I
பெருங்கடலாய்
விரிந்து கிடக்கிறது
வெற்றுத்தாளின் ஆழ்பரப்பு.
மொழியால் கடக்கிறேன் நான்.
பேரமைதியால் கடக்கிறது சிற்றெரும்பு.
II
காத்திருக்கிறேன்
ஒற்றைக்கால் கொக்கின்
அருகே.
கொக்குக்கு மீன்.
மக்குக்கு வார்த்தை.
III
காலியாக இருக்கிறது
நிரப்பப்பட வேண்டிய வார்த்தைகள்.
மொழியால் நிரப்புகிறேன் நான்.
விழியால் நிரப்புகிறாய் நீ.
IV
யாரோ ஏதோ சொல்கையிலும்
எதையோ எப்படியோ பார்க்கையிலும்
கிடைக்கிறது கவிதையின் வரைபடம்.
இட்டு நிரப்புகிறேன்
விடுபட்ட இடங்களுக்கான வண்ணங்களை.
9 கருத்துகள்:
- வார்த்தை -
வச்சி விளையாடி இருக்கீங்க..
எல்லா வரிகளுமே மிக அருகில் இருக்கிறது.
கவிதை மட்டும் தொட்டு விட முடியா தூரத்தில்..
வாழ்த்துக்கள்...
காலியாக இருக்கிறது
நிரப்பப்பட வேண்டிய
வார்த்தைகள்.
கிண்ணங்கள் இன்னும்
ஏக்கத்தோடு வெறுமையாய் !
இன்னும் வார்த்தைகள்
வேணும் சுந்தர்ஜி !
யாரோ ஏதோ
சொல்கையிலும்
எதையோ எப்படியோ
பார்க்கையிலும்
கிடைக்கிறது
கவிதையின் வரைபடம்.
இட்டு நிரப்புகிறேன்
விடுபட்ட இடங்களுக்கான
வண்ணங்களை.
இப்படிதான் எல்லாருக்கும் .......நிரப்பும் வண்ணங்கள் இங்கு ஜொலிப்பதால் தான் அழகே
மக்குக்கு வார்த்தை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் ...உறுமீன் காணும் வரை காக்கும் கொக்கு போல் சிறந்த வார்த்தைக்கு காக்கும் யாரும் மக்கில்லை :)))
ஜஸ்ட் ஜெஸ்ட்
அடேங்கப்பா!ஸார் அந்த எறும்பின் கால்களில் சிக்கிக் நசுங்கிட்டேங்க.அருமை.
-கலைவாணி.
வெற்றுத்தாளின் ஆழ்பரப்பைக் கடக்கும் எறும்பும் மொழியும் அழகு.அருமை ஜி.
-யாழி.
விரிந்த வெண்கடலை(தாளை)அமைதியாய்க் கடக்கிறது எறும்பென யார் சொன்னது?மொழிக்கலத்தின் கூர்முனைக்கு அஞ்சி அச்சத்துடன் கவனமாய்க் கடக்கிறது அது.(கலம் என்றால் பேனா அல்லது படகு எனவும் பொருள் கொள்ளலாம்)
-தனலக்ஷ்மி பாஸ்கரன்
வெற்றுத் தாளின் வெண்மையே அற்புதம்தான். அதைப் பெருங்கடலாய் உருவகித்துக் கொள்ளும் புள்ளியில் கவிதைசெடி நுட்பமாக மொட்டு விட்டிருக்கிறது.மொழியால் கடப்பதும் பேரமைதியால் கடப்பதும் ஒரே கோட்டில் வந்து நிற்கும் இரு அழகுகள்.ஆயினும் நிசப்தத்தின் ஆழத்தை இனிமையாய் உயிரால் நகர்ந்து உணர்த்துகிறதோ அந்தச் சிற்றுயிர்....இப்படி சிந்தனை அசைய அசைய கூடவே வரும் நிலாவைப் போல் படித்த கணத்திலிருந்து மனனம் ஆகி என் கூடவே வந்து கொண்டிருக்கிறது அது.
-உஷா.
இப்படி நான்கு கவிதைகளை ஒரே கவிதையாகினால் எப்படி? இப்படி திகட்டிப் போனால் நாங்கள் தொடர்ந்து எழுதுவது எப்படி?
கருத்துரையிடுக