29.3.11

லீலை.


1.
எப்போதுதான்
நிறுத்துமோ

ஒரு தடவை இப்பக்கமும்
மறு தடவை அப்பக்கமும்

சாய்வதை
அந்த பொம்மையும்-

இல்லாத எதிரியோடு
சண்டையிடுவதை
அந்தக் குட்டி நாயும்?

2.
போர்த்தி உறங்கும்
மகனிடமிருந்து

பிரித்தெடுக்க
முயல்கிறேன்
உறக்கத்தின் செதில்களை.

மூடியிருக்கும் கண்களில்
சிரிப்புடன் தொடர்கிறது
கனவுகளின் பீழைகள்.

25.3.11

மற்றுமொரு நாள்.
1.
எதைத் தேடிப்
போகிறேன் என்று
தெரியாதபோதும்

விடாது
தேடிக்கொண்டிருக்கிறேன்

கடிகார முள்ளின்
அபத்தமான சுற்றல் போல.

2.
எத்தனை முறை
வீழ்ந்த போதும்

கையெட்டும் தொலைவில்
தொங்குவதாய்
இருக்கிறது

வாழ்வுக்கான
ஒரு கயிற்றின் முனை.

3.
அம்பு தைத்தும்
இறகசைக்கும்
பறவையின் பிரயத்தனம்-

கொடும்பாறை
பிளந்த செடியின் உயிரசைவு-

பேரழிவுக்குப் பிந்தைய
நாளின் புன்னகையின் சாறு

இவை போதும்

மற்றொரு நாளின்
கூர்முனையை எதிர்கொள்ள.

4.
எப்போதும் நான் என்பது
நானல்லாதது போலவே

சில வேளைகளில்
நானல்லாததும்
நானாகிவிடுகிறது
கடவுளே!

19.3.11

ஜான் பி ஹிக்கின்ஸ்


அப்போது ஒரு நாள் சக்கையாய் மழை கொட்டித் தீர்த்தது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராஜபாளையத்தின் அருகே தளவாய்புரம் என்ற சிற்றூரின் என் ஐந்து வயதின் ஓர் இரவில் ஆல் இண்டியா ரேடியோவின் 7.15க்கான தமிழ்ச் செய்தியறிக்கை.

கொரகொரப்பும்_பக்கங்களைத் திருப்பும் சத்தங்களும் ஆக்கிரமித்திருக்கும்-பிரும்மாண்ட ஒரு வால்யூம் ரேடியோவின் மங்கி மறுபடி உச்சம் பெறும்-பத்து நிமிடச் செய்தியறிக்கைக்காக காத்திருப்பது வழக்கம். செய்திகளை வழக்கமாக வாசிக்கும் “விஜயம்” நாட்டின் முக்கியமான செய்திகளைச் சொல்லிமுடித்தவுடன் சாப்பிட அனைவரும் தயாராவார்கள்.

தேவையின்றி மின்விளக்குகளை உபயோகிக்கக் கூடாது என்ற சிக்கனமும் இரவில் சிம்னி விளக்கு அல்லது ஹரிக்கேன் லைட் வெளிச்சத்துடன் சுவரில் தெரியும் நிழல் உருவங்களைப் பார்த்த திகிலும் ஆர்வமும் மண்ணெண்ணெய் நெடியுடன் ஏதாவது மிச்சமிருக்கும் சமையலை சாப்பிட்டுவிட்டு தெருக்களில் சிறிது நேரம் உலாத்திவிட்டு படுக்கையைத் தட்டிப் போடும் நேரமும் வானொலியில் அகில் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் ஏதாவதொரு இசைக்கச்சேரி துவங்கும்.

என்னவென்று புரியாமல் கதகதப்பான அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே நிலவொளியில் அசையும் தூங்குமூஞ்சி மரத்தின் இலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பயமுறுத்தும் நிசப்தத்தில் தவளைகள் கோரஸாகக் குரலெழுப்ப சுவற்றின் இருளில் அவை மோதித் திரும்ப அப்பாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் போது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அறிமுகம் முடிந்திருக்கும்.

ஜான் பி ஹிக்கின்ஸை அப்போதுதான் முதல் முறையாய்க் கேட்கிறேன். மிகவும் பழக்கமில்லாத குரல்போலத் தெரிந்தாலும் என்னை அந்தக் குரல் ஈர்ப்பதையும் அந்தக் குரலின் பிசுபிசுப்பில் மெல்ல என் ஆர்வம் ஒட்டிக்கொள்ளத் துவங்குவதையும் உணர்ந்தபடியே மெல்லத் தூங்கிப் போனேன்.

வானம் வெறித்திருந்தாலும் எங்கோ தொலைவில் டுமுடுமுவென உருட்டிக்கொண்டிருந்த அவ்வப்போது மென்மின்னலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்த ரகசியம் பூசப்பட்டிருந்த இரவின் நடுப்புள்ளியில் நான் மீண்டெழும்போது பின்புறத்தென்னையின் கீற்றுகளில் நிலவு பளபளத்தது. அந்தக் கீற்றின் நுனியில் ஹிக்கின்ஸ் பாகவதரின் இசை சொட்டிக் கொண்டிருந்தது.

பின் நாட்களில் ஹிக்கின்ஸ் பாகவதர் பாடிப் பிரபலமான ஸ்ரீ ராகத்தின் எந்தரோ மஹானுபாவுலுவும், தர்பாரி கானடாவில் கோவர்த்தன கிரிதாரி- இந்தோளத்தில் தில்லானாவும்- பந்துவராளியில் சிவ சிவ சிவ என ராதாவும் ஒரு உயர்வானில் சுழலும் கழுகு போல் என்னை வட்டமடித்துக் கொண்டிருந்தன அவர் ஒரு அமெரிக்கர் என்ற தகவலின் ஆச்சர்யத்தோடு .

எனக்குப் 19 வயதும் பாகவதருக்கு 45வயதும் நிறைந்திருந்த 1984ன் ஒரு நாளில் மோட்டார் சைக்கிளை நிதானமின்றிப் படு வேகமாய் ஓட்டிவந்த ஒரு முட்டாள்க் குடிகாரனால் அமெரிக்கச் சாலை ஒன்றில் கொல்லப்பட்டதை அதே வானொலியின் 7.15 மணிச் செய்தியில் சரோஜ் நாராயணசாமியால் கேள்விப்பட்டு மறுபடியும் என் ஐந்து வயதின் மழை பெய்த இரவுக்குப் பயணமானேன்.

ஜான்! மிதந்து செல்லும் காற்றிலும் கரைந்து செல்லும் மழைநீரிலும் பயமூட்டும் இரவுகளின் தனிமையில் தவளைகளின் சப்தத்திற்கு இடையிலும் தூங்குமூஞ்சி மரங்களின் உறக்கத்திற்கிடையிலும் உன்னைத் தேடியபடியேயும் அடைந்தபடியேயும் இருக்கிறேன் ஜான்.

இதயம் போகுதே...


தும்பி வா(மலையாளம்)-சங்கத்தில் பாடாத கவிதை-கும் சும் கும்(ஹிந்தி) என மூன்று மொழிகளிலும் மூன்று ஸ்வரத்தில் அமைக்கப்பட்டு எல்லோரின் உயிரையும் அசைத்த காபி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் வயலினின் மொழியில் இத்தாலியில் இளையராஜா கொடுத்த ஓர் இசைநிகழ்ச்சியில் இசைக்கப்பட்டது.

எனக்கென்னவோ மூன்று மொழிப் பாடல்களிலும் மொழி சொன்ன சங்கதிகளை விட வயலினின் தந்திகளால் நிரப்பப்பட்டும், குழலின் வெற்றிடத்தால் வெளியேற்றவும் பட்ட இசை சொன்னது ஆழமானதும் அதிகமானதுமாகத் தோன்றுகிறது.

சிரிக்கும் குழந்தையை ஒருவன் புறக்கணித்துச் சென்று விடமுடியும்.
ஏக்கமுற்று அழும் குழந்தையைக் கடந்து செல்ல இறுகிய மனம் வேண்டும்.

அது என்னிடம் இல்லை.   

18.3.11

கவிதைகள் மீது சில குறிப்புகள்#
எழுதிய ஒரு கவிதையை
அழிக்க முடிவதில்லை.
ஒரு கற்சுவரில்
கீறப்பட்ட கோடோ
மரத்தில் செதுக்கப்பட்ட
பெயரோ போல
அழியாது உறைந்திருக்கிறது.

#
எழுதிய ஒரு கவிதையைக்
கிழிக்கவும் முடிவதில்லை.
பிடிக்காத துணியையோ
படிக்காத கடிதத்தையோ போல
எளிதில்லை கிழிப்பது.

#
இலைகள் உதிர்வது
துளிகள் வீழ்வது
சிறகுகள் மிதப்பது
போல எளிதில்லை
கவிதைகள் பிறப்பதும்
பிறந்தவை நிலைப்பதும்.

#
காற்றில் அலைவது
நெருப்பில் தொலைவது
நீரில் கரைவது
போல் மறைகின்றன
வார்த்தைகளின்
அமிலம் குடித்தும்
உருவாகாத கவிதைகள்.

17.3.11

வெட்டி முறிப்பு


இடது புறம் சாலையில் சற்றே விலகிச் செல்லும் அந்தக் கோட்டிற்குள் 
வெட்டி முறித்துக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் வந்துவிடுவேன்.
அதுவரை எல்லோரும்
அமைதி காக்கவும் அல்லது
மகிழ்ச்சியாய் இருக்கவும். 

13.3.11

கோடையின் முழக்கம்


வரலாற்றின் எழுதாப் பக்கங்களுக்காய்க்
காத்திருந்த ப்ரளயத்தின் கொழுந்தோ
கலவரத்தின் முணுமுணுப்போ
வீழும் அருவியின் பேரொலியோ
திறக்கப்பட்ட மதகுகளை
நொறுக்கிச் செல்லும் நீரொலியோ
அடக்குமுறையின் நுகத்தடியை
உலுக்கும் கிளர்ந்தெழலோ
பெருமரங்கள் சூழ் வனத்தில்
மரம் வளைக்கும் பெருங்காற்றோ
அணைந்தே போயிற்று ஊழியின் சுடர்
எனும்போது கிளைபரப்பிப்
படர்ந்த கொடுந்தீயோ

இல்லை இல்லை
தரைபாராக் குழந்தையின் பாதங்களோ
பிறந்து துள்ளக்கற்கும் பசுங்கன்றோ
வார்த்த நீருக்கும் வளைத்த காற்றிற்கும்
தலையசைக்கும் இளஞ்செடியோ
உனை நேசிக்கும் பெண்
கனிந்தூட்டும் இதழ் முத்தமோ
பாலூற்றியவனின் பக்கத்தில்
படுத்துறங்கும் நாய்த்துணையோ
போகுமிடம் கூட்டிச்செல்லும்
ஒற்றையடிப் பாதையின் நெடுங்கோடோ
அதிகாலை ஆளற்ற ஆலயத்தின்
பனி குளித்த மணியொலியோ

என்ன சொல்வேன் என்ன சொல்வேன்?

(இத்தாலியின் அண்டேனியோ விவால்டி மிக முக்கியமான இசைமேதை. அவரின் நான்கு பருவங்கள் (Four Seasons ) இசைப் பயணத்தில் ஓர் மைல்கல்.

கோடைக்காலம்-குளிர்காலம்-இலையுதிர்காலம்-வசந்தகாலம் என்று பெயரிடப்பட்ட நான்கு பிரிவுகள் இசையின் மாபெரும் ப்ரளயங்கள். நான்கையும் வரும் நாட்களில் முழுமையாய் இடுகையிட முயல்கிறேன்.

நீங்கள் கேட்பது கோடையின் ஓர் அறிமுகம்.  வாசிக்கும் அந்தப் பெயர் தெரியாக் கலைஞர்களின் விரல்களை முத்தமிடுகிறேன்.

நடுவில் நின்று சோலோவாக வாசிக்கும் கலைஞனின் அலட்சியமும் அந்தத் தந்திகளின் மேல் அவன் வடிக்கும்   இசையின் உருவத்தைக் கண்களால் நேரே காண்பது போலான பாவமும் எத்தனை நேர்த்தியும் பயிற்சியும் இருந்தால் சாத்தியமாகக்கூடும்?

இதைக் கேட்டு முடிக்கையில் எழும் படபடப்பு அடங்க வெகு நேரம் பிடிக்கலாம். இந்தப் படபடப்பை நேசிக்கிறேன். நன்றி விவால்டி. ) 

11.3.11

நிழல் சிரிப்பு.மூக்கொழுக
மேல்ச்சட்டையின்றி

கன்னத்தின்
திருஷ்டிப்பொட்டோடு
அழுதபடி முதலாவது.

வயதுக்கு வந்தபோது
தலைநிறையத் தாழம்பூவும்
முகம்நிறைய வெட்கமும்
பின்னிய கருப்பு வெள்ளைப் படம்.

நெருக்கியடித்து
இஸ்திரி போடாத
தாவணிசட்டையுடன்
ரெட்டைச் சடையோடு
கோபக்கார சாந்தா டீச்சர் பக்கத்தில்
உர்ரென்ற ஒன்பதாம் வகுப்புப் படம்.

டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிடியூட் சேர-
டிஎன்பிஎஸ்ஸி எழுத-
எடுத்த
பாஸ்போர்ட் புகைப்படங்கள்.

கல்லூரி இறுதிவருடம்
தேக்கடி சுற்றுலாவில்
யமுனாவோடு
முதல் முறையாய்
வனப்போடு தெரிந்த வண்ணப்படம்.

பெண் பார்க்க அவசரமாய்
அம்மாவின் பட்டுப்புடைவையில்
எடுக்கப்பட்ட
முழுஅளவுப்படம்

என எதிலும்
வெளிப்பட்டதில்லை

உடன் தொடர்ந்த
அவள் சாவின் சிரிப்பு.

10.3.11

மதுவந்தியின் தேன்


ஒளியின் கிரணங்கள் இருளுடன் கலக்கத் துவங்கும் ஒரு பொன்மாலையின் துயர்சூழ் பொழுதில் ஆடுகளை மேய்த்தபடி மலையடிவாரத்தின் சரிவுகளில் தளர் நடையுடன் ஒரு பெரும் புழுதிப் படலமும் காய்ந்த மண்ணின் நெடியும் சூழ்ந்து படரச் சரிகிறேன் அந்த மரத்தின் வேர்களில். நிசப்தத்தின் ஆழத்தில் மரத்திலிருந்து உதிரும் இலைகள் சலசலப்பை உண்டுபண்ணுகின்றன.

ஆடுகள் அத்தனையும் இப்போது அதனதன் கிடையில் தங்கள் மேமேயுடன் காச்மூச் தும்மல்களுடன் அமைதியடையத் துவங்குகின்றன. எல்லோரும் உறக்கத்தின் பள்ளத்தில் வீழ்ந்த பின் எட்டிப்பார்க்கும் கள்வனைப் போல் வெளிக்கிளம்புகிறது பௌர்ணமி நிலவின் மதுவும்-எங்கிருந்தோ மிதந்து வரும் கிளர வைக்கும் இசையும்.

என் ஆன்மாவைத் தின்னும் மதுவந்திக்கும் மௌனத்தின் சாலையில் வழுக்கியபடிக்குச் செல்லும் பால்நிலாவுக்கும் துயரைக் கிளப்புதலில் பெருத்த வித்தியாசமில்லை. என்றோ காதலித்த அவளை நினைவு படுத்தியும் மறக்கவைத்தும் கொல்லும் சாரங்கியின் சுருள் இசை. பார்வையற்றவன் தொட்டுணரும் ப்ரெய்லியாய் என் காதுகளின் துணையால் தேடும்போது இசையின் மொழியை உணருகிறேன்.

நந்தா நீ என் நிலா என ஏங்கும் பாலுவின் குரலிலும் கண்டநாள் முதலாய்க் காதல் பெருகுதடி என்று காதலைச் சிந்தும் சுதாவின் குரலிலும் இளஞ்சோலை பூத்ததா என்ற மற்றொரு பாலுவின் பாட்டிலும் இலக்கணம் மாறுதோ என்ற காதலின் மென்மையைக் குழைத்த வரிகளிலும் வானவில்லே வானவில்லே என்று மயக்கும் ரமணாவில் வந்த வரிகளிலும் ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற ஈஸ்வரியின் ரகஸ்யக் குரலிலும் என்னுள்ளில் எங்கோ வின் ஜீவனை உருக்கும் வாணியின் குரலிலும் ஒரே மதுவந்தி எனும்போது தடுமாறிச் சரிகிறேன்.

புரந்தரதாஸின் நரஜென்ம பந்தாகே நாளிகே இதுவாகே என்ற வரிகளின் பூச்சிலும் பாரதியின் நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடியிலும் இந்த மதுவந்திதான் நிறைந்திருக்கிறாள் என்றும் நினைத்தபடியே ஒரே நேரத்தில் பரிபூர்ண நிம்மதியையும் இடையூறையும் தரும் மதுவந்தியின் வேஷத்தை வியந்தபோது கிடையின் எல்லா ஆடுகளும் உறங்கியிருந்தன.

வேகவைத்த மரவள்ளிக் கிழங்கில் உப்பைத் தூவி அதைச் சாப்பிட்டபடியே உறக்கம் பறித்த மதுவந்தியுடன் வயல்வெளியின் திறந்த வானைப் போர்த்தியபடி எல்லா இரவுகளிலும் நான் உலவிக் கொண்டிருப்பதை யாரேனும் நீங்கள் கண்டதுண்டா?

9.3.11

ப்ரவாஹம்


அடர் கானகத்தின் நடுவே யாருமற்ற இரவில் முழு நிலவின் விழு ஒளியில் நனைந்தபடியே
பாலையின் பரந்த வெளியில் அதே முழு நிலவு கொட்டியபடி இருக்க பாதங்கள் மணலுக்குள் புதைவதும் மீள்வதுமாய்
குளத்தின் தாமரை சூழ் மேற்பரப்பில் மீன்கள் மட்டுமிருந்து எழுப்பிய க்ளக் ஒலியைப் படித்துறையின் மேலமர்ந்து ரசித்தபடியுமாய்
எதிரே யாரென்று தெரியாது மறைக்கும் மாமழையின் கடும் பிடியில் சிக்கி முகத்தில் தாரை தாரையாய்ச் சரமிறங்கும் மழைத்தேனை நாவால் நக்கி ருசித்தபடியுமாய்
வீறிடும் ஏதோ ஒரு சிசுவின் குரலுக்காய் ஸ்தனங்கள் சுரந்து கசிந்து துணி நனைக்கும் தாயன்பாயும்
கண்ணெல்லாம் நிரம்பிவழியும் படியான நீலத்தை வெட்டவெளியில் மல்லாந்துபடுத்தபடி மிதக்கும் படகின் குலுக்கலில் எந்த ஒரு நினைவுமின்றிக் கடப்பதாயும்
எப்படிச் சொல்வேனடி இந்த மூன்றே முக்கால் நிமிடத்து சுகானுபவத்தை?
இரக்கத்தையும் பரிவையும் அதன் வழியே பேரன்பையும் பாத்திரம் கொள்ளாத மிகுதியாய் மிகுந்த பின்னும் விடாது ஊட்டிக் களிக்கும் ஆனந்தப் பேரானந்தத்தை என்ன சொல்லியும் தீராது இந்த இடத்தில் கையாலாகாத மொழியைத் தூக்கி விசிறியடிக்கிறேன்.
மேற்கத்திய சங்கீதத்தின் பிதாமகன் யெஹுதி மெனுகினும் இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் கௌரவம் பண்டிட் ரவிஷங்கரும் (நான் பெண்ணாயிருந்திருந்தால் ரவியைத்தான் மணந்திருப்பேன்) லய சாம்ராட் அல்லா ராகாவும் இணந்து 60களில்” வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்” என்ற ஒரு ஆல்பத்துக்காக ஒன்று சேர்ந்து மெய் மறக்க வைத்த அபூர்வமான ஒரு ப்ரவாஹத்தின் காட்சி வடிவம்.
இந்த ஆல்பத்தில் இன்னும் ஆறு பாடல்கள் உண்டு. ஆனாலும் டெண்டெர்னெஸ் என்ற தலைப்பிட்ட இந்த இசைத் துளி கடலாய் என்னை அடித்து வீழ்த்தியது.
80களில் முதன்முறை கேட்ட பின் எத்தனை முறை கேட்டிருப்பேனோ தெரியாது.ஆனால் எப்போது கேட்டாலும் வாசல்வரை சென்றவனைப் பின்னிருந்து காலைப் பிடித்திழுக்கும் ஒரு மழலையாய் இதை உணர்வேன்.
நான்கு நிமிடத்துக்கும் குறைவான நேரத்துக்குள் ஒரு தடவை சொர்க்கத்துக்குப் போய் வர விருப்பமுள்ளவர்களுக்கான நுழைவுச் சீட்டு இது.

6.3.11

ப்யார் கியா தோ டர்னா க்யா? (காதல் கொண்டாலே பயமென்ன?


இன்று காலை எப்போதும் போல் விடியவில்லை.

பா.ரா.வின் சித்தப்பா திரு.அண்ணாத்துரை சிவசாமியின் http://azhutham.blogspot.com/2011/03/mughal-e-azam-pyar-kiya-to-darna-kya.html தளத்தில் மேயப் போனவன் வசமிழந்து போனேன்.

அங்கே என் மரியாதைக்குரிய ராஜு அண்ணாவின் அற்புதமான கவிதையின் சாரமாக மொகல்-ஏ-ஆஸமின் ப்யார் கியா தோ டர்னா க்யா என்ற பாடலைக் கண்டேன்.

கண்ணீர் கசியும் என் நினைவுகளோடு அண்ணாத்துரை சித்தப்பாவின் ரசனைக்கு சலாம் சொல்வதா? அல்லது ராஜு அண்ணாவின் விமர்சன மழைக்கும் மொழிபெயர்ப்பின் வீர்யத்துக்குப் பணிவதா? என்று புரியாது திரிகிறேன்.

என் போன்றோரின் தலைமுறையை அர்த்தப்படுத்த, அப்போது 80களின் இறுதியில் சென்னையின் திருவல்லிக்கேணி ஸ்டார் அரங்கத்தில் வந்திருந்தது மொகல் ஏ ஆஸம். இரண்டு இடைவேளைகளுடன் மிக நீண்ட ம்யூஸிகல்-க்ளாஸிகல் மற்றும் ஹிஸ்டாரிகல் என்று இதைச் சொல்லலாம்.

மருகி மருகி ஒருவாரம் விடாது ராத்திரிக் காட்சி பார்த்து மயங்கிக் கிடந்தோம். திலிப் குமாரின் அண்டர் ப்ளேயா, ப்ருத்விராஜ் கபூரின் கம்பீரமா, சாகடித்த மதுபாலாவின் மயக்கும் அழகா, நௌஷாத்தின் காலங்களால் அழிக்கமுடியாத இசையா-சொல்லத் தெரியவில்லை எனக்கு. அல்லது சொல்லித் தீர்வதில்லை.

அந்தப் படம் த்யேட்டரை விட்டுப் போன பின்பு நெடுநாட்க் காதலியை அவள் முறைமாமனிடம் தாரை வார்த்த ஒரு பிரிவின் வலி. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையே வெறுமையாய்த் தெரிந்தது வெகு நாட்களுக்கு.

நடிக்கத் தெரியும், பாடத் தெரியும், எழுதத் தெரியும் என்று சொல்பவர்களும், சொல்லாதவர்களும் அவசியம் பார்த்துத் தீர வேண்டிய ஒரு சுகமான தொல்லை இது.

மொகல்-ஏ-ஆஸம் பற்றி விரிவாய் இன்னொரு பதிவில் எழுதுவேன்.

மொகல்-ஏ-ஆஸம் தமிழில் அக்பர் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லாப் பாடல்களும் தமிழில் கம்பதாசனால் அற்புதமாகப் பொருத்தப் பட்டிருந்தன.

காட்சியின் ப்ரும்மாண்ட அமைப்பும், சுழன்று சுழன்று விரியும் நடன அமைப்பும், ஒரு பேரரசனின் முன் பாடும் பாடலில் வெளிப்படும் காதலின் வீரம் என்று அணுஅணுவாக ருசித்துத் தீராத பாடலும், காட்சியும்.  

அக்பர் படத்தின் தமிழ் வடிவில் எழுதப்பட்ட பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன். இசைக்குப் பொருத்தமாய் என்ன ஒரு வார்த்தை வடிவம்? நௌஷாத்தின் இசையில் இந்த அமர கானத்தை ரஸியுங்கள். லதாவின் குரலில் மயக்கும் இப்பாடல், தமிழில் சுசீலாவின் குரலில் அபாரமாய் இருந்தது. 

இனி இங்கே வார்த்தைகள் பொருத்தமானவையல்ல.

விருத்தம்

ஒரு மாது பிறவேல் ஜெகம் மீதிலே
ஒரு முறையேதான் காதல் கொள்வாளே
இந்தக் காதலின் நோயில் வாழ்வாளே
இந்தக் காதலின் நோயில் மரிப்பாளே.

(பல்லவி)

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

(அனுபல்லவி)
காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை

(கோரஸ்)

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை
விதி எதிரானாலும் பயமென்ன?
உண்மைக்காதல் கொண்டாலே பயமென்ன?

(சரணம்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.

(கோரஸ்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அஞ்சி அஞ்சியே சாதல் என்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.

(கோரஸ்)

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.
காதலே வாழ்வே காதலே சாவே
காதலே வாழ்வே காதலே சாவே
காதல் இன்றேல் கதி வேறென்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

அணையாது எந்தன் காதலின் தீபம்.
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்

(கோரஸ்)

அணையாது எந்தன் காதலின் தீபம்
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மனிதர்கள் முன்னால் திரையென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை.
விதி எதிர்த்தாலும் பயமென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

இதன் விருத்தம் இடம்பெறாத தமிழ் வீடியோ வடிவமும் கிடைத்தது. 

https://www.youtube.com/watch?v=NKG3JGgOQeg

சுசீலாவின் தெலுங்கு தூக்கலான உச்சரிப்பு, ’பயமென்ன’வை ’பயமென்னா’ வாக்கியிருக்கிறது. 

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.

இதை ’நினைவே தன்’ என்று பாடும் இடங்கள் தவிர அநேகமாக அற்புதம் இதுவும்.

இந்தப் பாடலைப் பற்றி ராகவனிடம் ப்ரஸ்தாபித்து எழுதச் சொல்லிக் கேட்க வேண்டும் என ராஜு அண்ணா எழுதியிருந்தார். ராகவன்! நீங்களும் இதைப் பற்றி எழுதுங்கள் என ராஜு அண்ணாவுடன் நானும் சேர்ந்து கேட்கிறேன்.

2.3.11

தோல்வித் தேன்தோற்றபடி இருக்கிறேன்
தோழி நெடுங்காலமாய்.

பள்ளியில் தோற்ற மாலை
நண்பனின் பல்லுடைத்தேன்.

கல்லூரியில் தோற்ற நாளில்
கனவுடைந்து உருக்குலைந்தேன்.

சகாவிடம் தோற்றுப்போய்
ஆடையற்றதாய் உணர்ந்தேன்.

காதலியிடம் தோற்ற
மறவாத ஓரிரவில்

உயிரற்ற ஓருடலைச்
சுமந்தபடிக் கரைந்திருந்தேன்.

மனைவியிடம் தோற்றவேளை
கொஞ்சமாய் மனமுடைந்தேன்.

மகளிடம் தோற்ற மதியம்
துள்ளிக் குதிக்கலானேன்.

எழுதித் தோற்ற காலம்
எழுதாதிருக்கக் கற்றேன்.

வாழ்க்கையில் தோற்றுத்தோற்று
புத்தனின் ஞானம் உண்டேன்.

பெயரனிடம் தோற்ற நாளில்
பிறவாப் பயனடைந்தேன்.

உடலிடம் தோற்ற கணம்
முதுமையின் முகமணிந்தேன்.

காலத்திடம் தோற்ற நொடி
சிரித்தபடி உதிர்ந்திருந்தேன்.

1.3.11

ஆட்டம்ஆட வேண்டுமெனில்
-நீ யாரெனினும்-
உன்னைத் தயார்செய்யாது
எப்படி முடியும்?

உன் ஆட்டத்தை
நீ தீர்மானித்துவிடில்
உன்னை வெளியேற்ற
உன்னாலும் முடியாது.

வெளிப்படையாய்
உன்னைப் போல விளையாடு.
அடுத்தவனைப் போல் ஆடும் போது
அவன் போலவே தவறிழைக்கிறாய்.

முன்காலை நகர்த்த
பின் காலில் செல்ல
குனிந்து விலகச் சிலவும்
காலுயர்த்தி ஆடச்
சிலவும் என
ஆட்டத்தைத் தீர்மானிக்கின்றன
வீசப்பட இருக்கின்ற
பந்துகள்.

நீ செய்யப் போகும்
பிழைக்காகக் காத்திருப்பவர்
பலரென்றாலும்
அவரும் பிழைசெய்ய
பிழைக்கக்கூடும் நீ.

சமயங்களில்
செய்யாத குற்றத்துக்குத்
தண்டனையும்
தெரிந்து செய்த
தவறுக்கு விடுதலையும்
பெறக்கூடும்.

பார்வையாளனுக்காய்
ஆடாமல்
நீ ஆடுவதை அவனைப்
பார்க்க வை.

எல்லா ஆட்டங்களும்
துவங்குமுன்பும்
முடிந்தபின்பும்
தொடர்கின்றன
எப்போதும்
யாருமற்ற மைதானங்களில்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...