31.5.10

பாழ்




தேடுகிறது காற்றின் விசை
பாழடைந்த கோயிலின் எரியாச் சுடரை.

உறைந்திருக்கும் கடவுளால்
சூடப்படாது புதைகிறது மனோரஞ்சிதத்தின் நறுமணம்.

வில்வ மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கிறது
ஏதோ ஓர் அதிகாலை உன்னுதட்டில்
சிந்திய என் பதற்ற முத்தம்.

துருப்பிடித்துக் கிடக்கிறது அதிகாரநந்தியின் காதுகளில்
நிறைவேறா ரகசியங்கள்.

இருளின் பாதாளத்தில் சிறகின்றி மோதுகிறது
வௌவாலின் இலக்கு.

ஆளரவமற்ற கோவிலில்
இறைவன் ஆடுகிறான் ஆனந்தமாய்

பிரார்த்தனைகள் குறித்த
கவலைகள் ஏதுமின்றி.

28.5.10

வார்த்தை




I
பெருங்கடலாய்
விரிந்து கிடக்கிறது
வெற்றுத்தாளின் ஆழ்பரப்பு.
மொழியால் கடக்கிறேன் நான்.
பேரமைதியால் கடக்கிறது சிற்றெரும்பு.

II
காத்திருக்கிறேன்
ஒற்றைக்கால் கொக்கின்
அருகே.
கொக்குக்கு மீன்.
மக்குக்கு வார்த்தை.

III
காலியாக இருக்கிறது
நிரப்பப்பட வேண்டிய வார்த்தைகள்.
மொழியால் நிரப்புகிறேன் நான்.
விழியால் நிரப்புகிறாய் நீ.

IV
யாரோ ஏதோ சொல்கையிலும்
எதையோ எப்படியோ பார்க்கையிலும்
கிடைக்கிறது கவிதையின் வரைபடம்.
இட்டு நிரப்புகிறேன்
விடுபட்ட இடங்களுக்கான வண்ணங்களை.

25.5.10

விவரமற்ற புள்ளி



I
இன்று உஷ்ணம் 45டிகிரி.
போன ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக
லட்சத்திப் பதினொரு மரங்கள் வெட்டப்பட்டன.
வலது கையால் சாப்பிடுவோரின் ஞாபகத்திறன்
சாப்பிடாதிருப்பவர்களை விட நூறு மடங்கு கூடுதல்.
போன வாரத்தைய ஒரு நாளின் மழையளவு
214மில்லிமீட்டர் அல்லது சென்டிமீட்டர்
சாலை விபத்து 56% அதிகரிப்பு.
மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம்
ஆணை விடப் பெண் 32% அதிகம்.
புகைப்போரை விட காசநோயாளர்கள் 51% வாழ்தல் அதிகம்.
தூக்கில் தொங்கிய ஆண்களை விட அறுபது சதம்
பெண்கள் குள்ளமானவர்கள்.

II
பிழியப்பட்ட பழத்தின் சக்கைக்கும்
கழிவறைக் காகிதங்களுக்கும்
நைந்து போன வாழ்க்கைக்கும்
இடையில் சிரிக்கின்றன
யாருக்கும் உபயோகமில்லாப்
புள்ளி விவரங்கள்.

இரு துருவம்




I
உற்று நோக்குகிறோம்
தீபத்தின் சுடரை நீயும்
திரி உறிஞ்சவிருக்கிற
தைலத்தை நானும்.

II
வைக்கப்பட்டிருக்கின்றன
வரவேற்பறையில் மீன்தொட்டியும்
தொலைக்காட்சிப் பெட்டியும்
ஒரு பூங்கொத்தும் தொடர்பின்றி.

III
பெரிய வித்யாசம் எதுவுமில்லை
கழுதைகளை மேய்ப்பதற்கும்
கல்வி கற்பதற்கும் ஆட்சி செய்வதற்கும்.

IV
பெரிய தண்டனை எதுவுமில்லை
சொன்னதைச் செய்யாதிருப்பதற்கும்
சொல்லாததைச் செய்ததற்கும்
சொல்லாமலும் செய்யாமலும் இருப்பதற்கும்.

21.5.10

களவு

கிழிபடாத நாட்காட்டியில் 
மயக்கமாய்க் கட்டுண்டு கிடக்கிறது 
ஓர் அதிகாலை.

பூட்டப்பட்ட வீடுகளையும்
அரவம் மிக்க வீடுகளையும்
பற்றித் திட்டமிடுகையில்
நாய்களின் மோப்பம் குறித்தும்
தப்பும் வழி குறித்தும் 
திட்டமிட வேண்டியதிருக்கிறது.

ஏதோ ஒரு திறவுகோலுக்கும் 
ஏதோ ஒரு சைகைக்கும்
ஒத்துழைக்கும் 
ஒலிகளால் அலுத்த வீடு-
பசித்த பிள்ளை மார் புசிப்பதுபோல்
திகட்டாமல் பருகுகிறது 
கள்வர்களின் நிசப்தத்தை.

நதியின் அடியில் 
உருளும் கற்களும் 
தோற்கிறது
கள்வர்களின் பாதங்களிடம்.

முழுமையாய் ஒரு களவு
உதிர்ந்த பின் பூக்கிறது 
புதிதாய் ஓர் அதிகாலை.

19.5.10

புராதனக் கடிதம்



படியத் துவங்குகிறது 
காலத்தின் தூசி
படிக்கப்படாதிருக்கும் 
கடிதங்களின் மேல்.

மெலிதாய்க் கிளம்புகிறது
ரகஸ்யத்தின் நெடி
பொதிந்த யூகங்கள்
ஒவ்வொன்றிலிருந்தும்.

எங்கேயோ இருக்கலாம்
யாரையோ எதையோ
எதிர்பார்த்திருந்தவனின் நிழல்.

ஒரு நாள் கசியலாம் அல்லது
கசியாது போகலாம்
அடைகாத்திருக்கும்
துவக்கமோ முடிவோ
பயணமோ பிரிவோ
துயரோ பித்தோ.

என்றோ ஒருநாள்
போத்தலில் அடைக்கப்பட்ட
பூதமாய்த் தவிக்கலாம்
காலங்கள் கடந்து வாழும்
பிரிக்கப்படாத கடிதங்களின்
வாசிக்கப்படாத செய்திகள்

இசை



I
இசை வழிகாட்டியது
பார்வையற்றவனுக்குப்
பாதையையும்
பாதையற்றவனுக்குப்
பார்வையையும்.

II
வயலினின்
தந்திகள் அதிர்கின்றன
வாழ்வு போல.
இசை மிதக்கிறது
அமைதியாக
மரணம் போல.

III
நிசப்தத்துக்கும்
சப்தத்துக்கும் இடையில்
மிதக்கிறேன் நான்
வாசிக்கப்படாத ஒரு
இசைக்கருவியாக.

IV
மலையடிவாரம்.
இசை வெள்ளம்.
தனிமை.
தாங்கமுடியவில்லை
இப் பொருத்தத்தை.

V
ஏதுமற்றவனின் இசையில்
நிரம்பியிருந்தது
எல்லாம் பெற்றவனின் செருக்கு.
எல்லாம் பெற்றவனின்
இசையில் நிரம்பியிருந்தது
எதுவுமற்றவனின் வறுமை.

15.5.10

முள்நிலா



வெகு நாளாயிற்று நிலா பருகியும்
நக்ஷத்திரங்கள் பறித்தும்.
கால முட்களின் கூரால்
கிழிபடுகிறதென் பயணத்தின் வரைபடம்.
நம்பிக்கையின் நங்கூரத்தைத் தாக்குகிறது
அவநம்பிக்கையின் சம்மட்டி.
தத்தளித்துக் குற்றுயிர் பற்றி நிமிர்கையில்
புலரியின் கைகளில் மெல்லப் படர்கிறது
நாளையின் பசுங்கொடி.
அதன் முதல் மலர் எழுதத் துவங்குகிறது
என் அடுத்த கவிதைக்கான முதற் சொல்லை.

14.5.10

நளபாகம்


இதைப் படிக்கக் கொஞ்சம் கண்டிஷன்ஸ் போடப்போறேன்.

அ) சுடச்சுட சாப்பிட விருப்பம்.
ஆ) வழக்கமான சமையலைக் கொஞ்சம் மாற்றி வேற ருசியை முயற்சிக்கும் ஆர்வம்.
இ)மற்றவர்களை ஆர்வமாக சாப்பிட வைக்கும் ஆர்வம்.
ஈ)எந்த ஊருக்குப்போனாலும் என்ன ஸ்பெஷல் என்று சொல்லும் அறிவு அல்லது தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் மனம்.
உ)சாப்பிடவென்றே ஊரூராய் ஆட்களைக் கூட்டிக்கொண்டு திரியும் வெறி.

இதெல்லாம் உண்டுன்னு சொல்லி யாரெல்லாம் கையைத் தூக்கறீங்களோ அவங்கல்லாம் இதுக்கடுத்த வரிகளையும் தொடர்ந்து படிக்கலாம். மத்தவங்க- அடையார் ஆனந்த பவனோ,எம்.டி.ஆரோ, க்ருஷ்ணா ஸ்வீட்ஸோ- ஒரு போத்தலில் அடைத்து வைத்திருக்கும் வத்தல் குழம்பையோ வேறு ஏதோ ஒரு வஸ்துவையோ சோற்றில் பிசைந்து உள்ளே தள்ளியபடியே ஒரு டி.வி.சீரியல் பார்க்கக்கடவது.

இது எப்படி எப்படிப் போகும்னு என்னால சரியா பேலன்ஸ் பண்ண முடியல.மொதல்ல எந்த எந்த ஊர்ல எங்கெங்க சாப்டிருக்கேன்னு சொல்லப்போறேன்.அதுக்கப்புறம் எந்த எந்த இடங்களெல்லாம் இப்போ இல்லாமப்போயிடுச்சுன்னும் சொல்லப் போறேன். பீடிகை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கோ. அப்பத்தான் சரக்கு எடுபடும் ஸ்வாமி.
(சிலிண்டர் காலி.நாளைக்குப் பத்த வைக்கிறேன் அடுப்பை.)

ஓரிடம்



மழையானால் உன் முற்றத்தில்
தமிழானால் உன் கவிதையில்
முத்தமானால் உன் இதழ்களில்
சத்தமானால் உன் வசவுகளில்
நாணமானால் விரல் மூடும் உன் முகத்தில்
நடனமானால் உன் பாதங்களில்
காரிருளானால் உன் கல்லறையில்
கடும்போரானால் அபலையே உன் கண்ணீரில்
காற்றானால் வியர்வை கசியும் உன் உழைப்பில்
ஊற்றானால் தாகமுற்றலையும் உன் மிடறில்
சாவானால் வாழும்வரை உன் நினைவில்
வாழ்வானால் சாகும்வரை உன் மடியில்.

13.5.10

நிலை



தேர்ந்தெடுக்கப் பழகுகிறேன்
வர்ணங்களுக்கு மாற்றாய் வண்ணத்துப்பூச்சியை.
பேரருவியை விட சிற்றோடையை.
யாகங்களின் பெருந்தீயை விட
கவனிப்பற்று அலையும் சுடரை.
நிசப்தங்களின் கற்களால்
நிரம்பிய சதுரங்களை விட
நிலா ஒழுகும் சாணக்குடிசையை.
ஒப்பற்ற இசைக்குப் பதிலாக
உயிரசைக்கும் உன் ஒற்றைச் சொல்லை.

12.5.10

நாதோபாசனா


இசையின் கரை முடிவற்றது. அதற்கு கர்நாடகம்-ஹிந்துஸ்தானி-கஸல்-சூஃபி-மேற்கத்திய சங்கீதம்-நாட்டுப்புற சங்கீதம்-மெல்லிசை என்று அடையாளங்கள் தர முடியலாம். ஆனால் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது.

ஒரு விருந்தை ருசிப்பதுதான் சரியான வழி. வார்த்தைகள் தோற்கும் ஒரு உயர்ந்த அனுபவம் காதுகளால் ருசிக்கப்படுவதுதான் சரி.

ஒவ்வொரு முறையும் சிறந்த இசைக்கோவைகளின் தொகுப்பை நான் சில சுட்டிகளின் மூலம் சுட்டுகிறேன். ஆர்வமும்-ரசனையும்-பொறுமையும் உள்ளவர்களுக்கு சொர்க்கம் சமீபிக்கிறது. அடியிலுள்ள சுட்டிகளை மேலே க்ளிக்கி ரசிக்கவும்.

http://www.youtube.com/watch?v=VE78CWP65rg&feature=related
http://www.youtube.com/watch?v=Xb_SaMg7zwE
http://www.youtube.com/watch?v=6xe3p8HhcHQ
http://www.youtube.com/watch?v=2Oq8L_SdAUw
http://www.youtube.com/watch?v=LPWZ7gd_sBc&feature=related

இவை சங்கீதத்தின் ஒரு துளிதான். பாற்கடல் அமுதோடு மீண்டும் மீண்டும் வருவேன் ஊட்டுவதற்கு.

11.5.10

ஆருடம்



I
அசைக்கிறது எப்பொழுதும்
முதல் வார்த்தைக்கான பீடிகையும்
எய்கிற முதல் பார்வையின் வசியமும்.

II
நொடியில் நிகழ்கிறது
ஏற்பதற்கும் மறுப்பதற்குமான தீர்மானம்
சூதாட்டத்தில் தோற்றவனின் தயக்கத்துடன்.

III
விரிக்கும் வலை
நிராசைக்கும் பேராசைக்கும் மத்தியில்
விழுகையில் திறக்கிறது
மாயாலோகத்தின் கதவுகள்.

IV
அழைப்போ மறுப்போ
ஒட்டப்பட்ட சிரிப்போடு
கண்ணுக்குத் தெரியாது
வீசப்பட்டபடியே இருக்கிறது
யாருக்காகவோ வலைகள்.

V
கவிழ்ந்தும் நிமிர்ந்தும்
கிடக்கும் சோழிகள்
நினைவுபடுத்துகின்றன
இரவுநேர நடனக்காரியின் ஆடையை.

8.5.10

கடவுளின் ஒரு நொடி


I
ஒரு தட்டில்
பழங்களும் பிரார்த்தனைகளும்
வைக்கப்பட்டன.
பழத்தைத் தின்றார் கடவுள்.
பழுக்கட்டும் என்று
விட்டுவைத்தார் 
பிரார்த்தனைகளை.

II
அருகே
சென்றது பல்லி.
அசையாதிருந்த
பூச்சி பறந்தது.
பறந்த பூச்சியை
நசுக்கினான் குழந்தை.
சிரித்தார் கடவுள்.

III
எல்லா மொழியிலும்
வந்தன வேண்டுதல்கள்.

புரிந்து போனது
மொழியற்றவனின்
வேண்டுதலும்
வழியற்றவனின்
பிரார்த்தனைகளும்.

கடவுளை உலுக்கியது
பேசமுடியாதவனின்
மொழியும்,
பார்வை கோரியவனின்
விழியும்.

கண்ணாமூச்சி




I
விதிக்கப்பட்டிருக்கிறது
பகலில் துயருறவும்
இரவில் ஆறுதலுறவும்.

II
தோன்றுகிறது
கண்ணனைப் போல 
இரவு.
ராமனைப் போலப்
பகல் என்று.

III

புதிர்களின் முடிச்சாய்ப்
பாய்கிறது 
இருளின் நதி.
கைகளில் அள்ளிய நீராய்
ஒழுகி மறைகிறது
ஒளியின் சுனை.

IV
பகலின் சிறகு
பறந்து களைக்கிறது.
இரவின் சிறகோ
உறங்கித் திளைக்கிறது.

V
ஒளியின் தூரிகை
பூசும் நம்பிக்கையை
ஒவ்வொன்றாய்க்
கலைக்கிறது
இருளின் 

பைசாசக் கைகள்.

VII

மூடியதையெல்லாம்
திறக்கிறது 
ஒளி.
திறந்திருப்பதையெல்லாம்
மூடுகிறது 
இருள்.

VIII

பொறுப்புக்களை
நினைவுறுத்துகிறது 
ஒளி.
அனைத்தையும் மறக்கும்
மதுவைத் திகட்டாது
புகட்டுகிறது 
இருள்.

IX

இருளுக்குள்
ஒளிகிறது பகல்.
ஒளிக்குள்
கரைகிறது இருள்.

X

பகலின் துயர்களைக்
கனவுகளால் மூடுகிறது 
இருள்.
இருள் தந்த கனவுகளைச்
சல்லடையாக்குகிறது 
ஒளி.

XI

அறியாமலே
விடைபெறுகிறது
இருள்.
விடைபெறாது 

நீள்கிறது
பகல்.

XII
சில நாட்களாய்.
ஒத்திகை நிகழ்த்துகிறது
ஒவ்வொரு புலரியும்
வாழ்க்கை குறித்து-
ஒவ்வொரு நிசியும்
மரணம் குறித்து-

XIII
பகலைக் கம்பளத்தால்
போர்த்துகிறது இருள்.
இருளின் ஆடைகளை
இரக்கமின்றி உரித்து
நிர்வாணமாக்குகிறது புலரி.

6.5.10

என் வயோதிகத்தில் குடும்பத்துக்கு ஒரு கவிதை-பை ஜுயி


இப்போது வயது
எழுபத்திஐந்து.
உதவித்தொகைப் பணம்
ஐம்பதாயிரம் செலவழிக்க
இருக்கிறது. என் அருகே
வயதான மனைவி
இருக்கிறாள்.
மிக உன்னதமான கஞ்சியையும்
புதிய சாதத்தையும் சாப்பிட்டபடி
சுற்றி இருக்கிறார்கள் என்
மருமகன்களும் மருமகள்களும்.
என் வீடு சாதாரணமாக இருந்தாலும்
நான் என்னுடைய புதிய ஆடையை
அணிந்திருக்கிறேன்.
என் முழுக்குடும்பமும் என் பக்கமிருப்பது
என் பாக்யம்.
அந்த சாதாரணமான திரைக்குப் பக்கத்தில்
என் படுக்கை மாற்றப்பட்டிருக்கிறது.
என் சிறிய உஷ்ண அடுப்பு நீலத்திரைக்கு
முன்னால் நிற்கிறது இப்போது.
ஒரு பேரன் என்னிடம் ஏதோ வாசிக்கிறான்.
இளம் சமையல்காரன் சூப் தயாரிக்கிறான்.
என் நண்பர்கள் அனுப்பியிருந்தவற்றிற்கு
பதிலாக நான் கவிதைகள் எழுதுகிறேன்.
சில வேளைகளில் மருந்துப் பணத்திற்காக
ஆடைகளை அடகு வைக்கிறேன்.
இந்தச் சிறிய காரியங்களையெல்லாம்
செய்து முடித்தான பின்
சூரியனுக்கு என் முதுகைக் காட்டியபடி
படுத்துறங்குவேன்.

5.5.10

ஒரு இலையுதிர்கால நாளில் வீட்டில்-பை ஜுயி


மாடியின் அருகே
நிறைய மூங்கில்களும்
பைன் மரங்களும்
இருந்த போது
சில விருந்தாளிகள்
என் வீட்டுக்கு வந்தார்கள்.
மேற்குச் சுவரின் நிழலில்
தயக்கமாய் இலையுதிர்காலம்
நிறம் காட்டியது.
ஒரு சிறு காற்று
கிழக்கு அறை வழியே வீசியது.
என்னிடம்
ஒரு புல்லாங்குழல் இருந்தபோதும்
அதை இசைக்காத முழுச் சோம்பேறி நான்.
என்னிடம் பல புத்ததகங்கள்
இருந்தபோதும் அவையெல்லாம்
வாசிக்காது விடப்பட்டன.
ஒவ்வொரு நாளும்
எனக்கென்ற விருப்பங்களோ
கவலைகளோ ஏதுமின்றி
நான் வாழ்ந்தேன்.
வசிப்பதற்கு
இவ்வளவு பெரிய வீடு
யாருக்கு வேண்டும்?
தானியங்களைச் சேமிப்பது
பலனற்றதல்லவா?
வசிக்க ஒரு அறை
எனக்குப் போதும்.
ஓரளவு அரிசி என்னைப்
பலநாட்கள் காக்கும்.
இன்னும் கூட மாளிகையிலிருந்து
சம்பளம் பெற்று வந்தாலும்
எங்கள் மண்ணை உழுது சரிசெய்ய
தெரியாதிருக்கிறேன்.
நான் ஒரு மல்பெரியைக்கூட
பயிரிட்டதில்லை.
அல்லது ஒரு துண்டு நிலத்தில்
கூட உழைத்ததில்லை.
இருந்தும் தினமும்
என்னால் ஏற்கும் அளவு
சாப்பிடுகிறேன்.
வருடம் தோறும் விரும்புகிற
எல்லா ஆடைகளையும் அணிகிறேன்.
நான் இது பற்றி
ஆழமாக யோசிக்கும்போது
எனக்கு வெட்கமாக இருக்கிறது.
இருந்தாலும் அந்த வெட்கம்
எளிதில் த்ருப்தியாக
மாறிவிடுகிறது.

மாந்தோப்பில் ஓர் இரவு-II


கவிராயரும் நானும் வெளியே கிடந்த கட்டிலில் இளைப்பாறியபடி இருக்க பரஞ்சோதிவேல் இளநீரைச் சீவித்தள்ளிக் கொண்டிருக்கலானார்.”ஒண்ணு போதுங்க.இப்பதாங் கருப்பு கலர் குடிச்சுட்டு வந்தோம்” என்று முனகினார் த.க. “ஆமாமாம்” என்று நானும் வில்லுப்பாட்டுக்கு ஒத்துப்பாடினேன். குளிர்ச்சியும் இனிமையும் நிரம்பியிருந்த நான்கு காய்களை நாங்கள் காலி செய்த பின் நிம்மதி அடைந்தார் பரஞ்சோதி.

வெளியே வந்த பரஞ்சோதியின் அம்மாவிடம் பழங்கதைகள் பேசத்தொடங்கினார் த.க. ஒரு மாயாலோகத்தின் கதவுகள் திறக்கலாயின. த.க.வின் அம்மாவும்,அப்பாவும் உயிர்த்தெழுந்து கண்முன்னே நின்றார்கள்.வீட்டு வாசலில் கொழுத்த பசு ஒன்று தலையை ஆட்டியபடியே நின்றிருந்தது.வாய்க்காலில் நுரைத்தபடி நீர் ஓடிக்கொண்டிருந்தது.பயல்கள் கொட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.த.க. தன் ஊருக்கு முதன்முதலாக வந்த பஸ் எழுப்பிய பேருந்தின் புழுதியின் பின் கனவுகளுடன் ஓடிக்கொண்டிருந்தார்.வயல்கள் செழித்துக் கொழித்திருந்தன.கொய்யாவும்,மாவும் கையெட்டும் தூரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

இடையே இறந்து போனவர்கள்,அடையாளம் இழந்து போனவர்கள்,அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள்,வீட்டுக்குத்தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டவர்கள்,காதலில் தோற்றுத் தற்கொலை புரிந்து கொண்டவர்கள்,ராணுவ சேவைக்காக ஊரை விட்டுப் போனவர்கள்,ஊரில் அப்போதிருந்தது போலவே இப்போதும் இருப்பவர்கள் என்று பல தட்டுக்களாக அத்தியாயங்கள் பிரிந்தன.

அட இது நம்ம நாயனாவா?என்று தெருவில் வருவோர் போவோரை ஆச்சர்யப்படுத்தியபடி இருந்தது த.க.வின் வருகை.பரஞ்சோதிவேலின் அம்மாவுடனான பேச்சு கொடிபோல் வளர்ந்து கொண்டிருந்தது.அன்பின் சின்னங்களாக அம்மாவும்,பரஞ்சோதியும் எனக்குத் தோன்றினார்கள்.அன்பில் நனைந்து கொண்டிருந்த நானும்,த.க.வும் மெல்ல விடுவித்துக்கொண்டு ஊர்ச்சாலையில் நடைபோட்டோம்.

தான் வசித்த வீட்டின் வாசலில் நின்று தன் பிராயத்தைத் தேடிக்கொண்டிருந்தார் த.க. அவர் தோளில் கை போட்டபடி அவரை ஆசுவாசப்படுத்தினேன். வீட்டு முற்றத்தில் தன் அம்மா கையில் சோறிட்டபடியே சொன்ன கதைகள் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தன. மொடமொடக்கும் வெள்ளைக் கதர்ச்சட்டையுடன் கையில் குடையுடன் அவரின் அப்பா நடந்து கொண்டிருந்தார். த.க.வின் அழைப்பைப் பொருட்படுத்தாது எங்கு போய்க்கொண்டிருந்தாரோ? வெளியில் வாங்கம்மா என்று கூப்பிட அவரின் அம்மா வந்து விடக்கூடும் போல இருந்தது அந்த மாலையின் மனமயக்கம்.

மெல்ல வயல்க்காட்டின் வேப்பமரத்தின் குச்சியை ஒடித்துக் கடித்தபடியே தபதபவென விழுந்து கொண்டிருந்த பம்ப் செட் தண்ணீர்த்தொட்டியின் குளிர்ச்சியில் மூழ்கினோம். உள்ளே சென்ற போது நேற்றைக்கும், வெளியே எழுந்தபோது இன்றைக்குமாக மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. துவைத்துக்குளித்துவிட்டு வரப்பில் நடந்து போகையில் இருவரையும் உறைந்துபோன காலப்ப்ரக்ஞை மூடியிருந்தது.ஒருவரோடு ஒருவர் பேசியபடியே வீட்டை அடைந்தோம்.

உடை மாற்றி வெளிவரும்போது பரஞ்சோதியின் அம்மா மூணு சட்னி, இட்லி/தோசை என்று ஆசை காட்டினார்.ஆனாலும் பரஞ்சோதி முன்பே எங்களுக்கு விறுவிறுப்பை ஏற்றியிருந்த பறோட்டா ஸ்டாலைப் பார்த்துப் புறப்பட்டோம். கடையில் வேர்க்க விறுவிறுக்க பறோட்டா அடித்துக் கொண்டிருந்த மாஸ்டரை இரக்கத்துடன் பார்த்துவிட்டு ரெண்டு பேருக்கும் ஆர்டர் கொடுத்தோம்.புயல் வேகத்தில் பறோட்டாக்கள் இலையில் இறங்கின. 

பறோட்டா மாஸ்டரின் வேட்டி படு வெளுப்பாக ஒரு கண்ணையும்,பச்சை நிற ட்யூப் லைட்டின் ஜ்வலிக்கும் பசுமை மறு கண்ணையும் பறிக்க மிகுந்த சுவையுடன் த.க.வின் பள்ளி வாழ்க்கையின் கதாநாயகிகளைப் பற்றிப் பேசியபடியே பறோட்டாக்களை இரு கை பார்த்தோம்.பின் முறுகலான தோசை,சாம்பார்-சட்னி எல்லாமே சூடும் சுவையும் பூசியிருந்தன.ஏப்பம் புறப்பட்ட பின் நாங்கள் புறப்பட்டோம் எங்கள் திட்டப்படி மாந்தோப்பை நோக்கி.

(தொடரும்)

(த.க.என்கிற தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவின் ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர். 58 வயது. சென்னை ஊரப்பாக்கம் ஜாகை.எழுத்துக்காரத் தெரு, வளையல் வம்சம் என்ற இரு கவிதைத் தொகுப்புகளும், பல சிறுகதைகளும்,கட்டுரைகளும் எழுதியவர். இவர் எழுத்தை வாசிக்காதவர்கள் ஒரு நல்ல வாசிக்கும் அனுபவத்தை இழக்கிறார்கள்.என் 25ஆண்டு கால நண்பர்.இருவரும் பரஸ்பரம் இருவரின் எழுத்துக்களுக்கும் ரசிகர்கள்.வெகு நேர்த்தியான கதைசொல்லி.அவருடனான ஒவ்வொரு நொடியும் சொர்க்கம்.என் நண்பனுக்கு இந்தக் கட்டுரையை அர்ப்பணிக்கிறேன்.)

4.5.10

என் எழுத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கிய பெட்டி குறித்து-பை ஜுயி


சைப்ரஸ் மரத்தால்
நீண்ட நாட்களுக்குப்
பாதுகாப்பான வகையில்
ஒரு பெட்டி செய்தேன்.
எதற்காக?
அதில் பை-லெட்டியன்
என என் பெயர்
குறிக்கப்பட்டிருந்தது.
என் வாழ்நாள் முழுதும்
ஒரு எழுத்தாளனாகவே
இருந்துவிட்டேன்.
என் மூவாயிரம் கவிதைகளையும்
உரைநடையையும்
எழுபது பாகங்களாக
நான் சேகரித்துவைத்தேன்;
கடைசியில் அவை
அழிந்தும் தொலைந்தும்
போய்விடும் என்றெனக்குத் தெரியும்.
இருந்தும் அவை
வீசி எறியப்படக் கூடாது என்றே
விரும்பினேன்.
ஆக அவைகளைப் பூட்டி
என் கவனத்திலேயே வைத்திருப்பேன்.
எனக்கு மகன்களோ அல்லது
என் எழுத்துக்களின் மீது
கவனம் கொண்டவர்களோ இல்லை.
என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
அவற்றை என் மகளிடம் கொடுத்து
என் பேரனிடம் ஒப்படைக்கச் செய்வதுதான்.

ராகமாலிகா



ஒரு திருப்பத்தில்
சரேலென ஒலியெழுப்பாது
திரும்பும் வாகனமாய் சிலரின் வருகை.
பண்டிகைக்குப் பின்னும்
கழற்றப்படாத மாவிலைத்தோரணமாய்
சிலரின் இருப்பு.
அணைந்தபின்னும் கமழும் சுகந்தமாய்
சிலரின் வெற்றிடம்.
எப்போதோ பற்ற வைத்த பட்டாசு
இப்போதுதான் வெடித்துப் பயமுறுத்துவதாய்
சாகாது சாகவைத்த சிலரின் மரணம்.

3.5.10

முத்திரை


துவங்கியது
பிரமிக்கவும்
மயக்கவும் செய்யும்
உன் நடனம்.
காற்றில் பூத்தொடுக்கும் நளினமாய்க்
கிறங்கச்செய்கின்றன
உன் அடவுகளும்
முத்திரைகளும்.
என் போல நீயும்
மாற்றத்தான் வேண்டியிருக்கிறது
உன் பாவங்களை
பொருளுக்கும் ஜதிக்கும்
நேரத்திற்குமேற்ப.
தரையைத் தொடுவதும்
காற்றில் சுழல்வதும்
அந்தரத்தில் பறப்பதுமென
நிகழ்த்துகிறாய் ஒரு
சாகசக்காரியின் கூத்தை.
கூர்ந்து துளைக்கிறது
ஒவ்வொரு அசைவையும்
இருளில் குளித்திருக்கும் அரங்கம்.
ஒய்யாரமாயிருக்கிறது
காலத்தின் இறுதி நடனமோ என
வியர்வையில் பூத்த உன் நடனம்.
குனிகிறாய் ஆட்டம் முடிந்து
பாராட்டையும் மௌனத்தையும்
சமமாய் அணிவதற்கு.
மெதுவாய்க் கழற்று
கிணுகிணுக்கும் உன்
சலங்கைகளை.
அதற்குள்
புதைந்திருக்கிறது
அடிமையாய்க்
கையொப்பமிட்டு
எழுதித் தந்த என்
சாசனப்பத்திரம்.

என்னைப் பற்றிய ஒரு கவிதை-பை ஜுயி


சிகப்புக் கன்னங்கள்.
நரைத்த தாடி.
வைன் குடித்த நான்.
கடைசியில்
வருஷங்கள் எல்லாம்
ஓடிக்கழிந்தபின்
இப்போது எல்லாம்
வெறுமையாகத் தோன்றுகின்றன.
வயோதிகனாக
நோயுற்றவனாக
ஒல்லியாய் இளைத்திருந்தாலும்
கவிதைகளின் மீதான காதல்
இன்னும் மீதமிருக்கிறது.
ப்ரியமான் ஒரு கனவான்
ஒரு கித்தானில்
என் உருவ ஓவியத்தை
வரைந்துவைத்திருக்கிறார்
என்றறிந்த போது
கொஞ்சம் சிரித்தேன்.

இரவில் வீடு திரும்புதல்-பை ஜுயி


இப்போது ஒரு நூறில்
பாதியை
அடைந்துவிட்டேன்.
ஆனால்
எனக்கென்று கொஞ்சநேரத்தை
எப்போது நான் பெறுவேன்?
காலையில்
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்
வீட்டைவிட்டுக் கிளம்புகிறேன்.
சாயங்கால மத்தளம் முழங்கும்போது
வீடு திரும்புகிறேன்.
என்னுடைய வைன் ஜாடி காலியாகவோ
அல்ல்து
என் வீட்டுச்சுவரைத் தாண்டி
மலையின் காட்சி தெரியாமலோ இல்லை.
ஆனால்
இவற்றையெல்லாம் ரசிக்க
எனக்கு நேரமில்லை என்பதுதான் விஷயம்.
ஒவ்வொரு நாளும்
மிகுந்த களைப்போடு வீடு திரும்புகையில்
நேரே நான் படுக்கையில் விழுகிறேன்.
எனக்கு மட்டுமே கிட்டக்கூடிய
ஆனந்தம் இனி வருமா?

2.5.10

சாலை



எதையும் கவனிக்காது யார் மேலோ மோதி
விரைகிறது இளமை.
யார் மீதும் மோதாமல் செல்ல
முயல்கிறது நடுத்தரம்.
யாரும் தன்மீது 
மோதிடாமல் பரிதவிக்கிறது
வயோதிகம்.
எதையும் பொருட்படுத்தாமல்
மிகச் சரியாக எல்லோர் மேலும்
மோதுகிறது மரணம்.

1.5.10

என் வசிப்பிடம்-பை ஜுயி.


நான் தலைநகரத்தில்
அலைய ஆரம்பித்து
இருபது வருடங்களாகிறது.
இன்னும் ஏழையாக-
இன்னும் வசதியான
வீடில்லாமல்.
எப்போதும்
தன் முதுகிலேயே
தன் வீட்டைச் சுமந்துபோகும்
நத்தையைப் பார்த்து
வியக்கிறேன்.
உண்மையிலேயே
தனக்கென ஒரு வளையை
வைத்துக்கொண்டிருக்கிற
எலியைக் காட்டிலும்
துரதிர்ஷ்டசாலியாக
இருக்கிறேன் நான்.
ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
ஒரு கைப்பாவையைப் போல
எப்போதும் மாற்றப்பட்டு
அலைவதை விட
ஒரு ஊசிமுனையளவு
கிடைத்தாலும் மகிழ்வேன் நான்.
எனக்கெனச் சொந்தமாய்
ஓரிடம். அது
சகதிக்குள்ளோ -
நெருக்கடி மிகுந்தோ-
அழுக்கான இடமோ-
கவலை இல்லை
அது பற்றி.

தாமரைகளைக் கொய்தபோது-பை ஜுயி.
























நீர்த்தாவரங்களின்
இலைகள்
காற்றில் அசைகின்றன.
அடர்த்தியாய் வளர்ந்த
தாமரைகளின் நடுவே
படகு மிதந்து செல்கிறது.
பூக்களின் நடுவிலிருந்து
அவள் தன் காதலனைப்
பார்த்தாள்.
வெட்கத்தோடு
அவள் தலை குனியவும்
அவளின் அழகான சீப்பு
கீழே தண்ணீரில் வீழ்ந்தது.

தனிமையில் தூங்குதல்-ஒரு துக்கம்-பை ஜுயி


நள்ளிரவாகி விட்டது.
இன்னும் என்னால்
தூங்க முடியவில்லை.
படிக்கட்டுகளில்
உட்கார்ந்தபடி
வானத்தை
வெறித்துக்கொண்டிருந்தேன்-
நட்சத்திரங்களைப் பார்த்தபடி.
கொஞ்ச நேரத்தில்
விடிந்துவிடும்.
கடந்த
பதினைந்து வருஷங்களாக
நான் தனியே கழிக்காத
பௌர்ணமி இருக்கமுடியுமா?

இரவு முழுதும் உட்கார்ந்திருந்தது-பை ஜுயி


ஒரு முழு நாளும்
என் வீட்டு வழிநடையில்
இருட்டும் வரையில்
காத்து நின்றிருந்தேன்;
பின் இரவு முழுவதும்
என்னறையில்
விடியும்வரை
உட்கார்ந்திருந்தேன்;
நான் எதுவும் சொல்லாமல்
இதற்கான காரணத்தை
நீ அறிய முடியாது.
இவை அனைத்தையும்
கவனித்திருந்தால்
நீ கேட்டிருக்கக்கூடும்
இரண்டு அல்லது மூன்று
பெருமூச்சுக்களை.

ஓய்வாக இருக்கையில்-பை ஜுயி


இப்போது சுவாசப்பை
தொந்தரவு கொடுப்பதால்
இனிமேல் நான்
குடிக்கமுடியாது.
மேலும்
என் கண்கள்
என்னுடன் ஒத்துழைக்க
மறுத்துவிட்டதால்
புத்தகங்களை
ஒதுக்கி வைத்துவிட்டேன்;
ஓய்வு நேரங்களில்
வெறுமனே மனமும் உடலும்
ஓய்வாக உட்கார்ந்திருக்கிறேன்;
வழிநடையில் அலைகிற
கோழிக்குஞ்சுகள்
கூடு திரும்புகையில்
சாயங்காலம் வந்துவிட்டதை
நான் அறிகிறேன்;
பனி விழுந்து இலை உதிர்ந்து
மரக்கிளைகள்
விட்டு விடுதலையாகி
நிற்கின்றன.
நான் என்னுடைய
மிக அமைதியான நிலையை
அடைந்து விட்டதாக
உணர்கிறேன்.
மலைகளில் போய்
அமைதியைத் தேட
அங்கே என்ன இருக்கிறது?

தூங்கிக்கொண்டிருத்தல்-பை ஜுயி(கி.பி.772_846)


என் தலையணையின்
மறுபக்கம் திரும்பி
மீண்டும்
தூக்கத்தைத் தொடர்ந்தேன்;
கடைசியில் நான்
திரும்பிப்
படுத்துக்கொண்டேன்;
தாளால் மறைக்கப்பட்ட
சாளரங்கள் ப்ரகாசமாய்
இருந்ததிலிருந்து
காலை உதயமானதை
அறிந்துகொண்டேன்;
இருந்தாலும் என்
படுக்கைவிரிப்பு
வசந்தத்தைப்போல
கதகதப்பாக இருந்ததால்
படுக்கையிலேயே இருந்தேன்;
நான் சோம்பேறியாய் இருப்பதைத்
தடுக்காதீர்கள்;
இதமான வார்த்தைகள் கூறி
என்னை இன்பப்படுத்துங்கள்;
வெளியே சேவல் கூவுகிறது.
என்றாலும் நான் தூங்குவதைத்
தொடர்கிறேன்-
சூரியனுக்கு முன் எழுந்து
தியான சாலைகளுக்குச்
சென்றிருப்பவர்களை
இனிமேலும்
வென்றுவிட விரும்பாமல்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...