சலசலக்கும் நதியின் ஓசை உங்கள் காதுகளை அடைகிறது இப்போது.
வேட்டைக்காரர்களின் சுவடுகள் பாவாத-கடவுளின் அற்புதம் பரவிய-நட்பு பாராட்டும் மிருகங்களும் அபூர்வ மூலிகைகளும் நிறைந்த வனத்தில் நிற்கிறீர்கள்.
அதோ மனம் மயக்கும் இனிமையான காற்றில் அசைந்தபடி நிற்கும் மூன்று இளஞ்செடிகள் பேசிக் கொள்வதை நீங்கள் கேட்கிறீர்கள்.
முதல் செடிக்கு எத்தனை அழகான ஒரு கனவு.
“நான் வளர்ந்து மிகப் பெரிய மரமாகி இந்த உலகத்தின் மிகச் சிறந்த அரசனின் முத்துக்கள்-மாணிக்கங்கள்-வைர வைடூரியங்கள்-நிரம்பி வழியும் ஒரு பேழையாக மாறுவேன்.”
அதற்கடுத்த செடியின் அற்புதமான கனவு வெளிப்படுகிறது.
“நான் வளர்ந்தபின் வெட்டப்பட்டு ஒரு பெரும் போர்க்கப்பலாவேன். கடும் புயலோ கொடும் மழையோ என்னில் பயணிக்கும் வீரபராக்கிரமம் நிறைந்த உலகத்தின் மிகச் சிறந்த மன்னனையும் அவன் படைகளையும் சுமந்து செல்வேன்.”
விசித்ரமான கனவு மூன்றாவது இளங்குருத்துக்கு.
“என்னை யாரின் கோடரியும் வீழ்த்தாது நான் வானைத் தொட்டு வளர்வேன். கடவுளின் பாதங்களைத் தொடுவதாய் இருக்கும் என் உயரம். உலகே வியக்கும் அபூர்வ மரமாகி சரித்திரத்தின் பக்கங்களை நிரப்புவேன்”.
கனவுகள் வளர்ந்தது. காலம் தேய்ந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு மூன்று மரவெட்டிகள் அந்தக் காட்டிற்கு வந்தனர். கனவுகளைச் சுமந்து நின்ற அந்த மூன்று மரங்களின் அடியில் நின்றனர்.
முதல் மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரவெட்டி அதை ஒரு தச்சனிடம் கொண்டு சேர்க்க ஒரு மாணிக்கப் பேழையாகும் கனவு நிறைவேறக் காத்திருந்த அந்த மரம் இறுதியில் மாடுகளுக்கு வைக்கோல் நிரப்பி வைக்க உதவும் மரப்பெட்டியாய் உருக்கொண்டது.
இரண்டாவது மரத்தை மற்றொரு மரவெட்டி வீழ்த்தி அதை ஒரு நல்ல விலைக்குத் துறைமுகத்தில் விற்றான். போர்க்கப்பலாக வேண்டிய அதன் கனவு ஒரு சாதாரண மீன்பிடிப்படகாய் மாற்றம் கொண்டது.
மூன்றாவது மரத்துக்கோ தான் வெட்டி வீழ்த்தப்பட இருக்கிறோம் என்கிற நினைப்பே சகிக்க முடியாததாக இருந்தது. தன் கனவின் மீது ஒவ்வொரு முறையும் கோடரி விழுந்ததை எண்ணி எண்ணித் தவித்தபடியே வெட்டுண்டது. பல பாளங்களாய் அதன் கனவு பிளவுண்டு இருண்டு கிடந்த யாரின் கவனிப்புமற்ற ஓர் அறையில் இட்டுப் பூட்டப்பட்டது.
கனவுகள் எல்லாம் சிதறுண்டு போய் வெவ்வேறு வடிவங்களில் மாற்றமுற்று காலத்தின் பிடியில் தங்களை ஒப்புக்கொடுத்த போதும் கனவின் பீளைகள் அவற்றின் கண்களில் மீதமிருக்கத்தான் செய்தன.
வருடங்கள் சென்றபின் இன்று கடுங்குளிரால் உறைந்த ஒரு இரவில் நுழைகிறீர்கள்.
ஒரு நிறைமாத கர்ப்பிணியும் அவள் கணவனும் அந்த மாட்டுத் தொழுவத்தைக் கடக்கும் வேளையில் தாங்கமுடியாத பிரசவ வலி ஏற்பட்டு அந்தத் தொழுவத்தில் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் அந்தத் தாய்.
குளிருக்கு அடக்கமாக வைக்கோலால் நிரம்பிய அந்த முதல் மரத்தின் பெட்டியில் கதகதப்பாக இருக்கும்படி அந்தக் குழந்தையை அந்தத் தாய் இட்டபோது முதலாம் மரம் உலகத்தின் மிக உயர்ந்த பொக்கிஷத்தைத் தான் சுமப்பதாய் உணர்ந்தது.
சில வருடங்கள் கழிகின்றன.
ஒரு மழைக்காலத்தின் பகல் பொழுதில் கூட்டமாய் வந்த சிலர் அந்த இரண்டாவது மரத்தால் செய்த படகின் மீதேறிக் கடலில் செல்வதைப் பார்க்கிறீர்கள்.
நடுக்கடலில் அந்தப் படகு பயணிக்கும்போது கடுமையான புயல் படகை அலைக்கழித்துக் கவிழ்க்க இருக்கிறது. இரண்டாவது மரம் அவர்களை எப்படியாவது கரை சேர்த்துவிட விரும்பியது.
படகில் பயத்தோடு பயணித்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பினார்கள். அவர் கடலை நோக்கிச் சாந்தமான குரலில் கையை உயர்த்தி அசைத்தபடியே அமைதி-அமைதி என்றார். கடல் குளம் போல் அமைதியானது. இரண்டாவது மரம் அப்போது அரசர்களின் அரசரைச் சுமப்பதாக உணர்ந்தது.
இறுதியாகச் சில வருடங்கள் கழித்து இருட்டறையில் சிறைவாழ்க்கையை அனுபவித்த மூன்றாவது மரத்துக்கு விடுதலை கிடைத்தது. அதை ஒரு மனிதர் சுமக்க முடியாமல் சுமந்து சென்றார். அவரைச் சுற்றியிருந்த மக்கள் கொடும் சொற்களால் அவரை நிந்தித்தனர். சொற்கள் செய்ய விட்டதை சவுக்கால் அடித்துப் பூர்த்தி செய்தார்கள்.
அவரை அம்மரத்தின் பாளங்களில் ஆணிகளால் அறைந்து மலையுச்சிக்குக் கொண்டு சென்று நட்டு வைத்தனர். வானுயர எழும்பி நிற்பதாய் உணர்ந்த அந்த மரம் கடவுளுக்கு மிக நெருக்கமாய் இருப்பதை உணர்ந்து விம்மியது.
ஒரே கனா
என் வாழ்விலே
அதை நெஞ்சில்
வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும்
நாள் வரை உயிர்
கையில்
வைத்திருப்பேன்.
வானே என் மேலே
சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
வானும் மண்ணும்
தேயும் வரை
வாழ்ந்து காட்டுவேன்.
(வைரமுத்துவின் இறவாப் புகழ் கொண்ட-எனக்கு மிகப் பிடித்த கவிதையின் இறுதிவரியை மானசீகமான அனுமதியுடன் கதைக்கேற்ற மாற்றத்துடன்.)
16 கருத்துகள்:
எப்படி பயனாகிறோம் என்பதில் தான் வாழ்வின் அர்த்தம் பதிவாகிறது..
கனவின் பீளைகள் அவற்றின் கண்களில் மீதமிருக்கத்தான் செய்தன.
வாவ்.. ரசித்தேன்..
மரங்கள் கண்ட கனாக்களும் நாம் காணும் கனாக்கள் போலவே மிகப்பெரிய ஆவலுடன் இருந்தன.
கனவு நனவாகாமல் இருந்தால் நாம் தான் மனம் துவண்டு போவோம்.
மரங்கள் அவ்வாறு துவண்டுபோகாமல் இயல்பாகவே அதை ஏற்றுக்கொண்டன.
இருப்பினும் ஏதோ ஒரு முறையில் அவைகளின் கனாக்கள் அழகாக நிறைவேறியதில் திருப்தியும் கொண்டுள்ளன.
மிகவும் அழகான அர்த்தம் பொதிந்த கதை இது. கடைசி பாடல் வரிகளும் மிகவும் பொருத்தமானதே.
சுந்தர்ஜின்னா சுந்தர்ஜி தான் என்பதை மீண்டும் அழகாக நிரூபித்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இதுபோல அரிய பெரிய தத்துவக்கதைகளை அள்ளித்தாருங்கள். காத்திருக்கிறோம். அன்புடன் vgk
அசத்தல் ஜி!
"மரக்கனவுகள்" சூப்பெர்ப். கடைசி மரம் கடவுளின் அருகில் நின்றாலும் அது வேறு விதமாகப் போய்விட்டதே ஜி! ;-)
அற்புதமான கதை சுந்தர்ஜி. இதனை சில நாட்களுக்கு முன் நாகாவின் பதிவில் இக்கதையைப் படித்துவிட்டேன். இருப்பினும் அவரின் நடைக்கும் நீங்கள் சொல்லுக்கும் நடைக்கும் உள்ள வேறுபாட்டினால் சுவை கூடியிருக்கிறது. அற்புதம்.
த்யான மையங்களில் கண்கள் மூடச்செய்து த்யான நிலையை அடையச் செய்வதற்காக நம்மை தயார் செய்து கொள்வோம்- அல்லவா? கிட்டத் தட்ட அது போன்ற ஒரு உணர்வு தான், இந்தப் பதிவைப் படித்த போது... ஒவ்வொரு செடியின் கனவும், என் கனவானது... அந்தக் கனவுகளின் வளர்ச்சி- என் வளர்ச்சியானது... ஒவ்வொரு முறை அந்தக் கனவுகள் வெட்டப் படும்போது- என் கனவுகள் முறிந்து போவதுபோன்றதொரு உணர்வு...
இறைவனின் பாதத்தோடு இணைந்துவிட்ட அந்த மரத்தின் கனவு மெய் பட்ட தருணம்- அதன் ஆனந்தத்தில், நானும் இறைவனைக் கண்டேன்...
அற்புதம்!
PS: 'ஏசு க்ருஸ்து' என்று விளக்கம் தரும் வரி இல்லாமல் இருந்திருக்கலாம்- என்று தோன்றியது... ஆனால் அது என் கருத்து மட்டுமே!
பிரமாதம்! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது.
super story...
அழகான கதை .... மிக்க நன்றி
மரங்களின்
மனதில் பதிந்த
மாட்சிமை கலந்த
கனவுகளை
நம்பிக்கைகளை
நல்ல எண்ணங்களை
எழுத்துகளால்
செதுக்கிய விதம் அருமை
அண்ணா
வித்யாசமான கதை
என்னதான் கனா கண்டாலும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றினால் தான் இயக்கப் படுகிறோம், எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் கனவுகள் நிஜத்தில் நனவாகலாம் படித்த கதைகளின் பொருள் உங்கள் பதிவுகளால்விளக்கப் படுகிறது. தொடர வாழ்த்துக்கள்.
இறுதி வரியை நீக்கிய பின் கச்சிதமாக வெட்டப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட தலைமுடி போல் உணர்ந்தேன்.
நன்றி மாதங்கி.
கதையும் கவிதையும் நன்று.
விடாது நாம் கொள்ளுகிற கனவுகளே
நாம் இறுதியில் அடைகிற நிலையாகிப்போகிறது
என்பதுதான் நூற்றுக்கு நூறு சரி
அதனை ஆணித்தரமாய் விளக்கும் பதிவும்
விளக்கக் கவிதையும் அருமையோ அருமை
சுந்தர்ஜி said...
//இறுதி வரியை நீக்கிய பின் கச்சிதமாக வெட்டப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட தலைமுடி போல் உணர்ந்தேன்.
நன்றி மாதங்கி.//
இந்த உங்கள் உதாரணம் கச்சிதமாக வெட்டப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட தலைமுடி போல் அழகாக உள்ளது.
சூப்பர், சார்.
வலை வடிவமைப்பின் மெருகு ஏறிக் கொண்டேயிருக்கிறது, உங்களின் பதிவைப் போல.
க்ண்டவை, கேட்டவை, படித்தவைகளைக் கொண்டு நிகழ்கால நிகழ்வுகளுக்கு பொருத்தி
ஒரு புதுமை செய்கிறீர்கள்.
கருத்துரையிடுக