12.9.12

வேண்டாம் 71 - (அல்லது ) உலக நீதி - ( II )


இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://sundargprakash.blogspot.in/2012/09/71.html

வேண்டாம் - 71ல்  இருபது பார்த்தாச்சு.

இப்ப 21ல் இருந்து ஒரு 50 வரைக்கும் பார்க்கலாமே!

21. கற்றவர்களை, ஒருநாளும் தராதரமின்றிப் பழிக்க வேண்டாம்.

22. நெறிதவறாப் பெண்களை தவறான எண்ணத்தோடு அணுக வேண்டாம்.

23. ஆள்பவனைத் தாறுமாறாய் விமர்சிக்க வேண்டாம்.

24. கோயில் இல்லாத ஊரில் வாழவேண்டாம்.

25. மனைவியை விட்டுப் பிற பெண்களைத் தேடி அலைய வேண்டாம்.

26. மணந்த பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

27. மீண்டு வரமுடியாத இழிவான செயல்களில் வீழ வேண்டாம்.

28. கடும்போரில் இறங்கியபின், புறமுதுகு காட்டிப் பின்வாங்க வேண்டாம்.

29. குணத்தால் இழிந்த மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.

30. சூழ்நிலையால் தாழ்ந்தோர் மனம் வருத்தும்படி குறை காண வேண்டாம்.

31. வாய்ச்சவடால் பேர்வழிகளின் வார்த்தைகளுக்குப் பின்னால் போக வேண்டாம்.

32. நம்மை மதிக்காதவர்களின் வீட்டுப்படியைக் கூட மிதிக்க வேண்டாம்.

33. அனுபவத்தால் மூத்தவர்களின் அறிவுரைகளை ஒதுக்கி, மறக்க வேண்டாம்.

34. சகிப்புத்தன்மையற்ற, முன்கோபக்காரர்களுடன் தொடர்பு வேண்டாம்.

35. வித்தை கற்பித்த குருவுக்கு, தக்ஷிணை தராமல் இருக்கவேண்டாம்.

36. வழிப்பறிக் கொள்ளைக்காரர்களோடு நட்புக் கொள்ள வேண்டாம்.

37. நன்மை, தீமைகளை ஆராயாமல் எந்த ஒரு செயலிலும் இறங்கவேண்டாம்.

38. பொய்க்கணக்கு எழுதி ஏமாற்றி வஞ்சகம் செய்ய வேண்டாம்.

39. பகைவர்களுக்கு இடையிலான போர்க்களத்தில் நுழைய வேண்டாம்.

40. பொது நிலத்தில் சட்டவிரோதமாக ஒருநாள் கூட இருக்க வேண்டாம்.

41. ஒரே நேரத்தில் இருதார வாழ்க்கை தேடவேண்டாம்.

42. பலமற்ற எளியவர்களோடு பகை கொள்ள வேண்டாம்.

43. சேரத் தகாத மனிதர்களோடும், இடங்களிலும் சேர வேண்டாம்.

44. பிறர்செய்த உபகாரத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.

45. ஊருக்குள் கலகம், புரளி போன்றவைகளை உண்டுபண்ண வேண்டாம்.

46. உற்றவர்களை எந்தக் காரணத்திற்கும் அலட்சியப் படுத்தவேண்டாம்.

47. பெறுவதற்கரிய புகழ் உண்டாக்கும் செயல்களுக்கான வாய்ப்புக்களை நழுவவிட வேண்டாம்.

48. யாரோ ஒருவருக்குப் பிணையாகி, அவரால் விடுபட முடியாமல் திரிய வேண்டாம்.

49. எந்த மண்ணில் வாழ்கிறோமோ, அந்த மண்ணையே குறை சொல்லவேண்டாம்.  

50. யார் மீதோ உள்ள வெறுப்பில், வீணாக சண்டையிட்டுத் திரிய வேண்டாம்.

( தொடரும் ) 

5 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

இவ‌ற்றையெல்லாம் செய்ய‌ வேண்டாம் என‌ச் சொல்லும் உல‌க‌நாத‌ன் எதையெதைச் செய்ய‌ வேண்டுமென்றும் எழுதி வைத்திருப்பாரோ... எந்த‌ ஜி அதை வெளிக்கிள‌ப்பி யாவ‌ருக்குமான‌தாக்குகிறாரோ...! அற‌வுரைக‌ளை அவ்வ‌ப்போது ப‌டிப்ப‌தும் பார்ப்ப‌துமான‌ இட‌த்தில் எழுதி வைப்ப‌தும் ந‌ல்ல‌ சேவைதான். த‌றிகெட்டு ஓட‌த் துவ‌ங்கும் காளைக‌ளை வ‌ண்டியோட்டி மூக்க‌னாங்க‌யிறை இழுத்து க‌ட்டுப்ப‌டுத்துவ‌து போல‌...

இரசிகை சொன்னது…

:)

thodarha....

சக்தி சொன்னது…

நம் முன்னோர் உலகை அலசியிருக்கும் விதமும் பதிவு செய்திருக்கும் விதமும் பிரமிக்கத்
தக்கது.ஜி ,எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்லாக் காலத்தில் உருவாகி நிலைத்திருக்கும்,
இதுபோன்ற பொக்கிஷங்களை இன்றைய மேலான நுட்பங்களின் காலத்தில்
புறக்கணித்துத் தொலைத்துவிடுவோமோ என்ற அச்சம் என்னை அலைக்கழிப்பதுண்டு.
பிரம்மாண்ட சிற்பக்களஞ்சியங்களை (பலன் தரும் என்ற பெயர் கிடைக்காதவை)
புறக்கணித்துவிட்டு,
சந்துக்கு சந்து ஒட்டுத் திண்ணை போலவாவது ஒரு குட்டிக்கோயில் எழுப்பும் வழக்கத்தை
இதிலும் தொடர்கிறோமே...
வளர்க உங்கள் முயற்சி....

G.M Balasubramaniam சொன்னது…


சில வேண்டாம்கள் சிந்திக்க வைக்கின்றன. உ-ம் 23, 26... 48...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்... நன்றி...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...