ஒற்றை உரசலில்
பற்றும் தீக்குச்சிமுனைக்காய்க்
காத்து நிற்கும் திரியுடன்
என் நம்பிக்கையின் மெழுகு.
பற்றக் கூடாதெனப் பதுங்கியிருக்கிறது
கையளவோ குவித்த வாயளவோ
பொறாமையின் அமிலக் காற்று.
தூவப்பட்டிருக்கிறதென்
பாதங்களின் கீழ்
செல்லவிருக்கும்
திசைகளின் விதை.
யாரும் புகா
அடர்வனங்களின் நிழலில்
கனிந்திருக்கிறது
நாளைய என் பாதையின் தடம்.