27.4.12

நகராத வரிசை

யாராவது ஒருவர் ஏதோவொரு வரிசையில்
எங்கேனும் நின்றுகொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

வரிசையின் துவக்கத்தில் சில நேரம்- மத்தியில் சில நேரம்-
நீளும் வாலின் கடைசியில் பல நேரம்.

பொருளற்ற முணுமுணுப்புகள் அல்லது
யார் மீதோ கோபம். யாருக்கோ சாபம்.  
நொடிக்கொருதரம் கடிகாரத்தைப் பார்வையிடல்
அல்லது வியர்த்து வடியும் வெறுமையான பார்வை
இவைகளில்லாத ஒரு வரிசையை 
உங்களால் எப்படிக் காட்டமுடியாதோ அதேபோல

கையில் ஒரு புத்தகத்தோடோ அல்லது 
வாயில் ஒரு பாட்டோடோ
அறியாதவரோடு கதைத்தபடியோ 
ஒரு குழந்தையின் கன்னத்தைக் கிள்ளியபடியோ
நகரும் வரிசையையும்.

சீரழிவுக்குப் பிந்தைய
வேரோடு வாழ்வும் அறுத்தெறியப்பட்ட
ஒரு தலைமுறையின் நிழலாய்
உணவுக்கும் உயிருக்குமாய் நீளும் கைகள்
போதிக்கும் வாழ்தலின் துயரத்தை
நகரும் வரிசைகள் ஒருபோதும் அறிந்ததில்லை.

யாராவது ஒருவர் ஏதோவொரு வரிசையில்
எங்கேனும் நின்றுகொண்டிருக்க வேண்டியிருப்பது 
எத்தனை நிச்சயமானாலும் 
வரிசைகளில் நிற்க நிர்ப்பந்திக்கப்படும்வரை 
வரிசைகளில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை.

23.4.12

3.சுக்ல- தக்ஷிணாயனம்


3.சுக்ல

எந்த மாதத்தில் பௌர்ணமி, அமாவாஸ்யை இரண்டும் இல்லையோ அந்த மாதத்துக்கு விஷமாசம் என்று பெயர்.

எந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாஸ்யை வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.

விஷ மாசத்திலும்மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.

ஆனால் சித்திரைவைகாசி மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

---------------------------------------------------------

யில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலை விட வேகமான கதியில் ராகவனின் மனம். அவன் போய்ச் சேரும் போது கண்டிப்பாய் தாமஸ் ஊரில் இருக்கவேண்டும். தாமஸ் தொலைபேசி எதுவும் வைத்துக்கொள்ளாத புராதன மனிதர். இன்னமும் கடிதப்போக்குவரத்தை நம்பியே தகவல் பரிமாற்றம் நிகழ்த்துபவர். அவருக்கு தான் வரப் போவதாகவும், அவரின் சம்மதம் கேட்டும் எழுதியிருந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வராததால் கடிதம் கிடைத்திருக்குமா என்ற உபரி சந்தேகமும் நியாயமாய் எழுந்தது ராகவனுக்கு. 

தாமஸ் கல்லிடைக்குறிச்சி பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் தபால்நிலைய அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தபால்துறையைத் திருமணம் செய்துகொண்டு விட்டதாக ஊர் மக்கள் பேசிக்கொள்வதுண்டு. அவர் சதா சர்வகாலமும் தபால்துறையின் மேன்மைகளையும், அந்தத் துறை அனுபவித்து வரும் கஷ்டங்களையும் மக்கள் தபால் துறையைப் புறக்கணிக்கத் துவங்கியிருப்பதன் ஆபத்தையும் வாய் ஓயாமல் புலம்பிக்கொண்டிருப்பார். 

முந்தைய பத்தியைப் படித்த உங்களுக்கு அரைத்த மாவையே அரைக்கும்  தாமஸிடம் ராகவனுக்கு என்ன புதிதாகக் கிடைத்துவிடப் போகிறது என்று தோன்றலாம். தாமஸ் பற்றி ஊர்மக்களுக்கு என்ன தெரியுமோ அதுவல்ல அவரின் பிம்பம். அவரின் வீட்டுக்குள் யாருக்கும் அனுமதி இருந்ததில்லை. தபால் நிலையத்தில் தொங்கும் “அந்தர் ஆனா மனா ஹை” பலகையைப் போலவே வீட்டிலும் ரத்தச் சிவப்பில் ஒரு அறிவிப்புப் பலகையைத் தயார் செய்து வெளியில் தொங்கவிட்டிருப்பார். 


வீட்டு வாசலில் நிற்கும் வாதா மரத்தின் நிழலில் நின்றபடிதான் யாரோடும் அவர் உரையாடுவது வழக்கம். வீட்டைச் சுற்றிலும் வேலியமைத்து உள்ளே நுழைய மூங்கில் பிளாச்சுகளாலான படல் கதவுதான் உண்டு. அதற்குள் யாரும் நுழைந்து பார்த்ததில்லை. அதிக பட்சம் அவ்வீட்டின் முன்னால் இருக்கும் மரத்தடி கல்பென்ச்சில் அபூர்வமாக யாராவது பத்திரிகை, அழைப்பிதழ் என்று கொடுக்கவந்தால் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். 

இப்போது யாருமே நுழையாத அவரின் வீட்டிற்குள்ளே நாம் நுழையப் போகிறோம். உள்ளே நுழைந்ததுமே ஒரு கூண்டில் விதவிதமான பறவைகளின் சப்தம். எல்லாமே லவ் பேர்ட்ஸ். மற்றொரு கூண்டில் நீளமான கட்டுவிரியன் ஒன்று. வலது மூலையில் ஒரு தொட்டியில் வண்ணமான மீன்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன. அதுபோக வீட்டுக்குள்ளேயே வந்து தானியங்களைக் கொத்திப்போகும் சிட்டுக்குருவிகள், மைனாக்கள், புறாக்கள். இவர்களின் முறை முடிந்ததும் உள்ளே வந்து தனக்கு வேண்டிய பழங்களை எடுத்துக்கொண்டு போகும் அணில்பிள்ளைகள். வெள்ளை எலிகள். இவற்றிற்கு நடுவே விதவிதமான செடிகள். பூக்கள். இப்படி இருக்கிறது முன்னறை.

அடுத்த அறைக்குள் நுழைந்தால் ஏராளமான புத்தகங்கள். விதவிதமான சஞ்சிகைகள். உலகத்தின் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட புதினங்கள். கவிதைகள். ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் வெளிப்பட்ட கதாபாத்திரங்கள் அந்த அறைக்குள் நடமாடுவதற்கும் பேசிக்கொள்வதற்கும் வசதியாக நல்ல வேலைப்பாடுடன் கூடிய நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. அவர்களின் தாகம் போக்க பெரிய மண்பானை நிறைய தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். மறுநாள் காலையில் காலியான மண்பானையைக் கழுவி மீண்டும் நீர் நிரப்பி வைப்பதை நான் பார்க்கமுடிந்தது. 


அலெக்ஸாண்டர் டூமா, வில்லியம் ஃபாக்னர், தாமஸ் மன், காஃப்கா, மற்றும் இளங்கோவடிகளின் பாத்திரங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு என்றால் சரத் சந்திரர், வைக்கம் பஷீர், தாராசங்கர், ப்ரேம் சந்த் என்று இன்னொரு நாள். தாஸ்தயேவ்ஸ்க்கியின் நாஸ்தென்காவும் நளவெண்பாவிலிருந்து இறங்கிவந்த நளமஹாராஜனும் ஒரு நீண்ட இரவு முழுவதும் இசைத்துக்கொண்டிருந்ததும், விதவிதமான சமையல் செய்து சாப்பிட்ட அனுபவத்தையும் இன்னொரு நாள் பார்க்கமுடிந்தது.

வீட்டைச் சுற்றிலும் அபூர்வமான பல செடி கொடிகளும், வேர்களும், அடர்ந்த கோரைப்புற்களும், நான்கைந்து மரங்களும் ஒரு நீர்ச்சுனையும் அமைந்திருந்தன. அந்த நீர்ச்சுனையின் சுவையான நீரைப் போல அமிர்தம் இருக்குமா தெரியாது.  அந்த நீரை எந்தக் காயத்தின் மீது ஒரு துளி சொட்டினாலும் -காயத்தை விடுங்கள்- அது இருந்த சுவடு கூடத் தெரியாது.   எப்பேர்ப்பட்ட வியாதிக்கும் இது ஒரு சர்வரோக சஞ்சீவினி என்று தாமஸ் சொல்வதுண்டு. தாமஸின் கையில் இருக்கும் ஒரு குடுவையில் எப்போதும் இந்தச் சுனை நீர் நிரம்பியிருக்கும். நல்ல ஆன்மாவைச் சுமக்கும் தேகத்தைப் போல அந்தக் குடுவைதான் பார்க்கச் சகிக்காது. 


காலை எழுந்தவுடன் நீர்பாய்ச்சுவதும், பூக்களோடும் செடிகளோடும் பேசுவதும்தான் தாமஸின் முதல் வேலை. காலை என்பது அதிகாலை மூன்று மணி. கடைசி ஜாமத்தின் இறுதி நிழல் விழத் தொடங்கியிருக்கும்போதே அவர் செடி கொடிகளிடம் வந்துவிடுவார். குறைந்தது ஐந்து மணி நேரமாவது அவற்றோடு செலவிட்டபின்புதான் அவருக்கு நிறைவு பிறக்கும். 

தாமஸ் இரவுகளில் உறங்குவதில்லை. அவர் கடைசியாக எமெர்ஜென்சி ப்ரகடனப் படுத்துவதற்கு முந்தைய நாள்- அதாவது 1975ல்- இரவுதான் கடைசியாக உறங்கியது. இந்திரா காந்தியின் ஆயுதம் தன் உறக்கத்தைப் பறித்துவிட்டதாகவும், ஒரு வேளை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆவி இந்திராவின் உடலுக்குள் புகுந்துவிட்டதாகச் சந்தேகம் கொள்வதாயும், அப்படிப்பட்ட ஒரு சந்தேகத்தோடு உறங்குவது சிலாக்கியமில்லை என்றும் தன் நாட்குறிப்பில் அவர் எழுதியிருக்கிறார். 


ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆசார்ய வினோபா பாவே வசம் இந்திராவின் ஆயுதத்தைப் பிடுங்ககூடிய ஆயுதத்தைக் கண்டதாக அவர்களை நேரில் சந்தித்துவிட்டு வந்த அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் எழுதி இருக்கிறார். அவர்கள் மரணமடைந்தபின் ஆட்சியாளர்களின் மீதும் தலைவர்களின் மீதும் தான் நம்பிக்கை இழந்துவிட்டதைத் துயரூட்டும் தொனியில் எழுதியிருந்ததை என்னால் மறக்க இயலாது. 


இரவு நேரங்களில் முன்னறையின் செல்லப் பிராணிகள் உறக்கத் துவங்கியவுடன் பின்னறைக்கு வந்து அன்றைய அட்டவணைப்படி புத்தகங்களிலிருந்து வெளிவந்து உரையாடிக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்களைக் கவனித்தபடியும், அவற்றிற்கு ஏதாவது உதவி தேவையென்றால் அதை நிறைவேற்றவுமே விருப்பத்துடன் தன் நேரத்தைச் செலவிட்டு வந்தார். 

இது இப்படியிருக்க ராகவன் வந்திறங்கியதை நான் கவனிக்கவே இல்லை. ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து ஒரு குதிரை வண்டியில் ஏறி தாமஸின் வீட்டிற்குப் புறப்பட்டதை, தன் தலையை ஆட்டியபடி செல்லும் அந்த சோனிக்குதிரையின் க்ளப்டப் க்ளப்டப் குளம்படியைக் கவனித்தால் உங்களால் யூகிக்க முடியும். இரண்டுபுறமும் அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நெற்கதிர்கள் சாலையில் குவிக்கப்பட்டிருந்தன. குதிரையின் சாணம் போல இந்த நெற்கதிர்களின் பச்சை மணமும் அலாதியானதுதான் என நினைத்த ராகவனுக்கு யானை, பசு, ஆடு, அணில் என்று தொடர்ந்து இலைதழைகளைச் சாப்பிட்டு சாணி போடும் எல்லா மிருகங்களின் சாணத்தின் மணமும் வரிசையாக நினைவுக்கு வந்தது. 


மிருகங்களைப் போல மனிதனின் சாணம் தெருவுக்கு வர லாயக்கற்றது எனவும் இலைதழைகளைச் சாப்பிட்டு சாணமிடும் விலங்குகளினுடையதை விட மனிதனின் மலம் அருவறுப்பானது எனவும் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. ”நீங்க நினைக்கிறது சரிதான் ஐயா! மனுஷங்களோட மலம் தான் உலகத்துலேயே துர்நாற்றம் புடிச்சது” என்றது குதிரை. தான் எதுவும் பேசாமலேயே தன் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை அந்தக் குதிரை பேசியது குறித்து அந்தக் குதிரையோட்டிக்கு ஆச்சரியமாக இல்லை. ”ரொம்ப அதிசயமா சில பேருங்க கிட்ட மட்டும் நம்ப குதுர பேசுங்க சாமி” என்றார் குதிரையோட்டி. 

ராகவனுக்கும் அது இதற்கு மேல் எதுவும் பேச ஆரம்பித்தால் தாமஸுடன் தான் பேசுவதற்கான வார்த்தைகள் செலவழிந்து போய்விடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.நல்லவேளையாக அதற்குப் பின் குதிரை எதுவும் பேசவில்லை. காய் காய் க்ள க்ள என்று குதிரையோட்டி சொன்னவுடன் குதிரை நின்றது. 


”தபாலாபீஸ் ஐயா வூடுன்னு சொல்லிருந்தீங்கன்னா நான் இல்லாட்டாலும் இந்தக் குதுரயே ஒங்கள இங்க கொண்டாந்து சேத்துடுமுங்க ” என்றார். சிரித்துக்கொண்டே ”அது பேசுறதுக்கும் சேத்து பணம் கேக்காம இருந்தா சரிதான்” என்றார் ராகவன். ”ஐயா ஐயா! ஒங்க வீட்டுக்கு விருந்தாளி வந்துருக்காங்கோ” என்று தாமஸின் வீட்டை நோக்கிக் குரலெழுப்பினார் குதிரையோட்டி. வீட்டிலிருந்து எந்த அசைவும் இல்லை. 


”நீங்க போயிட்டு வாங்க. நாம் பாத்துக்கறேன்” என்ற ராகவனை ”அப்ப சரீ. நா வரேனுங்க” என்ற குதிரையோட்டியைத் தொடர்ந்து குதிரையும் ”போயிட்டு வரேன் ராகவன்” என்றது. ”ஐயாமாருகிட்ட பேசும்போது மருவாதை கொடுத்துப் பேசக் கத்துக்கடா பாண்டியா” குதிரையிடம் செல்லமாக அலுத்துக்கொண்டே புறப்பட்டார் குதிரையோட்டி.

வீட்டின் முன்படலைத் தள்ளி, ”தாமஸ் ஐயா. தாமஸ் ஐயா” என்று ராகவன் குரலெழுப்ப எந்த சப்தமும் திரும்பக் கேட்காதிருந்தது. ராகவனின் காலடி பட்டுக் காய்ந்த வாதாமரச் சருகுகள் எழுப்பிய சப்தம் நிசப்தமான குளத்தில் எறியப்பட்ட கல்லைப் போல சலனமெழுப்பியது. தன் பையைக் கீழே வைத்துவிட்டு பென்ச்சில் உட்கார்ந்த ராகவனுக்கு பசிக்க ஆரம்பித்திருந்தது. சிறிது தொலைவில் வாதாங்கொட்டைகள் கண்ணில் பட்டன. 

எத்தனை நாளாயிற்று வாதாம் பருப்பைச் சாப்பிட்டு? என்ற எண்ணத்துடன் குனிய ”வாப்பா ராகவா. பயணமெல்லாம் நல்ல படியா இருந்துதா?” என்ற தாமஸின் குரல் நிமிர்த்தியது ராகவனை. 


”நல்லா இருந்துது ஐயா. நீங்க எப்பிடி இருக்கீங்க? என்னோட கடிதம் கிடைச்சுதா? உங்ககிட்ட இருந்து பதில் வராம எனக்கு ரொம்ப சஞ்சலமா இருந்துது. ஆனா நீங்க எங்கயும் இப்பல்லாம் போறதுல்லங்கற நம்பிக்கையோட கெளம்பிட்டேன். உங்களயும் பாத்துட்டேன்” என்ற ராகவனைப் பார்த்து “ இப்பல்லாம் ஒரு தபால் கார்ட் எழுதக் கூட சோம்பலாயிருக்கு ராகவன். ஆனா நீயா வந்துடுவங்கற நம்பிக்கை எனக்குள்ளயும் இருந்தது. ரெண்டு பேருக்கும் நடுவுல சங்கிலி மாதிரி ஒரே மாதிரி நம்பிக்கை இருந்துதுன்னா அதப் பிடிச்சுக்கிட்டே எங்க வேணாலும் போயிடமுடியும். என்ன நாஞ் சொல்றது?” என்று சிரித்தார் தாமஸ். 


தாமஸின் அநேகமான வாக்கியங்கள் ‘என்ன நாஞ் சொல்றது?’ என்ற கேள்வியோடுதான் முடியும்-பதிலுக்கு நீங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லாவிட்டாலும்.

”குளிச்சுட்டு வரியா ராகவன்?” 

”கொஞ்ச நேரம் நாம பேசிக்கிட்டு இருக்கலாம் ஐயா! அதுக்கப்புறம் குளிக்கலாம்”  

“உள்ள போலாமா?”

“வேணாங்க. அப்புறம் உங்க வீட்டுப் பாம்பு, பறவை எல்லாம் நம்மகூடப் பேச ஆரம்பிச்சுடும்”

“எல்லாம் இன்னும் எழுந்திருக்கலை. சரி. இப்படியே ஒக்காருவோம்”

“அந்த வேர் கிடைச்சிடுச்சா ஐயா?”

“கிட்டத்தட்ட என்னோட ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சிடுச்சு ராகவன். ஆனா இதையெல்லாம் இப்ப வெளீல சொல்ல பயமாயிருக்கு. இப்ப இருக்கிற அரசாங்கமும், தலைவர்களும், அவங்கள ஆட்டிப் படைக்கிற கொழுத்த நிறுவனங்களையும் நினைக்கிறப்ப நம்ம நாட்டோட ஆதாரமான செல்வங்களையே இழந்திடுவோமோன்னு பயமாயிருக்கு ராகவன்”

“உங்க பயம் நியாயமானதுதான். ஆனாலும் உங்க ஆராய்ச்சி இப்படி யாருக்கும் தெரியாத ஒரு நாலு சுவத்துக்குள்ள முடிஞ்சு போயிடக்கூடாதேன்னும் ஆதங்கமாயிருக்கு ஐயா”

“நான் பேரு புகழை நினைச்சு இதைச் செய்யல. ஆனா நம்ம நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாம் இன்னொருத்தன் கைக்குப் போயிடுமேன்னுதான் தினம் தினம் பயப்படறேன். சொல்லப் போனா இதுக்குள்ளல்லாம் ஏன் நான் நொழஞ்சேன்னும் சலிப்பா இருக்கு ராகவன்”

“மரணத்தையே ஜெயிக்கற அந்த வேரை நான் பாக்கலாமா?”

“பாக்கலாம். பாக்கலாம். ஆனா இப்போத் தோணுது மரணத்தையே ஜெயிச்சுட்டா அப்புறம் வாழ்க்கைக்கு என்ன சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் இருக்கும்னு? மிச்ச ஆராய்ச்சியெல்லாம் கூட பரவாயில்லை. ஆனா இந்த வேர் பத்தின விஷயம் மட்டும் உன்னோட இருக்கட்டும். செய்வியா ராகவன்?”

சொல்லிவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்து அந்த வேரை வெளியில் கொண்டுவந்தார் தாமஸ்.

( தொடரும்)

20.4.12

2.விபவ- தக்ஷிணாயனம்அதிகமாய் சித்தர்களை நீ தெரிசிக்கத்தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் க்லீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிகசிக்கும்படி அவரைக் காண்பாயப்பா
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு

-அகத்திய முனி, அகத்திய பூரண சூத்திரம்

                       -------------------------------------------------------------
செங்கல்பட்டுக்கு நீங்கள் போயிருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு சித்தர் இருக்கிறார். ஊதுவத்திச் சித்தர்.அவரை நீங்கள் பார்க்க நேரும்போது அவரைப் போய் ஏன் பார்க்க வந்தோம் என்பது போல ஒரு நொடியில் அலறவிட்டு விடுவார். உங்களின் ஆணவத்தின் உயரம் எத்தனையோ அதன் சிகரத்தைத் தொட்டு அசைப்பார். அவரின் முதல் பார்வையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அத்தனை ஏளனமும் ஆழமும் கொண்ட ஒரு கொக்கி போல உங்களைக் குத்தி இழுக்கும். அடுத்தடுத்து வரும் கேள்விகள் மிக எளிமையாகவும் ஆனாலும் உங்களால் பதில் சொல்ல முடியாததாகவும் இருக்கும்.எல்லோரையும் கேள்விகளால் அணுகுவார் என்றும் சொல்லமுடியாது. மிக அற்பமான யாசகர்களிடமும்,  சித்தசுவாதீனம் கொண்டவர்களிடமும், சில வேளைகளில் கள்வர்களிடமும் அவர் மிக நெருக்கமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நீ யார்? உனக்கு எந்த ஊர்? என்று ஒரு செல்வந்தனிடம் ஊதுவத்திச் சித்தர் கேட்டபோது அதற்கு பதில் சொல்ல முடியாமல், அவர் ஊராக தன் ஊர் எது என்று தேடி அலைந்து, இந்தியாவின் எல்லா மொழிகளையும் கற்றுமுடித்து, எல்லாத் தொழில்களையும் ஒரு கை பார்த்து, ஒரு ஆடு மேய்ப்பவனாக இருப்பதே தனக்கு மிக உற்சாகம் தரும் தொழில் என்றும், ஒரு பெரிய கிடையுடன் கடைசியில் இந்த சித்தர் முன்னால் வந்து நின்று தன் ஊர் இதுதான் என்றும், தான் ஒரு ஆடுமேய்ப்பவன் என்றும் நாற்பது வருடங்கள் கழித்துச் சொன்ன பதில் இன்னும் செங்கல்பட்டில் அந்த சித்தரின் முன்னால் ஒரு சிலை போல நிற்பதை நீங்கள் போனால் பார்க்கலாம்.

இன்னொரு மேதை. என்ன கற்றிருக்கிறீர்கள் என்று கேட்டதற்குப் பதில் தேடி, தான் படித்த ஆரம்பப் பள்ளிக்குப் போனவர் திரும்ப முடியாமல் மறுபடியும் முதலாம் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்து இப்போது தன் முதிய வயதில் உயர்நிலை வகுப்புக்களுக்குத் தேவையான புத்தகம் நோட்டுக்களைத் தூக்கிப் போக ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு பள்ளிக்கு வரும் காட்சியை உலகத்தின் அத்தனை முன்னணித் தொலைக்காட்சிகளும் உலக சாதனை என்று பறைசாற்றி இதை உலகவரலாற்றிலேயே முதன்முதலில் வெளியில் கொண்டு வந்தது யார் என்றறிய உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் கடந்த பத்து வருடங்களாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பதை அறிந்த செங்கல்பட்டு சித்தர் மற்றொரு ஊதுவத்தியை ஏற்றச் சொன்னார்.

அந்த சித்தர் தண்ணீரைத் தவிர எதையும் பருக மாட்டார். ஊறவைக்கப்பட்ட அவலில் தேங்காய்ப்பூவும் வெல்லமும் கலந்து காலை ஒருமுறை மெல்வதோடு ஆகாரம் முடிவுறும். அவரைச் சுற்றி ஊதுவத்திகள் ஏற்றப்பட்ட படி இருப்பதை மிகவும் விரும்புவார். தன்னைப் பார்க்க வருபவரின் பையை வாங்கி அதிலுள்ள ஊதுவத்திக் கட்டை வாங்கி முகர்ந்து பார்த்துவிட்டு அவல்-வெல்லம்-தேங்காய் தவிர வேறேதும் இருந்தால் தன்னருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார். ஒரு தடவை குப்பைகளை அகற்றப் போன சித்தரின் பக்தர் ஒருவர் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கண்டதாகவும், சித்தரிடம் இதுபற்றிச் சொன்ன போது மார்கழிக்குளிருக்கு அதிகாலை வெந்நீர் போடும் முக்கட்டி அடுப்பில் அவற்றைப் போட்டுவிடுமாறும் சொல்லிவிட்டார்.

அந்த சித்தரிடம் காயல்பட்டினம் பீர் முஹம்மது என்ற இஸ்லாத்தைச் சேர்ந்த ஹலால் முறையில் ஆட்டிறைச்சி விற்றுவரும் அன்பர் ஒருவர் தன் வியாபாரம் தனக்கு லாபகரமாக இல்லை என்றும், தன் குடும்பம் பட்டு வரும் துன்பங்களையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார். அதற்கு ஊதுவத்திச் சித்தரும் முஹம்மதுவின் நாசியருகில் ஊதுவத்தியைக் காட்டி முகரச் சொன்னார்.

வாசனை நன்றாக இருப்பதாக முஹம்மது சொல்ல இந்த வாசனையை நினைவில் வைத்துக்கொள். திருவண்ணாமலையில் நள்ளிரவில் மலையேறிச் செல். இதே நறுமணத்தை அங்கே நீ நுகரும்போது உனக்கான வழி தெரியும் என்று சொல்ல இன்னொரு முறை தன் நாசிக்கருகில் ஊதுவத்தியைக் கொண்டுவர முடியுமா? என்று முஹம்மது கேட்க சித்தர் ஊதுவத்திப் புகையை மூக்கருகில் காட்டி எண்களை நினைவில் வைக்காதே. நறுமணங்களை நினைவில் வை என்று சொல்லி முஹம்மதுவிடமிருந்த தொலைபேசியை வாங்கி பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். அப்போது யாரோ முஹம்மதுவை அழைக்க தொலைபேசி வாள மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் என்று கூவியது. இதுக்கப்புறம் சத்தம் போடாதே என்று சொல்லி ஒரு கல்லை எடுத்துக் குறிபார்த்து அதன் மேல் போட அந்தத் தொலைபேசி ஒரு குரங்காய் மாறி வெளியே இருந்த மாமரத்தின் மேல் தாவி அமர்ந்தது.

நாசியை ஒரு கைக்குட்டையால் அழுத்தி மூடியபடியே பேருந்தில் திருவண்ணாமலையை நோக்கிப் புறப்பட்டார் முஹம்மது. நடத்துனர் எந்த ஊருக்கு என்று கேட்டபோது மூக்கடைத்த குரலில் ஞிருஞஞ்ஞாஞலை என்று சொல்ல நடத்துனர் எப்படி எப்படியெல்லாம் மனுஷங்க வந்து சேர்றாங்க. கடவுளே என்று முனகியபடியே டிக்கெட்டை எச்சில் தொட்டுக் கொடுக்க முஹம்மது மூக்கை மூடியபடியே கண்களையும் மூடினார்.

பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போது முஹம்மதுவின் உறக்கத்தின் நடுவே கனவு ஒன்று விரிந்தது. ஒரு படகில் தன் குடும்பத்தோடு திருவண்ணாமலையின் மீது மலையேறுவதாய்த் தொடங்கிய முதல் காட்சியிலேயே முஹம்மது திடுக்கிட உடனே மலை கடலானது. திருவண்ணாமலை ஒரு சமுத்திரமாக மாறியதை அவரால் நம்பமுடியவில்லை. அந்த ஊரை நோக்கி வந்த அத்தனை வாகனங்களும் சுறா மீன்களாக மாறின. மக்கள் எல்லோரும் படகுகளாகவும் மீன்களாகவும் பவழப் பாறைகளாகவும் மாறியிருந்தனர்.

பேருந்து நிலையம் என்றெழுதியிருந்த பலகை ஒரு துடுப்பாக மாறியிருந்தது. எல்லா தொலைபேசிகளும் தவளைகளாகவும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் கட்டுமரமாகவும் மாறியிருந்தன. கனவின் எல்லை விரிய விரிய நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாவலை விட முஹம்மதுவின் கனவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறதே என்றெண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் மூடிய நாசியுடன் இருந்த முஹம்மது சூடான வடை மூணு பத்துரூவா எடுத்துக்க என்று கதறிய குரலில் கண்களைத் திறக்க கனவு பரிதாபமாக உடைந்தது. வடையின் மணம் நாசியில் நுழையாத அளவுக்கு மூக்கை மிகவும் கவனமாக அழுத்தமாக மூடினார்.

திருவண்ணாமலையின் தெருக்களெல்லாம் புழுதியில் மூழ்கியிருந்தன. பேருந்திலிருந்து இறங்கிய முஹம்மது கவனத்தைக் குவித்து மலையை நோக்கி நடக்கலானார். அருகில் இருந்த ஒரு குழாயில் முகம், கை கால்களைக் கழுவி விட்டு ஒரு மரத்தடியில் துண்டை விரித்து உட்கார்ந்தார். மலையைச் சுற்றி ஏராளமான மக்கள் நடமாட்டம் இருந்தது. குப்பைத் தொட்டியில் கிடந்த தொலைபேசியில் தன்னை அழைத்தது யாராயிருக்கும் என்ற கேள்வி விடாமல் துரத்தியதை முஹம்மதுவால் தாங்கமுடியவில்லை. தொலைபேசியின் மேல் தனக்கிருக்கும் இந்தப் ப்ரேமை ஒரு குரங்காய் மாறிய பின்னும் இப்படித் துரத்துவது வேடிக்கைதான் என்று நினைத்துக்கொண்டார்.

தான் வந்த காரியம் நிறைவேறுமா? தன் கஷ்டங்கள் யாவும் தீருமா? என்ற சந்தேகங்களும் ஒன்றாய்க் கலந்து ஒரு பூட்டாக மாறி அவருக்கு முன்னே வந்து விழுந்தது. அதற்கான திறவுகோல் மலைக்கு மேல் கிடைக்கப் போகும் நறுமணமாகத்தான் இருக்கும் எனவும், அது தனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்ட போது எதிரே ஊதுவத்திச் சித்தர் ஒரு குதிரையின் மீதேறிப் போய்க் கொண்டிருந்தார். எழுந்து அவரைப் பார்க்க ஓடிப்போனபோது அவர் மிக விரைவாக குதிரையை ஓட்டிக்கொண்டு மலைக்கு மேலே சென்று விட்டது வருத்தமளித்தது. என்றாலும் சித்தர் தனக்குப் பக்கத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார் என்பதும், தன்னுடைய பயணத்தில் அவர் தொடர்ந்து வருவார் என்றும் முஹம்மதுவுக்கு நம்பிக்கை பிறந்தது.

இருள் சரம்சரமாய் இறங்கிக்கொண்டிருந்தது. அமாவாசை நாளாகையால் அதன் அடர்த்தியை வார்த்தையால் எழுத அவசியமில்லாததாய் இருந்தது. மெல்ல மரத்தடியிலிருந்து எழுந்த முஹம்மது மலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆள் நடமாட்டம் இப்போது சுத்தமாய் அற்றுப்போயிருந்தது. மின்மினிப்பூசிகளும் சிள்வண்டுகளும் இல்லாமல் ஓர் இரவா? கண்களின் இருளை விண்டு உண்டபடி மின்மினிகள் மிதந்துசென்றன. காதுகளின் சுவர்களில் சிள்வண்டுகளின் சங்கீதம் ஒப்பற்ற ஓவியத்தை வரைந்தபடி இருந்தது. கொஞ்சம் குளிர்வதுபோல் இருந்தது. தன் நாசியில் புதைந்திருந்த வாசம் மீண்டெழுந்து வராதா என்று தவிக்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாவது நடந்திருக்கலாம். விதவிதமான மூலிகைகளின் நெடியை முதன்முதலாக நுகர வாய்த்தது. எத்தனையோ செடிகளில் மொட்டுக்கள் மலரலாமா என்று தங்களுக்குள் கிசுகிசுத்தபடியே மலரத் துவங்கின. மரங்களின் காய்கள் பழங்களாகப் பழுக்கவும், பழுத்த இலைகள் மண்ணை நோக்கி மிதக்கவும் செய்தன.

விதவிதமான பறவைகள் அன்றைய நாளில் தாங்கள் கண்ட காட்சிகளைக் கூட்டுப் பறவைகளிடம் பகிர்ந்தபடி இருந்தன. அவற்றின் மொழியை இத்தனை எளிதில் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது முஹம்மதுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சருகுகளின் மத்தியில் எதுவோ ஊர்ந்து செல்வதை அவரால் உணர முடிந்தது. அடுத்த நொடி மிகப் பெரிய நாகமொன்று இரை தேடிச் செல்வதைக் கண்டபோது அதுவும் இவரைக் கண்கள் மினுங்கப் பார்த்தது. சர்ப்பத்தின் தோல்மணம் கிட்டத்தட்ட ஊதுவத்திச் சித்தர் முகரப் பண்ணிய நறுமணத்தை ஒத்ததாக இருப்பது போல் உணர மனதில் திகில் கலந்த மகிழ்ச்சி பரவியது.

திரும்பிப் பார்த்த நாகம் என் பின்னால் வா என்று உதிர்த்த வார்த்தை அம்பின் கூர்மையுடன் முஹம்மதுவை நோக்கிப் பாய்ந்தது. அந்த வார்த்தையின் நுனியைப் பற்றிக்கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கமும் தவறவிட்டுவிடக்கூடாது என்ற வைராக்யமும் ஒன்றாய் வதைத்தன. இந்த மாதிரிக் கட்டங்களை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். நான் போகட்டுமா? என்று திரும்பவும் கேட்டது நாகம். போய் விடாதே. இதோ வருகிறேன் என்று அதன் பின்னால் தொடர்ந்தார் முஹம்மது.

வழியில் அருவியிலிருந்து விழும் நீர் காதுகளில் விழுந்தபடி இருந்தது. நாகத்தின் கண்களிலிருந்து புறப்பட்ட ஒளி இருளைப் பிளந்துசெல்ல முஹம்மதுவுக்கு தன்னைச் சுற்றிப் பரவியிருக்கும் இருளின் ஒட்டடைகளை விலக்கியபடியே பயணிப்பது எளிதாய் இருந்தது.

எதிரிலிருந்து ஏதோ வெளிச்சம் புறப்படுவது போலத் தெரிந்தது. இன்னொரு பெரிய நாகம் வந்துகொண்டிருந்தது. இது எதிர்ப்பட்ட நாகத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது. அந்த நாகம் இன்றைக்கு ஊதுவத்திச் சித்தர் அனுப்பியது முஹம்மது மட்டும்தான். கவனமாகப் போய் வா என்று எச்சரித்துவிட்டு என்னைப் பார்த்து சிரித்தது. ஊருக்குப் போனவுடன் சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று ஆட்டோவின் பின்னால் எழுதியிருக்கும் ஸ்டாலினிடம் சொல்லி அதை அழிக்கச் சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டார் முஹம்மது.

(தொடரும்)

19.4.12

1.ப்ரபவ- தக்ஷிணாயனம்

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயனத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயனம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. 

ஆகையால், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவாகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த கிருஷ்ணபக்ஷம் பித்ருக்களுக்கும் இரவாகிறது. அஷ்டமி, பக்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும்.

ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீகிருஷ்ணாவதாரக் காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.  அவனுடைய பெயரும் "கிருஷ்ணன். "கிருஷ்ணன் என்றால், "கறுப்பு என்று பொருள்.

              ------------------------------------------

தவைப் பூட்டிக்கொண்டு கிளம்பும்போது திடீரென்று அறிமுகம் இல்லாத ஒரு வயதான பெரியவர் வந்து கதவைத் திற. உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றுமோ அதேதான் கோபாலனுக்கும் தோன்றியது. குழப்பத்துடன் அவரிடம் ”நீங்க யாருன்னு தெரியலையே?” என்றான்.

நீங்கள் யூகிக்கமுடியாத ஒரு ஞானப்பொலிவு அவர் முகத்தில். எழுபதிருக்கலாம். அசர வைக்கும் ஒளிவீசும் கண்கள். நிச்சயம் ஆறடி உயரமிருப்பார். நெற்றியின் மையத்தில் சந்தனமும் அதன் நடுவில் அரக்கு நிறக் குங்குமமும். கழுத்தில் ருத்ராக்ஷம் நீங்கள் எதிர்பார்த்தபடியே. மேற்கில் விழ இருக்கிற தகதகக்கும் சூரியனைப் போல காவி நிற ஆடையில் மினுங்கினார்.

”என்னப்பா ரொம்பவும் யோஜிக்கறே? ஒனக்கு ஒரு நல்ல சேதி கொண்டு வந்திருக்கேன். பூட்டியிருந்த கதவொண்ணு திறக்கப்போறது”

தெருவில் சுற்றிலும் ஆள் நடமாட்டமில்லை. கோபாலனின் மனைவி ஊருக்கு அவள் அம்மா வீட்டிற்குப் போயிருக்கிறாள். வெளியில் காஃபி சாப்பிட்டுவரலாம் என்று கிளம்பியபோது இந்த சம்பாஷணை.

ந்த வருடத்தின் வெயிலைப் போலவே வாழ்க்கையும் வறுத்தெடுத்தது. தொழிலில் எதிர்பாராத முடக்கமும் சரிவும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாசம் பூத்த வழுக்குப்பாறையாய். எந்தப் பிடிமானமும் இல்லாமல் காற்று தள்ளிக் கொண்டு போகும் சருகு போல மிதந்து போய்க்கொண்டிருந்தான் கோபாலன். மிகவும் யோசித்து, தன் அத்தனை சாமர்த்தியங்களையும் நம்பி இத்தொழிலை விரிவுபடுத்தியிருந்தான்.  வங்கியின் மேலாளர் தொடங்கி அரசு நிறுவனங்கள் வரைக்கும் கேட்ட எல்லா உதவிகளும் சட்டென்று கிடைத்தன. இயந்திரங்கள் வாங்கப் போன இடத்திலும் முதல் சந்திப்பிலேயே சாதகமான தொடர்புகளும் கிடைத்தன.

ஆனால் எத்தனை சாதகமாக தொழிலின் எதிர்காலம் கண்ணுக்குத் தெரிந்ததோ அத்தனைக்கு அத்தனை அது பாதகமாகப் போய் முடிந்தது. ஒரு மாதத்தில் திரும்ப வேண்டிய தவணை இரண்டு மூன்று மாதங்களாகியும் திரும்பாமல், புதிய தவணைகளும் சேர்ந்து கொள்ள கொள்முதல் செய்த இடத்திற்கும் வங்கிக்கும் பதில் சொல்ல வழியில்லாது போய் கடன் கண்ணை மூடித் திறப்பதற்குள் கழுத்து வரை ஏறி நின்றது. தவணையை வசூலிக்கப் போன இடத்தில் அந்த நிறுவனத்தின் நிதிநிலைமை திவாலாகி மஞ்சள் நோட்டீஸ் வரை சென்றுவிட பெரிய சறுக்கலின் துவக்கத்தில் இருந்த கோபாலன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான். இதுவரை இருந்த சாமர்த்தியமெல்லாம் மறந்து திடீரெனப் பழக்கமில்லாத தொழிலில் சிக்கித் திணறுவது போலத் தோன்றியது கோபாலனுக்கு.

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை, கார்களை விற்று எல்லாக் கடன்களையும் அடைத்தான். கையில் சொற்பக் காசுடன் பழகிய ஊரை விட்டு கொல்லும் நினைவுகளை மறக்க இந்த ஊருக்கு வந்தான். நம்பிக்கை. வழுக்கும் அடர்பாசி பரவிய தரையில் காலூன்றி முன் நகரும் நம்பிக்கை. அதுதான் அவனை இன்னும் நகர்த்திக் கொண்டிருக்கிறது. கோயில் யாத்திரை என்று ஆளே மாறியிருந்தான்.

”உங்களுக்கு எது ஆறுதல் தருதோ அப்படியே செய்யுங்க. உங்க கைல இருக்கற பணத்தைக் கொண்டு என்னால ஒரு வருடம் குடும்பம் நடத்த முடியும். வாடகைக்கும் செலவுக்கும் இது போதும்.இத்தனை நாள் தொழில் தொழில்னு கஷ்டப் பட்டு லோலோன்னு அலைஞ்சீங்க. கடவுளாப் பாத்து இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுத்து, உங்க வேகத்தைக் கட்டுப்படுத்தி, தொழிலைக் கைவிட்டுட்டு, அவனை நினைச்சு நீங்க கோயில் குளம்னு அவன் பின்னாடியே சுத்தணும்னு இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கானோன்னும் எனக்குத் தோணுதுங்க. கொஞ்ச நாள் எதுவும் செய்யாமல் அமைதியா சஞ்சலமில்லாம ஓய்வெடுத்துக்குங்க. மிச்சதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்று அசரீரி மாதிரி கோபாலனுக்கு ஒத்தடம் கொடுத்தாள் வாசுகி- அவன் மனைவி. 

அவனும் அது சரிதான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். நகரும் ஒவ்வொரு நாளும் கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்குமாய் ஊசலாடிக்கொண்டிருந்தது. காலத்தின் உக்ரத்தைத் தாங்கமுடியவில்லை.

தவைத் தள்ளிக்கொண்டு ”உள்ளே வாங்க” என்றான்.

”நான் எப்பவோ உள்ளே வந்துட்டேன். நீதாம்ப்பா இன்னும் வெளீலயே நிக்கற” என்றார் பெரியவர்.

இப்படிப் பூடகமாகப் பேசும் மனிதர்களை கோபாலனுக்குப் பிடிக்கும். அவர்களின் புதிரை விடுவித்து விடை தேடுவதில் ஒரு அளவில்லாத சுவாரஸ்யம்.

உட்கார இடம் தேடியது பெரியவரின் கண்கள். நாற்காலியை நகர்த்தி உட்காரச் சொன்னான்.

“குடிக்க கொஞ்சம் ஜலம் கொடேன்” என்றார்.அவர் குரலில் இருந்த வாத்ஸல்யம் கோபாலனுக்கு அவரிடம் நெருக்கத்தை உண்டாக்கியது.அவரின் உத்தரவுகள் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிவிடுபவன் போல இருந்தான்.

முகத்தைத் துடைத்துக் கொண்டே “ஊதுவத்தி இருக்கா?” என்றார்.

“கம்ப்யூட்டர் சாம்பிராணிதான் இருக்கு. பரவால்லியா?”

”எதேஷ்ட்டம். ஒண்ணு ஏத்தி வை. நைவேதனத்துக்கு திராக்ஷை வெச்சுருக்கியா?”

அதைத் தேட முடியாது. எந்த டப்பாவில் வைத்திருக்கிறாளோ? தெரியாது.

வேகமாக எதிர்க்கடையில் சென்று வாங்கி வந்தான்.

”இப்படி ஸ்வாமிகிட்ட கூட ஒரு இருபத்திஒரு ரூபாயும் வெச்சுட்டு ஒக்காரு”

அவர் எதைப் பற்றிப் பேசப்போகிறார் என்று அவனால் யூகிக்க முடியாவிட்டாலும் அவரின் வார்த்தைகள் தனக்கு ஏதோ செய்தி கொண்டுவந்திருப்பதாக அவன் உள்மனது சொல்லியது.

“என்ன யோஜிக்கற? நான் பேசப் போறத கவனமாக் கேட்டுக்கோ. அதை மனசால வாங்கிக்கோ.புரியறதா?”

எதிரில் கண்களை ஒரு நிமிடம் மூடி மனதை சலனப் படாமல் ஒரு புள்ளியில் குவித்துக்கொண்டான்.

”ஃபோனையெல்லாம் நான் பேசும் போது நோண்டக்கூடாது. ஆஃப் பண்ணிடு இப்பவே”

”மொபைல் ஃபோன் நான் வெச்சுக்கறதுல்ல” என்று சொல்லியபடியே ரிசீவரைக் கீழே எடுத்து வைத்தான்.

”உனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?ன்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் சொல்லப் போற விஷயத்தை நீ நம்பணும்”

தலையாட்டினான்.

அவர் பேச ஆரம்பித்த உடன் மனதில் தோன்றிய சந்தேகங்களோடு பேச முற்பட்டான் கோபாலன்.

“நான் பேசி முடிக்கும் வரை நீ எதுவும் பேசக்கூடாது. உன்னுடைய சந்தேகங்கள், கொக்கி போல் உன்னைக் குடையும் கேள்விகள் இவையெல்லாம் நான் பேசி முடிக்கும்போது பதில்களாய் மாறியிருக்கும். ஆகையினால் வாய்க்குப் பதிலாக மனதையும் காதுகளையும் திறந்து வை” என்று சொல்லவே அனிச்சையாய்க் கைகளால் வாயைப் பொத்திக்கொண்டான்.

”ஒரு பிரம்புக்கூடை நிரம்ப மாம்பழங்களை அடுக்கி வைத்திருந்தாய். அந்த ஜென்மத்தில் நீ ஒரு படகோட்டி. ஒரு ராஜநாகம் அந்தக் கூடைக்குள் புகுந்துகொண்டது உனக்குத் தெரியாது. அது அலாதியான பசியோடு படுத்திருந்தது. அதன் வால் நுனி பட்டு மாம்பழங்கள் வலியால் துடிக்க ஆரம்பித்தன. ராஜநாகமோ தன் பசிக்கு அந்த மாம்பழங்களால் பயனில்லை என்றுணர்ந்து அவற்றை பெருச்சாளிகளாக மாற்றி ஒவ்வொன்றாகத் தின்ன ஆரம்பித்தது.

மாம்பழங்களைத் தேடிவந்த உன்னால் வெற்றுக் கூடையையும் அதில் தூங்கிக்கொண்டிருந்த நாகத்தையும்தான் பார்க்க முடிந்தது. பழத்தைக் காணோம். அந்தப் பாம்புதான் மாம்பழங்களைச் சாப்பிட்டிருக்கவேண்டும் என்ற கோபத்தில் துடுப்பால் ஓங்கி அடிக்க அந்த ராஜநாகம் பெரிதாய்ப் படமெடுத்து சீறியது. பத்து நிமிடம் போராடி அதைக் கொன்று பக்கத்தில் கடற்கரையில் குழி தோண்டிப் புதைத்துவிட்டாய். அதைத் தேடிவந்த எல்லா நாகங்களும் பாம்புகளைப் பயமுறுத்தும் உன் வியர்வை மணத்தால் பயந்து திரும்பி ஓடி மறைந்தன.”

“உன்னுடைய மனைவிதான் அந்த ராஜநாகம். போன ஜன்மத்தின் வாசனை உன்னைத் தொடர்கிறது. போன ஜன்மத்தில் உன்னால்தான் இறந்துபோனோம் என்பது அவளுக்குத் தெரியாது. அந்த ராஜநாகத்தைக் கொன்றது விதியின் கட்டளைதான் என்றாலும் அதற்கான சாபம்தான் உனக்கு இந்த ஜன்மத்தில் குழந்தைகள் பிறவாமல் போனது. இந்தப் பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் கிடையாது.

ஆனாலும் உன் சாபம் நீங்க ஒரு காரியம் செய். உன் ஊருக்குத் தென்கிழக்கே நாற்பது மைல் தொலைவில் யாராலும் வழிபடாத ஒரு நாகரின் கோயில் இருக்கிறது. ஒரு பௌர்ணமியன்று இரவில் அந்தக் கோயிலுக்குச் சென்று ஒரு வாழைப் பழத் தாரும் ஒரு படிப் பசும்பாலும் அந்தக் கோயிலின் உள்பிரஹாரத்தில் இருக்கும் அரசமரத்தின் அடியில் வைத்துவிட்டு நாகராஜாவே! என் சாபத்தை நீக்கிவிடு என்று சொல்லிவிட்டு வாசலில் இருக்கும் குளக்கரை மண்டபத்தில் படுத்துறங்கு. மறுநாள் காலையில் குளத்தில் குளித்துவிட்டு அரசமரத்துக்குச் சென்று பார்க்க மஞ்சள் நிறத்தில் மகிழம்பூ இருந்தால் உன் சாபம் நிவர்த்தியாகி விட்டதாக நீ எண்ணலாம். ஒரு வேளை செம்பருத்திப் பூ இருந்தால் உன் சாபம் தீர்க்க என்னாலும் முடியாது என்று பொருள்.”

கோபாலனுக்குத் தான் எங்கிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளவே கொஞ்ச நேரம் பிடித்தது. வீட்டிற்குப் பக்கத்திலிருந்து வரும் வாடிக்கையான மாவரைக்கும் இயந்திரத்தின் சப்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. தெருவில் ஆட்டோக்கள் இரைந்தபடி போய்க்கொண்டிருந்தன. வீட்டின் கடிகார முட்கள் நகர்வது கூடக் கேட்கும்படியான நிசப்தம். அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் பெரியவர்.

(தொடரும்)

5.4.12

இன்றைய ஆனந்த விகடனில் “ஊரடங்கு”


இந்தச் சாலையில்
நீங்கள் செல்லத்
தடை அமலில் இருக்கிறது.

இங்கு காய் மற்றும்
கனிகள் விற்பதற்கில்லை.

அறுந்த செருப்பைப் 
பழுது நீக்க இயலாது.

தெருவோரங்களில்
கடைவண்டிகளுக்கு
அனுமதியில்லை.

ஆம்புலன்ஸ் நோயாளிக்கு
உயிர் இருக்கும்வரை
மாற்றுவழியில் செல்லலாம்.

உங்கள் வங்கிக்குச்
செல்லும் வழி
மறுக்கப்பட்டிருக்கிறது.

அரிசி மற்றும் தானியங்கள்
சேகரிக்கும் நிலையங்களை
அடையும் வழிகள்
தடைக்குட்படுகின்றன.

பாதுகாப்புக் கருதி
மருத்துவமனைகளில்
புற நோயாளிகளுக்கு
இன்றும் அனுமதியில்லை.

கட்டணக் கழிப்பறைகள்
இன்றும் இயங்காது.

தவிர்க்க இயலாததால்
திரைக்காட்சிகள் மட்டும்
தக்க பாதுகாப்புடன்
தொடர்கின்றன.

கொடுத்த வாக்குறுதியின்படி
மலிவுவிலையில்
தரமான சாராயம்
விநியோகிக்கப்படுகிறது.

உங்கள் தெருக்களில்
நமது தலைவர்களை
நினைத்துப்
பெருமூச்சு விட்டபடி
காறி உமிழ்வதற்கும்
சிறுநீர் கழிப்பதற்கும்
தடை ஏதுமில்லை.

நன்றி- ஆனந்தவிகடன் - 11.04.2012

இன்றைய ஆனந்த விகடனில் “மீனின் வீடு”

இடது கையால்
தூரிகையின் வசமின்றி
ஒரு குழந்தை கிறுக்கிய ஓவியம்
என நீங்கள் நினைப்பது சரிதான்.

வீட்டின் பின்புறம்
ஒரு நதி ஓடுவது
மட்டுமின்றி
நீருக்குள் நீந்தும் மீன்களின்
வீடுகளின் வசதி
குறித்தும்

இரவுகளில் அவை எப்படி
உறங்குகின்றன என்பது பற்றியும்

குழந்தைகள் வரையும்
ஓவியங்களால்மட்டுமே
கவலை கொள்ளமுடியும்.

ஒரு கொக்கியில் புழுவை மாட்டி
மீன்களைப் பிடிக்கும்
ஓவியங்களைக்

குழந்தைகள் ஒரு போதும்
வரைந்ததுமில்லை
வரைய
விரும்பியதுமில்லை.

நன்றி- ஆனந்த விகடன் - 11.04.2012.

1.4.12

காய்ந்த குருதி.காயாத சுடர்.


நான் மிகவும் விரும்பி வாசிக்கிற எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கமும் ஒருவர் என்பது எனக்குப் பெருமையூட்டுகிற விஷயம். ஆனால் இது அந்தப் பெருமை குறித்து பேசக்கிடைத்த சந்தர்ப்பமல்ல. 

நாட்குறிப்பாக எழுதியிருக்கும் முத்துலிங்கத்தின் இந்த இடுகையின் வார்த்தைகளில் ரத்தம் வடிகிறது. நம்மைச் சுற்றி நம் தெருவில் என்ன நடக்கிறது என்பதே நம்மில் பலருக்கும் தெரியாது. அதற்கான அவசியமுமில்லை என்கிற ரீதியில் வாழ்ந்துவருகிறோம். இந்த நாட்குறிப்பை நேற்றைய (மார்ச் 31) தேதியிட்டு எழுதி இருக்கிறார் முத்துலிங்கம். 

இனி முத்துலிங்கத்தின் நாட்குறிப்புக்கு நேரடியாகச் செல்லலாம்.

”நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக  முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.

இந்தக் கதையை கேட்டபோது எனக்கு பல வருடங்களுக்கு முன்னர் நான் சிறுவனாய் இருந்த சமயம் யாழ்ப்பாணத்தில், பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்தில் நடந்த தமிழ் விழா நினைவுக்கு வந்தது. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, பெரியசாமி தூரன், கல்கி, தவத்திரு தனிநாயகம் அடிகள் போன்ற பெரியோர்கள் அங்கே உரையாற்றினார்கள். விழாவில் வேலைசெய்த தொண்டர்களில் ஆக வயதில் குறைந்தது நான்தான். இரும்பினால் செய்த ராட்சத தண்ணீர் டாங்கை சுத்தம் செய்வதற்காக என்னை அதற்குள் இறக்கிவிட்டார்கள். அரைநாளாக சுத்தம் செய்தேன். அதுதான் நான் தமிழுக்கு ஆற்றிய ஆகச் சிறந்த தொண்டு. 100,000 மக்கள் குடித்த நீர் என் பாதம் பட்டுத்தான் அங்கிருந்து வெளியேறியது.

ரா.பி சேதுப்பிள்ளை பேசும்போது சிலேடையாகப் பேசி நிறைய கைதட்டல்கள் வாங்கினார். அவருடைய மாலையை யாரோ அவசரத்தில் மாற்றிப் போட்டுவிட்டார்கள். அதே சமயம் காலை நிகழ்ச்சி ஒன்று மாலை நிகழ்ச்சியாக மாறியதை அறிவிக்கவேண்டிய கட்டாயமும் அவருக்கு நேர்ந்தது. சொல்லின் செல்வர் எழுந்து ஒலிவாங்கியின் முன்னால் நின்று ‘மாலை மாறிவிட்டது’ என்று சுருக்கமாகச் சொன்னார். ரா.பி.சேதுப்பிள்ளை அன்று பேசும்போது பலதடவை ’தாய்நாடு, சேய்நாடு’ என்று குறிப்பிட்டார். தாய்நாடு இந்தியா, சேய்நாடு ஈழம். அப்பொழுதெல்லாம் நான் இந்தியா என்றால் அது முழுக்க முழுக்க தமிழர்களால் நிரம்பிய நாடு என நம்பிய காலம்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா செல்வதற்காக நானும் மனைவியும் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா விண்ணப்பம் செய்தோம். தூதரகத்தின் பூட்டிய கதவுகளுக்குமுன் நின்ற வரிசையில் நாங்களும் நின்றோம். விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். தேனீக்கள் ஒன்றின்மேல் ஒன்று அமர்ந்திருப்பதுபோல ஆட்கள் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். மூன்று மணிநேரம் காத்திருந்த பின்னர் எங்கள் முறை வந்து கூப்பிட்டார்கள். யன்னலுக்கு போய் அதிகாரியிடம் பேசினோம்.

 ’அவர் எத்தனை நாளைக்கு?’ என்றார். சொன்னேன். ’எதற்காக போகிறீர்கள்?’ என்றார். சுற்றுலாவுக்கு என்றேன். மீண்டும் ’எதற்காகப் போகிறீர்கள்?’ என்றார். மறுபடியும் சொன்னேன். பல் வைத்தியர் ’இன்னும் அகலமாக’, ’இன்னும் அகலமாக’ என்பதுபோல அதே கேள்வியை திருப்பி திருப்பிக் கேட்டார். எல்லாம் முடிந்துவிட்டது என நான் நினைத்த நேரம் ஒரு நீண்ட பாரத்தை நீட்டி ’இதையும் நீங்கள் நிரப்பவேண்டும். உங்கள் விண்ணப்பத்தை இலங்கைக்கு அனுப்பி அவர்கள் அனுமதி பெற்ற பின்னர்தான் இந்திய விசா வழங்கப்படும்’ என்றார். ‘எங்களுடையது கனடா கடவுச் சீட்டு’ என்றேன். அவர் ‘ஆனால் நீங்கள் இலங்கையில் பிறந்திருக்கிறீர்கள். இலங்கையின் அனுமதி கிடைத்தால்தான் இந்தியாவுக்கு விசா தரமுடியும்.’ உட்கார்ந்துகொண்டு தொடங்கிய பதிலை நின்றுகொண்டு முடித்தார். ’கனடா கடவுச்சீட்டில் கனடிய குடிமகன் ஒருவர் இந்தியா போவதற்கு இலங்கையிடம் ஏன் அனுமதி கேட்கிறீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டேன். அதிகாரி செல்பேசியை மூடுவதுபோல முகத்தை மூடினார். அதே சமயம் யன்னலையும் மூடினார். ரா.பி.சேதுப்பிள்ளை வர்ணித்த ’தாய்நாடு சேய்நாடு’ உறவு இதுதான் எனப் புரிந்துகொண்டேன். ஒரு மாதம் சென்று எங்கள் இருவருக்கும் விசா கிடைத்தது. மனைவிமட்டும் இந்தியா போனார். நான் போகவில்லை.

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு காரணம் இரண்டு வாரம் முன்பு நிகழ்ந்த வேறொரு சம்பவம். 

இலங்கை நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து அவசரமாக எனது புத்தகம் இரண்டு வேண்டும் என்றார். கனடாவில் இருந்து அனுப்புவதென்றால் தபால் செலவு புத்தகத்தின் விலையிலும் மூன்று மடங்கு கூடிவிடும். சென்னை நண்பர் ஒருவரிடம் இரண்டு புத்தகங்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பும்படியும், நான் அதற்குரிய பணத்தை செலுத்திவிடுவேன் என்றும் சொன்னேன். ‘இலங்கையா? ஐயோ வேண்டாம்’ என்று அலறினார். ஏன் என்று கேட்டபோது அவர் சொன்ன விசயம் என்னை திடுக்கிடவைத்தது. ’இந்தியாவிலிருந்து உலகத்தின் எந்தப் பகுதிக்கும் பார்சல் அனுப்பலாம். ஆனால் இலங்கைக்கு அனுப்புவதானால் புத்தகத்தை அஞ்சல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் முன்னிலையில் பார்சல் பண்ணவேண்டும். பெரும் தலையிடி பிடித்த வேலை’ என்றார். 

அப்பொழுது மறுபடியும் ரா.பி.சேதுப்பிள்ளை வர்ணித்த ’தாய்நாடு, சேய்நாடு’ உறவு நினைவுக்கு வந்தது. ஒரு தாய்தான் சேயிடம் இத்தனை அன்பு பாராட்டமுடியும். அந்தப் பார்சல் இலங்கைக்கு போனபோது கொழும்பு நண்பர் சுங்கப் பகுதிக்கு சென்று பார்சலை அவர்கள் முன்னிலையில் பிரித்து, புத்தகத்தை உதறி, அதில் உள்ள இரண்டு வரிகளை படித்துக் காட்டிவிட்டு நூலை பெற்றுக்கொண்டார். இந்த விசேட கவனிப்பு தமிழ் நூல்களுக்கு மட்டுமா அல்லது வேற்று மொழிகளுக்கும் உள்ளதா என்பது தெரியவில்லை. ஒருவரை துன்புறுத்துவது என்று தீர்மானித்துவிட்டால் எத்தனை வகையான சட்டங்களை எல்லாம் உருவாக்க முடிகிறது.

சமீபத்தில் ஒரு நண்பர், எண்பது வயது தாண்டிய தள்ளாத வயதில் இலங்கைக்கு போய்விட்டு கனடா திரும்பியிருந்தார். ’எதற்காக போனீர்கள்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார். ‘பரம்பரையாக வந்த காணி ஒன்று இருந்தது. எந்த நேரமும் கவுண்மேந்து அதை பிடுங்கிவிடக்கூடும். அதை விற்பதற்காகப் போய் வந்தேன்.’ ’போன வேலையை சுலபமாகச் செய்ய முடிந்ததா?’ என்று மறுபடியும் கேட்டேன். ‘எல்லாம் சுலபமாகத்தான் இருந்தது. ஒரேயொரு பிரச்சினைதான். பகலில் வெளியே தலைகாட்ட முடியாது. வெள்ளை வான் வந்து பிடித்துப் போய்விடும் என்ற பயம். இரவில்தான் எல்லா வேலைகளையும் ஒருவாறு முடித்துவிட்டு, வீட்டிலிருந்த ஆக நீண்ட கத்தியை தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு படுப்பேன்’ என்றார்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் சமயம் ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. தண்ணீர் ஊற்றிய தீர்மானம் என்றாலும் வெற்றி வெற்றிதான். மகிழ்ச்சியில், என் உடம்பிலிருந்த அத்தனை ரத்தமும் நாளை விடியாது என்பது போல சுழன்று ஓடியது. அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. சோமாலியா தாய் செய்ததுபோல இந்தியா குழந்தைமேல் ஏறி நிற்கவில்லை. குழந்தை இன்னும் இடுப்பிலே தான் இருக்கிறது. பாலைவனமோ நீண்ட தூரம். எவ்வளவு தூரத்துக்கு இந்தியா குழந்தையை காவும், எப்பொழுது கீழே போடப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.”

இந்த இடுகையைப் படித்துமுடிக்கும் போது கண்களில் கசிவும், நெஞ்சில் இனம்புரியாத கனமும் ஏற்பட்டால் அதற்கு என் வந்தனம். 

என் மனதின் மூலையில் 
நம்பிக்கை இருக்கிறது. 
எங்கோ மற்றொரு மூலையில் 
அணையாத நெருப்பின் 
ஒரு சிறுபொறி மினுங்குகிறது இன்னமும். 
அது நிச்சயம் சுடர்ந்தெழும் 
ஒரு பெரும் ஊழிச் சுடராய்-
ஒரு காட்டுத் தீயாய்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...