தெருவில் பிணத்துடன் ஆடிச்செல்லும் பறையோ
நாற்சந்தியில் எட்டு நாதஸ்வரமும் தவிலும் சேர்ந்து உருவெடுக்கும் மல்லாரியோ
அல்லது சாஸ்த்ரீய சுத்தத்துடன் திருவையாறோ, தான்சென்னின் சபையோ,
ஒரு குழந்தையின் உறக்கத்துக்குப் பாடத்தெரியாத தாயின் தாலாட்டோ
விட்டுபோனவனின் துயரத்தைப் பாடும் பிலாக்கணமோ
என் மனம் பற்றுவதற்கு ஒரு கொடியிருந்தால் போதும்.
பற்றி ஏறி விடும்.
பச்சைமாமலை போல் மேனியும், ஆறிரண்டும் காவேரியும் கேட்கும்போதெல்லாம் என் பிடிவாதப் பாட்டி நினைவில் அசைகிறாள்.
திருப்பாவையும் திருவெம்பாவையும் என் தூக்கத்துக்கு நடுவிலும் கேட்கப்பிடிக்கும் மார்கழியும் என் அம்மாவின் குரலும் ஞாபகத்துக்கு வருகிறது.
எனக்காக என் அம்மாவால் பாடப்பட்ட அதே ’பச்சை மரம் ஒன்று’ என் மகனுக்கும் பாடப்படுகிறது என்னாலும் என் மனைவியாலும். கூடவே முத்தான முத்தல்லவோவும், நிலா காய்கிறது(இந்திரா)ம் சேர்ந்துகொள்கிறது.
சக்கரவாகத்தைக் ( உள்ளத்தில் நல்ல உள்ளம்-விடுகதையா என் வாழ்க்கை ) கேட்கும்போதெல்லாம், என் நண்பன் முரளி -தஞ்சை ப்ரகாஷ், , தஞ்சாவூர்க்கவிரா யர் முன்னால் பாடிக்கொண்டிருக்கிறேன்.
சஹானா (பார்த்தேன் சிரித்தேன்,அழகே சுகமா) எங்கெல்லாம் பாடப்படுகிறதோ மறுபடியும் மறுபடியும் நான் காதலிக்கத்தொடங்குகிறேன்.
ப்ரமதவனமும், கோபிகாவசந்தமும் கேட்கும்போது என் நண்பன் செல்லத்துரையுடன் சஃபையரில் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா பார்த்துவிட்டுத் திருவல்லிக்கேணிக்குத் திரும்பிச்செல்கிறேன்.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பிர்காக்களின் இடைவெளியில் 70களில் ஆல் இந்தியா ரேடியோவின் சாஸ்த்ரீய சம்மேளனை என் அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தூங்குமூஞ்சிமரத்தின் தனிமையில் அமைந்த என் வீட்டின் பயம் கலந்த ஐந்து வயது இரவுகளைத் தவளைகளின் கோரஸோடு போர்த்திக்கொள்கிறேன்.
தபேலாவும் டோலும் ஆக்ரமிக்கும் ரபீந்த்ரோ சங்கீதத்தின் சருகுகளின் உதிர்வில் கொமோல் ராயின் அட்டகாசங்களும் அவன் ஆடும் ஆட்டங்களும் மறுபடி என் கண்ணெதிரில் விரிகிறது.
மெஹ்தி ஹசனும் நஸ்ரத் ஃபடே அலிகானும் தூங்கவிடாது செய்த சூஃபி இசையின் நிழல் பிரம்மச்சாரி வாழ்க்கையின் பிதுரார்ஜித சொத்தாக என் பெட்டகத்தின் மேல்தட்டில் எப்போதும் இருக்கிறது.
ஹரிஹரனும் சுரேஷ் வாத்கரும் பாடிய உர்து கஸல்களும் நதியோட்டத்தின் அடியே படியும் மணலின் மிருதுவாய் மனதின் சுவர்களில் வர்ணம் தீட்டியபடியே இருக்கிறது.
காலித் பாடிய தீதீயும் போனியெம்மும் மிக்கேல் ஜாக்ஸனின் புத்துணர்விசையும் இன்னும் என் இளமையைத் தூரெடுத்தபடி இருக்கின்றன.
மறக்கவியலா அண்டோனியோ விவால்டியும் அவனின் நான்கு பருவங்களும் என்னை அழச்செய்து தவிக்கவைக்கின்றன. இதை யாரிடம் சொல்வேன்?
மொஸார்ட்டும் பீத்தோவனும் இன்றும் புதுமையாய் என்னைத் தினமும் உருக்கொள்ள வைக்கிறார்கள்.
பிறவா வரம் தாரும் என்கிற கோபாலக்ருஷ்ண பாரதியாரின் கீர்த்தனையை யார் பாடினாலும் மனம் இளகிக் கரைகிறது. பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.
’போறாளே பொன்னுத் தாயி’யும் ’சின்னத் தாயவளு’ம் கேட்கும் ஒவ்வொரு தடவையும் வடியும் கண்ணீரால் நனைகின்றன கன்னங்கள்.
இன்னும் சொல்ல இருக்கிறது. என்றாலும்-
பெரும் மழையாய் வீழ்கிறது இசை.
நிற்பது பெருவெளியில் முழுதும் நனைந்தபடியா?
சொட்டுச் சொட்டாய் நனைக்கும் கூரையின் அடியில் மறைந்தபடியா?
உடையும் மனமும் நனையாப் பெருமையுடன் வாழ்வெல்லாம் ஒழுகாத கூரையின் கீழா?
சோழிகளைக் குலுக்கிக் கொண்டிருக்கிறேன்
கரையும் காலத்தின் புதிர் மணக்க
என்ற வரிகளோடு இதை முடிக்கிறேன்.
4 கருத்துகள்:
நல்ல பகிர்தல் ...இசைகேட்டால் புவியே அசைந்தாடும்
நாம் எம்மாத்திரம் ..
ஓசை கிளர்த்தும் நினைவலைகளே தனி ..ஒவ்வொருவருக்கும் ஒரு ராகம் ஒரு பாட்டு
சந்தோஷமான சங்கீத பகிர்வு ..ஜி
இசையை எவ்வளவு இழந்திருக்கிறேன் என்பதை,
உங்கள் ரசனையான் பதிவுக்குப் பின் உணர்கிறேன்.
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா கேசட்டை அது டாமேஜ் ஆகிறவரை போட்டுக் கேட்டேன்..
இசை மட்டும் இல்லை என்றால் மீதி மனிதர்களும் மிருகம் தான்..
பாராட்டுக்கு நன்றி பத்மா.
இசையை உங்கள் வார்த்தைகளில் காண்கிறேன் வாசன். நன்றி.
இசையை விடாது கேட்டு டாமேஜ் ஆக்கிட்டீங்களே ரிஷபன்.இப்ப ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவுக்கு நான் எங்கே போவேன்? சும்மா தமாஷ். நன்றி ரிஷபன்.
கருத்துரையிடுக