அரவிந்தர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரவிந்தர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.12.12

இதப் பாருங்க சாமியோவ்!


சமீபத்திய வாசிப்பில் என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீ. அரவிந்தர்தான். என் பல்வேறு நம்பிக்கைகளின் சுவர்களை மிக அனாயாசமாகத் தகர்ந்தெறிந்து விட்டார். அவரின் ”மேற்கின் அழிபாடுகளிலிருந்து - இந்தியாவின் மறுபிறப்பு” , அமிர்தா எழுதிய “அரவிந்த தரிசனம்” , Nirodbaran எழுதிய "Twelve years with Sri. Aurobindo" இந்த மூன்று புஸ்தகங்களில் இதுவரை அரவிந்தர் பற்றி அறிய நேராதவர்களுக்கு  சொர்க்கம் காத்திருக்கிறது. ஒரே மூச்சில் நீளும் நள்ளிரவில் எடுத்தபின் கீழே வைக்க முடியாமல் வாசித்தேன்.

காந்தியின் பல முடிவுகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்திருக்கும் இவரின் துணிச்சல் வேறு யாரிடமும் நான் பார்த்திராதது. இந்தியாவின் விடுதலைக்கு இவர் போடும் அடித்தளம் காலத்தால் திசைமாறி வேறு திசையில் செல்கிறது.

அலிப்பூர் குண்டுவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காலத்தில் வேதங்களையும், உபநிஷத்துக்களையும் வாசிக்க நேர்கிறது. ஓராண்டு சிறையில் இருக்கும் அவருக்கு யோகசாதனை குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த விவேகானந்தரிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கிறது. கண்ணனின் காட்சியையும் அவர் பெறுகிறார். அந்த நாளில் இருந்து அவரின் அரசியல் திசை ஆன்மீகத்தின் பாதைக்குத் திரும்புகிறது.

இது போதும். தனியாக ஒரு இடுகையில் பார்க்கலாம்.
***********************
இன்னொரு சுவாரஸ்யமான புஸ்தகம் ஏ.கே.செட்டியார் தொகுத்த நூறாண்டுகளுக்கு முன்பு வெளியான பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. படு ரசனையான எழுத்து. கமகமக்கும் நாஸ்டால்ஜியா பக்கத்துக்குப் பக்கம்.

செல்லம்மாள் பாரதி தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு போன அனுபவத்தை விவரித்திருக்கும் அழகு ஒரு மஹாகவியின் மனைவி என்பதை நிரூபிக்கிறது. ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் வேதனையைப் பல கட்டுரைகள் புலம்பித் தீர்க்கின்றன.

தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் தீர்த்த யாத்திரை ( வெள்ளைப் பிள்ளையாரை தரிசித்துவிட்டுக்  குதிரையில் கிளம்பும் ராஜா, போகும் வழியில் அய்யம்பேட்டையில் சீட்டித்துணி விற்றுக்கொண்டிருக்கும் வியாபாரியிடம் பணம் கொடுத்துத் துணியை வாங்கிக் கொள்கிறார்) சென்னையின் குஜிலிக் கடை வரலாறு.....

கண்டிப்பாய்ப் படியுங்கள்.
*************************
திருமூலரிடம் சீடராக இருந்த போகர், சுவடியில் ஒளித்து வைத்த ”கற்ப மூலிகைகள்” என்ற தலைப்பில் அந்தாதி ஃபார்மட்டில் ஒரு பாடலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம் போலத் திறந்த வாய்தான். இன்னும் மூடவில்லை.

"கேளென்ற
1கருநெல்லி, 
2 கருத்த நொச்சிகெடியான, 
3 கருவீழி, 
4 கருத்த வாழை
காளென்ற, 
5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 
7 கரியவேலி
கோளென்ற 
8 கரூமத்தைத் 
9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 
11 சாயா விருட்சம்
ஏளென்ற 
12 எருமை கனைச்சான் 
13 ரோமவிருட்சம்ஏற்றமாம் 
14 சுணங்க விருட்சம் 
15 செந்திரா" 

"செந்திராய் 
16 செங்கள்ளி 
17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 
19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடுநலமான 
20 கற்பிரபி 
21 கறசேம் பாகும்
பரந்திராய் 
22 கல்லுத்தா மரையி னோடுபாய்ந்த 
23 குழல் ஆ தொண்ட 
24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 
26 வெண்புரசு 
27 வெள்ளைத் துத்திமிகு 
28 வெள்ளைத் தூதுவளை 
மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 
29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 
31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 
32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 
34 மதுர வேம்பு
கிடுக்கான 
35 கிளிமூக்குத் துவரை 
36 அமுகண்ணிகெடியான 
37 பொன்மத்தை 
38 மதுர கோவை
படுக்கான 
39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 
41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 
42 மூவிலையாம் குருத்துமாகும்தணலான 
43 சிவத்ததில்லை 
44 கருத்த வேம்பு
45 இண்டோடே 
இவ்வகைகள் நாற்பத் தைந்தும்ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

ஹப்பா! நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளை எண்ணிப் பாத்துக்குங்க.

இதை முறையாக உட்கொள்ளுபவர்களுக்கு 

1. சாவு இல்லை. 
2. மன்மதன் போல மிடுக்கான வாலிபத்தோற்றம் க்யாரண்டி.
3. முடி (இருந்தால்) நரைக்காது.
4. தோல் சுருங்காது.
5. உடல் மூப்பு அடையாது.
6. மலைகளில் தாவி அஸால்ட்டாக ஏறலாம்.
7. மூச்சு இரைக்காது.
8. வான்வெளியில் வாக்கிங் போகலாம்.
9. வான மண்டலத்தில் உள்ள எல்லா நட்சத்திர மண்டலங்களையும்  பார்க்கலாம்.
10. இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும்.
11. இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும்.

இதையெல்லாம் விட்டு விட்டுக் கண்ட கண்ட கேப்மாரிகளின் விளம்பரத்தில் மயங்கி உங்கள் மேனிப்பொலிவை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


*********************
படம்: தஞ்சாவூர் தெற்கு வீதி. (150 வருஷங்களுக்கு முன்னால்)

19.10.12

‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.

 காவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர்.
ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா கிராமத்தின் பக்கத்தில் கலுவராயி என்கிற ஊரில் 1878ல் பிறந்து, சமஸ்க்ருத மொழியின் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய மேதையாக விளங்கினார்.

பத்து வயதுக்குள் சமஸ்க்ருத காவியங்களையும், கணக்கியலையும், வானவியலையும் கற்றுத் தேர்ந்தார். கோள்களின் சஞ்சாரத்தையும், பலன்களையும் துல்லியமாகக் கணக்கிட்டார். ஜோதிடக் கலையில் ஒரு பெரும் பண்டிதரானார்.

தன் பத்து வயதில், ஒரு மணி நேரத்துக்குள் 34 ஸ்லோகங்கள் கொண்ட “பாண்டவ த்ருதிராஷ்ட்ர சம்பவம்” என்ற சிறு காவியத்தை சமஸ்க்ருதத்தில் எழுதி எல்லோரையும் வியக்க வைத்தார்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அளவிட முடியாத மொழித் தொண்டும், ஆன்மிகத் தொண்டும் ஆற்றினார். தன் ஆன்ம குருவைத் தேடியலைந்த கணபதி முனி, 18.11.1907 அன்று திருவண்ணாமலையை வந்து சேர்ந்து, விரூபாக்ஷ குகையில் ரமணரைக் கண்ட நொடியில் அவர் பாதங்களில் விழுந்து உண்மயான தவம் என்னவென்று போதிக்கக் கேட்டுக்கொண்டார்.

அப்போது ப்ராம்மண ஸ்வாமி என்றறியப் பட்ட ரமணர், சற்று நேரம் அமைதியுடன் இருந்தார். பின் கணபதி முனியைப் பார்த்து மெல்லப் பேசினார்.

“ நான் நான் என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால் அந்த மந்திரத்வனி எங்கேயிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ்”

இந்த போதனையால் தன் குருவையடைந்த கணபதி முனி, அவருக்கருகே இருக்க அனுமதிக்குமாறு கேட்க, ரமணரும் விரூபாக்ஷி குகையில் அமர்ந்து தவம் புரிய அனுமதித்தார்.

ப்ராம்மண ஸ்வாமியின் பூர்வாசிரமப் பெயர் ‘வேங்கடராமன்’ என்றறிந்த கணபதி முனி, அதைச் சுருக்கி, ரமணர் என்ற பெயர் அமையுமாறு ”பகவான் ரமண மஹரிஷி” என்று அழைப்பதென முடிவெடுத்து, மற்றவர்களிடமும் கூறினார். உடனே தன் குருவினைப் புகழ்ந்து, ஐந்து சமஸ்க்ருத ஸ்லோகங்களை எழுதி ரமணரிடம் கொடுக்க, ரமணரும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல ரமணரும், கணபதி முனியை “நாயனா” என்றழைக்க ஆரம்பித்தார். அதுவே கணபதி முனியின் பெயராக நிலைத்து விட்டது.

ஸ்ரீ அரவிந்தரின் “ஜனனி”க்கு நாயனா எழுதிய முன்னுரையைப் பற்றி ’அது மூலத்தை மிஞ்சி விட்டது’ என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர். நாயனாவின் உமாசஹஸ்ரத்தைப் படித்த ஸ்ரீ அரவிந்தர் அதை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அரிய செயல் எனப் புகழ்ந்து, நாயனாவைச் சந்திக்கும் தன் ஆவலை வெளியிட்டார்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆச்ரமத்திலிருந்து சுதன்வா திருவண்ணாமலைக்கு வந்து நாயனாவை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்றார். அரவிந்தரும் நாயனாவும் சந்தித்தார்கள். அன்னையும் தன்னுடன் தியானம் செய்ய நாயனாவை அழைத்தார். கணபதி முனிவர் சுமார் ஒரு மாதம் ஆச்ரமத்தில் ஸ்ரீ அரவிந்தருடன் தங்கினார்.

தீண்டாமைக்கு எதிரான அவரின் துணிச்சலான கருத்துக்களை ஆதரித்த தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழகக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி அவரின் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அதற்கு நாயனா சம்மதித்து 1923ல் உறுப்பினர் ஆனார்.

பெல்காமில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய நாயனாவின் பேச்சை காந்தி, மதன்மோஹன் மாளவியா மற்றும் அன்னிபெஸண்ட் ஆகியவர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

தான் சந்திக்க விரும்பும் காஞ்சி பரமாச்சார்யர் தன்னைச் சந்திக்க ஒப்புவாரா என்ற தயக்கம் நாயனாவுக்கு இருந்தது. ஆனால் அவரை சந்திக்க அழைத்த காஞ்சிப் பெரியவர் கரக்பூரில் கணபதி முனியுடன் சுமார் 50 நிமிடங்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடினார். அவருடன் உரையாடியதில் மகிழ்ந்த பெரியவர், விலைமதிப்பு மிக்க தங்க ஜரிகைகளால் மின்னிய பொன்னாடையால் நாயனாவை கௌரவித்தார்.

நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாக்ருஷ்ணன் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது தன் வீட்டில் தங்கி, மாணவர்களிடையே சொற்பொழிவாற்ற நாயனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியக் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய இப்படிப் பட்ட வ்யக்திகள் நூலாம்படை பிடித்து ஒரு மூலையில் கிடக்க, வழக்கம்போல் வெற்றுவேட்டுக்களின் ஆரவாரம்தான் பலமாக இருக்கிறது. கணபதி முனியின் வாழ்க்கையோ, அவரின் படைப்புக்களோ, கருத்துக்களோ அதிகம் எழுதப்படவோ பேசப்படவோ இல்லை.

அவர் எழுதிய ஏராளமான நூல்கள், அவரின் ஆன்மீக அமானுஷ்ய அனுபவங்கள், அவரின் சீர்திருத்த சிந்தனைகள், ரமண மகரிஷிக்கு அவர் எழுதிய கடிதங்கள், ”கால ஞான விசாரம்” என்று ஒவ்வொரு யுகங்களின் கணக்கையும் கணித்து அவர் 1930ல் நிகழ்த்திய மிக முக்கியமான சம்ஸ்க்ருத உரையை ரமண மகரிஷி மொழிபெயர்த்தது, நாயனாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிசயமான சம்பவங்கள், நாயனாவின் அகால மரணம், அதை முன்கூட்டியே அறிந்தது என்று நாயனா குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கிறது. இன்னொரு இடுகையில் அவற்றை எழுத நினைத்திருக்கிறேன்.

”காவ்ய கண்ட கணபதி முனிவர்” என்ற தலைப்பில் ஸ்ரீரமணாச்ரமம் வெளியிட்டிருக்கும் நூல் அற்புதமான பல தகவல்கள் நிரம்பிய ஒரு புதையல்.  தவற விடாதீர்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...