18.1.11

பயணம்



I
எதையெதையெல்லாமோ
எடுத்துப்போகிறோம்
தேவைப்படலாமென.
எதுவுமே
தேவையற்றுப்போவதாக
முடிவுற்று
நிறைகிறது பயணம்.

II
எதுவும் பேசமுடிவதில்லை
பயணிக்கையில்.
பேசாதும் இருக்கமுடிவதில்லை
வாழமுடியாத போதும்
வாழ்ந்தபடி இருப்பது போல.

III
வாழமுடியாத போதும்
வாழ்கிறோம்.
செல்ல விரும்பாதபோதும்
செல்கிறோம்.
வாழ்க்கை நம் கையில்
என்றாலும்
வாழ்வதும் செல்வதும்
நம் கையில் இல்லை.

IV
பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின் பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.
உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்.

35 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

//பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின்
பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.
உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்.//
Excellent

வினோ சொன்னது…

மூன்றும் பல செய்திகளை சொல்கிறது....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்.//

உணராதபோதே இப்படி இருக்கிறோம். உணர்ந்து விட்டாலோ? நல்ல கவிதைகள் சுந்தர்ஜி.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

svramani08 சொன்னது…

"பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்...."
நிறைய உணர்த்திப்போகிறது

சிவகுமாரன் சொன்னது…

எனக்கென்னவோ உங்கள் பயணத்தை எங்களால் உணர முடிவதில்லை என்று சொல்வது போலத்தான் தோன்றுகிறது.
நிறைய விசயங்களை உணர்த்துகிறீர்கள்.
இந்த வரிகளின் மூலம்.
அருமை அண்ணா.

ரிஷபன் சொன்னது…

நான்காவது கவிதை என்னைத் தொட்டு உலுக்கியது.

Gowripriya சொன்னது…

"உணரமுடிவதில்லை
துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்"


class!!!!!!!

மிருணா சொன்னது…

இந்த கவிதை ஒரு நல்ல அனுபவம். உணர்ந்து எழுதப்பட்ட நேர்த்தியான வரிகள். அருமை.

ஹ ர ணி சொன்னது…

பயணம்தான் உயிர்த்திருக்க வைக்கிறது அது பயணமாக அமையும்போது சுந்தர்ஜி.

உதிரிலை சொன்னது…

ஒரு பாம்பின் சீறலில் இருக்கிறது பயணம். துளி தேனில் இருக்கிறது பயணம். ஒரு வலியில் இருக்கிறது பயணம். நதிகளுக்கடியில் உருளும் கற்கள் உலகத்தின் பயணத்தின் வேரைப் பயணிக்க வைக்கின்றன யுகங்கள்தோறும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆம். எல்லாப் பயணங்களும் நம் விருப்பப்படி இனிமையாய் அமைந்து விடுவதில்லை.

அடிக்கடி பயணம் மேற்கொண்டு விரக்தியில் எழுதிய கவிதையாய் இருக்குமோ என்று தோன்றுகிறது.

உணரமுடியவில்லை என் சிற்றறிவினால்

துறவிகளுக்குள் நீளும்
பயணங்களையும்
நதிகளுக்கடியில்
உருளும் கற்களையும்

போலவே உங்கள் விரக்தியான பயணக் கவிதையையும்.

ஹேமா சொன்னது…

வரிகளோடு இன்னும் இங்குதான் நான் !

காமராஜ் சொன்னது…

//பயணங்கள்
துறவிகளை உருவாக்குகின்றன.
அதன்பின்
பயணங்களைத்
துறவிகள் உருவாக்குகின்றனர்.//

இப்படியான தெறிப்புகள் எல்லாக்கவிதையிலும் கிடைக்கப்பெற்றது வாசிக்கிற எங்களின் சிலாக்கியம்.

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

//உணரமுடிவதில்லை துறவிகளுக்குள் நீளும் பயணங்களையும்
நதிகளுக்கடியில் உருளும் கற்களையும்//

அருமை

vasan சொன்னது…

துற‌விகளின் ப‌யண‌ம் மேல் நோக்கி
ந‌தியின் ப‌ய‌ணம் கீழ் நோக்கி,
சுந்த‌ர்ஜீன் பார்வை ச‌மன் நோக்கி.

G.M Balasubramaniam சொன்னது…

நிறையவே சிந்திக்கத்துவங்கி விட்டீர்கள் சுந்தர்ஜி. YOU DO A LOT OF INTROSPECTION. இலக்குகள் நோக்கி பயணித்தாலும் எட்டவே முடியாத இலக்குகளும் விலகி விலகி புர்ந்துகொள்ள முடியாத பொருளாகி, அறிந்துவிட்டோம் என்ற எண்ணம் வரும் சமயம் பயணமும் முடிந்து விடுகிறது.

Vel Kannan சொன்னது…

எல்லாம் ஒரே பயணத்தில் சாத்தியமா என்று தெரியவில்லை
ஆனாலும் ஒரே புரிதலை தருகிறது ஜி உங்களின் கவிதை

சுந்தர்ஜி சொன்னது…

தொடர்ந்த வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நாக்ஸ்.

என் மனதிலும் உங்கள் எழுத்துக்கள் உங்களைப் பற்றிய பிம்பத்தை உருளச் செய்தபடி இருக்கின்றன.

சுந்தர்ஜி சொன்னது…

ரசனைக்கு நன்றி ரமணி.தொடர்ந்து நீங்கள் வாசிப்பது என் பாக்கியம்.

சுந்தர்ஜி சொன்னது…

நாலை மூன்றாக்கிட்டீங்களே வினோ!எதோ ஒண்ணை சாய்ஸ்ல விட்டுட்டீங்ல போல.

நன்றி வினோ வாசிப்புக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன்.கமெண்ட்டில் என்னை உலுக்கிட்டீங்க.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சிவா. அப்படியெல்லாம் இல்லை. சில சாலைகளில் என் கண்ணாடியுடன் நான் பயணிக்கிறேன்.சில இடங்களில் உங்களின் கண்ணாடி.அவ்வளவுதான்.

சுந்தர்ஜி சொன்னது…

அடுத்த தளத்துக்குப் பயணங்கள் தான் நம்மை இட்டுச் செல்கின்றன ஹரணி.

தத்துவார்த்தமான பயணங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

என் கவிதை முடிந்த புள்ளியிலிருந்து துவங்குகிறது என்னதை விட மிக அழகான உங்களது கவிதை உதிரிலை.

ரசித்தேன்.

சுந்தர்ஜி சொன்னது…

பௌதீக ரீதியான பயணத்தை நான் குறிப்பிடவில்லை கோபு சார்.

தத்வார்த்தமான உள்நோக்கிய பயணத்தைத்தான் தொட்டுச் செல்கிறது.

இன்னும் எளிமையாய் எழுத முயல்வேன்.

ரசனை மிக்க உங்களை இந்தக் கவிதை தொடாததற்கு வருந்துகிறேன் கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

என்றும் என் வரிகளோடிருக்க விழைகிறது மனது...

நன்றி ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் சிலாகிப்பு என்னை கர்வப் படுத்துகிறது காமராஜ்.

வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் வருகையையும் எதிபார்த்திருந்தேன் திருநா.

உங்கள் ரசனையை நான் அறிவேன்.

நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

வாசனின் பயணம் எல்லாத் திசைகளிலும்.

நன்றி வாசன் அன்புக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

சிந்தனைகளிலிருந்தும் விடுதலையைத் தேடுகிறேன் பாலு சார்.

இந்த உள்நோக்கிய பார்வை விலக அல்ல.மேலும் கூரேற்றிக் கொள்ள.

நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

இந்தக் கவிதையை எழுதும் போது உங்களுக்குப் புரையேறி இருக்கலாம்.இந்த ரகம் உங்களுக்குப் பிடிக்குமென்று உங்கள் ரசனை நினைவுக்கு வந்தது.

ரசனைக்கு நன்றி சைக்கிள்.

சுந்தர்ஜி சொன்னது…

வெவ்வேறான பயணங்களிலும் திசைகளிலும் கற்கத் துவங்குகிறோம் வேல்கண்ணன்.

எல்லாவற்றையும் துறக்கத் துவங்கும்போது எல்லாம் ஒன்றெனப் புரிந்துகொள்கிறோம்.

நன்றி வேல் கண்ணன்.

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

ரொம்ப அருமையான கவிதைகள் இவை. பயணங்கள் தரும் பரிசுப்பொட்டலம் அற்புதமானது...

ரொம்ப பிடித்தது.

அன்புடன்
ராகவன்

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ராகவன்.

பயணங்களுக்கிடையேயும் தொடரும் உரையாடல்களுக்கும் வாசிப்பிற்கும்.

அடிக்கடி மழை வருவதில்லை.ராகவனும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...