறேன்
கொள்வது எவ்வளவாயினும்
எத்தகையதாயினும்
நிரப்பும் நீரின்
தன்மையிலிருந்து -

பார்க்கக் கற்கிறேன்
இருள் அனைத்தும்
நிறங்கள் என்றறியும்
பார்வையற்றவனின்
கண்களிலிருந்து -

வாழக் கற்கிறேன்
மரணத்தை முதுகில் சுமந்து
நகரும் நத்தையின்
நிதானத்திலிருந்து -

மரிக்கக் கற்கிறேன்
உதிர்ந்த பின்னும் வழிகாட்டும்
சருகுகளின் மொழியிலிருந்து.

24.9.10

அர்த்தநாரியின் கனாஒரு விருந்துக்காகத்
தயாராகிக் கொண்டிருக்கிறது
சமையலறை.

உப்பின் அளவு குறித்தும்-
காரம் மற்றும் வேகும்தன்மை
குறித்தும்-
அரைத்து விட இருக்கிற
மசாலாவின் கலவை குறித்தும்
சந்தேகங்கள் தீர்க்கப்படுகின்றன.

இலைகள் நறுக்கப்பட்டதும்
தாம்பூலத் தாம்பாளங்கள்
தயாரானதும்

மாக்கோலங்களில்
செம்மண் இடுகையும்
நீர்த்தொட்டி நிரம்பியதும்
உறுதிசெய்யப் படுகின்றன.

தாளிப்பு முடிந்து
ருசி கூட்டலும் குறைத்தலும்
முடிவடைகின்றன.

சாதமும் வடிக்கப்பட்டு
ஜமக்காளங்கள் விரிக்கப்பட்டு
மாவிலைத் தோரணங்களுடன்
வாயில் அலங்கரிக்கப்படுகையில்

அறுந்து விழுகிறது
அர்த்தநாரியின் கனவு.

பாலம்தூண்டில்புழுவுக்கும்
கொத்த வரும் மீனுக்கும்
நடுவில் மிதக்கிறது மரணம்.

தூவிய விதைக்கும்
விருட்சத்துக்கும் இடையில்
கூர் தீட்டப்படுகிறது கோடரி.

நெடுநாள் வாழ்தலுக்கும்
இளமையில் இறத்தலுக்கும்
இடையே சிதறிக்கிடக்கிறது வாழ்க்கை.

கொடுத்ததை மறந்தவனுக்கும்
பெற்றதை நினைப்பவனுக்கும்
மத்தியில் திறந்திருக்கிறது
சொர்க்கத்தின் கதவு.

18.9.10

துளி துளிI
முன்பே எனக்கிது
தெரியும் என்கிறாள் அவள்.
முன்பே எனக்கிது
தெரியாது போயிற்றே
என்கிறான் அவன்.
தலை நீட்டிச் சிரிக்கிறது காலம்.

II
அவளோடு வாழ முடியாது
போயிற்று.
இவளோடு விலகமுடியாது
போயிற்று.
எளிதில்லை
வாழ்வதும் பிரிவதும்.

III
நினைவுறுத்துகின்றன
கூரிய கத்தியை
பேசப்படாத வார்த்தைகளும்-
வழுக்கும் பாறையை
தீட்டப்படாத மொழியும்.

IV
சில நேரங்களில்
நாம் எதுவும்
சொல்லவேண்டியதில்லாது
போகிறது.

பல நேரங்கள்
ஒரு போதும்
சொல்ல விரும்பாததைச்
சொல்ல வேண்டியதிருக்கிறது.

சொல்ல விரும்புகையில்
யாருமற்றுப் போய்விடுவதும்
நேர்கிறது சமயங்களில்.

நிராதரவு


கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய்த் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் தின்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !
-சுஜாதா.
இது 1979ல் சர்வதேசக் குழந்தைகள் ஆண்டிற்காக சுஜாதா எழுதிய அவருக்கேயான நையாண்டிக் கவிதை. இதை இப்போது வாசிக்கும் போதும் பெருத்த மாறுதலின்றி இருப்பது கவிதையின் வெற்றியா? பொறுப்பற்று நொண்டிச்சாக்கிலேயே தலைமுறைகளை நாசமாக்கிய ஆள்பவர்களின் தோல்வியா? என்ற மிக எளிமையான கேள்விக்கு விடை கேள்வியிலேயே காத்திருப்பது கேவலத்திலும் கேவலம்.

16.9.10

மைதானம்


சுண்டும் விரலுக்கும்
நாணயத்தின் முகத்திற்கும்
நடுவே தீட்டப்படுகிறது
சவால்களின் கூர்.

சலனப்படுத்துகிறது
இலக்கை நோக்கிய
பாதையின் நடுவே
குறுக்கு வழியின்
ஆரவாரம்.

உதிரும் காலத்தின்
செதில்களில்
மறைந்திருக்கிறது
அடைய இருக்கிற முடிவு.

ஓடும் கால்களைத்
துவள வைக்கிறது
சுமக்கும் பொறாமையின்
கொடும் பொதி.

அடைந்ததும்
அடையாததும்
பெருங்கனவாய் நீள
சொட்டித் தீர்கிறது
காலத்தின் கானல் நீர்.

பெருமைக்கும்
அவமானத்துக்கும்
இடைப்பட்ட சதுரத்தை
உழுகிறது இலக்குகளின் ஏர்.

வியர்வையில் நனைத்த
போர்வை கொண்டு
வெற்றியும்
தோல்வியும்
சமமாய் மூடுகிறது
மைதானத்தின்
நிர்வாணத்தை.

15.9.10

கடவுள்


இருப்பிலேயே
மிகவும்
தெளிவானதும்
உன்னதமானதும்
கடவுள் குறித்த
தத்துவங்கள்தான்.
காலங்களைக்
கடந்து நிற்பவை
எல்லாம் கடவுள்.
மதங்களின் எல்லைகள்
அற்றவை கடவுள்.
யாரும் எளிதில்
பின்பற்றமுடியாத
எளிமைதான் கடவுள்.
நேர்மை அன்பு
அர்ப்பணிப்பு-
இவையெல்லாம்
கடவுள்.
நம்பிக்கையும்
தோல்வியும்
கடவுள்.
அறியாமையும் குழந்தையும்
பெண்மையும் கடவுள்.
எல்லாவற்றையும்
விட்டுக்கொடுத்தல் கடவுள்.
பொறுத்து மறப்பது கடவுள்.
இவையெல்லாம்
உங்களிடமிருந்தால்
நீங்களே நீக்கமற
நிறைந்திருக்கும் கடவுள்.
உன்னத இசை கடவுள்.
நற்பண்பெல்லாம் கடவுள்.
மன்னிப்புக் கோர்பவரும்
மன்னிப்பவரும் கடவுள்.
எதிரில் இருப்பதை
இல்லாத பொருளில்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும்
நிரூபணங்கள் தேடுகிறோம்.
சந்தேகங்கள் எல்லாம்
அற்ற பின்போ அறாமலோ
இயற்கையின் மடியில்
மரிக்கிறோம்.

14.9.10

ப்ரகாஷுக்கு ஓர் கடிதம்-II


பாண்டிச்சேரி
21.02.1989

ப்ரகாஷ்,

பாண்டிச்சேரியில் என் மாமா மிகவும் அவசரமாக புத்திசாலித்தனமான காரியம் ஒன்றைச் செய்துவிட்டார். ஆரோ ஆஷ்ரயா என்ற அரவிந்தர் ஆஸ்ரம நிர்வாகத்துக்குட்பட்ட தங்குமிடத்தின் வாடகை அறையைக் காலி செய்து விட்டார். கொஞ்சம் ஃப்ரென்ச், கொஞ்சம் மலையாளம், அதிகமாக வங்காளம் கலந்தெடுத்த தங்குமிடம் அது. பக்கத்தில் Good Food. கொஞ்சம் அதிகமாக உற்றுப் பார்த்தாலே நளினமும் இயல்பும் கெட்டுப் போய்விடுமோ என்று தோன்ற வைக்கிற இளம்பெண்கள்-சிற்ப ஓவியக்கூடங்கள்-ஆஸ்ரமம்-நூலகம்-பீச்.தனிமை.சந்தோஷம்.த்ருப்தி.இப்படிப் பல விஷயங்களைக் கொஞ்சமும் யோசிக்காமல் பிய்த்தெறிந்து விட்டார். நானும் அவருமாக அந்த ரூமை ஷேர் பண்ணிக்கொள்ளலாம் என நினைத்தேன்.வாடகை ரூ.250. மனுஷனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை.

அவருக்குக் காலையில் தினமலர்-தட்டு வழிய சோறு-பெரிய அகல நீளத்தோடு ஒரு குடும்பம் நடத்துகிறமாதிரியில் கக்கூஸ் ஒன்று- zig zag ஆன ரசனைத் தேர்வு. கேஸெட்டில் முதல் பாட்டு”என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்- வாணிஜெயராம்” அடுத்த பாட்டு”சிரித்துவாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.ஜிக்குமங்கு ஜிக்குமங்கு செச்சப்பாப்பா-டி.எம்.எஸ்”.

லாபம் பற்றிய கனவுகளிலேயே கண்கள் இடுங்கிப்போய் விட்டன. வயசு 50. ஒரு முழு வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பதட்டம் எதுவுமில்லாமல் “எம்.டி. இன்னிக்கும் லேட்” என்று பெருமையோ சிறுமையோ அடித்துக் கொண்டிருப்பார்.

அரை நாள்த் தங்கலில் நான் சம்பாதித்தது எட்டு மனங்களைத்தான். ப்ரமோத்/ஆல்ஃப்ரெட்/ஸ்ரீகுமார்/கேசவன்/அப்துல்லா என்று ஐந்து மலையாளிகள். இதில் ப்ரமோத்தும் ஆல்ஃப்ரெட்டும் ரொம்ப நெருங்கிவிட்டார்கள். ஓ.வி.விஜயன், பஷீர்,டிகேஎன், உரூப், ஜோஸெஃப் முண்டசேரி, மலையாற்றூர் ராமக்ருஷ்ணன், சச்சிதானந்தன் என்று அவர்களின் கதை, கவிதைகளைச் சொன்ன போது ரொம்பவும் சந்தோஷப் பட்டுப் போனார்கள். உங்களைப் பற்றியும் உங்கள் மலையாள இலக்கியப் பரிச்சயத்தைப் பற்றியும், உங்களால் நான் பெற்ற பல மலையாள எழுத்தாளர்களைப் பற்றியும் சொல்ல மிகவும் மகிழ்ந்தார்கள்.

அப்புறம் சோரொன் மோய் சென் என்ற வயதான வங்காளியிடம் சரத்பாபு முதல் சமரேஷ் பாசு, சந்தோஷ்குமார் கோஷ் வரை பேசினேன்.அவர் தமிழில் எழுதப் பழகிக் கொண்டிருக்கிறார். நான் வங்காளி கற்றுக் கொள்ள முயன்றதைச் சொல்லிச் சிரித்தேன். நொட்ராஜனைத் தெரியுமாம் அவருக்கு. நல்ல தமிழ் எழுத்தாளர் என்றார். ஒரு சுமாரான கல்லூரிப் பண்டிதர் அவர், எழுத்தாளர் இல்லை என்றேன். முகம் சுருங்கினார் சென்.

சைக்கிள் இன்று வரை வரவில்லை.இனிமேல் சைக்கிள் நல்ல துணை. ஒரு வாரம் ஆகும் ஒரு ரூம் அமைய. இப்போதைக்கு என் மாமாவின் நண்பர் அறையில் வாசம்.

நாளை பௌர்ணமி.கடற்கரையில் 12மணி வரையில் இருக்கலாம் என்று ஒரு உத்தேசம். மாலதியைப் பார்க்கவில்லை. தற்போது நேரமில்லை.

சுந்தர்ஜி.

12.9.10

போறாளே பொன்னுத் தாயீ


இந்தச் செய்தியை என் கண்ணீரால் எழுதுகிறேன்.

என் ஆன்மாவின் சுகத்திற்கு ஒரு காரணமான மறக்கமுடியாத இசைக்குயில் ஸ்வர்ணலதாவை இன்று நான் இழந்தேன்.

அவர் பாடிய எத்தனையோ பாடல்கள் ஏதேதோ சூழ்நிலைகளில் என்னுடன் பயணித்திருக்கிறது.

அவற்றில் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என்னைக் கரைய வைக்கும் போறாளே பொன்னுத்தாயீ பாடலைப் பாடுவதற்காக மட்டுமே பிறந்தாயோ என் ஸ்வர்ணமே?

மாலையில் யாரோ மனதோடு பேச என்று கொஞ்ச எந்தக் குரல் வரும்?

உடல் ரீதியாக அநுபவித்த உன் வேதனைகள் நீங்கியது எங்களின் வேதனையாக.

உன் ஆன்மா உன் குரல் போன்ற இனிமையுடன் சாந்தி பெறட்டும் என் குயிலே.

ப்ரகாஷுக்கு ஓர் கடிதம்-I


சென்னை
24.09.1989

ப்ரகாஷ்,

ஒரு இடைவெளிக்குப் பின்னால் எழுதுகிறேன். என் வாழ்க்கை எந்த வித ஆச்சர்யங்களுக்கும், குறிப்பிடத்தகுந்த சம்பவங்களின் தாக்குதல்களுக்கும் ஆளாகாமலும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற துணையின்றியும் காற்றின் விசைக்கேற்ப நழுவிப்போய்க்கொண்டிருக்கிறது. இதுபோலவே இருக்கப்போகிற எதிர்கால நாட்கள்-அது குறித்த கற்பனைகள் என்னை பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன.கதவுகளுக்கு வெளியே நிரந்தரமாக விடப்பட்ட ஒரு ஜோடி செருப்புகளின் நினைவு வந்து மோதுகிறது.

கோபாலி போன வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்திய பௌர்ணமி இரவை என்னுடன் கழித்தார். ஃபோனில் பேசிக்கொண்டபோது ஏதோ பரபரப்பு-நிறையப் பேச வேண்டிய விஷயங்கள் என்று எதிர்பார்ப்புகளைத் தூண்டிய ஒரு மாலை.வந்து சேர்ந்து நேரில் பார்த்தபோது கோபாலியை என்னால் அடையாளம் காண முடியவில்லை.திடீரென வயதுகூடிப்போன ஒரு களைப்பு முகத்தை நிரப்பியிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பரிச்சயப்படுத்திக்கொண்ட காலம் அமைதியானதாக இருந்தது.

பின் சாப்பிட்டுவிட்டுக் கடற்கரை மணலில் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.அலைகள் பேரிரைச்சலோடு கடல்மணலை மோதித் திரும்பிக் கொண்டிருந்தன.தொலைதூரத்தில் நிறைய வெளிச்சங்களோடு கப்பல்கள் சிலை போல நின்றுகொண்டிருந்தன.பேசிப்பேசி ஒரு சமன நிலையை இருவரும் அடைந்தபோது எழுந்து அறைக்குத் திரும்புவதற்காகக் கிளம்பினோம்.

நிசப்தமாக இருந்த கடற்கரைச்சாலையின் ஒரு மங்கிய வெளிச்சத்தோடு திறந்திருந்த கடையில் பன்னீர்சோடா குடித்துவிட்டு சிகரெட் பற்றவைத்துக்கொண்டோம். பன்னீர் சோடாவின் பன்னீர் மணம் தஞ்சாவூரை ஞாபகப்படுத்துவதாக இருவரும் சொல்லிக் கொண்டு மேலே தெளித்துக் கொண்டோம்.

அறையில் வந்து ஜப்பானிய ஹகாகுரேயைப் பற்றி சம்பாஷித்தபடி யுகியோ மிஷிமாவின் புத்தகத்தில் அவரைக் கவர்ந்த வரிகளைப் படித்துக் காட்டினார். நான் என் பங்குக்கு நான் மொழிபெயர்த்திருந்த வைக்கம் பஷீரின் “நீல வெளிச்சம்” படித்துக்காட்டினேன். இறுதிப் பகுதியில் கோபாலி தூங்கிப்போயிருந்தார்.என் தனிமையின் துணையோடு கோபாலியை எழுப்பி, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் கடைசி வரை படித்தேன்.

அறை முழுதும் கொடியில் துவைத்துப்போட்டிருந்த துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.சில சிகரெட் துண்டுகள்.அரைகுறையாய் எரிந்துபோய் மறு ஏற்றுதலுக்காகக் காத்து நின்ற மெழுகுவர்த்தியை அன்றைய இரவு ஏற்றவேண்டியிருந்தது. தூங்கினோம்.

நங்கநல்லூரில் ஒரு வீட்டில் தனியாய் இருப்பதையும், அந்த வீட்டில் தன் பையனின் சிகிச்சைக்காக வந்திருந்தபோது பெண் லக்ஷ்மி சில சரளைக்கற்களையும் கூழாங்கற்களையும் வைத்து விளையாடி விட்டுப் போனதையும், ஜன்னல் கம்பியில் கடித்துத் துப்பிய பபிள்கம் ஒட்டி இருந்ததையும் சொல்லிவிட்டு இப்போது அவற்றைத் தினமும் தொட்டுத்தொட்டுத் தடவி தன் பெண்ணையும் குடும்பத்தையும் நினைத்துக் கொள்வதாகவும் சமயங்களில் கூழாங்கற்களையும் பபிள்கம்மையும் தொட்டுப் பார்த்தபடியே அழுவதையும் சொன்னார்.

எனக்கு

“இறந்துபோன
என் மனைவியின்
சீப்பு-
காலில்பட்டுக்
குளிர்ந்துபோனேன்”

ஹைகூ ஞாபகம் வந்தது.அடுத்த நிமிஷமே கோபாலி அந்த ஹைகூவையும் சொன்னார்.

பெருமூச்சு கரைந்து ஓடியது.

சுந்தர்ஜி.

கவிஞன்


ஓஷோவின் தத்துவங்களுக்கும் தேடல்களுக்கும் அவருடைய வாசிப்பும் உள்ளுணர்வுச் சிந்தனையும் பெரும் பங்கு வகிக்கிறது. வாசித்த லட்சக்கணக்கான புத்தகங்களில் அவருக்கு மிகவும் பிடித்தவை என்று நூற்றிஅறுபதை ஒட்டித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அவற்றில் மிகப் பழமையான தத்துவ நூல்களும்,மிகப் புதுமையான ஹிந்தி எழுத்தாளர் வாத்ஸ்யாயனா வரையும்,டாஸ்டயேவ்ஸ்கி தொடங்கி கலீல் கிப்ரான் வரையும் குர்ட்ஜியெஃப் தொடங்கி ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி வரையும் என எல்லாத் துறைகளிலும் அவரின் தேர்வு இருந்தாலும் அவரை கவிதைகளும் தத்துவங்களும் தான் அதிகமாக ஈர்த்திருக்கின்றன.

நல்ல வாசிப்பும் ஆழ்ந்த அகப்பார்வையும் உள்ளவர்கள் கவிதையையும் தத்துவத்தின் சாற்றையும் தனித்தனியே பார்ப்பதில்லை.தண்டவாளம் போல ஒன்று மற்றொன்று சிறக்க உதவுகிறது அல்லது ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. கவிதையின் பரவசம் எழுதவும் தத்துவத்தின் செழுமை எழுதாமலிருக்கவும் உதவுகிறது.

நல்ல கவிஞர்கள் என்று காலத்தால் அடையாளம் காட்டப்படுபவர்கள்  நிச்சயம் சில தன்மைகளுக்குள் அடைபடுகிறார்கள்.

1.தத்துவ விசாரம் 2. ஆழ்ந்த எளிமை 3. அகந்தையற்ற மனம் 4. எழுத்து மற்றும் வாழ்க்கை இரண்டிலும் ஒரே நிலை. 5.நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடிக்கும் போக்கு.

இவை அனைத்தும் பெற்றவர்கள் நல்ல மனிதர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் படைப்புக்களும் அமரத் தன்மையுறுகின்றன. ஒரு புத்தகம்-ஒரு சினிமா-சில ஓவியங்கள் என்று அவர்களின் படைப்புகள் எண்ணிக்கையில் சிறிதெனினும் அமிர்தத்தின் சுவையுடன் இருக்கிறது.

எல்லோரும் கவிதைகள் எழுதுகிறார்கள். எல்லோரும் பாராட்டப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே காலத்தால் கவனிக்கப்படுகிறார்கள். இன்று பாராட்டப் படுபவர்கள் தயவு தாட்சண்யமற்று கைகள் வழியே கவனிப்பற்று ஒழுகும் நீரைப் போல காணாது மறைகிறார்கள்.

9.9.10

நான் கடவுள்


சிலர் சிரிக்கிறார்கள்
பலர் ஒதுக்குகிறார்கள்
சலனங்கள் ஏதுமின்றிக்
கடந்து செல்கிறேன்
காற்றைப் போல.

சிலர் படிக்கிறார்கள்
பலர் நடிக்கிறார்கள்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
மழையைப் போல.

பலர் உடைக்கிறார்கள்
சிலர் இயலாது
விலகுகிறார்கள்
பொறுமையுடன்
கவனித்தபடி இருக்கிறேன்
மலைகளைப்போல.

சிலர் வளர்க்கிறார்கள்
பலர் அழிக்கிறார்கள்
வெட்டியும் துளிர்க்கிறேன்
மரங்களைப் போல.

பலர் இல்லாது
மறைகிறார்கள்.
சிலர் இருக்கிறார்கள்.
இல்லாது இருக்கிறேன்
கடவுளைப் போல.

7.9.10

தலைநரகம்


I
நிராதரவின் அரவணைப்பில்
உயிர் துறந்தவனின்
இறுதி நிமிடங்களை
மொய்க்கிறது
காத்திருப்பின் பரிதவிப்பு.

II
பொருத்தமில்லா
ஒப்பனைகளின் ஆழத்தில்
காய்ந்திருக்கிறது
பேரங்களின்
திகட்டும் மொழி.

III
தொலைத்ததும் அறியாது
இருப்பதும் புரியாது
சாலையின்
கரிக்கும் புகையில்
சொட்டுகிறது
காலத்தின் திவலை.

IV
கனவுகளின்
செங்கற்களில்
படிகிறது
நாளெல்லாம்
பெற்றோரைப் பிரிந்த
பிஞ்சுகளின் பால்மணம்.

V
விருந்துக்காய்த்
துடித்தடங்கிய
ஆடுகளின் குருதியில்
எழும்பத் துவங்குகிறது
நரகத்தின் வெளிச்சுவர்.

VI
செய்வது வேரறியாது
தலைக்கு மேல்
பார்ப்போரும் இல்லாது
உதித்து மறைகிறது
நகரத்தின்
சூரியனும் சந்திரனும்.

பேயரசு


பிணந்தின்று
பறக்கும் பறவையாய்
நீயும்
இடமறியாது வீழும்
எச்சங்களாய் உன்
அரசியலும்.

புகட்டப்படுகிறது
நாட்காட்டியின்
தாளைக் கிழிப்பதான
அலட்சியத்துடன்
உளுத்துப்போன சட்டங்கள்.

எதிர்பார்த்து எதிர்பார்த்துப்
புளித்து நுரைக்கிறது
என்றோ அரைத்த
மதியற்ற உன்
பேதலிக்கும் திட்டங்கள்.

கவணுக்கும் இலக்குக்கும்
இடையே சிக்கிய கல்லாய்த்
தத்தளிக்கிறது
வாழும் காலம்.

முட்டாள்!

யுகத்தைச் சுட்டெரிக்கும்
புரட்சியின் கொடுந்தீக்காய்
பெருமலை உச்சிக்கும்
அதல பாதாளத்துக்கும்
இடையே காத்திருக்கிறது
சபிக்கப் பட்ட எம்
குடிமக்களின் எதிர்காலம்.

மறைந்த பின்னும்
சாகாது வாழ
மீதமிருக்கிறது
உன் முடைநாற்ற
சவத்து வாழ்க்கை.

4.9.10

வேண்டுதல் அற்றவளின் பிரார்த்தனை
மணியோசைக்குப் பின்
பரவுகிறது அமைதியின் அலை.

வியாதி குணமாகுதலுக்கோ
புதிய வியாதியின் வரவிற்கோ

ஆகாத திருமணம்
நிறைவேறுதலுக்கோ
ஆனது முறிதலுக்கோ

எதிரியின் வீழ்ச்சிக்கோ

சூழ்ச்சிக்குத் துணை நிற்றலுக்கோ

கடன் தொல்லை விடுபடலுக்கோ
சொத்துக்கள் விலைபோகாதிருக்கவோ
விற்ற பொருள் திரும்பாதிருக்கவோ

முணுமுணுப்பாய்க் கேட்கின்றன
தயக்கத்தின் சொற்கள்.

இருண்ட அகல்களின்
நுனிகளில் சுடர்விடுகின்றன
நம்பிக்கை பருகிய
காலத்தின் திரிகள்.

பேராசைக்கும் நிராசைக்கும்
பொருத்தமான காணிக்கைகள்
இடப்படுகின்றன
முகமற்றவனின் பாதங்களில்.

மணியோசையின் 

அதிர்வுகளுக்குப் பிந்தைய 
யாருமற்ற இடைப்பொழுதில்
தேவாலயத்தின்
அசையும் மலர்களில்

மகரந்தமாய் நிரம்பியிருக்கின்றன
வேண்டுதல் எதுவுமற்றவளின்
பிரார்த்தனைகள்.

2.9.10

கருங்கனவுஅப்பிய இருளின் அலையில் 
ரை மோதுகிறது என் கட்டுமரம்.
மங்கலாய் அசைகிறது
பெண்களின் பின்புறம்
கண்ணாடி தொலைத்தவனின்
காட்சி போல.

மருள வைக்கிறது
நான்கு தலைக் குள்ளர்கள்
தலை கீழாய் நடத்தலும்
பெருத்த பாம்பொன்று
மடி புரள்தலும்.

உலுக்குகிறது
யாரென்றே தெரியாது
செய்த கொலையும்
கொலையுற்றவனின்
இறுதிக் கேள்வியும்.

பீதியில் உறைகிறேன்
குளம்பதிர இழுத்துச் செல்லும்
குதிரையை அடக்கும்
கட்டளை மொழி தொலைத்து.

மகா சமுத்திரத்தின்
நீரையும் வற்ற வைத்துப்
பின் ஏதுமறியாது
கலைந்து போகக்கூடும்
இதோ இப்படித்தான்
மற்றுமொரு கனவு.

1.9.10

மறுபிறவிநடுக்கத்துடன் திறக்கிறேன்
இரவின் கதவை மெதுவாய்.

சுவரெங்கும் பூசப்பட்டிருக்கிறது
பூத பைசாசங்களின்
கதறச் செய்யும் சாகசங்கள்.

ஒளி புகாது போர்த்துகிறது
அச்சம் தோய்த்த
கனவுகளின் போர்வை.

இரக்கமின்றி மூடுகிறது
நாசியின் துளைகளை
திகிலின் கருஞ்சொட்டு.

இறுகிப் போன பீதியின் கதவுகளில்
பெருத்த சப்தத்துடன்
அறையப்படுகிறது நிசப்தத்தின் ஆணி.

கொட்டும் இருளும்-
விடாத நாய்க்குரைப்பும்-
நிலவின் நிழலசைவும்-

அய்யோ நான்
செத்துத்தான் போயிருந்தேன்.

செத்தவனை எழுப்பியது
புலரியின் தேன் சுவைத்த
தேவாலய சங்கீதம்.

நினைவாய்ப் பின் தொடரும்
கோப்பை நிறைந்த
திட்டுக்களுடன் அம்மாவின் அதிகாலை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...