1.
எதைத் தேடிப்
போகிறேன் என்று
தெரியாதபோதும்
விடாது
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடிகார முள்ளின்
அபத்தமான சுற்றல் போல.
2.
எத்தனை முறை
வீழ்ந்த போதும்
கையெட்டும் தொலைவில்
தொங்குவதாய்
இருக்கிறது
வாழ்வுக்கான
ஒரு கயிற்றின் முனை.
3.
அம்பு தைத்தும்
இறகசைக்கும்
பறவையின் பிரயத்தனம்-
கொடும்பாறை
பிளந்த செடியின் உயிரசைவு-
பேரழிவுக்குப் பிந்தைய
நாளின் புன்னகையின் சாறு
இவை போதும்
மற்றொரு நாளின்
கூர்முனையை எதிர்கொள்ள.
4.
எப்போதும் நான் என்பது
நானல்லாதது போலவே
சில வேளைகளில்
நானல்லாததும்
நானாகிவிடுகிறது
கடவுளே!
17 கருத்துகள்:
சில வேளைகளில்
நானல்லாததும்
நானாகிவிடுகிறது
கடைசி வரிக்கு வந்ததும் முன் ரசித்தவை சட்டென்று ஒதுங்கிக் கொள்ள ‘ஆஹா.. சபாஷ்’ என்று வரியின் தீட்சண்யம் கை குலுக்கத் தோன்றியது..
அபத்தமான கடிகார முள்ளின் சுற்றல்
வாழ்வுக்கான ஒரு கயிற்றின் முனை
எதிர்கொள்ளும் மற்றொரு நாளின் கூர்முனை
இவைகளைவிட
சில வேளைகளில்
நானல்லாததும்
நானாகிவிடுகிறது
நல்லாவே இருக்குது சார்!
தேடல் என்பது தனக்கென இல்லாது
ஊருக்கென இருப்பதால்தான்
சலிப்பின்றி கடிகார முள்ளால்
தொடர்ந்து ஓட முடிகிறதோ?
நான் என்பது கூட எனக்காகஇல்லாமல்
பிறருக்காக இருப்பதால்தான்
நாமெல்லாம் என்பதுகூட
நானாகவே தெரிகிறதோ?
சிந்திக்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சுந்தர்ஜி என்னவாயிற்று?
கடிகார முள் சுற்றலை அபத்தம் என்பதை ஒரு நிலையில் விரக்தியாவும் மற்றொருநிலையில் ஞானமாகவும் உணர்கிறேன். நானல்லாதது என்பதில் இருக்கும் நான்தான் நானாகிறது.
ஒன்றுமில்லையென்பதில்தான் எல்லாமும் இருக்கிறது தோழனே...
சுந்தர்ஜி எனும் பன்முக ஆளுமையின் ஒரு கூறாகவே மற்றுமொரு நாளையும் நான் எண்ணிப் பார்க்கிறேன்.
//கடிகார முள்ளின்
அபத்தமான சுற்றல் போல//
ஆனால் கடிகார முள் அபத்தமான சுற்றல் என கூற இயலாதே ஜி?
காலத்தின் அருமையையும் மதிப்பையும் நமக்கு புரிய
வைக்கவல்லவோ அந்த சுற்றல்?
//எத்தனை முறை
வீழ்ந்த போதும்
கையெட்டும் தொலைவில்
தொங்குவதாய்
இருக்கிறது
வாழ்வுக்கான
ஒரு கயிற்றின் முனை//
வாழ்வின் நிதர்சனம்
//மற்றொரு நாளின்
கூர்முனையை எதிர்கொள்ள//
நம்பிக்கை பாடங்கள்
//எப்போதும்
நான் என்பது
நானல்லாதது
போலவே
சில வேளைகளில்
நானல்லாததும்
நானாகிவிடுகிறது
கடவுளே!//
வாழ்வில் பொதிந்துள்ள அறிய முடியாத ரகசியங்களுள் ஒன்று
கருத்துக்கள் பொதிந்த கவிதைகள்
"கடிகார முள்ளின்
அபத்தமான சுற்றல் போல."
அருமை... அந்த அபத்தமான சுற்றலில் தான் உயிர்ப்போடு இருக்கிறது வாழ்க்கை....
சுந்தர்ஜி...எப்பவும்போலவே இந்தக்கவிதையும்.எதையோ சொல்ல நினைக்கிறேன்.மனசோடு உரசுகிறது வரிகள்.வார்த்தையில்லை !
என் கருத்துரை என்னவாயிற்று சுந்தர்ஜி?
நான் ஆவதும் ... நான் அல்லாததும்
பிரமாதம் சுந்தர்ஜி....
கடிகார முள்.
கயிற்றின் முனை
தாவரத்தின் பாறை பிளக்கும் உயிரசைவு.
கடவுளே! சூப்பெர்ப்! வேறு ஏதாவது பாராட்டுகிறேன் என்று எழுதி இந்தக் கவிதை பக்கத்தை அசிங்கமாக்க நான் விரும்பவில்லை. அற்புதம் ஜி! ;-))
இந்த ரிஷி வடிவம்
ரொம்ப நல்லா இருக்குன்னே உங்களுக்கு.
\\எத்தனை முறை
வீழ்ந்த போதும்
கையெட்டும் தொலைவில்
தொங்குவதாய்
இருக்கிறது
வாழ்வுக்கான
ஒரு கயிற்றின் முனை//
மிச்சமிருக்கும் வாழ்வின் வறண்ட நாவில் தடவிச் செல்லும் வார்த்தைத் தேன் துளிகள்
ஞானத் திறவுகோல்!
It felt like a story, sirji...
"...'அபத்தங்கள்' பல நிறைந்த வாழ்வினில் சோர்வுற்று வீழும் நேரத்தில் பிடித்துக்கொள்ள 'வாழ்கை கயிற்றின் ஓர் முனை'. கயிர் பிடித்து எழுந்தவுடன் புதிதாக ஒரு நம்பிக்கை- 'மற்றொரு நாளின் கூர் முனை எதிர் கொள்ள'. 'அபத்தம்' கண்டு வீழ்பவர் இல்லை என்றாலும்- அப்படி வீழ்தலும் தங்களின் ஒரு தன்மை ஆனதை உணர்ந்தது போல-- ஒரு கதை..."
Brilliant...
இக் கவிஞரிடம் நான் கண்டு வியப்பது என்னதென்றால், புதுக் கவிதைக் காலகட்ட மொழிநடையின் உலர் தன்மைக்கு மாற்றாக யூமா.வாசுகி/ ஜெ. பிரான்ஸிஸ் கிருபா கொண்டுதந்த ஒரு வகையான ரொமான்ற்றிக் மொழிநடையை வழிபற்றி இன்றெழுதும் பெரும்பான்மைக் கவிஞர்கள் போல் அல்லாமல், தனக்கென்று ஒரு மொழிநடையை (அது எங்கள் காலத்தியப் புதுக்கவிதை நடைக்குத் திரும்புவது போல் தோற்றம் கொண்டிருந்தாலும்) கைவரப்பட்டதே!
3-இல் //அம்பு தைத்தும்// என்பதற்குப் பகரமாக 'குண்டடி பட்டும்' அல்லது இதுபோல்...
போலவே, கடைசி அடி //கடவுளே// என்பதற்குப் பகரமாக 'பரமாத்மாவே' என்று இருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
"இதுவும் கடந்து போம்"
என்ற எளிய மந்திரத்தின்
கதவு திறந்து காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.
கல்லில் மண்ணில் வாடிய பயிரிலேயும்
உயிரைக்கண்ட இனம், இன்று?
சுந்தர்ஜி! கடிகாரத்தின் முட்கள் சுற்றலில் அபத்தம் என்பதை ஒரு விரக்த்தியின் வெளிப்பாடாகக் கொள்கிறேன்..
அந்த முட்கள் சுற்றாமல் நின்று விட்ட போதும் ஒரு நாளில் இருமுரைஎனும் சரியான நேரன் காட்டும் அல்லவா?
முத்தாய்ப்பான வரிகள் முத்துகள்.. கவிதையைத் தாங்கும் வித்துகள்.
கருத்துரையிடுக