15.11.10

இருமொழி


உறக்கமற்ற
கனவுகளும்
கனவுகளற்ற
நீடுறக்கமும்
என்னதும் உன்னதும்.
ஈன்ற பசுவின் மடியாய்
என் தாபம்.
பிறந்திறந்த கன்றின்
பசியாய் உன் மோகம்.
மெழுகை விழுங்கும்
சுடராய் என் காமம்.
பற்றவியலா நனைந்த
விறகாய் உன் தாகம்.
கைப்பள்ளத்து நதிநீர்
என் விரகம்.
நழுவும் விரலிடைக்
கானல் உன் பருவம்.
சீறும் நாகத்தின் புற்று
என் தேகம்.
புற்றைச் சுமக்கும் பற்று
உன் தேகம்.

9 கருத்துகள்:

தமிழ்க் காதலன். சொன்னது…

முரண்பாடு பேசிய விதம் அருமை. நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.
# நழுவும் விரலிடைக்
கானல் உன் நரகம்.
இந்த வரிகள் கவிதையில் ஒன்றாமல் நிற்கிறது.... என்பது என் எண்ணம்.

சுந்தர்ஜி சொன்னது…

எனக்கும் அது திருப்தி தராமல்தான் இருந்தது.மாற்றிவிட்டேன்.ரசனைக்கும்ஆலோசனைக்கும் நன்றி த.கா.

நிலாமகள் சொன்னது…

வளரிளம் பருவத்துப் பாடு தேவலாம் என்றாகிறது வளர் முதிர் பருவத்தினர் படும் பாடு.

சுந்தர்ஜி சொன்னது…

அது புற்றுநோய் தாக்கிய பெண்ணையும் கொஞ்சமும் அது தாக்காத ஒரு கணவனையும் நேற்று சந்தித்தபின் தோன்றியது.உங்களுக்கு அது மாற்று அர்த்தம் ஏற்படுத்தியிருப்பின் வருந்துகிறேன் நிலாமகள்.

நிலாமகள் சொன்னது…

கவிதை பிறந்த சூழல் புரியாத நிலையில் , நாற்பதுகளைக் கடந்து கொண்டிருக்கும் தம்பதியரில் ஆண் நோக்கில் கற்பனையைப் பொருத்தி விட்டேன். பொறுத்தருள்க.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...உங்கள் பின்னூட்டம் படித்தபின் கவிதையை இன்னும் இன்னும் வாசித்தேன்.அதன் பொருள் அதிர்வாய்க் கேட்கிறது !

vasan சொன்னது…

/புற்றைச் சுமக்கும் பற்றுஉன் தேகம்./
புரியாம‌ல் இருந்த‌து, உங்க‌ளின் பின்னோட்ட‌ம் வ‌ரை.
ஒவ்வொரு உவ‌மையும், அருமை.
'இரு மொழி;, விழிக‌ளில் கைக‌ளில் அள்ளிய‌ நீராய்.

santhanakrishnan சொன்னது…

ஆம் சுந்த்ர்ஜி வாசன் சொன்னது போல்தான் எனக்கும்.
சீறும் நாகத்தின் புற்று என் தேகம்
என்ற இடத்தில் கொஞ்சம்
திசை மயக்கம் ஏற்பட்டது.
துயரத்தின் விளிம்பில்
நிற்கிறது உங்கள் கவிதை.

ரிஷபன் சொன்னது…

பின்னூட்டம் கவிதையை முழுமையாய் அர்த்தப்படுத்தியது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...