அதிகமாய் சித்தர்களை நீ தெரிசிக்கத்தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் க்லீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிகசிக்கும்படி அவரைக் காண்பாயப்பா
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு
-அகத்திய முனி, அகத்திய பூரண சூத்திரம்
-------------------------------------------------------------
செங்கல்பட்டுக்கு நீங்கள் போயிருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு சித்தர் இருக்கிறார். ஊதுவத்திச் சித்தர்.அவரை நீங்கள் பார்க்க நேரும்போது அவரைப் போய் ஏன் பார்க்க வந்தோம் என்பது போல ஒரு நொடியில் அலறவிட்டு விடுவார். உங்களின் ஆணவத்தின் உயரம் எத்தனையோ அதன் சிகரத்தைத் தொட்டு அசைப்பார். அவரின் முதல் பார்வையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அத்தனை ஏளனமும் ஆழமும் கொண்ட ஒரு கொக்கி போல உங்களைக் குத்தி இழுக்கும். அடுத்தடுத்து வரும் கேள்விகள் மிக எளிமையாகவும் ஆனாலும் உங்களால் பதில் சொல்ல முடியாததாகவும் இருக்கும்.எல்லோரையும் கேள்விகளால் அணுகுவார் என்றும் சொல்லமுடியாது. மிக அற்பமான யாசகர்களிடமும், சித்தசுவாதீனம் கொண்டவர்களிடமும், சில வேளைகளில் கள்வர்களிடமும் அவர் மிக நெருக்கமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நீ யார்? உனக்கு எந்த ஊர்? என்று ஒரு செல்வந்தனிடம் ஊதுவத்திச் சித்தர் கேட்டபோது அதற்கு பதில் சொல்ல முடியாமல், அவர் ஊராக தன் ஊர் எது என்று தேடி அலைந்து, இந்தியாவின் எல்லா மொழிகளையும் கற்றுமுடித்து, எல்லாத் தொழில்களையும் ஒரு கை பார்த்து, ஒரு ஆடு மேய்ப்பவனாக இருப்பதே தனக்கு மிக உற்சாகம் தரும் தொழில் என்றும், ஒரு பெரிய கிடையுடன் கடைசியில் இந்த சித்தர் முன்னால் வந்து நின்று தன் ஊர் இதுதான் என்றும், தான் ஒரு ஆடுமேய்ப்பவன் என்றும் நாற்பது வருடங்கள் கழித்துச் சொன்ன பதில் இன்னும் செங்கல்பட்டில் அந்த சித்தரின் முன்னால் ஒரு சிலை போல நிற்பதை நீங்கள் போனால் பார்க்கலாம்.
இன்னொரு மேதை. என்ன கற்றிருக்கிறீர்கள் என்று கேட்டதற்குப் பதில் தேடி, தான் படித்த ஆரம்பப் பள்ளிக்குப் போனவர் திரும்ப முடியாமல் மறுபடியும் முதலாம் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்து இப்போது தன் முதிய வயதில் உயர்நிலை வகுப்புக்களுக்குத் தேவையான புத்தகம் நோட்டுக்களைத் தூக்கிப் போக ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு பள்ளிக்கு வரும் காட்சியை உலகத்தின் அத்தனை முன்னணித் தொலைக்காட்சிகளும் உலக சாதனை என்று பறைசாற்றி இதை உலகவரலாற்றிலேயே முதன்முதலில் வெளியில் கொண்டு வந்தது யார் என்றறிய உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் கடந்த பத்து வருடங்களாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பதை அறிந்த செங்கல்பட்டு சித்தர் மற்றொரு ஊதுவத்தியை ஏற்றச் சொன்னார்.
அந்த சித்தர் தண்ணீரைத் தவிர எதையும் பருக மாட்டார். ஊறவைக்கப்பட்ட அவலில் தேங்காய்ப்பூவும் வெல்லமும் கலந்து காலை ஒருமுறை மெல்வதோடு ஆகாரம் முடிவுறும். அவரைச் சுற்றி ஊதுவத்திகள் ஏற்றப்பட்ட படி இருப்பதை மிகவும் விரும்புவார். தன்னைப் பார்க்க வருபவரின் பையை வாங்கி அதிலுள்ள ஊதுவத்திக் கட்டை வாங்கி முகர்ந்து பார்த்துவிட்டு அவல்-வெல்லம்-தேங்காய் தவிர வேறேதும் இருந்தால் தன்னருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார். ஒரு தடவை குப்பைகளை அகற்றப் போன சித்தரின் பக்தர் ஒருவர் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கண்டதாகவும், சித்தரிடம் இதுபற்றிச் சொன்ன போது மார்கழிக்குளிருக்கு அதிகாலை வெந்நீர் போடும் முக்கட்டி அடுப்பில் அவற்றைப் போட்டுவிடுமாறும் சொல்லிவிட்டார்.
அந்த சித்தரிடம் காயல்பட்டினம் பீர் முஹம்மது என்ற இஸ்லாத்தைச் சேர்ந்த ஹலால் முறையில் ஆட்டிறைச்சி விற்றுவரும் அன்பர் ஒருவர் தன் வியாபாரம் தனக்கு லாபகரமாக இல்லை என்றும், தன் குடும்பம் பட்டு வரும் துன்பங்களையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார். அதற்கு ஊதுவத்திச் சித்தரும் முஹம்மதுவின் நாசியருகில் ஊதுவத்தியைக் காட்டி முகரச் சொன்னார்.
வாசனை நன்றாக இருப்பதாக முஹம்மது சொல்ல இந்த வாசனையை நினைவில் வைத்துக்கொள். திருவண்ணாமலையில் நள்ளிரவில் மலையேறிச் செல். இதே நறுமணத்தை அங்கே நீ நுகரும்போது உனக்கான வழி தெரியும் என்று சொல்ல இன்னொரு முறை தன் நாசிக்கருகில் ஊதுவத்தியைக் கொண்டுவர முடியுமா? என்று முஹம்மது கேட்க சித்தர் ஊதுவத்திப் புகையை மூக்கருகில் காட்டி எண்களை நினைவில் வைக்காதே. நறுமணங்களை நினைவில் வை என்று சொல்லி முஹம்மதுவிடமிருந்த தொலைபேசியை வாங்கி பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். அப்போது யாரோ முஹம்மதுவை அழைக்க தொலைபேசி வாள மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் என்று கூவியது. இதுக்கப்புறம் சத்தம் போடாதே என்று சொல்லி ஒரு கல்லை எடுத்துக் குறிபார்த்து அதன் மேல் போட அந்தத் தொலைபேசி ஒரு குரங்காய் மாறி வெளியே இருந்த மாமரத்தின் மேல் தாவி அமர்ந்தது.
நாசியை ஒரு கைக்குட்டையால் அழுத்தி மூடியபடியே பேருந்தில் திருவண்ணாமலையை நோக்கிப் புறப்பட்டார் முஹம்மது. நடத்துனர் எந்த ஊருக்கு என்று கேட்டபோது மூக்கடைத்த குரலில் ஞிருஞஞ்ஞாஞலை என்று சொல்ல நடத்துனர் எப்படி எப்படியெல்லாம் மனுஷங்க வந்து சேர்றாங்க. கடவுளே என்று முனகியபடியே டிக்கெட்டை எச்சில் தொட்டுக் கொடுக்க முஹம்மது மூக்கை மூடியபடியே கண்களையும் மூடினார்.
பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போது முஹம்மதுவின் உறக்கத்தின் நடுவே கனவு ஒன்று விரிந்தது. ஒரு படகில் தன் குடும்பத்தோடு திருவண்ணாமலையின் மீது மலையேறுவதாய்த் தொடங்கிய முதல் காட்சியிலேயே முஹம்மது திடுக்கிட உடனே மலை கடலானது. திருவண்ணாமலை ஒரு சமுத்திரமாக மாறியதை அவரால் நம்பமுடியவில்லை. அந்த ஊரை நோக்கி வந்த அத்தனை வாகனங்களும் சுறா மீன்களாக மாறின. மக்கள் எல்லோரும் படகுகளாகவும் மீன்களாகவும் பவழப் பாறைகளாகவும் மாறியிருந்தனர்.
பேருந்து நிலையம் என்றெழுதியிருந்த பலகை ஒரு துடுப்பாக மாறியிருந்தது. எல்லா தொலைபேசிகளும் தவளைகளாகவும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் கட்டுமரமாகவும் மாறியிருந்தன. கனவின் எல்லை விரிய விரிய நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாவலை விட முஹம்மதுவின் கனவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறதே என்றெண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் மூடிய நாசியுடன் இருந்த முஹம்மது சூடான வடை மூணு பத்துரூவா எடுத்துக்க என்று கதறிய குரலில் கண்களைத் திறக்க கனவு பரிதாபமாக உடைந்தது. வடையின் மணம் நாசியில் நுழையாத அளவுக்கு மூக்கை மிகவும் கவனமாக அழுத்தமாக மூடினார்.
திருவண்ணாமலையின் தெருக்களெல்லாம் புழுதியில் மூழ்கியிருந்தன. பேருந்திலிருந்து இறங்கிய முஹம்மது கவனத்தைக் குவித்து மலையை நோக்கி நடக்கலானார். அருகில் இருந்த ஒரு குழாயில் முகம், கை கால்களைக் கழுவி விட்டு ஒரு மரத்தடியில் துண்டை விரித்து உட்கார்ந்தார். மலையைச் சுற்றி ஏராளமான மக்கள் நடமாட்டம் இருந்தது. குப்பைத் தொட்டியில் கிடந்த தொலைபேசியில் தன்னை அழைத்தது யாராயிருக்கும் என்ற கேள்வி விடாமல் துரத்தியதை முஹம்மதுவால் தாங்கமுடியவில்லை. தொலைபேசியின் மேல் தனக்கிருக்கும் இந்தப் ப்ரேமை ஒரு குரங்காய் மாறிய பின்னும் இப்படித் துரத்துவது வேடிக்கைதான் என்று நினைத்துக்கொண்டார்.
தான் வந்த காரியம் நிறைவேறுமா? தன் கஷ்டங்கள் யாவும் தீருமா? என்ற சந்தேகங்களும் ஒன்றாய்க் கலந்து ஒரு பூட்டாக மாறி அவருக்கு முன்னே வந்து விழுந்தது. அதற்கான திறவுகோல் மலைக்கு மேல் கிடைக்கப் போகும் நறுமணமாகத்தான் இருக்கும் எனவும், அது தனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்ட போது எதிரே ஊதுவத்திச் சித்தர் ஒரு குதிரையின் மீதேறிப் போய்க் கொண்டிருந்தார். எழுந்து அவரைப் பார்க்க ஓடிப்போனபோது அவர் மிக விரைவாக குதிரையை ஓட்டிக்கொண்டு மலைக்கு மேலே சென்று விட்டது வருத்தமளித்தது. என்றாலும் சித்தர் தனக்குப் பக்கத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார் என்பதும், தன்னுடைய பயணத்தில் அவர் தொடர்ந்து வருவார் என்றும் முஹம்மதுவுக்கு நம்பிக்கை பிறந்தது.
இருள் சரம்சரமாய் இறங்கிக்கொண்டிருந்தது. அமாவாசை நாளாகையால் அதன் அடர்த்தியை வார்த்தையால் எழுத அவசியமில்லாததாய் இருந்தது. மெல்ல மரத்தடியிலிருந்து எழுந்த முஹம்மது மலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆள் நடமாட்டம் இப்போது சுத்தமாய் அற்றுப்போயிருந்தது. மின்மினிப்பூசிகளும் சிள்வண்டுகளும் இல்லாமல் ஓர் இரவா? கண்களின் இருளை விண்டு உண்டபடி மின்மினிகள் மிதந்துசென்றன. காதுகளின் சுவர்களில் சிள்வண்டுகளின் சங்கீதம் ஒப்பற்ற ஓவியத்தை வரைந்தபடி இருந்தது. கொஞ்சம் குளிர்வதுபோல் இருந்தது. தன் நாசியில் புதைந்திருந்த வாசம் மீண்டெழுந்து வராதா என்று தவிக்கத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாவது நடந்திருக்கலாம். விதவிதமான மூலிகைகளின் நெடியை முதன்முதலாக நுகர வாய்த்தது. எத்தனையோ செடிகளில் மொட்டுக்கள் மலரலாமா என்று தங்களுக்குள் கிசுகிசுத்தபடியே மலரத் துவங்கின. மரங்களின் காய்கள் பழங்களாகப் பழுக்கவும், பழுத்த இலைகள் மண்ணை நோக்கி மிதக்கவும் செய்தன.
விதவிதமான பறவைகள் அன்றைய நாளில் தாங்கள் கண்ட காட்சிகளைக் கூட்டுப் பறவைகளிடம் பகிர்ந்தபடி இருந்தன. அவற்றின் மொழியை இத்தனை எளிதில் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது முஹம்மதுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சருகுகளின் மத்தியில் எதுவோ ஊர்ந்து செல்வதை அவரால் உணர முடிந்தது. அடுத்த நொடி மிகப் பெரிய நாகமொன்று இரை தேடிச் செல்வதைக் கண்டபோது அதுவும் இவரைக் கண்கள் மினுங்கப் பார்த்தது. சர்ப்பத்தின் தோல்மணம் கிட்டத்தட்ட ஊதுவத்திச் சித்தர் முகரப் பண்ணிய நறுமணத்தை ஒத்ததாக இருப்பது போல் உணர மனதில் திகில் கலந்த மகிழ்ச்சி பரவியது.
திரும்பிப் பார்த்த நாகம் என் பின்னால் வா என்று உதிர்த்த வார்த்தை அம்பின் கூர்மையுடன் முஹம்மதுவை நோக்கிப் பாய்ந்தது. அந்த வார்த்தையின் நுனியைப் பற்றிக்கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கமும் தவறவிட்டுவிடக்கூடாது என்ற வைராக்யமும் ஒன்றாய் வதைத்தன. இந்த மாதிரிக் கட்டங்களை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். நான் போகட்டுமா? என்று திரும்பவும் கேட்டது நாகம். போய் விடாதே. இதோ வருகிறேன் என்று அதன் பின்னால் தொடர்ந்தார் முஹம்மது.
வழியில் அருவியிலிருந்து விழும் நீர் காதுகளில் விழுந்தபடி இருந்தது. நாகத்தின் கண்களிலிருந்து புறப்பட்ட ஒளி இருளைப் பிளந்துசெல்ல முஹம்மதுவுக்கு தன்னைச் சுற்றிப் பரவியிருக்கும் இருளின் ஒட்டடைகளை விலக்கியபடியே பயணிப்பது எளிதாய் இருந்தது.
எதிரிலிருந்து ஏதோ வெளிச்சம் புறப்படுவது போலத் தெரிந்தது. இன்னொரு பெரிய நாகம் வந்துகொண்டிருந்தது. இது எதிர்ப்பட்ட நாகத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது. அந்த நாகம் இன்றைக்கு ஊதுவத்திச் சித்தர் அனுப்பியது முஹம்மது மட்டும்தான். கவனமாகப் போய் வா என்று எச்சரித்துவிட்டு என்னைப் பார்த்து சிரித்தது. ஊருக்குப் போனவுடன் சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று ஆட்டோவின் பின்னால் எழுதியிருக்கும் ஸ்டாலினிடம் சொல்லி அதை அழிக்கச் சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டார் முஹம்மது.
(தொடரும்)
7 கருத்துகள்:
Fantasy யாக மலையேறி கொண்டிருக்கிறது கதை, நாங்களும் இருளின் ஒளியில் பின் தொடர்கிறோம்!!
//எண்களை நினைவில் வைக்காதே. நறுமணங்களை நினைவில் வை //
ஆஹா! அருமை.
பின்னூட்டம் தொடரும் ....
// இதுக்கப்புறம் சத்தம் போடாதே என்று சொல்லி ஒரு கல்லை எடுத்துக் குறிபார்த்து அதன் மேல் போட அந்தத் தொலைபேசி ஒரு குரங்காய் மாறி வெளியே இருந்த மாமரத்தின் மேல் தாவி அமர்ந்தது.//
ஆஹா, அந்த சித்தரே வந்து இந்தப்பதிவை எழுதியுள்ளது போல உணர்கிறேன். வேடிக்கையாக உள்ளது ;)))))
தொடரும்
//கனவின் எல்லை விரிய விரிய நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாவலை விட முஹம்மதுவின் கனவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறதே என்றெண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் மூடிய நாசியுடன் இருந்த முஹம்மது சூடான வடை மூணு பத்துரூவா எடுத்துக்க என்று கதறிய குரலில் கண்களைத் திறக்க கனவு பரிதாபமாக உடைந்தது. வடையின் மணம் நாசியில் நுழையாத அளவுக்கு மூக்கை மிகவும் கவனமாக அழுத்தமாக மூடினார்.//
நினைத்தேன் கனவாகத்தான் இருக்குமென்று.
மசால்வடை வாசனைக்கு மயங்காத ஆளுமுண்டோ?
தொடரும்
//ஊருக்குப் போனவுடன் சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே //
எல்லமே சூப்பர் சார்!
நல்லா சிரித்து மகிழ்ந்தேன்.
சிரிக்கும் பெண்ணைப் பார்ப்பதே அபூர்வம்.
எப்படி அவளை என்னால் நம்பாமல் இருக்க முடியும்?
அது மட்டும் என்னால் முடியவே முடியாது, சார்.
சுந்தர்ஜீ அருமை, தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்;
அருமை.... தொடர்ந்து வாசிக்க விருப்பமுடன் காத்திருக்கிறேன்!
கருத்துரையிடுக