31.5.10

பாழ்




தேடுகிறது காற்றின் விசை
பாழடைந்த கோயிலின் எரியாச் சுடரை.

உறைந்திருக்கும் கடவுளால்
சூடப்படாது புதைகிறது மனோரஞ்சிதத்தின் நறுமணம்.

வில்வ மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கிறது
ஏதோ ஓர் அதிகாலை உன்னுதட்டில்
சிந்திய என் பதற்ற முத்தம்.

துருப்பிடித்துக் கிடக்கிறது அதிகாரநந்தியின் காதுகளில்
நிறைவேறா ரகசியங்கள்.

இருளின் பாதாளத்தில் சிறகின்றி மோதுகிறது
வௌவாலின் இலக்கு.

ஆளரவமற்ற கோவிலில்
இறைவன் ஆடுகிறான் ஆனந்தமாய்

பிரார்த்தனைகள் குறித்த
கவலைகள் ஏதுமின்றி.

11 கருத்துகள்:

பத்மா சொன்னது…

அருமை அருமை ....
எனக்கு புழக்கமில்லா கோவில்கள் ரொம்ப பிடிக்கும் ..
அதன் வௌவால் எச்ச வாசனையும் ,எண்ணெய் பிசுக்கும் ,ஒரு கவர்ச்சி தான் ,அங்கிருக்கும் விக்ரகங்களை காணும் போது ஐயோ தனியா இருக்கீங்களே இப்போ நான் வந்துருக்கேன் பார் என்று உரிமையோடு கொஞ்ச தோன்றும்..
எல்லா நினைவுகளையும் கிளர்த்தெழச் செய்த கவிதை ..சுந்தர்ஜி
பிடிச்சுருக்கு

ரிஷபன் சொன்னது…

ஆஹா! முதலில் இந்த வண்ணமயமான பக்கம்.. முகப்பு.. அதில் பிரமித்து.. பின் கவிதைக்குள் நுழைந்தால்..
துருப்பிடித்துக் கிடக்கிறதுஅதிகாரநந்தியின் காதுகளில்நிறைவேறா ரகசியங்கள்.
இந்த ஒரு வரிக்கே ஆடிப்போன மனசு..
ஆளரவமற்ற கோவிலில்இறைவன் நடந்து செல்கிறான்ஆனந்தமாய் பிரார்த்தனைகள்குறித்த கவலைகள் ஏதுமின்றி..
சர்வ நிச்சயமாய் ஒரு கவிதை தரிசனம்!

Madumitha சொன்னது…

நம் பிரார்த்தனைகள்
கடவுளின் தலை மீது
ஏற்றும் பாரமோ?

Anonymous சொன்னது…

ஆளரவமற்ற கோயில்,ப்ரார்த்தனைகள் பற்றிக் கவலையற்று ஆனந்தமாய் இறைவன்.உங்களால்-உங்களால்-மட்டுமே தான் ஜி முடியும்.அருமை ஜி.
-யாழி.

Anonymous சொன்னது…

ஆனந்தக் கடவுளின் தரிசனம் அலைபேசியில்.
-மீனாதேவி.

Matangi Mawley சொன்னது…

"அதிகாரநந்தியின் காதுகளில்
நிறைவேறா ரகசியங்கள்."... loved it!

i always have this feeling about old temples.. that it's divinity is unscathed/untouched/uncontaminated. In discovery channel, a few years back, there used to be a show- discover india... one such beautiful temple was showed in it.. the vijayanagara temple.. it would have flourished during those long and gone ages.. but now- it is more a ruin.. but even then- the divinity/beauty in it was so attractive.. i wanted to jump into the TV screen and go in there!

the bilva leaves/the unlit lamp.. poetry.. it s out of the world!

beautiful poetry..

ps: pardon me for writing my comment here in english.. i felt i could say what i have said above, this way, better!

சுந்தர்ஜி சொன்னது…

-முன்பே ஒருமுறை கேள்வியுற்றிருக்கிறேன் உங்களின் புழக்கமில்லாக் கோவில்கள் மீதான நேசம்.ரொம்ப சந்தோஷம்+நன்றி பத்மா.

-இந்தச் சிறியவன் உங்கள் வார்த்தைகளால் மகிழ்கிறான். நன்றி ரிஷபன்.

-கடவுளை கொஞ்ச நேரம் கந்தசாமிப்பிள்ளையாய்ப் பார்த்தேன்.அதான் இப்பிடி மதுமிதா. நன்றி.

-எல்லாராலேயும் முடியும்.நான் கொஞ்சம் முந்திக்கிட்டேன்.அவ்ளவுதான் யாழி.நன்றி.

நன்றி மீனாதேவி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி.எனக்கும் பல தடவைகள் தோன்றும் கடந்தகாலத்துக்குள் நுழைய முடியுமானால் முதலில் ஆளரவமற்ற ஏதோ ஒரு கோயிலுக்குள்தான் போகவேண்டுமென்று.

Anonymous சொன்னது…

பாழடைந்த கோயிலை முன்வைத்து எவ்வளவு அகமும்-புறமும்?சொல்லப்பட்டதற்குள் இருக்கிறது சொல்லப்படாததின் துயரம்.ஆனால் கடைசி வரியைத் தொட்ட விநாடி -பற்ற வைத்த புஸ்வாணம் போல்-குபீரெனப் பூத்தெழுந்தது மனதில் மகிழ்ச்சி.புறா எச்சத்தின் வாசனை விடுபட்டுவிட்டதே!கடவுளை எப்போதும் இந்த ஆனந்த நிலையிலேயே விட்டுவிடத்தோன்றுகிறது. இல்லையா?
-உஷாராணி.

சுந்தர்ஜி சொன்னது…

பாழடைந்த கோயிலைப் பழுது பார்த்து புதுப்பித்து விட்டது உங்கள் கவிதை வரிகள்.பாராட்டுக்கள் அண்ணா.
-கே.அண்ணாமலை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி உஷா.உங்கள் வார்த்தைகள் சரி.

நன்றி ”அண்ணா”மலை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...