ஸ்வாரஸ்யமான விளம்பரங்களின் ரசிகன் நான். விளம்பரங்கள் நேரடியாக முகத்தில் அடித்தது போல இல்லாமல் இலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் மாம்பழம் போல (இலை மறை காயிலிருந்து தப்பியாச்சு) சொல்லியும் சொல்லாமலும் இருக்கவேண்டும்.
சின்ன வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அழகு தமிழுக்கு நடுவே வீவா விளம்பரப் பாடலும்-ராஜேஸ்வரி ஷண்முகம் அப்துல்ஹமீதின் லலிதா தங்கநகை மாளிகை விளம்பரமும்-ரின் சவுக்கார(சோப்தான்) விளம்பரமும் தான் செவி வழியே விளம்பரத்தின் மேல் வேர்விட்ட முதல் நினைவுகள்.
இந்தியாவின் ரசனை முதன்முதலில் அமுலுக்குப் பிறகு முத்ரா ஏஜென்ஸி(ரிலையன்ஸ்) மூலமும் லிண்டாஸ் (லிரில் சோப்) மூலமும்தான் அடையாளம் காட்டப்பட்டது. மரபுகளைத் தாண்டிய புதியபாதை அங்கே தடம் பதித்தது.
அதன் பின் இந்திரா காங்கிரஸ் முழுப் பக்க அளவில் கொடுத்த எமெர்ஜென்ஸிக்குப் பிந்தைய எண்பதுகளின் எதிர்மறை விளம்பரங்களும் நினைவுக்கு வருகின்றன. காங்கிரஸின் கணக்கை அது தலைகீழாய் மாற்றியது. எப்படி விளம்பரம் அமையக்கூடாது என்று சொல்லும் சாட்சியாக நெடுங்காலமாகக் கிழித்துவைத்திருந்த விளம்பரங்கள் எல்லாம் மக்கிக் கிழிந்தும் தொலைந்தும் போய்விட்டன.
தொண்ணூறுகளில் சென்னையின் ஸ்பென்ஸர் சந்திப்பில் வாராவாரம் அமுல் விளம்பரங்கள் மிகவும் ப்ரபலம். அநேகமாக அந்த வாரத்தின் சூடான செய்தி அமுல் வெண்ணையுடன் இணைக்கப்படுவது மாதிரியான புத்திசாலித்தனம் வேறெந்த நிறுவனத்துக்கும் வந்ததாகத் தெரியவில்லை. விடியற்காலையிலோ அல்லது சில நாட்கள் நள்ளிரவிலோ வரையப்படுவதைப் பார்த்து எதிரே க்ராதியில் சாய்ந்தபடி மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்ததுண்டு.
அதே போல் ஒயிட்ஸ் சாலையின் முனையில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் வார விளம்பரங்களும் மிகுந்த கற்பனையோடும் அபாரமான வார்த்தைத் தேர்வோடும் இருக்கும். இன்றைய ப்ன்ச் டயலாகின் கொள்ளுத் தாத்தா அவை. அற்புதம்.
இவர்களைப் போலில்லாவிட்டாலும் இந்தியன் ஏர்லைன்ஸ்ஸின் விளம்பரங்களின் வண்ணத்தேர்வும் படங்களின் அமைப்பும் சற்று சுமார் ரகத்தில் இருக்கும். இதைத் தாண்டி ஒன்லி விமல் என்ற குரல் இசையோடு வரும் ரிலையன்ஸ் விளம்பரங்களும், அபத்தமான ஹமாம் மற்றும் ஹார்லிக்ஸ், போர்ன்விடா விளம்பரங்களின் மத்தியில் ரெஹ்மானின் மொஸார்ட்டின் சிம்பனியை நினைவுபடுத்தும் புதிய டைட்டான் கடிகார விளம்பரங்கள் இன்றுவரை ஹிட்தான்.
இப்போதெல்லாம் தாட்களில் வரும் அல்லது வரையப்படும் விளம்பரங்களை யாரும் அதிகம் கவனிப்பதில்லை.அல்லது அவை நம் கவனத்தைக் கவர்வது இல்லை. ஆக தொலைக்காட்சியின் திரைகளில் திகட்டத் திகட்ட விளம்பரக் கூத்துக்களின் மழையில் நனைந்துகொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் சரி. ஒரு விளம்பரம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன கண்ணுக்கு முன்னால்.
அந்த விளம்பரத்துக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் சொல்பமாவது தொடர்பு இருக்க வேண்டும். (வயதான விஜயகுமாரும் நாசரும் இரும்புக் கம்பியை முடியாத வயதில் தூக்கிக் காட்டுவது போல இல்லாமல்.)
விளம்பரத்தில் கூட்டமாக மிரட்டுவது போல எல்லோரும் நடனமாடியபடியே ஒரு பொருளை அநியாயத்துக்குச் சிரித்தபடியே வாங்கச் சொல்வது. (சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கி சரவண பவன் வரை; அநேக துணி மற்றும் தங்க நகைக் கடை விளம்பரங்கள்).
அல்லது ஒரு பொருளைப் பற்றி நம்பமுடியாமல் கதைவிடுவது.
ஆரோக்யா பாலைக் குடித்து பரீட்சையில் நூற்றுக்கு இருநூறு எடுப்பது போலோ- சிவப்பாக இருக்க சொறிபிடித்த ஏதோ க்ரீமைப் பூசிக் கொண்டமையால் உலகத்தின் மிகப் பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்வது போலோ- ஏதோ பற்பசையால் பல்துலக்கியதால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றது போலோ- கோக்/பெப்ஸி குடித்தால் பெண்களை எளிதாக டாவடிக்கலாம் என்பது போலோ-தாங்கமுடியாத நாற்றமடிக்கும் நறுமணப் பீய்ச்சியை(தமிழில் பெர்ஃப்யூமை எப்படிச் சொல்ல- வார்த்தைகள் வரவில்லை) உடலில் போட்டுக்கொண்ட ஆணின் பின்னாலேயே குளிக்காத இருபது முப்பது பெண்கள் அரைகுறை ஆடையுடன் தெருவில் ஓடுவது போலோ- தாங்கமுடியலை சாமி.
அல்லது ஒரு கோழியின் காலை அது செத்தபின்னும் கடிக்கிற கடியில் அதற்கு வலித்து அலறலாம் என்கிற அளவில் மதன்பாப் கடித்து வெளிவந்த பரமக்குடி ரெஸ்டாரெண்ட் விளம்பரங்கள் அடுத்த முறை சாப்பிட விருப்பமுள்ளவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தி விடும்.
நிபந்தனைகள் தனி என்று 6பாய்ண்ட் எழுத்துருவில் விளம்பரத்தின் கடைசியில் படுவேகமாகக் காட்டி மறைவது அப்பொருளின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும்.(பல நிதி நிறுவனங்களும் தவணைத் திட்ட நிறுவனங்களும் இந்த மோசடியைச் செய்கின்றன)
ஒரு யுவதியின் மென்னுடலைத் தொட்டும் தொடாமலும் தழுவும் வஸ்திரத்தின் தன்மை விளம்பரப்படுத்தப்படும் பொருளுக்கும் விளம்பரத்துக்கும் இருக்கவேண்டும். அதற்கு எல்லாவற்றையும் எல்லாரையும் கவனித்துக் கொண்டே இருக்கிற சூட்சுமம் வேண்டும்.
புத்திசாலித்தனமான விளம்பரங்கள் முழுமையாய்த் தன் பொருள் பற்றிச் சொல்லாது. அந்தப் பொருள் என்ன? என்று அறியும் அல்லது அதைத் தேடும் ஆவலைத் தூண்டும் பொறியாக இருக்கும். அதிகமாகப் பேசாது. குறைந்த வார்த்தைகள் பொருத்தமான இசை இவற்றைக் கொண்டிருக்கும். மெல்லிய ஹாஸ்யத்தையோ அல்லது விடுவிக்கப்படாத புதிரையோ கொண்டிருக்கும். காலங்கள் தாண்டினாலும் அதன் இசையும் கருத்தும் பிசாசு போலத் துரத்தும்.
இந்த க்ரீன் ப்ளை விளம்பரம் ஒரு கவிதை.
https://www.youtube.com/watch?v=Qz46HSBRjiM
சமீபத்தில் வந்த விளம்பரங்களில் எஸ்.பி.ஐ. காப்பீட்டு விளம்பரங்களும்- செண்டர்ஃப்ரூட் தபேலா வாசிப்பவர் விளம்பரமும்-சென்டர்ஃப்ரெஷ் விளம்பரங்களும்-பெவிகால் விளம்பரங்களும்-ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி விளம்பரங்களும், பக் ஜாதி நாயுடன் வந்தவையும், ஸூஸூ லூட்டியடிப்பதுமான வோடஃபோன் விளம்பரங்களும், எம்.டி.ஆர்.குலாப்ஜாமுன் விளம்பரமும் - தொடக்கத்தில் ஏர்டெல் விளம்பரங்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பவை.
தாய்லாந்தின் விளம்பரப் படங்களின் நினைவுவருவதைத் தவிர்க்க முடியவில்லை. காப்பீடு தொடர்பான இவர்களின் விளம்பரத்துக்கு இணையான விளம்பர மூளையை நான் எங்கும் கண்டதில்லை. காப்பீட்டுக்கும் இந்த விளம்பரங்களுக்கும் நேரடியான தொடர்பிலாதது போல் காட்டி முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லும் விளம்பரங்கள் இவை. தயவு செய்து இவற்றைத் தவற விடாதீர்கள்.
http://www.youtube.com/watch?v=LR5mZqeDNtg&feature=related
http://www.youtube.com/watch?v=u1OmpTPffQc
http://www.youtube.com/watch?v=RkoRDFjBh44&feature=related
http://www.youtube.com/watch?v=BOuHaTt2XUw&feature=related
http://www.youtube.com/watch?v=UcYflK8cBUg&feature=related
http://www.youtube.com/watch?v=9ll-bDmK3EA&feature=related
இவற்றையெல்லாம் எத்தனையோ தடவை பார்த்துவிட்டேன். ஆனாலும் விளம்பரங்கள் என்ற தளத்தைத் தாண்டி "நான் யார்?" என்ற போதனை புகட்டும் ஆசானாகவும் இவை இருக்கின்றன என்பதை மறுபடிமறுபடி எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன இவ்விளம்பரங்கள். இவற்றைப் பதிவிடும் இந்த இரவிலும் நான் கண்ணீரில் கசிகிறேன்.
30 கருத்துகள்:
appovum nice
ippovum nice ..
முதன்முதலாய் ஒரு விளம்பரம் கண்ணில் நீர் வரவைத்தது இப்போது தான்.
ஒன்று தான் பார்த்தேன் . அந்த பாதிப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
முழுதும் பார்த்தேன்.
அனைத்தும் கவிதைகள்.
அருமை அருமை.
நறுமணம் கமழும் பூக்கடைக்கும்
நாற்றம் அடிக்கும் கருவாட்டுக் கடைக்கும்
விளம்பரமே
தேவையில்லை
என்பார்கள் !
உங்கள் விளம்பரங்கள் பற்றிய
விமர்சனங்கள் அன்றும் இன்றும் என்றுமே அருமை தான், நறுமணம் கமழும் பூக்கடை போலவே !!
முன்னம் டாம்பீகமாகவும் இப்போ இன்றியமைஆததாக ஆன விடயம்.
புகழ ஆசை.தட்டச்சில் சில சொல் இல்லை.
அருமையான விளம்பர விமர்சனம்...
ஓரிரு நிமிடங்களுக்குள் ஒரு விளம்பரத்தில் மக்களுக்குச் சொல்ல/விற்க வேண்டியவற்றை இவ்வளவு அழகாய் எடுத்து இருக்கிறார்கள். கொடுத்திருந்த சுட்டிகளில் அனைத்தும் பார்த்தேன். மனம் கனந்தது.
நமது நாட்டிலும் சில விளம்பரங்கள் தவிர்த்து பல கேவலமாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.
தகப்பனை வைத்து செய்த தாய் இன்ஷுரன்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தாயுமானவனாக தந்தையை சித்தரிப்பவை. பாசக் கண்ணீர் சொட்ட வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி! ;-) ;-)
புதிதாய் இணைத்தவற்றையும் பார்த்தேன்.தாய்லாந்து என்றதும் எனக்கு வேறு சில விசயங்கள்தான் நினைவூட்டப் பட்டிருக்கின்றன். அவையெல்லாம் அழிந்து இப்போது இந்த விளம்பரக் கவிதைகள்.
அன்பு.. அன்பு.. அன்பு..
அது வாய்த்து விட்டால்?!
எல்லாமே ரசனை ரசனை.உங்கள் ரசனையே ரசனை.அவைகள் விளம்பரமாக இல்லை சுந்தர்ஜி.வாழ்க்கை !
அப்துல் ஹமீத் ன் தமிழ் உச்சரிப்புக்கு நானும் ஒரு ரசிகை !
விளம்பரங்கள் சில ரசிக்கவைக்கின்றன. ஆனால் பல விளம்பரங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. இல்லாததை இருப்பதாகக் கூறி ஏமாற்றுபவருக்கு சட்டத்தில் தண்டனை உண்டா.
அந்த தாயில்லாப் பிள்ளையின் தகப்பனின் துடிப்பும், சிதறும் கடிகாரமும், அந்த மோதி நொறுங்கும் காராய் மனசு. இங்கே அந்த சாக்லட் பாய் அங்கங்களை பிய்த்து போடும் அவலமான விளம்பரம். சிவப்பானால் தான், கிரிகெட் விளம்பர வேலை, டான்ஸ் வாய்ப்பு, கூடப்படிக்கும் மாணவர்களின் அக்சப்டன்ஸ் எல்லாம் கிடைக்கும் என்கிற, பேஃர்&லவ்லி, விவால் விளம்பரங்கள்,மேற்கத்தியத்தியனின் அதிகாரதிமிரின் அடையாளத்தின் எச்சங்களாய்.
ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமை செய்த வெள்ளையர்களின் சூழ்ச்சி, கறுப்பு நிறத்தை கெட்டதாகவும், வெள்ளை நிறத்தை நல்லதாகவும் உருவாக்கியது. சாத்தான் கறுப்பு, தேவதை வெள்ளை. திருமணத்திற்கு வெள்ளை, மரணத்திற்கு கறுப்பு. இது ஒரு மனப் பிறழ்வு கான்செப்ட். நாமும் அவர்களது அசைவுகளுக்கு ஆடும் கைப்பாவைகளாய், இத்தனை ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும். அந்நிய கம்பனிகளும், சோனியாவும், பிரதமரும், கும்பனி ஆட்சியையும், விக்டோரியாவையும், முகலாய மன்னரையும் நினவூட்டுகிறார்கள்.
உங்கள் முகம் பார்த்ததில்லை. குரல் கேட்டதில்லை.ஆனாலும் கவிதைகள் சொல்லும் உங்கள் மனம் அறிவேன் சிவா.
தாய்லாந்தின் கற்பனைக்கு ஈடான விளம்பரங்களை நான் பார்த்ததில்லை.
கன்னங்களில் உருண்ட துளிகளுக்கு நன்றி சிவா.
பூக்கடையா சாக்கடையா என்று கொஞ்சம் பதறவிட்டு விட்டு முடிவில் சாதகமான பால்வார்ப்பிற்கு நன்றி கோபு சார்.
தட்டச்சு உங்களுக்கு உதவியிருக்கலாம் காமராஜ்.
எழுதுவது ஆத்மத்ருப்திக்கு என்று கதைவிட்டாலும் பாராட்டுக்கும் ஏங்கத்தானே செய்கிறது பாழாய்ப்போன மனது.
இருந்தாலும் உங்களின் வாழ்த்துக்களை யூகித்துக் கொள்கிறேன் காமராஜ்.நன்றி.
உங்கள் பெயர்க்காரணம் எதாயினும் ஒண்ணாங்ளாஸ் மிடில்க்ளாஸ்மாதவி.
முதல் வருகைக்கு நன்றி.அடிக்கடி வாருங்கள் வார்த்தைகளுடன்.
நன்றி வெங்கட்.
ஒரு பூ மலர எத்தனை நேரம் எடுத்துக் கொள்கிறது?
ஒரு மலரும் பூவை அருகிலிருந்து பார்க்க யாருக்கெல்லாம் பொறுமை இருக்குமோ அவர்களே ச்ருஷ்டிகர்த்தாவாய் உருவெடுக்கிறார்கள்.
பல தளங்களில் ஸ்வாரஸ்யமான உங்களின் எழுத்தைப் பார்த்திருந்தாலும் இத்தனை நாள் நாம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இயலாமல் போய்விட்டது ஆர்.வி.எஸ்.
முதல் வரவுக்கு நன்றி.
தாயுமானவனின் ஸ்தானத்தை வலுவாய் உணர்த்தும் விளம்பரங்கள் அவை.நல்ல பார்வை உங்களது.
அன்பு மட்டும் வாய்த்து விட்டால்?
இந்தக் கேள்விக்குறி உதிர்ந்து வாழ்வு பூவாய் மலர்ந்து சிரிக்கும் ரிஷபன்.
நன்றி.
மனம் தளும்பியதாய் உணர்கிறேன் ஹேமா.
பாராட்டுக்கு நன்றி.
கே.எஸ்.ராஜா மற்றும் மயில்வாஹனம் சர்வானந்தாவும் வித்யாசமான உச்சரிப்போடு நினைவில் நிற்பவர்களே.விட்டுப்போயிற்று.
நீங்கள் கேட்டதுண்டா ஹேமா?
அரசியல்வாதிகளுக்குத் தண்டனை கிடையாது பாலு சார்.
சக உறவுகளிடமும் சக உயிர்களிடமும் பிரியத்தை மிகுவிப்பதாயுள்ளன காணொளிகள். தினசரி எழுந்தவுடன் ஒரு முறை பார்த்தால் நலம் பயக்கும்படியான விளம்பரங்களல்லவா இவை!!
அத்தனையுமே அருமையான விளம்பரம் சுந்தர் சார்,
மிகப் பெரிய ரசிகன் சார் நீங்க..
பகிர்வுக்கு மிக்க நன்றி
முன்னமே இந்த விளம்பரங்களுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் என் நினைவிலிருக்கிறது.
இம்முறையும் உங்களை அது அசைக்கும் என்று தெரியும்.
நன்றி நிலாமகள்.
ஆமாம் கமலேஷ்.
நான் மிகப் பெரிய ரசிகன் தான் உங்களைப் போலவே.
neenga koduththurukkum links innum paakkala-- (inga youtube blocked!)
but unga post pramaatham... enakku Ads romba pidikkum. ippo laam sila ads paaththaa kovam thaan varuthu... esp. fairness cream ads. i think antha ads are like 'keeping women in constant insecurity- to sell their products'.. athula sila pengal vizharathu thaan innum parithaapam!
Act2 pop corn ad enakku romba pidikkum! ennoda innum konja favs.- 'Hari Sadu'(naukri.com), indica v2(liar ad), vodafone(doggy ads), etc.
appolaam DD la vantha sila ads/sila vishayangalellaam ippo kooda mind-la irukku! 'manthan'-i guess-- antha movie clips vechchu oru amul ad varum. 'rashtriya saakshartha mission'-- oru ad. actually ad-la vara music laam enakku romba nyaabagam irukku...
talkative me!
I really enjoyed reading this post... very genuine read... romba sensible post!
தவறாமல் இந்த இடுகையின் இணைக்கப்பட்ட யூட்யூப் லிங்க்குகளையும் நேரம் வாய்க்கும் போது தவறாமல் பார்த்துவிடுங்கள் மாதங்கி.அதற்குப் பின் ஒரு பின்னூட்டம் நீங்கள் கண்டிப்பாக இட வேண்டியதிருக்கும்.
பொறுமையாய் வாசித்த அன்புக்கு நன்றி மாதங்கி.
I just found the time to see all the ads you have given the links for!
i never thought an Ad can bring tears in u'r eyes! the Ad-- "My girl"! my goodness! never seen anything like that...
thanks a ton for sharing these with us!
நிச்சயம் இந்த விளம்பரங்கள் உங்களை அசைக்கும் என நம்பினேன்.என் நம்பிக்கை வீணாகவில்லை.
முடிந்தவரை இந்த விளம்பரங்களை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புங்கள்.
வாழ்வின் அன்பு பெரும் விருக்ஷமாய் கிளைபரப்பட்டும்.
நன்றி மாதங்கி.
கருத்துரையிடுக