20.7.10

எளிமை குறித்து


சிறு வயதில் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் வந்திருந்தது. நாங்கள் பார்க்கப் போனோம். ஒரு கோமாளி மேசையைத் தாண்டி பாய்வான். ஒவ்வொரு முறை அவன் பாயும்போதும் மேசை விரிப்பு நைஸாக நழுவி கீழே விழும். ஒரே சிரிப்பு.

வீட்டில் வந்து நான் இதைச் செய்ய முயற்சித்தபோது மூக்கில் அடிபட்டதுதான் மிச்சம். அந்தக் கோமாளி அதைச் செய்தபோது மிகச் சுலபம் போல தோன்றியது. ஆனால் அதற்கு பின்னால் 20 வருட பயிற்சி இருப்பது எனக்கு தெரியவில்லை. ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.

ஒரு பெரிய எழுத்தாளர் சொல்வார், தண்ணீர் ஆற்றில் தெளிவாக ஓடும்போதுதான் தரை தெரியும் என்று. ஆழமில்லை என்று குதிக்கவும் தோன்றும். ஆனால் நிஜத்தில் அதுதான் மிகவும் ஆழமான ஆறு.
சமீபத்தில் இங்கே ˜கான்கான்˜ நடனம் ஒன்றைப் பார்க்கப் போயிருந்தேன். இளம் பெண்கள் எல்லாம் காலை நெற்றிக்கு மேலே துக்கி ஆடும் நடனம். இதிலே ஒரு முதியவரும் அடக்கம். அவரால் காலை இடுப்புக்குமேல் தூக்க முடியவில்லை. ஆனாலும் எல்லோரும் அவரைத்தான் பார்த்தார்கள். அவருடைய அசைவுகள் எளிமையாகவும், ரசிக்கத்தக்கவையாகவும் இருந்தன. காரணம் அந்த நடனத்தில் வாழ்நாள் முழுக்க அவர் செய்த அப்பியாசம் என்று தெரிந்தது.

J.D.Salinger என்று ஒரு எழுத்தாளர். அவர் இளவயதில் எழுதிய ஒரேயொரு நாவல்தான் "The Catcher in the Rye˜. இன்றும் அவர் எழுதினால் மில்லியன் டொலர்கள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பேசும் இந்த நாவலில் அப்படி என்ன இருக்கிறது. எளிமையான எழுத்துதான். ஒரு பதின்பருவத்து பையனைப் பற்றியது. அந்த எழுத்தின் எளிமையும், ஆழமும் அபூர்வமாக அமைந்தவை.

பாரதியார் கவிதை, கட்டுரை என்று எழுதிய பிறகு அவற்றை உரக்க வாசித்து காட்டுவார். கேட்போரின் முகக்குறிப்பை பார்த்துக்கொண்டே படிப்பார். புரியாத சில வார்த்தைகள் இருந்தால் அவற்றை எடுத்துவிட்டு வேறு வார்த்தை போடுவாராம். பாரதியாருக்கு அவர் எழுதுவது வாசகருக்கு நேரடியாக போய் சேரவேண்டுமென்பது மிக முக்கியம்.

நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.

ஆனால் மெளனி, Dostoevsky போன்றவர்களின் சிக்கலான எழுத்துக்களில் கூட அழகுண்டு. அது வேறு விதமான அழகு. இவர்களை நான் படித்து மிகவும் அனுபவித்திருக்கிறேன். அவர்களுக்கு கை வந்தது அது. எனக்கு இது சரிவருகிறது. நான் என் பாதையில் போகிறேன்.
-அ.முத்துலிங்கம்

7 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.
நிச்சயமாய் இதுவே எழுத்தின் நோக்கம். பிரியத்தைக் காட்டும்போது அதுவும் பிறருக்கு புரியும்படியே இருக்க வேண்டும். இன்றும் பல குடும்பங்களீல் சச்சரவும் வீண் விளைவுகளும் ‘என்னைப் புரிஞ்சுக்கலை’ என்கிற ஆதங்கமும் தெளிவற்ற வார்த்தைகளால்தான். எழுத்து புரிந்து கொள்ளப்பட்டு மனதைத் தொட வேண்டும் என்பதில் எனக்கு பூர்ண சம்மதம்.

கமலேஷ் சொன்னது…

மிக நல்ல பகிர்வு தோழரே...
நிறைய தேடல் உங்கள் எழுத்திடம் தெரிகிறது.

ஹேமா சொன்னது…

எங்கும் ...எந்த விஷயத்திலும் புரிதல் தேவைப்படுகிறது.
எழுத்து வாசகரிடம் விமர்சனமாக்கப்படும்போதுதான் எழுதிய எங்களை நாங்களே புரிய முடிகிறது.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நல்ல பகிர்வு சுந்தர்ஜி..ரசித்தேன்

சுந்தர்ஜி சொன்னது…

நல்ல கருத்துக்களுக்கு நன்றி ரிஷபன்.நம் பாதைதான் அதுவும்.

நன்றி கமலேஷ்.

நன்றி ஹேமா.என் பேனா விரும்பும் மை எளிமை.

நன்றி தேனம்மைலக்ஷ்மணன்.முதல் முறை வருகைக்கும் ரசனைக்கும்.

அப்பாடா!ஒரு வாரம் விட்டுப்போன நன்றியையெல்லாம் இறக்கிவச்சாச்சு.

Madumitha சொன்னது…

கடினமாக எழுதுவதை விட
எளிமயாக எழுதுவதுதான்
கடினம்.

எளிமை என்பது
குழந்தை கனவில் உதிர்க்கும்
புன்னகை போன்றது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.
அனுபவம் ஜொலிக்கும் பாடம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...