31.1.11

ஆணி வேர்


I
எத்தனையாவது
மனிதனுக்கான
சவப்பெட்டியிது?
எத்தனையாவது
மரத்திலிருந்து
இந்த சவப்பெட்டி?
எத்தனையாவது மனிதன்
உருவாக்கும்
சவப்பெட்டியிது?
தெரியாது.
II
பிறப்பின் காரணம்
ஏதுமில்லையெனில்
இறப்பின் காரணமும்
அடைப்புக்குறிக்குள்
வயதும்
எதுவானால் என்ன?
III
பிறக்கையில்
உன்னருகில் நீ
யாரெனத்
தெரியாத
நான்கு பேர்.
போகும்போது
நீ யாரெனத்
தெரிந்த
நான்கு பேர்.
அவ்வளவுதான்.
IV
யார் யாரோடோ
பழகி
யார் யாரோடோ
விலகி
யார் யாரோடோ
வாழ்ந்து
யாருமேயற்ற
ஒருநாளில் பிரிந்து
எல்லோரின்
நினவிலிருந்தும்
மக்கிப் போகும்
பேரவஸ்தைக்கு
வாழ்க்கை
என்ற பெயரிட்டவன்
எவன்?

30.1.11

அஞ்சலி


யாரொருவர்
தன்வாழ்க்கையின்
ரகசியங்களைத்
திறந்த புத்தகமாக்கத்
துணிந்தாரோ-
துணிவாரோ-
யாரொருவர் தன்
சொல்லையும்
செயலையும்
ஒன்றாய்
இணைத்தாரோ-
இணைப்பாரோ-
யாரொருவரின்
சுவடுகள்
யாரொருவரும் செல்லாத
அடர்வனங்களில்
இறுதிவரை பயணித்ததோ-
பயணிக்குமோ-
யாரொருவர்
இலக்கை அடைந்ததன்
பின்னுள்ள காலத்தை
முன்கூட்டியே
கண்டறிந்து
சொன்னாரோ-சொல்வாரோ-
யாரொருவர்
யாராலும் தொடமுடியாத
உயரத்தை
விட்டுச் சென்றாரோ-
செல்வாரோ-
யாரொருவரை
இனிவரும் காலங்கள்
தாகித்துத் தேடியலையுமோ-
தேடிக்கண்டடையுமோ-
அவருக்குப் பெயர்
காந்தி என்பதாய் இருக்கும்-

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லா தேரே நாம்
ஸப்கோ ஷன்மதி தே பகவான்.

27.1.11

விளம்பர போதைஸ்வாரஸ்யமான விளம்பரங்களின் ரசிகன் நான். விளம்பரங்கள் நேரடியாக முகத்தில் அடித்தது போல இல்லாமல் இலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் மாம்பழம் போல (இலை மறை காயிலிருந்து தப்பியாச்சு) சொல்லியும் சொல்லாமலும் இருக்கவேண்டும்.
சின்ன வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அழகு தமிழுக்கு நடுவே வீவா விளம்பரப் பாடலும்-ராஜேஸ்வரி ஷண்முகம் அப்துல்ஹமீதின் லலிதா தங்கநகை மாளிகை விளம்பரமும்-ரின் சவுக்கார(சோப்தான்) விளம்பரமும் தான் செவி வழியே விளம்பரத்தின் மேல் வேர்விட்ட முதல் நினைவுகள்.
இந்தியாவின் ரசனை முதன்முதலில் அமுலுக்குப் பிறகு முத்ரா ஏஜென்ஸி(ரிலையன்ஸ்) மூலமும் லிண்டாஸ் (லிரில் சோப்) மூலமும்தான் அடையாளம் காட்டப்பட்டது. மரபுகளைத் தாண்டிய புதியபாதை அங்கே தடம் பதித்தது.
அதன் பின் இந்திரா காங்கிரஸ் முழுப் பக்க அளவில் கொடுத்த எமெர்ஜென்ஸிக்குப் பிந்தைய எண்பதுகளின் எதிர்மறை விளம்பரங்களும் நினைவுக்கு வருகின்றன. காங்கிரஸின் கணக்கை அது தலைகீழாய் மாற்றியது. எப்படி விளம்பரம் அமையக்கூடாது என்று சொல்லும் சாட்சியாக நெடுங்காலமாகக் கிழித்துவைத்திருந்த விளம்பரங்கள் எல்லாம் மக்கிக் கிழிந்தும் தொலைந்தும் போய்விட்டன.
தொண்ணூறுகளில் சென்னையின் ஸ்பென்ஸர் சந்திப்பில் வாராவாரம் அமுல் விளம்பரங்கள் மிகவும் ப்ரபலம். அநேகமாக அந்த வாரத்தின் சூடான செய்தி அமுல் வெண்ணையுடன் இணைக்கப்படுவது மாதிரியான புத்திசாலித்தனம் வேறெந்த நிறுவனத்துக்கும் வந்ததாகத் தெரியவில்லை. விடியற்காலையிலோ அல்லது சில நாட்கள் நள்ளிரவிலோ வரையப்படுவதைப் பார்த்து எதிரே க்ராதியில் சாய்ந்தபடி மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்ததுண்டு.
அதே போல் ஒயிட்ஸ் சாலையின் முனையில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் வார விளம்பரங்களும் மிகுந்த கற்பனையோடும் அபாரமான வார்த்தைத் தேர்வோடும் இருக்கும். இன்றைய ப்ன்ச் டயலாகின் கொள்ளுத் தாத்தா அவை. அற்புதம்.
இவர்களைப் போலில்லாவிட்டாலும் இந்தியன் ஏர்லைன்ஸ்ஸின் விளம்பரங்களின் வண்ணத்தேர்வும் படங்களின் அமைப்பும் சற்று சுமார் ரகத்தில் இருக்கும். இதைத் தாண்டி ஒன்லி விமல் என்ற குரல் இசையோடு வரும் ரிலையன்ஸ் விளம்பரங்களும், அபத்தமான ஹமாம் மற்றும் ஹார்லிக்ஸ், போர்ன்விடா விளம்பரங்களின் மத்தியில் ரெஹ்மானின் மொஸார்ட்டின் சிம்பனியை நினைவுபடுத்தும் புதிய டைட்டான் கடிகார விளம்பரங்கள் இன்றுவரை ஹிட்தான்.
இப்போதெல்லாம் தாட்களில் வரும் அல்லது வரையப்படும் விளம்பரங்களை யாரும் அதிகம் கவனிப்பதில்லை.அல்லது அவை நம் கவனத்தைக் கவர்வது இல்லை. ஆக தொலைக்காட்சியின் திரைகளில் திகட்டத் திகட்ட விளம்பரக் கூத்துக்களின் மழையில் நனைந்துகொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் சரி. ஒரு விளம்பரம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன கண்ணுக்கு முன்னால்.
அந்த விளம்பரத்துக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் சொல்பமாவது தொடர்பு இருக்க வேண்டும். (வயதான விஜயகுமாரும் நாசரும் இரும்புக் கம்பியை முடியாத வயதில் தூக்கிக் காட்டுவது போல இல்லாமல்.)
விளம்பரத்தில் கூட்டமாக மிரட்டுவது போல எல்லோரும் நடனமாடியபடியே ஒரு பொருளை அநியாயத்துக்குச் சிரித்தபடியே வாங்கச் சொல்வது. (சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கி சரவண பவன் வரை; அநேக துணி மற்றும் தங்க நகைக் கடை விளம்பரங்கள்).
அல்லது ஒரு பொருளைப் பற்றி நம்பமுடியாமல் கதைவிடுவது.
ஆரோக்யா பாலைக் குடித்து பரீட்சையில் நூற்றுக்கு இருநூறு எடுப்பது போலோ- சிவப்பாக இருக்க சொறிபிடித்த ஏதோ க்ரீமைப் பூசிக் கொண்டமையால் உலகத்தின் மிகப் பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்வது போலோ- ஏதோ பற்பசையால் பல்துலக்கியதால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றது போலோ- கோக்/பெப்ஸி குடித்தால் பெண்களை எளிதாக டாவடிக்கலாம் என்பது போலோ-தாங்கமுடியாத நாற்றமடிக்கும் நறுமணப் பீய்ச்சியை(தமிழில் பெர்ஃப்யூமை எப்படிச் சொல்ல- வார்த்தைகள் வரவில்லை) உடலில் போட்டுக்கொண்ட ஆணின் பின்னாலேயே குளிக்காத இருபது முப்பது பெண்கள் அரைகுறை ஆடையுடன் தெருவில் ஓடுவது போலோ- தாங்கமுடியலை சாமி.
அல்லது ஒரு கோழியின் காலை அது செத்தபின்னும் கடிக்கிற கடியில் அதற்கு வலித்து அலறலாம் என்கிற அளவில் மதன்பாப் கடித்து வெளிவந்த பரமக்குடி ரெஸ்டாரெண்ட் விளம்பரங்கள் அடுத்த முறை சாப்பிட விருப்பமுள்ளவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தி விடும்.
நிபந்தனைகள் தனி என்று 6பாய்ண்ட் எழுத்துருவில் விளம்பரத்தின் கடைசியில் படுவேகமாகக் காட்டி மறைவது அப்பொருளின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும்.(பல நிதி நிறுவனங்களும் தவணைத் திட்ட நிறுவனங்களும் இந்த மோசடியைச் செய்கின்றன)
ஒரு யுவதியின் மென்னுடலைத் தொட்டும் தொடாமலும் தழுவும் வஸ்திரத்தின் தன்மை விளம்பரப்படுத்தப்படும் பொருளுக்கும் விளம்பரத்துக்கும் இருக்கவேண்டும். அதற்கு எல்லாவற்றையும் எல்லாரையும் கவனித்துக் கொண்டே இருக்கிற சூட்சுமம் வேண்டும்.
புத்திசாலித்தனமான விளம்பரங்கள் முழுமையாய்த் தன் பொருள் பற்றிச் சொல்லாது. அந்தப் பொருள் என்ன? என்று அறியும் அல்லது அதைத் தேடும் ஆவலைத் தூண்டும் பொறியாக இருக்கும். அதிகமாகப் பேசாது. குறைந்த வார்த்தைகள் பொருத்தமான இசை இவற்றைக் கொண்டிருக்கும். மெல்லிய ஹாஸ்யத்தையோ அல்லது விடுவிக்கப்படாத புதிரையோ கொண்டிருக்கும். காலங்கள் தாண்டினாலும் அதன் இசையும் கருத்தும் பிசாசு போலத் துரத்தும்.
இந்த க்ரீன் ப்ளை விளம்பரம் ஒரு கவிதை.
https://www.youtube.com/watch?v=Qz46HSBRjiM
சமீபத்தில் வந்த விளம்பரங்களில் எஸ்.பி.ஐ. காப்பீட்டு விளம்பரங்களும்- செண்டர்ஃப்ரூட் தபேலா வாசிப்பவர் விளம்பரமும்-சென்டர்ஃப்ரெஷ் விளம்பரங்களும்-பெவிகால் விளம்பரங்களும்-ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி விளம்பரங்களும், பக் ஜாதி நாயுடன் வந்தவையும், ஸூஸூ லூட்டியடிப்பதுமான வோடஃபோன் விளம்பரங்களும், எம்.டி.ஆர்.குலாப்ஜாமுன் விளம்பரமும் -  தொடக்கத்தில் ஏர்டெல் விளம்பரங்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பவை.
தாய்லாந்தின் விளம்பரப் படங்களின் நினைவுவருவதைத் தவிர்க்க முடியவில்லை. காப்பீடு தொடர்பான இவர்களின் விளம்பரத்துக்கு இணையான விளம்பர மூளையை நான் எங்கும் கண்டதில்லை. காப்பீட்டுக்கும் இந்த விளம்பரங்களுக்கும் நேரடியான தொடர்பிலாதது போல் காட்டி முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லும் விளம்பரங்கள் இவை. தயவு செய்து இவற்றைத் தவற விடாதீர்கள்.
http://www.youtube.com/watch?v=LR5mZqeDNtg&feature=related
http://www.youtube.com/watch?v=u1OmpTPffQc
http://www.youtube.com/watch?v=RkoRDFjBh44&feature=related
http://www.youtube.com/watch?v=BOuHaTt2XUw&feature=related
http://www.youtube.com/watch?v=UcYflK8cBUg&feature=related
http://www.youtube.com/watch?v=9ll-bDmK3EA&feature=related
இவற்றையெல்லாம் எத்தனையோ தடவை பார்த்துவிட்டேன். ஆனாலும் விளம்பரங்கள் என்ற தளத்தைத் தாண்டி "நான் யார்?" என்ற போதனை புகட்டும் ஆசானாகவும் இவை இருக்கின்றன என்பதை மறுபடிமறுபடி எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன இவ்விளம்பரங்கள். இவற்றைப் பதிவிடும் இந்த இரவிலும் நான் கண்ணீரில் கசிகிறேன்.

26.1.11

குடியரசு தின வாழ்த்துக்கள்

சிந்தப்பட்ட தியாகங்களின் குருதிக்கும்-
மாற்றங்களுக்கான நம்பிக்கைகளுக்கும்-
எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்கும்-
ப்ரார்த்தனைகளும்
தலைவணங்குதலும்.

ஜெய் ஹிந்த்.

25.1.11

ஏன் அரசியல்?


இன்றைக்கு நிலவும் அரசியலில் அங்கொன்றும் இங்கொன்றும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தவிர ஆரோக்கியமான சொல்லிக்கொள்ளும் வகையில் தலைவர்கள் இல்லை என்பது உண்மை.

இன்றைக்கும் நேர்மையான உண்மையான தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள காந்திக்குப் பின் லால்பஹதூர் சாஸ்திரியையும் ஆச்சார்ய க்ருபளானியையும் காமராஜரையும் கக்கனையும் சமீப காலத்தில் (இருபது வருஷங்களுக்கு முன்) ந்ருபேன் சக்ரவர்த்தியையும் தவிர புதிய உதாரணங்கள் ஏன் நம்மிடம் இல்லை?

ஒரு குடும்பத்துக்கு முன்மாதிரியாகத் திகழக்கூடியவர்கள்/வேண்டியவர்கள் பெற்றோர்களும் அந்த வீட்டின் பெரியவர்களும். அந்த வீட்டின் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் வளரவும் சிந்திக்கவும் பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளவும் சுகாதாரமான முறைகளைத் தெரிந்து கொள்ளவும் மரியாதைக்குரிய பண்புகளோடு வளர்வதிலும் முக்கியப் பங்கு பெரியவர்களுக்கிருக்கிறது.

அந்தக் குழந்தைக்கு நல்ல வாசிக்கும் பழக்கம் இருக்கவேண்டுமென்றால் பெரியவர்களிடம் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அந்த வீட்டில் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தால் குழந்தையிடம் அதுவும் தொற்றிக்கொள்ளும்.

கதைகள் சொல்லத்தெரிந்த- ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாகப் பேசத் தெரிந்த வீடுகளில் அதைக் கவனித்து வளரும் குழந்தையிடம் அந்தப் பழக்கம் தானாகத் தொற்றிக்கொள்கிறது. அந்தத் தெருவில் சாக்கடையில் அடைப்பு இருந்து அதைச் சரி செய்ய அந்த வீட்டில் உள்ளவர்கள் முனைப்புக் காட்டுவதைப் பார்க்கும் குழந்தை பொதுப் பிரச்சனைகளில் அக்கறை கொள்கிறது.

இதற்கு மாறாக கீழ்த்தரமான-குழந்தைகள் முன்னால் எதையெல்லாம் பார்க்கவோ பேசவோ கூடாதோ அதையெல்லாம் அந்தப் பெரியவர்கள் பார்க்கவோ பேசவோ செய்தால் அந்தக் குழந்தையும் தன் குணத்தை அப்பாதையிலேயே கொண்டுசெல்கிறது.நல்லவை கெட்டவை இரண்டிற்கும் விதிவிலக்குகளும் உண்டு.

ஆனாலும் பொதுவாக ஒரு முகம் காட்டும் கண்ணாடியின் தன்மை பெரியவர்களுக்கு இருக்கிறது.அவர்களில் தன்னைப் பார்க்கும் குழந்தை அவற்றையே ப்ரதிபலிக்கிறது.

அதுபோல வீட்டின் நிர்வாகமும். சம்பாதிப்பதற்கேற்ப செலவு செய்வது ஒரு முறை.செலவுக்கேற்ப சம்பாதிப்பது மற்றொரு முறை. இரண்டாவது ரகத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் வருகிறார்கள்.நம் முந்தைய தலைமுறை கற்றுக்கொடுத்த முதல் ரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுவிட்டோம். இஷ்டப்படி செலவுகளைச் செய்யும் மனோபாவம் வந்துவிட்டால் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற மனோபாவமும் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் வாசற்கதவுகளைத் திறக்கவும் தயாராகி வாழ்க்கையின் குணமும் தரமும் கெட்டுப்போய் வீட்டின் நிர்வாகமும் சீர்கெட்டு அது நாட்டையும் பாதிக்கிறது.

இது மாதிரி எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் ஒரு வீட்டின் அளவிலிருந்து பார்த்தால் எத்தனை இலகுவானதாகத் தோன்றுமோ அதையே பெரிய அளவில் விரித்துப் பார்த்தால் நாட்டுக்கு.

ஆறு பேருக்கு சமைக்கத் தெரிந்தால் அதையே ஆயிரம் பேருக்கு சமைக்கப் பழகமுடியாதா? பாத்திரமும் அளவும் சமைக்கும் நேரமும் மாறலாம். சமைக்கத் தேவையான பொருட்களும் செய்முறையும் ஒன்றுதானே? நிர்வாகம் வீட்டுக்கு செய்யமுடியுமென்றால் நாட்டுக்கும் அதுதானே.இதில் பெரிய குழப்பம் இல்லை.

வீட்டுக்காக வீட்டின் குழந்தைகள் வளர கற்க எத்தனை தியாகங்கள் செய்கிறோம்? குழந்தை பிறந்த நாள் முதல் தொடங்கி அதன் உணவுப் பழக்கம் நம்மைப் போல மாறும் வரை எத்தனை நாட்கள் இரவில் கண்விழிக்கிறோம்?அதன் நாட்கள் வளர வளர அந்தந்த நாட்களில் எத்தனை எத்தனை விட்டுக்கொடுக்கிறோம்?அதற்குப் பிடிக்குமென்று நமக்கு விருப்பமான ஒன்றை அதற்குக் கொடுத்து அதன் சந்தோஷத்தில் மகிழ்கிறோம்.அதற்கு நோயுற்ற சமயம் நமக்குமல்லவா நோய் பீடிக்கிறது?அது குணமாகும்வரை நாமுமல்லவா நம் உணவைத் தியாகம் செய்கிறோம்?இப்படி எத்தனை எத்தனை?அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆக ஒரு வீட்டின் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரியவர்கள் செய்யும் தியாகத்தை ஒத்ததல்லவா ஒரு தலைவன் நாட்டுக்காகச் செய்யும் தியாகமும் வியர்வை வழிதலும்? ஆனால் நம் தலைவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?

ஊழல்களில் சிக்காத ஒரு ஆட்சியை யோசித்துப்பார்க்க முடியுமா? லஞ்ச லாவண்யங்கள் இடம் பெறாத மாநில நிர்வாகமோ மத்திய நிர்வாகமோ இருக்கிறதா? உச்ச நீதிமன்றம் ஒரு வேலை முடிவதற்கு லஞ்சம் கொடுக்கத்தான் வேண்டியதிருக்கிறது என்று ஒப்புக்கொண்டது நம் தலைவர்களின் வெற்றியா? வீழ்ச்சியா?

நாட்டின் வன்முறைக்கும் கலவரக் கலாச்சாரமும் பரவத் துணைபோனது தலைவர்கள்தானே? எனக்காகத் தீக்குளிக்கும் தொண்டன் கட்சிக்குத் தேவையில்லை என்று தைரியமாக யாராவது சொன்னதுண்டா? பெருத்த செலவுகளையும் எல்லாருக்கும் இடைஞ்சல்களையும் உண்டுபண்ணும் மாநாடுகள் -இன்றைய நெருக்கடியில்- கைக்கெட்டாத எரிபொருள் விலையில்- தேவையில்லை என்று ஒழித்துக்கட்ட இன்றைக்குக் கட்சி தொடங்கி பேரம் பேசிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் வரைக்கும் யாரிடமாவது பொறுப்பிருக்கிறதா?

மழையால் உண்டான வெள்ளச்சேதங்களுக்கு முக்கியக் காரணமே நம் வாய்க்கால்களை மழை வரும் வரை துப்புரவாக வைத்துக் கொள்ளாதிருப்பதுதான் என்ற சிற்றறிவு கூட இல்லாமல் பணக்காரன் ஏழை என்ற பேதமில்லாமல் இலவசமாக கோடிக் கணக்கில் நிவாரணம் கொடுக்கும் பைத்தியக்காரத் தனம் வேறெந்த நாட்டிலும் நடக்காது.
மழைநீர் மட்டுமே நம் நீராதாரம். எத்தனை காலன் மழை நீரை ஏரிகளில் சேமிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கடக்க விடுகிறோம்? இருப்பதைச் சேமிக்க விட்டுவிட்டு கடல் நீரைக் குடிநீராக மாற்றும்-இயற்கைக்கு ஒவ்வாத திட்டத்துக்குக் கோடிகளில் செலவிடுகிறோம்.இது எதிர்காலத்தில் நோய்களையும் மனித உடலில் மாறுதல்களையும் உண்டுபண்ணாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்போதுதான் அதற்கு பதில் சொல்ல நாமிருக்க மாட்டோமே என்கிற திமிர்தான் இதன் காரணம்.
உரங்களை உபயோகித்து விளைநிலங்களைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டதும் புதிய புதிய நோய்கள் உருவாக்கி சந்ததிகளையே நாசமாக்கிவிட்டதையும் இப்போது ஆர்கானிக் விவசாயம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதையும் சாபத்துடன் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
வருமானத்துக்காகக் கள் சாராயம்.அதிலிருந்து கிடைக்கும் அவர்கள் வயிற்றில் அடித்த பணத்தைக் கொண்டு இலவசங்கள்.எத்தனை இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளில் புழுங்கியபடி வேலைசெய்கிறார்கள் தெரியுமா நண்பர்களே?

இந்த அளவுக்குக் குடியிலிருந்து வருவாய் கிடைக்குமானால் எந்த அளவு அவர்களின் உடல்நலம் பாதிக்கக்கூடும்? எந்த அளவு இப்படி பாழாகும் தனிநபர் வருமானம் அவர்களின் குடும்பத்தின் அத்தியாவசியமான செலவுக்கு உதவியாய் இருக்கக்கூடும்?இருக்கும் கொஞ்சநஞ்சக் கூர்மையையும் நேரத்தையும் மழுங்க அடிக்க இலவசத் தொலைக்காட்சியின் கூத்துக்களும், குடித்துக் கெட்டுப்போன ஈரல்களுக்கு இலவசக் காப்பீடும் எத்தனை பொருத்தமில்லாப் பொருத்தம்?

எத்தனை இளைஞர்கள் பொருத்தமான வேலையற்றுச் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களை ஏன் சாதகமான வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்ளக் கூடாது? அரசு அலுவலகங்கள் ஏன் 24மணி நேரமும் இயங்கக் கூடாது?மூன்று ஷிப்ட்களில் இளைஞர்களை நியமித்து அடிப்படையான எல்லாச் சேவைகளையும் ஒரு நாளும் விடுப்பின்றி இயங்க வைத்து வேகமான நிர்வாகத்தை ஏன் கொடுக்க முடியாது? சாலைத் துப்புரவில் தொடங்கி வங்கிப் பணிகள் தொடங்கி பாதுகாப்புத் தொடங்கி உணவு விநியோகம் தொடங்கி எங்கெல்லாம் மக்களின் வரிசை சேவையை எதிர்நோக்கி நீள்கிறதோ அங்கெல்லாம் டாஸ்மாக் இளைஞர்களை உபயோகித்து விரைவான சேவையை ஏன் தர முடியாது?

வரிவிதிப்பில் காலம்காலமாகத் தொடரும் விதிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.இதற்குப் பொதுக் கருத்து உருவாக்கப் படவேண்டும்.ராஜாஜி தொடங்கிவைத்த விற்பனை வரியை ஒண்ட வழியில்லாத பொதுஜனம் வரை கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.வரிவிதிப்பு கொடுப்பதற்கு ஏற்ற மக்களுக்கு மட்டுமே விதிக்கப் படவேண்டும்.

மாற்றங்களை நாம் கொணர்வோம்.
(தொடர்வேன்)

23.1.11

உயிர் வேட்கை.


எறும்புக்கு ஒற்றை விரல்.
கொசுவுக்கு ஒரு கை.

ஓணானுக்கு ஒரு சுருக்கு.
குருவிக்கு ஒரு சிறுகல்.

பாம்புக்கு ஒரு கழி.
தவளைக்கு ஒற்றைஅடி.

நத்தைக்கு ஒற்றை மிதி.
நாய்க்கோ கல்லெறி.

மாட்டுக்கும் பன்றிக்கும்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அதனதற்கேற்றாற் போல்.

மீனுக்கு வலைவீச்சு.
யானைக்குப் பெரும்பள்ளம்.

மானுக்கு ஒற்றைக்குறி.
காளைக்கும் கழுதைக்கும்
பெரும்பாரம்.

ஒட்டகத்துக்கு
முடிவில்லாப் பாலை.
குதிரைக்கோ விதவிதமாய்.

வாழாதிருந்து சாகிறான்
மனிதன்.

சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்.

20.1.11

நிலைக்க முயல்கிறேன்


பார்க்க முயல்கிறேன்
வண்ணங்களை-
பார்வையற்றவனின்
விழி மூலம்.

பேச முயல்கிறேன்
என் மனதை-
வார்த்தையற்றவனின்
குரல் மூலம்.

மீட்ட முயல்கிறேன்
என் இசையை-
மரித்துப் போன
தந்திகளில்.

கடக்க முயல்கிறேன்
தூரங்களை-
கால்களற்றவனின்
சுவடுகளில்.

வாழ முயல்கிறேன்
நாளெல்லாம்-
கூரைகளற்ற வெளியின்கீழ்.

நிலைக்க முயல்கிறேன்
காலமெல்லாம்-
எழுதிக் கிழித்த
என் கவிதைகளில்.

18.1.11

பயணம்I
எதையெதையெல்லாமோ
எடுத்துப்போகிறோம்
தேவைப்படலாமென.
எதுவுமே
தேவையற்றுப்போவதாக
முடிவுற்று
நிறைகிறது பயணம்.

II
எதுவும் பேசமுடிவதில்லை
பயணிக்கையில்.
பேசாதும் இருக்கமுடிவதில்லை
வாழமுடியாத போதும்
வாழ்ந்தபடி இருப்பது போல.

III
வாழமுடியாத போதும்
வாழ்கிறோம்.
செல்ல விரும்பாதபோதும்
செல்கிறோம்.
வாழ்க்கை நம் கையில்
என்றாலும்
வாழ்வதும் செல்வதும்
நம் கையில் இல்லை.

IV
பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின் பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.
உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்.

14.1.11

சிவவாக்கியர் புராணம்.


கொஞ்ச நாள் முன்னால் சித்தர்களைப் பற்றிய
பதிவில் தொடரும் போட்டிருந்தேன்.தொடர்கிறேன்.

சித்தர்களில் சுவாரஸ்யமான வரலாற்றுக்குப் பஞ்சமில்லாதவர் சிவவாக்கியர் தான். இன்றைக்கு மேஜிகல் ரியலிஸம் என்று ஆவென்று வாயைப் பிளக்கும் நாம் கொஞ்சம் சிவவாக்கியரின் கதையைப் பார்த்தால் வாயை மூடிக்கொண்டு விடுவோம்.

பிறக்கும்போதே சிவசிவ என்றபடிப் பிறந்ததால் இவர் பெயர் இப்படி. இனி சி.வா.

சிறுவயதிலேயே ஒரு குருவிடம் வேதங்கள் கற்ற சி.வா. காசியைப் பற்றிக் கேள்விப்பட்டுக் காசிக்குச் சென்றார். அங்கே ஒரு சித்தர் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்தார். அவரைக் கண்டு வணங்கிய சி.வா.வை வரவேற்று அவரின் சரக்கை ஆழம் பார்க்க விரும்பிய அந்தச் சித்தர் தன்னிடம் இருந்த காசுகளைத் தன் தங்கை கங்காதேவியிடம் கொடுத்துவிட்டுக் கசப்பான ஒரு பேய்ச்சுரைக்காயின் கசப்பையும் கழுவிக்கொண்டு வரச்சொன்னார்.

சொன்னபடிக்கு எதுவும் பேசாமல் நேரே கங்கைக்குச் சென்று கங்கையில் இறங்கித் தண்ணீரைத் தொட்டார். கங்கையிலிருந்து வளையலணிந்த கையை வெளியில் நீட்ட அக்கரத்தில் காசுகளை சி.வா. வைக்க அதைப் பெற்றுக்கொண்டு அந்தக் கை தண்ணீரில் மறைந்தது.

சிறிதும் இச்செயலால் சலனப்படாமல் பேய்ச்சுரையை நீரில் கழுவிக்கொண்டு சித்தரிடம் வந்துசேர்ந்தார் சி.வா. அடுத்த சோதனையை எடுத்து விட்டார் அந்தச் சித்தர்.

”இதோ இங்கிருக்கும் தோல்பையிலுள்ள நீரிலுள்ள கங்கையிடம் நீ கொடுத்த காசுகளைத் திருப்பிக் கேள்.” என்றதும் சி.வா. அப்படியே செய்தார். சித்தரின் தோல்ப்பையின் தண்ணீரிலிருந்து வெளிப்பட்ட கையொன்று சி.வா.வின் கைகளில் காசுகளைக் கொடுத்துவிட்டு மறைந்தது. இப்போதும் சி.வா. சலனமின்றி அமைதியாய் இருந்தார்.

சி.வா.வின் முதிர்ச்சியைக் கண்ட அந்தச் சித்தர் அவரைக் கட்டித் தழுவி, ” சி.வா. முக்தியடையும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி சிறிது மணலும் பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “ இவற்றைச் சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

சி.வா. அவரை வணங்கிவிட்டுக் கிளம்பினார். ஒரு பகல்பொழுதில் நரிக்குறவர்கள் கூடாரமிட்டிருந்த பகுதி வழியாகச் செல்லுகையில் வெளியில் வந்த ஒரு கன்னிப்பெண் சி.வா.வைப் பார்த்து உள்ளுணர்வு தூண்டியவளாய் “உங்களுக்கு வேண்டியதை நான் செய்து தரட்டுமா?” என்றாள். ”இந்த மணலையும் பேய்ச்சுரைக்காயையும் உன்னால் சமைத்துத் தர முடியுமா?” என்று கேட்டார் சி.வா.

அந்தக் குறப் பெண்ணும் அதற்குச் சம்மதித்து சமைக்கத் துவங்கினாள். மணல் பொலபொலவென அருமையான சாதமாகவும் பேய்ச்சுரைக்காய் சுவைமிக்க கறியாகவும் மாறியது. சி.வா.வும் அதை ரசித்து உண்டுவிட்டுத் தான் தேடிய பெண் இவள்தான் என் அறிந்தார்.

அந்த சமயம் காட்டுக்குச் சென்றிருந்த அவள் பெற்றோரும் உறவினரும் திரும்பிவர அவளைத் தனக்கு மணம் முடித்துத் தரக் கேட்டார். அதற்கு அவளின் பெற்றோர் சம்மதித்து திருமணத்திற்குப் பின்னும் தங்களுடன் தான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விதிக்க சி.வா.வும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

உடனே தன் தவ வாழ்க்கைக்கு வி.ஆர்.எஸ். கொடுத்து விட்டு ஹனிமூன் போய்விடாமல் தொடர்ந்து தவ வாழ்க்கையையும் மேற்கொண்டார். மற்றொரு புறத்தில் குறவர்களின் குலத் தொழிலையும் கற்றுக்கொண்டார்.

திடீரென ஒருநாள் காட்டிற்குள் போய் ஒரு கனத்த மூங்கிலை வெட்டத் தொடங்கினார். மூங்கில் கழியிலிருந்து பொற்துகள்கள் சிதறிக் கொட்டத் தொடங்கின. “சிவபெருமானே!இது நியாயமா?உன்னிடம் முக்தியைக் கேட்கையில் இப்படிப் பொருளாசையூட்டலாமா?” என்று பதறி ஓடினார்.

அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அந்த மூங்கிலிருந்து எமன் வருகிறான் என்று மூங்கிலில் இருந்து பொற்துகள்கள் ஒழுகுவதைக் காட்ட அவர்கள் அசந்து போய் சி.வா.வை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஒரு பெரிய மூட்டையளவு கட்டிமுடிக்கவும் இருள் சூழத் தொடங்கவும் சரியாக இருந்தது.

இருவர் அங்கேயே மூட்டைக்குக் காவலிருக்க இருவர் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு காவலிருந்த இருவரையும் கொன்றுவிட்டு மொத்தத் தங்கத்தையும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள எண்ணி அவர்களுக்கான உணவில் விஷத்தைக் கலந்து காவலுக்கு இருந்தவர்களிடம் திரும்பினார்கள்.

மூட்டைக்குக் காவலாக இருந்த இருவரும் பக்கத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் சேகரித்து வரச்சொல்லி வந்த இருவரையும் அனுப்பி அவர்கள் பின்னாலேயே சென்று கிணற்றுக்குள் நீருக்காகக் குனிகையில் அவர்களைக் கிணற்றுக்குள் தள்ளிக் கொன்றுவிட்டுத் திரும்பி விஷம் உணவில் கலக்கப்பட்டிருப்பது அறியாமல் அந்த உணவையே உண்டு அவர்களும் சிறிது நேரத்திலேயே இறந்தனர்.

பொழுது புலர்கையில் வழக்கம்போல் காட்டிற்கு வந்த சி.வா. தான் சொன்னபடி மூங்கிலின் பொற்துகள்களின் வழியே எமன் வந்து இவர்கள் உயிரைப் பறித்துவிட்டானே என வருந்தினார்.

மற்றொரு முறை சி.வா. வானவீதியில் சென்று கொண்டிருந்த கொங்கணச்சித்தரைச் சந்திக்க நேர்ந்தது. பின் இருவரும் அடிக்கடி சந்திக்கலாயினர். சி.வா. மூங்கில்க்கூடைகள் முடைந்து பொருளீட்டி வறிய வாழ்க்கை வாழ்வதைக்கண்ட கொங்கணர் இரும்பைத் தங்கமாக்கும் வரத்தைக் கையில் வைத்திருந்தும் சி.வா. இப்படி துன்பத்திற்குள்ளாவது தாங்காமல் சி.வா. வெளியில் போயிருந்த ஒருநாள் அவர் மனைவியிடம் சில இரும்புத் துண்டுகளை வாங்கித் தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு மறைந்தார்.

சி.வா. திரும்பியதும் நடந்ததைக் கூற சி.வா. சிரித்தபடி அவற்றைக் கிணற்றில் போட்டுவிட்டு வரச் சொன்னார். மனைவியிடம் தங்கத்தைத் தூக்கிப்போட்டது உனக்கு வருத்தமா என்று கேட்க நோ.நாட் அட் ஆல் என்றார் அவர் மனைவி.

இப்படியாக சி. வா. பற்றிக் கூறப்படும் வரலாறு நிறைவு பெறுகிறது.

பழமையான கலாச்சாரமும் வரலாறும் நிறைந்த நம்மிடமும் கிரேக்கர்களிடமும் இது மாதிரியான இதிகாசத் தன்மை கொண்ட கதைகள் ஏராளம்.

இது கற்பனையா நிஜமா என்று மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல் ஒரு பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தையின் மனதோடு நாம் கலைவோமானால் நம்மிடம் இது போன்ற வளம் மிக்க கதைகள் நிறையத் தோன்றும்.

12.1.11

விலை-வாசி


ஒரே முறை ஆட்சியிலிருந்த ஜனதா அரசின் பெரிய சாதனையாக ஒரு அளவுச்சாப்பாட்டின் விலை ஒரு ரூபாய் என்ற கட்டுக்குள் 1977ல் அறிமுகப்படுத்தப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றது. அச் சாப்பாட்டுக்கு ஜனதா சாப்பாடு என்ற பெயர் சூட்டப்பட்டு சக்கைபோடு போட்டது சரித்திரம்.

அந்தச் சரித்திரம் திரும்புகிறது நண்பர்களே! கைகள் தட்டி ஆரவாரியுங்கள்.

விலைப்பட்டியலைக் கீழே பார்ப்போம்.

தேநீர்-ரூ1.
சூப்- ரூ5.50
தால்-ரூ2.50.
சைவச் சாப்பாடு(பருப்பு,பொரியல், 4சப்பாத்தி, சாதம்/புலவ், தயிர்,சாலட்) ரூ12.50
அசைவச் சாப்பாடு-ரூ22.50
தயிர்சாதம்-ரூ11.
வெஜ் புலவ்-ரூ8.
சிக்கன் பிரியாணி-34.
மீன் கறி-சாதம்-ரூ13.
ராஜ்மா சாதம்-ரூ.7.
தக்காளி சாதம்-ரூ.7.
மீன்வறுவல்-ரூ.17.
கோழிக்கறி-ரூ20.50.
சிக்கன் மசாலா-ரூ24.50.
பட்டர் சிக்கன்-ரூ.27.
சப்பாத்தி ஒன்று-ரூ1.
சாதம்(ஒரு ப்ளேட்)-ரூ.2.
தோசை-ரூ.4.
கீர்-ரூ5.50
பழக் கேக்-ரூ9.50.
பழ சாலட்-ரூ.7.

இந்தியாவில்தான் மேலே சொன்ன விலைப்பட்டியல்.

வெங்காயம் கிலோ ரூ100 விற்ற போதும், கத்தரிக்காய் கிலோ ரூ80 ஆன போதும்-பருப்பு-அரிசி-எண்ணெய்-பெட்ரோல்-சமையல் வாயு-முட்டை-டீசல் போன்ற அத்தியாவசியமான அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைவாசி வழி தெரியாத மன்மோகன் சிங்கிலிருந்து வழியில்லாத சராசரிப் பாமரன் வரை-பணவீக்கத்தை வாட்டத்துடன் கவனித்து வரும் ப.சிதம்பரம் தொடங்கி வீங்காத வயிற்றை ஏக்கத்துடன் கவனிக்கும் சித்தாள் வரை-எல்லோரையும் சமமாய்ப் பீடித்த போதும் இந்தியாவில் நிலவும் இந்த விலைவாசி எத்தனை காருண்யமும் மேன்மையும் பொருந்தியது!

இது வாழ வழியற்றவர்களுக்காக-எந்தவித சேமிப்பும் இல்லாத திக்கற்றவர்களுக்காக-மாதம் ரூ.80,001 மட்டும் சம்பளமாகப் பெறும் ஏழைகளுக்காக இந்தியப் பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப் படும் உணவின் விலைப்பட்டியல்.

நாக்கைத் தொங்கப்போட்டிருந்தால் எடுத்து உள்ளே போட்டுக்கொண்டு முதலில் ஒரு ராஜ்யசபா உறுப்பினராகவாவது ஆக முயற்சி பண்ணுங்கள்.அப்புறம் இதையெல்லாம் சாப்பிடலாம்.
அதுக்கு இன்னும் குறைந்தது பத்து வருஷமாவது ஆகுமேன்னு கவலைப்படறீங்களா?அவசியமில்லை ஜென்டில்மேன்!அதுவரை அப்படி ஒன்றும் விலைவாசி ஏறிவிடாது.(பாராளுமன்ற உணவகத்தில்)

9.1.11

என் மொழிஒரு சவ ஊர்வலத்தின்
பின்னே சுவடுகள் பதிக்கும் 
துயரம் படிந்த அமைதியல்ல-

ஒரு பிரார்த்தனைச் சாலையின்
பெருஞ் சுமையாய்க் கனக்கும் 
சுமக்க இயலா அமைதியல்ல-

பேசத் தடை விதிக்கப்பட்ட
ஒரு நூலகத்தின் இருக்கைகளில்
உறைந்து கிடக்கும் அமைதியல்ல-

பேச யாருமற்றுப்போன
தனிமையின் மெழுகால்
உருகி வழியும் அமைதியல்ல-  

சர்வாதிகாரியின் ஆயுதங்கள்
புதைத்து வைத்திருக்கும்
முனை மழுங்கிய அமைதியல்ல-

இசைக்கப் படாத ஒரு வாத்தியத்தின் 
ஒட்டடை படிந்த அமைதியல்ல-

வெடித்துக் கிளம்ப இருக்கும்
புரட்சிக்கு முந்தைய 
முணுமுணுப்பின் அமைதியல்ல-

பேரலைகளின் 
இடைவெளிகளுக்கிடையே 
ஊசலாடும் அமைதியல்ல-

யாரின் பாதங்களும் படும்முன்
கரை ஒதுங்கிய சங்கினுள்ளே
ததும்பிக் கிடக்கும் அமைதி

கோர்க்கிறது
என் கவிதைகளின் மொழியை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...