10.6.11

பிற்பகல்






















தசாவதாரம் என்கிற கமலின் பத்து முகம் வெளியான பின் ஆறுமுகம் தொடங்கி எல்லோரிடமும் அடிபட்ட வார்த்தை கயாஸ் தியரி அல்லது கயாஸ் கோட்பாடு.

என்றோ நிகழ்ந்த ஒரு மிகச்சிறிய நிகழ்வு-காரணம்-விளைவு சுழற்சியில் சிக்கி காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சாத்தியக்கூறு உண்டென்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யும் ஒரு கோட்பாடு.

இதற்கு மேல் வேண்டாம். கொட்டாவி அல்லது கோபம் வரும்.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பினால்
உண்டாகும் மென்காற்று காலப்போக்கில் இந்து மஹாசமுத்திரத்தில்  சுனாமியாய்த் தாக்கலாம் என்று ஒரு கவிதையாய்ச் சொன்னால் இது இன்னும் மனசுக்கு நெருக்கமாய் இருக்கும்.

இந்தக் கோட்பாட்டை இன்றைக்கு ராமாயணக் கதை ஒன்றால் பார்க்கலாம்.

ச்ரவணன் என்பது ஒரு சிறுவனின் பெயர். அவனது பெற்றோர்கள் மிகவும்  வயதானவர்கள். இருவரும் பார்வையற்றவர்கள். தங்களின் மகன்  உதவியில்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய
இயலாது. ச்ரவணனின் தந்தையார் ஒரு முனிவர். அவர்கள் மூவரும் ஒரு  வனத்தில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வனத்தில் தமிழ்நாட்டைப் போலவே நீரின்றி வறட்சி  ஏற்பட்டது. ஆகவே வேறு வனத்தைத் தேடிப் புறப்பட்டனர். பார்வையற்றும் நடக்க இயலாமலும் சிரமப்படும் தன் பெற்றோருக்கு
ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் ச்ரவணன். 

இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் அவர்களை அமரவைத்து  அத்தட்டுகளைத் தராசு போல் ஒரு நீண்ட வலுவான கழியில் பொருத்தி
அவர்களைத் தன் தோளில் தூக்கிக் கொண்டான்.

வெகு தூரம் நடந்து மற்றொரு வனத்தை அடைந்தனர். 

ச்ரவணனின் பெற்றோர் தாகமிகுதியால் நீர்பருக விரும்பினார்கள்.
நீர்க்குடுவையில் நீர் மிகவும் குறைவாக இருந்தபடியால் இருவரின்  தாகத்தையும் நீக்க எண்ணிக் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத்  தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் ச்ரவணன்.

சீக்கிரம் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர்.

அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது.  அயோத்தி மன்னன் தசரதன்  காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காகக் கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களை வேட்டையாடக் கானகம்  வந்திருந்தான். 

மாலைநேரம். இருள் கவிழத் துவங்கியது மெதுவாக. மரத்தடியில்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் தசரதன். அவன் அருகே மிருகம் ஒன்று  தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது.

துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். அம்பைச் செலுத்திய மறுநொடியே "அம்மா!" என்ற அலறல் கேட்டது.

மனிதக் குரலைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசையில்  ஓடினான். அங்கே ச்ரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம்  தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று  புலம்பித் துடித்தான்.

தசரதனைத் தடுத்த ச்ரவணன்,

”மன்னா! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு  இருப்பார்கள்.நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல்  மடிகிறேன். நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து  விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான். 

ச்ரவணனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற நீரை எடுத்துக்கொண்டு  அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலை
வெளிப்படுத்தாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். 

தசரதனின் கை பட்டதுமே "யார்  நீ?"என்று குரல் கொடுத்தாள் அந்தத்தாய்.  இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு    என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான்  தவறாக அம்பெய்திய காரணத்தால் ச்ரவணன் மாண்ட  செய்தியைக்  கூறினான். 

புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் 

"ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து  தவித்து உயிர் விடுவது போலவே நீயும்  எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர  சோகத்தாலேயே உயிர் விடக்கடவது. இது  எங்கள் சாபம்" என்று  சபித்துவிட்டு உயிர் விட்டனர்.

பின்னாளில் தசரதன் ராமனையும் லட்சுமணனையும் வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும்  சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் தசரதன் தனிமையில் தவித்துப் பின்  உயிர் விட்டான்.

இந்திய மரபில் இதுபோன்ற முற்பகல் செய்யின் சமாச்சாரங்கள் நிறையவே இருக்கின்றன.தவறை மன்னிக்கும் போதனையை மதங்கள் வலியுறுத்தினாலும் இன்ஸ்டண்ட் சாபங்கள் நம் மரபின் வாக்கின் வலிமைக்கான அடையாளங்கள். அந்த சாபம் நீங்கும் வரை வாழ்தல் எனும் அனுபவத்தையும் அவை சேர்த்தே போதிப்பதாய் உணரத் தோன்றுகிறது.

அறியாமல்
கொன்றது
தசரதனின்
வில்லம்பு.
அறிந்தே
கொன்றது
முதியோரின்
சொல்லம்பு.
செயலுக்கு முன்
சிந்தனை.
இல்லாமல்
போனால்
நிந்தனை.

8 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

நமது மரபின் வேர்கள் மிக ஆழமாய் நிற்கின்றன.. எந்த இடத்திலும் அவற்றின் துலாக்கோல் தடுமாறுவதில்லை.. ஒரு மௌன சாட்சியாய் அவை பார்த்துக் கொண்டிருப்பதாலேயே செயலற்றவை என நினைத்து அகங்காரத்தில் தடம் பிறழ்வதும் பின் தண்டனை ஏற்பதும் காலத்தின் கண்கூடு.
அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பினால்
உண்டாகும் மென்காற்று காலப்போக்கில் இந்து மஹாசமுத்திரத்தில் சுனாமியாய்த் தாக்கலாம்.. சபாஷ்..

Ramani சொன்னது…

சரவணன் தசரதன் என்கின்ற பெயர்கள் கூட
இயல்பாக சந்த ஒழுங்கோடு
கருவிளமாக அமைந்ததை
மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்
ஒரு சிறு பதிவுக்குள் புராணக் கதை கேயாஸ் தியரி
ஒரு கவிதையென அசத்த உங்களால் மட்டுமே முடியும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Harani சொன்னது…

அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி. நம் பண்பாட்டு அடையாளங்களைத் தொலைக்காமல் இருப்பதால்தான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவை ஆழமாக ஊடுருவிக் கிடக்கின்றன. அருமை சுந்தர்ஜி.சரவணனா? சிரவணனா?

சுந்தர்ஜி சொன்னது…

சமஸ்க்ருதத்தில் ஷ்ராவண மாதம் என்றால் தமிழில் ஆடி மாதம்.

ஆக ஷ்ரவண் என்பதுதான் ராமாயணத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் பெயரும் கூட.அவன் ஆடி மாதத்தில் பிறந்தவனாக இருக்கலாம்.

தமிழுக்காக ச்ரவணன் என்று எழுதினேன் ஹரணி. வாசிப்புக்கும் நன்றி.

உங்கள் தளத்திலும் பின்னூட்டமிட முடியாது வாசிக்க மட்டுமே முடிகிறது.அது சோகமே.

ஹேமா சொன்னது…

உங்கள் காலடியில் இருந்து கதை கேட்பதாய் ஒரு உணர்வு சுந்தர்ஜி !

A.R.ராஜகோபாலன் சொன்னது…

தயரதன்
துயர்தனை
துடைக்க
அடைக்க
யாருமின்றி
போனதை
கவித்துவமாய் சொன்ன விதம்
அற்புதம் அண்ணா
மோகத்தால்
ராமனால் அழிந்தான்
ராவணன்
பாசத்தால்
ராமனால்
மடிந்தான்
தயரதன்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பினால்
உண்டாகும் மென்காற்று காலப்போக்கில் இந்து மஹாசமுத்திரத்தில் சுனாமியாய்த் தாக்கலாம் //

அருமையான உதாரணம் சார்!
ஆஹாஹா, நல்ல கற்பனை சார்!!

வில்லம்பை விட அந்த சொல்லம்பு சிந்தனை செய்யாத தஸரதருக்கு நிந்தனையாகப் போய்விட்டதே.

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

நிரூபன் சொன்னது…

இக் காலத்திற்கேற்ற மாதிரி, எளிமையான வடிவில் கோட்பாட்டு விளக்கத்தினை இராமாயணத்துடன் ஒப்பிட்டு விளக்கமாக கூறியுள்ளீர்கள். அருமை சகோ.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...