ஹரித்வாரா? ஹரத்வாரா? அது ஹர் த்வார்; எனில், அனைத்துக்கும் வாயில். பத்ரி, கேதார் மட்டுமின்றி, ரிஷிகேஷிலிருந்து துவங்கிப் பலப்பல திருத்தலங்களுக்குத் தலை வாசலாக விளங்குகிறது ஹர் த்வார். (ஹர்- அனைத்துக்கும்; த்வார்- வாயில்). எத்தனையோ அமைப்புகளின் ஆச்ரமங்கள் உள்ளன. தங்குவதற்குக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. கட்டணங்கள் மலிவுதான். ஏராளமான உணவு விடுதிகள். ஆலு பராட்டாவும் தயிரும், சுடச்சுட குலாப் ஜாமுனும் ஆஹா!
எத்தனையோ படித்துறைகள் இருந்தாலும் ’ஹர் கி பௌடி’ அதாவது ‘ஹரியின் பாததூளி’ என்னும் கட்டம் மிகவும் பிரசித்தியானது. கட்டவிழ்ந்து ஓடும் கங்கை, யாத்ரிகளின் வசதிக்காகத் தேக்கித் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பழைய மணிக்கூண்டு அலங்கரிக்கும் ஒரு நீளத் திடல் கங்கையை இரண்டாகப் பிரிக்கிறது. இடப்புறம், பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.
அங்கே பெரும்பாலும் இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்கிறார்கள். பண்டாக்கள் பிடுங்கித் தின்கிறார்கள் என்பதெல்லாம் பொய். க்ரெடிட் கார்ட், செல் கம்பெனிக்காரர்களைக் காட்டிலும் எதுவும் கொடுமையாக இல்லை. அவரவர் வசதிக்கேற்பச் சடங்குகள் செய்து கொள்ளலாம். பாதையிலிருந்து இறங்கிப் படித்துறைக்குச் செல்ல வேண்டும்.
எப்போதும் கூட்டமாக இருக்கும் குறுகிய சாலைகள். திடீரென்று மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய், மக்கள் முகங்களில் பீதி கலந்த பிரகாசம். என்னவென்று பார்த்தால், பிரும்மாண்டமான குரங்குகள் சாரிசாரியாக மட்டுமின்றி, ஜோடிஜோடியாகக் கைகோர்த்துக்கொண்டு சாலையைக் கடந்து கொண்டிருந்தன. யாரும் சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்தார்கள்! அவசியமற்ற எச்சரிக்கை. எவன் வாயைத் திறப்பான்? குரங்குகள் நம்மைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
வழியெங்கும் பிச்சை கேட்கிறார்கள். சாதுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பார்வை சந்தித்தால் பார்வையாலே பிச்சை கேட்கிறார்கள். பாரதியின் அச்சமில்லை பாட்டில், ‘பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்’ என்றொரு வரி வருகிறது. நம் நாட்டில், பிச்சையெடுத்தல் இரண்டு விதம். முதல் ரகத்திற்குப் பெரும்பாலும் வறுமையே காரணம்; சோம்பலே காரணம் என்று நினைக்காதீர்கள்! வீட்டை விட்டு ஏதோ காரணத்தினால் விலக்கப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்களும் இதில் உண்டு.
பிச்சை போடுவதால்தான் அது வளர்கிறது. அதை நாம் ஊக்குவிக்கக் கூடாது, அது ஒரு எத்து வேலை என்றெல்லாம் அறிவார்ந்த போதனைகள் அன்றாடம் கேட்கிறோம். கூட்டம் போடுவோம். கூடி விவாதிப்போம், சட்டங்கள் இயற்றுவோம். அதற்கு முன்னால், நீட்டிய கரத்தில் காசோ சோறோ துணியோ போட்டு விடுவோம். இரப்பாரைக் காட்டிலும் இடாதாரே ‘சிறுகுலத்தோர்’ அல்லவா?
இன்னொரு ரகம் சன்னியாசம். துறவு, பொதுவாய் இருவகைப்பட்டது. ஒன்று, வைராக்கியம் ஏற்பட்டபின் மேற்கொள்ளப்படும் துறவு. இன்னொன்று, வைராக்கியம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படும் துறவு. இந்த இரண்டு ரகத்தாரையும் நம் நாட்டின் திருத்தலங்களில் காணலாம். ஒரு காலத்தில், அரசர்கள் ஒரு கட்டத்தில், ஆட்சிப் பொறுப்பை மகனுக்கோ (தகுதியுடையவனாய் இருந்தால்) அல்லது பொறுப்புள்ள ஒருவருக்கோ தந்துவிட்டுத் தவம் புரியச் செல்வார்கள். அரண்மனையை விட்டுவிட்டு ஆரண்யம் புகுவார்கள். செல்வத்திலும், சிறப்பிலும் இருந்தவர்கள் வலிந்து வறுமையைத் தழுவுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கின் தாக்கத்தை இன்றும் - கவனித்தால் - காணலாம்.
ஹர்த்வாரில், சாதுவுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ பிரச்சினையில்லை. ஒவ்வோர் ஆச்ரமத்திலும் மூன்று மூன்று நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மடங்களும், சத்திரங்களும் உள்ளன. பலவிடங்களில், படித்துறையிலேயே இலவசமாக ரொட்டி வழங்குகிறார்கள். போதாதா?
ஒரு டீக்கடைக்குப் பின் உட்கார்ந்திருக்கிறேன். கங்கையில் கால் நனைத்தபடி. மாலை நேரம். பளபளக்கிறாள். ஆடிக்கொண்டிருக்கும் என் கால்களுக்குத் தங்கக் கொலுசு போட்டு மகிழ்கிறாள். எதையும் விழையாத ஒரு மனோபாவம்; தேவைகள், கோரிக்கைகள் யாவும் தீர்ந்து போன நிம்மதியில் நேர்ந்த வினோதக் களைப்பு; எக்களிப்பற்ற ஏகாந்தம். மெல்ல மெல்ல, வானும், கரைகளும், படித்துறைகளும், நகரின் விளக்குகளும், மக்களும், அரவங்கள் அத்தனையும் மெல்ல மெல்ல மங்கி மறைகின்றன. வெட்டவெளியில் நிலைகுத்திப்போய், பார்வை செயற்படாத கண்களின் எதிரே, கற்றை மின்னலும் ஒற்றை நிலவும் குலவி நெய்த எழிலோவியமாய் எதிரே கங்கை எழுந்து நிற்கிறாள். பார்வை வரவர, பனிப்பாதை வளைவின் புகைச்சுருளாய்ப் புன்னகைத்துக் கரைகிறாள். நான் கண்பனித்துக் கரைகிறேன்.
(தொடரும்)

2 கருத்துகள்:
கங்கை நதியோரம் கைபிடித்து அழைத்துசெல்கிறது கவிமொழி.அவ்ர் கரையும் இடங்களில் நாம் தொலைந்து போகிறோம்.
ஈதல்,இரத்தல் குறித்தவிசாரம்,துறவுக்கும் காவிக்கும் பின்விரியும் காரணங்கள்.ஞானத்தேடலுடன் கூடவே காட்சிப்படுகிறது சமூக ஞானம்.
சில்லிடுகிற்து அந்தரங்கம்.
பிச்சையெடுப்பவர்கள் பற்றிய புதிய கோணம் வியப்புடன் தலையசைக்கச் செய்தது. இரக்கம் மேலிட்டது அவர்கள்பால். கடைசி பத்தி வாசிப்போர் கால்களிலும் கொலுசு போட்டது. அருமையாக எழுதுவது மட்டுமல்ல ... எழுதுபவர்களையும் தேடித் தேடி எம்மையும் திளைக்கச் செய்யும் தங்கள் நோக்கம் உயரியது ஜி!
கருத்துரையிடுக