19.11.10

தூரிகையின் மௌனம்-I


கெய்தோந்தே ஒரு அற்புதமான ஓவியர் என்பதையும் விட ஒரு ஆழ்ந்த மனம் கொண்ட மனிதர்.நெடு நாட்களாக ஓவியங்கள் வரையாது இருந்தும் தன் இடத்தை யாரும் நெருங்கவிடாது தக்கவைத்துக்கொண்டவர்.இவரின் இந்த நேர்காணல் ”தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி”யில் சுமார் 20வருடங்களுக்கு முன்னால் வந்தது.அசாதாரணமான கேள்விகளும் நிதானமான பதில்களும் கொண்ட இந்த நேர்காணலை என்னால் மறக்க முடியாது. கேள்விகள் ப்ரிதிஷ் நாண்டியினுடையது. மொழிபெயர்ப்பு என்னுடையது.மொழிபெயர்த்த தாள் நைந்து பொடியாகத் துவங்கியும் நெடி குறையாது அப்படியே .எல்லோருக்கும் இந்த நேர்காணல் பிடிக்கக் கூடுமா என்று தெரியவில்லை. எல்லோருக்காகவும் மழை பெய்தாலும் மழையை விரும்பாதவர்களும் உண்டுதானே!

கெய்தோந்தே உயிரோடு இல்லை.அவர் ஓவியங்களிலும் நிசப்தத்திலும் உயிர்த்திருக்கிறார்.

இனி அந்த நேர்காணல்:

அநேகமாக வரைவதையே பல வருடங்களாக விட்டுவிட்டீர்கள்தானே-கெய்தோந்தே?
-ஆமாம்.

ஏன் இப்படிச் செய்தீர்கள்?
-என் உடல்நிலை நன்றாக இல்லை.நான் சுகமாக இல்லை.ஆனால் பார்ப்பதற்கு நான் அவ்வாறு இல்லாததால் யாரும் புரிந்துகொள்வதில்லை.உள்ளூர நான் சுகமாய் இல்லை என்பதை நான் அறிவேன்.உடல்ரீதியாக நான் சரியாக இல்லை.

வரைவது என்பதை உடல்ரீதியாக அதிகக் கஷ்டமான விஷயமாக நினைக்கிறீர்களா?
-ஆமாம். ஒரு கான்வாஸில்-வேலையில்-இறங்குவது என்பது அதிகமும் கடினமாகவே தெரிகிறது எனக்கு.

சின்னச் சின்ன ஓவியங்கள்-கிறுக்குதல்கள்-இவற்றைச் செய்வதிலிருந்து கூட உங்களைத் தடுத்தது எது? நிச்சயமாக உடல் நிலை காரணமாக இருக்க முடியாதல்லவா?
-இல்லை.சோம்பேறித் தனமும் காரணம். வெறும் சோம்பேறித்தனம். எதையாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் கூடஇல்லை.

உங்கள் தளத்திலுள்ள ஒரு சிருஷ்டிகர்த்தா நிச்சயமாகத் தன் எண்ணங்களைத் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதாக நினைப்பது இயல்புதானே?
-ஆமாம்.ஆனால் கடந்த 45வருடங்களாக என் படைப்புக்களைப் பார்த்திருக்கலாம்.செய்ய வேண்டியதெல்லாம் செய்துமுடித்துவிட்டேன்.சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று.இனிச் சொல்லவோ செய்யவோ எதுவுமில்லை.கெய்தோந்தே இப்போது அமைதியானவன்.அவன் எப்போதும் மௌனமாகவே இருக்கப் போகிறவன்.

அப்படியானால் இனிச் சொல்ல எதுவுமேயில்லையா? கெய்தோந்தே முடிந்து போய்விட்டாரா?
-நான் சொல்லவந்தது ”இனிமேல் எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்பதே.

ஏன்?
-நான் சொல்லத் தேவையான எதையும் வாய்வார்த்தையாய்ச் சொல்ல முடியுமென்றால்-வார்த்தைகளால் தொடர்பு கொள்ள முடியுமென்றால் நான் ஏன் வரைய வேண்டும்? வரைய வேண்டுமென்ற கட்டாயத்துக்கு ஏன் நான் போகவேண்டும்? ஓவியம் வரைவது என்பது சில காலத்துக்குப் பிறகு இயல்பாகிவிட்டது-பேசுவது போல.

ஆனால் நீங்கள் பேசுவதும் இல்லையே?
-ம்.சரிதான்.நான் வரைவதுமில்லை.பேசுவதுமில்லை.ஆனால் இவையிரண்டும் வெவ்வேறான விஷயங்கள்.இனியும் வரைவதற்குத் தேவையற்றுப் போனதால் நான் வரைவதில்லை.ஆனால் நான் பேசாமல் போனதன் காரணம் நான் நிசப்தத்தை விரும்புவதுதான்.இரண்டும் ஒன்றல்ல.நான் யாரையும் சந்திப்பதில்லை.

(தொடரும்)

5 கருத்துகள்:

பத்மா சொன்னது…

நான் படித்தது தான் எனினும், படத்தின் அழகு இங்கேயே பல நிமிடங்கள் தங்க வைத்து விட்டது.
அழகு ஜி

ரிஷபன் சொன்னது…

ஓவியம் வரைவது என்பது சில காலத்துக்குப் பிறகு இயல்பாகிவிட்டது-பேசுவது போல.
எல்லாப் படைப்பாளியும் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு உண்மையைத் தொட்டு விடுகிறார்கள்.. அந்த தரிசனத்திற்குப் பின் நிசப்தத்தை நேசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்..

தமிழ்க் காதலன். சொன்னது…

மோனத்தின் மௌனத்தில் அலாதியான ஆனந்தத்தை அனுபவிக்கும் மனம் ஒரு புள்ளியில் குவிந்து கிடக்கும் தியானம். இது நல்ல கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும் தவிர்க்க முடியா அனுபவம். சிலவற்றை வார்த்தைகளில் தந்துவிட முடியாது. அமைதியாய் அனுபவித்து பாருங்கள். சூனியத்தின் சூட்சுமம் புரியும். வாங்க நம்ம பக்கம். ( ithayasaaral.blogspot.com )

சைக்கிள் சொன்னது…

வெண்மையில் இருந்து விரிகின்ற வண்ணங்கள், மீண்டும் வெண்மையாகி அமைதியாவதுபோல் இருக்கிறது படத்தையும், அவர் வார்த்தைகளையும் கவனிக்கும் போது.

ஹேமா சொன்னது…

20 வருடங்களுக்கு முன் வந்த மன ஓட்டத்தைத் தந்து எங்களையும் மௌனமாக்கியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...