துவங்கியது
பிரமிக்கவும்
மயக்கவும் செய்யும்
உன் நடனம்.
காற்றில் பூத்தொடுக்கும் நளினமாய்க்
கிறங்கச்செய்கின்றன
உன் அடவுகளும்
முத்திரைகளும்.
என் போல நீயும்
மாற்றத்தான் வேண்டியிருக்கிறது
உன் பாவங்களை
பொருளுக்கும் ஜதிக்கும்
நேரத்திற்குமேற்ப.
தரையைத் தொடுவதும்
காற்றில் சுழல்வதும்
அந்தரத்தில் பறப்பதுமென
நிகழ்த்துகிறாய் ஒரு
சாகசக்காரியின் கூத்தை.
கூர்ந்து துளைக்கிறது
ஒவ்வொரு அசைவையும்
இருளில் குளித்திருக்கும் அரங்கம்.
ஒய்யாரமாயிருக்கிறது
காலத்தின் இறுதி நடனமோ என
வியர்வையில் பூத்த உன் நடனம்.
குனிகிறாய் ஆட்டம் முடிந்து
பாராட்டையும் மௌனத்தையும்
சமமாய் அணிவதற்கு.
மெதுவாய்க் கழற்று
கிணுகிணுக்கும் உன்
சலங்கைகளை.
அதற்குள்
புதைந்திருக்கிறது
அடிமையாய்க்
கையொப்பமிட்டு
எழுதித் தந்த என்
சாசனப்பத்திரம்.
5 கருத்துகள்:
பலே
கலைக்கு என்றும் அடிமை தான் இல்லையா
அடிமைதான் பத்மா.இதுகளெல்லாம் இல்லை என்றால் நினைக்கவே பயமாயிருக்கிறது.
கோவலனை மயக்கிய மாதவியின் கதையை கவிதை ஞாபகப்படுத்துகிறது !
கலைக்கு யார்தான் அடிமை இல்லை !
ஐயோ ஹேமா!கோவலன் மாதவி சமாச்சாரமெல்லாமில்லை.ஒரு வெறி பிடிச்ச ரசிகன்.வேணுமின்னா வெறி வெறி ரசிகன்னு சொல்லலாம்.
ithukku munnaadai iruntha padam nallaayirunthuchchu![ithuvum thaan]
கருத்துரையிடுக