ஸ்ரீ.ஜி.எம்.பாலு சார் (gmb writes) இன்றெனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலின் உள்ளடக்கம் ஒரே நேரம் வருத்தமும் ஆனந்தமும் தருவதாயிருந்தது.
உடனே உங்களோடு பகிரத் தோன்றியது. அந்த மின்னஞ்சலின் மொழிமாற்றம் கீழே: .
************************************************************************
இந்த சம்பவம் பிரிட்டிஷ் ஏர்வேஸின் ஜொகன்னெஸ்பர்க்க்கும் லண்டனுக்குமிடையிலான விமானத்தில் நிகழ்ந்தது.
50 வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்காரப் பெண் ஒரு கறுப்பருக்கருகில் அமர நேரிட்டது.
இதைச் சகிக்க முடியாத அப்பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து,
” ஏம்மா? இதை நீ பார்க்கவே இல்லியா? ஒரு கறுப்பனுக்கு அருகில் என்னிருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதை என்னால் ஏற்கமுடியாது. மாற்று இருக்கை ஒன்று உடனடியாக ஒதுக்கித் தா.” என்றாள்.
”தயவு செய்து அமைதியாய் இருங்கள். விமானத்தின் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. ஏதாவது காலி இருக்கை இருக்கிறதாவெனப் பார்த்துவருகிறேன்” என்றாள் பணிப்பெண்.
சிறிது நேரத்தில் திரும்பிய பணிப்பெண்,
“ நான் சொன்னது போலவே எகானமி வகுப்பில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கேப்டனிடம் கேட்டதில் அவர் பிஸினஸ் வகுப்பிலும் காலியிடம் எதுவுமில்லை. ஆனால் முதலாம் வகுப்பு இருக்கை ஒன்று காலியாக உள்ளது என்றார்.” என்றபடியே-
அந்த வெள்ளைக்காரப்பெண்ணை மேலும் பேசவிடாமல் தொடர்ந்தாள்.
“எகானமி வகுப்பில் பயணிப்பவரை முதலாம் வகுப்பில் பயணிக்க அனுமதிப்பது எங்கள் நிறுவனச் சட்டப்படி வாடிக்கையல்ல. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கறைபடிந்த மனதோடு பக்கத்து இருக்கையில் ஒருவரோடு பயணிக்கும் துர்பாக்கியத்தைக் கருதி இதற்கு விதிவிலக்காக சட்டத்தைத் தளர்த்த கேப்டன் ஒப்புக்கொண்டார்”
அந்தக் கறுப்பு நிற மனிதரிடம் திரும்பி, “ நீங்கள் உங்கள் உடைமைகளோடு காத்திருக்கும் முதல் வகுப்பு இருக்கையில் பயணிக்கலாம். அதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபமிருக்காது என நினைக்கிறேன்” என்றாள்.
நடைபெற்ற இந்த அவலத்தை முதலில் இருந்து அதிர்ச்சியில் வாயடைத்துப் பார்த்துக்கொண்டிருந்த சக பயணிகள் அனைவரும் எழுந்து நின்று உரக்கக் கைதட்டி அச்செயலைப் பாராட்டினார்கள்.
இது உண்மைச் சம்பவம். உங்கள் மனது அந்தக் கறுப்பு மனிதரின் காயமடைந்த மனதுக்கு ஆறுதல் சொல்ல விரும்புமாயின் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் இதைப் பகிருங்கள்.
நன்றி.
***************************************************************************
நன்றி பாலு சார். சரிதானே?
13 கருத்துகள்:
உங்களைப்போலவே எனக்கும் ஒரு பக்கம் வருத்தமாகவும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக்வுமே உள்ளது.
என்ன தான் அவரை எகானமி க்ளாஸ்ஸைவிட ஒஸத்தியான முதல் வகுப்புக்கு அனுப்பி பயணம் செய்யச்சொன்னாலும், அவர் மனம் வருந்தவே செய்யும் அல்லவா!
இந்த வெள்ளைக்காரி ஏன் அங்கு போகாமல் அவரைப் போகச்சொல்கிறாள்?
அவளின் உள்நோக்கம்
என்னவென்றும் புரியவில்லை.
வெள்ளைக்காரியின் மனதின் நிறம் கருப்பாக இருக்குமோ!
என்னதான் வீட்டை சுத்தமாக வெள்ளை அடித்து பளிச்சென்று ஆக்கினாலும், அடுப்பங்கரை கருப்பாகத்தான் இருக்கும் என்று ஒரு பழமொழி கிண்டலாகச் சொல்வார்கள்; அந்த ஞாபகம் வந்து சிரித்து விட்டேன்.
அந்த மின்னஞசலை மொழிமாற்றம் செய்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி சுந்தர்ஜி. நீங்கள் எதைச் செய்தாலும், அதை நன்றாகவே செய்கிறீர்கள். பாராட்டுக்கள்
கேப்டனின் எதிர்வினை அருமை. என்றாலும் தீட்டென ஒதுக்கப்பட்டவர் இட மாற்றத்துக்கு மறுத்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. அதுவும் ஒரு வகை ஒதுக்கம் போல இருக்கிறது - புனிதப்படுத்தித் தனிமைப்படுத்துவது போல.மொழிபெயர்த்து வெளியிட்ட உங்கள் சிரத்தைக்குப் பாராட்டுக்கள்.
நல்ல அடி அந்த வெள்ளைக்கார அம்மணிக்கு...
மொழிமாற்றம் செய்து எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு நன்றி ஜி!
அதானே பாத்தேன்.வெளிநாடுகளில் ஓரளவு மதிக்கப்படுகிறோம்.இது உண்மை !
மனம் வலிக்க செய்த
இனபேதத்தை வலுவிழக்க செய்த பதிவு
எல்லாக் கதைகளுக்கும் இன்னொரு பக்கம் உண்டு என்றாலும் (பின்னூட்டங்கள் பார்த்தேன்) சொல்லப்பட்ட கதை நச்!
வண்ணத்தை எண்ணிய அந்த பெண்மணிக்கு இது தேவைதான் ...
இன்னும் இப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனரா ??
மனதில் தைக்கும் நிகழ்ச்சி.. G.M.B சாருக்கும், அழகாய்த் தமிழாக்கம் செய்த உங்களுக்கும் பாராட்டுக்கள்
விமானப்பணிப்பெண் மட்டத்திலேயே அந்த வெள்ளைகாரியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் அதனை எதிர்பார்க்க முடியாது. ஊலகம் பூராவும் South Africa என்று சொல்லிக்கொண்டிருந்த போது Southern Africa
என்று கூவிய வர்கள் அவர்கள் . ---காஸ்யபன்
மனதை வலிக்கச் செய்த நிகழ்வு.
வலி
கருத்துரையிடுக