27.4.12

நகராத வரிசை

யாராவது ஒருவர் ஏதோவொரு வரிசையில்
எங்கேனும் நின்றுகொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

வரிசையின் துவக்கத்தில் சில நேரம்- மத்தியில் சில நேரம்-
நீளும் வாலின் கடைசியில் பல நேரம்.

பொருளற்ற முணுமுணுப்புகள் அல்லது
யார் மீதோ கோபம். யாருக்கோ சாபம்.  
நொடிக்கொருதரம் கடிகாரத்தைப் பார்வையிடல்
அல்லது வியர்த்து வடியும் வெறுமையான பார்வை
இவைகளில்லாத ஒரு வரிசையை 
உங்களால் எப்படிக் காட்டமுடியாதோ அதேபோல

கையில் ஒரு புத்தகத்தோடோ அல்லது 
வாயில் ஒரு பாட்டோடோ
அறியாதவரோடு கதைத்தபடியோ 
ஒரு குழந்தையின் கன்னத்தைக் கிள்ளியபடியோ
நகரும் வரிசையையும்.

சீரழிவுக்குப் பிந்தைய
வேரோடு வாழ்வும் அறுத்தெறியப்பட்ட
ஒரு தலைமுறையின் நிழலாய்
உணவுக்கும் உயிருக்குமாய் நீளும் கைகள்
போதிக்கும் வாழ்தலின் துயரத்தை
நகரும் வரிசைகள் ஒருபோதும் அறிந்ததில்லை.

யாராவது ஒருவர் ஏதோவொரு வரிசையில்
எங்கேனும் நின்றுகொண்டிருக்க வேண்டியிருப்பது 
எத்தனை நிச்சயமானாலும் 
வரிசைகளில் நிற்க நிர்ப்பந்திக்கப்படும்வரை 
வரிசைகளில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை.

10 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

என் வயதுக்கு நான் நிற்கும் வரிசையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.நிர்பந்திக்கப் பட்டு நிற்கும் வரிசை, எல்லோரும் நிற்கும் வரிசை. முன் நிற்பவர் யார் பின் நிற்பவர் யார் என்று தெரியாத வரிசை. அதைப் பற்றி நினைக்காதவரை வரிசை நகர்ந்து கொண்டே இருக்கும்.விரும்பியோ விரும்பமலோ நகரும் வரிசை. ஃபோட்டோவில் இருப்பது இருமுடிக் காரர்களின் வரிசையா.?வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

அது இலங்கையில் காலங்காலமாக நிற்கும் தமிழ் அகதிகளின் வரிசை பாலு சார்.

Ramani சொன்னது…

வரிசைகளில் நிற்க நிர்ப்பந்திக்கப்படும்வரை
வரிசைகளில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை
.இப்போதெல்லாம் வரிசையில் நிற்காது
ஏதும் நடப்பதும் இல்லை

ப.தியாகு சொன்னது…

காலங்காலமாக நிற்கும் தமிழ் அகதிகளின் நகராத வரிசை
நெஞ்சை பிழிகிறது சுந்தர்ஜி சார். கனமான கவிதை.

Vasan சொன்னது…

Dear Sundarji,
I read S. Ramakrishnan`s writting about your favorite song in the movie மொகலே ஆஜமை.
What inspired me is you BOTH are in the SAME BOAT with the same sequence. Hope you will love his article.
Just click and enjoy whenever you could spare time.

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=5495

Rgds / Vasan

சக்தி சொன்னது…

நகராத வரிசையில் இலங்கை சோதரர்களின் படமும்
கூடவே என்னைக் கவர்ந்த ஒரு படம் என்ற வரியும்
டாஷ்போர்டில் தோன்றுவது ரசிக்கவில்லை சுந்தர்ஜி .
ஏதாவது செய்யுங்கள்.கவிதைக்குள் நுழையுமுன் உங்கள் தலைப்போ படமோ மனதைத்
தயார் படுத்துவது எனக்கு நடக்கும்.இது முரண்

சக்தி சொன்னது…

சீரழிவுக்குப் பிந்தைய
வேரோடு வாழ்வும் அறுத்தெறியப்பட்ட
ஒரு தலைமுறையின் நிழலாய் உணவுக்கும் உயிருக்குமாய் நீளும் கைகள்
போதிக்கும் வாழ்தலின் துயரத்தை நகரும் வரிசைகள் ஒருபோதும் அறிந்ததில்லை..

துயரம் கையறு நிலையைக் கடந்து பெருகுகிறது

சுந்தர்ஜி சொன்னது…

வெவ்வேறு மனநிலைகளில் துயரத்தின் சாறு பிழிந்த ஒரு படமும், என்னைக் கவர்ந்த வேறொரு படத்தையும் இட்டது என் ரசனையின் பிசகுதான்.

வருந்துகிறேன் சக்தி. அந்தப் படத்தை நீக்கிவிட்டேன்.வேறொரு தருணத்தில் உபயோகப்படுத்திக்கொள்வேன்.

சிவகுமாரன் சொன்னது…

மனதை பிசைகிறது சுந்தர்ஜி.
இப்படி நிற்க வைத்தவர்களை - சபிக்கத் தோன்றுகிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதை கலங்கடிக்கும் வரிசை....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...