11.11.10

கவிதைப் பட்டம்


வெளியில் தத்தளிக்கும்
பட்டத்தின் வால்
எழுதத் தொடங்கியது
கவிதையின் முதல் வரி.

எங்கிருந்தோ பிறக்கிறது
ஒரு சொல் இங்குவந்து
பொருத்திக்கொள்ள.

என்றோ பார்த்த
காட்சியின் வண்ணங்கள்
தூரிகையை நனைக்கிறது
தீட்டிக் கொள்ள.

யாரோ பேசும்
ஒரு வார்த்தை எடுத்தோ
தடுத்தோ நிறுத்துகிறது
பயணத்தை.

வார்த்தைகள் கைநழுவ
மழை நீர்க்கப்பலாய்
அசைகிறது சாய்கிறது
நிலையின்றி.

ஏதுமற்ற ஒரு நொடியில்
குமிழியின் மென்சுவர்
உடைய

பிறத்தலின் வலியும்
மரித்தலின் சுவையும்
ஒன்றாய்க் கூட

முற்றுப் பெறுகிறது
என்றோ தொடங்கிய
கவிதையின் இறுதிவரி.

7 கருத்துகள்:

பத்மா சொன்னது…

கவிதைப் பட்டதில் வார்த்தைகள் சிறகடிகின்றன

நிலாமகள் சொன்னது…

படைப்புப் பிரசவத்தின் வர்ணனை அழகு கவிதைப் பட்டத்தை உயர எழும்பிப் பறக்கச் செய்கிறது.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...சுகம்தானே.நானும் சுகம்.ஆனாலும் இன்னும் வேலைகளின் இறுக்கத்தின் பிடியில்தான்.மனமும் உடம்பும் தளர்வாயில்லை.தளம் சோர்ந்துபோய்விடகூடாதேயென்று சேமிப்பில் இருந்த பதிவுகளை இடத் தொடங்கியிருக்கிறேன்.மெல்ல மெல்ல சரியாக்கிக்கொள்ளலாம்தானே.உங்கள் அன்புக்கு ஈடு இல்லாவிட்டாலும் மனம் நிறைந்த என் அன்பும் சேர்ந்தபடி சுந்தர்ஜி.

வலைத்தளம் மாறியது என்று சொல்ல வந்தீர்கள்.அதற்கு முன்னைய வரிகள் நெஞ்சை ஒருமுறை "பக்"எனப் பண்ணி பிறகு குளிர வைத்துவிட்டது.நன்றி சுந்தர்ஜி.

உங்களின் தவறவிட்ட பதிவுகள் நிறையப் படிக்கவேணும் வீட்டுப்பாடம்போல.உங்கள் எழுத்துக்களுக்கு கருத்துச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.மனதில் படி(தி)ய விட்டாலே ஒரு திருப்தி.என்றும் அன்போடு நட்போடு கை கோர்த்துக் கொள்வோம் !

மிருணா சொன்னது…

உண்மை.அருமை.

ரிஷபன் சொன்னது…

அப்படியே இசை கூட்டிக் கொண்ட வார்த்தைகள் ..

Vel Kannan சொன்னது…

very nice ji

சுந்தர்ஜி சொன்னது…

சிறகடித்துப் பறக்கிறது உங்கள் ரசனையும் பத்மா.

ரசனைக்கு நன்றி நிலாமகள்.

ஓ ஹேமா!அன்பைச் சொறிந்த இந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும்போதே நெகிழ்ந்தேன்.ரொம்பவும் தாமதித்துப் பதிலெழுத நேர்ந்தமைக்கு மன்னியுங்கள் ஹேமா.என் எழுத்துக்களுக்கு நீங்கள் தந்திருக்கும் இடம் என் தகுதிக்கு மீறியது.அன்புக்கு என் தலை சாய்கிறது.கைகள் நீள்கிறது கோர்த்துக்கொள்ள.

நன்றி சைக்கிள்.

நன்றி ரிஷபன் உங்கள் வார்த்தைகளுக்கு.

நன்றி வேல்கண்ணன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...