2.6.11

கரைந்த காக்கை.






















இது நன்நம்பிக்கையின் வேரை அரிக்கும் மூடநம்பிக்கையின் கதை.

அரசன் ஒருவனுக்கு சகுனங்களில் பலமான நம்பிக்கை உண்டு. அரண்மனையின் சோதிடர் ஒருவர் இந்த மூடநம்பிக்கையால் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் இப்படித்தான். ”அரசே! அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அந்தநாளில் நினைக்காததெல்லாம் நடக்கும். நடப்பதெல்லாம் சிறக்கும்”' என்று நம்பிக்கை ஊட்டி உசுப்பேற்றினார்..

மன்னன், “யாரடா அங்கே? என்று சேவகனை அழைத்தான். காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். 


அவ்வளவுதான். தினமும் பொழுது விடியும் முன்பே சேவகனுக்கு கெட்ட காலம்தான். எழுந்ததும் எழுந்திராததுமாய் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்த்துக் குதித்தான்.

"அடடா! நல்ல சகுனம், இன்றைக்கு நம் காட்டில் மழைதான். மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வும் பரிசுகளும் கொடுப்பார்” என்று மகிழ்ச்சி பொங்கிவழிய மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு மன்னனும் துள்ளி எழுந்தான். சேவகனுடன் அந்த இடத்துக்கு விரைந்தான். அதற்குள் ஒரு காக்கை அவசரமாய் எங்கோ கிளம்பிப் போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் வழக்கம்போல் வரவேண்டியது வந்து விட்டது. தளபதியை அழைத்து ”இந்தப் பொறுப்பில்லாத புளுகுணி சேவகனுக்குப் பத்து கசையடி கொடுத்து அதோடு அரண்மனையைச் சுற்றி நூறு தடவை ஓடச்சொல்” என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்கத் தொடங்கினான்.

மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.

”நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடியும் நூறு சுற்றும்”' என்று மிரட்டினான்.

சேவகன் சொன்னான்.

'மஹா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது. சகுனமும் பலித்துவிட்டது” என்றான்.

இந்தக் கதையின் முடிவில் மன்னரை சுளீரென்று மின்னலும் அரண்மனை சோதிடரை டமார் என்ற இடியும் முறையே தாக்கின.

நம்பக்கூடாததை
நம்பியவனும்
நம்ப வேண்டியதை
நம்பாதவனும்
கரை சேர்ந்ததில்லை.
மூடநம்பிக்கைகள்
தளும்பும் குளத்தில்
நம்பிக்கையின் அல்லி
மலர்வதுமில்லை.

10 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

சொல்ல வருவதை இவ்வளவு எளிதாகவும் அழகாகவும் சொல்லும் உங்களுக்கு இப்போது என்னால் என்ன பரிசு தர முடியும்.என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்துக்களும் தவிர. தொடருங்கள் சுந்தர்ஜி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, நல்ல தமாஷான கதை.
இரண்டு காக்கைகளைக் கண்டவனுக்கு அன்று நல்லகாலம் என்பது நிரூபணமாகிவிட்டது. தெனாலிராமன் கதைபோல உள்ளது. பதிவுக்கு நன்றி.

கடைசியில் சொல்லிய கருத்தும் அழகாகக் கதைக்கு ஏற்றபடியே உள்ளது.

Ramani சொன்னது…

நல்ல தெளிவான படைப்பு
நாங்களும் நம்பிக்கையில்
அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்
ஆனால்
எதை நம்புவது எதை நம்பக்கூடாது
என்பதில்தான் மொத்த குழப்பமும்..

vasan சொன்னது…

'ஜென்'னிலிருந்து தெனாலி/பீர்பாலாய்
கசிந்து கொண்டிருக்கிற‌து
'கைகளில் அள்ளிய‌ நீர்'

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மூடநம்பிக்கைகள்
தளும்பும் குளத்தில்
நம்பிக்கையின் அல்லி
மலர்வதுமில்லை.

மலர்ந்தாலும் அது அல்லியாக இருக்காது
இல்லையா அண்ணா
மூட நம்பிக்கையை
ஓட வைக்கும்
இரத்தின கவிதை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

Super Sundarji!!

ஹேமா சொன்னது…

நல்ல சிரிப்புத்தான் சுந்தர்ஜி !

எல் கே சொன்னது…

ஹஹஅஹா . நல்ல கதை. சகுனம் பார்க்கத் தேவை இல்லை

போளூர் தயாநிதி சொன்னது…

//நம்பக்கூடாததை
நம்பியவனும்
நம்ப வேண்டியதை
நம்பாதவனும்
கரை சேர்ந்ததில்லை.
மூடநம்பிக்கைகள்
தளும்பும் குளத்தில்
நம்பிக்கையின் அல்லி
மலர்வதுமில்லை.//தொடருங்கள் ....

Nagasubramanian சொன்னது…

//மூடநம்பிக்கைகள்
தளும்பும் குளத்தில்
நம்பிக்கையின் அல்லி
மலர்வதுமில்லை.//
true

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...