உரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.6.13

தி க்ரேட் டிக்டேட்டர் - ஒரு மகத்தான இறுதிக்காட்சி.


மன்னியுங்கள்.

நான் ஒரு பேரரசனாக விரும்பவில்லை.

அது என் வேலையல்ல. நான் யாரையும் ஆளவோ, வெல்லவோ விரும்பவில்லை. முடிந்தமட்டும் நான் ஒவ்வொருவருக்கும் - யூதரோ, ஹீப்ருவோ, கறுப்பரோ, வெளுத்தவரோ - உதவ விரும்புகிறேன்.

நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவே விரும்புகிறோம். மனிதப்பிறவியானது அப்படிப்பட்டதுதான். நாம் பிறரின் மகிழ்ச்சியாலேயே அன்றி அவர்களின் துயரோடு வாழ விரும்புவதில்லை. நாம் யாரொருவரையும் வெறுக்கவும், ஒதுக்கவும் விரும்புவதில்லை. 

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமிருக்கிறது. பூமித்தாயிடம் நம் ஒவ்வொருக்கும் தருவதற்கு நிரம்ப இருக்கிறது. வாழ்க்கையின் பாதை சுதந்திரமானதும், அற்புதமானதுமாக இருக்கிறது. ஆனால் நாம் பாதை தவறிவிட்டோம்.  

பேராசை மனிதனின் ஆன்மாவை விஷமாக்கி விட்டது; வெறுப்பின் வேலியால் பிரித்துவிட்டது; வறுமையிலும், ரத்தச் சேற்றிலும் நம்மைத் தள்ளிவிட்டது. நாம் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு, நம்மைக் கைதிகளாக்கிக் கொண்டுவிட்டோம். 

இயந்திரங்களால் உற்பத்தி அதிகரித்தாலும், தேவை தீரவில்லை. நம் அறிவு நம்மை சுயநலமிகளாய் மாற்றிவிட்டது. நம் புத்திசாலித்தனம் நம்மைக் கரடுமுரடாகவும், அன்பற்றவர்களாயும் மாற்றிவிட்டது. 

நாம் நிறைய சிந்திக்கிறோம். குறைவாய் உணர்கிறோம். இயந்திரங்களைக் காட்டிலும் மனிதநேயமே நம் தேவை. புத்திசாலித்தனத்தைக் காட்டிலும் கருணையும், மென்மையுமே நம் தேவை. இந்தக் குணங்கள் இல்லாதுபோனால், வாழ்க்கை வன்முறை மிக்கதாகி, வாழ்க்கையைத் தொலைத்துவிடுவோம். 

விமானமும், வானொலியும் நம் இடைவெளிகளைக் குறைத்து நம்மை இணைத்தன. இந்தக் கண்டுபிடிப்புக்களின் ஆதார இயல்பே மனிதனின் மேன்மைக்காகவும், உலக சகோதரத்துக்காகவும், நம் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதும்தான்.    

இப்பொழுது கூட, உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான நம்பிக்கையிழந்த ஆண்களை, பெண்களை, சிறு குழந்தைகளை என் குரல் சென்றடைகிறது. அப்பாவி மக்களைத் துன்புறுத்திச் சிறையிலிடும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களை என் குரல் சென்றடைகிறது.

என் குரலைக் கேட்பவர்களுக்கெல்லாம் “நம்பிக்கை இழந்து விடாதீர்கள்” என நான் சொல்கிறேன்.

நம் மீது இப்போது கவிழ்ந்துள்ள துயர்- பேராசை, மனித மேம்பாட்டின் பாதை குறித்து பயம் கொள்ளும் மனிதனின் கசப்புணர்வு ஆகியவையே. 

வெறுப்பு கரைந்து செல்லும்; சர்வாதிகாரிகள் மறைவார்கள்; மக்களிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதன் சாகும் மட்டும்  சுதந்திரம் அழியாது.

வீரர்களே! உங்களிடம் வெறுப்பை ஊட்டி, அடிமைப்படுத்தி, வாழ்வை நிர்பந்தித்து, எதை நீங்கள் செய்யலாம், எதை நீங்கள் யோசிக்கலாம், எதை நீங்கள் உணரலாம் என்று தீர்மானிக்க அந்தக் கொடுங்கோலர்களிடம் அடிபணியாதீர்கள். உங்களைச் சக்கையாய்ப் பிழிந்து, உங்கள் உணவைக் கட்டுப்படுத்தி, கால்நடைகளாய் உங்களைக் கருதி, கொட்டில் மிருகங்கள் போல் உபயோகப்படுத்துபவர்களிடம் பணியாதீர்கள்.  

இயந்திர மனமும், இயந்திர நெஞ்சும் படைத்த இந்தச் செயற்கையான இயந்திர மனிதர்களிடம் அடி பணியாதீர்கள். நீங்கள் இயந்திரங்கள் இல்லை; கால்நடைகள் இல்லை; நீங்கள் மனிதர்கள். மனித சமுதாயத்துக்கான அன்பு ததும்பும் மனம் உங்களிடம் இருக்கிறது. யாரையும் வெறுக்காதீர்கள்.

நேசிக்கப்படாதவர்களே, செயற்கையானவர்களே வெறுப்பை உமிழ்வார்கள்.

வீரர்களே! அடிமைத்தனத்துக்காகப் போராடாதீர்கள். சுதந்திரத்துக்காய்ப் போராடுங்கள்.

பதினேழாவது அதிகாரத்தில் ” இறைவனின் பேரரசு மனிதனில் இருக்கிறது” என்று தூய லூக் போதிப்பதாக எழுதப்பட்டிருப்பது தனி ஒரு மனிதனுக்கோ, ஒரு குழுவுக்கோ அன்றி எல்லோருக்குமாய்த்தான்.

இயந்திரங்களை உருவாக்கும் சக்தி, மகிழ்ச்சியை உருவாக்கும் சக்தி உங்களில் நிறைந்திருக்கிறது. உங்களிடமே இந்த வாழ்வைச் சுதந்திரமானதாகவும், அழகானதாகவும், அற்புதமான மாயாஜாலம் நிறைந்ததாகவும் உருவாக்கும் சக்தி நிரம்பியிருக்கிறது. ஆகவே, ஜனநாயகத்தின் பெயரால், நாம் இந்தச் சக்தியை உபயோகிப்போம்.

நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

மனிதர்களுக்கு உழைப்பும், இளைஞர்களுக்கு எதிர்காலமும், முதியோர்களுக்குப் பாதுகாப்பும் அளிக்கும் ஒரு நாகரீகமான புதியதோர் உலகத்துக்காக நாம் போராடுவோம். இந்த வாக்குறுதிகளை அளித்தே கொடுங்கோலர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தார்கள். அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள்.

தங்களை விடுவித்துக்கொண்டு, மக்களை அடிமைப்படுத்தினார்கள் சர்வாதிகாரிகள்.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இப்பொழுது நாம் போராடுவோம். இந்த உலகத்தை விடுவிக்க நாம் போராடுவோம். நாடுகளுக்கிடையிலான தடைகளைக் கடப்போம். பேராசை, வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை இவற்றையும் விலக்குவோம்.

விஞ்ஞானமும், வளர்ச்சியும் மனிதனின் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் அர்த்தம் நிறைந்த உலகுக்காக நாம் போராடுவோம். 

வீரர்களே! ஜனநாயகத்தின் பெயரால், நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

                                                                        ######
ஒரு யூத சவரத் தொழிலாளியாக, சர்வாதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒரு பொதுஜனமாக நடித்த சர். சாள்ஸ் சாப்ளினின் "The Great Dictator" எனும்அமர காவியத்தின் இறுதிக் காட்சி இது.

உருவ ஒற்றுமையால், சந்தர்ப்ப சூழ்நிலையால் உரையாற்ற நேரும் அந்தக் கதாபாத்திரம், நம்பிக்கையற்றுத் தளர்ந்த நடையுடன் மேடையை அடையும் காட்சியில் துவங்குகிறது. 

மெல்ல மெல்லத் தன் மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சாமான்ய -ஆனால்- உலக அமைதிக்கும், வாழ்வின் ஆனந்தத்துக்குமான சூத்திரத்தை வெளியிடும்போது அது மணம் நிரம்பிய ஒரு பூவாய் மலர்ந்து, பெரும் அருவியாய்ச் சீறிப் பாய்கிறது. 

ஒவ்வொரு கட்டத்திலும் உருமாறும் குரலின் தொனியும், விதவிதமாய் மாறும் உடல்மொழியும் என்றைக்கும் காணத் திகட்டாதது. இன்றைக்கும் அடிமைத்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் உடைத்து நொறுக்கும் உரையானதுமான இந்தக் காட்சி, நிரந்தரமாய் உலக சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. 

இந்தக் காட்சியின் வயது 73 என்றால் யாரால் நம்ப முடியும்?   

25.11.12

ஆளை உருக்கும் ஒரு அஞ்சலி.



போன மாதம் ஒரு நடுநிசியின் பேரமைதியில் என் நண்பன் செல்லத்துரையோடு இந்த விளம்பர வீடியோவைப் பார்த்துப் பரவசப் பட்டேன்.

ஒன்றே முக்கால் நிமிடத்தின் முறிவில் துளிர்க்கும் ப்யானோவின் ஒற்றைச் சொல்லுக்கும், அதற்கடுத்த சொல்லுக்கும் நடுவே சமுத்திரம் போல் பரவிக்கிடக்கும் நிசப்தம் என்னை அசைக்கத் துவக்கியது.

தன் தந்தையை இழந்த செல்லக் குழந்தைகளை அந்தத் தாய் அணைத்துக் கொண்ட போது என் மனம் நிறைந்து தளும்பியது.

உறவைப் பற்றியும், பிரிவைப் பற்றியும், வாழ்க்கையின் குறைநிறைகளை நாம் பார்க்க வேண்டிய கோணம் பற்றியும் அற்புதமாய் போதித்த யாஸ்மின் அஹமதுக்கு என் வந்தனங்கள்.

அந்த உரையைத் தோராயமாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.
இந்த வீடியோவுக்காக ஒரு மூன்று நிமிடம் செலவழியுங்கள் ப்ளீஸ்.

”திருமதி லீ! மரித்த உங்கள் துணை குறித்துச் சொல்ல விரும்புவீர்கள் என நினைக்கிறேன்.

இன்றைக்கு நான் மரித்துப்போன என் கணவரின் புகழைப் பாட இங்கு வரவில்லை.

அவரின் நல்ல குணாதிசயங்களைப் பற்றிப் பேசவும் வரவில்லை. நிறையப் பேர் அதைச் செய்துவிட்டார்கள்.

மாறாக, உங்களில் சிலருக்கு அசௌகர்யமாக உணரக்கூடிய சிலவற்றைப் பற்றிப் பேசப் போகிறேன்.

முதலாவதாக எங்கள் படுக்கையில் நடந்த விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.

காலையில் உங்கள் கார் என்ஜினை இயக்க உண்டாகும் கஷ்டத்தை எப்போதேனும் பெற்றதுண்டா?

( ஒலியை எழுப்புகிறார்)

கிட்டத்தட்ட இப்படித்தான் டேவிட் உண்டாக்கும் குறட்டை ஒலி இருக்கும்.

பொறுங்கள். ஆனால் குறட்டை மட்டுமல்ல. அத்தோடு கூட அதன் பின்னிருந்து கிளம்பும்  காற்றும் கூட.

சில இரவுகள் பலமான அவரின் குறட்டை ஒலியே அவரை எழுப்பிவிடும்.

“ ஓ! நாயாயிருக்கும். நீ தூங்கு டேவிட்” என்று சொல்வேன்.

இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாய் இருக்கலாம். ஆனால் தன் வாழ்க்கையின் - நோயால் பீடிக்கப்பட்ட - இறுதி நாட்களில் இந்தக் குறட்டை ஒலிதான் ’என் டேவிட் இன்னும் வாழ்கிறார்’ என்று உணர்த்தும்.

வேறென்ன சொல்ல? நான் உறங்கும் முன் மீண்டும் அந்தச் சத்தங்களைக் கேட்க விரும்புகிறேன்.

கடைசியில் நினைவிலாடும் இந்த மாதிரியான சின்னச் சின்ன சில அரைகுறை விஷயங்கள்தான் அவர்களை முழுமையாய் நினைவுறுத்துகின்றன.

என் அழகான குழந்தைகளே! ஒருநாள் நீங்களும் - எனக்கு உங்கள் தந்தையைப் போல - அரைகுறையானாலும் அற்புதமான ஒருவரை உங்கள் வாழ்க்கைத் துணையாய்ப் பெறக்கூடும்.”

8.11.12

செல்லம்மாள் பாரதியின் இரு வானொலி உரைகள் - II

"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய இரண்டாவது உரை. 

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன். 

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம். 

கவிஞர்கள் போக்கே தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் ஒரு பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா? 

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே இன்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? 

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? 

சுகமாக வாழ்வதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளில் இருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா? 

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல், தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை. 

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார். 

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை! 

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். 

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது. 

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று. 

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார். 

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; 

ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. 

7.11.12

செல்லம்மாள் பாரதியின் இரு வானொலி உரைகள் - I


செல்லம்மாள் பாரதி. 

7ஆம் வயதிலேயே 14 வயது பாரதியுடன் திருமணம். நிலையான வருமானம் இல்லாத கவிஞனாய் மட்டுமே வாழத் தெரிந்த பாரதியுடன் 25 வருட வாழ்க்கை - பதினைந்து வயதில் முதல் குழந்தை - நாளெல்லாம் துரத்திய வறுமையின் பரிதவிப்பு - உற்றார் உறவினர்களின் பகிஷ்கரிப்பு - கணவனின் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய நிறைவேறாத பேராசைகள் - இரு பெண் குழந்தைகளுடன் குடும்ப நிர்வாகம் - கணவனின் அகால மரணத்தோடு 32 வயதிலேயே தனிமரமான வாழ்வு.

செல்லம்மாளின் வானொலி உரையிலேயே சொல்வது போல பாரதி போன்ற -யுகத்துக்கு ஒரு முறை உதிக்கும் ஒரு மஹாகவிஞனின் மனைவியாய் வாழ்வது லௌகீகமான வாழ்வை மட்டுமே அறிந்த ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு அத்தனை சாமான்யமான விஷயமல்ல.

ஆனாலும் பாரதியின் ஆளுமை தெரியும் இந்த இரு உரைகளையும் படித்து அதன் பின் மெல்லிய குரலில் கேட்பதாய்க் கற்பனை செய்து பாருங்கள். பாரதியின் மறைவுக்குப் பின் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன இந்த உரைகள். 

தன் 62 வயதில் ஆற்றிய உரைகளில்தான் ஒரு கவிஞனின் மனைவியாக எத்தனை பெருமையும், ஒரு குடும்பத் தலைவியாக எத்தனை ஆதங்கமும் : 

திருமதி செல்லம்மாள் பாரதி தில்லி வானொலியில் ”பாரதி அறியாத கலை” என்ற தலைப்பில் ஆற்றிய  முதல் உரை.

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! 

என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படிக் கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். 

சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம். தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. 

புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும் பொழுதைச் செலவிடுவார். 

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம் - என்னால் மறக்க முடியாது. 

மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். 

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். 

மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். 

அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! 


நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை நாராயண நாமத்தை ஜபித்தார்.


(இரண்டாவது உரை நாளை)

1.2.12

தரங்கம்பாடியில் கி.பி.1622ல் ஜான் ஓலஃப்ஸன்


1620 ஆம் ஆண்டு தஞ்சாவூரை ஆண்ட விஜயரகுநாத நாயக்கர் டென்மார்க்கின் மன்னர் நான்காவது க்றிஸ்டின் என்பவருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டார். 
அந்த ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் ஒரு கோட்டையை அமைத்துக் கொண்டு வாணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது தரங்கம்பாடி சுற்றுலா வந்த ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஜான் ஓலாஃப்ஸன் தரங்கம்பாடி கோயிலில் நடைபெற்ற திருவிழா பற்றியும் அங்கு நிலவிய சட்டம் ஒழுங்கு பற்றியும் நேராகப் பார்த்து ஒரு குறிப்பு எழுதிவைத்துள்ளார். 
1593ம் ஆண்டு ஐஸ்லாந்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜான் டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு படிக்கவும் தொழில் செய்யவும் வந்தார். அந்த நாட்டு மன்னரின் பீரங்கிச் சிப்பாயாக பணியில் அமர்ந்தார். 1618ம் ஆண்டு டென்மார்க் மன்னர் க்றிஸ்டின் இந்தியாவுக்கு "ஒவ்கிட்" என்பவரை வர்த்தகத்துக்கு அனுப்பியபோது ஓலஃப்ஸனும் உடன் செல்லவிரும்பினார். ஆனால் அதற்கு மன்னர் அனுமதி அளிக்கவில்லை. அதன் பின்னர் தஞ்சாவூருக்கும் டென்மார்க்கும் 1620ல் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்கு பீரங்கிச் சிப்பாயாக சென்றுவர ஜான் ஓலஃப்ஸனுக்கு மன்னர் அனுமதி கொடுத்தார். இவரது கப்பல் டென்மார்கிலிருந்து தரங்கம்பாடி வந்து சேர ஏழு மாதங்கள் பிடித்தன. அது அக்காலத்தில் மிகவும் விரைவான பயணமாக கருதப்பட்டது. தரங்கம்பாடியில் இவர் ஒன்றரை ஆண்டுகள் பீரங்கிச் சிப்பாயாக பணிபுரிந்தார். 
இவருடைய குறிப்புக்களில் எத்தனை நேர்மையும் ஆச்சர்யமும் தெளிவும் இருந்திருக்கிறது? சுமார் 390 வருடங்களுக்கு முந்தைய நமது நாகரீகமும் கலாச்சாரமும் எத்தனை மேன்மையுடன் விளங்கின என்பதற்கு இவருடைய பயணக் குறிப்புகள் சாட்சியாக இருந்திருக்கின்றன.
இனி நேரடியாக ஜானின் மொழிக்குச் செல்வோம்.

”இங்குள்ளவர்கள் (இந்துக்கள்) தமது விழாக்களைப் பெரும்பாலும் இரவில் கொண்டாடுகிறார்கள். நான் ஒரு நாள் இரவு தரங்கம்பாடி கோட்டையில் பீரங்கிக் கொத்தளத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து பார்த்தால் எதிரே அந்தக் கோயில் தெரியும்.
தரங்கம்பாடி கோயில் ஒரு சதுரமான உயர்ந்த கட்டிடத்தைக் (விமானத்தை) கொண்டது. அதைச் சுற்றிலும் உயர்ந்த சுற்று சுவர்கள் உள்ளன. அதன் நடுவில் ஒரு பரந்த முற்றம் உண்டு. 

அங்கு விவரிக்க முடியாத பயங்கரமான சிற்பக்காட்சிகள் உண்டு. அந்தக் கோயிலின் உள்ளே மிருக வடிவில் ஆறு சிற்பங்கள் இருந்தன. கோயிலின் உள்பகுதியில் தங்கத்தாலான மிகவும் அழகான பீடம் ஒன்றில் மூன்று தெய்வங்களின் உருவங்கள் இருந்தன. இந்த முக்கியமான மூன்று தெய்வங்களும் தான் ஆண்டுக்கு ஒரு முறை வீதிகளில் தேரில் ஏற்றி உலாவாகக் கொண்டு வருகிறார்கள். 


இத்தேரை வீதிகளில் இழுத்துச் செல்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது கொட்டு வாசிப்பவர்களும், மூன்று நான்கு கொம்பு வாசிப்பவர்களும் தங்கள் கருவிகளை வாசித்துக் கொண்டு வருகிறார்கள். தளியார் என்ற பல வீரர்களும் இதன் முன் செல்கிறார்கள். அன்று கோயில் பசுக்களை எல்லாம் சுதந்திரமாக தெருவில் அவிழ்த்து விட்டு விடுகிறார்கள்.
நான் அன்றிரவு கோட்டை மேல் இருந்து கண்ட காட்சி இதுதான். தீவட்டி வெளிச்சத்தில் காட்சி நன்றாகத் தெரிந்தது. அவர்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவது தெரிந்தது. 

கோயிலின் உள்ளே மற்ற நேரங்களில் தொங்கவிட்டு வைத்திருந்த அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து இவர்கள் ஆடிக் கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. 


ஒரு நடிகர் மீன்போல் வேடம் போட்டுக் கொண்டு எதையோ விழுங்குவது போல் ஆடிக் கொண்டு வந்தார். இது ஏதோ ஒரு கதையைச் சித்தரிக்கிறது என்று தெரிந்தது.  பின்னர் தேவதாசிகள் அத்தெய்வங்கள் முன் நாட்டியம் ஆடுவதைப் பார்த்தேன்.


நான் அங்கிருந்த ஓர் உள்ளூர் இந்துவிடம் ”ஏன் வாய்பேசாத சிலையைப் போய் நீங்கள் கடவுள் என வணங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் ”எங்கள் கடவுளை நாங்கள் கண்ணால் காண முடிகிறது. உங்கள் கடவுளை நீங்கள் பார்க்கக் கூட முடியாதே!” என்று கூறினார். 
ஆனால் இங்கு ஒன்றுமட்டும் மிகவும் வியப்புடன் கூறத்தான் வேண்டும். இவர்கள் (இந்துக்கள்) நம் சமயத்தை பின்பற்றாததால் இருளில் மூழ்கியிருப்பவர்கள் என நாம் நம்புகிறோம். நாமோ ஒளியைக் கண்டவர்கள். இருப்பினும் இவர்களைக் காட்டிலும் நாம் ஏன் மேன்மையாக நடந்து கொள்வதில்லை. கூறப்போனால் மிகவும் கீழ்த்தரமாகத் தான் நடந்து கொள்கிறோம். 

இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பெரும்பாலும் நிலைத்து நிற்கிறது. வணிகர்கள் சரியான எடைகளையும் அளவைகளையும் தான் பயன்படுத்துகிறார்கள். மக்கள் கெட்ட பழக்கங்களை வெறுக்கிறார்கள். 


நம் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் அளவுக்கு மீறி உண்பது, ஏராளமாகக் குடிப்பது போன்ற பழக்கங்கள் இங்கு இல்லை. தரங்கம்பாடியில் உள்ள இந்திய மக்கள் யாராவது குடிகாரனைப் பார்த்து விட்டால் தலையை ஆட்டி மார்பில் அடித்துக் கொண்டு அவன் மீது காறித் துப்புவார்கள். இவனைப் பேய் பிடித்திருக்கிறது என்று கூறுவார்கள்.
டேனிஷ் போர்ட் என்று பெயர் பெற்ற தரங்கம்பாடி கோட்டை மாளிகை மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்லால் ஆன இந்தக் கட்டிடத்தை இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். இவர்கள் நம் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்கிறார்கள். 

இந்த கோட்டையின் நடுவில் எழிலான ஒரு 'சர்ச்' ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதையும் இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். நாம் கொடுத்த டேனிஷ் கட்டிடக்கலை சார்ந்த வரைபடத்தினைப் பின்பற்றி இவர்கள் கட்டியிருக்கிறார்கள்" 

எனக்குத் தெரிந்த வரையில் இவருடைய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. தொல்பொருள் ஆய்வுகளின் முன்னோடி டாக்டர். இரா. நாகசாமியின் சுவாரஸ்யமான அறிமுகத்தால் பெற்ற போதையில் "Memoirs of Jon Olafsson" என்ற இந்தப் பயண நூலை எல்லா புத்தக நிலையங்களிலும் விசாரித்து விட்டேன். யாரிடமும் இல்லை. பல பழைய புத்தகக் கடைகளின் கதவுகளையும் தட்டிவிட்டேன். இதைப் படிக்கும் யாரிடமாவது இருக்குமானால் ப்ளீஸ் தாங்களேன். மொழிபெயர்த்துவிட்டு தந்துவிடுகிறேன்.

23.11.11

மன்னிக்க வேண்டுகிறேன்.


காலங்களைக்
கடந்து நிற்பவை
எல்லாம் கடவுள்.
மதங்களின் எல்லைகள்
அற்றவை கடவுள்.
யாரும் எளிதில்
பின்பற்றமுடியாத
எளிமைதான் கடவுள்.
நேர்மை அன்பு
அர்ப்பணிப்பு-
இவையெல்லாம்
கடவுள்.
நம்பிக்கையும்
தோல்வியும்
கடவுள்.
அறியாமையும் குழந்தையும்
பெண்மையும் கடவுள்.
எல்லாவற்றையும்
விட்டுக்கொடுத்தல் கடவுள்.
பொறுத்து மறப்பது கடவுள்.
இவையெல்லாம்
உங்களிடமிருந்தால்
நீங்களே நீக்கமற
நிறைந்திருக்கும் கடவுள்.
உன்னத இசை கடவுள்.
நற்பண்பெல்லாம் கடவுள்.
மன்னிப்புக் கோருபவரும்
மன்னிப்பவரும் கடவுள்.
எதிரில் இருப்பதை
இல்லாத பொருளில்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும்
நிரூபணங்கள் தேடுகிறோம்.
சந்தேகங்கள் எல்லாம்
அற்ற பின்போ அறாமலோ
இயற்கையின் மடியில்
மரிக்கிறோம்.


நேற்று தொலைபேசியில் அப்துல்லா என்கிற ஒரு நண்பர் போன வருடம் செப்டம்பரில் எழுதியிருந்த இந்தக் கவிதையைப் படித்திருந்ததாகவும் அவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்துக்குத் தீர்வு காணவும் இந்தக் கவிதை உதவியது என்றும் சொல்லி நன்றி பாராட்டியபோது என் கண்கள் கண்ணீரில் கசிந்திருந்தன. 


எழுதினால் பெரிதாய் என்ன கிடைக்கும்? படித்தால் என்ன கிடைத்துவிடும்? என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு என் கண்களிலிருந்து சொட்டிய துளிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அவரின் உரையாடலும் அவர் பற்றிய தகவல்களும் எல்லோருடனும் பகிர்வதற்கானதல்ல. பகிர்வது நாகரீகமும் இல்லை. ஆனால் அந்த உரையாடல் மூலம் எனக்குத் தோன்றிய எண்ணங்கள் இந்த இடுகையில். இந்த இடுகையின் பின்னணியில் என்னுடன் உரையாடிய அப்துல்லாவின் தழுதழுக்கும் குரலை நான் உணர்கிறேன்.

வாழ்க்கையின் துவக்கம் தெரிவது போல் முடிவு தெரியாத ஒரு நாடகத்தில் நாம் வாழப் பணிக்கப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. பொங்கிவழியும் இன்பத்தை வாரி வாரி அளித்த நாட்கள் மறைந்து போய்விடுவதும், எதிர்பாராத கடுமையான சோதனைகளையும் துன்பங்களையும் வழங்கி வாழ்க்கையின் மீதான பிடிப்பையும் நம்பிக்கையையும் தளர்த்தி சஞ்சலத்தையும் சந்தேகத்தையுமே ஆதார எண்ணங்களில் புகுத்தி ஒவ்வொரு நாளையும் நரகமாக மாற்றிவிடுவதும் சுண்டிய நாணயத்தின் இரு பக்கங்களாய் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஒவ்வொரு மனிதனும் தன்னை வேறுவேறுவிதமாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் போலவே நாமும் தெரிந்தும் தெரியாமலும் தவறுகள் இழைக்கும் சுபாவம் உள்ளவர்களாகவே இருக்கிறோம். ஆனால் நம் குற்றத்தை மிகச் சுலபமாக ஒதுக்கிவிட்டு நகர்வதைப் போல பிறரின் தவறுகளை நாம் ஒதுக்கிவிடுவதில்லை. ஏதிலார் குற்றம் போலத் தம் குற்றம் பார்ப்பதில்லை. அதை எத்தனை காலம் முடியுமோ அத்தனை காலம் சுமந்து நமக்கும் பிறருக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறோம். மிகச் சுலபமான ஒரு வடிகால் நம்மிடம் இருந்தாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவே. மன்னிப்புத்தான் அந்த வடிகால்.

தவறிழைத்த ஒருவரை நாம் மன்னிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையை விட மன்னிப்பவர் அடையும் நன்மையே அதிகம்.ஒருவர் செய்த தவறை மட்டுமே நாம் எண்ணும் போதும் அதையே சதா நினைத்துப் பெரிதுபடுத்தும்போதும் அவர் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்படுகிறது. ஆனால் அவரும் மனிதர்தான். தவறுகள் செய்வது சகஜம்தான் என நினைத்து அத்தவறை உடனே மன்னித்துவிடும்போது நமது மனமும் முகமும் சாந்தமாகிவிடுகிறது. நமது இறுக்கமான முகம் நிறைவான புன்னகையுடன் பிறரை வசீகரிக்கிறது. நாம் மன்னிக்கும் போது மன்னிப்பை வழங்க மறுக்கிற ஒருவரை விட அதிகமான நிம்மதியையும் வளங்களையும் பெறுகிறோம்.

நாம் மிகவும் கோபமாகவும் பிடிவாதமாகவும் கடுமையான கொள்கைகளுடனும் இருக்கும் காலங்களில் நம் முகத்திலும் மனதிலும் எழும் எண்ணங்கள் உண்டாக்கும் அதிர்வுகள் நம்மைச் சுற்றி உள்ளவர்களை நம்மிடம் நெருங்க அனுமதி மறுக்கிறது. ஆனால் அந்தத் தவறை மன்னித்து நமது சுமையைக் குறைத்துக்கொள்ளும் போது நம் மனம் எப்போதும் போல மகிழ்வையும் அதிலிருந்து பரவும் சுகந்ததையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அளித்து காரணம் இல்லாமலேயே எல்லோரும் மிக விரும்பக்கூடிய மனிதராக, குணமுள்ளவராக நாம் மாறிவிடுகிறோம்.  

வெறுப்பும் கோபமும் வீண் சந்தேகங்களும் இத்தகைய சாதகமான இனிமையான குணங்களை ஒருபோதும் தருவதில்லை. என்றோ நடந்துமுடிந்த தவறிழைத்தவரே மறக்க நினைக்கிற ஒரு தவறை நாம் சுமக்கும் போது நம் மனதில் அதிர்ச்சியும் மனக்குமுறலும் தொடர்ந்து நம்மையும் பாதிக்கிறது. மாறாக தவறிழைத்தவர் மன்னிப்புக்கோரினாலும் கோராவிட்டாலும் நாமே முன்வந்து மன்னிக்கும் மனதோடு திகழும் போது மன்னிப்புக்கோருபவரை அன்பால் தண்டித்துவிடுகிறோம்.

உங்களில் பாவம் இழைக்கதவர்கள் முதல் கல்லை வீசி எறியுங்கள் என்கிற  பைபிள் சொல்லுகிற பாடம் மன்னிப்புத்தான். மன்னித்து மறந்துவிடும்போது நமது துன்பமும் முடிவுக்குவந்து விடுகிறது.நடந்துமுடிந்த சம்பவத்தை அல்லது தவறை ஒரு பாடமாக நாம் பார்க்கும் முதிர்ச்சியை அடையும் போதுதான் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல முடியும்.நடந்துமுடிந்த ஒரு சம்பவத்தை மாற்ற முடியாது. ஆனால் அதையும் தாண்டிய மகத்தான ஒரு செயல்தான் மன்னிப்பு.

யார் தவறிழைத்தாலும் அவரிடம் அத் தவறால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் அடைந்த துன்பங்களையும் இனி அந்தத் தவறு அடுத்தமுறையும் நடைபெறாதிருக்கவும் மன்னிப்பதாய்ச் சொல்லி மன்னிப்போம். குறைகளும் தவறுகளும் தோல்விகளும் மனித வாழ்க்கையின் மற்றொரு அங்கம் என்பதால் குறைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனதை மாற்றிக்கொள்வோம்.

எந்த நிபந்தனையுமின்றி மன்னிப்புக்கேட்கவும் மன்னிக்கவும் பழகிக்கொள்வோம்.இந்தத் தலைமுறையில் மறைந்துவரும் இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் நாம் சொல்லிக் கொடுப்போம். சொல்லிக் கொடுத்தலின் சிறந்த போதனை நாமே அந்தப் பழக்கத்தை முன்மாதிரியாகச் செய்து காண்பிப்பதுதானே?


நாம் அநேகமாய்
நினைக்க வேண்டியதை
மறக்கவும்
மறக்கவேண்டியதை
நினைக்கவும்
செய்கிறோம்.
மறக்க வேண்டியவற்றை
மறந்தும்
மறக்கக் கூடாததை
நினைத்தும்
வாழ்ந்து காட்டுவோம்
கடவுளாய்.

27.2.11

விடைபெறுகிறேன்


எழுதப் போவதில்லை இனி இந்த மாதம்.
என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் தொந்தரவு செய்து விட்டேன்.
என் மனதும் சரியில்லை.
எல்லோருக்கும் என் நன்றிகள்.

25.12.10

கடவுளின் குழந்தைகள்.


குழந்தைகள் எதையுமே யோசிக்காமலோ காரணமில்லாமலோ சொல்வதோ செய்வதோ இல்லை.

அவர்கள் கையில் எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் அநேகமாக அவர்கள் சொல்வது கவிதையாகவோ உண்மையாகவோ இருக்கிறது.

ஒரு பொய்யை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையுண்டு.உண்மையை மறந்து விடலாம் என்பதையே குழந்தைகளை நினைவில் வைத்துச் சொன்ன வாக்கியமாக இருக்குமோ தெரியவில்லை.

இன்று தஞ்சாவூர்க்கவிராயர் தொலைபேசியில் ஒரு கவிதை வாசித்துக் காட்டினார்.

வானத்தில் வசிப்பது
யார் என்று
கேட்ட குழந்தையிடம்
கடவுள் என்றேன்.
இல்லை
காகம் என்று
திருத்தியது குழந்தை.

இது அவருக்கும் அவரின் இரண்டு வயதுப் பேரனுக்கும் நடுவில் நடந்த சம்பாஷணையில் பிறந்த கவிதை. இதே தஞ்சாவூர்க்கவிராயருக்கு இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்னால் மகன் பிறந்தபோது அவன் அவரிடம் கேட்ட கேள்வியும் இன்னும் என்னிடம் இருக்கிறது. “அப்பா! தண்ணீலயே நீஞ்சிக்கிட்டு இருக்கே இந்த மீன்லாம் ராத்திரீல எப்படீப்பா தூங்கும்?”

ஸென் தத்துவம் சொல்வதும் இதைத்தான்- “எது அநுபவமோ அது கவிதை.”

குழந்தைகளின் கண்களைப் பாருங்கள். அவை பொய் சொல்வதில்லை. அன்பைப் பூசுகின்றன. அவற்றில் கர்வமோ அகம்பாவமோ அலட்சியமோ இல்லை. இவையெல்லாம் ஒரு குழந்தை யோசிக்கத் துவங்கும் வரைதான். அது கண்ணெதிரே ஒரு கடவுளைப் பார்க்கும் போது கடவுளையும் காட்டுமிராண்டியைப் பார்க்கும்போது காட்டுமிராண்டியையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இருக்கிறது.

தினமும் செய்தித்தாள் வாசிப்பவனின் குழந்தைக்கு அந்தப் பழக்கம் தானாய் வந்து அதன்பிறகு தகப்பனால் சுடச்சுட செய்தித்தாள் வாசிக்க முடிவதில்லை என்று சந்தோஷமாய் அலுத்துக் கொள்ள முடிகிறது.புத்தகக் கண்காட்சிக்குப் போகத் துவங்குகிறது.

ஓவியம் தீட்டவும் பாட்டுக்கள் பாடவும் தெரிந்தவளின் குழந்தைக்குத் தொற்றுவியாதி போலத் தானாய்த் தொற்றிக்கொள்கிறது. பாட்டி சொடுகு போட்டபடி இருப்பதைக் காணும் பேத்தி சொடுகுவின் நுணுக்கங்களை இயல்பாய்க் கற்கிறாள்.

அதே போல அப்பாவின் பேச்சு ஒரு வீட்டில் எல்லோரையும் ஆட்டுவித்தால் அதே பாணியில் பேசவும் நகலெடுக்கவும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்கிறது. விரும்புகிறது. தாயைப் போலப் பிள்ளையும் நூலைப் போலச் சேலையும்.

எழுதிக்கொண்டிருக்கும்போது ஒஷோ சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஆசிரியை வகுப்பின் குழந்தைகளிடம் ஏசுவின் படத்தை வரையச் சொல்ல எல்லாக் குழந்தைகளும் தங்கள் மனதிலுள்ள ஏசுவை வரைந்துகொண்டிருக்க என்னைப் போலிருந்த ஒரு குழந்தை மட்டும் விமானத்தின் படத்தை வரைந்து மூன்று இருக்கைகளுடன் முடித்தது. ஆசிரியை என்னமுயன்றும் குழந்தையின் மனதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் கேட்க குழந்தை சொன்னது:

”முதல் இருக்கையில் ஏசு. இரண்டாவது இருக்கையில் அவருடைய அம்மா.”
”சரி. மூன்றாவது இருக்கை காலியாக இருக்கிறதே அதில் யார்?”
“அதுதான் பைலட்டுக்கு. அவரில்லேன்னா ப்ளேன் கீழ விழுந்துடும்ல”

ஆக குழந்தைகளின் மனது தர்க்கங்களுக்கு விடையை நேரடியாகச் சொல்வதாகவும் மற்றொரு பார்வையில் மிக எளிமையானதாகவும் இருக்கிறது.

குழந்தைகள் பூட்டாத கதவுகளுக்குச் சாவியைத் தேடுவதில்லை. தேவையற்ற இடங்களில் நம்பிக்கை கொள்வதிலை. தேவையான இடங்களில் சந்தேகம் கொள்வதில்லை. ஒரு ஊதுவத்தியின் சுழலும் நறுமணப்புகை போல-வெற்றிடங்களையெல்லாம் நிரப்பும் ஒப்பில்லாத இசை போல- இருக்குமிடங்களை தெய்வீகமானதாய் சுகந்தமானதாய் மாற்றுகிறார்கள்.

என்றும் உங்களின் உற்சாகத்தையும் இளமையையும் காத்துக் கொள்ள இரண்டு காயகல்பங்கள் உள்ளன. அதில் ஒன்று குழந்தைகளின் சகவாசம். கரைந்து
போய்விட்ட என் குழந்தைமையைத் தேடியலைகிறேன் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தையின் பின்னும்.

5.11.10

அரட்டை


மழை விடாது ஒரு வாரம் கொட்டித் தீர்த்தபின் ”அப்பாடா!வெயில எப்படா பாப்போம்னு ஆயிடுச்சு”

போன தடவை பாத்ததுக்கு இந்த தடவை எளச்சிட்டே.ரொம்ப அலச்சலோ?(பிடிக்காதவங்களா இருந்தா) ரொம்ப குண்டாயிட்டே.

இந்த தடவை மாதிரி எப்பவும் வெயில் பொரிஞ்சதில்லை. கலிகாலம்.

இந்த ஜனநாயகம்லாம் நம்ம நாட்டுக்கு சரிப்பட்டுவராது. பாகிஸ்தான் மாதிரி ராணுவ ஆட்சிதான் சரி.

ரோட எப்பிடிப் போட்டுருக்கான் பாரு. கண்டிப்பா டெண்டர் எடுத்த ஒடனே பொட்டி கொடுத்திருப்பான்.

இந்த ரயில் ரைட் டைமுக்கு எக்மோர் போயிடுமா?

என்னப்பா இருக்கு சூடா? இட்லி-வடை-பொங்கல்-பூரி-தோசை சார்.

என்ன தம்பி ஹேர்கட்ட இப்பிடி சொதப்பிட்ட? அடுத்த தடவ பாருங்க சார் ஒங்கள யாருக்குமே அடையாளம் தெரியாம பண்ணிடலாம்.

காய்கறில்லாம் என்னம்மா இப்பிடி வெரைப்பா இருக்கு? வெண்டைக்காயும் பொடலங்காயும் ஒடைச்சாலும் ஒடையாது போல. எல்லாத்துலயும் ஒரத்தப் போட்டு இப்பிடி ஆயிடிச்சி சார். ஏந் தலயெழுத்து விக்கிறேன். ஓந் தலயெழுத்து வாங்குற.

ட்ராஃபிக் போலீஸெல்லாம் ரொம்ப அநியாயம் பண்றாங்க. எல்லார் கிட்டையும் மாமூல். எல்லாத் தப்பையும் அலவ் பண்றாங்க. எங்க போய் முடியப்போகுதோ.

நானும் பாத்துட்டேன் சார். ரஜினி மாதிரி கால்குலேட்டிவ் யாரும் கெடையாது. வெச்ச குறி தப்பறதில்லை. ஆனா அரசியலுக்கு அவர் வருவாரா? மாட்டாரா?

ஒரு நாள் பாருங்க இந்த விஜயகாந்த் தமிழ்நாட்ட ஒரு கலக்குக் கலக்கத்தான் போறாரு.நீங்களும் பாக்கத்தான் போறீங்க.

இப்படியெல்லாம் யாரும் யாரோடும் பேசிக்கொள்வதில்லை. மொபைல் ஃபோன் அந்த இடத்தைப்பிடித்துக் கொள்ள அந்தக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எதிரில் இருப்பவரோடும் மொபைல் ஃபோனில் பேசுவதுதான் எளிதாகிவிட்டது. அரட்டை என்பது முகமற்ற குரல் என்ற அளவில் இருக்கிறது.

பயணங்களிலும் பொது இடங்களிலும் தெருவில் நடக்கையிலும் அநேகமாக யாரும் பேசிக்கொள்வதில்லை. அல்லது வீட்டுத் தகராறு அல்லது உடல்நிலைக் கோளாறு அல்லது அடுத்தவனின் வளர்ச்சியில் பொறாமை என்று ஏதாவதொன்று அரைக்கப்படுகிறது.

இந்த பொது அரட்டைகள் குறைந்து போனது நமது ஆரோக்கியத்துக்கும் மனநிலைக்கும் உலைவைக்கும் செயலாக எனக்குத் தெரிகிறது. எல்லோரின் முகமும் ஒரே பாவத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது.
இனி யாரையாவது பார்க்கும் போது மேற்கண்ட வசனங்கள் ஏதாவதொன்றை உபயோகித்துக் கொள்ளவும்.

23.10.10

என் ஆணவம்


ஒரு பெரிய இறுதிநாள் தெரியாத நாட்காட்டியில் தினசரித் தாட்கள் உதிர்ந்தபடி இருக்கின்றன.

என் கடந்த பாதையை உற்று நோக்கும் போது எத்தனை தவறுகளையும்-அகங்காரமான செய்கைகளையும்-செய்திருக்கிறேன் என்று புரிகிறது.

எத்தனை விஷயங்கள் தெரிந்து கொண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது இன்றும் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என் அகங்காரத்தின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறது.

பாலோ கோய்லோ சொல்வது போல் ஒரு விஷயம் நமக்குத் தெரியாது என்கிற போது நாம் எத்தனை தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்- இது தெரியாது நாமிருக்கிறோம் என்ற கூச்சத்துடன்.

ஆக நான் தினமும் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கும்போது, என் இறுதி நாளிலும் கற்றுக்கொள்ளக் கைவராத இயலாமையுடன் தான் நான் விடைபெறுகிறேன் எனும்போது இயற்கையின் முன் நான் எத்தனை சிறியவன் என்ற அனுபவம் வாய்க்கிறது.

எனக்குத் தெரியாத- தெரிந்து கொள்ள முடியாத எத்தனை விஷயங்களின் மீது நான் சிறிதும் தயக்கமின்றி அபிப்பிராயம் சொல்கிறேன்? எத்தனை ஆணவத்துடன் எனக்குத் தெரியாததில்லை என்று மார்தட்டுகிறேன்?

ஆக நாளையும் கற்றுக்கொள்வதற்கு நான் தயாராகிறேன் எனும்போது ஆணவமற்ற ஒரு இலையின் மிதப்பு எனக்கு வாய்க்கிறது.

நினைத்துப் பார்ப்பதை விட எல்லோரும் அறிய எழுதிப்பார்ப்பது உயரியது. என் ஆணவத்தை ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள் என் இனிய நாள்.

15.9.10

கடவுள்


இருப்பிலேயே
மிகவும்
தெளிவானதும்
உன்னதமானதும்
கடவுள் குறித்த
தத்துவங்கள்தான்.
காலங்களைக்
கடந்து நிற்பவை
எல்லாம் கடவுள்.
மதங்களின் எல்லைகள்
அற்றவை கடவுள்.
யாரும் எளிதில்
பின்பற்றமுடியாத
எளிமைதான் கடவுள்.
நேர்மை அன்பு
அர்ப்பணிப்பு-
இவையெல்லாம்
கடவுள்.
நம்பிக்கையும்
தோல்வியும்
கடவுள்.
அறியாமையும் குழந்தையும்
பெண்மையும் கடவுள்.
எல்லாவற்றையும்
விட்டுக்கொடுத்தல் கடவுள்.
பொறுத்து மறப்பது கடவுள்.
இவையெல்லாம்
உங்களிடமிருந்தால்
நீங்களே நீக்கமற
நிறைந்திருக்கும் கடவுள்.
உன்னத இசை கடவுள்.
நற்பண்பெல்லாம் கடவுள்.
மன்னிப்புக் கோர்பவரும்
மன்னிப்பவரும் கடவுள்.
எதிரில் இருப்பதை
இல்லாத பொருளில்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும்
நிரூபணங்கள் தேடுகிறோம்.
சந்தேகங்கள் எல்லாம்
அற்ற பின்போ அறாமலோ
இயற்கையின் மடியில்
மரிக்கிறோம்.

12.9.10

கவிஞன்


ஓஷோவின் தத்துவங்களுக்கும் தேடல்களுக்கும் அவருடைய வாசிப்பும் உள்ளுணர்வுச் சிந்தனையும் பெரும் பங்கு வகிக்கிறது. வாசித்த லட்சக்கணக்கான புத்தகங்களில் அவருக்கு மிகவும் பிடித்தவை என்று நூற்றிஅறுபதை ஒட்டித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அவற்றில் மிகப் பழமையான தத்துவ நூல்களும்,மிகப் புதுமையான ஹிந்தி எழுத்தாளர் வாத்ஸ்யாயனா வரையும்,டாஸ்டயேவ்ஸ்கி தொடங்கி கலீல் கிப்ரான் வரையும் குர்ட்ஜியெஃப் தொடங்கி ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி வரையும் என எல்லாத் துறைகளிலும் அவரின் தேர்வு இருந்தாலும் அவரை கவிதைகளும் தத்துவங்களும் தான் அதிகமாக ஈர்த்திருக்கின்றன.

நல்ல வாசிப்பும் ஆழ்ந்த அகப்பார்வையும் உள்ளவர்கள் கவிதையையும் தத்துவத்தின் சாற்றையும் தனித்தனியே பார்ப்பதில்லை.தண்டவாளம் போல ஒன்று மற்றொன்று சிறக்க உதவுகிறது அல்லது ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. கவிதையின் பரவசம் எழுதவும் தத்துவத்தின் செழுமை எழுதாமலிருக்கவும் உதவுகிறது.

நல்ல கவிஞர்கள் என்று காலத்தால் அடையாளம் காட்டப்படுபவர்கள்  நிச்சயம் சில தன்மைகளுக்குள் அடைபடுகிறார்கள்.

1.தத்துவ விசாரம் 2. ஆழ்ந்த எளிமை 3. அகந்தையற்ற மனம் 4. எழுத்து மற்றும் வாழ்க்கை இரண்டிலும் ஒரே நிலை. 5.நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடிக்கும் போக்கு.

இவை அனைத்தும் பெற்றவர்கள் நல்ல மனிதர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் படைப்புக்களும் அமரத் தன்மையுறுகின்றன. ஒரு புத்தகம்-ஒரு சினிமா-சில ஓவியங்கள் என்று அவர்களின் படைப்புகள் எண்ணிக்கையில் சிறிதெனினும் அமிர்தத்தின் சுவையுடன் இருக்கிறது.

எல்லோரும் கவிதைகள் எழுதுகிறார்கள். எல்லோரும் பாராட்டப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே காலத்தால் கவனிக்கப்படுகிறார்கள். இன்று பாராட்டப் படுபவர்கள் தயவு தாட்சண்யமற்று கைகள் வழியே கவனிப்பற்று ஒழுகும் நீரைப் போல காணாது மறைகிறார்கள்.

20.7.10

எளிமை குறித்து


சிறு வயதில் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் வந்திருந்தது. நாங்கள் பார்க்கப் போனோம். ஒரு கோமாளி மேசையைத் தாண்டி பாய்வான். ஒவ்வொரு முறை அவன் பாயும்போதும் மேசை விரிப்பு நைஸாக நழுவி கீழே விழும். ஒரே சிரிப்பு.

வீட்டில் வந்து நான் இதைச் செய்ய முயற்சித்தபோது மூக்கில் அடிபட்டதுதான் மிச்சம். அந்தக் கோமாளி அதைச் செய்தபோது மிகச் சுலபம் போல தோன்றியது. ஆனால் அதற்கு பின்னால் 20 வருட பயிற்சி இருப்பது எனக்கு தெரியவில்லை. ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.

ஒரு பெரிய எழுத்தாளர் சொல்வார், தண்ணீர் ஆற்றில் தெளிவாக ஓடும்போதுதான் தரை தெரியும் என்று. ஆழமில்லை என்று குதிக்கவும் தோன்றும். ஆனால் நிஜத்தில் அதுதான் மிகவும் ஆழமான ஆறு.
சமீபத்தில் இங்கே ˜கான்கான்˜ நடனம் ஒன்றைப் பார்க்கப் போயிருந்தேன். இளம் பெண்கள் எல்லாம் காலை நெற்றிக்கு மேலே துக்கி ஆடும் நடனம். இதிலே ஒரு முதியவரும் அடக்கம். அவரால் காலை இடுப்புக்குமேல் தூக்க முடியவில்லை. ஆனாலும் எல்லோரும் அவரைத்தான் பார்த்தார்கள். அவருடைய அசைவுகள் எளிமையாகவும், ரசிக்கத்தக்கவையாகவும் இருந்தன. காரணம் அந்த நடனத்தில் வாழ்நாள் முழுக்க அவர் செய்த அப்பியாசம் என்று தெரிந்தது.

J.D.Salinger என்று ஒரு எழுத்தாளர். அவர் இளவயதில் எழுதிய ஒரேயொரு நாவல்தான் "The Catcher in the Rye˜. இன்றும் அவர் எழுதினால் மில்லியன் டொலர்கள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பேசும் இந்த நாவலில் அப்படி என்ன இருக்கிறது. எளிமையான எழுத்துதான். ஒரு பதின்பருவத்து பையனைப் பற்றியது. அந்த எழுத்தின் எளிமையும், ஆழமும் அபூர்வமாக அமைந்தவை.

பாரதியார் கவிதை, கட்டுரை என்று எழுதிய பிறகு அவற்றை உரக்க வாசித்து காட்டுவார். கேட்போரின் முகக்குறிப்பை பார்த்துக்கொண்டே படிப்பார். புரியாத சில வார்த்தைகள் இருந்தால் அவற்றை எடுத்துவிட்டு வேறு வார்த்தை போடுவாராம். பாரதியாருக்கு அவர் எழுதுவது வாசகருக்கு நேரடியாக போய் சேரவேண்டுமென்பது மிக முக்கியம்.

நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.

ஆனால் மெளனி, Dostoevsky போன்றவர்களின் சிக்கலான எழுத்துக்களில் கூட அழகுண்டு. அது வேறு விதமான அழகு. இவர்களை நான் படித்து மிகவும் அனுபவித்திருக்கிறேன். அவர்களுக்கு கை வந்தது அது. எனக்கு இது சரிவருகிறது. நான் என் பாதையில் போகிறேன்.
-அ.முத்துலிங்கம்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...