29.7.13

சுபாஷிதம் - 6

101.
சந்தனம் ஷீதலம் லோகே சந்தனாதபி சந்ரமா:
சந்ரசந்தனயோரபி ஷீதல ஸாதுஸங்கத:

சந்தனம் குளிர்ச்சியானது; அதனினும் நிலவொளி குளிச்சியானது; சாதுக்களின் அண்மை இரண்டையும்விட  குளிர்ச்சியானது.

102.
ஸமானீ  வ: ஆகூதி: ஸமானா ஹ்ருதயானி வ:
ஸமானமஸ்து வோ மனோ யதா வ: ஸுஸ்ஹாஸ்தி
-ரிக் வேத (10.191.4) 

உங்கள் தீர்மானங்கள் ஒன்றானதாக இருக்கட்டும்; உங்கள் உணர்வு ஒன்றானதாக இருக்கட்டும்; உங்கள் சிந்தனை ஒன்றானதாக இருக்கட்டும் - இப்படியான அற்புதச் சூழல் இயல்பாய் அமையட்டும். 
(ரிக்  வேதம்)

(சமுதாயத்துக்கே அவசியமான பொதுவான சங்கல்பத்துடன், ரிக் வேதத்தை நிறைவு செய்யும் ச்லோகம் இது. 

பாலகங்காதர திலகர் தனது ”கீதா ரஹஸ்யம்” எனும் பகவத் கீதை விரிவுரையை இந்த ச்லோகத்துடனேயே நிறைவு செய்திருப்பார்.)

103.
கர்தவ்யம் ஆசரம் காமம் அகர்தவ்யம் அநாசரம்
திஷ்டதி ப்ராக்ருதாசாரோ ய ஸ: ஆர்ய ஜதி ஸ்ம்ருத:
-யோக வஸிஷ்ட

செய்ய வேண்டிய செயல்களைச் செய்து முடிப்பவனும், அல்லாதவற்றைச் செய்யாதிருப்பவனும், பகுத்தறிந்து செயல்படுபவனுமே ஆர்யன் எனப்படுபவன். 
(யோக வஸிஷ்டம்)

[ஆரியன் எனக் குறிப்பிடப்படுவது ஓர் இனத்தைக் குறித்தல்ல. இச் ச்லோகம் சொல்லும் செயல்திறன் உடைய எல்லோரும் ஆரியரே.] 

104.
பரோ அபி ஹிதவான் பந்து: பந்து: அபி அஹித: பர:
அஹித: தேஹஜ: வ்யாதி: ஹிதம் ஆரண்யம் ஔஷதம்
-ஹிதோபதேஷ்

நன்மை நினைப்பவன் எங்கோ இருப்பினும் அவனே உறவினன்;
தீமை நினைப்பவன் உடன் இருப்போனாயினும் அவன் உற்றவன் அல்லன் - உடலுடன் இருக்கும் நோயையும், காட்டில் இருக்கும் மூலிகையையும் போல. 
(ஹிதோபதேசம்) 

105.
பரஸ்பரவிரோதே து வயம் பஞ்சஷ்சதே ஷதம்
பரைஸ்து விக்ரஹே ப்ராப்தே வயம் பஞ்சாதிகம் ஷதம்

நமக்குள் மோதுகையில் நாம் ஐவர்; அவர்கள் நூற்றுவர்.
நம் பொது எதிரிக்கு முன் நாம் நூற்று ஐவர்.

(ஆரண்ய பர்வத்தில் கந்தர்வர்கள் கௌரவர்களைத் தாக்கியபோது அவர்களுக்கு உதவத் தயங்கிய பீமனுக்கு யுதிஷ்டிரர் அறிவுறுத்தியது.)

106.
வ்யஸனே மித்ரபரீக்ஷா ஷூரபரீக்ஷா ரணாங்கணே பவதி
வினயே ப்ருத்யபரீக்ஷா தானபரீக்ஷாச துர்பிக்ஷே

நட்பை வாதனையிலும், வீரத்தைப் போர்க்களத்திலும், பணிவைப் பணியாளனிடமும், கொடையைப் பஞ்ச காலத்திலும் சோதித்துப் பார்க்கவேண்டும். 

107.
ராஜா ராஷ்ட்ரக்ருதம் பாபம் ராஜ்ய: பாபம் புரோஹித:
பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் ஷிஷ்யபாபம் குரூ: ததா

நாடு செய்யும் பாவங்களுக்கு அரசனும், அரசன் செய்யும் பாவங்களுக்கு மந்திரிகளும், மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும், சீடன் செய்யும் பாவங்களுக்கு ஆசானும் பொறுப்பாவார்கள்.

108.
புஸ்தகஸ்தா து யா வித்யா பரஹஸ்தகதம் தனம்
கார்யகாலே ஸமுத்பன்னே ந ஸா வித்யா ந தத் தனம்

நூலோடு உறைந்த ஞானமும், இன்னொருவரிடம் இருக்கும் செல்வமும் இடருற்ற காலத்தில் உதவாது.

109.
அதமா: தனமிச்சந்தி தனம் மானம் ச மத்யமா:
உத்தமா: மானமிச்சந்தி மானோ ஹி மஹதாம் தனம்

செல்வத்தை மட்டும் விரும்புவர் கீழோர்; செல்வத்தையும் மானத்தையும் விரும்புவோர் நடுத் தரத்தோர்; மானத்தை மட்டும் விரும்புவோர் மேலோர்; மானமே மிகப் பெரும் செல்வம். 

110.
யே ச மூடதமா: லோகே யே ச புத்தே: பரம் கதா:
தே ஏவம் ஸுகம் ஏதந்தே மத்யம: க்லிஷ்யதே ஜன:
மஹாபாரத். (12:25.28)

வாழ்க்கையில் மூடர்களும், புத்திசாலிகளுமே சுகமடைகிறார்கள்; பெரும்பான்மையான நடுத்தர மக்கள் துன்பத்தையே அநுபவிக்கிறார்கள். (மஹாபாரதம்-12:25.28)

111.
அதித்ருஷ்ணா ந கர்தவ்யா த்ருஷ்ணாம் நைவ பரித்யஜேத்
ஷனை: ஷனைஷ்ச போக்தவ்யம் ஸ்வயம் வித்தமுபார்ஜிதம்

அளவு கடந்த பற்றும், துறவும் விலக்கப்பட வேண்டியவை; சுயமாகச் சேகரித்த செல்வத்தால் நிதானத்துடன் வாழ்வைச் சுவைக்கலாம். 

112.
வ்ருதா வ்ருஷ்டி: ஸமுத்ரேஷு வ்ருதா த்ருப்தேஷு போஜனம்
வ்ருதா தானம் தனாத்யேஷு வ்ருதா தீபோ திவாபி ச

கடலில் பொழியும் மழையும், பசியற்றவனுக்கு அளிக்கும் உணவும் பயனற்றவை. இருப்பவனுக்குக் கொடுப்பது பகலில் விளக்கேற்றுதலுக்கு ஒப்பானது.

(உவர்நீர் நிரம்பிய கடலில் பொழியும் மழை:- பசியற்றவனுக்கு அளிக்கும் உணவுக்கு இதைவிடக் கவித்வமான உவமை இருக்க முடியுமா? என வியந்து மாய்கிறேன்.) 

113.
பிபந்தி நத: ஸ்வயம் ஏவ ந அம்ப: ஸ்வயம் ந காதந்தி ஃபலானி வ்ருக்ஷா:
ந அதந்தி ஸஸ்யம் கலு வாரிவாஹா பரோபகாராய ஸதாம் விபூதய:

நதிகள் தன்னில் பாயும் நீரைப் பருகுவதில்லை; தன்னில் பழுத்த கனிகளை மரங்கள் புசிப்பதில்லை; மேகங்கள் தாம் விளைவித்த பயிர்களைத் தாமே உண்பதில்லை. மேன்மையான மக்களும் தம் சொத்துக்களைத் தாமே அநுபவிப்பதில்லை. 

114.
க்ரோதோ வைவஸ்வதோ ராஜா த்ருஷ்ணா வைதரணீ நதீ
வித்யா காமதுதா தேனு: ஸந்தோஷோ நந்தனம் வனம்
-ஷுக்ரநீதி

சினம் மரணத்தின் அரசன்; பேராசை நரகத்தில் பாயும் வைதரணீ நதி;அறிவு எல்லாவற்றையும் அளிக்கும் காமதேனு;அது தரும் பேரானந்தம் சொர்க்கம்.  
-ஷுக்ர நீதி

115.
லோபமூலானி பாபானி சங்கடானி ததைவ ச
லோபாத்ப்ரவர்ததே வைரம் அதிலோபாத்விநஷ்யதி

அத்தனை பாவங்களுக்கும், சங்கடங்களுக்கும் ஆணிவேர் பேராசை; பேராசை பகையை வளர்க்கிறது; அளவுக்கதிகமான பேராசை ஆளையே வீழ்த்துகிறது.

116.
தைர்ய யஸ்ய பிதா க்ஷமா ச ஜனனீ ஷாந்தி: சிரம் கேஹினீ
ஸத்யம் ஸூனு: அயம் தயா ச பகினீ ப்ராதா மன:ஸம்யம்
ஷையா பூமிதலம் திஷ: அபி வஸனம் ஞானாம்ருதம் போஜனம்
ஏதே யஸ்ய குடும்பின: வத ஸகே கஸ்மாத் பயம் யோகின:

ஒரு யோகிக்குத் தந்தை துணிவு; தாய் மன்னிப்பு; மனைவி அமைதி; அவன் மகன் வாய்மை; சகோதரி கருணை; சகோதரன் மனக்கட்டுப்பாடு; பூமியே படுக்கை; திசைகளே ஆடை; ஞானமே உணவு. இவையனைத்தும் அவன் குடும்பம் ஆன பின் அவனுக்கு ஏது அச்சம்?  

117.
மஹாஜனஸ்ய ஸம்ஸர்க: கஸ்ய நோன்னதிகாரக:
பதம்பத்ரஸ்திதம் தோயம் தத்தே முக்தாஃபலக்ஷியம்

சான்றோரின் உறவால் யார்தான் பயனடைய மாட்டார்கள்? - தாமரை இலை மேல் உருளும் நீர்த்துளி முத்தின் தோற்றமளிப்பது போல.

118.
மூர்கோ ந ஹி ததாதி அர்த நரோ தாரித்ரியஷங்கயா
ப்ராக்ஞ: து விதரதி அர்த நரோ தாரித்ரியஷங்கயா
-போஜப்ரபந்த

தான் வறியவனாகி விடக்கூடுமோ என்ற அச்சமே முட்டாளைத் தானம் செய்யாதிருக்கவும், புத்திசாலியைத் தானம் செய்யவும் வைக்கிறது.
-போஜ ப்ரபந்தம்  

119.
ஸ்வபாவோ நோபதேஷேன ஷக்யதே கர்துமனஸ்யதா
ஸுதப்தமபி பானீயம் புனர்கச்சதி ஷீததாம்

ஒருவன் குணத்தை அறிவுரையால் மாற்றிவிட முடியாது - கொதிக்க வைக்கப்பட்ட நீர் மீண்டும் தன் குளிர்நிலைக்கு மாறிவிடுவதைப் போல. 

120.
யஸ்மின் ஜீவதி ஜீவந்தி பஹவ: ஸ து ஜீவதி
காகோபி கிம் ந குரூதே சஞ்சவா ஸ்வோதரபூரணம்
-பஞ்சதந்ர

பிறர்க்கென வாழ்ந்தோரே வாழ்ந்தோராய்க் கருதப்படுவர். உயிருடன் இருப்பது வாழ்வது எனில் ஒரு காகம் கூட அதைச் சாதித்துவிடும்.  
-பஞ்ச தந்திரம்.

27.7.13

சுபாஷிதம் - 5

81.
ப்ரதமே நார்ஜிதா வித்யா த்விதீயே நார்ஜிதம் தனம்
த்ருதீயே நார்ஜிதம் புண்யம் சதுர்த்தே கிம் கரிஷ்யதி

முதல் பருவத்தில் கல்வியையும், இரண்டாம் பருவத்தில் பொருளையும், மூன்றாம் பருவத்தில் புண்ணியத்தையும்  பெறாத ஒருவனுக்கு நான்காம் பருவத்தில் அடைய என்ன இருக்கப் போகிறது?

[ ஹிந்து தர்மத்தின் படி, 
முதலாம் பருவம் ப்ரும்மச்சர்யாஸ்ரமம் (தனக்காய்க் கற்றலும், கேட்டலும்); 
இரண்டாம் பருவம் க்ருஹஸ்தாஸ்ரமம் (தன் குடும்பத்தின் பொருட்டுப் பொருளீட்டலும், இனவிருத்தியும்); 
மூன்றாம் பருவம் வானப்ரஸ்தாஸ்ரமம் (தன் சமூகத்தை முன்னிறுத்திப் பொருட்பற்றைத் துறந்து புண்ணியம் எய்துதல்); 
நான்காம் பருவம் சன்யாஸஆஸ்ரமம் (எல்லாவற்றையும் துறந்து வீடு பேறு எய்தல்) ]    

82.
அநாரம்போ ஹி கார்யாணாம் ப்ரதமம் புத்திலக்ஷணம்
ப்ராரப்தஸ்ய அந்தகமனம் த்விதீயம் புத்திலக்ஷணம்

நம் சக்திக்கு அப்பாற்பட்ட செயலைத் துவங்காதிருப்பது புத்திசாலித்தனத்தின் முதல் படி; அப்படித் துவங்கிய செயலையும் விடாது செய்து முடிப்பது அதன் இரண்டாம் படி.

83.
லௌகிகானாம் ஹி ஸாதூனாம் அர்தம் வாகனுவர்த்ததே
ரிஷீணாம் புனராதயானாம் வாசம் அர்தோனுதாவதீ

சாதாரண மனிதர்கள் உதிர்க்கும் விளக்கங்களை வார்த்தைகள் தொடர்கின்றன; ஆனால் முனிபுங்கவர்களின் வார்த்தைகளையோ  விளக்கங்கள் தொடர்கின்றன.

84.
பரோபதேஷ்வேலாயாம் ஷிஷ்டா: ஸர்வே பவந்தி வை
விஸ்மரந்தீஹ ஷிஷ்டத்வம் ஸ்வகார்யே ஸமுபஸ்திதே

பிறரின் துயருக்கு அறிவுரை வழங்கும் எல்லோரும் தன் சோதனைக் காலங்களில் அவ்விதமான புத்தியை உபயோகிப்பதில்லை.

85.
நிர்விஷேணாபி ஸர்பேண கர்தவ்யா மஹதி ஃபணா
விஷமஸ்து ந சாண்யஸ்து ஃபடாடோபோ பயங்கர:

நச்சுள்ள போதும், அற்ற போதும் பாம்பு கடிப்பது போல் சீறும்; பிறரை அச்சப்படுத்த அந்தப் படாடோபம் தேவை.     

86.
குணவந்த: க்லிஷ்யந்தே ப்ராயேண பவந்தி நிர்குணா: ஸுகின:
பந்தனமாயாந்தி ஷுகா யதேஷ்டசஞ்சாரிண: காகா:

நற்குணம் வாய்த்தவர்கள் துன்புறுவதும், பிறர் சுகமுற்றிருப்பதும் கிளி கூண்டில் அடைபட்டிருப்பதையும், காக்கை சுதந்திரமாய் வானில் பறப்பதையும் ஒத்தது.    

87.
அபிமானோ தனம்யேஷாம் சிரஞ்சீவந்தி தே ஜனா:
அபிமானவிஹீனானாம் கிம் தனேன கிமாயுஷா

சுய கௌரவம் பெற்றவர்களே இறவாமையெனும் செல்வம் பெற்றவர்கள்; சுய கௌரவம் அற்றவர்களோ எத்தனை செல்வம் பெற்றிருந்தும் வாழ்ந்து என்ன பயன்?

88.
நாஸ்தி வித்யா ஸமம் சக்ஷூ நாஸ்தி ஸத்ய ஸமம் தப:
நாஸ்தி ராக ஸமம் துக்கம் நாஸ்தி த்யாக ஸமம் ஸுகம்

கல்வியைப் போன்றொரு கண்ணில்லை; வாய்மையைப் போன்றொரு தவம் இல்லை; பற்றைப் போன்றொரு துன்பம் இல்லை; தியாகத்தைப் போன்றொரு இன்பம் இல்லை.

89.
த்யஜந்தி மித்ராணி தனைர்விஹீனம் புத்ராஷ்ச தாராஷ்ச ஸஹஜ்ஜனாஷ்ச
தமர்தவந்தம் புனராக்ஷயந்தி அர்தோ ஹி லோகே மனுஷஸ்ய பந்து:

செல்வம் இழந்தவனை பெண், பிள்ளை, மனைவி, சுற்றார் ஒருவரும் நெருங்க மாட்டார்கள்; அவனே மீண்டும் செல்வத்தைக் குவிக்கையில் விட்டுச் சென்ற அனைவரும் திரும்பிடுவார். செல்வமே இப்பாரில் நிலையான சுற்றம். 

90.
யஸ்து ஸஞ்சரதே தேஷான் ஸேவதே யஸ்து பண்டிதான்
தஸ்ய விஸ்தாரிதா புத்திஸ்தைலபிந்துரிவாம்பஸி

பல திசைகளிலும் பயணிப்பவனும், பல அறிஞர்களுடன் இணைந்திருப்பவனுமான ஒருவனின் அறிவு, நீரில் இடப்பட்ட ஒரு துளி தைலத்தைப் போல் விரிந்து பரவும்.  

(கூர்த்த மதி உடையவன் “தைலபூதி” என்று சமஸ்க்ருதத்தில் அழைக்கப்படுவது வழக்கம்.)

91.
அகாபி துர்நிவாரம் ஸ்துதிகன்யா வஹதி நாம் கௌமாரம்
ஸதப்யோ ந ரோசதே ஸா அஸந்த: அபி அஸ்யௌ ந ரோசந்தே

நன்மக்கள் புகழ்ச்சியை விரும்புவதில்லை; 
புகழ்ச்சியோ பொருத்தமில்லாக் கீழோரை விரும்புவதில்லை; 
(எனில் ”புகழ்ச்சி” எனும் கன்னி யாரை மணம் முடிப்பாள்?)

92.
குஸுமம் வர்ணசம்பன்னம்கந்தஹீனம் ந ஷோபதே
ந ஷோபதே க்ரியாஹீனம் மதுரம் வசனம் ததா

நிறத்தால் சிறந்த மலர் நறுமணம் இல்லாவிட்டால் சிறப்படைவதில்லை; 
செயல் ஏதுமின்றி இனிமையான வார்த்தைகளைப் பேசுவோரும் அப்படித்தான். 

93.
உத்ஸாகோ பலவாநார்ய நாஸ்த்யுத்ஸாஹாத்பரம் பலம்
ஸோத்ஸாஹஸ்ய ச லோகேஷு ந கிசிதபி துர்லபம்

உற்சாகம் மனிதனை வலுவுள்ளவனாய் மாற்றுகிறது. உற்சாகத்தைப் போல் சக்தி மிக்கது எதுவுமில்லை; அதனால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை. 

94.
யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரக்ஞா ஷாத்ரம் தஸ்ய கரோதி கிம்
லோசநாப்யாம் விஹீனஸ்ய தர்பண: கிம் கரிஷ்யதி

சாத்திரங்கள் அத்தனையும் கற்றவனுக்குச் சுய ஞானமின்றி என்ன பயன்?
கண் பார்வையற்றவனுக்குக் கண்ணாடியால் என்ன பயன்?

95.
விஷாதண்யம்ருதம் க்ராஹ்யம் பாலாதபி ஸுபாஷிதம்
அமித்ராதபி ஸத்தத்தம் அமேத்யாதபி காஞ்சனம்

அமுதம் நஞ்சோடாயினும் விலக்கி உண்க;
உண்மை குழந்தையின் வாக்கில் இருப்பினும் ஏற்க;
நற்பண்பு எதிரியின் வசம் இருப்பினும் கொள்க;
சேற்றில் பொன் இருப்பினும் கொள்க;

 96.
வ்யாயாமாத் லப்தே ஸ்வாஸ்தயம் தீர்காயுஷ்யம் பலம் ஸுகம்
ஆரோக்யம் பரமம் பாக்யம் ஸ்வாஸ்தயம் ஸர்வார்தஸாதனம்

உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்யம், வலிமை, நீண்ட ஆயுள், மகிழ்ச்சி கிட்டும்; உடல்நலம் மாபெரும் பேறு; அதனால் அடையமுடியாதது எதுவுமில்லை.  

97.
பிண்டே பிண்டே மதிர்பின்னா குண்டே குண்டே நவம் பய:
ஜாதௌ ஜாதௌ நவாசாரா: நவா வாணீ முகே முகே

இருவரின் சிந்தனை ஒன்றாய் இருப்பதில்லை; இரு குட்டைகளின் நீர் ஒன்றாய் இருப்பதில்லை; சாதிகள் ஒவ்வொன்றும் ஒரே விதம் இருப்பதில்லை; இரு வாய்கள் ஒரே விஷயத்தைப் பேசுவதில்லை. 

98.
நரஸ்ய ஆபரணம் ரூபம் ரூபஸ்ய ஆபரணம் குணம்
குணஸ்ய ஆபரணம் ஞானம் ஞானஸ்ய ஆபரணம் க்ஷமா

மனிதனின் ஆபரணம் தோற்றம்; தோற்றத்தின் ஆபரணம் நற்குணம்; நற்குணத்தின் ஆபரணம் ஞானம்; ஞானத்தின் ஆபரணம் மன்னித்தல்.

(இந்த சுபாஷிதத்துக்கு மொழிபெயர்ப்பு அவசியமா? எனத் தோன்ற வைக்கிறது தமிழோடு பின்னிப் பிணைந்த நெருக்கம்)

99.
அபூர்வ: கோபி கோஷோயம் விததே தவ பாரதி
வ்யயதோ வ்ருத்திம் ஆயாதி க்ஷயம் ஆயாதி சஞ்சயாத்

வாணீ! உன் செல்வம் எத்தனை வினோத குணமுடையது! கொடுக்கக் கொடுக்கப் பெருகுகிறது. கொடுக்காது போனாலோ தேய்ந்து கரைகிறது.

100.
ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி
அக்னிம் யமம் மாதரிஷ்வானம் ஆஹு:

வாய்மை ஒன்றே; முனிவர்கள் அதை நெருப்பு, எமன், காற்று என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

(படக் குறிப்பு: ஞானம் என்ற சொல்லைச் சீன மொழியில் குறிக்கும் சொல்)

20.7.13

சுபாஷிதம் - 4


61.
ஏக ஏவ ககோ மானீ சிரஞ்சீவது சாதகம்
ம்ரியதே வா பிபாஸார்த்தோ யாசதே வா புரந்தரம்

பறவைகளிலேயே சாகாத்தன்மையும், மானம் மிக்கதுமான சாதகப் பறவை, பருக மழைநீரை மட்டுமே யாசிக்கும்; இல்லையேல் உயிர் துறக்கும்.   

62.
ஓம் ஸஹ நாவவது ஸஹநௌ புனக்து. ஸஹ வீர்யம் கரவாவஹை.
தேஜஸ்வினாவதீதமஸ்து மா விதிஷாவஹை ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி:

”ஓம். நம்மிருவரையும் இறைவன் காக்கட்டும்; அறிவின் சாரத்தை நாம் அநுபவிக்கும்படி ஊக்குவிக்கட்டும்; ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் நாம் செயலாற்றுவோமாக; கற்றவை நமக்குப் பயனளிக்கட்டும்; எதன் பொருட்டும் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போமாக. அமைதி நிலவட்டும்”   

(வேதகாலம் தொட்டு குருவும், சீடனுமாகச் செய்து கொள்ளும் தீர்மானத்தின் வாசகம் இது. இது சாந்தி மந்திரங்களின் ஓர் அங்கம்.)   

63.
முர்க்கா யத்ர ந பூஜ்யதே தான்யம் யத்ர ஸுஸம்சிதம்
தம்பத்யோ கலஹ: நாஸ்தி தத்ர ஸ்ரீ: ஸ்வயமாகத:

எங்கு மூடர்கள் கௌரவிக்கப்படவில்லையோ, எங்கு தானியங்கள் நிறைந்து வழிகிறதோ, எங்கு கணவன் - மனைவிக்கிடையே பிணக்குகள் இல்லையோ, அங்கே தனமகள் சுயமாகவே நுழைகிறாள்.

64.
யதா க்ரர: சந்தனபார்வாஹீ பாரஸ்ய வேத்தா ந து சந்தனஸ்ய
ஏவம் ஹி ஷாஸ்த்ராணி பஹுனி அதீத்ய அர்தேஷு மூடா: க்ரரவஹ வஹந்தி

சந்தனக் கட்டைகளைச் சுமக்கும் கழுதை எடையை மட்டுமே அறியும்; பொருள் உணராது சாத்திரங்களைச் சுமக்கும் மூடர்களும் அந்தக் கழுதைக்கே ஒப்பானவர்கள்.

65.
ம்ருகா: ம்ருகை: ஸங்கமுபவ்ரஜந்தி காவஷ்ச கோபிஸ்துரங்காஸ்துரங்கை:
மூர்க்காஷ்ச மூர்கை: ஸுத்ய: ஸுதீபி: ஸமான்ஷீலவ்யஸநேஷு ஸக்யம்:

மான்களுடன் மானும், பசுக்களுடன் பசுவும், குதிரைகளுடன் குதிரையும் சேர்வது போல மூடர்களுடன் மூடர்களும், நல்லோருடன் நல்லோரும் இணைகிறார்கள். இனம் இனத்தோடு.   

66.
ஸங்க்ரஹைகபர: ப்ராய: ஸமுத்ரோபி ரஸாதலே
தாதாரம் ஜலதம் பஷ்ய கர்ஜந்தம் புவனோபரீ

யாருக்கும் பயனில்லாக் கடல்நீர் தரை மட்டத்தோடு; எல்லோரையும் வாழ்விக்கும் மழைநீரை இடியுடன் பொழியும் மேகம் எட்டாத் தொலைவில். 

(பெற்றுக்கொள்ளும் கரம் தாழ்ந்தே இருக்கிறது- பூமியினும் கடல் போல; அளிக்கும் கரம் உயர்ந்தே இருக்கிறது - பூமியினும் வான் போல;)

67.
தர்மம் யோ பாததே தர்மோ ந ஸ தர்ம: குதர்ம:
அவிரோதாத்து யோ தர்ம: ஸ தர்ம: ஸத்யவிக்ரம

பிறரின் செயலைப் பாதிக்கும் எந்தச் செயலும் தர்மம் ஆகாது; பிறரின் செயலைப் பகைக்காத எந்தச் செயலும் தர்மமாகக் கருதப்படும்.

(மஹாபாரதத்தில் ஸத்யவிக்ரமனுக்குச் சொல்லப்பட்ட அறிவுரை இது)  

68.
ஷதேஷு ஜாயதே ஷூர: ஸஹஸ்த்ரேஷு ச பண்டித:
வக்தா தஷஸஹஸ்த்ரேஷு தாதா பவதி வா ந வா

நூறு பேரில் ஒருவனே வீரன்; ஆயிரத்தில் ஒருவனே பண்டிதன்; பத்தாயிரத்தில் ஒருவனே பேச்சாளன்; அனைவரிலும் காண அரியவன் கொடையாளி. 

69.
ஸாக்ஷரா: விபரீதாஷ்சே ராக்ஷஸா: ஏவ கேவலம்
ஸரஸோ விபரீதஷ்சேத்ஸரஸத்வம் ந முஞ்சதி

’ஸாக்ஷரா’வைத் திருப்பினால் ‘ராக்ஷஸா’. ’ஸரஸ’ வை எப்படித் திருப்பினாலும் ’ஸரஸ’தான்.  

(’கற்றவன்’ சமயங்களில் ’கொடியவனாய்’ மாறலாம்; ’சான்றோன்’ எந்த நிலையிலும் ’சான்றோனே’.தன்னை மாற்றிக்கொள்வதில்லை.)

70.
அன்னதானம் பரம் தானம் வித்யாதானம் அத: பரம்
அன்னேன க்ஷணிகா த்ருப்தி: யாவஜ்ஜீவம் ச வித்யா

அன்னதானம் சிறந்தது; கல்விதானம் அதனினும் சிறந்தது. அன்னம் தரும் திருப்தி குறுகிய காலத்திற்கே. கல்வியின் பயன் கரையற்றது.

(மீனைக் கொடுப்பதிலும் மீன் பிடிக்கக் கற்றுக்கொடு.) 

71.
மூர்கஸ்ய பஞ்ச சிஹ்நானி கர்வோ துர்வசனம் ததா
க்ரோதஷ்ச த்ருதவாதஷ்ச பரவாக்யேஷ்வநாதர:

மூடனின் ஐந்து குணங்கள்: ஆணவம், தீய வார்த்தை, சினம், பிடிவாதம், பிறர் சொல் மதியாமை.

72.
தர்ஷனே ஸ்பர்ஷணே வாபி ஷ்ரவணே பாஷணேபி வா
யத்ர த்ரவத்யந்தரங்கம் ஸ ஸ்நேக ஜதி கத்யதே

யாரின் பார்வையோ, பாரிசமோ, யார் கேட்பதோ, பேசுவதோ இதயத்தின் அந்தரங்கத்தை வருடுமோ அதுவே அன்பு; காதல்.

73.
நமந்தி ஃபலினோ வ்ருக்ஷா நமந்தி குணினோ ஜனா:
ஷுஷ்ககாஷ்ட்டஷ்ச மூர்கஷ்ச ந நமந்தி கதாசன

பழங்களால் கனக்கும் மரக்கிளை தரையை நோக்கித் தழைவது போலக் குணம் மிக்கவர்கள் பிறரைப் பணிகிறார்கள். வளையாது நிற்கும் பட்டமரத்தைப் போலத் தீயகுணம் மிக்கவர்கள் பணிய வெறுக்கிறார்கள். 

74.
வ்ருஷ்சிகஸ்ய விஷம் ப்ருச்சே மக்ஷிகாயா: முர்கே விஷம்
தக்ஷகஸ்ய விஷம் தந்தே ஸர்வாங்கே துர்ஜனஸ்ய தத்

தேளுக்கு நச்சு வாலில்; தேனீக்குக் கொடுக்கில்; பாம்புக்குப் பல்லில்; தீயவனுக்கோ உடலெங்கும். 

75.
ப்ரதமவயஸி பீதம் தோயமல்யம் ஸ்மரந்த:
ஷிரஸி நிஹீதபாரா: நாரோகேலா நராணாம்
தததி ஜலமனல்பாத் ஸ்வாதமாஜிவீதாந்தம்
நஹீ க்ருதமுபகாரம் ஸாத்வோ விஸ்மரந்தி

எப்போதோ தன் காலில் இரைத்த உவர்நீருக்குத் தலையால் காலமெல்லாம் சுவைமிக்க இளநீர் தரும் தென்னையைப் போன்றோர் காலத்தால் சிற்றுதவி பெற்ற சான்றோர்.  

76.
விக்ருதிம் நைவ கச்சந்தி சங்கதோஷேண ஸாத்வ:
ஆவேஷ்திதம் மஹாஸர்பைஷ்சந்தனம் ந விஷாயதே

நச்சுப் பாம்பு உறையும் சந்தன மரம் எப்படி நச்சாவதில்லையோ, அதுபோலத் தீயோர் நட்பால் தன்னிலை இழப்பதில்லை நல்லோர்.

(தீதும் நன்றும் பிறர் தர வாரா.) 

77.
ரத்னை: மஹாஹை: துதுஷு: ந தேவா:
ந பேஜிரே பீமவிஷேண பீதிம்
அம்ருதம் வினா ந ப்ரயயு: விராமம்
ந நிஷ்சிதார்தத் விரமந்தி தீரா:

தேவர்கள் பாற்கடலைக் கடைகையில் கிடைத்த ரத்தினங்களால் மகிழாது, பெருகிய நச்சினால் பீதியுறாது, அமுதம் என்னும் இலக்கை அடையும் வரை அயரவில்லை; இலக்கை எட்டும் தீர்மானமும், பொறுமையும் கொண்ட எல்லோரும் அப்படிப் பட்டவர்கள்தான்.  

78.
கடம் பிந்யாத் படம் சிந்யாத் குர்யாத்ராஸ்பரோஹணம்
யேன கேன ப்ரகாரேண ப்ரஸித்த: புருஷோ பவேத்

பானையை உடைத்தோ, துணியைக் கிழித்தோ, கழுதைச் சவாரி செய்தோ, எப்படி எப்படியோ வழிகளில் மனிதர்கள் பிரபலமாக விரும்புகிறார்கள்.  

79.
த்ருணானி நோன்மூலயதி ப்ரபஞ்சனோ ம்ருதூனி நீசை: ப்ரணதானி ஸர்வத:
ஸ்வபாவ ஏவோன்ன தசேதஸாமயம் மஹான்மஹத்ஸ்வேவ கரோதி விக்ரமம்

கொடும் புயல் மரங்களைச் சாய்கிறதேயன்றி புற்களை அல்ல; வலிமை மிக்கோரின் இலக்கு எளியோர் அல்ல.

(வீரன் ஒத்த வலிமை மிக்கவனுடன் போரிட விரும்புவான் எனவும் பொருட்படுத்தலாம்)

80.
ப்ரதோஷே தீபகஷ்சந்த்ர: ப்ரபாதே தீபகோ ரவி:
த்ரைலோக்யே தீபகோ தர்ம: ஸுபுத்ர: குலதீபக:

அந்திக்குச் சந்திரன்; நாளுக்குக் கதிரவன்; மூவுலகுக்கும் தர்மம்; நாளைய குலத்துக்கு நன்மகன் விளக்கு.  

18.7.13

பிக்ஷு ஸுக்தம் - கொடையின் மேன்மையான பாடல்

அங்கிரஸ ரிஷியின் புதல்வனான பிக்ஷுவின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஸுக்தம் ரிக் வேதத்தைச் சேர்ந்தது.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் 117ஆவது பாகத்தில் அமைந்திருக்கும் ஒன்பது ச்லோகங்களும் கொடையின், பரந்த மனப்பான்மையின், பொதுநலத்தின், தானத்தின் மேன்மையை உலகுக்குச் சொன்ன ஆதிமனிதனின் கவிதைகள்.

கொடையின் சிறப்புக்கென்றே கர்ணன் தொடங்கி நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் நிழலாய் இன்றும் நம் கதைகளில் வாழும் மன்னர்களையும், கடையெழு வள்ளல்களையும் நாம் தொந்தரவு செய்ய வேண்டாம். விட்டுவிடுவோம்.

வீடு தேடி வரும் அடியார்க்கு உணவளித்த பின்னே உணவருந்தியவர்களும், விலங்குகள் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்வதற்கென நடுகல் நட்டவர்களும், தினமும் காக்கைகளுக்கு அன்னம் அளித்த பின் உண்டவர்களும், பூனை- நாய்களுக்கு உணவும், குருவிகளுக்குக் கைப்பிடி தானியமும், அரிசியும் - உளுந்தும் களைந்த கழுநீரை மாடுகளுக்கு அளித்தோரும் கலங்கிய படமாய்ச் சற்றைக்கு முன்னே வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள். நம் கையெட்டும் தொலைவில் பொதுநலத்தின் மணம் வீசும் உதாரணங்கள்.

அரிசி மாவினால் இடப் பட்ட கோலங்களின் வாயிலாக எறும்புகளுக்கு உணவளிப்பதில் துவங்கிய ஒவ்வொரு புதிய நாளும், காக்கைக்கு அளிக்கும் உணவில் கிளைவிட்டு, இரவு நேரங்களில் பசியுடன் திரியும் யாசகர்களின் பசியின் முள்ளை நீக்குவது வரையும் அவர்களின் பரந்த மனம் கொடுத்தலின் தாரையாக, இரக்க குணத்தின் ஊற்றுவாயாக இருந்து வந்தது.

இரு தலைமுறைகளுக்கு முன்னே இரவு பசியுடன் ”அம்மா! வயிறு பசிக்குதம்மா! பிச்சை போடுங்கம்மா!” என்று எல்லாத் தெருக்களிலும் ஒலித்த குரல்கள் காற்றோடு தேய்ந்து போய்விட்டதன் காரணம் வளமை இல்லை. மனிதாபிமானம் தேய்ந்து போனமைதான். அப்படி ஒலித்த குரல்கள் யாசித்தலை விடுத்துத் தாங்களாகவே எடுத்துக்கொள்ளத் துவங்கிவிட்டன. இதைப் பெருகி வரும் குற்றங்கள் நிரூபிக்கின்றன. கொடுப்பவன் அற்றுப்போனபின் பெறுபவன் எங்கிருப்பான்?

தனி வீடுகளில் இருந்த மனிதன் அடுக்குவீடுகளுக்குள் மறைந்து, கதவுகளால் தனக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பைச் சாதகமாக தீர்த்துக் கொண்டுவிட்டான். பரந்து விரிந்த மனங்கள், குறுகி உயர்ந்த கட்டிடங்களில் குடிபுகுந்த பின் கொடையின் விரல் தொடாத நாணயங்கள் அதல பாதாளத்தில் புதைந்து கிடக்கின்றன.

நமது தொன்மையான சிந்தனை வளத்தின் வேர்களில் இருந்து இப்போது கிளை பரப்பி நிற்கும் மரத்தின் நிழல் நம் கால்களையும், மனதையும் பொசுக்குவதாக இருக்கிறது.

ஊன்றப்பட்ட நல்வித்திலிருந்து கிளம்பிய இந்தப் பாரம்பர்யமான மரத்தின், பட்ட மரத் தன்மை மனதின் சுவர்களில் ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பொன்னுக்கு நிகரான இந்த ஒன்பது ச்லோகங்களின் சிந்தனைகளும் நாளைய மனிதனை மனதை வளப்படுத்தட்டும். இறைவா! எம் மனங்களில் மீண்டும் கொடையின் மழை பெருக்கெடுக்கத் துணை செய்.

பிக்ஷு ஸுக்தம்:

1.
ஓம். 
ந வா உ தேவா: க்ஷுதமித்வம் ததுருதாசிதமுப கச்சந்தி ம்ருத்யவ: 
உதோ ரயி: ப்ருணதோ நோப தஸ்யத்யுதாப்ருணன் மடிர்தாரம் ந விந்ததே

பசியை மரணத்துக்குரிய காரணமாக தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாக உண்பவர்களையும் மரணம் உண்கிறது. தவிர, கொடுப்பவனுக்குச் செல்வம் குறைவதில்லை. கொடுக்காதவனோ தேற்றுவார் அற்றுத் துன்புறுவான். 

2.
ய ஆத்ராய சகமானாய பித்வோன்னவான் ஸன் ரஃபிதாயோபஜக்முஷே
ஸ்திரம் மன: க்ருணுதே ஸேவதே புரோதோ சித்ஸ மர்டிதாரம் ந விந்ததே

எவனொருவன் ஏராளமான உணவு படைத்தவனாய் இருந்தும், உணவு தேவைப்படும் பலவீனர்களுக்கும், உதவி நாடி வரும் தீனர்களுக்கும், மனதைக் கல்லாக்கி உதவ மறுத்து, அவர்களுக்கு முன்னாலேயே உண்டு மகிழ்கிறானோ, அவன் தேற்றுவார் அற்றுத் துன்புறுவான்.   

3.
ஸ இக்போஜோ யோ க்ருஹவே ததாத்யன்னகாமாய சரதே க்ருசாய
அரமஸ்மை பவதி யாமஹூதா உதாபரிஷுக்ருணுதே ஸகாயம்

பலவீனமுற்று உணவைத் தேடி வருபவனுக்கு யார் உடனடியாக உணவளிக்கிறானோ அவனே வள்ளல். அவனுக்கு ஏராளமான வெகுமதிகள் காத்திருக்கின்றன. பகைவர்களிடமும் அவன் நட்பை விதைக்கிறான்.    

4.
ந ஸ ஸகா யோ ந ததாதி ஸக்யே ஸசாபுவே ஸசமானாய பித்வ:
அபாஸ்மாத் ப்ரேயான்ன ததோகோ அஸ்தி ப்ருணந்தமன்யமரணம் சிதித்சேத்

தன் நண்பனுக்கோ, கூடவே இருப்பவனுக்கோ, முன்பு உதவியவனுக்கோ  எவனொருவன் கொடுப்பதில்லையோ அவன் நண்பன் அல்லன்; அவனைத் துறந்து விடுதல் நலம். அந்த வீடு வீடல்ல. கொடுக்க வல்ல வேறொருவரை அவன் நாடட்டும்.

5.
ப்ருணீயாதின்னாதமானாய தவ்யான் த்ராகீயாம்ஸமனு பச்யேதே பந்தாம்
ஓ ஹி வர்த்தந்தே ரத்யேவ சக்ராண்யன்யமன்யமுப திஷ்டந்த ராய:

நிதி மிகுந்தவன் கட்டாயமாக வறியவனுக்குக் கொடுக்க வேண்டும். தொலைநோக்குள்ள வழிகளை எண்ணிச் செல்வத்தைப் பெருக்க முயலவேண்டும். ஏனெனில், சுழலும் ரதத்தின் சக்கரங்களைப் போல் ஒருவரிலிருந்து மற்றொருவருக்குச் செல்வம் மாறி மாறிச் செல்கிறது.

6.
மோகமன்னம் விந்ததே அப்ரசேதா ஸத்யம் ப்ரவீமி வத இத்ஸ தஸ்ய
நார்யமணம் புஷ்யதி நோ ஸகாயம் கேவலாகோ பவதி கேவலாதீ

அழியக்கூடிய உணவைப் பகிராமல் மூடன் ஆசையினால் சேமிக்கிறான்; அது அவனுக்கு அழிவையே கொடுக்கும் - இது சத்தியம். இறைவனுக்கு அர்ப்பணிக்காமலோ, நண்பனுடன் பகிராமலோ தான் மட்டும் உண்பவன் பாவியாகவே ஆகிறான்.

7.
க்ருஷன்னித் ஃபால ஆசிதம் க்ருணோதி யன்னத்வானமப வ்ருங்க்தே சரித்ரை:
வதன் ப்ரஹ்மாவததோ வனீயான் ப்ருணன்னாபிரப்ருணந்தமபி ஷ்யாத்

விவசாயிக்குக் கலப்பை உணவளிக்கிறது; பயணங்களாலும் உழைப்பாலும் ஒருவன் பொருளீட்டுகிறான். வெறுமனே இருப்பவனை விடச் சாத்திரங்களை எடுத்துரைப்பவன் உயர்ந்தவன். கொடுக்க வல்லவன் கொடுப்பதற்கு எதுவுமற்றவன் அருகே இருக்கவேண்டும்.   

8.
ஏக பாத்பூயோ த்விபதோ விசக்ரமே த்விபாத் த்ரிபாதமப்யேதி பச்சாத்
சதுஷ்பாதேதி த்விபதாமபிஸ்வரே ஸம்பச்யன் பங்க்தீருபதிஷ்ட்டமான:  

இரு மடங்கு செல்வம் உள்ளவன் ஒரு மடங்கு செல்வம் உள்ளவனை விரைந்து கடந்து, மூன்று மடங்கு உள்ளவன் பின் செல்கிறான். நான்கு மடங்கு செல்வம் பெற்றவன் இரண்டு மடங்கு செல்வமுள்ளவன் விட்டுச் சென்ற பாதையை உற்றுக் கவனித்துப் பின் கடந்து செல்கிறான்.  

9.
ஸமௌ சித்தஸ்தௌ ந ஸமம் விவிஷ்ட்ட: ஸம்மாதரா சின்ன ஸமம் துஹாதே
யமயோச்சின்ன ஸமாவீர்யாணி ஜ்ஞாதீ சித் ஸந்தௌ ந ஸமம் ப்ருணீத:

கைகள் இரண்டும் ஒன்றாய்த் தோற்றமளித்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை;  ஒரே பசுவிற்குப் பிறந்த இரு பசுக்கள் சமமாய்ப் பால் தருவதில்லை; இரட்டையராய்ப் பிறந்திருந்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை; ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள் ஒத்த தர்ம சிந்தனையோடு இருப்பதில்லை.  


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(வேத மந்திரங்கள் அனைத்தின் இறுதியிலும் மும்முறை சாந்தியுடன் நிறைவடைவதைக் காணலாம். சாந்தி என்றால் அமைதி. மூன்று விதமான துன்பங்களிலிருந்து நாம் அமைதி பெறுவதற்காக மூன்று முறை வேண்டப் படுகிறது.

1. அத்யாத்மிகம் ( நம்மால் நமக்கு நேரும் துன்பம்). 2. ஆதிபௌதீகம் (பிற சூழல்களால் நமக்கு உண்டாகும் துன்பம்) 3. ஆதிதைவிகம் (தெய்வ சக்திகளால் வரும் துன்பம்)

உதவியவை:
வேத மந்திரங்கள் - சுவாமி அசுதோஷானந்தர்
www.sanskritdocuments.com
www.sacred-texts.com

16.7.13

சுபாஷிதம் -III

41.
ஸர்வோபநிஷதோ காவ: தோக்தா கோபாலநந்தன:
பார்தோ வத்ஸ: ஸுதீ: போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்

உபநிடதங்கள் அத்தனையும் பசுக்கள்; கண்ணனே  மேய்ப்பன்; புத்திமான் அர்ஜுனனே கன்று; அவன் அருந்திய பாலெனும் அமுதமே கீதை.

(எல்லா உபநிடதங்களின் சாரமே பகவத் கீதை எனக் கருதப்படுகிறது.)
  
42.
ஹம்ஸ: ஷ்வேதோ பக: ஷ்வேதோ கோ பேதோ பகஹம்ஸ்யோ:
நீரக்ஷீரவிவேகே து ஹம்ஸ: ஹம்ஸோ பகோ பக:

அன்னம், கொக்கு இரண்டும் வெண்மையானவை. நீரோடு கலந்த பாலைப் பிரித்துப் பருக அன்னம் அறியுமேயன்றி கொக்கல்ல. 

43.
காக: க்ருண்ணோ பிக: க்ருண்ணோ கோ பேதோ காகபிகயோ:
வஸந்தஸமயே ப்ராப்தே காக: காக: பிக: பிக:

காகம், குயில் இரண்டும் கரியவைதான். எது காகம், எது குயில் என்பதை வசந்தகாலம் அடையாளம் காட்டுகிறது.    

44.
அஹம் ச த்வம் ச ராஜேந்ர லோகநாதாவுபாவபி
பஹுவ்ரீஹிரஹம் ராஜன் ஷஷ்டிதத்புருஷோ பவான்

"மன்னா! நாமிருவருமே மக்களின் நாயகர்கள்தான் ; ஒரே வித்தியாசம். நான் மக்களைச் சார்ந்திருக்கிறேன். மக்கள் உன்னைச் சார்ந்திருக்கிறார்கள்." 

(ஒரு யாசகனின் குரல் இது; லோகநாதன் - மக்களின் நாயகன்.)

45.
ஸுலபா: புருஷா: ராஜன் ஸததம் ப்ரியவாதின:
அப்ரியஸ்ய ச பத்யஸ்ய வக்தா ச்ரோதா ச துர்லபம்

”மேன்மைக்குரியோய்; இனிமையான புகழுரை கூறும் மக்களை எளிதில் கண்டுகொள்ளலாம்; உவர்ப்பான வார்த்தைகளைப் பேசுபவனையும், அதைக் காது கொடுத்துக் கேட்பவனையும் காண்பதுதான் அரிது.”

(மஹாபாரதத்தில் விதுரர் திருதராட்டினனிடம் நிகழ்த்திய உரையாடலில் உதிர்ந்த முத்து இது)   

46.
துர்ஜன: ப்ரியவாதீதி நைதத் விஷ்வாஸ்காரணம்
மதுதிஷ்டதி ஜிவ்ஹார்கே ஹ்ருதயே து ஹலாஹலம்

உன் சார்பாய் இனிய வார்த்தைகள் பேசினாலும், தீயோரை நம்பாதே; அவர்கள் நாவில் தேனும், மனதில் விஷமும் தடவப் பெற்றவர்கள்.

47.
ஸர்பதுர்ஜனோர்மத்யே வரம் ஸர்போ ந துர்ஜனம்
ஸர்ப: தம்ஷதீ காலேன துர்ஜனஸ்து பதே பதே

பாம்பையும், தீயவர்களையும் ஒப்பிட, பாம்பே மேலானது; ஏனெனில், எப்போதாவதுதான் நச்சு மிகுந்த பாம்பு தீண்டும்.

48.
வரம் ஏகோ குணீ புத்ரோ ந ச மூர்க்கஷதான்யபி
ஏகஷம் சந்த்ரஸ்தமோ ஹந்தி ந ச தாராகணோபி ச

நூறு மூடர்களிலும் ஒரு புத்திசாலி மேலானவன்; இருளை விரட்ட வானெங்கும் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைக் காட்டிலும் ஒரு நிலா போதுமானது. 

49.
கராக்ரே வஸ்தே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கோவிந்த: ப்ரபாதே கரதர்ஷனம்

கரங்களின் நுனியில் தனமகளும், கரங்களின் மத்தியில் கலைமகளும், கரங்களின் மூலையில் திருமாலும் வசிப்பதால், தினமும் அதிகாலை கரங்களைத் தரிசியுங்கள்.    

50.
விதேஷேஷு தனம் வித்யா வ்யஸநேஷு தனம் மதி:
பரலோகே தனம் தர்ம: ஷீலம் ஸர்வத்ர வை தனம்

அயல் நாட்டில் செல்வம் கல்வி; சோதனைக் காலங்களில் செல்வம் கூர்மதி; பரமண்டலத்தையும் வெல்லும் செல்வம் தர்மம். எல்லா இடங்களிலும் எப்போதும் செல்வம் நேர்மை.  

51.
ந சோரஹார்யம் ந ச ராஜஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரி
வ்யயே க்ருதே வர்தத் ஏவ நித்யம் விகாதனம் ஸர்வதனப்ரதானம்

கள்வரால் அபகரிக்க முடியாததும், அரசனால் கைப்பற்ற முடியாததும், சகோதர்களால் பங்கிட முடியாததும், தோள்களுக்குச் சுமையாய் இல்லாததும், செலவழித்தால் தினமும் பெருவதும், அனைத்துச் செல்வங்களிலும் மேலானதும் கல்வி ஒன்றே. 

52.
யதா ஹி மலினை: வஸ்த்ரை: யத்ர குத்ர உபவிஷயதே
வ்ருதத: சலிதோபி ஏவம் சேஷம் வ்ருதம் ந ரக்ஷதி

எப்படிக் கறை படிந்த ஆடை அணிந்தவன் உட்காரும் இடத்தின் தூய்மை குறித்துத் கவலை கொள்வதில்லையோ, அப்படியே ஒருமுறை நடத்தை தவறியவன், மேலும் தீய செயல்கள் புரியத் தயங்குவதில்லை.

53.
ந தேவா தண்டமாதாய ரக்ஷந்தி பஷுபாலவத்
யம் து ரக்ஷிதுமிச்சந்தி புதத்யா ஸம்விபஜந்தி தம்

கடவுள் ஒருவனைக் காக்கத் தன் கையில் கழி ஏந்துவதில்லையே தவிர, எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தேவையான அறிவை அவனுக்குத் தருகிறார்.

54.
கார்யார்த்தீ பஜதே லோகம் யாவத்கார்யம் ந ஸித்ததி
உத்தீர்ணே ச பரே பாரே நௌகாயாம் கிம் ப்ரயோஜனம்

பிறரால் ஒரு காரியம் நிறைவேறும் வரை அவரை உபயோகித்துக் கொள்கிறோம்- ஒரு நதியைக் கடந்த பின் படகால் என்ன பயன்? 

55.
அல்பாநாமபி வஸ்துனாம் ஸம்ஹதி: கார்யஸாதிகா
த்ருணைர்குணத்வமாபன்னைர்பத்யந்தே மந்தஸந்தின:

சிறு பொருட்களும் பெரிய காரியங்களைச் சாதிக்க வல்லவை - சிறுகயிற்றால் பின்னப்பட்ட வடக்கயிறு மதயானையைக் கட்டி அடக்குவது போல. 

56.
அதிபரிசயாதவஞ்ஞா ஸம்தத்கமனாத் அநாதரோ பவதி
மலயே பில்லா புரந்த்ரீசந்தனதருகாஷ்தம் இம்தனம் குருதே

அளவு கடந்த நெருக்கம் அவமதிப்பை உண்டாக்கும் - மலைப்புறத்துப் பெண் அடுப்பெரிக்கச் சந்தனக் கட்டைகளை உபயோகிப்பது போல்.

57.
ஸர்ப: க்ரூர: க்ரல: க்ரூர: ஸர்பாத் க்ரூரதர: க்ரல:
ஸர்ப ஷாம்யதி மந்த்ரைஷ்ச துர்ஜன: கேன ஷாம்யதி

ஒரு பாம்பு, நற்குணமற்றோன் இருவரிலும் பாம்பே ஆபத்தற்றது; ஒரு நச்சுப் பாம்பை மந்திர உச்சாடனத்தால் வசப் படுத்தி விடலாம்.

58.
லால்யேத் பஞ்ச வர்ஷாணி தஷ வர்ஷாணி தாடயேத்
ப்ராப்தே து ஷோஇஷே வர்ஷே புத்ரே மித்ரவதாசரேத்

ஒரு பிள்ளையை ஐந்து வயது வரை கொஞ்சலாம்; பத்து வயது வரை கண்டிக்கலாம்; அதே பிள்ளை பதினாறு வயதைக் கடந்த பின் நண்பன் ஆகிறான்.

59.
ஸம்பூர்ணகும்போ ந கரோதி ஷப்தம் அர்த்தோகடோ கோஷமுபைதி நூனம்
வித்வான் குலீனோ ந கரோதி கர்வ குணைர்விஹீனாபஹு ஜல்ப்யந்தி

நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும். கற்றோரும், கல்லாதோரும் அப்படியே.

60.
அஹன்யஹனி பூதானி கச்சந்தி யமாலயம்
ஷேஷா: ஸ்தாவரமிச்சந்தி கிமாஷ்ச்சர்யமத: பரம்

“பிறந்தவரெல்லாம் இறந்தேயாக வேண்டிய இந்த பூமியில், யாரொருவரும் இறக்க விரும்பாமையே வியப்பளிக்கக் கூடியது”.

(மஹாபாரதத்தில் யுதிஷ்டிரரிடம் கந்தர்வன், “ இந்த பூமியில் வியப்பளிக்கக் கூடியது எது?” என்று கேட்ட கேள்விக்கான பதில் இது.)

13.7.13

சுபாஷிதம் - II

21.
ந ராஜ்யம் ந ராஜா ஸீத் ந தண்டயோ ந ச தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜாஸ்ஸர்வா ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம்

அரசும் இல்லை; அரசனும் இல்லை; குற்றமும் குற்றவாளியும் இல்லை; நீதிபதியும் தண்டனையும் இல்லை; பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தங்கள் சுய தர்மத்தாலேயே காக்கட்டும்.

( இக்ஷ்வாகு தான் இந்தியாவை ஆண்ட முதல் மன்னன்; அவனுக்குப் பிந்தைய காலத்தில்தான் ராஜா-ப்ரஜா வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இக்ஷ்வாகுக்கு முந்தைய காலத்தில் இந்த சுதர்மம் இருந்திருக்கிறது என்பது இந்த சுபாஷிதத்தின் மூலம் உணர்த்தப்படும் சிலிர்ப்பூட்டும் செய்தி.)

22.
ஸத்யம் ப்ருயாத் ப்ரியம் ப்ருயான்னப்ருயாத் ஸத்யம்ப்ரியம்
ப்ரியம் ச நாந்ருதம் ப்ருயாதேஷ: தர்ம: ஸநாதன:

உண்மையே பேசு; பிறருக்குத் தீமை செய்யும் உண்மையைப் பேசாதே; பிறருக்கு எது நன்மையோ அதையே பேசு; பிறரை இனிமைப்படுத்தப் பொய் பேசாதே. இதுவே தர்மம். 

[பொதுவாகவே கவிகள் ஒரு மஹா வாக்கியத்தை முடிக்கும்போதும்- அரிய உண்மையை உரைக்கும்போதும்,  “ஏஷா தர்ம ஸநாதன” (இதுவே தர்மம்) என்று  வலியுறுத்தி முடிப்பது வழக்கம்.]
  
23
அபி ஸ்வர்ணமயீ லங்கா ந மே ரோசதி லக்ஷ்மண  
ஜனனீ: ஜன்மபூமிஷ்ச்ச ஸ்வர்க்காதபி கரியஸீ

”லக்ஷ்மணா! பொன்னால் இழைத்த இந்த இலங்கை என்னை சலனப்படுத்தாது; என் தாயும், தாய்நாடும் சொர்க்கத்தை விட உய்ர்வானவை”

(சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன், ஒரு விஜயதஸமி நாளில், ராவணனை வென்ற பின் லக்ஷ்மணனிடம் ஸ்ரீராமன் சொன்னது. அதன்பின் விபீஷணன் பட்டம் சூட்டப்பட்டான்.) 

24
மரணான்தானி வைராணி நிவ்ருத்தம் ந: ப்ரயோஜனம்
கீயதாமஸ்ய சம்ஸ்க்காரோ மமாபேஷ்ய யதா தவ:

பகை மரணத்தோடு அழிந்தது. அவன் உனக்கெப்படியோ அப்படியே எனக்கு; கிரமப்படி தகனம் செய்வி.

(ராவணன் மாண்ட பின், அவனைத் தகனம் செய்யத் தயங்கிய விபீடணிடம் ஸ்ரீராமன் சொன்னது) 

25
காவ்யஷாஸ்த்ரவினோதேன காலோ கச்சதி தீமதாம்
வ்யஸனேன ச மூர்க்காணாம் நித்ரயா கலஹேன வா

கற்றவனின் காலம் காவியங்கள், சாத்திரங்களின் ஆராய்ச்சியில் பயனாகிறது. கல்லாதான் காலமோ கவலையிலும், உறக்கத்திலும், சச்சரவுகளிலும் கழிகிறது. 

26
தைலாத் ரக்ஷேத் ஜலாத் ரக்ஷேத் ரக்ஷேத் ஷிதில பந்தனாத்
மூர்க்க ஹஸ்த்தே ந தாதவ்யம் ஏவம் வததி புஸ்தகம்

புத்தகம் பேசுகிறது: “ தைலத்திடமிருந்தும், நீரிடமிருந்தும், மோசமான கட்டுமானத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்; இத்தனையையும் செய்த பின் ஒருபோதும் ஒரு மூடன் கையில் என்னை ஒப்படைக்காதீர்கள்”.

27
ச்ரோத்ரம் ச்ருதேநைவ ந குண்டலேந தாநேன பாணிர்ன து கங்கணேன
விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன

காதுகள் கேட்பதற்கே அன்றிக் குண்டலங்களுக்கல்ல; கைகள் கொடுப்பதற்கே அன்றிக் கங்கணங்களுக்கல்ல; இந்த உடல் பிறர்க்கு உதவுவதற்கே அன்றி சந்தனப் பூச்சுக்கல்ல.

28
பாஷாஸு முக்யா மதுரா திவ்யா கீர்வாணபாரதி
தஸ்யாம் ஹி காவ்யம் மதுரம் தஸ்மாதபி ஸுபாஷிதம்

மொழிகளில் சிறந்தது இனிமையும் அழகும் பொருந்திய கடவுளின் மொழியான சமஸ்க்ருதம்; அதனாலேயே காவியங்களும், சுபாஷிதமும் இனிக்கின்றன.

29
உதாரஸ்ய த்ருணம் வித்தம் ஷூரஸ்ய மரணம் த்ருணம்
விரக்தஸ்ய த்ரணம் பார்யா நிஸ்ப்ருகஸ்ய த்ருணம் ஜஹத்

கொடையாளிக்குச் செல்வம் துச்சம்; வீரனுக்குச் சாவு துச்சம்; சுயநலமற்றோனுக்குக் குடும்பம் துச்சம்; பற்றற்றவனுக்கு உலகமே துச்சம்.

30
வித்வத்வம் ச ந்ருபத்வம் ச நைவ துல்யம் கதாசந
ஸ்வதேஷே பூஜ்யதே ராஜா வித்வான் சர்வத்ர பூஜ்யதே

கற்றறிவும், ஆளும் திறனும் துளியும் ஒப்பிடமுடியாதவை; அரசனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு; கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.

31
துர்ஜநேன ஸமம் ஸரவ்யம் ப்ரீதிம் சாபி ந கார்யேத்
உஷ்ணோ தஹதி சாங்கார: ஷீதக்ருஷ்ணாயதே கரம்

கரி சூடானால் கையைச் சுட்டுவிடும்; அணைந்து குளிர்ந்த பின் கையைக் கரியாக்கும். துர்மதி கொண்டவனோடு கொள்ளும் உறவும், நெருக்கமும் அப்படித்தான். 

32
த்ராக்ஷா ம்லானமுகீ ஜாதா ஷர்க்கரா சாஷ்மதாம் கதா
ஸுபாஷிதரஸஸ்யார்கே ஸுதா  பீதா திவம் கதா

சுபாஷிதச் சாற்றின் இனிமைக்கு முன்னால் திராட்சை வெட்கித் தலை குனியும்; சர்க்கரை கல்லாய் விடும்; அமிர்தமோ தோற்றுச் சொர்க்கத்துக்குத் திரும்பிவிடும். 

33
சிந்தனீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிகியா
ந கூபக்ரனன் யுக்தம் ப்ரதீப்தே வான்ஹினா க்ருஹே

வீடு தீப்பற்றிக் கொண்ட பின் நீருக்காகக் கிணறு தோண்டினாற் போலன்றி, ப்ரச்சினைகள் வருமுன் தீர்வுகளுக்குத் திட்டமிடுதல் வேண்டும். 

34
ஏகம் விஷரஸம் ஹந்தி ஷஸ்த்ரேணைகஷ்ச்ச வத்யதே
ஸராஷ்ட்ரம் ஸப்ரஜம் ஹந்தி ராஜானம் மந்ரவிஷ்லவ:

நஞ்சினால் ஒருவனுக்கு அழிவு; ஆயுதங்களால் பலருக்கு அழிவு; அரசனின் தவறான முடிவால் அவனோடு சேர்த்து மொத்த நாட்டுக்கே அழிவு.

35
ஆதித்யஸ்ய நமஸ்காரம் யே குர்வந்தி தினே தினே
ஜன்மாந்தரஸஹஸ்ரேஷு தாரித்ரியம் நோபஜாயதே

கதிரவனைத் தினந்தோறும் வணங்குபவனுக்கு ஒரு பிறவியிலும் வறுமை அண்டாது. 

(இதன் உட்பொருள்: தினமும் கதிரவனோடு எழுந்து, கதிரவன் மறையும் வரை உழைப்பவனை வறுமை எப்படி அண்டும்?)

36
ஜ்யேஷ்டத்வம் ஜன்மனா நைவ குணைர்ஜ்யேஷ்டத்வமுச்யதே
குணாத் குருத்வமாயாதி துக்தம் ததி க்ருதம் கமாத்

ஒருவன்  முதன்மை அடைவது பிறப்பால் அல்ல; அவன் குணம், இயல்புகளாலேயே - பால் தயிராகி நெய்யாவது போல .

37
உகமேன ஹி ஸித்யந்தி கார்யணி ந மனோரதை:
ந ஹி சுப்தஸ்ய ஸிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா:

எப்படி உறங்கும் சிங்கத்தின் வாயில் இரை தானாய்ச் சிக்குவதில்லையோ, அப்படி எண்ணத்தினால் மட்டும் செயல்கள் நிறைவேறி விடுவதில்லை.

38
ஸ்தானபஷ்டா: ந ஷோபதே தந்தா: கேஷா நகா நரா:
அதி விக்ஞாய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத்

பற்களோ, சிகையோ, நகமோ அதனதன் இடத்தில் இல்லாது போனால் பார்க்கச் சகியாது; தங்களுக்குரிய இடத்தில் இல்லாது போனால் ஞானிகளும் அப்படித்தான். 

39
உதயே ஸவிதா ரக்தோ ரக்தஷாஸ்த்தமயே ததா
ஸமப்த்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதா

கதிரவன் உதிக்கையிலும் மறைகையிலும் எப்படியோ, அப்படியே
வாழ்கையிலும் வீழ்கையிலும் மாமனிதர்கள்.

40
ஷாந்திதுல்யம் தபோ நாஸ்தி தோஷான்ன பரமம் ஸுகம்
நாஸ்தி த்ருஷ்ணாபரோ வ்யாதிர்ன ச தர்மோ தயாபர:

அமைதியைப் போன்றொரு தவம் இல்லை; த்ருப்தியைப் போன்றொரு மகிழ்ச்சி இல்லை; ஆசையைப் போன்றொரு வியாதி இல்லை; கருணையைப் போல் ஒரு தர்மம் இல்லை.

11.7.13

சுபாஷிதம் - I அல்லது நீதிக்கோவை

சுபாஷிதம் என்பது சமஸ்க்ருதத்தில் மிகப் புராதனமான வடிவத்தில் சான்றோர்களின் அனுபவங்கள் ச்லோகங்கள் போலத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சு என்றால் நல்லவிதமாக என்றும், பாஷிதம் என்றால் சொல்லப்பட்டவை என்றும் பொருள் சொல்லலாம். நீதிக்கோவைகள் என்று தமிழில் சொல்லலாம். ஆத்திசூடி, உலகநீதி போன்ற வடிவங்கள் எல்லாம் இதிலிருந்தே பிறந்தவை என்று கருத இடமிருக்கிறது.

சமஸ்க்ருதத்தின் பர்த்ருஹரி துவங்கி, சாணக்கியர், காளிதாஸர், பவபூதி, சோமதேவ பட்டர், கல்ஹணர், வேதாந்த தேசிகன் வரையிலும் பலரும் இவ்வடிவத்தில் எழுதியிருக்கின்றனர். 

பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும் இந்த சுபாஷிதத்தை மிக விரிவாக உபயோகித்திருக்கின்றன. சுபாஷிதத்தின் வேர்களோ ராமாயணம், மஹாபாரதம், கீதைகள் போன்ற தொன்மையான விருக்ஷங்களின் அடியில் தென்படுகின்றன.   

எழுதியவர்களின் பெயர்கள் அற்று நாலடியார் போன்று ஒரே தொகுப்பாக என் கையில் இருக்கும் 400 ச்லோகங்களைக் கொண்ட சுபாஷிதத்தின் மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்காக. 

பிழைகளுக்கு உ(ஆ)ட்பட்டவன் நான். திருத்துங்கள் தேவைப்படும் இடங்களில். திருத்திக் கொள்கிறேன்.

சுபாஷிதம்
1. 
அக்னி: சேஷம் க்ருணா: சேஷம் ஷத்ரு: சேஷம் ததைவ ச
புன: புன: ப்ரவர்த்தேத தஸ்மாத் சேஷம் ந கார்யேத்

நெருப்பு, கடன், பகை இம்மூன்றும் சிறிது எஞ்சினாலும் மீண்டும் வளரும். ஆகவே முற்றிலுமாய்த் தீர்க்கப்பட வேண்டும்.

2. 
ப்ருத்வீவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் சுபாஷிதம்.
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசங்யா பர்தீயதே  

பூமியின் மூன்று  ரத்தினங்கள் நீர், அன்னம், சுபாஷிதம். முட்டாள்களோ கற்களை ரத்தினம் என்பார்கள். 

3.  
ந அபிஷேகோ ந சம்ஸ்கார: ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜிதஸ்த்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்ரதா

வன ராஜ்யத்தில் சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம் நடப்பதில்லை; தன் சுய பராக்கிரமத்தாலேயே அது ராஜாவாகிறது.

4. 
வனானி தஹாதோ வன்ஹே ஸகா பவதி மாருத:
ஸ ஏவ தீப நாஷாய க்ருஷே கஸ்யாஸ்த்தி சஹ்ருதம்

வனத்தில் தீப்பற்றினால் பரவ உதவும் காற்று அகலின் சுடரை அவிக்கிறது. சக்தி அற்றோருக்கு நட்பில்லை.

5. 
வித்யா விவாதாய தனம் மதாய ஷக்தி: பரேஷாம் பரிபீடனாய
கலஸ்ய: ஸாதோ: விபரீதம் ஏதத் க்ஞானாய தானாய ச ரக்ஷணாய   

துர்மதி படைத்தவனின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவனுக்கோ அவன் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.

6. 
துர்பலஸ்ய பலம் ராஜா பாலானாம் ரேதனம் பலம்
பலம் மூர்க்கஸ்ய மௌனித்வம் சௌராணாம் அந்ருதம் பலம்

அரசன் நலிந்தோரின் பலம்; அழுகை குழந்தையின் பலம்; 
மௌனம் மூர்க்கனின் பலம்; பொய்யுரைப்பது கள்வனின் பலம்.

7. 
அஷ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச
அஜாபுத்ரம் பலிம் ததாத் தேவோ துர்பலகாதக: 

குதிரையோ, யானையோ, புலியோ அல்ல;  அல்லவே அல்ல; ஆட்டுக்குட்டியே வேள்வியில் பலியிடப்படுகிறது; நலிந்தோரைக் கடவுளும் காப்பதில்லை.

8. 
அஷ்டாதஷ புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்  

பதினெட்டுப் புராணங்களிலும் வியாஸர் சொல்லும் சாரம் இதுதான்; பிறர்க்கு உதவுவது புண்ணியம். பிறரைத் துன்புறுத்துதல் பாவம். 

9.
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேஷம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

இமயம் முதல் குமரி வரை கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

10.
ஏதத்தேஷ ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா:

பூமியில் பிறந்த எல்லா மக்களும் இந்த நாட்டின் ரிஷிகளும், முனிகளுமான முன்னோர்களின் வரலாற்றிலிருந்து  தத்தமது பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

11.  
அயம் நிஜ: பரோ வேதி கணனாலகுசேதஸாம்
உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்

நம்மவன்; பிறத்தியான் என்ற வேற்றுமை குறுக்கு புத்தியுடைவனது; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பான் பரந்த மனமுடையவன்.

12.
க்ஷணஷ: கணஷ்சைவ வித்யாம் அர்தம் ச சாகயேத்
க்ஷணே நஷ்டே குதோ வித்யா கணே நஷ்டே குதோ தனம்

பெறும் ஒவ்வொரு நொடியும் கற்கவும், ஒவ்வொரு கணமும் சம்பாதிக்கவும் செய்; இல்லையேல் ஒவ்வொரு நொடியும் கல்வி இழப்பு; ஒவ்வொரு கணமும் செல்வம் இழப்பு.

13.
அஷ்வஸ்ய பூஷணம் வேகோ மந்தம் ஸ்யாத் கஜபூஷணம்
சாதுர்யம் பூஷணம் நார்யா உத்யோகோ நரபூஷணம்.

வேகம் குதிரைக்கும், மந்தநடை யானைக்கும், புத்திசாலித்தனம் பெண்ணுக்கும், வேலை ஆணுக்கும் அணிகலன்கள்.

14.
க்ஷுத், த்ருர்த், ஆஷா: குடும்பின்ய மயி ஜீவதி ந அன்யகா:
தாஸாம் ஆஷா மஹாஸாத்வீ கதாசித் மாம் ந முஞ்சதி

பசி, தாகம், ஆசை இம்மூன்றும் மனிதனின் மூன்று மனைவிகள்; அவன் மறையும் வரை இம்மூன்றும் அவனைப் பிரியாது. அதிலும் ஆசை என்பவள் ’மிகப் பொறுமைசாலி’. ஒருபோதும் அவனைப் பிரியமாட்டாள்.

15. 
குலஸ்யார்த்தே த்யஜேதேகம் க்ராம்ஸ்யார்த்தே குலம்த்யஜேத்
க்ராம் ஜனபதஸ்யார்த்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத். 

உன் சுய விருப்பத்தைக் குடும்பத்துக்காகவும், உன் குடும்பத்தை உன் ஊருக்காகவும், உன் ஊரை உன் நாட்டுக்காகவும் தியாகம் செய்யலாம். உன் ஆத்மாவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம்.    

16.
நாக்ஷரம் மந்த்ரஹீதம் நமூலம்நௌஷதிம்
அயோக்ய புருஷம் நாஸ்தி யோஜகஸ்த்ர துர்லப:

மந்திரமாகாச் சொல்லுமில்லை; மருந்தாகா வேருமில்லை; உபயோகமில்லா மனிதனுமில்லை; பொருத்தம் அறிந்து உபயோகிப்பவர்கள்தான் அரிது.

17.
தாரணாத் தர்மமித்யாஹு:தர்மோ தாரயதே ப்ராஜா:
யஸ்யாத் தாரணஸம்யுக்தம் ஸ தர்மோஅதிநிஷ்சய:

’தாரணா’ எனும் சொல்லில் இருந்து பிறந்தது தர்மம்; தர்மமே சமுதாயத்தை இணைக்கிறது. ஆக, எந்த ஒன்று சமுதாயத்தைச் சேர்த்துப் பிணைக்குமோ அதெல்லாம் நிச்சயம் தர்மமே.

18.
ஆஹாரநித்ராபயமைதுனம் ச ஸாமான்யமேதத் பஷுபிர்நராணாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோவிசேஷோ தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா:

உணவு, உறக்கம், பயம், புணர்ச்சி இவை நான்கும் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவானவை; தர்மத்தாலேயே மனிதன் மிருகத்தினின்றும் வேறுபடுகிறான்.

19.
ந வா அரே மைத்ரேயீ பத்யு: காமாய பதி: ப்ரியோ பவதி
ஆத்மனஸ்து காமாய பதி: ப்ரியோ பவதி 

ஓ மைத்ரேயீ! ஒருவன் மனைவியால் நேசிக்கப்படுவதற்குக் காரணம் அவன் கணவன் என்பதால் அல்ல; அவன் உள்ளே இருக்கும் ஆத்மாவே  காரணம். 

20.
ஸத்யஸ்ய வசனம் ஷ்ரேய: ஸத்யாதபி ஹிதம்வதேத்
யத்பூதஹிதமத்யந்தம் ஓதத் ஸத்யம் மதம் மம

உண்மையே அறிவுறுத்தப்படுவது; ஆனாலும் எல்லோரின் நன்மையையும் உத்தேசித்தே அது சொல்லப்பட வேண்டும். 
என்னைப் பொருத்து பரந்த சமுதாயத்துக்கு எது நன்மை பயப்பதோ அதுவே உண்மை. 

(தொடரும்)

8.7.13

மறைவுக்குப் பிந்தைய சில குறிப்புகள்


தான் சென்ற பாதையின் சுவடுகளைப் பறவை ஒரு போதும் வானில் விட்டுச் செல்வதில்லை. அதுபோல்தான் தொன்மையான நமது பாரம்பரியமும் வாய்மொழியாய் வந்த பொக்கிஷங்களும், கோயில்களும் சிற்பங்களும் உருவாக்கிய கலைஞனின் பெயரை விட்டுச் செல்வதில் ஆர்வமற்ற தத்துவப் புலம் கொண்டதுதான். 

ஆனாலும் காலத்தின் உருமாற்றம் தந்த கொடையாய் வடிவெடுத்தவைகள்தான் கல்வெட்டுக்களும், நடுகற்களும், கல்லறைகளும். இன்றும் அகழ்வாய்ந்து கண்டெடுக்கப்படும் ஒவ்வொரு தகவலும் மனிதனையும், அவன் விட்டுச் செல்லும் சுவடுகளையும் மிக அர்த்தமுள்ளதாய் நினைக்க வைக்கிறது. ஒவ்வொரு கல்வெட்டும், நடுகல்லும் விட்டுச் செல்லும் சுவடுகள் பன்முகங்களைக் காட்டுவதாய் இருக்கின்றன.

தஞ்சாவூர் ப்ரகாஷின் கல்லறைத் தோட்டத்துக்குத் தஞ்சாவூர்க்கவிராயருடன் போயிருந்த போது விதவிதமான கல்வெட்டுக்கள். சிலவற்றில் நிராசைகளின் எச்சங்கள். சிலவற்றில் மனம் கசியும் வாசகங்கள். 

ஒரு கல்லறை வாசகம்:

இகம் துயருற்றுக் கதறுகிறது: பரம் சுகித்துக் களித்திருக்கிறது.

இப்படியே ஒற்றையடிப் பாதையில் பயணிக்கிறேன். தென்படும் கல்லறைகள் சொல்லும் செய்திகளை, வாசகங்களைப் பார்க்கலாம்.

###########

முகம் தெரியாத இந்த நடுகல் சொல்லும் செய்தி நமது மனதை இரங்க வைக்கிறது.   

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் எடுத்தனூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (59 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது.

கோவிசைய / மயிந்திர பருமற்கு /  முப்பத்து நான்காவது வாணகோ /  அரைசரு மருமக்கள் பொற்றொக்கை / ஆர் இளமகன் கருந்தேவகத்தி தன் / னெருமைப் / புறத்தே வா / டி ப்பட்டா / ன் கல் /  கோபால / ன்னென்னு / ந் நாய் ஒ / ரு கள்ள /  னைக் கடித் /  துக் காத்திரு / ந்தவாறு... 

(விளக்கம்: முதலாம் மகேந்திரன் வர்மப் பல்லவனின் முப்பத்து நான்காவது (624 CE) ஆட்சி ஆண்டில், அவனுக்கு அடங்கி ஆண்ட வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பானின் இளைய மகன் கருந்தேவகத்தி  என்பவன் தன் எருமைகளைப் பகைவர்களிடம் இருந்து மீட்டுத் திரும்புகையில், பகைவரின் தாக்குதலில் தோல்வியுற்று தன் எருமைகளுக்கு அருகே உயிர் நீத்து வீர மரணமடைந்தான். அந்த எருமைகளைக் கவர வந்திருந்த கள்ளர்கள் இருவரைக் கருந்தேவகத்தியின் ”கோபாலன்” என்னும் பெயருடைய நாய் கடித்துத் துரத்தி எருமைகளைக் காத்து நின்றது என்கிறது நடுகல் குறிப்பு. )

#######

விபுலானந்த அடிகளின் சமாதியில் பொறிக்கப்பட்ட அவரது பாடல்:
வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல; வேறெந்த மலருமல்ல;
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. 

காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல; கழுநீர்த் தொடையுமல்ல;
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது. 

பாட்டளிசேர் பொற்கொன்றையோ, பாரிலில்லாக் கற்பகமோ,
வாட்டம் உறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல; பாரிலில்லாப் பூவுமல்ல;
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

விபுலானந்த அடிகள் தொடுத்த அழகான மலர்ச் சரம் இன்னும் வாசனை வீசியபடிதான் இருக்கிறது.
#########

சென்னை திருவல்லிக்கேணியின் திருவட்டீஸ்வரன் பேட்டையையும், அண்ணா சாலையையும் இணைக்கும் எல்லீஸ் சாலை குறித்த செய்தி இது.

கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்த எத்தனையோ பேரில் ஒருவர்தான் ஃப்ரான்சிஸ் வைட் எல்லீஸ் (Francis Whyte Ellis). 1796இல் இந்தியா வந்த அவர்பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக முன்னேறி 1810இல் மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநரானார்.

1818ல் சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். அப்போது  சென்னையின் 27 இடங்களில் கிணறுகளை வெட்டி வைத்தார். அதில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருக்கிறது. 

அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணி பற்றி நீண்ட பாடலாய்  நீளும் கல்வெட்டு ஒன்று ”திருக்குறள் படித்ததன் பயனாக, தான் 27கிணறுகள் வெட்டியதாக”க் கூறும் செய்தி மிகவும் அரியதும், பெருமைக்குரியதும்

முதலில் இந்தப் பாடலை வாசியுங்கள். முதல் வாசிப்பில் சிலருக்குப் புரியாது போனாலும், பாடல் நிதானமாக வாசிக்கப் பொருளைத் தரும். இதற்கு விளக்கம் சொன்னால் 1818ல் எழுதிய மொழிநடையின் மலர் கசங்கி விடும். 


வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்

தீவுகள் பலவும் திதி பெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன்
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன்

மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்

வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில்
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினியார் கீழ்ப்பட்ட  கனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக

சேர சோழ பாண்டி யாந்திரம்
கலிங்க துளுவ கன்னட கேரளம்
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி

குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து

ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம்
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.

இவர் பண்டாரத் தலைவராக இருந்த காரணத்தால் அப்போது திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட்டார்.
திண்டுக்கல்லில் காலரா நோய்க்கு மருந்தென்று தவறுதலாய் இவர் குடித்த எலிப் பாஷாணம் இவர் உயிரைக் குடித்தது. அகால மரணம் அடைந்த இவர் விரும்பியபடி அமைந்த கல்வெட்டின் வாசகம் இது. 

'திருவள்ளுவப்பெயர்த் தெய்வம் செப்பிய
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...