படியத் துவங்குகிறது
காலத்தின் தூசி
படிக்கப்படாதிருக்கும்
கடிதங்களின் மேல்.
மெலிதாய்க் கிளம்புகிறது
ரகஸ்யத்தின் நெடி
பொதிந்த யூகங்கள்
ஒவ்வொன்றிலிருந்தும்.
எங்கேயோ இருக்கலாம்
யாரையோ எதையோ
எதிர்பார்த்திருந்தவனின் நிழல்.
ஒரு நாள் கசியலாம் அல்லது
கசியாது போகலாம்
அடைகாத்திருக்கும்
துவக்கமோ முடிவோ
பயணமோ பிரிவோ
துயரோ பித்தோ.
என்றோ ஒருநாள்
போத்தலில் அடைக்கப்பட்ட
பூதமாய்த் தவிக்கலாம்
காலங்கள் கடந்து வாழும்
பிரிக்கப்படாத கடிதங்களின்
வாசிக்கப்படாத செய்திகள்
17 கருத்துகள்:
போத்தலில் அடைபட்ட செய்திகளை விடுவிக்க அரிக்கிறது கை.அருமை ஜி.
யாழி.
படிக்கப்படாத கடிதங்களிலிருந்தா
இத்தனை படிக்க முடிகிறது.....?படித்ததும் ஒரு நிமிஷம் மூர்ச்சையானேன் சுந்தர்ஜி ஸார்.சமயத்தில் வார்த்தைகள் கிடைக்கலை பாராட்ட.
ப.தியாகு.
வாசிக்கப்படாத கடிதங்கள் தான் சுவாரசியத்தின் உச்சி .எழுதப்படாத கடிதம் போல :))
நன்றி-
யாழி.
தியாகு.உங்களின் திக்குமுக்காடல் எனக்குப் பிடித்திருக்கிறது.
பத்மா.சுவாரஸ்யத்தை விட திடுக்கிடல்?
படிக்கப்படாத கடிதச் செய்திகள் என் மனம் வருடியது.
மீனாதேவி.
sir.........follower set seiyunga.[plz...:)..]
arumai........:)
படிக்கப்படாத கடிதங்களில் காலத்தின் தூசி ஒட்டியபடி இருக்கலாம். ஆனால் அதனுள்ளிருக்கும் உணர்வும் உயிரும் மிக்க எழுத்துக்கள் ரகஸ்ய நெடி பரப்பி அழுத்தமாய் (பட்டணத்தில் பூதம் போல்) வெளிவரத்துடித்துக் கொண்டிருப்பது காட்சிப் பதிவாய் நீள்கிறது மனத்திரையில்.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்.
உங்களின் சொற்களுக்கு நன்றி தனலக்ஷ்மி அம்மா.
படிக்கப் படாத கடிதங்களின்
கண்ணீர்த்துளிகளின் ஈரம்
உங்களின் கவிதையில்.
படிக்கபடாத கடிதங்கள் ன்னு சொல்லும்போதே அதன் ரகசியமும் சுவாரஸ்யமும் அதிகம்.அதுவும் தூசு படிந்த கடிதம்.ஆவல் அதிகம் சுந்தர்ஜி.
இனிமேல் அப்படி ஒரு கடிதம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
யாரும் இப்போ கடிதம் எழுதுவதில்லையே.
நானும் கூடத்தான் !
"தொலைந்த பதிவுகள்"ன்னு ஒரு கவிதை போட்டிருக்கேன் அப்பாவின் கடிதங்களைப் படமாக்கி !
கண்ணீர்த்துளிகளின் ஈரத்துக்கு நன்றி மது.
நன்றி ஹேமா.
படிக்கப்படாத கடிதங்கள்-போத்தலில் அடைபட்ட பூதம்.புதிர்களின் அடர்த்தியாய் கவி ஆட்சி சுந்தர்ஜி.
-ஜெ.ஃப்ராங்க்ளின் குமார்.
படிக்கப்படாதிருக்கும் கடிதங்கள் நிறையப் பேர் பயணிக்காத புது அனுபவ மலர்ச்சி.
//போத்தலில் அடைக்கப்பட்ட பூதமாய்த் தவிக்கலாம் படிக்கப்படாத செய்திகள்//
முடிப்பின் வனப்பும்,கடிதங்கள் புராதனமான பின்? என்ற வார்த்தையினால் வரும் பகீருமாக அருமையான வாசிப்புத் திருவிழா.
தஞ்சை ப்ரகாஷ் கடிதங்கள் கொண்டு வந்த நினைவுகளா இக்கவிதை வரிகள்?
-உஷாராணி.
நன்றி ஃப்ராங்க்.
நன்றி உஷா.சரியான யூகம்தான்.ப்ரகாஷ் எனக்கு எழுதி அவரின் மரணத்துக்குப் பின் கிடைத்த ஒரு கடிதம்.தவிர உங்க மொழிக்கு ஒரு சலாம்.
சுந்தர்ஜி...
உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் ஒரு புது அனுபவத்தைத் தருகிறது. கவிதைகளைத் தாண்டி நீங்கள் தேர்ந்து அளிக்கும் புகைப்படங்களே உங்களின் உயர்ந்த கவிதையாளுமையைக் காண்பிக்கின்றன. பிரமித்துப்போய் இருக்கிறேன். அழுத்தமான கவிதைகள். மனம்நிறை பாராட்டுக்கள்.
மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி ஹரணி.
கருத்துரையிடுக