8.9.12

ஒரு புத்தகமும் சில புகைப்படங்களும்


“ சப்தத்துடன் ஓடும் நதி - துள்ளிக் குதித்து ஆரவாரத்துடன் ஓடும் சிறுமியைப் போல் சென்றுகொண்டிருந்தது”  பக்.39ல் கவிதையாய்த் தென்பட்ட இந்த வரிதான் ”கைலாஸ் மானசரோவர் யாத்திரை” என்ற இந்தப் புத்தகத்தை என்னை வாங்க வைத்தது. 

”இதற்கு மேல் ஒரு தீர்த்தயாத்திரை இல்லை” என்ற பெருமையுடன் புராண காலத்திலிருந்தே குறிப்பிடப்படுகிற கைலாஸ் - மானஸரோவர் யாத்திரை அனுபவங்களை மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரும்,” ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்”  மாதப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான ஸ்வாமி கமலாத்மானந்தர் எழுதி அது ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் 1998ல் இருந்து தொடர் கட்டுரையாக நான்கு ஆண்டுகள் வந்தது.

புறப்பட்டதில் இருந்து எங்கெங்கு தங்கினோம், எதையெல்லாம் பார்த்தோம், நம் நாட்டிற்கும் சீனா, திபேத்திற்குமான நேர வித்யாசம் எவ்வளவு, கிடைக்கும் பொருட்கள், இரு இடங்களுக்கிடையேயான தொலைவு, எங்கே நாம் நம்மை எப்படித் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேடினால் கிடைத்துவிடக்கூடிய தகவல்கள் மட்டுமல்ல ஒரு யாத்திரை.   

ஒரு யாத்திரை என்பது எப்படிப்பட்ட அனுபவம்? எத்தனை எத்தனை விதமான ஆன்ம தரிசனங்களையும், பரவசமூட்டும் கோணங்களையும் தந்திருக்க முடியும்? ஆனால் என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள் - இந்த முழுப் புத்தகத்திலும் புறவயமான அனுபவங்களைப் பற்றி மட்டுமே நான் படிக்கமுடிந்தது. 

ஆனாலும் அவர் பார்வையிலிருந்து கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களைக் கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

”பசுபதிநாத் கோயில் நேபாளத்தில் இருந்தாலும் இந்தியர்தான் அங்கே தலைமை பூஜாரியாக இருக்கவேண்டும் என்ற நியதி உள்ளது. சிருங்கேரி சங்கரமடத்தின் பரிந்துரையின் பேரில் தலைமை பூஜாரியை நேபாள மன்னரே நேரடியாக நியமிக்கிறார். இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், நாட்டின் பிரதம மந்திரியையும், பசுபதிநாத் கோயில் தலைமை பூஜாரியையும் மட்டுமே மன்னர் இவ்வாறு நேரடியாக நியமிக்கிறார்”. (பக்கம் 24-25)

”25.5.98 ஒன்றரை மணி நேரம் பிரயாணம் செய்த பிறகு, ஸேன்-போ நதிக்கரையை அடைந்தோம். இந்த நதியே இந்தியாவிற்குள் வரும்போது பிரம்மபுத்திரா என்று பெயர் பெறுகிறது. இந்தியாவிலுள்ள ஆறுகளைப் பொதுவாக ‘பெண்’ என்று கூறுவதே நம் நாட்டு வழக்கம். இதற்கு மாறாக, பிரம்மபுத்திரா ஆறு ஆண் என்று கருதப்படுகிறது” (பக்கம்-56-57)

“கற்கள் சிதறிக் கிடப்பதை எந்த திபேத்தியன் பார்த்தாலும் உடனே அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கத் தொடங்கிவிடுகிறான். பெரிய கற்களைக் கீழே வைத்து படிப்படியாகச் சிறிய கற்களை மேலே வைக்கிறான். அரையடி அல்லது ஓரடி உயரத்தில் இவை கூம்பு வடிவத்தில் வழியெங்கும் உள்ளன. இதற்கு திபேத்தியர்கள் அளிக்கும் விளக்கம் மிகவும் பொருள் பொதிந்தது. இந்தக் கூம்புகள் அவற்றை அமைப்பவனின் பிரதிநிதிகள். தங்கள் பிரதிநிதியாக, அந்தக் கூம்புகள் எப்போதும் கயிலையை வழிபட்டுக்கொண்டிருப்பதாகவும், அந்தப் பலன் தங்களை அடையும் என்றும் திபேத்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள்” (பக்கம்-49)

திபேத்தியர்களின் ஏழ்மையையும், திபேத்தியர்களை அடிமை போல் நடத்தும் சீன அரசின் அநியாயத்தையும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இந்து மதத்தின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்ட ஆலன் மிரன் என்ற ஆஸ்த்ரேலியர் ஒருவருடனான சந்திப்பு மறக்க முடியாதது என்று சிலாகிக்கிறார்.

ஒரு பயணத்துக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறன. அவருடன் சென்ற குழுவினருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ஆபத்து நிறைந்த விறுவிறுப்பான சந்தர்ப்பங்கள், புராணங்களில் இருந்து சுட்டிக்காட்டப்படும் இடங்களின் விவரங்கள் என்று நிறைய இருந்தன.  

ஆனாலும் ஒரு துறவியின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இந்தப் புத்தகம் இன்னும் அதிகமாக உள்வயமாகப் பயணப்பட்டிருக்கும் என நம்பினேன்.

இந்தப் புத்தகத்தைக் கீழே வைத்துப் பல மணி நேரங்களாகியும், என்னை இன்னும் புகை போல் வட்டமிட்டுச் சுற்றிக்கொண்டிருக்கின்றன ஒரு துறவியால் எழுதப்பட்ட கீழேயுள்ள இந்த இரு வாக்கியங்கள்.

“21.5.98 காலையில் எழுந்து வெந்நீரில் குளித்தேன். மீண்டும் இதுபோல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் - யாத்திரை முடிந்து திரும்பி வரும்போதுதான் - சோப்புப் போட்டு நன்றாகக் குளிக்கமுடியும் என்று நினைத்துக்கொண்டேன்.” (பக்கம்-37)

“அந்த ஹோட்டலில் சுமார் 25 நாட்களுக்குப் பிறகு நான் வெந்நீரில் நன்றாகச் சோப்புப் போட்டுக் குளித்தேன்.” (பக்கம்-156)

(கைலாஸ் மானசரோவர் யாத்திரை- சுவாமி கமலாத்மானந்தர்- ஸ்ரீராமகிருஷ்ண மடம்- பக்.185- ரூ.50)

(இந்த கைலாஸ் - மானசரோவர் யாத்திரை வீடியோ கேசட்டாகவும், VCD ஆகவும் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது)

______________________________________________________

தஞ்சாவூர்க்கவிராயர் வீடு திரும்பி விட்டார்.


அவரும் நானும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் சில.



11 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தாங்கள் குறிப்பிட்டது சுவாரஸ்யமாக இருந்தது... (பக்க எண்கள் : அருமை)

படங்கள் மனநிறைவைத் தந்தன... நன்றி...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…


Quite intersting to read. Photos are fine.


With kind regards,

RRR

vasan சொன்னது…

ந‌ண்ப‌ர்க‌ளின் நாடி பிடித்த‌றிந்தார் போல் க‌விராய‌ரை காண‌ வைத்திருகிறீர்க‌ள்.

'ஜிப்பா" இல்லாத‌ "ராய‌ராக‌" (அழுத்த‌ம் அவசிய‌ம்) அருமை.

ப‌ர‌வ‌ச‌ம்..திக் விஜ‌ய‌த்திற்கும், திக் திக் ப‌ய‌ணத்திற்கும்.

ரிஷபன் சொன்னது…

கவிராயரைப் பார்த்து ஆனந்தம்..

வாசன் சொன்னது மிக்க சரி. :)

மோகன்ஜி சொன்னது…

ஒரு வாசிப்பின் அனுபவம் வார்த்தைகளில் பெரும்பாலும் சிக்குவதில்லை. ஒரு துறவியின் பயணத்தை அழகாய் ரசித்திருக்கிறீர்கள்..

கவிராயரை நிழற்படத்தில் கண்டபின் பொன்னம்பலம் நோக்கி கை குவித்தேன்.

அப்பாதுரை சொன்னது…

கவிராயர் நலம் குறித்து மகிழ்ச்சி. படங்கள் நன்று.

மானசரோவர் போக வேண்டும்.

சிவகுமாரன் சொன்னது…

கற்களை அடுக்கி வைக்கும் திபெத்தியர்களின் வழக்கம்.- கயிலையை வணங்குவது போல - ஒரு கல்லாய் இருந்தேனும் கயிலையை தரிசிக்க தவிக்கிறது மனசு.
"சோப்பு போட்டுக் குளிக்க வேண்டும்" - எதையோ சொல்ல வருகிறீர்கள் - சொல்லாமல் எங்கள் கற்பனைக்கே விட்டு விட்டீர்கள்

V Mawley சொன்னது…



தஞ்சாவூர்க்கவிராயர் வீடு திரும்பி விட்டார் என்கிற செய்தியும் , புகைப்படங்களும், மகிழ்ச்சியைதருகின்றன.
அன்புடன் ,
மாலி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மானசரோவர் - கைலாஸ் போக நினைத்திருக்குமிடம்.... அவன் அழைத்தால் நிச்சயம் நடக்கும்!

படங்கள் நன்று. கவிஞர் வீடு திரும்பிய விஷயம் அறிந்து மகிழ்ச்சி....

சுந்தர்ஜி சொன்னது…

அனைவரும் கவனிக்கவிட்டதைக் கூர்ந்து வாசித்திருக்கிறீர்கள் சிவா.

"சோப்பு போட்டுக் குளிக்க வேண்டும்" - எதையோ சொல்ல வருகிறீர்கள் - சொல்லாமல் எங்கள் கற்பனைக்கே விட்டு விட்டீர்கள்.

நான் சொல்லவந்ததைச் சொல்லாமலே பரிந்துகொண்டுவிட்டீர்கள்.

அந்தப் புத்தகம் என்னைப் பொறுத்தவரை ஒரு ஏமாற்றம்.

நிலாமகள் சொன்னது…

திபேத்திய‌ர்க‌ளின் ந‌ம்பிக்கை பிர‌ம்மிக்க‌ச் செய்த‌ செய்தி.

புத்த‌க‌ விம‌ர்ச‌ன‌மென்ப‌து நூலாசிரிய‌ரைப் ப‌ற்றிய‌தொரு துலாக்கோலாக‌வும் இருந்து விடுகிற‌து. எதைத் துற‌ந்து இவ‌ர்க‌ளுக்கு இப்பெய‌ர்? நோகாம‌ல் குட்டியிருப்ப‌து அழ‌கு.

முண்டாசுக் க‌விராய‌ர் க‌ம்பீர‌ம் நிறைவ‌ளிக்கிற‌து. தொல்லையாகி விட‌க் கூடாதென‌ தொலைபேசாம‌லிருக்கும் அபிமானிக‌ளுக்கு வ‌யிற்றில் பால் வார்த்தீர்க‌ள். உங்க‌ளைப் பார்க்காத‌வ‌ர்க‌ளுக்கும் ஒரு வாய்ப்பான‌து கூடுத‌ல் ம‌கிழ்ச்சி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...