18.9.12

வேண்டாம் 71 (அல்லது ) உலக நீதி - III


உலகநீதியின் இறுதிப் பகுதி இது. 51ல் இருந்து 71 வரை செல்கிறது.

இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பில் வாசிக்கலாம்.

http://sundargprakash.blogspot.com/2012/09/71.html
http://sundargprakash.blogspot.com/2012/09/71-ii.html

51. தயவு தாட்சண்யமில்லாமல் பிறருக்குத் துன்பம் உண்டாக்க வேண்டாம்.

52. கண்ணால் பார்க்காத ஒன்றைப் பார்த்ததாகப் பொய் சொல்ல வேண்டாம்.

53. பிறர் மனம் புண்ணாகும்படியான வார்த்தைகளைப் பேசவேண்டாம்.

54. முதுகுக்குப் பின்னே குறைகூறும் அற்பர்களோடு சேர வேண்டாம்.

55. தன் வீரத்தைத் தானே மெச்சிக்கொள்பவர்களோடு சேர வேண்டாம்.

56. வீண் வழக்கு வாதங்களில் நேரத்தைச் செலவழித்து அழிய வேண்டாம்.

57. பேச்சுசாமர்த்தியத்தைக் காட்டி கலகம் செய்து திரிவது வேண்டாம்.

58.  கடவுளையும், கடவுள்த்தன்மையையும் ஒருபோதும் மறக்கவேண்டாம்.

59. உயிரே போகும் என்றாலும் பொய் சொல்ல வேண்டாம்.

60. வீண்பழி சுமத்தி அவமதித்த உறவினர்களுடன் உறவு கொள்ளவேண்டாம்.

61-65. சலவை செய்பவர், சிகைதிருத்துபவர், சகல கலைகளையும் கற்றுத் தந்த ஆசிரியர், தொப்புள் கொடியை அறுத்த மருத்துவர், பெரும் நோயைத் தீர்த்த மருத்துவர்- இவர்களின் கூலி அல்லது சம்பளத்தை இனிய வார்த்தைகளுடன், நன்றியறிதலுடன் கொடுக்க வேண்டும். கொடுக்காதவர்களுக்கு யமதர்மனின் தண்டனை நிச்சயம் என்பதால் அவற்றை நிறுத்தி வைக்க வேண்டாம்.

[மிகுந்த சுவாரஸ்யமான இந்த 11 ஆவது பாட்டை மட்டும் எழுதாது விட முடியவில்லை.

முதல் இடுகையில் எழுத விடுபட்ட மற்றொரு யூகம். ஒவ்வொரு விருத்தத்திலும் வள்ளியின் மணவாளனை வணங்கும் உலகநாதர், நிச்சயமாக திருச்செந்தூருக்கு அண்மையில் வசித்தவராகவே இருப்பார் என்பது அது.

இந்தப் பாடலில் உபயோகித்துள்ள ‘அஞ்சு பேர்’ எனும் உபயோகம் அவர் மிக நெருக்கமான 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்ற விதையையும் தூவுகிறது.

அஞ்சுபேர் கூலியைக்கைக் கொள்ள வேண்டா
அதுஏதுஇங் கென்னின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி
சகலகலை யோதுவித்த உவாத்தி கூலி
வஞ்சற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மாநோவுதனைத் தீர்த்த மருத்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ? ஏமன் தானே.]

66. ஒற்றுமையான குடும்பத்தை சிறிய தவறுகளைப் பெரிதாக்கி, வஞ்சனை செய்து பிளக்க வேண்டாம்.

67. தன் கொண்டைக்குப் பூ வைத்துக்கொள்வதற்குத் தேடி அலைய வேண்டாம்.

68. பிறருக்குப் பழியுண்டாகும் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

69. இழிவான காரியங்களைச் செய்யும் துர்க்குணம் படைத்தவர்ளுடன் சேர வேண்டாம்.

70. சகல வல்லமையும் கொண்ட தெய்வத்தை இகழ வேண்டாம்.

71. வாழ்வில் அனுபவமும், மதிப்பும் மிக்க பெரியவர்களை வெறுக்கவேண்டாம்.

இந்த எழுபத்தியொரு அறிவுரைகளைத் தன் வாழ்வில் படித்த, பட்ட, பார்த்த அனுபவங்களின் சாரமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. சக மனிதர்களுக்கு முன்னால் போகும் சாலை நேரானதல்ல. அவற்றில் எங்கெங்கு மேடு பள்ளம், நெளிவு சுளிவு இருக்கிறது என்பதை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கும் மேன்மை தெளிவாய் விரிகிறது.

பனிரெண்டு எண்சீர் விருத்தத்தின் ஒவ்வொரு இறுதி அடியிலும் முருகப்பெருமானை வாழ்த்திய பின்பே அடுத்த பாட்டிற்குச் செல்கிறார். கடவுள் நம்பிக்கையைத் தாண்டி நமது நாட்டுக்கு மட்டுமே உரித்தான உடலின் அநித்யத்தைத் தன் நாளின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்தும் தத்துவச் செழுமை அபாரமானது.

பதிமூன்றாம் பாடல் தன்னைப் பற்றிய குறிப்போடும், இந்த உலகநீதியை வாசிப்பதாலும், பின்பற்றுவதாலும் உண்டாகும் நூற்சிறப்போடும் முடிகிறது.

(பாடுப்பட்டுப் பலவகைச் செல்வம் தேடி வாழ்ந்த புலவனாகிய உலகநாதன் எனும் நான், அறுமுகனைப் பாடுவதற்காகக் கற்ற தமிழால், அவனின் திருவருளால் இந்த உலகநீதியைப் பாடினேன்.

இதை நேசித்துக் கற்பவர்களும், கருத்தறிந்து கேட்டவர்களும், எப்போதும் ஞானத்தால் உண்டாகும் இன்பத்தை அடைந்து புகழோடு உலகம் உள்ள வரை வாழ்வார்கள்.)

இந்த விழுதின் வேரான உகலநீதி தந்த நம் முப்பாட்டன் உலகநாதனை வாழ்த்துவோம்.

சிறு வயதில் வாசித்த "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" இங்கே வாசிக்கத் தோதாய்.

 http://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிந்தும் சேமித்தும் கொண்டேன்... மிக்க நன்றி...

Template மாற்றி விட்டீர்களோ... நல்லா இருக்கு....

G.M Balasubramaniam சொன்னது…


எனக்கு நினைவுக்கு வருகிறது. அரக் கோணத்தில் நாங்கள் வசித்தபோது அருகில் ஒரு குடிசையில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்குதான் இந்த உலக நீதியாகிய “ ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் “ எனும் போதனைகள் காதில் விழும். இயற்றியவர் யார் என்று சிந்தித்துப் பார்த்ததே கிடையாது. பிற்காலத்தில் இவையெல்லாம் மூதாட்டி ஔவையின் மொழி என்றெ நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மை உணரவைத்த பதிவுக்கு நன்றி. சுந்தர்ஜி.

நிலாமகள் சொன்னது…

இய‌ன்ற‌வ‌ரையேனும் க‌டைபிடிக்க‌ வேண்டும். அறியாம‌ல் செய்வ‌து த‌வ‌ற‌ல்ல‌. அல்லாத‌ன‌வ‌ற்றை அறிந்தும் அறியாத‌து போல் செய்வ‌து கூடாத‌ல்ல‌வா. ஒவ்வொரு 'வேண்டாம்'க‌ளையும் உண‌வுக்க‌வ‌ள‌ம் போல் ம‌ன‌திலிட்டு இதுநாள் வ‌ரை இப்ப‌டியிருந்தோமா என‌ ம‌ன‌சாட்சிக்கு நேராய் சிந்திப்ப‌தும் ந‌ல‌ம்.

சக்தி சொன்னது…

முந்தைய அமைப்பே எனக்குப் பிடித்திருந்ததோ ....
எப்படி இருந்தாலும் அழகுதான் ..!!இத்தனை
பொக்கிஷமும் தேடிப்பிடித்து நினைவூட்டும் அரிய பணிக்கு வெறும் சபாஷ் போதாது...

RVS சொன்னது…

நீதியரசருக்கு நன்றி! :-)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...