30.8.10

திறவாக் கோல்


என் இசை 
கடவுளின் நிபந்தனையற்ற வரத்தால்
நெய்த ஆடை.

என் திமிர் 
பொலி காளைகளின் திமிலாயும்
கோபம் நாயின் கோரைப்பற்களாயும்
மௌனம் திறவுகோலற்ற பழைய பூட்டாயும்
காமம் மலை முகட்டில் தடுக்கி விழும்
நீர் வீழ்ச்சியாயும் 

இருக்கிறது 
என்னைப் பற்றிய உன் ஞானம்.

குகை வாசியின் 
துவக்க நாள்க் குழப்பத்திற்கும்
பார்வையற்றவனின் 
தயக்கம் குடித்த விரல் மொழிக்கும்

மிக நெருக்கமாயிருக்கிறது
உன்னைக் குறித்த என் ஞானம்.

6 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

வாங்க வாங்க ஜி ...
பிறந்தோம் .. வளர்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையில் எத்தனை அவதானிப்புகள்.
//குகை வாசியின் துவக்க நாள் குழப்பத்திற்கும்-// எங்கே ஆரம்பித்தீர்கள் .. ஜி. //நிபந்தனையற்ற வரத்தால்//
அவ்வரமே உங்களுக்கு நிலைபெறட்டும்.

நிலா மகள் சொன்னது…

மெளனம், திறவுகோலற்ற பழைய பூட்டையும்... ஆஹா'வென வியந்து அனிச்சையாய் மேலே பார்க்கிறேன்... திறவுகோலிருந்தாலும் திறக்கவியலா சிதைவுடன் தொங்கியது பூட்டு- அபூர்வ படமாக

Anonymous சொன்னது…

நமக்குள்ளிருக்கும் குணங்களின் விசித்திரங்களை நிர்வகிப்பது போலத்தானோ எதிராளியைப் பற்றிய நமது புரிதல்களை நிர்வகிப்பதும். கடைசி இரு உவமைகளும் தங்கள் கவிதை குறித்த பிரமிப்புக்கு மேலும் களிப்பூட்டுகின்றன.

நிபந்தனையற்ற வரத்தால் நெய்த ஆடை...காலை துயிலெழல் போன்ற புத்துணர்வுக்கு ஒப்பானது.
-உஷாராணி.

Anonymous சொன்னது…

ஒரு சராசரி மனிதனுக்குரிய குணாதிசயங்களை அதன் தன்மையோடு ஒத்துப்போகும் பிறவற்றோடு ஒப்பிட்ட விதம், தன்னையே சுய பரிசோதனைக்குட்படுத்திக் கொண்ட ஒரு ஞானியின் மனதை ஒத்திருந்தது.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்.

பத்மா சொன்னது…

தயக்கம் குடித்த விரல்

எத்தனை அழகு பிரயோகம் சுந்தர்ஜி!

அவ்விரல்களின் தடமும் அவை அடையும் உணர்வும் கூட அழகு தான் ....

தயக்கம் குடித்த விரலின் நினைவு எங்கெங்கோ பறக்கச் செய்கிறது நினைவலைகளை ..

superji

Madumitha சொன்னது…

குகைவாசியின் துவக்க நாள்
குழப்பங்கள்.
அற்புதம் சுந்தர்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...