எப்போதெல்லாம்
அடைய நினைத்ததை
அடையமுடியாது போகிறதோ
அதை மீண்டும் அடையத்
தேவையில்லாது போகட்டும் .
எதை இழந்தபோதெல்லாம்
தாங்கமுடியாது போகிறதோ
அதை மறுபடியும்
இழக்க நேராது போகட்டும்.
யாரைக் காதலித்தபோது
விட்டுக்கொடுத்தோமோ
அதுபோல் யாருக்கும்
இனி விட்டுக்கொடுக்க
நேராதிருக்கட்டும்.
எந்தத் தாழின்
திறவுகோலுக்காய்க்
காத்திருந்தோமோ
அது போல் ஒருபோதும்
இனி பூட்டப்படாதிருக்கட்டும்.
எதை எழுதும்போது
இனி எழுதத் தேவையில்லை
என்றுணருகிறோமோ-
அதன் பின் சொல்ல
ஏதுமில்லாது தீரட்டும்.
எந்தநாள்
வாழ்வின் நிழல்
ஆன்மாவில் வீழ்கிறதோ-
அதன் பிந்தைய நாள்
வாழத் தேவையில்லாது போகட்டும்.
11 கருத்துகள்:
அற்புதம் சுந்தர்ஜி. ஆனந்த பரவசம். மனதை மொய்க்கும் சொற்களின் சுகம்.
மிகவும் அருமை. எல்லா வரிகளையும் கோஷம் போல சொல்லிக் கொண்டேன். இறுதி வரியை மட்டும் //எந்தநாள் வாழ்வின் நிழல்ஆன்மாவில் வீழ்கிறதோஅதன் பிந்தைய நாள்வாழத் தேவையிருக்காது// என மாற்றிக் கொண்டேன். இது போல எழுதும்போது அது உங்கள் கவிதையாகிறது.
நன்றி ஹரணி முதலில் நீங்கள் வாசித்தமைக்கும் பாராட்டியமைக்கும்.
அற்புதம் சைக்கிள்.என் அவசரத்தில் ஒரே மூச்சில் எழுதித் தள்ளிவிட்டேன்.மரணத்தை விட வாழ்வு இந்தக் கவிதையின் தொனியை உயர்த்துகிறது. எனக்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது.என்னைத் திருத்தியமைக்கும் தேர்வான ரசனைக்கும் நன்றி.உடனே மாற்றிவிடுகிறேன்.
//எந்தநாள் வாழ்வின் நிழல்ஆன்மாவில் வீழ்கிறதோ...//
பெருகிக் கொண்டிருக்கும் தங்கள் எழுத்தின் வீர்யம், மூழ்கித் திளைக்கச் செய்கிறது ஜி.
வரிகளை மாற்றுவதற்காகவே சொல்லவில்லை திரு.சுந்தர்ஜி. ஒரு வாசக உரிமையாக எனக்கு பிடித்த வகையில் வாசித்த அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்.இது போல என்பது உங்கள் கவிதையை குறிக்க மட்டுமே.எனினும் open minded ஆக கவிதையை அணுகியதற்கு மகிழ்ச்சி.நன்றி.
புறம் தவிர்த்த அகம்
என்னை எங்கேயோ
விரல் பற்றி அழைத்துச்
சென்று விட்டது.
நீர் எழுச்சி போல்
கவிதை பொங்குகிறது..
கடைசி வரியில் கவித்துவம் மட்டுமல்ல.. வாழ்வின் அர்த்தமும் உச்சம் பெற்று விட்டது.
வாழ்வின் அர்த்தமுள்ள பக்கங்களை நிறுத்தி வாசித்திருகிறீர்கள். மனம் இலயித்துப் படிக்க முடிந்தது. நன்றி.
கடைசி வரியே போதும் வாழ்வின் முழுமை !
எப்போதெல்லாம்வாங்க நினைத்ததைவாங்கமுடியாது போகிறதோஅதை ஒருபோதும்வாங்க முடியாது.
இல்லை ஜி எனக்கு தோணுகிறது,அப்பொழுது தான் இன்னும் வாங்கும் உத்வேகம் வருகிறது .....
கவிதை ஏதோஒரு மறைபொருளை நோக்கி போகிறது ..நான் கொஞ்சம் மறைந்து நின்று தான் பார்க்கிறேன்
பௌதீக ரீதியான பொருளைக் கவிதை பேசவில்லை பத்மா.அது பேசுவது வாங்கத் தவறிய உறவுகள் பற்றி-அனுபவம் பற்றி.நீங்களே சொன்னதுபோல் மறைந்திருந்து பார்க்கும்போது கோணமும் மாறுவது இயல்புதானே?
கருத்துரையிடுக