30.6.10

எல்லாமே நம்பிக்கையில்தான்


உங்களிடம்
ஒரு கவிதை சொல்லப் போகிறேன்
காதுகளை மூடிக் கொள்ளலாம் நீங்கள்
வருத்தமில்லை எனக்கு
உதட்டசைவிலும் என் கவிதை
உங்கள் கண் வழியே புகுந்துவிடும்
கண்களையும் மூடிக் கொள்ளலாம்
அப்போதும் வருத்தமில்லை
காற்றிலே அலைந்து திரியுமென் கவிதை
என்றேனும்
கண்களை விழித்தீரெனில்
உள் புகுந்து அதிர்ச்சியூட்டும்
பிடிவாதமாக மூடிக் கொள்ளலாம் நீங்கள்
அப்போதும் வருத்தமில்லை எனக்கு
உம் வாரிசாலோ வாரிசின் வாரிசாலோ
உணரப்படும் என் கவிதை
என்றேனும் ஒரு நாள்
எனவேதான்
வருத்தமில்லை எனக்கு
நஷ்டமில்லை.
எனது வாள்
கூர்வாளொன்று
எப்போதும் என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்
முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்து
கம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்
நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்
பிரியம் காட்டுவதாய் நினைத்து
குரல்வளையை கீறிவிடும்
ரோஜாக்களைக் கொய்து
கைப்பிடியில் சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்
கூர்வாளொன்று.
தூரத்துப் பார்வை
நேற்று என்னூரில் பார்த்த
அதே காக்கைகள்
அதே ஜோடி மைனாக்கள்
அதே வண்ணப் புறாக்கள்
அதே பச்சைக்கிளிகள்
அதே சிட்டுக் குருவிகள்
மரங்களும்
கிளைதாவும் அணில்களும்
அப்படியேதான்
மனிதர்கள் மட்டும்
வேற்று முகங்களுடன்.
-ராஜமார்த்தாண்டன்

இளிப்பு


ங்கும் என் செவிப்பறை அதிர
அதிகாலை கத்தும் அந்தப் பறவை,
உண்மையில் கத்தல் அல்ல; இளிப்பு
என்னை நினைத்து
என் அல்லல்களைக் கண்டு
என்னை ஆட்டிக்குலைக்கும் புதைப்பயங்கள் மணந்தறிந்து
என் பிழைப்பின் பஞ்சாங்கம்
வரிவரியாய்ப் படித்தது போல்
அதிகாலை இளிக்கத் தொடங்குகிறது அது.

ருப்பினும் ஒன்று அதற்கு தெரியாது
நான் ஆயுள் காப்பில் பணம் கட்டி வருகிறேன்.
இறப்பின் மூலம் இருப்பவர் பெறும்
மனிதத் திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது
அந்த இளிக்கும் பறவைக்கு.
-பசுவய்யா

ஆறாம் வகுப்பு "பி" பிரிவு


ஆறாம் வகுப்பு “பி” பிரிவு
மாணவமாணவியர்களின்
குழு புகைப்படத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்
ஆண்டு 1963
காரைபெயர்ந்த பள்ளிக்கூடத்தின்
பின்புறம் எடுக்கப்பட்ட
அந்தப் புகைப்படத்துக்குள் நுழைய
முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
பல வருடங்களாக
வரிசையாக நிற்கும் அத்தனை பேரையும்
வகுப்புக்குச் செல்ல வைக்க
நடுவில் உட்கார்ந்திருக்கும்
மரியசூசை சாரால்தான் முடியும்
புகைப்படத்தைச் சற்று
அருகில் கொண்டுவந்தால்
பெரிதாக மீசை
வைத்துக்கொண்டிருக்கும்
தமிழாசிரியர்
தஸ்புஸ்ஸென்று மூச்சுவிடுவது
கேட்கக்கூடும்
பெண்பிள்ளைகள் வரிசையில்
உட்கார்ந்து கொண்டிருக்கும்
அமராவதியை எப்படி
அடையாளம் காட்டுவது என்றுதான் தெரியவில்லை
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
காணவே முடியாது அவள் அழகை
சாயம் போன ஊதா நிற
பாவாடைசட்டையுடன் பார்க்கவேண்டும்
அவளை-
என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது
எப்போது என்னைப் பார்த்தாலும்
என்று அவளிடம் கேட்கும் துணிவு
வந்ததே இல்லை.
இப்போது கேட்கிறேன்
துணிச்சலுடன்
அதற்கும் சிரிக்கிறாள்
புகைப்படத்தில்!
என் பக்கத்தில்
உட்கார்ந்திருக்கும் கோவிந்துவை
கூப்பிட்டால் போதும்
ஓடிவந்துவிடுவான் என்னோடு விளையாட
44வருடங்கள் தள்ளி
உட்கார்ந்திருக்கிறான்
அவன் காதில் விழுமா
என் கத்தல்?
திக்காமல் திணறாமல்
16ம் வாய்ப்பாட்டை
ஒப்பிக்கும் ரங்கனை
எப்படியாவது வெளியேற்றிவிடவேண்டும்
இந்தப்புகைப்படத்திலிருந்து என்று
துடிக்கிறேன்-
அவன் இப்போது நகராட்சி அலுவலகத்தில்
துப்புரவுத்தொழிலாளியாய்
வேலை பார்ப்பது அறிந்து-
ஒளி படைத்த கண்ணினாய் வாவா
என்று கீச்சுக்குரலில்
அலறிக்கொண்டு பாடும்
இந்திராவையும் எப்படியாவது
காப்பாற்றியாகவேண்டும்-
சொன்னார்கள் போனவருஷம்
அவள் மன நோயால்
தற்கொலை செய்துகொண்டாள்
என்பதாக!

என்னிடமிருந்த புகைப்படத்தைப்
பிடுங்கிக்கொண்டு
’அப்பாவை கண்டுபிடி’
என்று சிரிக்கிறார்கள்
என் குழந்தைகள்-
அவர்களோடு சேர்ந்துகொண்டு
நானும் தேடுகிறேன்-என்னை
ஆறாம் வகுப்பு ’பி’ பிரிவு
மாணவமாணவியர்
குழுப்புகைப்படத்தில்!
-தஞ்சாவூர்க்கவிராயர்.

கடல் மொழிவீசும் வலைக்கும் பரந்த கடலுக்கும்
வெகு அப்பால் மிளிர்கிறது
மீன்களின் சொர்க்கம்.
சிக்காத மீன்களிலும்
உடைந்த கண்ணீரிலும்
உருப்பெற்றது என் நரகம்.
28.6.10

தோற்றாப் பிழை


அவளைப் பார்க்கையில்
இவளை.
இவளைப் பார்க்கையில்
அவளை.
எவரையோ பார்க்கையில்
யாரையோ.
யாரையும்
நினைவுபடுத்தவில்லை நீ.
நினைக்கவில்லை நான்.

26.6.10

பரிகாரம்தோப்பை அழித்து எழுந்த கட்டிடம்
நின்றது பாதியில்
குருவிகளின் சாபத்துடன்.
பரிகாரம் தேடுகிறது படுக்கை அறை
கூட்டுக்கு இடம் தந்து.


25.6.10

கயிற்றரவுகழிகளுக்கிடையே காற்றில் ஆடுகிறது
பசியின் ஓவியம்.
துவளும் கால்களைத் துரத்துகிறது
என்றோ உண்ட சோற்றின் மணம்.
காத்திருக்கிறது
பழகிப்போன ஏமாற்றத்தின் புளித்த நெடி.

24.6.10

மையம்கவிதை உயிர்க்கிறது
ஒரு புதிருக்கும் ஒரு விடைக்கும் நடுவில்.
கனவு ஒழுகுகிறது
ஒரு நேற்றுக்கும் ஒரு நாளைக்கும் மத்தியில்.
முத்தம் உதிர்கிறது
ஒரு பரிவிற்கும் ஒரு கசிவிற்கும் இடையே.
மொழி பிறக்கிறது
ஒரு சமிக்ஞைக்கும் ஒரு சப்தத்துக்கும் மையத்தில்.
இசை தவிக்கிறது
ஒரு தந்திக்கும் ஒரு விரலுக்கும் இடையில்.
நதி நகர்கிறது
ஒரு இதிகாசத்துக்கும் மற்றொன்றிற்கும் நடுவில்.
வேடிக்கை பார்க்கிறது வாழ்வு
ஒரு மூச்சிற்கும் மற்றொன்றிற்குமுள்ள
இடைவெளியில்.

23.6.10

உயிர் விசைகவணின் விசைக்கும் காற்றின் விசைக்கும்
இடையே அலை பாயும் உயிரின் சுடர் போலக்
கதவின் புறத்தே நானும் அகத்தே நீயும்.

22.6.10

வெற்றிடம்1.
வெற்றிடம்
இசை எழுப்புகிறது
ரயில் பாடகனின் சங்கீதத்தில்.
ஓசை எழுப்புகிறது அவன் உண்டியலில்.

2.
மறைந்து போனது
யாருமில்லா அவ்வீட்டின் ஆதிநிறம்.
நிச்சயம் மகன் வருவான்
அவனின் வர்ணத்துடனோ
வீட்டை அழிக்கும் வரைபடத்துடனோ.

19.6.10

நிழல்-படம்படுமுக்கியமான ஒன்றுக்கும் உதவாத ராஜினாமாக் கடிதத்தை
எழுதி நிமிர்கையில் ஒன்று.
உணர்ச்சி கொந்தளிக்க உரையாடும் தொலைபேசியுடன் ஒன்று.
பொறாமை வளர்த்த நடிகனின்
மேற்கத்திய மோஸ்தரில் தலை பொருத்திய ஒன்று.
சங்கநாதம் முழங்க போர்ப்பரணி பாடி
கவச குண்டலத்துடன் புறநானூற்றுப் புரவியில்
தாவிப் பாய்கையில் ஒன்று.
சிங்கம் போல் வாய்பிளந்து கண் மறைக்கும் கறுத்த ஆடியுடன்
உதட்டுச்சாய கர்ஜனையுடன் பச்சை மஞ்சள் சிகப்பு நீலம் என ஒன்று.
ஆக்ரோஷமாய் ஒற்றைக்கொற்றை சவால் விட்டு
ஒலிபெருக்கியைக் கடித்து விழுங்குகையில் ஒன்று.
இடுப்பின் புறத்தில் கரங்களும் தோளில் சரியும் துண்டுடனும்
90 பாகையில் திரும்புகையில் ஒன்று.
என்ன எழுதுவது என்றறியாது பேனா முட்டுக்கொடுத்து
மஹா சிந்தனையுடன் ஒன்று.
நல்ல வேளை. தப்பித்தோம்.
தொண்டை வரளும் குறட்டையுடன் நீ படுத்துறங்குகையில்
எடுக்க முடிந்ததில்லை எந்த நிழற்படமும்.

17.6.10

குறிஒரு சொல் அல்லது சைகை 
துவக்குகிறது சிறகசைப்பை.
ஒரு நிழல் அல்லது விசை 
அசைக்கிறது பாய்மரத்தை.
ஒரு கனா அல்லது காற்று 
தள்ளிச் செல்கிறது
திறக்கப்படாத கதவு நோக்கி.
ஒரு மாயம் அல்லது நீளும் கை
அமர்த்துகிறது பீடத்தில்.
ஒரு சரித்திரம் அல்லது புனைவு
நிறுவுகிறது சிகரத்தின் சிலையை.
வேறொரு சொல் அல்லது சைகை
முறிக்கிறது வேறொரு சிறகசைப்பை.

16.6.10

லயம்

அந்த வனத்தில் என் முன்னே ஒரு நதி.
பிரவாகமாய்ப் படர்ந்து கிடக்கக் காத்திருந்தேன்
என் கவிதையின் முதல் வரிக்காய்.

மொட்டவிழ இருக்கும் தாமரை.
நீரில் பாதம் பதியாது தத்தும் ஓட்டாஞ்சில்.
கொக்கிப் புழு ஈர்க்காத மீன்களின் சுதந்திரம்.

வானில் சுவடுகளை அழித்துச் செல்லும் சிறகுகள்.  
மேய்ப்பனோடு திரும்பும் ஆடுகளின் தோல்மணம்.
யாரோ இசைக்கும் சோகம் கசியும் ஆலாபனை.

மறுபடியும் நதியின் நீரைப் பார்த்து நிற்கையில்
நினைத்துக் கொண்டேன்-
கவிதையின் முதல்வரி
பரவசமும் நெகிழ்ச்சியும் தரும்
இந்தப் பேரமைதியாக இருக்கட்டும் என.

15.6.10

என் வரவேற்பு பானம்நிராகரிக்கிறேன்
காற்றில் பறித்த மாயக்கனிகளின் ருசியை.
வியர்க்கும் தோல்வியின் சாறாக இருக்கட்டும்
என் வரவேற்பு பானம்.
முட்கிரீடங்களும் அலைக்கழிப்பின் கேடயங்களும்
அலங்கரிக்கட்டும் என் வரவேற்பறையை.
உங்கள் முகத்தைச் சரிவரக் காட்டாத
இந்தக் கண்ணாடியில் முகம் பார்த்தான பின்
இளைப்பாறுங்கள் எந்தச் சாதனையையும்
நிகழ்த்தாத இந்தப் பழையநாற்காலியில்.

14.6.10

புற்று


அலைகள்
கரைக்கும் மணல்வீடா?
காற்றின் விசைக்காடும்
சுடரா?
பலூன் குடித்த காற்றா?
விட்டில்பூச்சியின்
வயோதிகமா?
எது வெல்லும்
என் வாழ்வையென்ற
விடை தெரியாது
விடை பெறுகிறேன் மகனே
உன் புற்றுத்தாய் நான்.

(தோழர் இயற்கைசிவத்தின் தாயார் இன்று செஞ்சியில் இயற்கை எய்தினார். நெடுநாட்களாகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்த அவரின் இழப்பு பல நாட்களுக்கு இயற்கைசிவத்தைப் பாதிக்கும். பின் காலம் அவருக்கு ஆறுதலையும் கொடுத்து அடுத்த தளத்திற்கு இட்டுச்செல்லும். வருத்தங்கள் சிவம்.)

5.6.10

இறந்தவனின் வீடுபரவிக்கிடக்கிறது இரக்கமற்ற
நெருஞ்சிமுட்களின் நெடுஞ்சாலை.
பற்சக்கரங்களில் சிக்கிய துகிலாய்ச்
சிதைந்து போனது எதிர்காலம் குறித்த
அவளின் வண்ண ஓவியம்.
கடிகார முட்களின் இடைவெளியில்
அறையப்படுகிறது
பறப்பது அல்லது நடப்பது பற்றிய கனவுகள்.
நிரம்பிக்கொண்டிருக்கும் குடத்தின் நீரொலி போல்
எச்சரிக்கிறது கடக்கும் காலத்தின் ஓசை.
யாரும் கவனியாதிருக்க காற்றுதிர்த்த மல்லியாய்
ஏற்பாடுகள் எதுவுமற்று இறந்தவனின் வீடு.

4.6.10

உரையாடல்கோப்பைக்கு உள்ளிருக்கும் திரவமாயும்
கோப்பையின் விளிம்பு கடந்து
வழியும் திரவமாயும்
இருக்கிறது உன் அமைதியும்
என் பேச்சும்.

II 
அமைதியாய் இருக்கும்போது
பேசுவது பற்றியும்
பேசும்போது அமைதி பற்றியும்
நினைப்பது வழக்கமாகிவிட்டது.

III 
இறக்கும் போது
இறுதியாக என்ன பேசினான்?
என்ற ஆர்வம்
பிறந்த பின் முதலாவதாக
என்ன பேசினான்?
என்பதில் இருப்பதில்லை.

IV 
நினைவுக்கு வருகிறது
அவன் பேசுகையில்
அடைப்பு நீக்கப்பட்ட நீர்த்தொட்டியும்-
பேசாதிருக்கையில்
உருவாக்கப்படாத மண்பானையும்.

V
ஒரு குழாயின் கீழ்
இடப்பட்ட பாத்திரத்தில்
நீர் நிரம்புகிறது என்கிறேன் நான்.
வெற்றிடம் வெளியேறுகிறது
என்கிறான் அவன்.

2.6.10

மறுநாள்வெடித்துச் சிதறுகிறேன் பூக்களும் புகையுமாய்
இறுதியாக உனைப் பிரியும்போது.
தவிர்த்திருந்திருக்கலாம்
நேற்றின் விவாதத்தையும் உனை வென்ற களிப்பையும்.
சொல்லி இருந்திருக்கலாம்
சொல்லாது வைத்திருந்த இத்தனை நாள் ரகசியத்தை.
கற்றிருந்திருக்கலாம்
உனக்காய்க் கலங்கும் ஒரு கூட்டத்தை வென்ற உன் சாகசத்தை.
வாழ்ந்து பழகியிருக்கலாம்
இருந்திருக்கும்போதே இல்லாதிருக்கும் நாளின் கசப்பை.
ஏனிந்த வாழ்க்கையெனத் தொடங்குகிறேன்
நீயில்லா என் அடுத்த நாளை.

1.6.10

வைக்கோல் கன்றுஇருப்பதை இருப்பதாய் நினைக்கச் செய்கிறது
சோளக்கொல்லை பொம்மையின் மாறுவேடம்.

இல்லாததை இருப்பதாய்க் காட்டுகிறது
வைக்கோல் கன்றின் உயிர் கரைக்கும் பந்தம்.

இருப்பதை இல்லாததாக அழிக்கிறது
திருஷ்டிப்பூசணியின் மீதான பெரும் நம்பிக்கை.

இல்லாததை இல்லாததாகவே எடைபோடுகிறது
நிலைக்கண்ணாடியின் முரட்டு நேர்மை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...