அவன் உங்களுக்கு
மிகப் பரிச்சயமானவன்தான்.
அவன் வீட்டில்
ஒரு பெரிய மரம்
இருப்பதும்
உங்களுக்குத் தெரியும்தான்.
ஆனாலும்
அந்த மரத்துக்கான விதை
தூவப்பட்டதை
அவன் அறிந்தவனில்லை.
கோடைகளில்
அந்தச் செடியின் பிராயத்தில்
அதன் நீர்வேட்கை
குறித்து உணர்ந்தவனில்லை.
அந்தச் செடி மரமானதை
எங்கிருந்தோ வந்து
உற்சாகமாய் அறிவித்த
குருவிகளைப் பற்றியும்,
அந்தக் குருவிகளுக்கு
இரைக்கப்படவேண்டிய
கையளவு தானியம் பற்றியும்
அவன் ஆர்வம் கொண்டவனில்லை.
தெருவெங்கும் சருகுகளாய்
இறைப்பதாலும்-
அவற்றின் கிளைகள்
அக்கம்பக்கத்தினருக்குத்
தொல்லை தருவதாலும்-
ஒரு அதிகாலையில்
தன் வீட்டு மரம் வெட்டப்பட்டதாக
அவன் சொல்லிக்கொண்டதை
நீங்கள் அறிவீர்களாய் இருக்கலாம்.
தன் வீடு அழிக்கப்பட்டு விட்டதாக
யாரிடமும் முறையிடாத குருவிகள்
கீச் கீச் என்று உற்சாகமாய்-
இன்னொரு வீட்டை உருவாக்க
எஞ்சிய இன்னொரு மரத்துக்குப்
பறந்துகொண்டிருந்தன.
அவனை நீங்கள் எல்லோரும்
அறிவீர்கள்.
அந்த மரத்தையும்
அந்தக் குருவிகளையும்
உங்கள் யாருக்கும் தெரியாது.
8 கருத்துகள்:
சொல்லாப்பட்ட விதம் அருமை...
வாழ்த்துக்கள்...
தன் வீடு அழிக்கப்பட்டு விட்டதாக
யாரிடமும் முறையிடாத குருவிகள்
கீச் கீச் என்று உற்சாகமாய்-
இன்னொரு வீட்டை உருவாக்க
எஞ்சிய இன்னொரு மரத்துக்குப்
பறந்துகொண்டிருந்தன.
நெகிழ வைக்கும் வரிகள்..
நலம்தானா சுந்தர்ஜி சார்?
ஆம் அய்யா.குருவிகளை மட்டுமா நாம் அறிந்திருக்கவில்லை. மனிதன் தன்னையே உணரவில்லை அய்யா. உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்ட அடித்துண்டை வெட்டும் வேலையை அல்லவா செய்துகொண்டிருக்கின்றேர்ம்
சமூகக் கண்ணாடி ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். அடிக்கடி வந்து என் முகம் தெரிகிறதா என்று பார்க்கிறேன் :)
அவனை நன்றாய் அறிவோம்.
மறவனாய் தோளுயர்த்தும் அறப மானிடன்
மரமவனாய் மாறும் போது அற்புத மனிதன்.
அவனை நன்கு தொழுவோம்.
(நீண்ட நாட்களுக்கு பின் கோடை மழை கண்ட,
நனைந்த குறுநில உழவனாய்)
மரங்கள் வெட்டப் பட்டு போக்கிடமே இல்லாமல் தவிக்கும் குருவி இனமே புத்தகங்களிலும் கதைகளிலும்தான் இருக்குமோ என்னவோ சுந்தர்ஜி. எல்லாம் அறிந்தும் அறியாமல் இருக்கும் நம்மை நாமே நொந்து கொள்ளவா.?
படித்து பல மணி நேரமாகியும்
கீச் கீச்சென்று
இன்னும் அந்த
குருவிகளின் கூச்சல்
அகல மறுத்து அடி மனதில்.
மனசுக்கே வேதனையா இருக்கு. இங்கே ஶ்ரீரங்கத்தில் பரவாயில்லை. இன்னமும் பச்சை மிச்சம் இருக்கு. பறவைகளும்! :)))
கருத்துரையிடுக