29.6.11

அந்தநாள் அம்மா என்ன ஆனந்தமே-II


அந்தநாள் அம்மா என்ன ஆனந்தமே - II
===============================
அந்த நாட்களில் யார் வீட்டுக்கும் சமையல் எரிவாயு வந்திருக்கவில்லை. ஆகவே அடுப்பு சகட்டுமேனிக்கு நான்கு வகைப்பட்டது.மண்ணெண்ணை பம்ப் ஸ்டவ் அல்லது விறகு அடுப்பு அல்லது உம்ரா திரி ஸ்டவ் அல்லது குமுட்டி என்கிற கும்மட்டி.

பம்ப் ஸ்டவ் எனப்படுவது சைக்கிளுக்குக் காற்றடைப்பது போல நல்ல அழுத்தத்தில் எண்ணையின் வெளியீட்டில் ஜிவ் என்ற சத்தத்துடன் அடுப்பு எரியும். பற்ற வைக்க கக்கடா என்ற குறடு வடிவ வஸ்து உதவியது. அதுக்கு அழுத்தம் கொடுக்கச் சின்னதாக வலது காலோரம் (அடுப்புக்கு) ஒரு குமிழ் போல உண்டு. நடுநடுவே, நடுவே இருக்கும் எண்ணை வரும் பாதையை ஒரு சாண் நீளத்தில் இருக்கும் ஒரு ஆயுதத்தின் நுனியில் மாட்டப்பட்டிருக்கும் பின்னால் முன்னால் குத்தி அடைப்பை நீக்க வேண்டும். 

அதிகமாக ப்ரஷர் அடித்து அது வெடித்து கல்யாணமாகி வந்த பல புதுப்பெண்கள் செத்துப்போனதற்கு இந்த அடுப்பும் வரதட்சிணையும் கூட்டுக்களவாணிகளாக “ஸ்டவ் வெடித்து இளம்பெண் மரணமாகி’ தினத்தந்தியின் தலைப்புக்கும் தாசில்தார் வருமானத்துக்கும் உபயோகமாக வெகுநாட்கள் இருந்தன. 

இன்னும் சில மூடப்பட்ட வீடுகளின் மங்கிய வெளிச்சத்தில் ஜோஸ்யம் சொல்லவும் உபயோகப்பட்டன. சில ப்ராக்யன்கள் ஸ்டவ் பேசியதாய்ச் சொன்ன அபாண்டமான புரளியைக் கேட்டு பூமி பிளக்காமல், அதற்குப் பதிலாக 2004ல் சுனாமியை ஏவி விட்டது என்று கூட்டங்கூட்டமாகப் பேசிக்கொண்டார்கள். நின்று கொல்லும்.

அடுத்தது விறகு அடுப்பு. சிமெண்டாலோ மண்ணாலோ அவரவர் வசதிக்கேற்ப வாயில்(அடுப்பின்) விறகு நுழையும் அளவு முக்கட்டி வைத்து அடுப்பு காணப்படும். மண்ணெண்ணையில் தோய்த்த வரட்டி விள்ளலை(ஒரு வரட்டியில் கால் பாகம்) அடுப்பின் வாய்களுக்குள் திணித்த விறகுகளுக்கு நடுவே பாட்டி ஒளித்து வைப்பாள். 

அதன் பின் வரட்டியில் நெருப்பிட்ட பின் தன் வேலையை விறகு தொடங்கும். வரட்டி நனைந்துபோன தருணங்களில் காகிதம். நெருப்பு அதிகமாகும் போது விறகை முன்னிழுத்து பின்னிழுத்து அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் செய்ய வேண்டும். 

விறகு வாங்கும்போது ஏமாற்றப்பட்டிருந்தால் விறகின் தைலம் கன்னா பின்னாவென்று பொங்கிச் சமையலறையில் துர்கந்தத்தை மூக்கிற்கும் கறையைக் கைக்கும் உண்டாக்கி, கண் எரிச்சலையும் வயிற்றெரிச்சலையும் ஒருங்கே உண்டாக்கும்.

உம்ரா திரி ஸ்டவ் மிக சாதுவானது. அதற்கு அழுத்தம் இல்லாது வெறும் நாடாத் திரியின் உபயோகத்தில் தன் திறமையைக் காட்டும் மிதவாதி. யாரையாவது குறித்த நேரத்தில் சோறு போடாமல் பழி வாங்க இதை வாங்க ஆசைப்பட்டார்கள். அவ்வப்போது எரிகிறதா என்று குனிந்து பார்த்தபடியே சிலர் தூங்கிப்போனதுமுண்டு.

நாலாவது மிகவும் ஆசாரமான பாட்டிமாருக்கும், பாட்டி சொல்லே வேதவாக்கு என்று நினைத்த சொல்ப தாத்தாமாருக்கும் உகந்த அடுப்பு கும்மட்டி அடுப்பு. ஒரு இரும்பு வாணலியின் அடியில் சல்லடை போன்ற நெருப்பின் சூடு வரும் வகையில் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பில் அடுப்புக் கரி நிரப்பி கீழ்ப்பக்கம் போஸ்ட் பாக்ஸ் போல ஒரு ஓபனிங் இருக்கும். அதற்குள் சுருட்டப்பட்ட காகிதத்தைப் பற்ற வைத்து வாயினுள்ளே சொருகி பனைஓலை விசிறியால் பட்பட் என்று முப்பது தடவை ஏர்வாங்கியவுடன் நல்லபிள்ளையாய் நெருப்பாய்ச் சிரிக்கும். 

பொதுவாய் இதில் பால் காய்ச்சிக் காஃபி குடிக்க மாதம் மும்மாரி பொழியும் என்று ஓர் நம்பிக்கை. பல கல்யாண வீடுகளுக்குப் போய் ’நான் மடி’ என்று பே(பீ)த்தும் ஆசாமிகளுக்கும், ஆமாமிகளுக்கும் இந்தக் கும்மட்டி அடுப்பில் வெங்கலப்பானை தனியே ஏற்றப்பட்டு சுட்ட அப்பளம் சகிதம் தனியாக சேவை நடக்கும்.

இந்த நாலுவகை அடுப்பையும் வைத்திருப்பவர்கள் சகல சம்பத்தும் நிறைந்தவர்களாக சமூகத்தில் கருதப்படுவார்கள்.

விறகடுப்புக்கு ஏகப்பட்ட முன்னேற்பாடுகளை வெயில்காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தெருக்களில் மாட்டுவண்டியில் கரடுமுரடாய் விறகுகளையும், மூன்றுகாலும் நடுவில் குருவாயூரப்பனுக்குத் துலாபாரம் கொடுக்கும் பெரிய தராசையும் தூக்கிப் போட்டுக்கொண்டு முண்டாசு கட்டியபடியே மாடசாமித் தேவர் கூடவே வெறகு வெறகு என்று கத்தியபடியே வருவார். 

குண்டு-தூக்கு-அந்தர் என்று தமிழ்நாட்டின் சொலவடைக்கேற்றபடி ஒவ்வொரு வடையும் ஸாரி எடையும் இருக்கும். தராசை நடுத்தெருவில் நிறுத்தி - எப்போதாகிலும் சைக்கிள் மட்டுமே போகும் தெருவில் - ட்ராஃபிக் ஜாம் ஏற்படுத்தியிருக்கிறோமே என்ற சமூக ப்ரஞ்ஞை இன்றி, விறகின் விலை பேரம் பேசி எடைபோட்டு விறகைத் தூக்கிவீசி கோலம் போட மெத்து மெத்தென்று சாணி போட்டு மெழுகியிருந்த முற்றத்தை அலட்சியமாகவும் குரூரமாகவும் பெயர்த்துவிடுவார் தேவர். 

வண்டியையே மிகவும் சரியாக பிள்ளையார் பூஜையில் பிள்ளையாரைக் கோலத்தில் ஆவாஹனம்  செய்வது போல கோலத்தின் நடுவில்தான் அலங்கோலமாக நிறுத்தும் அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? 

தேவரின் பெயரைக் கொண்டு  ’ஒருவேளை இவர்தான் சாண்டோ சின்னப்பத்தேவராய் இருப்பாரோ?’ என்று தவறுதலாகப் புரிந்துகொண்டோ என்னவோ, பீதியில் அந்த மாடு வியாபாரம் முடிவதற்குள் சத்தங்காட்டாமல் ஒன்றுக்கு ரெண்டுக்கு எல்லாம் முடித்துவிடும். 

பாட்டி தேவரிடம் முற்றத்தைப் பெயர்த்ததற்கும் சேர்த்து விறகின் விலையில் பேரம் பேசி சந்தடி சாக்கில் மாட்டையும் தொந்தரவு பண்ணாமல் காலால் உதையும் வாங்காமல் லாவகமாக சாணியையும் அள்ளி முறத்தில் போட்டு வைத்துவிடுவாள். சிறிது அசந்தாலும் பக்கத்துவீட்டு லோகாம்பா வந்து சாணியை அபகரித்துவிடுவாள் என்பதால் சூடாக மாட்டின் பின்புற சாட்சியாக இந்த சாணி அபகரிப்பு.

மாட்டின் பின்னங்காலில் உதை வாங்காமல் லாவகமாக சாணி அள்ளுவதைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்துவிட்டால் பொத்துக்கொண்டு வரும் கோபம். 

ஏண்டா!அடுப்பு பத்தவைக்க-வாசல் தெளிக்க-வேண்டித்தானே இருக்கு? வாசல்லயே கெடைக்கறத விடமுடியுமா? என்று பதில் சொல்லிபடியே தேவரிடமும் பாட்டியம்மா பாட்டியம்மாதான் என்று சான்றிதழ் வாங்கிவிடுவார். 

அவரின் சான்றிதழ் குடிக்கக் கொஞ்சம் மோருக்கான விண்ணப்பமும் கூட. உள்ளே போய்ப் பாட்டி கொண்டு வரும் மோரை மேலே சிந்தியபடியே குடித்து விட்டு ’நல்லாருக்கணும் பாட்டியம்மா’ என்றபடியே ’காய் காய்’ என்று அவரை அறியாமலே ஹிந்தியில் மாட்டைப் பத்தியபடியே கிளம்புவார்.

அடுத்து பின்னாலேயே வருவார் விறகு பிளக்கலியோ விறகு என்று கோடரியுடன். மல்யுத்தம் போவதற்குப்பதிலாக விறகு பிளக்க வந்துவிடும் அளவுக்கு சரியான வேலையில்லாத் திண்டாட்டம் அல்லது ஆச்சர்யப்படவைக்கும் கட்டுமஸ்து. கூலிபேசிய பின் அடுப்பில் நுழையக்கூடிய அளவில் வெட்டிபோடப்பா என்று அன்றைய பொழுது அதிலேயே போய்விடும். 

சந்தடி சாக்கில் ஃப்ரீயாகவே கிட்டிப்புள்ளும் அவர் செர்வீஸிலேயே தேத்திவிடுவோம். விறகுச் செதில்கள் நட்சத்திரம் போல சிதறிக்கிடக்க வெயிலில் நன்கு மாலை வரை காயும். மாலையில் முன்னறையில் ஏற்றப்பட்டு மறுநாளும் முழுதும் காய வைக்கப்பட்ட பின் பரணில் ஏற்றிவிடுவாள் பாட்டி எனக்குக் கடலைஉருண்டையை லஞ்சம் கொடுத்து. வெட்டிய விறகு  பரணில் ஏற்றப்பட்ட மறுநாளிலிருந்து ஒருவாரமாகி விடும் கோலமிடும் முற்றம் பழைய மெத்துமெத்தை அடைய.

28.6.11

அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே-I


சார்வாள்! உங்களைத்தான். கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்புங்களேன்.

இப்போது நாம் போகஇருப்பது எண்பதுகளுக்கு. திருநெல்வேலியின் எல்லைகளுக்குள் இருந்த ஸ்ரீவைகுண்டம் என்கிற புண்ணிய க்ஷேத்திரத்திற்கு. நவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளர்பிரான் அருள்பாலிக்கும் வைஷ்ணவத் தலம் இந்த இடுகை மூலம் 30 வருஷங்களுக்குப் பின்னால் வரலாற்றில் பதிய வைக்கப்பட இருக்கிற  ஒரு மாபெரும் சரித்திர நிகழ்வைப் பற்றிய அக்கறை கிஞ்சித்தும் இல்லாது ஓடுகிற பஸ்ஸின் பின்னால் பறக்கும் தெருப்புழுதி போல நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த ஒரு பொன் காலைப் பொழுது.

யானைக்கால் பெல்பாட்டம்-பாவாடை போல் புரளும் பேண்ட்டுக்குக் கீழே ஜிப் வைத்தும், பேண்ட்டில்  கேபிடல் எக்ஸ் அளவில் பெரிதான லூப்பை சகட்டுமேனிக்கு இடுப்பைச் சுற்றித் தைத்து பட்டையான பெல்ட்டை அணிந்தும், சரியாகக் கண் தெரிந்தும் கண்டாக்டரிடம் அவர் காட்டும் எழுத்துக்களைத் தப்புத் தப்பாய்ப் படித்து அவருக்கு மொய் எழுதி முகத்தில் முக்கால் வாசி கண்ணாடி தெரிவது போல ஒரு ஃப்ரேம் செலெக்ட் பண்ணி அதை ஆள்க்காட்டி விரலால் மையப்பகுதியில் அவ்வப்போது அழுத்திவிட்டபடியும்,   காதுகளைத் தொலைத்த “ஒரு தலை ராகம்” சங்கரின் ஹேர்ஸ்டைலோடும், சந்திரசேகர் போலத் தாடிவளர்த்து தலையை இடதுபக்கமாக 90 டிகிரியில் சாய்த்து கடைவாயில் கொஞ்சமாய் ரேஷனில் சிரித்து ஃபோட்டோக்களுக்குப் போஸ் கொடுத்தும்- பஸ், ரயில் கிளம்பிய பின் ஓடிப்போய் ஏறியும்-சமயத்தில் தடுக்கிவிழுந்து பேண்ட்டைக் கிழித்துக்கொண்டும்- விழாமல் ஏறியவர்கள் கல்லூரிக்காகக் கையிலிருக்கும் ஒரே நோட்டை வயிற்றுக்கும் பேண்ட்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் செருகியும்-கலைந்து போகாத முடியைக் கலைத்துவிட்டு பின்பாக்கெட்டில் இருக்கும் அழுக்குச்சீப்பை எடுத்து வாரியும் பயங்கர அமுக்கமாக இருக்கும் குண்டுப் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விட்டும் கடந்து வந்த அந்த எண்பதுகளுக்குத்தான்.

தெருவில் எல்லா வீடுகளோடும் எல்லா வீடுகளுக்கும் தொடர்பு பின்வாசல் வழியே உண்டு. இந்த வீடுகளின் அமைப்பால் ரகசியம் என்று சொல்லப்படும் கிசுகிசுக்கள் என்பதான ஒரு சமாச்சாரமே இருக்கமுடியாது. எல்லாமே அம்பலம்தான். பத்து வீடு தாண்டிய நடராஜனின் வீட்டில் இன்றைக்கு என்ன சமையல் என்பதிலிருந்து கடைசி வீட்டுச் செல்லம்மா பெண் சீமந்தத்துக்கு மாப்பிள்ளை வீட்டுச் சீர் என்னென்ன? என்பது வரைக்கும் எல்லோர் உள்ளங்கையிலும் நெல்லிக்கனி.

காலை நேரத்தில் தெருவின் ”நடுசெண்டரான” புராதன சிவன்கோயிலின் கைலாசநாதரைச் சீண்டுவதுபோல அவரவர் வீட்டு வாசலில் இருந்தே கன்னத்தில் இருகைகளாலும் மூன்றுமுறை தட்டி தன்னைத் தானே சுற்றிப் ப்ரதக்ஷிணம் செய்துவிட்டு தென்னாடுடைய சிவனே போற்றி-எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தமிழில் வழிபட்டு விட்டு வீட்டுக்குள் நுழைவார்கள்.

பிரபலமான சங்கேதபாஷையான முகவாய்க்கட்டையில் தொட்டு ஃப்ளையிங் கிஸ் கொடுக்கும் வழக்கத்தின் வேர் எப்போது முதல் கிளை விட்டுப் பாய்ந்தது என்ற ஆராய்ச்சியை ஏதோ ஒரு ஈசான்யமூலையில் கறாராக ஃபீஸ் கறக்கும் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் பொருளாக எடுத்துக்கொண்டால் அடிக்கடி சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து விலக்குப் பெறலாம் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது.

அடுத்து வீடுகளிலேயே காய்கறிகளைக் கொஞ்சம் கொஞ்சம் தேற்றிவிடலாம். முருங்கை புடலை முளைக்கீரை கத்தரி வெண்டை மிளகாய் தக்காளி பாகல் இவையெல்லாம் நமக்குத் தெரியாமல் தானே விளைந்து காய்த்துவிடும். புடலை நீளமாய்க் காய்க்க சணல்கயிற்றின் ஒரு நுனியில் பொடிசாய் ஒரு கல்லைக்கட்டி கயிற்றின் மற்றொரு நுனியைப் புடலங்காய் பூவிலிருந்து பிறந்தவுடன் அதன் வாலில் கட்டி இம்சிப்பார்கள்.

பூக்களும் அப்படித்தான். மல்லிகை பவழமல்லி நந்தியாவட்டை அரளி தும்பை இவையெல்லாமும் வீட்டுக்கு வீடு தவறாமல் பூத்துக்குலுங்கும். அதுவும் மாலையில் கனகாம்பரத்துக்குத் தண்ணீர் விடுகையில் அவை வெடித்து விதை பரப்புவது சுவாரஸ்யமாக இருக்கும்.

இதையும் தாண்டி இங்கிலீஷ் காய்கறிகள் வாங்கிவருகிறேன் என்று ஜம்பமாக யாராவது கூடையுடன்  காய்கறிக்கடை என்ற பேரில் ஒரு சோகமான நூறு சதுர அடிக்குள் புழுக்கமான சுவர்களுக்குள் சென்றால் சப்பையாக பூசனிக்காய் போலக் கேவலமான நாற்றமடிக்கும்  முட்டைக்கோஸும், வாழைப்பழம் போன்ற பதத்தில் கேரட்டும், கொத்தவரங்காயோ என நினைக்கவைக்கும் பீன்ஸும் பச்சைக்கலரில் வேகவைத்தாலும் வேகாது படுத்தும் உருளைக்கிழங்கும் ஏண்டா காய்கறி வாங்க வந்தோம் என்று கேலி செய்யும்.

தேமே என்று ஒன்றும் தெரியாதது போல செல்லக்கனி நாடார் ஓரமாகக் கல்லாவில் உட்கார்ந்து தராசில் அவருக்குப் பிடித்த மாதிரி எடைபோட்டு கொசுறுக்கு ஒரு சொங்கிக்காய் உபரியாகக் கூடையில் போட்டு கால்குலேட்டரின் கொள்ளுத்தாத்தா போன்ற கனவேகத்தில் ஆள்காட்டி விரலை எண்களுக்குப் பக்கத்தில் விரட்டி காதில் செருகியிருக்கும் பேட் ஸ்மெல்லடிக்கும் ஒரு ரூபாய் ரீஃபிலைத் தர்மாமீட்டர் போல உதறி எழுதவைத்து கல்லாவில் காசை வீசுவார்.

(ரும்)

1. முன்னால் தொட விடுபட்டுவிட்டது. தொட்டுக்கொள்ளவும்.

2. படத்தில் இருப்பவர்களுக்கும் இந்த இடுகைக்கும் தொடர்பில்லாவிட்டாலும் இதே போல லட்டு உருட்ட உதவுகிறேன் என்று நைசாக லட்டுக்களை சுருட்ட உதவியிருக்கிறேன்.)

27.6.11

காதற்ற ஊசிபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி.

சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்பூம்பட்டினம். திருவெண்காட்டின் கடவுளான ஸ்வேதாரண்யப்பெருமாளைக் குறிப்பதாய் சிறுவயதில் ஸ்வேதாரண்யன் என்று பெற்றோர்கள் பெயரிட்டனர்.

வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் கடல்கடந்தும் பொருளீட்டி மன்னரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். இவரின் செல்வாக்கைக்கருதி மரியாதை நிமித்தமாய் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கும் வகையில் மக்கள் இவரைப் பட்டினத்தார் என்றழைத்தனர்.

சிவகலை எனும் பெண்ணை மணந்த ஸ்வேதாரண்யனுக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறின்றி வருத்தம் கொண்டிருந்தார். திருவிடைமருதூர் சென்று இறைவனை வழிபடும்போது ஓர் ஆண்குழந்தையை சிவசருமர் என்ற சிவபக்தர் ஒருவர் குளக்கரையில் கண்டெடுத்து அதை பட்டினத்தாரிடம் கொடுக்க அவரும் அக்குழந்தைக்கு மருதபிரான் என்ற பெயரிட்டு வளர்த்துவந்தார்.

மகன் வளர்ந்து பெரியவனானதும் வணிகத்துக்காக அவனைத் தயார் செய்து கடல் கடந்து வியாபாரம் செய்ய அனுப்பினார். அவனோ திரும்பிவரும்போது எருவரட்டியும் தவிட்டு மூட்டைகளுமாய் வந்திறங்கவே மிகுந்த கோபமுற்றார்.

மருதபிரானோ பதிலேதும் சொல்லாது ஒரு ஓலைத் துணுக்கையும் காதற்ற ஊசி ஒன்றையும் ஒரு பேழையில் வைத்துக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு எங்கோ சென்று விட ஓலைத் துணுக்கைப் பட்டினத்தார் எடுத்துப் படித்துப்பார்த்தார்.

 அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.

அந்த வாக்கியமே அவரின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது. தன் ஒப்பற்ற செல்வம் பொருள் அனைத்தையும் துறந்து ஒரு கோவணம் மட்டுமே தரித்துத் துறவு பூண்டார். அவரின் இந்தத் துறவு புத்தரின் துறவுநிலைக்கு இணையான துறவாகக் கருதப்படுகிறது.

அவர் துறவிக் கோலம் தம் குடும்ப கௌரவத்துக்கு அவமானம் உண்டாக்குவதாய் எண்ணிய அவருடைய மூத்த சகோதரி விஷம் தோய்த்த அப்பத்தை உண்ணுவதற்குக் கொடுத்தார்.

அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள். அவரை ஒரு சித்தராகக் கருதி பட்டினத்தடிகள் என்று எல்லோரும் மதிக்கத் தொடங்கினார்கள்.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னை மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையை அடுக்கிப் பற்றச் செய்தார். அன்னையை எண்ணி கொழுந்துவிட்டெரியும் சிதையின் முன்னே பத்துப் பாடல்களைப் பாடினார்.

பெரும் புகழ்பெற்றவையாயும் கேட்பவரின் மனதை உருக்குவதாயும் இருக்கின்றன. அந்தப் பத்துப் பாடல்களும்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
          வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
          நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
          எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
          எல்லாம் சிவமயமே யாம்
பொறுமையாய் இந்தப் பத்துப் பாடல்களையும் வாசிக்க அவற்றின் பொருள் மிக எளியதாய் விளங்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எத்தனை எளியதாய் எத்தனை ஆழமானதாய் இருப்பது பெரும் வியப்பிலும் வியப்பு.

பட்டினத்தார் குறித்த இன்னுமொரு இடுகை பின்னுமொரு நாளில்.

25.6.11

மொழியற்ற நொடிகவிதையின்
முதல்வரியால்
எழுதமுடிந்ததில்லை

மரணத்திலிருந்து
மீண்டவனின்
வார்த்தைகளற்ற
மறுநொடியை-

கூடு சிதைந்தபின்னும்
மறுகூட்டை நிறுவமுயலும்
பறவையின் நம்பிக்கையை-

தூக்குக்கயிற்றின் நிழலில்
மன்னிப்பு வழங்கப்பட்டவனின்
விசும்பும் கண்ணீரை-

கவிதையின்
இறுதிவரியாலும்
எழுதவாய்த்ததில்லை

பந்தயத்தில் தோற்றவனின்
விரக்திபூத்த வியர்வையை -

பிரார்த்தனைகளில்
மறைந்திருக்கும்
துன்பத்தின் பெருவலியை-

நாடிழந்த இனத்தின்
நெடுங்கனவு
கலைக்கப்பட்டுக்
காய்ந்த பின்னும்
சொட்டும் குருதியை-

கவிதையின்
முதல்
வரியாயும்
இறுதி வரியாயும்
இருக்க
வாய்த்ததில்லை

மொழியைக்
கடந்தவற்றிற்கும்
துறந்தவற்றிற்கும்.

24.6.11

மனதின் நிறம்ஸ்ரீ.ஜி.எம்.பாலு சார் (gmb writes) இன்றெனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலின் உள்ளடக்கம் ஒரே நேரம் வருத்தமும் ஆனந்தமும் தருவதாயிருந்தது.

உடனே உங்களோடு பகிரத் தோன்றியது. அந்த மின்னஞ்சலின் மொழிமாற்றம் கீழே: .
************************************************************************
இந்த சம்பவம் பிரிட்டிஷ் ஏர்வேஸின் ஜொகன்னெஸ்பர்க்க்கும் லண்டனுக்குமிடையிலான விமானத்தில் நிகழ்ந்தது.

50 வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்காரப் பெண் ஒரு கறுப்பருக்கருகில் அமர நேரிட்டது.

இதைச் சகிக்க முடியாத அப்பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து,

” ஏம்மா? இதை நீ பார்க்கவே இல்லியா? ஒரு கறுப்பனுக்கு அருகில் என்னிருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதை என்னால் ஏற்கமுடியாது. மாற்று இருக்கை ஒன்று உடனடியாக ஒதுக்கித் தா.” என்றாள்.

”தயவு செய்து அமைதியாய் இருங்கள். விமானத்தின் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. ஏதாவது காலி இருக்கை இருக்கிறதாவெனப் பார்த்துவருகிறேன்” என்றாள் பணிப்பெண்.

சிறிது நேரத்தில் திரும்பிய பணிப்பெண்,

“ நான் சொன்னது போலவே எகானமி வகுப்பில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கேப்டனிடம் கேட்டதில் அவர் பிஸினஸ் வகுப்பிலும் காலியிடம் எதுவுமில்லை. ஆனால் முதலாம் வகுப்பு இருக்கை ஒன்று காலியாக உள்ளது என்றார்.” என்றபடியே-

அந்த வெள்ளைக்காரப்பெண்ணை மேலும் பேசவிடாமல் தொடர்ந்தாள்.

“எகானமி வகுப்பில் பயணிப்பவரை முதலாம் வகுப்பில் பயணிக்க அனுமதிப்பது எங்கள் நிறுவனச் சட்டப்படி வாடிக்கையல்ல. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கறைபடிந்த மனதோடு பக்கத்து இருக்கையில் ஒருவரோடு பயணிக்கும் துர்பாக்கியத்தைக் கருதி இதற்கு விதிவிலக்காக சட்டத்தைத் தளர்த்த கேப்டன் ஒப்புக்கொண்டார்”

அந்தக் கறுப்பு நிற மனிதரிடம் திரும்பி, “ நீங்கள் உங்கள் உடைமைகளோடு காத்திருக்கும் முதல் வகுப்பு இருக்கையில் பயணிக்கலாம். அதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபமிருக்காது என நினைக்கிறேன்” என்றாள்.

நடைபெற்ற இந்த அவலத்தை முதலில் இருந்து அதிர்ச்சியில் வாயடைத்துப் பார்த்துக்கொண்டிருந்த சக பயணிகள் அனைவரும் எழுந்து நின்று உரக்கக் கைதட்டி அச்செயலைப் பாராட்டினார்கள்.

இது உண்மைச் சம்பவம். உங்கள் மனது அந்தக் கறுப்பு மனிதரின் காயமடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்ல விரும்புமாயின் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் இதைப் பகிருங்கள்.

நன்றி.
***************************************************************************
நன்றி பாலு சார். சரிதானே? 

இருப்புப்பாதையின் ஓவியம்
சரசரக்கும்
சரளைக்கற்களை
ஊடுருவும்
இருப்புப்பாதைகளும்-

தலைமுடிக்குள்
ஒளிந்துகொள்ளும்
கரித்துண்டுகளும்-

அதிரும்
மின்கம்பிகளுடன்
இருளைக் காட்டும்
பாதையோர
மின்மினிகளும்-

பார்வையற்ற யாசகனின்
மாறாத இசையும்-

அடிவயிற்றில்
ஓலமிடும் பசியும்-

இருளில் குளித்த
தெருக்களும்-

எனத் தன்
வர்ணங்களைத்
தானே
தேர்வுசெய்கிறது
அலுப்பூட்டும்
என் பள்ளிப்பருவத்து
ஓவியம்.

முடிவு பெற்ற
ஓவியத்தில்
இடம்பெறவே இல்லை

பயிலாத கல்வியும்
தொலைந்துபோன
என் பால்யமும்
அம்மாவின் அண்மையும். 

23.6.11

மயில்குட்டி


மயிலிறகை
புத்தகத்தில்
உறங்க வைத்து
அரிசி போட்டு
மறுநாள்
குட்டி
போட்டிருக்காவெனப்
பார்த்து
மயிலிறகோடு
வளர்ந்த
பிள்ளைகளில்
நானும் ஒருவன்.

ஒருவேளை
நேற்று வரை
அதற்குத்
தினமும்
அரிசி போட்டு
புத்தகத்தின்
மயிலிறகைத்
திறந்து
இன்று
பார்த்திருப்பேனானால்
குட்டி போட்டிருக்கக்
கூடும்.

22.6.11

தமிழ் மேகம்- II


நல்ல ரசனையும் கூர்மையும் கொண்ட காளமேகத்தின் இன்னும் சில பாடல்களை இன்றைக்குப் பார்க்கலாம்.

முதல் பாடலை மேலோட்டமாகப் படிக்கும்போது பாம்பை எப்படி வாழைப்பழத்துடன் ஒப்பிட்டு? எனக் குழம்பலாம். நாலு வரிகளில் நறுக்குத் தெறிக்க வைக்கிறார் காளமேகம்.

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது-விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்.

படித்தவுடன் பாம்பின் குணத்தைப் பற்றி எழுதப்பட்ட பாடலாய்த் தோன்றும் இந்த வெண்பா என்ன சொல்கிறது வாழைப்பழம் பற்றி?

நஞ்சிருக்கும் - நைந்துபோயிருக்கும் (பேச்சுவழக்கில்) நஞ்சிருக்கும்
தோலுரிக்கும்_ சாப்பிடும் முன் தோல் உரிக்கப்படும்
நாதர்முடி மேலிருக்கும் - அபிஷேகத்தின் போது சிவனின் சிரசில்  வாழைப்பழத்துக்கும் இடமுண்டு
வெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பல்லில் அரை பட்டால் மீளாது.

எத்தனை அற்புதமான ஒப்பீடு?

அடுத்து தகர வரிசையை மட்டுமே வைத்து எழுதிய கற்பனையின் சிகரமாக இன்னொரு மறக்கமுடியாத பாடல்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..
துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது.

இது ஒரு வண்டைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார்.

தத்தித் தாது ஊதுதி - தாவிச் சென்று பூவின் மகரந்தத்தை ஊதுகிறாய்
தாது ஊதித் தத்துதி - மகரந்தத்தை ஊதி உண்ட பின் வேறேங்கோ செல்கிறாய்
துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்
துதைது அத்தா ஊதி - அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்
தித்தித்த தித்தித்த தாதெது - இரண்டிலும் தித்திப்பான இருந்த மகரந்தம் எது?
தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?

இப்பாடலில் தாது என்னும் சொல் மகரந்தம்,பூ, பூவின் இதழ் மூன்றையும் குறிக்கிறது.

அடுத்த பாடல் யானையையும் வைக்கோலையும் ஒப்பிட்டுக் கலக்கிய சாகசம்.

வாரிக் கள‌த்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலுமால் யானையாம்

வைக்கோல்:

வாரிக் கள‌த்தடிக்கும் – அறுவடை செய்கையில் வாரியெடுத்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் – அது பின் கோட்டைக்குள்ளே களஞ்சியத்தைச் சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை:

வாரிக் கள‌த்தடிக்கும் – பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் – பின்னே பகையரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – இவ்வாறாக போர்த்துறையிலே சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்
சீருற்ற – சிறப்புற்ற
செக்கோல் மேனித் திருமலைராயன் – செந்நிறமான மேனியுடைய திருமலைராயனின்
வரையில் – மலைச்சாரலிடத்தில்
வைக்கோலுமால் யானை – வைக்கோலும் மதயானை
யாம்.

மற்றொரு பாடல் முகம் பார்க்கும் கண்ணாடியையும் அரசனையும் ஒப்பிடுகிறது.

யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்

கண்ணாடி:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – யாவரையும் அவரவர்களாகவே காட்டி
தீது அகலக் பார்த்தலால் – தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால – தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

அரசன்:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து – எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலப் பார்த்தலால் – தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் – பூசப்பட்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்.

இதற்குக் கீழ் வரும் பாடல்கள் மொழியின் அழகை ரசிக்கத் தெரிந்து நேரடியாய்ப் பொருள் காணத் தெரிந்தவர்களுக்கு மட்டும். சில பாடல்கள் பொருளின் துணையையும் தாண்டியவை என எனக்குப் பட்டதால்.

காளமேகத்துக்குக் கடவுளும் ஒன்றுதான் மன்னனும் ஒன்றுதான் பெண்களும் ஒன்றுதான் என்பதால் பாட்டிலுள்ள சுவையை மட்டும் பார்க்க விரும்புகிறேன்.

சிவனைப் பெண்பித்தன் என்று சொல்வதுபோல் சொல்லி அக்காளை வாகனத்தில் காட்சி தரும் அழகை அக்காள் தங்கையின் வார்த்தை உபயோகத்தில் மடக்கியிருப்பதையும் கவனியுங்கள். சபாஷ்.

கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச் சுமந்த பித்தனார்-எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினாராம்.

வேசியையும் தென்னையையும் ஒப்பிட்டு இந்தப் பாடல்.

பாரத் தலை விரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும்- நேரே மேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னைமரம்
கூறும் கணிகையென்றே கொள்.

வேசியையும் பனையையும் ஒப்பிட்டு இந்தப்பாடல்.

கட்டித் தழுவுதலால் கால் சேர ஏறுவதால்
எட்டிப் பன்னாடை இழுத்தலால்-முட்டப் போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
வேசையெனலாமே விரைந்து.

ரசிகமணி டி.கே.சி. காளமேகத்தைத் தூக்கியடிக்கக் கூடிய சிலேடைக் கவிஞர் ஒருவர் திருநெல்வேலியின் தென்திருப்பேரையில் இருந்திருக்கிறார் என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். அவர் குறித்த விவரங்களையும் தேடிவருகிறேன்.

ஆனாலும் எல்லோராலும் பரவலாய் அறியப்பட்ட காளமேகத்தின் இடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளதாய்த் தான் இப்போதுவரை தோன்றுகிறது. 

21.6.11

மாறுவேடம்
1
சற்றுமுன்
வீட்டிலிருந்த அப்பாவை
வந்தவரிடம்
”அவர் வீட்டில் இல்லையே?”
என்றாள் அம்மா.

கொஞ்சநேரம் கழித்துக்
குழந்தை மாடிப்படியடியில்
ஒளிந்துகொண்டு கத்தியது
அம்மா நான் இங்க இல்ல.

2
”ஏன் சும்மா அலட்டிக்கிற?
போனாப்போகுது.
அடுத்த தடவை பாத்துக்கலாம்”
என்று அம்மாவிடம்
சொன்ன அப்பா
என்னிடம்
”எத்தனை தடவை
அடுத்த தடவைன்னு
சால்ஜாப்பு சொல்லுவியோ
தெரியலை” என்றார்.

20.6.11

தமிழ் மேகம்-Iமழைமேகத்தைத் தெரியாதவர்கள் இருக்கலாம். காளமேகத்தைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.

ஒரே கவிதை இரண்டு பொருள். சிலேடை இவரின் ஆயுதம். சிலேடையைக் கம்பர், கடிகைமுத்துப் புலவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர் போன்றவர்கள் உபயோகித்திருந்தாலும் வசையும் எள்ளலும் இயல்புமாய் இவரை விடத் தமிழில் அற்புதமாக உபயோகித்தவர்கள் யாரும் இருந்ததில்லை.

இவர் விளையாட்டுக்குச் சொல்கிறாரா வினையாய்ச் சொல்கிறாரா என்று ஒவ்வொரு பாட்டுக்கும் பதற வைக்கும் சில்மிஷர்.

இவரின் பெற்றோர் வைத்த பெயர் வரதன். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கும்பகோணம் தந்த  தமிழின் பெருங்கொடை. தாயுமானவருக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்.

ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா  கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் பரிஜாரகராய் இருந்தார். திருவானைக்கா கோயில் தேவதாசியிடம் கொண்ட மையலால் அவளை மணந்து சைவர் ஆனார். தினமும் ஆலயத் திருப்பணிகளை இருவரும் செய்து வந்தனர். 

ஒருநாள் அர்த்தஜாம வழிபாட்டின்போது வரதன் மனைவி மோகனாங்கி நாட்டியம் ஆடும் முறை வந்தது. தான் நாட்டியம் ஆடிவிட்டுத் திரும்ப நேரம் ஆகும் என்பதால் கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொல்லி இருந்தாள் மோகனாங்கி.  தன் வேலைகள் முடித்து மண்டபத்திற்கு வந்து காத்திருந்த வரதன் அசதி மிகுதியால் தூங்கிவிட்டார்.

நாட்டியம் முடிந்து வந்து குரல் கொடுத்துப்பார்த்த மோகனாங்கி கணவனை அழைத்தும்  வராத காரணத்தால் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என நம்பி வீடு சென்றாள்.

அந்த மண்டபத்தில் வரதன் தனியே இருக்கவில்லை. அம்பிகையின் அருளை வேண்டி ஒரு பண்டிதரும் இரவு பகல் பாராமல் தவம் செய்துகொண்டிருந்தார். ஞானம் வேண்டித் தவம் செய்த அவருக்கு ஞானம் கொடுக்க எண்ணிய அம்பிகை அங்கே அப்போது வந்தாள்.

தூங்கிக் கொண்டிருந்த வரதனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்ன திடீரென சலங்கைச் சத்தம்? ஒருவேளை மோகனாங்கியா? எனப் பார்க்கக் கால்களில் சிலம்பும், பாடகங்களும் அணிந்து ஒரு பெண் நடக்கும் ஒலி கேட்டது.

வரதன் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு அழகான சின்னஞ்சிறு பெண் யோகநிலையில் இருந்த பண்டிதரை எழுப்பினாள்.  பண்டிதர் அருகில் சென்று தன் வாயில் இருந்த தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே அவர் வாயைத் திறக்கச் சொன்னாள்.

அம்பிகையை எதிர்பார்த்திருந்த பண்டிதர் ஒரு சிறு பெண் வந்து தன் எச்சில் தாம்பூலத்தைத் தன் வாயில் துப்ப வாயைத் திறக்கச் சொல்கின்றாளே என எண்ணிக் கோபத்துடன் அவளைத் திட்டி அனுப்பினார்.

திரும்பிச் செல்ல முயன்ற அம்பிகையோ தூணில் சாய்ந்து அரை உறக்கத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வரதனைக் கண்டாள்.  ஒன்றும் புரியாமல் வாயைத் திறந்த வரதனின் வாயில் அம்பிகை தாம்பூலத்தை உமிழ்ந்தாள்.

அன்று முதல் சாதாரண வரதன் கவி காளமேகம் ஆனார். அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராய் விளங்கிய காளமேகம் அகிலாண்டேஸ்வரியை சரஸ்வதியாகவே பாவித்து சரஸ்வதி மாலை என்னும் நூலைப் பாடினார். திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், தனிப்பாடல்கள், யமகண்டம் என்ற பாடல் தொகுப்புகள் காளமேகத்தால் பாடப் பட்டவை.

காளமேகம் கலக்கிய சில பாடல்களை இன்றைக்குப் பார்க்கலாம். அவற்றின் ஆச்சர்யமே 15ம் நூற்றாண்டில் இத்தனை எளிமையாய் எழுதப்பட்ட மொழியும் அவற்றின் குதர்க்கமான மற்றொரு பக்கமுமே ஆகும்.

தமிழின் “க’ என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல உடனே காளமேகம் பாடுகிறார்-

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

கூகை என்றால் ஆந்தையை குறிக்கும். காக்கையானது பகலில் கூகையை வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும்வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூடக் கையாலாகிவிடக்கூடும்.

இந்தப் பாடலைப் பாருங்கள்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!

இந்த வெண்பாவை மேலோட்டமாகப் பார்க்கும்போது வரும் அர்த்தம்:

மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள்.

இனி சிலேடையின் மறுபக்கம்:

மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள். கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி.

எத்தனை அருமையான விளக்கம்?

அடுத்து பெருமாளின் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது இப்பாடல்.

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!

கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதையும் எத்தனை கிண்டலாய் நேரடியான தமிழில்? இன்றுள்ள தமிழில் பாராட்டுவதானால் ”சான்ஸே இல்ல” .

ஒரு நாள் நாகப்பட்டினத்திற்கு செல்லும் காளமேகத்திற்கு பசி பிய்த்தெடுக்கிறது. உணவுக்காக சத்திரத்தைத் தேடி அலைந்து இறுதியில் “காத்தான்” என்பவரின் சத்திரத்தைப் பார்க்கிறார். வேலையெல்லாம் முடித்துவிட்டு சமையற்காரர்கள் உறங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்பி தன்னுடைய பசியை சொல்கிறார்.

சமையற்காரர்கள் தூக்கக் கலக்கத்தில் உலையேற்றி பொறுமையாகச் சமைக்கின்றார்கள். இருப்பினும் காளமேகத்துக்கோ பசி அதிகமாகச் சத்தமாக இப்படிப் பாடுகிறார்,

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.”

காளமேகத்தின் வசை காலம் கடந்து நிற்குமென பயந்த அந்தச் சத்திரத்தின் உரிமையாளர் காளமேகத்தை விசேஷமாகக் கவனித்து சேவை செய்து உணவு படைத்துவிட்டு அந்தப் பாடலைக் கைவிடுமாறு கேட்க.

“ஊரெல்லாம் பஞ்சத்தால் அரிசி அஸ்தமித்துப் போனாலும், உன்னிடத்தில் தானமாய் அரிசி வந்து நிற்கும். அதைக் குத்தி உலையிட்டு பரிமாற ஊரின் பசியடங்கும். அந்த அன்னத்தின் வெண்மை கண்டு நிலவும் வெட்கப்படும்” என வேறு பொருள் சொல்லி மகிழ்ச்சியோடு பாடலுக்கு விளக்கம் தருகிறார்.

இன்னொரு தடவை காளமேகப் புலவர் திருமலைராயன் என்ற மன்னனிடம் சென்று பாடிப் பரிசு பெறலாம் என்று எண்ணி அவரைக் காண வருகிறார். வழியில் வளமான அவன் நகரத்தைப் பார்த்து பூரித்து அரண்மனை வந்து சேர்ந்தார்.

அரண்மனையில் திருமலைராயனோ தன் ஆஸ்தானக் கவிஞர்களின் பேச்சில் வயப்பட்டு காளமேகப்புலவரை சரியாக மதிக்கவில்லை. உட்கார இருக்கை அளிக்காமல் இருக்க காளமேகப்புலவர் சரஸ்வதியைத் துதிக்க அரசனின் சிம்மாசனம் வளர்ந்து புலவருக்கு மன்னருக்கு சரிசமமாக இடமளித்தாக வரலாறு சொல்கிறது.

அதையும் பொருட்படுத்தாது தன் ஆளுமையைக் காட்டி ஆச்சர்யப்படுத்தி அவர்களின் தவறை உணரவைக்க எண்ணினார் காளமேகம்.

அப்போது சிலேடை பாடக் கோரி தலைப்பு அளிக்க காளமேகப்புலவர் உடனடியாகப் பாடியவை.

பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் – எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எலுமிச்சம் பழம்

பாம்பு:

பெரிய விடம் சேரும் – மிகுதியான விஷம் உடையாதாயிருக்கும்
பித்தர் முடிஏறும் – பித்தனான சிவனின் திருமுடியில் இருக்கும்
அரி யுண்ணும் – காற்றைப் புசிக்கும்
உப்பும் -அதனால் உடல் உப்பி இருக்கும்
மேலாடும் – மேலாக தலை தூக்கி ஆடும்
எரிகுணமாம் – கோபமான குணத்தினை உடையதாயிருக்கும்

தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எலுமிச்சம் பழம்

எலுமிச்சை:

பெரிய விடம் சேரும் – பெரியவர்களிடத்து கொடுக்கப்படும்
பித்தர் முடிஏறும் – பித்துப் பிடித்தவனின் தலையில் தேய்க்கப்படும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் – ஊறுகாய் தயாரிக்கும்போது அரியப்பட்டு உப்பு மேல் தூவப்பட்டிருக்கும்
எரிகுணமாம் – அதன் சாறு பட்டால் எரியக்கூடிய தன்மை கொண்டது

தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எலுமிச்சம் பழம்.

மற்றொரு சுவாரஸ்யமான பாடல்.

காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

வானில் இருக்கையில் உனக்குக் கார் என்றும் நிலத்தில் வீழ்கையில் நீர் என்றும் ஆயர்குடிப் பெண்களின் கைபட்ட பின்பு மோர் என்று மூன்று பெயரோ உனக்கு? என்று மோர் பருகியபின் கிண்டலாய்ப்பாடிய பாடல் இது.

காளமேகத்தின் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்-சாமர்த்தியம்-நக்கல்-கிண்டல்-புலமை தமிழில் அவருக்கு முன்னும் பின்னும் இத்தனை ஆழமாய் வெளிப்படாமல் போனதுதான் நம் பெரிய சோகம் என நினைக்கிறேன்.

இப்போதே கொஞ்சம் சந்தேகம். பாதியிலேயே நீளத்தைப் பார்த்துப் பல பேர் ஓடிப்போய்விட்டதால் மற்ற பாடல்களையெல்லாம் சமயங்கிடைக்கும்போது எடுத்துவிடலாம் என நினைக்கவே வுடு ஜூட்.

19.6.11

மெல்லினம்


செய்யாத தவறுக்காக
யாருமற்ற இரவுகளில்
அந்தக் கைதி
வடிக்கும் கண்ணீர்
பற்றி அறியமுற்படுகிறது
இந்தக் கவிதை.

வாதி பிரதிவாதிகளின்
வாதங்கள் குறித்தோ
தண்டனையின் கனம் குறித்தோ
எதுவும் பேச விரும்பாதவனின்
அமைதி குறித்தும்,

அவனை இரவுகளில் தேடும்
மகன்களின் ஸ்பரிசம் பற்றியும்
வாழ்வின் கொடுந்தீயில் வாடும்
மனைவியின் வேர்வையைத்
துடைக்க இயலாது
பதறும் அக்கைதியின்
ஊனம் குறித்தும்.

தன்னிலை விளக்கம்
கொடுக்கவோ
தண்டனையைத்
தவிர்க்கவோ
விரும்பாதவனின்
ஊமைமொழியைப் பற்றியும்
அது
இரக்கம் கொள்கிறது.

குற்றம்சாட்டியவனின் மீதோ
தண்டனையளித்தவனின் மீதோ
எவ்வித கவனமோ
காழ்ப்புணர்ச்சியோ கொள்ளாத
அபூர்வமான கைதியைக்
கடவுளாய்க் கொண்டாட
விழைகிறது இக்கவிதை.

முடிந்த வரை
மொழிபெயர்க்கமுடியாத
கண்ணீரின் உப்புக்கான
காரணத்துக்காகவும்
என்றாவது அவனையும்
தேடி வரவிருக்கிற
யாரோ ஒருசிலருக்காகவும்
கனத்த இதயத்தோடு
காத்திருக்கிறது
இந்தக்கவிதை.

18.6.11

நெருப்பில் பூத்த முழுநிலவுசினிமாவுக்கு ஒரு பெரிய சக்தி உண்டு. எல்லோராலும் அறியப்படாமல் இருக்கும் விஷயங்களை எளிதாக இதயத்துக்கு எடுத்துச் செல்லும் அதன் வலிமை அசாத்தியமானது.

குணா வெளியான பின் அபிராம பட்டரைப் பற்றியும் அபிராமி அந்தாதியைப் பற்றியும் நிறையப் பேர் அறிய விரும்பினார்கள். இளம் வயதில் கோயில்களில் பாடப்பட்ட ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அல்லது தனம் தரும் என்று தொடங்கும் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரல் ஈர்க்காத விஷயத்தை கமலஹாசன் ரோஷினியின் காதல் முலாம் பூசப்பட்ட திரைக்கதையும் அபாரமான உணர்வுப் பூர்வமான நடிப்பும் ஈர்த்தது.

புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்யக் கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

என்ற பாடலுடன் இறந்து போன அபிராமியை மடியில் கிடத்திக் கொண்டு அவளின் மரணத்தை ஏற்கமுடியாது குணா தவிக்கும் போது யார் கண்களில் இருந்து கண்ணீர் வடியாது இருக்க முடியும்?

ஒரு சுவாரஸ்யத்துக்காக குணாவில் துவங்கிய இந்த இடுகை அபிராம பட்டர் இருந்த திசையில் நகருகிறது.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் திருக்கடவூர் என்கிற திருக்கடையூரில் வாழ்ந்தவர் சுப்ரமண்ய அய்யர். அவர் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் அபாரமான பாண்டித்யம் பெற்ற மேதை.

தினமும் திருக்கடவூரின் அபிராமியைப் பார்க்காது அவரின் நாள் துவங்காது. முடியாது. பித்துப்பிடித்தவரின் மனநிலையில் அபிராமியின் மீதான பக்தி இருந்தது. ஒரு கடிகார முள்ளைப் போல் இயங்கும் மக்களின் நடுவில் அவரின் அபிராமிப் பித்து அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அப்போதைய திருக்கடவூர் இரண்டாம் சரபோஜியின் ஆட்சியின் கீழ் இருந்தது. வழக்கமாய் திருக்கடவூர் வருகை தந்த சரபோஜி தை மாதம் அமாவாசை கழிந்த பிரதமையில் காவிரிப்பூம்பட்டினத்தில் நீராடிவிட்டு திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரரையும் அபிராமியையும் தரிசிக்க வந்தார். மன்னர் வந்திருப்பது தெரியாத யோகநிலையில் அபிராமியின் மேல் பக்தி செலுத்தியபடி அமர்ந்திருந்த சுப்ரமண்ய அய்யரைப் பற்றி அங்கு கூடியிருந்த மக்களிடம் விசாரித்தான் மன்னன்.

அவரைப் பித்துப்பிடித்த மனிதராய் வர்ணித்தது சமயம் கிடைத்த பொதுஜனம். அதைச் சோதிக்க எண்ணிய மன்னன் அய்யரிடம்-

”இன்றைக்கு அமாவாசை மீதமிருக்கிறதா? எத்தனை நாழிகை இருக்கிறது என்று பார்த்துச் சொல்ல முடியுமா?”

என்று கேட்க அபிராமியின் நிலவு போன்ற வசீகரத்தில் மயங்கிக் கிடந்த அய்யர்

”இன்றைக்குப் பௌர்ணமி அல்லவா?” என்றார்.

தன்னிடம் அவரைப் பற்றிச் சொல்லியிருந்த மக்களின் கூற்று நிரூபணமாகி விட்டதாய் நினைத்த மன்னன் அங்கிருந்து இன்றைக்குப் பௌர்ணமி திதியா? வேடிக்கைதான் என்றபடியே கிளம்பினான்.

வந்திருந்த மன்னனிடம் தன் பரவச நிலையில் செய்த  தவறை எண்ணி வருந்திய அய்யர் தன்னை தண்டித்துக் கொள்ள முடிவு செய்தார்.

”அபிராமி! உன்னைத் துதித்தபடி மயங்கியிருந்த என் உளறலுக்கு நீதானே பொறுப்பு? இருந்தாலும் என் தவறுக்கு என்னை நான் தண்டித்துக் கொள்கிறேன்” என்ற அய்யர் அம்மனின் சன்னதிக்கு முன்னே அரிகண்டம் பாடத் தொடங்கினார்.

அரிகண்டம் என்பது-

நூறு கயிறுகளைக் கொண்டு உறி ஒன்று கட்டப்படும். அதன் கீழே தீக்குழி ஒன்று அமைக்கப்படும். அந்த உறியின் மேல் இருந்து தெய்வத்தைக் குறித்து வேண்டிப்பாடுவது மரபு. பாடும்போது அத்தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பாடலாகப் பாடி முடிக்க வேண்டும். கடவுளின் அருள் கிடைக்காதவரை ஒரு பாடல் பாடி முடித்ததும் ஒரு கயிறு வெட்டப்படும். இப்படி எல்லாக் கயிறுகளும் வெட்டப்பட்டால் பாடுபவர் தீக்குழியில் விழுந்து உயிர் துறப்பார்.

சுற்றியிருப்பவர்களுக்கு ஒரே பரபரப்பு.

ஒவ்வொரு அந்தாதியாகப் (அந்தமும் ஆதியும் இணைந்ததுதான் அந்தாதி. எந்தச் சொல்லில் முதல் பாடல் முடிந்ததோ அதே சொல் முதல் வார்த்தையாக அடுத்த பாடல் துவங்கவேண்டும்) பாடத் துவங்கினார். அபிராமியின் மேல் வடிக்கப் பட்ட ஒவ்வொரு பாடலும் அய்யரின் தமிழ்ப் புலமையையும் அவரின் பக்தியையும் காட்டின.

இப்படியே ஒவ்வொரு கயிறாக வெட்டப்பட்டுத் தொங்கியபடியே தனக்குக் கீழே சுட்டுப் பொசுக்கும் வெம்மையோடு 78 அந்தாதிகளை முடித்து-

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே?

என்கிற 79ம் அந்தாதியைப் பாடும் போது அடையாளம் எதுவுமில்லாத இந்த அற்பனின் கண்களே கசியும் போது அபிராமி என்னவாகியிருப்பாள்? தன் பக்தனை மேலும் சோதிக்க விரும்பாமல்  வலது காதிலிருந்த முழுநிலவையும் மிஞ்சக் கூடிய ஒளிமிக்கக் காதணியைக் கழற்றி வானமண்டலத்தில் வீசினாள் அபிராமி.

பிரதமையன்று வானில் முழுநிலவு உதித்தது. அய்யர் அம்மையின் அருளில் திளைத்துக் கண்ணீர் வடித்தார்.  அத்தோடு நிறுத்திவிடாமல் நூறு பாடல்கள் பாடிமுடித்து அந்தாதியைப் பூர்த்தி செய்தார்.சுற்றியிருந்த மக்களுக்கும் அய்யரின் பக்தியைப் பித்தென நினைத்த மடமைக்கு வருந்தினார்கள்.

இதைக் கண்டு பிரமித்த மன்னனும் அவரை அன்று முதல் அபிராமப் பட்டர் என்றழைக்க உத்தரவிட்டான். அவருக்கு ஏராளமான பரிசுகளையும் நிலங்களையும் ஏற்க மறுத்த போதும் வற்புறுத்திக் கொடுத்துக் கௌரவித்தான்.

இன்றைக்கும் அபிராமி அந்தாதியைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதனடியில் மறைந்திருக்கும் வெம்மையை உணர்வது போலவே உதித்த முழுநிலவையும் உணர்வதுண்டு.

அபிராமி.அபிராமி.

17.6.11

மெய்ஞ்ஞானம்

1.
எல்லாம்
அறிந்தவனுக்கும்
எதுவுமே
அறியாதவனுக்கும்
நடுவில்
சுமக்கப்படக்
காத்திருக்கிறது
ஆறாம் அறிவின்
பாரச் சிலுவை.

2.
எல்லாம்
தெரியுமென்கிறான்
எதுவுமே தெரியாதவன்.
எதுவுமே
தெரியாதென்கிறான்
எல்லாம் தெரிந்தவன்.
எல்லாம்
தெரிவது சாபமெனில்
எதுவும்
தெரியாதிருப்பது
வரமெனக் கொள்க.

3.
கட்டப்படாத
நாய்க்கு
உறங்கத்தெரியாது.
கட்டப்படாத மாடு
வீடு அடையாது.
கட்டப்படாத கப்பல்
கரை சேராது.
கட்டப்படாத
பூக்கள் மாலையாகாது.
கட்டப்படாத கற்கள்
மனையாகாது.
கட்டப்படாத சொற்கள்
கவிதையாகாது.
கட்டப்படாதவை
கட்டப்படட்டும்.
கட்ட இயலாதவை
பட்டு உணரட்டும்.

15.6.11

பாட்டி(க்கு) வைத்தியம்இன்று காலை தஞ்சாவூர்க்கவிராயரோடு அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இன்று அதிகாலை எழுந்து எழுதிய ஒரு சிறுகதையைப் பற்றிச் சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு நான் சொன்னேன் “இதை நீங்கள் எழுதியிராவிட்டால் நான் எழுதியிருப்பேன்” என.

பேச்சு தொடர்ந்தது. அது இந்த இடுகையானது.

1993ல் படுக்கையில் இருந்த என் பாட்டியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். என் மேல் அதீதமான ப்ரியம் எல்லாப் பாட்டிகளுக்கும் பேரன்கள் மேல் இருப்பதைப் போல். அவருக்கு கிட்டத்தட்ட எழுபது வயதாகிய வேளை.

வயதின் சுமை தாளாமல் கால் பின்னக் கீழே விழுந்தார். அதுதான் அவரின் கடைசி நடமாட்டம். அதன் பின் தான் இறந்துபோய்விடுவோம் என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமானது.

ஒரு காரடையான் நோன்பு முடியும் வரை காத்திருந்தார். அது முடிந்து என் அம்மா அவர் வாயில் நைவேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டையை ஊட்டிவிட்டு அதை ருசித்தபின்  ”நன்னாப் பண்ணியிருக்கே. தீர்க்க சுமங்கலியா இரு” என்று ஆசீர்வதித்துவிட்டு இறந்துபோனார்.

இப்போது போலெல்லாம் முணுக்கென்றால் டாக்டரிடம் ஓடும் பழக்கமும் கிடையாது. (இப்போதும் அப்படித்தான்).பாட்டி ஒரு நாளும் டாக்டரிடம் போனவர் இல்லை. எல்லாமே கைவைத்தியம்தான். ஒரு நாளும் உடம்பு முடியவில்லை என்று படுக்கிற ஜாதியும் இல்லை. ஆனாலும் கடைசி நாட்களில் பாட்டிக்கு வீட்டுக்கு டாக்டரை வரவழைத்து தன்னை அவர் பார்த்துவிட்டுச் சென்றால் மனசுக்கு கொஞ்சம் தேவலையாய் இருப்பதாய் உணர்ந்தார்..

பாட்டிக்குக் கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. இரவுகளில் பெருங்குரல் எடுத்து ராத்திரி 11 மணிக்கு மேல் தனக்கு என்னவோ செய்கிறது என்று ஆரம்பித்தால் அன்றைக்கு சிவராத்திரிதான். இது அடிக்கடி நடப்பது பழக்கமாகியிருந்தது.

ஒரு நாள் ராத்திரி நல்ல மழை. பாட்டியின் படுத்தல் ஆரம்பித்தது. கரண்ட் வேறு இல்லை. இன்வெர்ட்டர் வசதியெல்லாம் கிடையாது. லாந்தரின் அல்லது சுவாமிஅறை குத்துவிளக்கின் வெளிச்சம் வீடெங்கும் பரவியிருக்கும். அந்த வெளிச்சத்தில் பாட்டியை விட பாட்டியின் படுத்தலை விட அவரின் நிழல் சுவற்றில் ஆடுவது இடி மின்னலுக்கு நடுவில் பயங்கர பீதியைக் கிளப்பும்.

நான் படுக்கையறைக்குப் போய் என் அப்பாவின் தொளபுளா சட்டையைப் போட்டுக் கொண்டு பாட்டியை மெல்லத் தொட்டேன். சுருட்டி வாரி எழுந்து கொண்டு ”வாங்கோ டாக்டர்! ரொம்ப நேரமா என்னமோ பண்றது! மூச்சு விட முடியல. மாரெல்லாம் ஒரே வலி” என்று சொல்லிவிட்டு வந்திருப்பது டாக்டர்தானா என்று மேல்க்கோட்டின் உயரத்தைக் கையால் தொட்டுப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.

அதன் பின் கையில் எழுதிக்காட்டித்தான் வைத்தியம். நாடி பிடித்துப் பார்த்துவிட்டு ”எல்லாம் சரியாகிவிடும். மாத்திரை தருகிறேன்” என்று கையில் எழுதிக்காட்டிவிட்டு சமையலறையிலிருந்து ராத்திரி வேளையில் பாட்டிக்குக் கொடுக்கக் கூடாது என்று என் அம்மா மறைத்து வைத்திருக்கும் சூட பெப்பர்மிண்ட்டை (அதற்குப் பெயர் இப்போதைக்குப் போலோ) பாட்டியின் வாயில் மாத்திரை என்று சொல்லிப் போட்டதுதான் தெரியும். அவ்வளவுதான்! வியாதி பறந்துவிட்டது. ”என்னதான் அதிசய மாத்தரையோ? வலியெல்லாம் போன எடம் தெரியலை. நன்னாயிருக்கணும். நீங்க படுத்துக்கோங்கோ டாக்டர்” என்று தான் ஏதோ மருத்துவமனையில் இருக்கும் நினைவோடு அன்புக் கட்டளையிட்டார்.

அதற்குப் பின் திரும்பவும் என்னைக் கூப்பிட்டார்.”டாக்டர்! தப்பா எடுத்துக்காதீங்கோ. எனக்கு ரெண்டாவது பேத்தி ஒருத்தி இருக்கா. இன்னும் கல்யாணம் பணணலை. கவர்ன்மெண்ட் உத்தியோகம்.ஆனா கொஞ்சம் வாய் நீளம். நீங்க பண்ணிக்கறேளா? மெதுவா யோசிச்சுச் சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டுப் போர்த்திப் படுக்க காலை விடியும் வரை இடைஞ்சல் இல்லாத தூக்கம் எல்லோருக்கும்.

இது அடிக்கடி நிகழ அடிக்கடி சூட பெப்பர்மிண்ட் வழங்கப்பட்டு பாட்டி சொஸ்தமாயிருந்தார்.

தன் மரணத்துக்கு முந்தைய கடைசி ஒரு மாதமும் அடிக்கடி நினைவு தப்பியவராகவும் சம்பந்தாசம்பந்தமில்லாது எப்போதோ  நடந்தவற்றையும் சொல்லிப் புலம்பியபடியும் இருப்பார்.

“மேஸ்திரி வரலைன்னா எப்பிடி இன்னிக்கு வேலை நடக்கும்? மொதலாளிக்கு என்ன பதில் சொல்றது?”

”கிட்டக்கப் போகாதே. புலி அடிச்சுடும். சொன்னாக்கேளு”.

”பண்டரிபுரத்துல யாருக்கும் தெரியாம என்ன விட்டுட்டு வந்தா எனக்கென்ன வீட்டுக்கு வழி தெரியாதுன்னு நெனச்சியா?

இதெல்லாம் பாட்டியின் இறுதி நாட்களில் அடிக்கடி உதிர்த்த வாக்கியங்கள்.

ஒவ்வொரு நாளும் அநேகமாக இரவு ஒன்பது மணிக்கு-அவருக்கு நேரம் யாராவது சொன்னாலொழியத் தானாகத் தெரியாது-என்னைக் கூப்பிட்டு ”ஜன்னலைத் திறந்து வை. மசூதில தொழறாங்க. உனக்குக் கேட்கலயா?”என்று கேட்டபடியிருந்தார்.

காதுக்கும் கண்ணுக்கும் எட்டும் தொலைவில் மசூதியெதுவும் என் வீட்டருகே கிடையாது என்பதும்- என் இத்தனை நாள் பாட்டியின் வாயிலிருந்து மசூதி என்ற சொல் வந்து நான் கேட்டதில்லை என்பதும் தான் இந்த இடுகையின் கடைசி வரிகள்.

(பாட்டியின் படம் என் கணிணியின் கோப்பில் இல்லாததால் எல்லோருக்கும் பிடித்த கே.பி.சுந்தராம்பாளின் நிழற்படத்தைப் பொருத்தமின்றியும் பொருத்திவிட்டேன். பொறுத்தருள்க.)

14.6.11

பாவனை
1.
முதலாவது
சொன்னபடிக்குப்
பாடம் படிக்கவில்லை.
அடுத்ததோ
சாப்பிடுவதற்குப்
பிடிவாதம்.
-’இரண்டையும்
வைத்துக் கொண்டு
எப்படித்தான்
சமாளிக்கப்போகிறேனோ’-
அலுத்துக்கொண்டது
அம்மா வெளியில்
போயிருந்தபோது
பொம்மைகளின்
அம்மாவாகியிருந்த
குட்டிப் பெண்.

2.
மூடிக்காட்டிய
குழந்தையின்
விரல்களைப் பிரிக்க
ஒண்ணுமில்லியே
என்று சிரித்தது.
குழந்தைகளால்
மட்டும்தான்
இயலுகிறது
ஒன்றுமில்லாததைப்
பார்க்கவும் சிரிக்கவும்.

3.
பூவா தலையா
என்றான் பெரியவன்.
பூ என்றதும்
தலை விழ
இல்லையில்லை
தலை என்றான்
சின்னவன்.
பூவும் தலையும்
ஒரு பாவனைதான்
எப்போதும்
சின்னவன்
ஆடத் துவங்குமுன்.

13.6.11

மாயாலோகம்


ஒரு காகிதத்தின் மையத்தில்
மானை வரைந்து-
தோன்றிய இடங்களிலெல்லாம்
மேகங்களையும்
புல்வெளிகளையும்
வரைந்தது குழந்தை.

பேசியபடியே கடந்துபோன
அப்பா அம்மாவால்
இம்மியும் கலையவில்லை
-புதரின் பின்னே
மானை வேட்டையாடக் காத்திருந்த-
புலியின் உறக்கம்.

சப்தமேதும் எழுப்பாமல்
மான் புற்களை
வேட்டையாடி முடித்த பின்

இடி மின்னலோடு
கடும்மழை பெய்யத்
தொடங்கியிருந்தது
குழந்தையின்
தூரிகையிலிருந்து.

11.6.11

கடலின் இசை
1.

அலைகள்
நினைவுறுத்துகின்றன

விடாது கேட்கப்படும்
கேள்விகளின் இரைச்சலை.

கரை
நினைவுறுத்துகிறது

ஒருபோதும்
கேட்கப்படாத
கேள்விகளின் நிசப்தத்தை.

2.

கடலுக்குள்
மீன்கள் இருக்கும்போது
ஒரு மாதிரியும்

அவை பிடிக்கப்பட்டுப்
பிரிந்தவுடன்
வேறு மாதிரியும்

தோற்றம் தருகிறது
அலைகளின் சங்கீதம்.

3.

முதன்முதலில்
தொட்டுப்
போன அலையைத்
தேடிக்கொண்டிருந்தேன்.

முதன்முதலில்
தொட்டுப்போன
கரையைத்
தேடிக்கொண்டிருந்தது
அலை.

4.

ஆவேசமாய்
மோதியபடி
இருக்கின்றன
அலைகள்.

அமைதியாய்
ஏற்றபடி
இருக்கின்றன
பாறைகள்.

அலைகள்
பாறையைப்
பிரிவதுமில்லை.

பாறைகள்
அலையை
வெறுப்பதுமில்லை.

10.6.11

பிற்பகல்


தசாவதாரம் என்கிற கமலின் பத்து முகம் வெளியான பின் ஆறுமுகம் தொடங்கி எல்லோரிடமும் அடிபட்ட வார்த்தை கயாஸ் தியரி அல்லது கயாஸ் கோட்பாடு.

என்றோ நிகழ்ந்த ஒரு மிகச்சிறிய நிகழ்வு-காரணம்-விளைவு சுழற்சியில் சிக்கி காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சாத்தியக்கூறு உண்டென்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யும் ஒரு கோட்பாடு.

இதற்கு மேல் வேண்டாம். கொட்டாவி அல்லது கோபம் வரும்.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பினால்
உண்டாகும் மென்காற்று காலப்போக்கில் இந்து மஹாசமுத்திரத்தில்  சுனாமியாய்த் தாக்கலாம் என்று ஒரு கவிதையாய்ச் சொன்னால் இது இன்னும் மனசுக்கு நெருக்கமாய் இருக்கும்.

இந்தக் கோட்பாட்டை இன்றைக்கு ராமாயணக் கதை ஒன்றால் பார்க்கலாம்.

ச்ரவணன் என்பது ஒரு சிறுவனின் பெயர். அவனது பெற்றோர்கள் மிகவும்  வயதானவர்கள். இருவரும் பார்வையற்றவர்கள். தங்களின் மகன்  உதவியில்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய
இயலாது. ச்ரவணனின் தந்தையார் ஒரு முனிவர். அவர்கள் மூவரும் ஒரு  வனத்தில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வனத்தில் தமிழ்நாட்டைப் போலவே நீரின்றி வறட்சி  ஏற்பட்டது. ஆகவே வேறு வனத்தைத் தேடிப் புறப்பட்டனர். பார்வையற்றும் நடக்க இயலாமலும் சிரமப்படும் தன் பெற்றோருக்கு
ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் ச்ரவணன். 

இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் அவர்களை அமரவைத்து  அத்தட்டுகளைத் தராசு போல் ஒரு நீண்ட வலுவான கழியில் பொருத்தி
அவர்களைத் தன் தோளில் தூக்கிக் கொண்டான்.

வெகு தூரம் நடந்து மற்றொரு வனத்தை அடைந்தனர். 

ச்ரவணனின் பெற்றோர் தாகமிகுதியால் நீர்பருக விரும்பினார்கள்.
நீர்க்குடுவையில் நீர் மிகவும் குறைவாக இருந்தபடியால் இருவரின்  தாகத்தையும் நீக்க எண்ணிக் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத்  தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் ச்ரவணன்.

சீக்கிரம் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர்.

அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது.  அயோத்தி மன்னன் தசரதன்  காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காகக் கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களை வேட்டையாடக் கானகம்  வந்திருந்தான். 

மாலைநேரம். இருள் கவிழத் துவங்கியது மெதுவாக. மரத்தடியில்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் தசரதன். அவன் அருகே மிருகம் ஒன்று  தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது.

துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். அம்பைச் செலுத்திய மறுநொடியே "அம்மா!" என்ற அலறல் கேட்டது.

மனிதக் குரலைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசையில்  ஓடினான். அங்கே ச்ரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம்  தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று  புலம்பித் துடித்தான்.

தசரதனைத் தடுத்த ச்ரவணன்,

”மன்னா! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு  இருப்பார்கள்.நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல்  மடிகிறேன். நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து  விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான். 

ச்ரவணனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற நீரை எடுத்துக்கொண்டு  அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலை
வெளிப்படுத்தாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். 

தசரதனின் கை பட்டதுமே "யார்  நீ?"என்று குரல் கொடுத்தாள் அந்தத்தாய்.  இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு    என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான்  தவறாக அம்பெய்திய காரணத்தால் ச்ரவணன் மாண்ட  செய்தியைக்  கூறினான். 

புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் 

"ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து  தவித்து உயிர் விடுவது போலவே நீயும்  எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர  சோகத்தாலேயே உயிர் விடக்கடவது. இது  எங்கள் சாபம்" என்று  சபித்துவிட்டு உயிர் விட்டனர்.

பின்னாளில் தசரதன் ராமனையும் லட்சுமணனையும் வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும்  சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் தசரதன் தனிமையில் தவித்துப் பின்  உயிர் விட்டான்.

இந்திய மரபில் இதுபோன்ற முற்பகல் செய்யின் சமாச்சாரங்கள் நிறையவே இருக்கின்றன.தவறை மன்னிக்கும் போதனையை மதங்கள் வலியுறுத்தினாலும் இன்ஸ்டண்ட் சாபங்கள் நம் மரபின் வாக்கின் வலிமைக்கான அடையாளங்கள். அந்த சாபம் நீங்கும் வரை வாழ்தல் எனும் அனுபவத்தையும் அவை சேர்த்தே போதிப்பதாய் உணரத் தோன்றுகிறது.

அறியாமல்
கொன்றது
தசரதனின்
வில்லம்பு.
அறிந்தே
கொன்றது
முதியோரின்
சொல்லம்பு.
செயலுக்கு முன்
சிந்தனை.
இல்லாமல்
போனால்
நிந்தனை.

8.6.11

ஒரே கனா

சலசலக்கும் நதியின் ஓசை உங்கள் காதுகளை அடைகிறது இப்போது.

வேட்டைக்காரர்களின் சுவடுகள் பாவாத-கடவுளின் அற்புதம் பரவிய-நட்பு பாராட்டும் மிருகங்களும் அபூர்வ மூலிகைகளும் நிறைந்த வனத்தில் நிற்கிறீர்கள்.

அதோ மனம் மயக்கும் இனிமையான காற்றில் அசைந்தபடி நிற்கும் மூன்று இளஞ்செடிகள் பேசிக் கொள்வதை நீங்கள் கேட்கிறீர்கள்.

முதல் செடிக்கு எத்தனை அழகான ஒரு கனவு.

“நான் வளர்ந்து மிகப் பெரிய மரமாகி இந்த உலகத்தின் மிகச் சிறந்த அரசனின் முத்துக்கள்-மாணிக்கங்கள்-வைர வைடூரியங்கள்-நிரம்பி வழியும் ஒரு பேழையாக மாறுவேன்.”

அதற்கடுத்த செடியின் அற்புதமான கனவு வெளிப்படுகிறது.

“நான் வளர்ந்தபின் வெட்டப்பட்டு ஒரு பெரும் போர்க்கப்பலாவேன். கடும் புயலோ கொடும் மழையோ என்னில் பயணிக்கும் வீரபராக்கிரமம் நிறைந்த உலகத்தின் மிகச் சிறந்த மன்னனையும் அவன் படைகளையும் சுமந்து செல்வேன்.”

விசித்ரமான கனவு மூன்றாவது இளங்குருத்துக்கு.

“என்னை யாரின் கோடரியும் வீழ்த்தாது நான் வானைத் தொட்டு வளர்வேன். கடவுளின் பாதங்களைத் தொடுவதாய் இருக்கும் என் உயரம். உலகே வியக்கும் அபூர்வ மரமாகி சரித்திரத்தின் பக்கங்களை நிரப்புவேன்”.

கனவுகள் வளர்ந்தது. காலம் தேய்ந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு மூன்று மரவெட்டிகள் அந்தக் காட்டிற்கு வந்தனர். கனவுகளைச் சுமந்து நின்ற அந்த மூன்று மரங்களின் அடியில் நின்றனர்.

முதல் மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரவெட்டி அதை ஒரு தச்சனிடம் கொண்டு சேர்க்க ஒரு மாணிக்கப் பேழையாகும் கனவு நிறைவேறக் காத்திருந்த அந்த மரம் இறுதியில் மாடுகளுக்கு வைக்கோல் நிரப்பி வைக்க உதவும் மரப்பெட்டியாய் உருக்கொண்டது.

இரண்டாவது மரத்தை மற்றொரு மரவெட்டி வீழ்த்தி அதை ஒரு நல்ல விலைக்குத் துறைமுகத்தில் விற்றான். போர்க்கப்பலாக வேண்டிய அதன் கனவு ஒரு சாதாரண மீன்பிடிப்படகாய் மாற்றம் கொண்டது.

மூன்றாவது மரத்துக்கோ தான் வெட்டி வீழ்த்தப்பட இருக்கிறோம் என்கிற நினைப்பே சகிக்க முடியாததாக இருந்தது. தன் கனவின் மீது ஒவ்வொரு முறையும் கோடரி விழுந்ததை எண்ணி எண்ணித் தவித்தபடியே வெட்டுண்டது. பல பாளங்களாய்  அதன் கனவு பிளவுண்டு இருண்டு கிடந்த யாரின் கவனிப்புமற்ற ஓர் அறையில் இட்டுப் பூட்டப்பட்டது.

கனவுகள் எல்லாம் சிதறுண்டு போய் வெவ்வேறு வடிவங்களில் மாற்றமுற்று காலத்தின் பிடியில் தங்களை ஒப்புக்கொடுத்த போதும் கனவின் பீளைகள் அவற்றின் கண்களில் மீதமிருக்கத்தான் செய்தன.

வருடங்கள் சென்றபின் இன்று கடுங்குளிரால் உறைந்த ஒரு இரவில் நுழைகிறீர்கள்.

 ஒரு நிறைமாத கர்ப்பிணியும் அவள் கணவனும் அந்த மாட்டுத் தொழுவத்தைக் கடக்கும் வேளையில் தாங்கமுடியாத பிரசவ வலி ஏற்பட்டு அந்தத் தொழுவத்தில் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் அந்தத் தாய்.

குளிருக்கு அடக்கமாக வைக்கோலால் நிரம்பிய அந்த முதல் மரத்தின் பெட்டியில் கதகதப்பாக இருக்கும்படி அந்தக் குழந்தையை அந்தத் தாய் இட்டபோது முதலாம் மரம் உலகத்தின் மிக உயர்ந்த பொக்கிஷத்தைத் தான் சுமப்பதாய் உணர்ந்தது.

சில வருடங்கள் கழிகின்றன.

ஒரு மழைக்காலத்தின் பகல் பொழுதில் கூட்டமாய் வந்த சிலர் அந்த இரண்டாவது மரத்தால் செய்த படகின் மீதேறிக் கடலில் செல்வதைப் பார்க்கிறீர்கள்.

நடுக்கடலில் அந்தப் படகு பயணிக்கும்போது கடுமையான புயல் படகை அலைக்கழித்துக் கவிழ்க்க இருக்கிறது. இரண்டாவது மரம் அவர்களை எப்படியாவது கரை சேர்த்துவிட விரும்பியது.

படகில் பயத்தோடு பயணித்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பினார்கள். அவர் கடலை நோக்கிச் சாந்தமான குரலில் கையை உயர்த்தி அசைத்தபடியே அமைதி-அமைதி என்றார். கடல் குளம் போல் அமைதியானது. இரண்டாவது மரம் அப்போது அரசர்களின் அரசரைச் சுமப்பதாக உணர்ந்தது.

இறுதியாகச் சில வருடங்கள் கழித்து இருட்டறையில் சிறைவாழ்க்கையை அனுபவித்த மூன்றாவது மரத்துக்கு விடுதலை கிடைத்தது. அதை ஒரு மனிதர் சுமக்க முடியாமல் சுமந்து சென்றார். அவரைச் சுற்றியிருந்த மக்கள் கொடும் சொற்களால் அவரை நிந்தித்தனர். சொற்கள் செய்ய விட்டதை சவுக்கால் அடித்துப் பூர்த்தி செய்தார்கள்.

அவரை அம்மரத்தின் பாளங்களில் ஆணிகளால் அறைந்து மலையுச்சிக்குக் கொண்டு சென்று நட்டு வைத்தனர். வானுயர எழும்பி நிற்பதாய் உணர்ந்த அந்த மரம் கடவுளுக்கு மிக நெருக்கமாய் இருப்பதை உணர்ந்து விம்மியது.

ஒரே கனா
என் வாழ்விலே
அதை நெஞ்சில்
வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும்
நாள் வரை உயிர்
கையில்
வைத்திருப்பேன்.
வானே என் மேலே
சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
வானும் மண்ணும்
தேயும் வரை
வாழ்ந்து காட்டுவேன்.

(வைரமுத்துவின் இறவாப் புகழ் கொண்ட-எனக்கு மிகப் பிடித்த கவிதையின் இறுதிவரியை மானசீகமான அனுமதியுடன் கதைக்கேற்ற மாற்றத்துடன்.)     

7.6.11

ராவண் லீலா
 

மிக நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி பார்த்தேன்.

ஊடகங்களின் முதிர்ச்சியும் அரசியல்வாதிகளின் முதிர்ச்சியும் எந்த அளவில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண்லீலா  அதிர்ச்சியளித்தது.
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் எழுப்பிவிடப்பட்டு விரட்டியடிக்கப் பட்ட அக்கிரமக் காட்சி நாம் எந்த மாதிரியான பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறோம் என்பதைக் காட்டியது.

அங்கு கூடியிருந்த கூட்டத்தில் பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள். அவர்கள் ஊழலுக்கும் கறுப்புப் பண மீட்புக்கும் எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அங்கு கூடியிருந்தார்களா என்பதையும் விட-

அந்த கூட்டத்தைக் கூட்டிய ராம்தேவின் பின்னணி மற்றும் அதற்கு ஆர்.எஸ்.எஸ்-பஞ்ரங்தள்-பாஜக- ஆதரவு இருந்தது என்பதையெல்லாம் ஆராய்வதை விட-

பாதுகாப்பற்ற ஒரு தலைநகரில் தலைக்கு மேல் பாதுகாப்பான கூரையை நம்பி பெட்டி படுக்கையுடன் வந்த ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை அன்றிரவில் என்னவாயிருந்திருக்கும்? அவர்கள் அந்த இரவின் சொச்சத்தை எப்படிக் கழித்திருப்பார்கள்? ஊருறங்கும் வேளையில் தங்களின் இயற்கை உபாதைகளுக்கும் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கும் என்ன செய்திருப்பார்கள்? என்ற ஆதங்கம் எவரொருவர் வாயிலிருந்தும் உதிரவில்லை.

வெளிப்படையாகச் சொன்னால் எதையோ நம்பிவந்த அவர்களை நடுத் தெருவில் நிறுத்தியது இந்த அரசு.

தங்களின் கட்சிக்கு ஏற்ற வகையில் கருத்துக்களைச் சார்ந்தோ எதிர்த்தோ வளவளத்துக் கொண்டிருந்த எந்த ஒரு அரசியல்வாதியிடமும் பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்த கோபமோ அக்கறையோ இல்லை.

சந்தோஷ் ஹெக்டே-ஸ்வபன் தாஸ் குப்தா-சந்தன் மித்ரா மற்றும் மணிசங்கர் அய்யர் இவர்களின் பேச்சுக்களில் மட்டுமே விருப்பு வெறுப்பற்ற உண்மையான பார்வை காணக்கிடைத்தது.

பல்லாயிரக் கணக்கில் கூடும் கூட்டம் எந்த நம்பிக்கையைச் சார்ந்ததாகவும் இருக்கட்டும். யார் தலைமையில் வேண்டுமானாலும் கூடட்டும். அந்தக் கூட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செய்கைகளில் இறங்குவது அரசின் முகத்தில் நம்மைக் காறி உமிழ வைக்கிறது.

இந்த மூர்க்கத்தனமான முடிவை எடுத்தது யார் உத்தரவின் பேரில்? நான்தான் தவறிழைத்தது. இந்த விளைவுகளுக்கு என் உத்தரவுதான் காரணம் என்று தைரியமாகப் பொறுப்பேற்க ஊடகங்களின் ஒலிபெருக்கியின் முன் பேசியபடியே பிறரைக் குற்றம் சாட்டும் ஆளும் கட்சியின் பயில்வான்களுக்கோ அரசின் நிர்வாக ஜாம்பவான்களுக்கோ தைரியமில்லை.வெட்கம் கெட்டவர்கள்.

இதே அரசு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அடுத்த தேர்தல்களில் ஓட்டுக் கேட்கப் போகும்? அல்லது ஓட்டுக் கேட்கும் போது இது ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ஆட்கள்-இது பா.ஜ.க.வின் ஆட்கள்-இது இடது சாரி என்று பிரித்துப்பார்த்துக் காலில் விழுவார்களா?

நாட்டின் மக்கள் ஒழுக்கத்தையும் நேர்மையையும் யாரிடமிருந்தோ எதிர்பார்க்கிறார்கள். யாரிடம் அது கிடைக்கும் என்று தேடும் போது எந்தக் குரல் சமீபித்திருக்கிறதோ அந்தக் குரலை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

ஆளும் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியில் தங்கள் வாழ்வில் தினம்தினம் எதிர்கொள்ளும் அவலங்களின் தொடர்கதைக்கு முடிவாக பற்றிக்கொள்ள ஒரு கொடியைத் தேடுகிறார்கள்.

அந்த நம்பிக்கை அவர்களின் உரிமை. அதைத் தீர்மானிக்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை. அதே போல் அது யாருக்கும் இடையூறாக இல்லாத போது அதைத் தடுக்கும் அல்லது துரத்தும் உரிமையும் யாருக்கும் இல்லை.

இந்த அநீதிக்கான தண்டனையைத் தர  நினைவோடு காத்திருக்கிறது காலம்.

4.6.11

எய்யாத அம்பு

அதோ சிவப்பு நிறத்தில் கோடு போட்ட சட்டை போட்டுக்கொண்டு ஒரு இளைஞன் நடந்து போகிறானே அவனைப் பற்றித்தான் இந்தக் கதை.

முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான். தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிடுவான். அதற்குப் பிறகு அவர்களிடம் வருத்தப்படுவான்.

போகப்போக அவனை சுற்று வட்டாரத்தில் யாருக்கும் பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். அவனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு. ஆனால் எப்படி என்றுதான் தெரியாமலிருந்தது.

அவனுடைய அப்பாவும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு ஒரு யோசனை செய்தார். 


ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரம் வரும்போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றும்படி அறிவுரைத்தார்.

முதல் நாள் மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு போகுமுன் கோபவெறி குறைந்து போய் மரத்தில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.


சில நாட்களில் மரத்தில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் ஏற்பட்ட மாற்றத்தைச்  சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.


அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் சுத்தியலைக் கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு அப்பாவை மரத்தைப் பார்க்கக் கூட்டிப்போனான் இளைஞன். அப்பா மரத்தில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் உண்டான வடுக்களை மகனுக்குக் காட்டி-


"கோபம் வந்தால் நிதானமிழந்து பேசும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்தச் சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்.அதனால் பேசும் முன் பேசாதிருக்கப் பழகு" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

கொட்டிய வார்த்தைகள்
திரும்ப வாராது.
கூரிய அம்பாய்த்
துளைக்காமல்
ஓயாது.
சுட்ட செங்கல்
மணலாகாது.
விதைத்த வினை
தினையாகாது.
பேசும் முன்பு
பேசாதிருக்க
வாழ்ந்த வாழ்வும்
வீணாகாது. 

3.6.11

ஜன்னல்

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திசைக்கு சற்றே வலதுபுறம் தெரிகிறதா ஒரு பிரம்மாண்டமான கட்டிடம்?

அது ஒரு பெரிய மருத்துவமனை. அதன் ஏழாவது தளத்துக்கு நாம் செல்கிறோம். 

ஒரு அறையில் இரு தீவிரமான வியாதிகளால் பீடித்த நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு சிறு தடுப்புச் சுவர். 

ஒருவரின் படுக்கை அருகே ஒரே ஒரு ஜன்னல். இவரை ஜான் என்று கூப்பிடலாம். மற்றவருக்கு - இவர் ராபர்ட் - அதுவும் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமையே இருவரின் துணை.

புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் ஜான். ராபர்ட்டோ புற்று நோயுடன் கடுமையான பக்கவாத நோயாளி. நாட்கள் தேயத் தேய இருவரும் நண்பர்களாகி விட்டனர். ஒருமுறை ராபர்ட் ஜானிடம் சொன்னார்.

"உனக்காவது வெளி உலகைப் பார்க்க - பொழுது போக்க ஒரு ஜன்னல் இருக்கிறது. என் நிலைமையைப் பார். ஒவ்வொரு நொடியும் நரகம்.”

“நீ சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால். இனி நமக்குள் ஒரு ஒப்பந்தம். நான் என்னவெல்லாம் பார்க்கிறேனோ அதையெல்லாம் காட்சிக்குக் காட்சி உனக்கு விவரிப்பேன். போதுமா நண்பா?”

அன்று முதல் ஜான் தான் பார்க்க நேர்ந்தவற்றையெல்லாம் ராபர்ட்டுக்குப் படு சுவாரஸ்யமாகக் கூறி வந்தார்.

”ஹா! என்ன ஒரு ரம்யமான சூழல்! ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய நிலவின் மது பொழியும் சலனமற்ற ஏரி. நடுவில் சிறு தீவு. ஏரியில் படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா. காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்."

ராபர்ட்டுக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும். அதுவும் ஜானின் மொழியில் தன்னையே மறந்து தன் நோயை மறந்து கேட்டுக்கொண்டிருப்பார் ராபர்ட்.

மற்றொரு நாள் ஆனந்தமான ஒரு காட்சியை ஜான் விவரித்துக் கொண்டிருந்தார்.

"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை. அதில் மணப்பெண் வாசம் நிறைந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்கார்ந்தபடி ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.மணப்பெண் முகத்தில் அடடா! அப்படி ஒரு வெட்கம்.!"

ராபர்ட்டுக்கு ஊர்வல ஆர்ப்பாட்டங்கள் எதுவும் கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை ஜான் மூலம் ஏக்கத்துடன் காதுகளால் நன்கு அனுபவிப்பார்.

ஒரு நாள் நள்ளிரவில் உறக்கத்திலேயே ஜான் மரித்துப் போனார்.

ராபர்ட்டுக்கு ஜானின் இழப்பைத் தாங்க முடியவில்லை ஒருநாளைக்கு மேல். 

மறுநாள் செவிலி வந்தபோது தன்னால் தனிமையின் வெறுமையைத் தாங்க முடியவில்லை. முடியுமானால் ஜன்னல் ஓரமாகவாவது தன் படுக்கையை மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார்.

ஜானின் மறைவை இப்படியாவது சமாளித்துக் கொள்வேன் என்று எண்ணியபடியே தன் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்லத் தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே பார்க்க-

அங்கே ஒரு பெரிய வெள்ளை மதிற்சுவர் தெரிந்தது.

ஜான் இருந்த போது ஜன்னல் வழியே பார்த்து விவரித்த காட்சிகளைப் பற்றிக் குழம்பியபடியே செவிலியிடம் சொன்னார் ராபர்ட்.

செவிலி ராபர்ட்டுக்கு மருந்தைக் கொடுத்தபடியே சொன்னாள்.

"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது ராபர்ட். கடுமையான புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்திருந்தார் ஜான்”

காட்சிகளைக் காணக் 
கண்கள் தேவையில்லை.
தொலைவைக் கடக்கக் 
கால்கள் தேவையில்லை.
பரிவு காட்டித்
தலைமுடி கோதக்
கைகளும் தேவையில்லை.
பிறரையும் மலர்த்தும்
மகிழம்பூ மனமும்
பிறருக்காய் உதிர்க்க 
ஒரு துளிக் கண்ணீரும்
இருந்துவிட்டால்.

2.6.11

கரைந்த காக்கை.


இது நன்நம்பிக்கையின் வேரை அரிக்கும் மூடநம்பிக்கையின் கதை.

அரசன் ஒருவனுக்கு சகுனங்களில் பலமான நம்பிக்கை உண்டு. அரண்மனையின் சோதிடர் ஒருவர் இந்த மூடநம்பிக்கையால் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் இப்படித்தான். ”அரசே! அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அந்தநாளில் நினைக்காததெல்லாம் நடக்கும். நடப்பதெல்லாம் சிறக்கும்”' என்று நம்பிக்கை ஊட்டி உசுப்பேற்றினார்..

மன்னன், “யாரடா அங்கே? என்று சேவகனை அழைத்தான். காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். 


அவ்வளவுதான். தினமும் பொழுது விடியும் முன்பே சேவகனுக்கு கெட்ட காலம்தான். எழுந்ததும் எழுந்திராததுமாய் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்த்துக் குதித்தான்.

"அடடா! நல்ல சகுனம், இன்றைக்கு நம் காட்டில் மழைதான். மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வும் பரிசுகளும் கொடுப்பார்” என்று மகிழ்ச்சி பொங்கிவழிய மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு மன்னனும் துள்ளி எழுந்தான். சேவகனுடன் அந்த இடத்துக்கு விரைந்தான். அதற்குள் ஒரு காக்கை அவசரமாய் எங்கோ கிளம்பிப் போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் வழக்கம்போல் வரவேண்டியது வந்து விட்டது. தளபதியை அழைத்து ”இந்தப் பொறுப்பில்லாத புளுகுணி சேவகனுக்குப் பத்து கசையடி கொடுத்து அதோடு அரண்மனையைச் சுற்றி நூறு தடவை ஓடச்சொல்” என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்கத் தொடங்கினான்.

மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.

”நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடியும் நூறு சுற்றும்”' என்று மிரட்டினான்.

சேவகன் சொன்னான்.

'மஹா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது. சகுனமும் பலித்துவிட்டது” என்றான்.

இந்தக் கதையின் முடிவில் மன்னரை சுளீரென்று மின்னலும் அரண்மனை சோதிடரை டமார் என்ற இடியும் முறையே தாக்கின.

நம்பக்கூடாததை
நம்பியவனும்
நம்ப வேண்டியதை
நம்பாதவனும்
கரை சேர்ந்ததில்லை.
மூடநம்பிக்கைகள்
தளும்பும் குளத்தில்
நம்பிக்கையின் அல்லி
மலர்வதுமில்லை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...