30.11.10

ஆசான்

எழுபதுகளின் இறுதி வருடங்களில் என் ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளின் தமிழ் ஆசிரியராக என்னை ஆசீர்வதித்த திரு.ஆரோக்கியசாமி ஐயா.

அவர் மாதிரித் தமிழாசிரியர்களைப் பார்ப்பதும், அவர் கற்றுத்தர தமிழ் கற்பதும் பெரும் பேறு. அல்லது முந்தையப் பிறவியில் என் புண்ணியம்.

கம்பராமாயணமும், பாஞ்சாலிசபதமும் அவர் வாயால் கேட்க மணக்கும்.

பகுபத உறுப்பிலக்கணம் அவர் நடத்தி அந்த வகுப்பில் புரியாத மாணவர்கள் இருக்க வாய்ப்பிலை.

ஒரு கணித வகுப்பின் சுவாரஸ்யம் தமிழ் வகுப்பில் பரவும் ஆச்சர்யமும் நிகழும்.

அசை, சீர், நேர் நேர்- தேமா, நிறை நேர்-புளிமா என்று தொடங்கி கூவிளம்,கருவிளம் தேமாங்கனி,புளிமாங்கனி என்று அந்த வாய்ப்பாடு, எப்போது தமிழ் இலக்கண வகுப்புத் துவங்கும் என்ற பரபரப்பை விதைக்கும்.

சீதாப்பிராட்டியாகவும், சகுந்தலையாகவும், திரௌபதியாகவும் பெண்கள் பாத்திரங்களில் அவர் புகுந்து வெளிப்படுவதைக் கண்ட என் கண்கள்தான் எத்தனை பேறு பெற்றவை?

என் எதிர்காலம் குறித்தும், என் நாளையக் கல்வி குறித்தும் திட்டமிடுதல் குறித்தும், என் மகனின் முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்குமானால் தமிழை நான் இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்கும் பேறு கிடைத்திருக்கும்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியனாய் நான் ஒரு நாளேனும் வாழவேண்டுமென்கிற என் இன்றை ஏக்கம் தீர்ந்திருக்கும்.

இரு ஆண்டுகள் மட்டுமே - மணிக்கணக்கில் அதிகம் போனால் எழுபத்து ஐந்து மணிநேரங்கள் மட்டுமே நிகழ்ந்த அவரின் உறவால், என்னால் தமிழில் சிந்திக்கவும், எழுதவும், பிழையின்றிப் பேசவும், விடாப்பிடியாய்த் தமிழைப் பிடித்துத் தொங்கவும் முடியுமானால் அவரின் ஆளுமை குறித்து நான் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

அவரைத் தேடிப் போய்ப் பார்த்து, அவரை ஆரத் தழுவி தமிழின் மேல் எனக்கு இத்தனை ஈடுபாடும் ஆனந்தமும் ஏற்படக்காரணமாயிருந்த போதிப்பின் பாதங்களில் வீழ்ந்து கிடக்க விரும்புகிறேன்.

நான் எழுதிய கவிதைகளைக் காட்டி அதில் திக்குமுக்காடி என்னை உச்சிமுகர விழைகிறேன்.

எனக்குத் தெரியும் எப்போதாவது இப்படி வருவாயென்று அலட்சியமும் பெருமையும் ததும்ப அவர் என்னைப் பார்க்கத் தாகம் கொள்கிறேன்.

இன்று அவரின் கீழ் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணாக்கனின் கூச்சங்களை உதறி மறுபடியும் அவரின் தமிழில் குளிக்க நினைக்கிறேன்.

வேப்பமரங்கள் சூழ, இரவின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளிக்குள், என் வகுப்பறைக்குள் நுழைகிறேன்.

இன்று அவர் அங்கில்லை. என் தமிழில் நிறைந்து என்னை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு மீனைத் தராது, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்த -
என்னைக் காலத்தின் கைகளில் பாறையாய் அல்லாது கூழாங்கல்லாய் மாற்றக் காரணமாயிருந்த -
அந்த மஹானுபாவனுக்காய் -

நான் பரவசம் தோய்ந்த கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறேன்.

இலையுதிர்காலம்


I
விடை பெறுகிறேன்.
உதிர்வின் சுவை
அறியாது உதிரும்
பழுத்த இலைபோல
மரத்திலுமில்லாது
மண்ணையும் தொடாது
காற்றில் மிதந்தபடியே
நிகழட்டும் என் விடைபெறல்.

II
நினைத்ததை மறப்பதும்
நினைக்காததைச்
சொல்வதுமாகப்
படர்கிறது முதுமையின்
சலிப்பூட்டும் இசை.
திறக்க மறுக்கிறது
நினைவின் துருப்பிடித்த தாழ்.
மூடவியலாது திறந்துகிடக்கிறது
மறதியின் நெடுங்கதவு.

28.11.10

நாளைக்கு வாழ்கிறேன்



I
படபடக்கும் நாட்காட்டியின் இடையே
உறைந்தும்-
உறைந்த கடிகாரத்தின் வட்டத்துக்குள்
துரத்தப்பட்டபடியும்
கழிகிறது காலம்.

II
நேற்றுப் போல் இன்று இல்லை
அவனுக்கு.
இன்று போல் நாளை இராது
இவனுக்கு.
நேற்றிலும் இன்றிலும்
வாழ்கிறார்கள்
அவனும் இவனும்.
நாளைக்கு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நான்.

III

விழித்திருக்கையில்
காலத்தை நாம் கவனிக்கிறோம்.
உறங்குகையில் நம்மைக்
கவனிக்கிறது காலம்.

26.11.10

யுத்தம்



கூர்வாள் கொண்டு
கிளம்புகிறாய் யுத்த களத்திற்கு.
வெட்டி வீழ்வதும்
குத்திச் சாய்ப்பதும் நிறைவேறுகிறது
போரின் உபாயங்களாய்.
குருதியும் கண்ணீரும் கவ்வுகின்றன
அழுகும் சடலங்களை
வேட்டை நாயின் முனைப்போடு.
வெல்லும் ஒவ்வொரு
நாளும் வீழ்கிறாய் நீ.
வாழும் ஒவ்வொரு
நொடியும் சாகிறேன் நான்.

25.11.10

கடவுளின் சங்கீதம்.



அடைவதை விடவும் இழப்பதில்-
பெறுவதை விடவும் கொடுப்பதில்-
அண்மையை விடவும் தொலைவில்-
உருக்கொள்கிறது நிம்மதியின் உறைவிடம்.

ஒலியை விடவும் நிசப்தத்தில்-
ஒளியை விடவும் இருளில்-
பாய்ச்சலை விடவும் பதுங்குதலில்
வெளிப்படுகிறது நிதானத்தின் பேரெழில்.

இணைவதை விடவும் பிரிவில்-
களிப்பை விடவும் துயரில்-
ஆரவாரத்தை விடவும் எளிமையில்
வலுப்பெறுகிறது அன்பின் நீள்சுவர்.

பொய்மையை விடவும் வாய்மையில்-
அழிவை விடவும் ஆக்கத்தில்-
தண்டித்தலை விடவும் மன்னித்தலில்
இசைக்கப்படுகிறது கடவுளின் சங்கீதம்.


19.11.10

தூரிகையின் மௌனம்-I


கெய்தோந்தே ஒரு அற்புதமான ஓவியர் என்பதையும் விட ஒரு ஆழ்ந்த மனம் கொண்ட மனிதர்.நெடு நாட்களாக ஓவியங்கள் வரையாது இருந்தும் தன் இடத்தை யாரும் நெருங்கவிடாது தக்கவைத்துக்கொண்டவர்.இவரின் இந்த நேர்காணல் ”தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி”யில் சுமார் 20வருடங்களுக்கு முன்னால் வந்தது.அசாதாரணமான கேள்விகளும் நிதானமான பதில்களும் கொண்ட இந்த நேர்காணலை என்னால் மறக்க முடியாது. கேள்விகள் ப்ரிதிஷ் நாண்டியினுடையது. மொழிபெயர்ப்பு என்னுடையது.மொழிபெயர்த்த தாள் நைந்து பொடியாகத் துவங்கியும் நெடி குறையாது அப்படியே .எல்லோருக்கும் இந்த நேர்காணல் பிடிக்கக் கூடுமா என்று தெரியவில்லை. எல்லோருக்காகவும் மழை பெய்தாலும் மழையை விரும்பாதவர்களும் உண்டுதானே!

கெய்தோந்தே உயிரோடு இல்லை.அவர் ஓவியங்களிலும் நிசப்தத்திலும் உயிர்த்திருக்கிறார்.

இனி அந்த நேர்காணல்:

அநேகமாக வரைவதையே பல வருடங்களாக விட்டுவிட்டீர்கள்தானே-கெய்தோந்தே?
-ஆமாம்.

ஏன் இப்படிச் செய்தீர்கள்?
-என் உடல்நிலை நன்றாக இல்லை.நான் சுகமாக இல்லை.ஆனால் பார்ப்பதற்கு நான் அவ்வாறு இல்லாததால் யாரும் புரிந்துகொள்வதில்லை.உள்ளூர நான் சுகமாய் இல்லை என்பதை நான் அறிவேன்.உடல்ரீதியாக நான் சரியாக இல்லை.

வரைவது என்பதை உடல்ரீதியாக அதிகக் கஷ்டமான விஷயமாக நினைக்கிறீர்களா?
-ஆமாம். ஒரு கான்வாஸில்-வேலையில்-இறங்குவது என்பது அதிகமும் கடினமாகவே தெரிகிறது எனக்கு.

சின்னச் சின்ன ஓவியங்கள்-கிறுக்குதல்கள்-இவற்றைச் செய்வதிலிருந்து கூட உங்களைத் தடுத்தது எது? நிச்சயமாக உடல் நிலை காரணமாக இருக்க முடியாதல்லவா?
-இல்லை.சோம்பேறித் தனமும் காரணம். வெறும் சோம்பேறித்தனம். எதையாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் கூடஇல்லை.

உங்கள் தளத்திலுள்ள ஒரு சிருஷ்டிகர்த்தா நிச்சயமாகத் தன் எண்ணங்களைத் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதாக நினைப்பது இயல்புதானே?
-ஆமாம்.ஆனால் கடந்த 45வருடங்களாக என் படைப்புக்களைப் பார்த்திருக்கலாம்.செய்ய வேண்டியதெல்லாம் செய்துமுடித்துவிட்டேன்.சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று.இனிச் சொல்லவோ செய்யவோ எதுவுமில்லை.கெய்தோந்தே இப்போது அமைதியானவன்.அவன் எப்போதும் மௌனமாகவே இருக்கப் போகிறவன்.

அப்படியானால் இனிச் சொல்ல எதுவுமேயில்லையா? கெய்தோந்தே முடிந்து போய்விட்டாரா?
-நான் சொல்லவந்தது ”இனிமேல் எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்பதே.

ஏன்?
-நான் சொல்லத் தேவையான எதையும் வாய்வார்த்தையாய்ச் சொல்ல முடியுமென்றால்-வார்த்தைகளால் தொடர்பு கொள்ள முடியுமென்றால் நான் ஏன் வரைய வேண்டும்? வரைய வேண்டுமென்ற கட்டாயத்துக்கு ஏன் நான் போகவேண்டும்? ஓவியம் வரைவது என்பது சில காலத்துக்குப் பிறகு இயல்பாகிவிட்டது-பேசுவது போல.

ஆனால் நீங்கள் பேசுவதும் இல்லையே?
-ம்.சரிதான்.நான் வரைவதுமில்லை.பேசுவதுமில்லை.ஆனால் இவையிரண்டும் வெவ்வேறான விஷயங்கள்.இனியும் வரைவதற்குத் தேவையற்றுப் போனதால் நான் வரைவதில்லை.ஆனால் நான் பேசாமல் போனதன் காரணம் நான் நிசப்தத்தை விரும்புவதுதான்.இரண்டும் ஒன்றல்ல.நான் யாரையும் சந்திப்பதில்லை.

(தொடரும்)

16.11.10

அகம்



எப்போதெல்லாம்
அடைய நினைத்ததை
அடையமுடியாது போகிறதோ
அதை மீண்டும் அடையத் 
தேவையில்லாது போகட்டும் .

எதை இழந்தபோதெல்லாம்
தாங்கமுடியாது போகிறதோ
அதை மறுபடியும் 
இழக்க நேராது போகட்டும்.

யாரைக் காதலித்தபோது
விட்டுக்கொடுத்தோமோ
அதுபோல் யாருக்கும்
இனி விட்டுக்கொடுக்க 
நேராதிருக்கட்டும்.

எந்தத் தாழின்
திறவுகோலுக்காய்க்
காத்திருந்தோமோ
அது போல் ஒருபோதும்
இனி பூட்டப்படாதிருக்கட்டும்.

எதை எழுதும்போது
இனி எழுதத் தேவையில்லை
என்றுணருகிறோமோ-
அதன் பின் சொல்ல
ஏதுமில்லாது தீரட்டும்.

எந்தநாள்
வாழ்வின் நிழல்
ஆன்மாவில் வீழ்கிறதோ-
அதன் பிந்தைய நாள்
வாழத் தேவையில்லாது போகட்டும்.

15.11.10

இருமொழி


உறக்கமற்ற
கனவுகளும்
கனவுகளற்ற
நீடுறக்கமும்
என்னதும் உன்னதும்.
ஈன்ற பசுவின் மடியாய்
என் தாபம்.
பிறந்திறந்த கன்றின்
பசியாய் உன் மோகம்.
மெழுகை விழுங்கும்
சுடராய் என் காமம்.
பற்றவியலா நனைந்த
விறகாய் உன் தாகம்.
கைப்பள்ளத்து நதிநீர்
என் விரகம்.
நழுவும் விரலிடைக்
கானல் உன் பருவம்.
சீறும் நாகத்தின் புற்று
என் தேகம்.
புற்றைச் சுமக்கும் பற்று
உன் தேகம்.

13.11.10

மறுமொழி


மழிக்காத மகனுக்கொன்று
நேரம் தாண்டியுறங்கும்
மகளுக்கொன்று.
சாப்பிடாத பிள்ளைக்கும்
விடுப்பெடுத்த வேலையாளுக்கும்
மற்றொன்று.
அழைப்பு மணிக்கொன்றும்
தொலைக்காட்சிக்கு வேறொன்றும்.
தொலைபேசிக்கொன்று.
விடைபெறலுக்கொன்று.
பின் திரும்பும்
வாகனத்திற்கொன்று.
நாய்களுக்குத் தனியாய் ஒன்று.
கோயிலுக்கு நேர்ந்தவளுக்கும்
யாசிக்கும் தொழுநோயாளிக்கும்
நிச்சயம் வேறு வேறு.
கவனிப்பாரின்றிக் கரையும்
காக்கைக்கும்
தோட்டத்துக் குயிலுக்கும்
தனித்தனியே.
வீடுகளின் முகமாய்
மூடப்பட்ட கதவுகளும்
அவற்றின் உயிராய்க்
குரல்களும் ஓசைகளும்.

11.11.10

கவிதைப் பட்டம்


வெளியில் தத்தளிக்கும்
பட்டத்தின் வால்
எழுதத் தொடங்கியது
கவிதையின் முதல் வரி.

எங்கிருந்தோ பிறக்கிறது
ஒரு சொல் இங்குவந்து
பொருத்திக்கொள்ள.

என்றோ பார்த்த
காட்சியின் வண்ணங்கள்
தூரிகையை நனைக்கிறது
தீட்டிக் கொள்ள.

யாரோ பேசும்
ஒரு வார்த்தை எடுத்தோ
தடுத்தோ நிறுத்துகிறது
பயணத்தை.

வார்த்தைகள் கைநழுவ
மழை நீர்க்கப்பலாய்
அசைகிறது சாய்கிறது
நிலையின்றி.

ஏதுமற்ற ஒரு நொடியில்
குமிழியின் மென்சுவர்
உடைய

பிறத்தலின் வலியும்
மரித்தலின் சுவையும்
ஒன்றாய்க் கூட

முற்றுப் பெறுகிறது
என்றோ தொடங்கிய
கவிதையின் இறுதிவரி.

5.11.10

அரட்டை


மழை விடாது ஒரு வாரம் கொட்டித் தீர்த்தபின் ”அப்பாடா!வெயில எப்படா பாப்போம்னு ஆயிடுச்சு”

போன தடவை பாத்ததுக்கு இந்த தடவை எளச்சிட்டே.ரொம்ப அலச்சலோ?(பிடிக்காதவங்களா இருந்தா) ரொம்ப குண்டாயிட்டே.

இந்த தடவை மாதிரி எப்பவும் வெயில் பொரிஞ்சதில்லை. கலிகாலம்.

இந்த ஜனநாயகம்லாம் நம்ம நாட்டுக்கு சரிப்பட்டுவராது. பாகிஸ்தான் மாதிரி ராணுவ ஆட்சிதான் சரி.

ரோட எப்பிடிப் போட்டுருக்கான் பாரு. கண்டிப்பா டெண்டர் எடுத்த ஒடனே பொட்டி கொடுத்திருப்பான்.

இந்த ரயில் ரைட் டைமுக்கு எக்மோர் போயிடுமா?

என்னப்பா இருக்கு சூடா? இட்லி-வடை-பொங்கல்-பூரி-தோசை சார்.

என்ன தம்பி ஹேர்கட்ட இப்பிடி சொதப்பிட்ட? அடுத்த தடவ பாருங்க சார் ஒங்கள யாருக்குமே அடையாளம் தெரியாம பண்ணிடலாம்.

காய்கறில்லாம் என்னம்மா இப்பிடி வெரைப்பா இருக்கு? வெண்டைக்காயும் பொடலங்காயும் ஒடைச்சாலும் ஒடையாது போல. எல்லாத்துலயும் ஒரத்தப் போட்டு இப்பிடி ஆயிடிச்சி சார். ஏந் தலயெழுத்து விக்கிறேன். ஓந் தலயெழுத்து வாங்குற.

ட்ராஃபிக் போலீஸெல்லாம் ரொம்ப அநியாயம் பண்றாங்க. எல்லார் கிட்டையும் மாமூல். எல்லாத் தப்பையும் அலவ் பண்றாங்க. எங்க போய் முடியப்போகுதோ.

நானும் பாத்துட்டேன் சார். ரஜினி மாதிரி கால்குலேட்டிவ் யாரும் கெடையாது. வெச்ச குறி தப்பறதில்லை. ஆனா அரசியலுக்கு அவர் வருவாரா? மாட்டாரா?

ஒரு நாள் பாருங்க இந்த விஜயகாந்த் தமிழ்நாட்ட ஒரு கலக்குக் கலக்கத்தான் போறாரு.நீங்களும் பாக்கத்தான் போறீங்க.

இப்படியெல்லாம் யாரும் யாரோடும் பேசிக்கொள்வதில்லை. மொபைல் ஃபோன் அந்த இடத்தைப்பிடித்துக் கொள்ள அந்தக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எதிரில் இருப்பவரோடும் மொபைல் ஃபோனில் பேசுவதுதான் எளிதாகிவிட்டது. அரட்டை என்பது முகமற்ற குரல் என்ற அளவில் இருக்கிறது.

பயணங்களிலும் பொது இடங்களிலும் தெருவில் நடக்கையிலும் அநேகமாக யாரும் பேசிக்கொள்வதில்லை. அல்லது வீட்டுத் தகராறு அல்லது உடல்நிலைக் கோளாறு அல்லது அடுத்தவனின் வளர்ச்சியில் பொறாமை என்று ஏதாவதொன்று அரைக்கப்படுகிறது.

இந்த பொது அரட்டைகள் குறைந்து போனது நமது ஆரோக்கியத்துக்கும் மனநிலைக்கும் உலைவைக்கும் செயலாக எனக்குத் தெரிகிறது. எல்லோரின் முகமும் ஒரே பாவத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது.
இனி யாரையாவது பார்க்கும் போது மேற்கண்ட வசனங்கள் ஏதாவதொன்றை உபயோகித்துக் கொள்ளவும்.

3.11.10

இன்றிரவு


காற்றின் பக்கங்களில்
எழுதப்படுகிறது
இசைக்கப்படாத சங்கீதம்.

மனதின் சுவர்களில்
விசிறியடிக்கப்படுகிறது
வரையப்படாத ஓவியம்.

மண் தொடும்வரை
வெளியில் தவிக்கிறது
மழையின் துளி.

நீரின் சலனங்களில்
பரவுகிறது
தொடுதலின் நாணம்.

மெல்லத் திறக்கிறது
நம்மிருவருக்கான
கதவும் இரவும்.

2.11.10

இசையின் மடியில்-



தெருவில் பிணத்துடன் ஆடிச்செல்லும் பறையோ
நாற்சந்தியில் எட்டு நாதஸ்வரமும் தவிலும் சேர்ந்து உருவெடுக்கும் மல்லாரியோ
அல்லது சாஸ்த்ரீய சுத்தத்துடன் திருவையாறோ, தான்சென்னின் சபையோ, 
ஒரு குழந்தையின் உறக்கத்துக்குப் பாடத்தெரியாத தாயின் தாலாட்டோ
விட்டுபோனவனின் துயரத்தைப் பாடும் பிலாக்கணமோ
என் மனம் பற்றுவதற்கு ஒரு கொடியிருந்தால் போதும்.
பற்றி ஏறி விடும்.

பச்சைமாமலை போல் மேனியும், ஆறிரண்டும் காவேரியும் கேட்கும்போதெல்லாம் என் பிடிவாதப் பாட்டி நினைவில் அசைகிறாள்.

திருப்பாவையும் திருவெம்பாவையும் என் தூக்கத்துக்கு நடுவிலும் கேட்கப்பிடிக்கும் மார்கழியும் என் அம்மாவின் குரலும் ஞாபகத்துக்கு வருகிறது.

எனக்காக என் அம்மாவால் பாடப்பட்ட அதே ’பச்சை மரம் ஒன்று’ என் மகனுக்கும் பாடப்படுகிறது என்னாலும் என் மனைவியாலும். கூடவே முத்தான முத்தல்லவோவும், நிலா காய்கிறது(இந்திரா)ம் சேர்ந்துகொள்கிறது.

சக்கரவாகத்தைக் ( உள்ளத்தில் நல்ல உள்ளம்-விடுகதையா என் வாழ்க்கை ) கேட்கும்போதெல்லாம், என் நண்பன் முரளி -தஞ்சை ப்ரகாஷ்,  , தஞ்சாவூர்க்கவிராயர் முன்னால் பாடிக்கொண்டிருக்கிறேன்.

சஹானா (பார்த்தேன் சிரித்தேன்,அழகே சுகமா) எங்கெல்லாம் பாடப்படுகிறதோ மறுபடியும் மறுபடியும் நான் காதலிக்கத்தொடங்குகிறேன்.

ப்ரமதவனமும், கோபிகாவசந்தமும் கேட்கும்போது என் நண்பன் செல்லத்துரையுடன் சஃபையரில் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா பார்த்துவிட்டுத் திருவல்லிக்கேணிக்குத் திரும்பிச்செல்கிறேன்.

ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பிர்காக்களின் இடைவெளியில் 70களில் ஆல் இந்தியா ரேடியோவின் சாஸ்த்ரீய சம்மேளனை என் அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தூங்குமூஞ்சிமரத்தின் தனிமையில் அமைந்த என் வீட்டின் பயம் கலந்த ஐந்து வயது இரவுகளைத் தவளைகளின் கோரஸோடு போர்த்திக்கொள்கிறேன்.

தபேலாவும் டோலும் ஆக்ரமிக்கும் ரபீந்த்ரோ சங்கீதத்தின் சருகுகளின் உதிர்வில் கொமோல் ராயின் அட்டகாசங்களும் அவன் ஆடும் ஆட்டங்களும் மறுபடி என் கண்ணெதிரில் விரிகிறது.

மெஹ்தி ஹசனும் நஸ்ரத் ஃபடே அலிகானும் தூங்கவிடாது செய்த சூஃபி இசையின் நிழல் பிரம்மச்சாரி வாழ்க்கையின் பிதுரார்ஜித சொத்தாக என் பெட்டகத்தின் மேல்தட்டில் எப்போதும் இருக்கிறது.

ஹரிஹரனும் சுரேஷ் வாத்கரும் பாடிய உர்து கஸல்களும் நதியோட்டத்தின் அடியே படியும் மணலின் மிருதுவாய் மனதின் சுவர்களில் வர்ணம் தீட்டியபடியே இருக்கிறது.

காலித் பாடிய தீதீயும் போனியெம்மும் மிக்கேல் ஜாக்ஸனின் புத்துணர்விசையும் இன்னும் என் இளமையைத் தூரெடுத்தபடி இருக்கின்றன.

மறக்கவியலா அண்டோனியோ விவால்டியும் அவனின் நான்கு பருவங்களும் என்னை அழச்செய்து தவிக்கவைக்கின்றன. இதை யாரிடம் சொல்வேன்?

மொஸார்ட்டும் பீத்தோவனும் இன்றும் புதுமையாய் என்னைத் தினமும் உருக்கொள்ள வைக்கிறார்கள்.

பிறவா வரம் தாரும் என்கிற கோபாலக்ருஷ்ண பாரதியாரின் கீர்த்தனையை யார் பாடினாலும் மனம் இளகிக் கரைகிறது. பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.

’போறாளே பொன்னுத் தாயி’யும் ’சின்னத் தாயவளு’ம் கேட்கும் ஒவ்வொரு தடவையும் வடியும் கண்ணீரால் நனைகின்றன கன்னங்கள்.

இன்னும் சொல்ல இருக்கிறது. என்றாலும்- 

பெரும் மழையாய் வீழ்கிறது இசை. 
நிற்பது பெருவெளியில் முழுதும் நனைந்தபடியா? 
சொட்டுச் சொட்டாய் நனைக்கும் கூரையின் அடியில் மறைந்தபடியா?
உடையும் மனமும் நனையாப் பெருமையுடன் வாழ்வெல்லாம் ஒழுகாத கூரையின் கீழா? 
சோழிகளைக் குலுக்கிக் கொண்டிருக்கிறேன் 
கரையும் காலத்தின் புதிர் மணக்க 

என்ற வரிகளோடு இதை முடிக்கிறேன்.

வசீகரித்த முகங்கள்


மதுபாலா(ஹிந்தி)
ஜெயப்ரதா
பண்டிட் ரவிஷங்கர்
பிஸ்மில்லாஹ் கான்
நாகேஷ்
பசுபதி
கமல்ஹாசன்
கிரீஷ் கர்னாட்
அருந்ததிராய்
ஸ்மிதா பாட்டில்
மோகன்லால்
ஸ்டெஃபி க்ராஃப்
பத்மப்ரியா(த.தவமிருந்து)
தஞ்சை ப்ரகாஷ்
ரோவன் அட்கின்சன்
மானெக்‌ஷா
ஓஷோ
ஊர்வசி
ஜான் ஆப்ரஹாம் (மலையாளம்)
ரவீந்த்ரநாத் டாகுர்
ஹரிஹரன்
பரத் கோபி
பெனாசிர் புட்டோ
திலிப்குமார்
நந்திதா தாஸ்
ஜெயப்ரகாஷ் நாராயண்
அரவிந்தன் (மலையாளம்)
சுப்ரமண்ய பாரதி
ஷோபனா
ஸ்ரீநிதி ரங்கராஜன்
அனிதா ரத்னம்
எஸ்.பி.பாலு
சோ
ஜேசுதாஸ்
டி.என்.சேஷன்
ஜோதிகா
குஷ்பு
சாவித்ரி
மம்முட்டி
பானுமதி
சுஜாதா(ரெங்கராஜன்)
காஞ்சிப்பெரியவாள்
வாஜ்பாய்
நெடுமுடி வேணு
அபர்ணாசென்
வெங்சர்க்கார்
வாலி
ஓம் பூரி
விநாயக் ராம்
கீதா
வைகோ
அஸின்
க.நா.சு.
சுந்தரராமசாமி
கோவிந் நிஹ்லானி
குண்டப்பா விஷ்வநாத்
போரிஸ் பெக்கர்
நீலு
பிள்ளையார்.

1.11.10

ஹரித்வார்-II


நீள்வாக்கில் கண்ணுக்கெட்டிய தூரம் கங்கையின் பிரவாகம். பார்த்தவுடன் பிரமிக்கவைக்கும் மலைத்தொடரின் பசும்போர்வை. என்னை எப்போதும் அசைத்துப்பார்க்கும் மலையடிவாரத்தின் நீளும் நெடிய கரம். வெயில் இருந்தும் பனிமூட்டம் பரவும் தட்பம். நல்ல குளிர். விதவிதமான வண்ணங்களில் விதவிதமான பக்தர்கள். மொட்டை போட்டுக்கொண்டு-தாடியுடன்-ஊடுருவும் ஞானப்பார்வையுடன்-சிடுக்கு விழுந்து புறத்தோற்றம் குறித்த கவலை ஏதுமின்றி நிர்வாணத்துடன்-ஹூக்கா புகைத்தபடி- கைரேகை பார்த்தபடி-என்று சாமியார்கள்- ஹரித்வார்.

மறுவருடம் கும்பமேளா வர இருப்பதால் இப்போதிருந்தே அதற்கான விரிவாக்கங்கள். கங்கையைத் தூரெடுக்கும் பணி மும்முரமாயிருந்தது.வழியெல்லாம் கூடாரங்கள். கடைகள்.வினோதமான பெயர்களுடன் இனிப்புவகைகள்-சிலைகள்-பழங்கால நாணயங்கள்-முடி திருத்தும் கடைகள்-பழங்கள்-சாமியார்கள் குறி சொல்லும் ஸ்தலங்கள்-யாரையும் பொருட்படுத்தாது சிறுநீர் கழிக்கும் மக்கள்-கும்பல் நிரம்பிய உணவு விடுதிகள்.

திடீரென வேற்றுலகுக்கு வந்தது போலத்தோற்றம் தந்தது மறைந்த பேரமைதி. சுழித்தோடும் கங்கையைப் பார்த்தபடி உட்கார்ந்த வேளையில் என் பிறப்பிலிருந்து இந்த நாற்பத்தைந்து வயது வரை வந்த பாதையை அசை போடத்துவங்கியது மனம்.

பிறந்ததிலிருந்து வாழ்ந்த மிக எளிமையான சூழல்-அப்பாவின் மோசமான உடல்நிலையுடன் தொடர்ந்த என் இளம்பிராயம்-இசைக்கடிமையாய்த் திரிந்த பொழுதுகள்-தாமிரபரணி-கவிதை எழுதி திருப்தியுறாது கவிதையைத் தேடித் திரிந்த வேளைகள்- ப்ரகாஷின் தொடர்பு புரட்டிப்போட்ட என் தலையெழுத்து-பயணங்கள்-யாருக்கும் அமையாத என் அன்பு மனைவி-அவள் அளித்த அன்பின் ரசாயனம்-என் இரு உயிர்க்கொடையான மகன்கள்-என் வேகமும் பொறுமையும் கொடுத்த கொடைகள்-தத்துவவிசாரணை-உதிர்ந்துகொண்டிருக்கின்றன என் மரத்தின் பழுத்த இலைகள்.

எல்லா வெளிகளையும் சூழும் அதே வானம். எல்லா வெளிகளிலும் ஓடும் அதே நதி. ஆனாலும் இந்தக் காற்றிலும் நீரிலும் எங்கும் காணாத ஏதோ மனதை அசைக்கும் ஓர் ரகசியமும் விடை தெரியாத ஒரு புதிரும் கலந்திருப்பதாயும் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் கரைபுரண்டோடும் நீரில் கரைத்துவிட வேண்டும் போலவும் தோன்றியது.

மாலை மெல்ல அவிழத்தொடங்கி இருளின் நிழல் வீழத்தொடங்கிய வேளை. பல பெயர்களும் பல ஜாதிகளும் கொண்ட அந்திப்பறவைகள் தங்கள் கூடு திரும்பும் செய்தியை விதவிதமான கூவல்களில் தெரிவித்துகொண்டிருந்தன. மலையடிவாரங்களில் பொழுதுசாயும் சூழ்நிலையை என்னால் தாங்கமுடிவதில்லை.

மாலை தினமும் மானஸாதேவிக்கு ஆரத்தி எடுக்கும் வைபவம் மிகவும் ப்ரசித்தி நிறைந்தது. தில்லியின் திக்குமுக்காடும் போக்குவரத்து நெரிசலால் ஹரித்வாரின் மலைமேல் வின்ச்சில் பயணித்து மொத்த அழகையும் பருகும் வாய்ப்பை கைநழுவ விட்டிருந்தேன். ஆரத்தியையும் தவற விட்டுவிடக்கூடாதென்று எழுந்தேன். ஓடும் நதியின் உள்ளே அமிழ்ந்தேன். உருக்கும் குளிர் மனமெங்கும் நனைக்க மெல்ல எழுந்தேன். கண்கள் சிவப்பேறும்வரை நீரில் தங்கியிருந்தேன். கண்முன்னே தீபங்கள் மலர்கள் சூழ மிதந்து போய்க்கொண்டிருந்தன.

இருள் மெல்ல படரத் தொடங்கிய வேளை. ஆரத்திப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அந்த இசை மலையடிவாரம் முழுதும் நிறைந்திருந்தது. நதியெங்கும் தீபம் நிறைந்து ஒளிவெள்ளத்தால் மூழ்கியிருந்தாள் கங்காதேவி. கணீர் கணீரென்ற மணியொலியும் பறவைகளின் கூவலும் ஆரத்திப்பாடலும் ஓடும் ஒளிநதியும் என்னைக் கொல்லத் தொடங்கின. என்னை இழந்திருந்த ஒரு கணத்தில் விசும்பி விசும்பி அழத் தொடங்கினேன். என் தோள்களில் கைபோட்டிருந்த என் மகன் என் உடல் உணர்வுகளால் அதிர்வதை உணர்ந்து அழறியாப்பா? என்றான். நான் அழுதுகொண்டிருந்த போது என் மனம் பெற்றிருந்த அமைதியை இத்தனை நாளில் நான் உணர்ந்தவனில்லை. வேண்டுகோளற்ற ப்ரார்த்தனையாய் என் கண்ணீரை உணர்ந்தேன்.

வாழ்வின் புதிர்களையும், விடைகளையும் எனக்குள் நிரம்பச் செய்திருந்தது இயற்கையின் பேருரு. அந்த ரகசியத்தைத் தாகமடங்கா தாகத்துடன் பருகித் திளைத்திருந்த போது இருள் வெளியேயும் ஒளி உள்ளேயும் நிறைந்திருந்தது. இதுவரை உணராத புதுஉணர்வுடன் ரிஷிகேஷில் இரவு தங்கும் திட்டப்படி  பயணத்தைத் தொடர்ந்தேன்.

(அடுத்த பதிவில் ரிஷிகேஷ் அனுபவம்)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...