சில நேரங்களில் சில மனிதர்களின் நினைவு இந்தப் புத்தகம் வாங்கும்போது நிச்சயமாக வரும். வர வேண்டும். இங்கிருந்தே ஆரம்பிக்கிறது தன் மறக்கமுடியாத முதல் புத்தகத்தை எழுதிய பாரதிமணியின் சுவடு.
நான் முதன்முதலில் 1985ல் க.நா.சு.வைச் சந்தித்த போது அவரின் வயது 73. எனக்கு 20. எனக்கும் என் தாத்தாவுக்குமான இடைவெளி. தில்லியில் உள்ள தன் மகள், அவரின் 47 வயது மாப்பிள்ளையைப் பற்றி, தஞ்சாவூர் ப்ரகாஷிடம் அவர் ப்ரஸ்தாபிக்கும் போது, நான் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பே இல்லாத ஒருவராகவே பாரதிமணி தோன்றினார்.
இப்போது 2012ல் நான் பாரதிமணியைச் சந்திக்கும்போது அவரின் வயதும் 73. எனக்கு 47. எனக்கும் என் அப்பாவுக்குமான இடைவெளி. கொஞ்சமும் நம்பமுடியாத வகையில், காலத்தின் எதிர்பாராத சுழல் இவரையும் ஒரு எழுத்தாளராக உருமாற்றம் செய்திருந்தது.
பாரதிமணி ஒரு வாக்கியத்தைத் துவங்கும்போதும், முடிக்கும் போதும் உண்டாக்கும் யூகிக்க முடியாத சுவாரஸ்யங்கள் போன்றதாகவே இருக்கின்றன அவர் வாழ்க்கை அனுபவங்களும்.
காலத்தின் புதிர் முடிச்சுக்களையும், அது அரித்துச் செல்லும் காலடி மண்ணைப் பற்றியும் கழுகின் வட்டமாய்ச் சுழலும் சிந்தனைகளோடு இந்த வரியை முடிக்கிறேன்.
இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையையும் ஏதாவது ஒரு காரணத்துக்காகக் குறிப்பிடாமல் விடமுடியாது. ஆனால் எல்லாக் கட்டுரைகளிலும் கண்ணுக்குப் படுகிற ஒற்றுமை இவர் எழுத்தின் இயல்பான செய்நேர்த்தி. முலாம் பூசாத செய்நேர்த்தி.
அவர் சக மனிதர்கள் மேலும், வாழ்க்கையின் மேலும் காட்டும் பாசாங்கில்லாத அன்பும், எளிமையும், பரிவும்தான் அவர் எழுத்துக்கு ஆதாரம் என்று தோன்றுகிறது. அதற்குப் பின்னால்தான் எழுத்தாளர்களும், இசை மேதைகளும், ப்ரபலங்களும் சூழ இருந்த காலங்களின் ஆளுமை இவர் எழுத்தாற்றலுக்குக் காரணியாய் இருக்கிறது.
“கிருஷ்ணப் பருந்து” வாசித்து விட்டு அதைப் பற்றித் தன்னுடன் விவாதித்ததாய் ஆ.மாதவன் எழுதியிருப்பது தவிர வேறெங்கும் பாரதிமணி, தன்னுடைய வாசிப்பனுபவத்தைப் பற்றி வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவர் -ஒருவேளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் உடையவராயின்- எழுத்துக்கு இதுதான் மிகப் பெரிய பலம் என நான் நினைக்கிறேன். அதுதான் அவருடைய எழுத்தின் மொழியையும், அதன் மெல்லிய எள்ளல்தொனியையும் தீர்மானிக்கிறது.
இவரின் நாடகப் பயிற்சியும், Voice Modulationல் உள்ள ஆர்வமும், சொல்லும் தகவலில் நுணுக்கமான சுட்டுதல்கள் எத்தனை இடங்களில் வெளியாகியிருக்கிறது?
எண்ணிக்கொள்ளவும்.
பேதி(பேடி அல்ல), கான்(கேன்ஸ் அல்ல), நாதஸ்வரமா இல்லை நாகஸ்வரமா?, சு ப் பு டு ( ‘சு’வும், ‘டு’வும் மிகப் பெரிதாகவும், ‘ப்பு’ மிகச் சிறிதாகவும்), என்.கே.சேஷன் (டி.என்.சேஷன் அல்ல), வங்கபந்து (பொங்கபொந்து), காசினெட்டு (cashewnut), மரவண்டிமத்தளம் (Trivendrum), வந்துட்டு- வந்திற்று, காந்திபாய் தேசாய் (Kanti Bhai Desai), சூட் இல்லை ஸ்வ்யீட், லாலு (லல்லு அல்ல), Dhaka அல்ல Taka, இர்பான் பட்டான் ( பதான் அல்ல).
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜரத்தினம் பிள்ளை அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுப்பது காத்தோட்டமாக ஔட்சைட் (திறந்த வெளிக் கழிப்பறை) சுகத்துக்காகத்தான் எனவும், அவருக்கு சுவர்கள் சூழ்ந்த கழிப்பறை விருப்பமானதல்ல என்றும் காதம்பரி எழுதியிருந்த ”கலை, கலைஞன், காலம்” புத்தகத்தில் படித்ததாய் ஒரு நினைவு.
(1947ல் சுதந்திர தினத்தன்று தில்லியில் பிஸ்மில்லா ஃகானுக்கு அடுத்து, பிள்ளை வாசித்த இசையைக் கேட்ட நேரு, “ I am also a piper like you but my pipe will emit only smoke" என்று குறும்புடன் பாராட்டினாராம்.
அதேபோல மகுடி வாசிங்க வாசிங்க என்று அடம்பிடித்த ரசிகர்களிடம், “ மகுடி வாசிக்கிறது திருவெண்காட்டுப் பிடாரன் வேலை.அங்கே போங்க” என்று கடுப்படித்தாராம்.)
சரி. அது போகட்டும்.
இருந்தாலும் அபாயச் சங்கிலியை இழுக்கும் பிள்ளைவாளின் சாகஸ மனசுக்கும், தவில் வித்வான்களிடம் அபராதத் தொகையைக் கொடுத்துவிட்டு இறங்கிச் செல்லும் நேர்மைக்கும், அவரது ஒப்பற்ற தோடிக்கு இணையான ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தக் கட்டுரைகளில் நான் ரசித்த வரிகளை எல்லாம் இடம்சுட்டி பொருள் விளக்கி இருக்கிறேன். அதுதான் எழுதுபவன் ரொம்பவும் விரும்புகிற உரைகல்.
இவற்றை மட்டும் படித்த ஒரு ரசிகர் வெறிகொண்டு -மதயானையை அடக்க மாட்டார்- இந்தப் புத்தகத்தை வாங்கிவிடுவார் என்று வெற்றிலையில் மை போட்டு என்னால் சொல்லமுடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
’அந்த சமயத்திலே அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்ன செய்வாங்க?’
‘அது தீர்ந்து புதுப் பென்சில் கேட்டால், பழைய ’எலிப்புழுக்கைப்’ பென்சிலைக் கவனமாகக் கையில் வாங்கி, ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, ‘இன்னும் ஒரு வாரம் ஓட்டலாம். அடுத்த வாரம் புதுசு தரேன்’ என்று சொல்லுவார்’.
‘நான் வழக்கமாகக் கோவிலுக்குப் போவதில்லை. நானேதான் கடவுள் (அஹம் ப்ரும்மாஸ்மி) என்று அசட்டுத்தனமாக நினைத்துக்கொண்டிருந்த காலம்.
’பத்ம தீர்த்தத்தில் குளிச்சால், ஸ்ரீபத்மநாபன் கடாக்ஷிச்சு வெச்சு எழுதான் மேச வேண்டா’- ( எத்தனை பேர் தனியாகப் பொருள் கேட்டாங்க மணி சார்?)
’போன் பண்ணிவிட்டு அதற்கான 25 பைசாவைக் கொடுக்கும்போது, மரியாதையுடன் மறுத்துவிட்டு, ‘ உங்களை நேற்று டிவியில் பார்த்தேன்’ என்று கடைக்காரர் சொல்வது எல்லாம் எனக்குப் பெருமையாக இருந்தது.’
‘கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரூ’ என்று பாடவில்லை. காரணம் சேரன் படம் பிறகுதான் வெளியானது!’
‘அன்னா அந்த பிளாஸ்கிலிருந்து வெள்ளி டம்ளர் வளி உள்ளே போகுல்லா, அதுதான் தோடியாட்டும், காம்போதியாட்டும், கல்யாணியாட்டும் வெளீல வருது!’
‘யாராவது அவரிடம் காலில் கான்ஸர் வந்திருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்டால், ‘ரெண்டு நாள் ஜாம்பெக் தடவுங்கோ. சரியாப் போயிடும்’ என்று நம்பிக்கையோடு சொல்லுவார்!’
’இரு பெரிய கண்களில் இருந்து குடம் குடமாகக் கொட்டும் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்கள்...........உள்ளே போன க்வாட்டருக்கு வஞ்சகமில்லாமல் ‘கல்யாணந்தான் கட்டிக்கிட்டு’ மெட்டுக்கு சிம்பு ஆட்டம் ஆடும் இருபதுக்குக் குறையாத இளைஞர்கள்’
’அதற்குப் பின் அவர் யாருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்ததில்லை.’
‘போகும்போது ஒரு சிறிய தொகையை சன்மானமாக ஒரு உறையில் போட்டு அவர்கள் கையில் அசட்டுச் சிரிப்புடன் திணிப்பது’
‘ஒரு தேதியில் நடக்காத, ஒத்திவைக்கப்பட்ட நாடகத்துக்கு பார்க்க வராமலே, ‘WellDone Vaithi Flops!' என்று தலைப்பிட்டு ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதியிருந்தார்.’
(தலைமையுரையைக் காரிலேயே மறந்து வைத்து விட்டு, கர்நாடக சங்கீதத்துக்கும் கர்நாடகாவிற்கும் வித்யாசம் தெரியாமல் ஒருமணி நேரம் கர்நாடகா குறித்து சுற்றுலாத் தகவல்களை வாரி வழங்கிய மந்திரி ஹெச்.கே.எல்.பகத் குறித்த தகவல் ஜோர்.)
’சுப்புடு உட்டியானா, நௌலி செய்தாரென்றால் அவரது வயிறு முதுகெலும்பைத் தொடும்’
‘தண்டி பின்னண்டை இருக்கணம்’
‘நாறோலுக்குத்தானே போறாய்? வறோது ஒரு கொலை மட்டிப்பழம் வாங்கிண்டு வா. உங்க ஊர் மட்டிப்பழம் சாப்ட்டு நாளாச்சு’
‘ஏ கோபாலகிஷாங், மட்டிப்பழம் எடுத்துக்கோ. நன்னா வெளிக்குப் போகும்’
‘ஏய்ய்ய்! வேண்டாம்...அப்பறம்...பீச்சும்’
(மேலேயுள்ள நாலு வசனங்களில் செம்பையை உயிரோடு நிறுத்திவிட்டார் செம்பைக்கே உரித்தான பட்டவர்த்தனத்துடன்)
’சந்தானத்துக்கு ‘நான்தான் Boss' என்பதைத் தூங்கும்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும்’.
’தலைக்குத் தேய்த்த கடலை மாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ, அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னி.’
'You drink your Pissky; Let me drink my Whisky!'
‘உடம்பில் பொட்டுத் துணியில்லாமல், போனால் போகிறதென்று காலுக்குச் செருப்பு மட்டும் அணிந்து கொண்டு, நடனமாடும் பெண்களை ஓரிரு தடவைக்கு மேல் பார்க்க முடியாது.’
‘பெரிசுகள் உரக்க சிலோன்லருந்து திருவந்தரம் போறான் என்று தெரிந்தது போல் சொல்வார்கள்’
‘இங்கு நான் திரையுலகில் எதிர்கொள்ளும் ஒரு டார்ச்சரைப் பற்றியும் சொல்லவேண்டும்...........திரையுலகில் தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது.’
'அவன் தந்தை சங்கோஜப்படாமல் சாப்பிடு என்பதை இப்படிச் சொன்னார்: ‘Beta, This is your house. Eat Shamelessly'
'தேவையே இல்லாமல், ‘Note down my Residence number' என்று படுத்துவார்கள்’
’இன்றைய இந்தியன் ரயில்வேயைக் குறை கூறுபவர்கள் சிவன் கோவிலில் விளக்கணைத்த பாவத்துக்கு ஆளாவார்கள்.’
‘வெயில் காலத்தில் மூன்று பகல் இரு இரவு நேரங்கள் தூங்காமல் உட்கார்ந்து கொண்டே வருவது பிரயாணமல்ல, நாம் வளர்ந்த கிராமத்தை விட்டு தில்லிக்கு ஓடிவந்ததால் கடவுள் நமக்கு அளித்த தண்டனை.’
‘ஐம்பதுகளில் நான் மட்டுமே தில்லியிலிருந்து பார்வதிபுரம் வரை போகத் தரை மார்க்கத்தில் உபயோகமாகும் எல்லாவித வாகனங்களையும் பயன்படுத்தியவனாக இருந்திருப்பேன்.’
‘சென்ட்ரலில் இறங்கியபின், அப்பிய கரிப்பொடியே , தசாவதாரம் பூவராகன் போலிருக்கும் பயணிகளையும், அழைத்துப் போக வந்தவர்களையும் வித்தியாசம் காட்டிவிடும்.’
‘நாங்கள் ஆபீசுக்கு லேட்டாகப் போனால், ஆபீஸ் எங்களை விட்டுவிட்டு ஓடிவிடும்.’
‘E.P.D.P.யா? - (இலை போட்டு தண்ட புண்டமா)? இல்லை T.P.D.P.யா? - (தட்டு போட்டு தண்ட புண்டமா)?’
‘மூன்று இரவு- இரு பகல் பிரயாணத்துக்குப் பிறகும் எப்போது சென்னை வந்து சேரும் என்பது அப்போதைய ரயில்வே மந்திரி ஜக்ஜீவன் ராமுக்கே தெரியாது.’
’கரண்டியா அது? பாதாளக் கரண்டி. எங்கிருந்துதான் கெடச்சிதோ? ஒழக்குப் பொடி கொள்ளும் நம்பாத்துப் படி. எறங்கறோதே அவ இதை மறந்துருவா. எனக்குத்தான் ஓர்மையிருக்கும்’
‘இது ஸ்டேன்ஸ் காப்பி. அவ அய்யனார் காப்பியைத் தருவா. இதையெல்லாம் கேக்கப்படாதுரா, பக்கத்தாத்துல இருக்கா...........பாவம்.............இல்லாமைதானே காரணம்’
’ஐயா, நீங்க இந்த ஊருக்கு வரும்போது உங்களுக்கு என்ன வயசு?.................இந்த வயசு வித்தியாசம் அவங்களுக்கும் உண்டுமில்லியா?’
’இன்னும் கொஞ்சம் நின்றால் என் காலில் வேர் பிடித்துவிடும் என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது.’
‘பாபாவில் ரஜினி ஒரு முத்திரை காண்பிப்பாரே - ஆள் காட்டி விரலையும் சுண்டு விரலையும் நீட்டி மற்ற விரல்களை மடித்து- அந்த முத்திரையைக் குறுக்கே வைத்தால் உள்ள அளவுதான் பாட்டியாலா பெக்.’
‘போய்விட்டு வந்து ஆறுமாதத்துக்குப் பிறகும், நேரில் பார்ப்பவர்களிடம், தன் சிலோன் விஜயத்தைப் பற்றி அரைமணி நேரம் அறுக்காமல் விடமாட்டார். யாரும் அவர் எதிரே மாட்ட பயப்படுவார்கள்’
‘உலகத்தில் உள்ள அனைவருமே தூக்கத்தை மறந்து என் நாடகத்தைக் கேட்க ரேடியோ பெட்டிகள் முன் உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்வேன்.’
‘ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குப் போகும்போது, குனியாமல் பேசிக்கொண்டே மைக்கில் பேப்பர் சலசலப்பு சத்தமில்லாமல் கீழே நழுவ விடுவது ஒரு கலை.’
‘இந்த ரூ.20க்கான Government of India காசோலைக்கு ராஷ்டிரபதி பவனில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் குடியரசுத் தலைவரைத் துணைக்குக் கூப்பிட்டு For and on behalf of President of India சார்பில் Accounts Officer கையெழுத்து போட்டிருப்பார்.’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இத்தனை வசனங்களுக்கும் மசியாத கல்லுளி மங்கர்களுக்காகவும், மங்கிகளுக்காகவும் இன்னும் சில புரட்டாசி ஆஃபர்கள்.
1. தில்லியில் குப்பை கொட்டக் கீழ்க்கண்ட ஏழு திறமைகள். (நூறு ரூபாய் செலவு செய்து புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்க.)
2. சுஜாதா லோலோவென்று இல்லாத மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்குக்கு அலைய விட்டது போல் இல்லாமல், மேலே உள்ள பத்தியைப் படித்து நூறு ரூபாய் நிஜமாகவே செலவு செய்தவர்களுக்கு 109ம் பக்கத்தில் அசலாகவே ஒரு சமஸ்க்ருத சம்போக ஜோக் இலவசம்.
3. விமானத்தில் எகானமி வகுப்பில் போகாமல் ஃபர்ஸ்ட் க்ளாஸில் போவதற்கான வினோத் சொல்லும் வினோத காரணம் 110ம் பக்கத்தில்.
4. அவரது லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் DLO 7727ல் பின்னால் உட்கார்ந்து பயணிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்த 16க்கும் மேற்பட்ட பிரபலங்கள் யார் யார்?
5. கணக்குப் பாடம் வேப்பங்காயாகக் கசந்த அனுபவத்தை அவசியம் கேளுங்கள். இல்லாவிட்டால் யம லோகத்தில் அவரை எண்ணெய்க் கொப்பரையில் தள்ளிவிடும் அபாயம் உண்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்ணாவுடன் பார்த்த சினிமாக்கள், பொங்ளாதேஷில் இவருக்கு சின்னவீடு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம், இவருக்கும் முஜீபுர் ரெஹ்மானுக்குமான உருவ ஒற்றுமை, வடசேரி குண்டுப்போற்றி ஹோட்டல் ரசவடை -இவையெல்லாம் மட்டும் இருவேறு இடங்களில் சொல்லப்பட்டிருப்பவை. க.நா.சு. சாப்பிடும் டபுள் ஸ்வீட் போல தித்திப்பாகவே இருந்தாலும், அடுத்த பதிப்பில் சரிசெய்து விடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட வெவ்வேறு ப்ரபலங்களோடு பழகியிருந்தாலும் அவர்களின் பதவியையோ, நட்பையோ உபயோகப்படுத்திக்கொள்ளாத கண்ணியம்.
அன்றைக்கு இவரோடு அலுமினியத் தட்டில் கையேந்தி பவனில் தோசை சாப்பிட்டு, இன்றைக்கு ரிலையன்ஸ் சேர்மனாகவும், முகேஷ் அம்பானியின் வலது கையாகவும் உள்ள ரிலையன்ஸ் பாலுவுடன் இன்றும் தொடரும் நட்பு.
ஷேக் ஹஸீனாவுடன் அவரென்று தெரியாமலே அவர் பதவிக்கு வரும் முன் தொடர்ந்த நான்காண்டு கால நட்பு.
தொழில் நிமித்தமாக லண்டனில் இவர் தங்கியிருந்த டார்ச்செஸ்டர் ஹோட்டலில் மொரார்ஜி தேசாயும் தங்கியிருந்த அனுபவம்.
அன்னை தெரசா, ராஜீவ் காந்தியுடன் இவர்களுடனான இரு தனித்தனி விமானப் பயண அனுபவங்கள்.
ஆங் சான் சூ கி தில்லியில் தங்கிப் படிக்கும்போதே அவருடன் உண்டான நட்பு.
நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், நிகம்போத்காட் மற்றும் சிங் இஸ் கிங் கட்டுரைகளில் தொனிக்கும் ஆழமான பார்வை. அந்தக் கட்டுரைகளிலும் தொனிக்கும் எள்ளல் ரசம்.
இவரின் காலத்தை வரலாறாகப் பதிவு செய்த சாதனை ( இன்றைக்கு இதன் அருமை தெரியாது. ஆனந்த ரங்கப்பிள்ளையின் சொஸ்த லிகிதக் குறிப்புகளைப் போல )
சிகரமாக, 27 நண்பர்களின் ஆத்மார்த்தமான பகிர்வுகளோடு வெளியிடப்பட்டிருக்கும் இவர் நட்பின் ஆழம்.
’பாரதிக்குப் பின் பதினான்கு பேர்தான் வந்திருந்தார்களாம்.நான் தில்லியில் இறந்தால் ஆயிரம் பேராவது வருவார்கள். ஐம்பது வருடங்களில் நல்ல நண்பர்கள்தான் என் சேமிப்பு. இப்போது சென்னையிலும் சேகரித்து வருகிறேன்’ என்று சொல்லும் இவரின் எழுத்துக்கள் இந்த நூற்றாண்டில் எழுதப் பட இருக்கும் பல எழுத்துக்களுக்கும் சவாலாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவர் இப்போதைக்குச் சொன்னபடி எழுத வேண்டியவை:
1. ஹெச்.கே.எல்.பகத்தின் தில்லி அட்டூழியங்கள்.
2. ஸ்கூட்டரின் சுயசரிதை (நாஞ்சில் நாடனுடன் எனது விருப்பமும் )
3. உலகப் புகழ் பெற்ற சுந்தரவனக் காடுகள்.
4. இசை குறித்து இன்னும் சில கட்டுரைகள்.
இதை உடனே எழுதி முடித்தால், வெள்ளை யானையைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு. நீங்கள் ஆசைப்படும் உங்கள் நண்பர் குல்னா நியூஸ்பிரிண்ட் ஷாஜஹானுடன் பேச நான் ஏற்பாடு செய்வேன். டீல் ஓக்கேதானா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பிழிந்து கொடுத்த தோடி ராகச் சாறை ஆயிரம் தடவைக்கு மேலாகக் குடித்திருக்கும் பாரதிமணிக்குத், தான் முறையாகக் கர்நாடக இசை கற்றுக்கொள்ளவில்லையே என்ற குறை இருக்கிறது.
ஆனால் அவர் கற்றுக்கொண்டிருந்தால், ஒருவேளை தில்லி போகாதிருந்திருக்கவும், ஒருவேளை க.நா.சு.வின் மாப்பிள்ளையாய் இல்லாதிருந்திருக்கவும், ஒருவேளை இத்தனை ப்ராபல்யங்களோடு பழகாதிருந்திருக்கவும், ஒருவேளை நாமெல்லாம் இப்படி ஒரு அற்புதமான வாசிக்கும் அனுபவத்தை இழந்திருக்கவும் கூடும்.
( பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதிமணி - கட்டுரைகள் - உயிர்மை வெளியீடு - ரூ.110/ - 192 பக்கங்கள் )