30.5.13

பவானி அஷ்டகம் - ஆதி சங்கரர்

இந்த உலகுக்கே ஆன்ம குருவாய்த் திகழ்ந்த ஆதிசங்கரர் இயற்றிய இன்னொரு பொக்கிஷம் இது.

பொதுவாகவே சங்கரரின் அத்வைத வேதாந்தங்களைப் புரிந்து கொள்ளப் பெரிய பயிற்சி தேவையில்லாத அளவுக்கு, மிகவும் கனமான விஷயங்களை எளிமையான மொழியில் நமக்குத் தந்திருக்கிறார். 

அந்த உண்மைகளையும் அறிந்து கொள்வது கஷ்டம் என உணரும் என் போன்றோருக்காகவும், இது போன்ற தோத்திரப் பாடல்கள் மூலமாக மனம் கரையும் படி அந்த இறைவனிடம் உருகிய அந்த மனம் வடித்த கருணையின் உருவங்கள் இவை.

சத்தியத்தின் உருவமான, கடவுளின் வடிவமான சங்கரரின் ப்ரார்த்தனை இத்தகையதாக இருக்குமானால், உடலாலும், மனத்தாலும் அகங்காரமும் செருக்கும் பொறாமையும் பேராசையும் காமமும் ஒருங்கே அமையப் பெற்ற என் போன்றவர்களின் ப்ரார்த்தனையின் மொழி என்னவாக இருக்கும்?

தான் இன்னதென்று வகைப்படுத்த வழியற்ற இந்தக் கடையனின் ப்ரார்த்தனையைப், பெருகும் கண்ணீரின் மூலம்தான் பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கமுடியும்.

இனி, பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கப்படும் மலர்களாக இந்தச் சரணாகதியின் மேன்மையான கீதம். மேலே இணைத்திருக்கும் யூட்யூப் இணையத்தின் பாடலுடன் இந்தப் பதிவைக் கடக்கும்போது, மனதின் தடதடப்பைத் தவிர்ப்பது கடினமாகவே இருக்குமென நினைக்கிறேன்.

இந்த உருவாக்கத்தில் இருக்கும் பிழைகளைச சான்றோர் பொறுத்து திருத்தக் கோருகிறேன்.

பவானி அஷ்டகம்
1. 
ந தாதோ, ந மாதா, ந பந்துர் ந தாதா,
ந புத்ரோ, ந புத்ரீ, ந ப்ரத்யோ, ந பர்த்தா,
ஜாயா ந வித்யா, ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

தாய்தந்தை இல்லை; சுற்றம் நட்பில்லை;
பெண்பிள்ளை, பதியில்லை; மனையாளும் இல்லை;
அறிவு, தொழில் இல்லை; எதுவும் புகல் இல்லை;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

2
பவாப்தா வபாரே மஹாதுக்க பீரு
ப்ர-பாத ப்ர-காமி ப்ர-லோபி ப்ர-மத்த
கு-சம்சார பாஷ ப்ர-பத்தா ஸதாகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

கடலில் ஓர் துரும்பெனவே துயர் சூழ்ந்த கோழை;
காமமும் பாவமும் போதையும் பாதை;
ஆசை, பொறாமையால் கட்டுண்ட பேதை
காப்பாய் பவானீ!என்றென்றும் புகல் நீ.
3
ந ஜானாமி தானம்; ந ச த்யான யோகம்;
ந ஜானாமி தந்ரம்; ந ச ஸ்தோத்ர மந்ரம்;
ந ஜானாமி பூஜாம்; ந ச ந்யாஸ யோகம்;
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

ஈகைவழி அறியேன்; தியானமும் அறியேன்;
தந்திரம் தோத்திரம் மந்திரமும் அறியேன்;   
தொழுவதும் அறியேன்; யோகமும் அறியேன்.
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

4
ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

புண்ணியம் பாவங்கள் தீர்த்தங்கள் அறியேன்;
முக்தித் தலங்கள், உளம் ஒன்றல் அறியேன்;
பக்தி மார்க்கங்கள் விரதங்கள் அறியேன்;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

5
கு கர்மீ, கு சங்கீ, கு புத்தி: கு தாஸ:
குலாசார ஹீன: கதாசார லீன:
கு த்ருஷ்டி:கு வாக்ய ப்ரபந்த: சதாகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

தீது என் செயல், சேர்க்கை எண்ணங்கள் யாவும்
தீது என் குலப்பாதை;  நடத்தையும் தீதே;
தீது என் நோக்கு, வாக்கு, எழுத்தெல்லாம் ;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

6
ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிஷீதேஷ்வரம் வா கடாசித்
ந ஜானாமி சான்யத் ஸதாகம் ஷரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

ஆக்குவோன் காப்போன் அழிப்போனை அறியேன்;
ஞாயிறும் திங்களும் வேறாரும் அறியேன்;
உன் பதங்களன்றியே அரண் வேறு அறியேன்.
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

 7
விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே சா னலே பர்வதே ஷத்ரு மத்யே
அரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹீ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

சர்ச்சை, துயர், மதி மயக்கம், கண்டங்கள் நடுவே
நெடும் பயணம், நீர், நெருப்பு, காடு, மலை எதிலும்,
சூழும் பகை தாழும் வகை ஒருபோதுமின்றிக்
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.
 8
அனாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹாக்ஷீண தீன: ஸதா ஜாட்ய வக்த்ரா
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரனஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

நாதியற்ற ஏழை; மூப்புற்ற ரோகி;
வலுவற்றுச் சோர்ந்தேன்; இழிநிலை சேர்ந்தேன்;
வினையுற்று வழியற்ற பெரும்பாவி என்னைக்   
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

27.5.13

அஷ்டாவக்ர கீதை

சாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு. அதை இன்னொரு இடத்தில் பார்க்கலாம்.

இது அஷ்டாவக்ர கீதை. இது ஜனக மன்னருக்கும், அஷ்டாவக்ர முனிவருக்குமிடையில் நடந்த சம்பாஷணையில் வெளிப்பட்ட தத்துவக் கருத்துக்கள் இந்த முத்துக்கள். 

முன்னொரு காலத்தில் ஜனக மன்னர் தனது அரசவையில் தனது ஆஸ்தான பண்டிதருடன் அப்பியாசத்தில் ஈடு பட்டிருந்தார். அப்போது ஒரு புராதன வேதாந்த சாஸ்ரத்தில்- 

“குதிரையேறும் ஒருவன் சேணத்தின் ஒரு சுவட்டில் காலூன்றி, மற்றொன்றில் கால் எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ப்ரும்ம ஞானம் உறலாம்” -

எனும் மஹா வாக்யம் இருந்தது. இமைப்பொழுதில் ஞானம் அடையலாம் என்பதே அதன் தாத்பர்யமாக இருந்தது. ஜனக ராஜாவால் அந்த வசனத்தைக் கடக்க முடியவில்லை. 

பண்டிதரிடம் " குதிரை கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று நேரடியாக அந்த வசனத்தின் நிரூபணத்தை அறிய ஆவல் கொண்டு வினவினார் மன்னர். அவருடைய ஆர்வத்தைக் கண்டு வெருண்ட பண்டிதரோ, அந்த ஞானானுபவத்தை நிரூபிப்பது தன்னால் முடியாதது என்று மறுத்தார்.

“ அப்படியென்றால் அந்த வசனம் பொய்யானதாக இருக்கவேண்டும். அல்லது மிகைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்” என்று வாதிட்டார் மன்னர்.

“ என்னால் நிரூபிக்க இயலாத பெரும் ஞானமென்பதால், பெரியோரின் வாக்கு பொய்யானதாக எப்படி இருக்க முடியும்?” என்று பதிலளித்தார் பண்டிதர்.

மன்னர் அந்த பதிலால் த்ருப்தியடையவில்லை. அந்தப் பண்டிதரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு நிற்காமல், நாட்டின் அத்தனை பண்டிதர்களையும் ஒவ்வொருத்தராகப் பரிசோதித்து, பதில் கிடைக்காது போகவே சிறையில் இட்டார். நாட்டின் சான்றோர்கள் எல்லோரும் சிறைப்பட்டு, நாடே துயரத்தில் வீழ்ந்தது.


இந்தக் கட்டத்தில், வயதில் சிறியவரும் அறிவில் மூத்தவருமான ஒருவர் ஜனக ராஜனின் நாட்டில் காணப்பட்டார். தோற்றத்தில் எட்டுக் கோணலுடன் தென்பட்டதால் அவர் அஷ்டவக்ரர் என்று அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அரசனின் சந்தேகத்துக்கு நிரூபணம் அளிக்க முடியாமல் எல்லாப் பண்டிதர்களும் சிறைப் படுத்தப்பட்டிருப்பதை அறிந்தார்.

நேராக அரசனைச் சந்தித்து, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எல்லோரையும் விடுவித்து, அவரின் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பதாகவும் அந்த மக்களிடம் சொல்லவே அவரை ஒரு பல்லக்கில் சுமந்து அரண்மனைக்கு ஜனக மன்னனைச் சந்திக்க அழைத்துப் போனார்கள்.

ஜனகருக்கும் அவரின் உறுதியைக் கண்டு அவரால் நிச்சயம் தன் ஐயத்தைத் தீர்த்துவைக்கமுடியும் என்று தோன்றவே, சிறைப்பட்ட எல்லோரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

ஜனகருக்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. அடுத்த நொடியே அஷ்டாவக்ரரிடம், “குதிரையைக் கொண்டு வரச் சொல்லவா?என்று ஆவலுடன் கேட்க, சிரித்தபடியே, “ அரசே! அவசரப்படவேண்டாம். நாம் இருவருக்கும் யாருமற்ற தனிமைதான் இப்போது தேவை. அங்கே உமக்கு அறிந்துகொள்ள வேண்டிய உண்மையை உரைப்பேன்என்றார்.

ஒரு பல்லக்கில் அஷ்டாவக்ரரும், அரசன் குதிரையிலுமாக எல்லோரும் சூழக் காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வனத்தை அடைந்ததும் அரசரிடம், உடன் வந்த பரிவாரங்கள் அனைத்தையும் திரும்பிப் போகச் சொல்லுங்கள். நாம் இருவர் மட்டும் தனித்திருக்கலாம்என்று வேண்டிக்கொண்டார்.

மன்னனும் எல்லோரையும் அனுப்பிவிட்டு, குதிரையின் சேணத்தில் ஒரு காலும், தரையில் மறுகாலுமாக தயாராக நின்றபடி, “இன்னும் தாமதிக்கவேண்டாம் முனிவரே! உண்மையை எனக்கு அருளத் தயை புரிய வேண்டும்என்றார்.

அஷ்டாவக்ரர் அமைதியுடன், “அரசே! நீங்கள் அறிய விரும்பும் இந்த உண்மை, குருவினால் ஒரு சீடனுக்கு அருளப்பட வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது! நாம் இருவரும் அப்படி சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதானா?என்று கேட்டார்.

ஜனகரும் முனிவரை வணங்கி,நானே உங்கள் சீடன். அருள் புரியுங்கள்என்றார். மறுபடியும் முனிவர்,ஜனகா! உண்மையான சீடன் என்பவன் தன்னையும், தன் உடமைகளையும் குருவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமே?என்று கேட்டார்.

ஜனகரும், “அப்படியே அர்ப்பணிக்கிறேன்என்று தன்னையும், தன் உடமைகளையும் அர்ப்பணம் செய்தார். அஷ்டவக்ரரும், “அப்படியே இருப்பாயாகஎன்று சொல்லி, அடுத்த கணம் மறைந்து போனார்.

ஜனகர் (ஸ்தம்பித்து- வேண்டாமே) மரம் போல அசையாமல் நின்றார். சூரியன் மறையும் வரையும், மறைந்த பின்னும் அந்த இடத்திலேயே முனிவருக்கு அர்ப்பணித்தபடியே நின்றுகொண்டிருந்தார்.

நீண்டநேரத்துக்குப் பின்னும் அரசன் திரும்பவில்லையே என்ற கவலை கொண்ட அரசனின் பரிவாரங்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள். காட்டுக்குள் மரம் போல நிற்கும் அரசரைக் கண்டு திடுக்கிட்டார்கள்.

மன்னரோ தன்னைச் சுற்றியிருந்தவர்களையோ, அவர்களின் கேள்விகளையோ கவனித்தவராய் இல்லாமல் அப்படியே உறைந்திருக்க, மக்கள் வேதனையுடன் அஷ்டாவக்ரரைத் தேடினார்கள். அவரையும் காணாது போகவே, பெருத்த கோபமும், ஏமாற்றமும் சூழ அந்தக் கோலத்திலேயே மன்னனைப் பல்லக்கில் ஏற்றி, அரண்மனைக்குத் தூக்கி வந்து பள்ளியணையில் படுக்க வைத்தார்கள்.

மறுநாள் விடியலும் ஏமாற்றம் அளித்தது. மன்னனிடம் ஒரு மாறுதலும் தென்படாதது கண்டு, அஷ்டாவக்ரர் ஒரு மாயாவியாய் இருக்கக்கூடும் என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் மந்திரிமார்கள் முடிவுசெய்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் தூதர்களை அனுப்பினார்கள்.

அன்றைய நாள் முடிந்து, இரவு பிறந்த வேளையில் அஷ்டாவக்ரர் தென்பட்டார். அவரைத் தூதர்கள் அரசவைக்குக் கூட்டிவந்தார்கள். 

முதன்மந்திரிக்கு அவரைக் கண்டதும், கட்டுக்கடங்காத கோபம் வந்தாலும், காரியம் கெட்டுவிடக் கூடாது என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்ததை எல்லாம் விபரமாக அஷ்டாவக்ரரிடம் எடுத்துச் சொல்லி, “மன்னரை மறுபடியும் சுயநினைவுள்ளவராக ஆக்கவேண்டும். அரசரின் இந்த நிலைக்குத் தாங்கள்தான் காரணம்.  கண்டிப்பாகக் காட்டில் என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்ல வேண்டும். என்று கேட்டார்.

அஷ்டாவக்ரர் “ஜனகாஎன்று கூப்பிடவும், “ஸ்வாமி! வரவேண்டும்என்று வணங்கினார் மன்னர்.

அமைச்சர்களுக்கு பலத்த ஆச்சர்யம்.

“ஜனகா! நான் உன்னைப் பரிதாபமான நிலமைக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், நான்தான் உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்றும் சொல்கிறார்களே? இது உண்மைதானா? நீயே சொல்!என்றார்.

“யார் அப்படி அபாண்டமாகச் சொன்னது? சொல்லுங்கள்என்று வெகுண்டார் மன்னர்.

அரசனின் கோபத்தைக் கண்டு அரசவையே நடுங்கிற்று. அஷ்டாவக்ரரிடம், அரசரை எப்படியாவது சகஜ நிலைக்கு மீட்டுத் தாருங்கள் என்று விண்ணப்பித்தார்கள்.  

“அப்படியானால் நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள். மன்னனுடன் நான் தனியாக இருக்கவேண்டும்என்றார் அஷ்டாவக்ரர்.

எல்லோரும் சென்றபின் அஷ்டாவக்ரர் , “ஜனகா! நீ எப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது? வழக்கம் போல இல்லையே நீ?என்று கேட்டார்.

“முனிவரே! நான் என்னையே உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். உங்கள் ஆணைப்படி இனி நடப்பேன்என்று சொல்ல அஷ்டாவக்ரரும், “ ப்ரும்ம ஞானம் என்பது நன்கு பக்குவம் பெற்றவர்களுக்கே உபதேசிக்க உகந்தது. இதுவரை நான் உன்னை சோதித்தேன். இரவு உணவுக்குப் பின் நாம் சந்திக்கலாம்என்று சொல்லி, தனது கிரமங்களை முடித்துத் திரும்பினார்.

ஜனகரின் அந்த இரவு அதற்கு முந்தைய இரவுகளைக் காட்டிலும் அர்த்தம் பொதிந்திருந்தது.

“ ப்ரும்ம நிலை, அதை அடையும் வழி யாது?என்ற ஜனகரின் கேள்விக்கு, “ப்ரும்மம் என்பது நீயே அன்றி வேறில்லை. அதை உணர தேசம், காலம் எதுவும் இல்லை. அது எதுவோ அதுவே நீ. அதுவே எல்லையில்லா பரிபூர்ண ஆத்மாஎன்று உபதேசித்தார்.

அன்றிரவு முழுவதும் அவ்விருவருக்கும் நடுவே இடம்பெற்ற உரையாடல்களே அஷ்டாவக்ர கீதையாய்ப் பரிணமித்தது.

மறுநாள் மன்னர் இயல்பாய்த் தன் அரசவைக்கு வந்து, தன் அலுவல்களில் ஈடுபட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்வுற்றனர்.

அஷ்டாவக்ரரும், “கண நேரத்தில் ஞானம் உறுவது குறித்த உன் சந்தேகம் தெளிவு பெற்றதா? உன் அனுபவத்தைக் கற்றறிந்த இந்த சபையோருக்குச் சொல்என்று வேண்டினார்.

ஜனகரும், “ என் முதிர்ச்சியின்மையினாலேயே சாஸ்த்ர வாக்யத்தைத் தவறாய்ப் புரிந்துகொண்டேன். உங்களால் நான் தெளிவுபெற்றேன். அந்த வாக்யத்தின் ஒவ்வொரு எழுத்தும் உண்மையேஎன்று ஒப்புக்கொண்டார்.

#####

அஷ்டாவக்ர கீதை மொத்தம் இருபது அத்யாயங்கள் கொண்டதாய் அமைந்திருக்கிறது. பதினொரு அத்யாயங்களில் அஷ்டாவக்ரரின் உபதேசங்களும், அவரின் உபதேசத்தால் ஜனகர் பெற்ற அனுபவங்களின் சாரமாக ஒன்பது அத்யாயங்களுமாக இதன் வடிவம் இருக்கிறது.

மொத்தமாக 298 வசனங்களில் நிறைவடையும் இந்த கீதையின் வியப்பில் ஆழ்த்தும் அம்சம், மிக எளிமையும், சிக்கனமான மொழி அமைப்பும், மிக ஆழமான உண்மைகளும்தான்.

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும், பின்னால் விவேகானந்தரும் இந்த கீதைக்கு மிக உயர்வான ஓரிடம் அளித்திருந்தார்கள். ரமண மகரிஷியின் வாழ்க்கையிலும் அஷ்டாவக்ர கீதைக்கு முக்கிய இடமுண்டு. பல இடங்களில் அஷ்டாவக்ர கீதையிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கிறார்.

இந்த அஷ்டாவக்ர கீதை தமிழில் 1937ல் திரு. ரா. விச்வநாதனால் சமஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட போதே ரமணரால் பார்வையிடப் பெற்றது. ஓஷோவும் இந்தப் புராதன போதனைக்குப் பல விரிவான வியாக்யானங்கள் அளித்து மிகச் சிறப்பான இடம் கொடுத்திருந்தார்.

மிகச் சிறப்பான தமிழில் இதை மொழிபெயர்த்த திரு. ரா. விச்வநாதனுக்கு நாம் என்றும் கடன்பட்டவர்கள். அவரின் இந்த மொழிபெய்ர்ப்பின் மேன்மைக்கு மூலத்தின் பங்கும் பெரிய அளவில் உண்டு என்பதை மறுக்கமுடியாது. 

உண்மை நிலை என்பது என்றும் எவர்க்கும் இயல்பாய் உள்ளது என்றும், அதைப் பெற பிற முயற்சி ஒன்றும் வேண்டியதில்லை என்றும், நினைப்புக்கு எட்டாத அந்த நிலை எதையும் நினையாது சும்மா இருப்பதினாலேயே விளங்கும் என்றும் சொல்லும் இந்த கீதையின் தளம் வேதாந்த விஷயத்தில் உண்டாகும் சந்தேகங்களுக்கெல்லாம் மருந்தென்றே சொல்லலாம். 

முழு கீதையும் ஒரு அற்புதமான தத்துவ தரிசனத்தின் வாயிலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்றாலும், என்னளவில் முதல் வாசிப்பில் என்னை உலுக்கிய சில வசனங்களை உங்கள் வாசிப்புக்காகத் தருகிறேன்.

#####

# தன்னை உணராமையால் உலகு தோன்றும். தன்னை உணரின் உலகு தோன்றாது. கயிற்றைக் காணாமையால் அரவு தோன்றும். காணின் அரவு தோன்றாது.

இந்த விளக்கமே மிக அற்புதமான வெண்பா வடிவத்தைத் தன்னுள் புதைத்து வைத்திருப்பது போலத் தோன்றியமையால், இப்படி ஒரு வெண்பா எழுதினேன்.

தன்னை உணராமையான் றோன்றும் உலகு;
தன்னை உணரின் றோன்றாது.- பின்னும்
காணாமையான் அரவாகத் தோன்றும் கயிறு
காணின் றோன்றா தரவு. 

#உருவுற்றது எல்லாம் பொய். உருவற்றதே மெய் என்றும் உணர். இவ்வுண்மை உபதேசத்துடன் இனி உனக்குப் பிறப்பில்லை.

# செய்பவன் நான் எனும் அகங்காரப் பெரும் நாகத்தால் கடிபட்டனை. செய்பவன் நானல்ல எனும் நம்பிக்கை அமுது அருந்தி இன்புறு.

# நான் அற்ற போது விடுதலை. நான் உற்ற காலை பந்தம் என்று விளையாடல் போல் அறிந்து, எதனையும் கொள்ளாது தள்ளாது இரு.

# எப்போது மனம் சில விஷயங்களில் பற்றுமோ, அப்போதே பந்தம். எப்போது சித்தம் எவ்விஷயத்திலும் தொய்யாதோ, அப்போதே வீடு.

# நண்பரும், நிலமும், வீடும், மனைவியும், சுற்றமும், சம்பத்தும் நாலைந்து நாளைக்கே. இதனை ஓர் கனவு என, மாயத் தோற்றம் எனப் பார்.

# அவா அற்றுப் போன பின்பு, எனக்குச் செல்வமோ, நட்போ, விஷயப் பகையோ, நூலோ, அறிவோ எங்கு உள்ளது?

# கண்ணாடியுள் வடிவத்தின் உள்ளும், புறமும் எவ்வாறு அதுவேயோ, அவ்வாறே இவ்வுடலில் உள்ளும் புறமும் ஈசன்.

# என்னிடம் இருந்து வெளிப்பட்ட உலகு என்னிடமே ஒடுங்கும்; மண்ணில் குடமும், நீரில் அலையும்,  பொன்னில் அணியும் போல.

# பிச்சைக்காரனோ, அரசனோ எவன் அவா அற்று அனைத்திலும் நல்லது, கெட்டது எனும் எண்ணம் அற்றானோ, அவனே சிறந்தவன்.

# வான் உலகில்லை; நரகமும் இல்லை; ஜீவன் முக்தி இல்லவே இல்லை; மிக மிகக் கூறுதலேன்? யோக நோக்கில் யாதுமே இல்லை.

# வாதனையற்ற சிங்கத்தைக் கண்டு விஷய யானைகள் ஓசையின்றி ஓட்டம் எடுக்கின்றன. ஓட முடியாவிடில், கெஞ்சிப் பணிகின்றன.

26.5.13

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை


 
திருச்சூர் பூரத் திருநாளுக்கு வரிசையாக முகபடாம் அணிந்த யானைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்த்ததுண்டா?

லக்ஷக்கணக்கான மக்கள் சூழ அசைந்துவரும் திருவாரூர் தியாகராஜரின் தேர்த்திருவிழாவில் நீங்கள் கலந்துகொண்டதுண்டா?

கும்பமேளாவில் குவிந்திருக்கும் கூட்டத்தின் நடுவில் சிக்கி, எந்த வழியில் முன்னேறிச் செல்வது என்று தெரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

நிற்பவர்கள் யாரென்ற அக்கறையின்றி, ஓயாது புரளும் அலைகளுடன் சங்குகள், சிப்பிகள் என்று சலித்துக்கொண்டிருக்கும் ஒரு மஹாசமுத்திரத்தின் கரையில் நெடுநேரம் நின்றதுண்டா?

கிட்டத்தட்ட டி.எம்.சௌந்தர்ராஜனின் பாடல்களோடு உறவுகொண்டவர்களுக்கு மேலேயுள்ள காட்சிகள் அநுபவங்களாகியிருக்கும்.

திரும்புகிற இடமெல்லாம் தன்னையே ப்ரதிபலிக்கிற ஒரு கண்ணாடி அறைக்குள் நின்று, வெளியேற வழிதெரியாது முட்டிக்கொள்ளும் அநுபவமும் பலருக்கு நேர்ந்திருக்கும்.

அவரின் இறுதிப் பாடலை முடிவு செய்ய முடியாது அதலபாதாளம் மட்டும் தொங்கும் ஒரு நீள்கயிறு, அவரின் இசைஅநுபவத்தின் மாயமும், மயக்கமும்.

எல்லோர் வாழ்வின் உன்னதமான, மகிழ்ச்சியான, துயர் சூழ்ந்த, மனம் சோர்ந்த, வலியால் துடித்த தருணங்களை எல்லாம், தன் குரலால் தொட்ட அந்த மாபெரும் கலைஞனின் உடலும், எல்லோருடையதையும் போல இன்னும் சிறிது நேரத்தில் தீயால் தொடப் பட்டிருக்கும். ஒரு பிடி சாம்பலாய் மாறி இருக்கும்.

ஆனால் அந்த ஒரு பிடி சாம்பல் எல்லோருடையதையும் போல அல்லாமல், என்னென்ன மாயங்களை எல்லாம் நிகழ்த்திவிட்டுப் போயிருக்கிறது?

ஆகாயத்தைப் பற்றி, ஒரு காட்டைப் பற்றி, ஒரு சமுத்திரத்தைப் பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளைப் பற்றி நீங்கள் என்ன எழுதிவிட முடியும்? அல்லது அப்படி எழுதிவிடுவதுதான் இறுதியானதாகி விடுமா?

அது குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துக் கதை சொன்னாற் போலவும், செம்புக்குள்ளே கங்கையை அடைக்க முயல்வதும் போலத்தான். நீங்கள் உங்கள் கட்டுரையை முடித்தபின், நிச்சயம் இன்னொரு பத்துப்பாடல்களைப் பற்றிக் குறிப்பிட விட்டுப் போயிருப்பீர்கள்.

என் தாத்தா ரசித்திருக்கிறார். உங்கள் அப்பா ரசித்திருக்கிறார். நாம் திளைத்திருக்கிறோம். நம் பிள்ளைகள் பிள்ளைக்குத் தந்தை ஒருவன்பாடுகின்றன. அவனுடைய கடைசித் தம்பியின் மகன் தூங்காதே தம்பி தூங்காதேயைப் பாடுகிறான். 

இந்தக் காற்று இன்னும் எத்தனை எத்தனை பேரின் மனங்களின் அடிமணலில் சுனைநீராய் ஊறும் என்று யார் சொல்ல இருக்கிறீர்கள்? நீண்ட நாட்களாய் அவை இருந்தன. நாமெல்லாம் போன பின்னும் அவை சுற்றித்திரியும்.

இன்றைக்கு ஏனோ என் நினைவில் படரும் பாடல் மீனாக்ஷியின் மேல் பதித்த வைரம் - சஹானாவில் இழைத்த, “இன்னமும் திருவுள்ளமே இரங்காதாதான். திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

நடுவில் மனதில் ஏதோ கீறும் எண்ணம் பிசிறடிக்கிறது – ‘ஒரு புபேன் ஹஸாரிகாவுக்கோ, ஒரு பங்கஜ் மல்லிக்குக்கோ, ஒரு மன்னா தேவுக்கோ, ஒரு முகேஷுக்கோ அளிக்கப்பட்ட அங்கீகாரம் இந்தக் கலைஞனுக்கு அளிக்கப்படவில்லையேஎன. 

ஆனால் புறக்கணிப்புகளை உதிர்த்து, தங்கள் பாதையில் போய் இறுதிவரை சாதித்துக்கொண்டிருந்த கலைஞர்கள்தான், காலத்தால் தன் மடியில் சீராட்டித் தாலாட்டப்படுகிறார்கள்.   

நான் தேடித் தேடித் திரிந்து கேட்டது போலவேதான் நீங்கள் ஒவ்வொருவரும் கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு பாடலுடனும் ஒவ்வொரு அனுபவம் பின்னப்பட்டிருக்கும். கேட்டுத் திளையுங்கள். அதுதான் அந்த மஹா கலைஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. 

பிரிவின் உப்பு கன்னங்களை நனைக்க, காற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அந்த சாகாவரம் பெற்ற இசை வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கட்டும். 

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...