மழிக்காத மகனுக்கொன்று
நேரம் தாண்டியுறங்கும்
மகளுக்கொன்று.
சாப்பிடாத பிள்ளைக்கும்
சாப்பிடாத பிள்ளைக்கும்
விடுப்பெடுத்த வேலையாளுக்கும்
மற்றொன்று.
அழைப்பு மணிக்கொன்றும்
தொலைக்காட்சிக்கு வேறொன்றும்.
தொலைபேசிக்கொன்று.
விடைபெறலுக்கொன்று.
பின் திரும்பும்
வாகனத்திற்கொன்று.
நாய்களுக்குத் தனியாய் ஒன்று.
கோயிலுக்கு நேர்ந்தவளுக்கும்
யாசிக்கும் தொழுநோயாளிக்கும்
நிச்சயம் வேறு வேறு.
கவனிப்பாரின்றிக் கரையும்
காக்கைக்கும்
தோட்டத்துக் குயிலுக்கும்
தனித்தனியே.
வீடுகளின் முகமாய்
மூடப்பட்ட கதவுகளும்
அவற்றின் உயிராய்க்
குரல்களும் ஓசைகளும்.
8 கருத்துகள்:
சுந்தர்ஜி..
இவற்றுக்கிடையே நமது முகத்திற்கான முகத்தை மீட்டெடுக்கவேண்டும்..நிதமுமாய்..வெகு அற்புதம்.
இவற்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ நமது நிஜ முகம்! அதை எல்லா இடங்களிலும் வைத்திருக்கும் பாக்கியம் சிலருக்கு இருக்கிறது..
நம் ஒவ்வொருவருக்கும் மொழியின் வீச்சும், பயனாகும் இடத்திற்கேற்ற தொனி மாறுபாடுகளும் எண்ணிப்பார்க்க விந்தையாய் தானிருக்கிறது ஜி. பட்டியலின் பாங்கு வியப்பு!!
ஒரே நதியில் உருளும்
வெவ்வேறு கூழாங்கற்கள்.
ம்...உண்மைதான் சுந்தர்ஜி.எத்தனை பாவங்கள்தான் இந்தக் குரலில் !
எண்ணிலடங்கா எத்தனையோ முகங்களுடன் உலா வருகிறோம்....
நாம் பல தன்னிலைகளாக இருக்கிறோம் என்ற அறிவியலை கவிதையாகப் படித்தேன்.Fine!
/வீடுகளின் முகமாய் மூடப்பட்ட கதவுகளும் அவற்றின் உயிராய்க்குரல்களும் ஓசைகளும்./
அஃறிணையை உயர்திணையாக்கிய கவிதை.
நீரை, பனியாய், மாமழையாய், சாரலாய், நதியாய், அருவியாய், குளமாய், குட்டைடாய், வாய்காலாய், கடலாய், மேகமாய் அவதானிக்கும் அற்புதம் இக்கவிதை வீட்டின் ஊடாய்.
கருத்துரையிடுக